• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முதலும் முடிவுமாய்-18

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
59
43
Chennai
அத்தியாயம் 18

"ஐ திங்க் ஐ ஆம் இன் லவ் வித் யூ நிலா" என்று அவள் புறம் திரும்ப அவள் திகைத்து உறைந்திருந்தாள்.

"இத்தனை நாள் உன்னை நல்ல ப்ரெண்ட்னு தான் நினைச்சேன். டெய்லி பாத்துக்கிட்டு தான் இருப்போம்னு இருக்குற வரைக்கும் ஒன்னும் தெரியல. ஆனால் இன்னும் கொஞ்ச நாள்ல ஃபைனல் இயர் முடிச்சு ஆளுக்கொரு பக்கமாக பிரிஞ்சு போயிடுவோம்னு நினைக்கும் போது தான் நான் உன்னை லவ் பண்றேன்னே எனக்கு புரிஞ்சது. ஐ லவ் யூ நிலா" என்று அவள் அதிர்ந்து நின்ற நேரத்தில் காதலைச் சொல்லி பூங்கொத்தை அவளிடம் நீட்டினான் ரோகித்.

இன்னமும் அவளுக்கு திகைப்பு நீங்கவில்லை. அவன் அவளை லவ் பண்றான் என்பதை அவளால் நம்பக்கூட முடியவில்லை. இதுவரை நட்பைத் தாண்டி எந்தப் பார்வையும் அவனிடம் கண்டதில்லை. ஏன் மற்றவர்களைக் காட்டிலும் அதிகப்படியான அக்கறை கூட கொண்டதில்லை அவளிடம். வகுப்பில் உள்ள எல்லாரிடமும் பழகுவது போல் தான் அவளுடனும் பழகினான்‌. இப்போது காதல் என்று வந்து நிற்க அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

விழிகள் இரண்டும் வெளியே தெறித்து விடும் அதிர்ச்சியில் அவனைக் காண. "ஷாக்கா இருக்கா நிலா. எனக்கே அப்படிதான் இருக்கு. ம்" என்று பூங்கொத்தை வாங்கச் சொல்லி மறுபடியும் அவளிடம் ஏந்தி நின்றான்.

அவள் இன்னும் கொஞ்சமும் அதிர்வு குறையாமல் அவனையும் அவன் கையிலிருந்த பூங்கொத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க, "நிலா பதில் சொல்லு" என்றான் ரோகித்.

அவள் மனதில் அப்படி ஏதாவது துளி எண்ணமிருந்தாலாவது யோசிக்கவாது செய்வாள். அவன் இப்படிக் கேட்பான் என்று கூட கனவிலும் எதிர்பாராதவள், "ரோகித் என்ன திடீர்னு?. எனக்கு அப்படி எதுவும் தோனலை. நீ எனக்கு நல்ல ப்ரண்ட். என் மனசுல அப்டி ஒரு எண்ணமே இதுவரைக்கும் வந்ததில்லை" என்றாள்.

"நிலா.. இப்போ இல்லனா என்ன?. நல்ல ப்ரண்ட் லவ்வராக கூடாதா?. உனக்கு நான் மட்டும் தான் பெர்பெக்ட் மேட்ச்சா இருப்பேன். அந்தஸ்து ஸ்டேட்டஸ் எல்லாத்துலயும். உங்க வீட்ல சொன்னாலும் நம்ம லவ்வுக்கு எந்த அப்ஜெக்ஷனும் இருக்காது. ப்ளீஸ் அக்செப்ட் நிலா" என்று இறைஞ்சும் பார்வை பார்க்க.. காதல் கெஞ்சியோ கொஞ்சியோ வருவதில்லை. அது இயல்பாய் மலரும் பூவைப் போன்றதொரு உணர்வு என்று அவனுக்குப் புரியவில்லை.

'இவனுக்கு எப்டி புரிய வைக்கிறது?' என்று சங்கடத்தில் அவள் நின்றிருக்க..

"இன்னும் என்ன யோசனை நிலா?" என்று அவள் கையைப் பிடிக்கும் வேளையில்..

"நிலா" என்ற இன்னொரு குரலில் வானிலிருந்து தீடிரென பூமழை பொழிவது போலான அதிர்ச்சியில் படக்கென்று திரும்பியவளின் விழிகளில் ஆனந்த அதிர்ச்சி. விழிகளில் அதுவரை இருந்த ஏக்கம் சோகம் அத்தனையும் நொடியில் காணாமல் போகி விழிகள் நீரைத் துளிர்க்க காத்திருந்தது.

