• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் - 34

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
45
26
18
Tamilnadu

அத்தியாயம் – 34




வயல் வேலை செய்து கொண்டிருந்தவர்களை அழைத்தான்.


“ஐயா!” என அவசரமாக ஓடி வந்தவர்களை கண்டவன்,


“இந்த இடத்தை தோண்ட துவங்குங்க சீக்கிரம்.” என்றான் கட்டளையாக.


ஈஸ்வரன் தண்டையை உயர்த்தியபடி கூறியவன் வார்த்தைகளில் அவ்வளவு உறுதி, அனைவருமே மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல வேகமாக அந்த இடத்தை சுத்தம் செய்து தோண்ட துவங்கினர்.


முல்லை ஒன்றும் புரியாமல் நின்று இருந்தாலும் இப்போது தன் மாமன் ஊர் தலைவராக நிற்க்கும் போது அவனிடம் கேள்வி எதுவும் கேட்க விரும்பாமல் அமைதியாக நின்று இருந்தாள்.


சித்தப்பு செய்தி அறிந்து அரக்க பறக்க ஓடிவந்தார். அவர் முகத்தில் அப்படி ஒரு பதட்டம், பயம், கோவம் ஓடி வரும் போதே.


மூச்சிரைக்க ஓடி வந்தவர், “ஈஸ்வர் எதுக்கு அரச மரத்தை வெட்டுற இது எவ்வளவு பெரிய பாவம் அதுவும் திருவிழா நேரத்துல?” சத்தமாக கேட்டார்.


“அரச மரத்தை வெட்டல.” என்று முடித்துக் கொண்டான் ஈஸ்வர்.


“இது விவசாய நிலம் ஈஸ்வர் இங்க எதுக்கு இவ்வளவு பெரிய குழி தோண்டுற, இந்த மரம் நான் வச்சது, இந்த மரமும் அழிந்து போய்டும். பல வருஷமா உழைக்கிறவங்களுக்கு நிழல் தர மரம் இது.” எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் கத்திக் கொண்டு இருந்தவர் முகத்தை கூர்ந்து பார்த்த ஈஸ்வர்


"என்னை எது சொல்லியும் தடுக்க முடியாது, எனக்கு தெரியும் என்ன பண்ணனும்னு, உங்க வேலையை மட்டும் பாருங்க.” என எச்சரிக்கையாக கூறினான்.


சித்தப்பு அதை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை.


"ஈஸ்வர் கொஞ்சமாவது பெரியவங்க வார்த்தையை மதிக்கணும், இப்படி மதி இழந்து ஆடாத, பிற்காலத்தில் ரொம்ப வருத்த படுவ ஈஸ்வர்."


கோவத்தில் சித்தப்பு முகம் அனலாக தகித்தது.


“இன்னும் ஒரு வார்த்தை பேசுனா கூட நீங்க என்னுடைய தண்டனைக்கு ஆளாகனும். எனக்கு இரக்கம் பாக்குறது பிடிக்காது.” என்றான் குழியை பார்த்தபடி.


சித்தப்பு செருப்பு கால்லை தரையில் உதைத்தபடி அங்கு எதுவும் கிடைக்க கூடாது ஈஸ்வரனுக்கு, என்ற வேண்டுதலோடு குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார்.


தந்தையின் செயலை கண்ட ராஜேந்திரன், “அப்பா ஒரு குழி நோண்டுறதுக்கு எதுக்கு இவளோ கோவபடுறீங்க, விடுங்க அவன் வேலை இல்லாமல் பைத்தியம் மாதிரி எதுவோ பண்ணிக்கிட்டு இருக்கான்.”


சப்பென்று மகன் கன்னத்தில் அறைந்தார் சித்தப்பு. ராஜேந்திரன் தன் தந்தை தான் தன்னை அடித்ததா என நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு இருந்தான் அதிர்ச்சியில்.


“முட்டாள் முட்டாள் யார் டா பைத்தியம், அவன் பைத்தியமா? அவன் பைத்தியமா? நம்ப தான் பைத்தியம் இத்தனை நாள் நான் உயிரை கொடுத்து தேடுனது அவன் கைக்கு போய்டும் போல. அவனுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சு, எப்படி தெரிஞ்சிது. அந்த கிழவன் உருவாக்கி வச்ச ஆதாரம் எல்லாத்தையும் தான் நான் அழிச்சிட்டேன். அப்பறம் எப்படி அவனுக்கு தெரிஞ்சிது. இப்போ அவன் குழி தோண்டுற இடம் தெரிஞ்சு தான் தோண்டுறானா?