புன்னகை முகத்துடன் நின்று கொண்டிருந்தான் மாறன். அசைவற்றுக் கிடந்த உயிர்க்கு ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது போல் அத்தனை ஆனந்தம். உணர்வற்று கிடந்த உணர்ச்சிகள் துள்ளல் கொண்டது. "மாறா.." என்று ரோகித்தின் கையை உதறி விட்டு ஓடிச்சென்று அவனை கட்டிக் கொண்டாள். அவள் அணைப்பிலே அவனின் வரவை எந்த அளவிற்கு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை புரிந்து சந்தோஷம் கொண்டவன் ஆரத் தழுவிக் கொண்டான். ஐநூறு கிலோமீட்டர் தாண்டி வந்த பயணக் களைப்பிற்கு அந்த அணைப்பு மருந்தாக அமைந்தது. அதுவரை இருந்த அலுப்பு எங்கோ ஒடி ஒளிந்து புது ரத்த ஓட்டத்தை உடலெங்கும் பாய்ச்சியது.

ஒருத்தனுக்கு நெருப்பில்லாமலே புகைந்து கொண்டிருந்தது. கையில் பூங்கொத்துடன் ஏமாற்றத்துடன் நின்றவனின் கண்களில் அத்தனை வெறி. உள்ளமெல்லாம் எரிமலைக் குழம்பாக கொதிக்க உச்சியில் ஏறிய கோவத்துடன் கையில் இருந்த பூங்கொத்தை தூக்கி விசிறியடித்தவன், "நிலா என்ன பண்ற?. இவன் கூட எதுக்கு இப்டி ஒட்டி உறவாடிட்டு நிக்குற?. வா போலாம்" என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

"ரோகித் விடு.. விடுங்குறேன்ல.. நீ போ. நான் மாறன் கூட பேசிட்டு வருவேன்"

"ஏ.. லூசா நீயி? இவன் யாரு இவன் கூட இந்த நேரத்துல உனக்கு என்ன பேச்சு?. இவன் கூட நீ இப்படி நிக்குறதை பார்த்தாலே எனக்கு கடுப்பாகுது. என்னை விட அவன் உனக்கு முக்கியமா போயிட்டானா" என்று அவனிடம் இருந்து பிரித்து அவளை கையை இழுக்க முயற்சித்தான்.

"ஆமா அவன் தான் முக்கியம் எனக்கு. ஏன்னா நான் மாறனை தான் லவ் பண்றேன். போதுமா?. இதுக்கு மேல உனக்கு விளக்கம் வேனுமா ? விடு என் கையை" என்று அவன் கைப்பிடித்த வலியில் மனதில் இருந்ததைக் கொட்டி திட்டிக் கொண்டிருந்தாள். இருபக்கமும் நின்ற ஆண்கள் இருவரும் திகைத்து நின்றனர். ஒருவனுக்கு இன்ப அதிர்ச்சி என்றால் மற்றொருவனுக்கு எதிர்பாராத அதிர்ச்சி.

அவள் கூற்றில் மேலும் கோவம் கொண்ட ரோகித், "என்ன இவனை லவ் பண்றியா?. உனக்கு புத்தி ஏதாவது மலுங்கிப் போச்சா?. உன் ஸ்டேட்டஸ் என்ன அவன் ஸ்டேட்டஸ் என்ன? . உன் பக்கத்துல நிக்கக்கூட அவனுக்கு தகுதி கிடையாது. உங்கப்பா கிட்ட உன்னை நான் பத்திரமா வீட்ல விடுவேனு சொல்லிருக்கேன். இப்போ வறப் போறியா இல்லையா?" என்று அவள் கையைப் பிடித்து இறுக்கினான்.

அவள் வலியில் முகம் சுருங்கி, "விடு ரோகித் வலிக்குது. என்னை கன்ட்ரோல் பண்ண நீ யாரு? விடுடா" என்று கையை அவனிடமிருந்து விடுபட போராடினாள்.

அவள் மறுகையை வலிக்காமல் இறுக்கிப் பிடித்த மாறன், "அவ தான் உன்கூட வர இஷ்டம் இல்லனு சொல்றால. அப்புறம் என்ன?" என்று பல்லைக் கடித்தபடி ரோகித் கையை எடுத்து விட முயற்சிக்க.

"சீ.. நீ யாருடா என்னை தொடுறதுக்கு?. அவ என் ப்ரண்ட். ஏன் இன்னைல இருந்து என் லவ்வர். ஷி இஸ் மை ப்ராபெர்ட்டி. ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து கெளம்பு" என்று மாறனின் சட்டையைப் பிடித்து வெறி வந்தவன் போல் கத்தினான்.