அவன் கைக்கு கிடைக்க கூடாது, என்னுடைய பல வருஷத்து கனவு, வெறி எல்லாமே இது தான். நான் பல இடத்துல தேடி கிடைக்காதது எப்படி அவனுக்கு கிடைக்கும் கிடைக்க கூடாது.” என வெறிபிடித்தது போல் புலம்பி தள்ளிய தந்தையை இன்னும் அதிர்ச்சியாக பார்த்தான்.


“நீங்க என் கிட்ட இருந்து எதை மறைக்கிறீங்க அப்பா?”


கன்னத்தை பிடித்தபடி கேட்டவனை கண்டவர் சுதாரித்துக் கொண்டார் தன் தோளில் கிடந்த துண்டால் முகத்தை ஒற்றிக் கொண்டவர்,


“ஒன்னும் இல்ல.” என்றபடி மீண்டும் குழி தோண்டும் இடத்துக்கே வந்தார்.


பொழுது சாய துவங்கியது, ஆழம் சென்று கொண்டே இருந்ததே தவிர்த்து எதுவும் கிடைக்க வில்லை, குழி தோண்ட துவங்கிய ஆட்கள் பலம் இழந்து சோர்ந்து போனார்கள்.


"ஐயா எங்களை மன்னிச்சிடுங்க இதுக்கு மேல எங்க உடம்புல சக்தி இல்லை ஐயா!”


சித்தப்பு நக்கலாக சிரித்தவர், "இதுக்கு தான் பெரிய மனுஷன் சொள்ளுறதை கேட்கணும் ஈஸ்வர், இப்படிப் அகம்பாவமா முடிவு எடுக்க கூடாது, அதை மீறி முடிவு எடுத்தா அசிங்க பட்டு நிக்கணும்." என்றார்.


சித்தப்புவை கண்டு கொள்ளாதவன் நீங்க மேல வாங்க என வேறு சிலரை உள்ளே இறக்கி விட்டான். அவனின் செயல் கூறியது முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என.


ஈஸ்வரன் செயலில் மீண்டும் சித்தப்பு முகம் கறுத்து போக, “எங்க ஈஸ்வரன் பிடிவாதம் பிடிச்சா அதை மாத்திக்க மாட்டான்.” என்றபடி வந்தான் கம்பன்.


இன்னும் பல அடி நோண்ட பட்டது. கோவிலில் பூசாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்ய துவங்கினார். ஆட்கள் உயிரை கொடுத்து நோண்டியும் எதுவும் கிடைக்க வில்லை, முல்லை அமைதியாக பார்த்தாள் அவள் மனம் கூறியது உள்ளே எதுவோ இருக்கு என்று. இவ்வளவு ஆழம் தோண்டியும் எதுவும் கிடைக்காததால் சித்தப்பு முகத்தில் தோன்றிய சிரிப்பு அப்படியே மறைந்து போனது உள்ளிருந்து கேட்ட சத்தத்தில்.


ஈஸ்வரன் விழிகள் கூர்மையானது, அவன் கையில் இருந்த தண்டைஇல் இருந்த முத்துக்கள் மின்னியது.


“இனி பொறுமையா கையால நோண்டுங்க கவனமா!” என்றான் அழுத்தமாக.


கொடி உடல் சிலிர்க்க ஆர்வமாக உள்ளே எட்டி பார்த்துக் கொண்டு இருந்தாள் குழி வரம்பில் நின்றபடி. எங்கே தன்னவள் உள்ளே விழுந்து விடுவாளோ என கவனமாக மனைவி இடுப்பை சுற்றி வளைத்து இழுத்து தன் அருகில் நிறுத்திக் கொண்டவனை கண்ட கம்பன் மென்மையாக சிரித்தான். ஆட்கள் கையால் தோண்டி எடுக்க குட்டியான ஓர் அம்மன் சிலை கிடைத்தது. ஒரு ஜான் அளவே இருந்தது, அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்


"ஐயா அம்மன் சிலை.” என குழி தோண்டியவர்கள் சிலாகித்து கூறினர்.


“மெதுவா வெளிய எடுங்க.” என சிலையை பார்த்தபடி ஈஸ்வர் கூறினான்.