அவனின் கூற்றில் நிதானமாய் திரும்பிய மாறன் நிலாவின் விழிகளை நோக்கினான் அவள் கூறும் பதிலுக்காக. அவள், 'இல்லை' என்று இடவலமாய் தலையாட்ட.. அவ்வளவு தான் அவன் அடக்கி வைத்த கோவம் தலைதூக்கி விட்டது.

"ப்ராபெர்டியா? அவ என்ன பொருளா?. இஷ்டம் இல்லாத பொண்ணு பக்கத்துல நிக்குறதே தப்பு. இதுல அவளை ஃபோர்ஸ் பண்ணி கையைப் பிடிச்சு இழுத்துக் கிட்டு இருக்க" என்று அதுவரை சேர்த்து வைத்த கோவத்தை அடிகளாக அவன் கன்னத்தில் இறக்கினான். அவளின் விருப்பமில்லாமல் அவளின் கையைப் பிடித்த கோவத்தையும், நிலாவுக்கு வலியை கொடுத்த கோவத்தையும் சேர்த்து தீர்த்துக் கொண்டான்.

அவள் வலியினை முகத்தில் கண்டவனுக்கு இன்னமும் கோவம் தீராமல் அவன் கையைப் பிடித்து பின்னால் முறுக்கி, "இன்னொரு தடவை நிலா விஷயத்துல தலையிட்ட அவளை டச் பண்ற கை இருக்காது" என்று நாக்கைக் கடித்து ஒரு விரல் நீட்டி எச்சரிக்க..

"மாறா போதும் விடு அவனை. நீ வா போலாம்" என்று அவனை இழுத்துக் கொண்டு வந்தாள்.

அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றவளை வன்மத்துடன் நோக்கினான் ரோகித். தன் தகுதிக்கு கீழான ஒருவனிடம் தோற்று நிற்பது போல் நினைத்தான். சுற்றி நின்ற நண்பர்கள் வேறு ஏளனமாய் பார்ப்பது போல் தோன்ற அவமானத்தில் கூனிக் குறுகினான்.

நிலாவை சர்பிரைஸ் பண்ணலாம் என்று ஆசையாய் வந்த மாறனுக்கு அவனே எதிர்பாராத விஷயங்கள் நடந்து விட உம்மென்று இருந்தான்.

"மாறா.. எவ்ளோ கோவம் வருது உனக்கு?. கொஞ்சம் விட்டா அவன் கையை உடைச்சு விட்டுருப்ப. பொறுமையா இருந்திருக்கலாம்ல. அவன்கிட்ட நிதானமா பேசி எடுத்து சொன்னா புரிஞ்சுப்பான்"

"ஏய் அவன் உன் கையைப் பிடிச்சு இழுத்துக் கிட்டு இருப்பான். நீயும் வலில அழுதுட்டு இருப்ப. அதைப் பாத்துட்டு சும்மா இருக்க சொல்றியா டி என்னை?" என்றவன் கையை மடக்கி காரில் குத்தினான். கோவத்தில் தன்னை மறந்து டியும் சேர்த்து உரிமையாய் வந்து விட்டது.

இதுவரை குரல் உயர்த்தி அவளிடம் பேசியதில்லை. அவன் கோவ முகத்தை இதுவே முதல் முறை பார்க்கிறாள். முதலில் அவன் கோவத்தில் அதிர்ந்து விழித்தவள் அவன் டியில் குளிர்ந்து நாணி சிவந்து புன்னகைத்தாள். கையைக் கட்டிக் கொண்டு ஆழமாய் அவனை உள் வாங்கினாள். கடுகு போட்டால் பொறிந்து விடுவது போல் கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டிருந்தான்.

அவளிடம் பதில் வராமல் போக நிமிர்ந்து பார்த்தவன், "இப்போ எதுக்கு இப்டி பாக்குற?. இப்போ தான் என்னை மொத தடவை பாக்குறியா?"

"கடுவன் மாதிரி மூஞ்சை வச்சுருக்குறேங்க. அதை மாத்துறேங்களா மொத. பார்க்க முடியல"

"கடுவனா?. அப்டியா இருக்கு?" என்று தலையைக் கையால் கோதியவன் கார் சைடு மிர்ரரில் ஒருமுறை பார்த்துக் கொண்டான்.

"வேலை இருக்குனு சொன்னேங்க. எப்போ கெளம்புனேங்க?"