முல்லை உலகை மறந்து தன் அருகில் நின்று இருந்த மாமனை மறந்து அந்த குட்டி அம்மனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் விழிகளை விரித்து. அம்மன் சிலையை மேலே எடுத்ததும் முல்லை கைகள் தன்னை அறியாமல் நீண்டது.


சித்தப்பு வேகமாக ஓடி வந்தவர் முல்லை கையை தட்டி விட்டு அந்த சிலையை வாங்க கை நீட்டினார். சித்தப்பு தள்ளி விட்டதில் கொடி குழிக்குள் விழ பார்க்க அதற்குள் ஈஸ்வரன் கொடியை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து இருந்தவன் சித்தப்பு காலை இடறி விட்டான். மனிதன் குழிக்குள் தலை குப்புற விழுந்து மண்ணை கவ்வினான்.


அதற்குள் சிலையை மேலே எடுத்து வந்தவர்கள் ஈஸ்வரன் முன்பு பவ்வியமாக சிலையை நீட்ட, “கொடி உன் கைல வாங்கு.” என்றான் அவளின் கணவன்.


மண்ணும், புழுதியுமாக இருந்த அந்த குட்டி அம்மன் சிலையை கையில் பரவசத்துடன் வாங்கியவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.


" மாமா அம்மன் சிலை பார்க்க தான் குட்டியா இருக்கு, ஆனா நல்ல கணமா இருக்கு.” என்றவள் அங்கு மோட்டார் ஓடிக் கொண்டு இருப்பதை கண்டு வேகமாக தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி ஓடினாள். அனைவருக்கும் சிலை கிடைத்ததில் ஆச்சரியம்.


ஈஸ்வரன் புருவங்கள் முடிச்சிட கொடியை பின் தொடர்ந்தான். அம்மனிடம் மூக்குத்தி இல்லையே, ஒருவேளை இன்னும் குழியை ஆழமா தோண்டனுமோ? மனதில் உதித்த கேள்வியுடன் மனைவி செய்கையை காண துவங்கினான். புதிதாக பொங்கி வரும் தண்ணீரில் அம்மன் மீது இருக்கும் மண்ணை சுத்தம் செய்ய துவங்கினாள்.


சித்தப்பு வேக வேகமாக உடல் முழுவதும் மண்ணோடு ஓடி வந்தவர் ஈஸ்வர் இந்த சிலை என்னுடையது, என் கிட்ட கொடு என தவித்துக் கொண்டு நின்றார்.


அவரை ஆழமாக பார்த்தவன், “இந்த மண்ணு என்னுடையது, அதுல இருக்க பொருளும் என்னுடையது, வேற யாருக்கும் சொந்தம் கிடையாது, உங்க வேலையை மட்டும் பாருங்க, அதை மீறி கொடி கையில் இருக்க சிலையை வாங்க நினைத்தால் என்னுடைய வேற முகத்தை பார்க்க வேண்டி வரும்.” என பகிரங்கமாக எச்சரிக்கை செய்தான்.


சித்தப்புவால் எதையும் ஏற்க முடியவில்லை, இந்த சிலைக்காக இரவு, பகல் தூங்காமல் பேய்களை போல் சுற்றி சுற்றி அலைந்து பல இடங்களில் தேடி, இதே அரச மரத்தை சுற்றி பல இடங்களில் தோண்டி பார்த்து ஏமாந்து போனவர் இப்போது கொடி கையில் இருப்பதை ஏற்க முடியாமல் அபகரிக்க முடிவு செய்து துடிக்கிறார்.


கொடி பொறுமையாக சிலையை சுத்தம் செய்து முடித்தவள் அப்போது தான் கவனித்தாள் தன் மாமன் தண்ணீரில் நிற்பதை.


வேகமாக ஈஸ்வரன் அருகில் வந்தவள், “மாமா தண்ணில நிக்காதீங்க, ஏற்கனவே உங்களுக்கு காய்ச்சல். இதுல நீங்க தண்ணில நிக்கிறீங்க.” என கடிந்து கொண்டவள் தன் புடவை முந்தானையை கொண்டு அம்மன் சிலையை துடைத்து மாமன் கையில் ஒப்படைத்தாள்.


சிலையை சுத்தம் செய்த பிறகு தான் தெரிந்தது அந்த சிலை ஐம்பொன் சிலை என, அதிலும் தங்க நிறத்தில் ஜொலித்துக் கொண்டு இருந்த சிலையை சுற்றி சுற்றி பார்த்தான் மூக்குத்தியை தேடி.