"மதியமே வேலை முடிச்சுட்டு குமரேசன் கிட்ட பாத்துக்க சொல்லிட்டு கிளம்புனேன்"

"மதியத்துக்கு மேல கிளம்பி நைட் இங்க வந்துடேங்களா?. அவ்ளோ ஸ்பீடா வந்தேங்களா?. எதுக்கு அப்படி கஷ்டப்பட்டு வந்தேங்க?. வேலை முடிச்சுட்டு ரெஸ்ட் எடுத்துருக்கலாம்ல"

"ம்.. கால் பண்ணி நீ வருவியா மாட்டியானு யோசிச்சுட்டு இருக்கேன்னு பீல் பண்ணி சொல்லிட்டு. இப்போ ஏன்டா வந்தனு கேட்டா நான் என்ன சொல்றது?. பிறந்தநாள் பொண்ணு. பாவம் அவ ஆசையை ஏன் கெடுக்கனும்னு ஓடி வந்தா நீ இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ. போடி போய் அந்த ரோகித் கூட பார்ட்டி கொண்டாடு. நான் கெளம்புறேன்" என்று அவன் முறுக்கிக் கொள்ள.

"ரொம்பத்தான் சார்க்கு இன்னைக்கு கோவம் வருது. அவன் கூட பார்ட்டி செலிபிரேட் பண்ணத்தான் அவன் கிட்ட இருந்து கையை உருவிக்கிட்டு வந்தேன்னா?.." என்று இடுப்பில் கைவைத்து முறைக்க.

அப்போது தான் அவள் கையை ஆராய்ந்தான். ரோகித் கடுப்பில் வேண்டுமென்றே கையை இறுக்கிப் பிடித்ததில் கை கன்றிப்போய் சிவந்திருந்தது. அவள் பால்வண்ண கைகளில் ரத்தச்சிவப்பு தெளிவாய் தெரிந்தது. அவள் கையை எடுத்து பூவின் இதழைத் தடவுவது போல் மென்மையாய் தடவி, "வலிக்குதாடி?" என்றான். அவன் இன்னும் டி போட்டு அழைப்பதை உணரவில்லை.

அவன் ஸ்பரிசத்தில் அவளின் பெண்மை பூ பூக்க நெளிந்து கொண்டே, "ம்ஹூம் இல்ல.. லைட்டா" என்றாள்.

"அவனுக்கு என்னவாம்?. என்னைப் பார்த்தா ஏன் கடுப்பாகுறானாம்?. மொத நாளே ஓங்கி ஒன்னு வச்சுருப்பேன். படிக்குற பையன் மேல எதுக்கு கைய வச்சுக்கிட்டு, அதுவும் பால்பவுடர் மாதிரி இருக்குறானே ஒன்னுகிடக்க ஒன்னு ஆகிப்போவுமேனு சும்மா விட்டேன். ரொம்பத்தான் பண்றான். உன் கையைப் பிடிச்சுக்கிட்டு நிக்குறான்" என்று கடுகடுத்தான்.

"ம் அவன் என்னை லவ் பண்றானாம்" என்று இதழ் வளைக்க..

தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்து அவளை நோக்கினான். அப்போது தான் அவளின், 'எனக்கு மாறன் தான் முக்கியம். நான் அவனை தான் லவ் பண்றேன்' என்ற குரல் காதில் தேனாய் இன்னமும் ஒலித்தது.

இருந்தும், 'அது அந்த நேர கோவத்தில் அவனிடம் இருந்து தப்பிக்க சொன்ன பொய்யா கூட இருக்கலாமோ?' என்று மனதின் ஒரு மூலையில் பயம் ஒட்டிக் கொண்டிருந்தது. ஆனால் தன்னைக் கண்டவுடன் அவனை உதறி விட்டு ஓடி வந்து அணைத்துக் கொண்டது அவளின் ஏக்கத்தையும் காதலையும் ஒருசேர பறைசாற்றியது‌. உள்மனம் ஏதேதோ யோசனையில் குழம்பித் தவிக்க, "நீ என்ன சொன்ன நிலா?" என்றான் அவள் விழியோடு விழி கலந்து.

"அதான் சொன்னேனே அவன்கிட்ட நான் லவ் பண்றேனு" என்று முழுதாய் சொல்லாமல் பாதியோடு நிறுத்தினாள்.

"என்னாது! லவ் பண்றியா?. எப்போ?. யாரை?" என்று அடித்துப் பிடித்து எழுந்து பதட்டத்தோடு கேட்டவனின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது.


தொடரும்.