சித்தப்பு உள்ளம் வெடிக்க நின்று கொண்டிருந்தார். ஊர் மக்கள் பாதி பேர் அங்கு தான் கூடி இருந்தனர், அனைவரும் சிலையை பார்த்து விட்டனர்.


ஓர் வயதான பெண்மணி, "இந்த தெய்வம் இங்க இருக்க விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் காவல் தெய்வம் தம்பி, இவுங்களை வணங்கி தான் விவசாயம் துவங்குவோம், அறுவடை துவங்குவோம் இவுங்களுக்கு படையல் போட்டு தான் துவங்குவோம், நல்ல சக்தி வாய்ந்த தெய்வம், இவுங்களை திடீர்னு காணோம், அதுக்கப்பறம் நம்ப ஊர்ல விவசாயம் கொஞ்சம் கொஞ்சமா குறைய துவங்குச்சி, இப்போ இந்த அம்மா திரும்பவும் கிடைச்சிட்டாங்க." என்றவர் தெய்வத்தின் பாதத்தை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்.


கொடி அம்மன் கையில் எதுவோ இருப்பதை கண்டவள் மாமா இங்க பாருங்க எதோ வித்தியாசமா இருக்கு என தொட்டு காட்டினாள்.


ஈஸ்வரன் அதன் பிறகு தான் கண்டான் கையில் குட்டி அறிவாள் போல் அம்மன் பிடித்து இருப்பதை, அதில் ஒரு துவாரமும் இருக்க, கொடி அவசரமாக தன் இடுப்பில் தொங்கிக் கொண்டு இருந்த சாவி கொத்தை எடுத்தாள். அந்த அருவாள் சின்னம் பொறித்த குட்டி சாவியை அவள் பார்த்ததுண்டு வேகமாக சாவியை துவாரத்தில் பொருத்தி பார்க்க அருவாள் பாதி கீழே அழுந்தியது. அனைவரும் ஆச்சர்யமாக பார்க்க உள்ளே மின்னி கொண்டு இருந்தது மூக்குத்தி, பல கோடி விலைமதிப்பற்ற மூக்குத்தி. பெரியதாக தான் இருந்தது, இந்த மூக்குத்தியையும், தன்னையும் பாதுகாத்து கொண்டு இத்தனை நாள் இந்த தெய்வம் மண்ணுக்குள் வாழ்ந்து இருப்பது புரிந்தது.


கொடி கையில் மின்னிக் கொண்டு இருந்த மூக்கித்தியை கண்டு அனைவருக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை. அதே நேரம் அம்மன் கோவில் மணிகள் தானாக அடித்துக் கொண்டு ஆரவாரம் எழுப்பியது. பூஜை செய்து கொண்டு இருந்த பூசாரி,தெய்வத்தை வணங்கி கொண்டு இருந்த மக்கள் அனைவரும் குழம்பி போனார்கள்.


கொடி கையில் இருந்த மூக்குத்தியை கையில் வாங்கியது ஈஸ்வரனுக்கு அதன் மதிப்பு, விலை, ஆடம்பரம், ஜொலிப்பு எதுவும் தெரியவில்லை. சிலையை வாங்கி அதே அரச மரத்தடியில் வைத்தவன்.


“இந்த அம்மன் இந்த விவசாய பூமியை காக்க கூடியவள் இவளுக்கு இங்கேயே நான் திரும்பவும் கோவில் கட்டுறேன், அதுவரைக்கும் தினமும் நால்வர் அம்மன் சிலைக்கு பாதுகாப்புக்கு இருக்கனும், யார் பாதுகாப்பில் இருக்கும் போது சிலை காணாமல் போகுதோ அவுங்க உயிரை நானே எடுப்பேன்.” என்றவன் அப்போதும் நால்வரை காவலுக்கு வைத்து விட்டு மூக்குத்தியை கையில் பிடித்தபடி எல்லாரும் கோவிலுக்கு போகலாம் என்றபடி முன்னால் நடக்க துவங்கினான்.


ஈஸ்வரன் மூக்குத்தியை எடுத்துக் கொண்டு கோவில் உள்ளே நுழைய அனைவருமே ஆச்சர்யமாக பார்த்தனர்.


பூசாரி இதை அம்மனுக்கு போட்டு விடுங்க என பூசாரி முன்பு நீட்ட, மூக்குத்தி ஜொலிப்பையும், அதன் மதிப்பையும் கண்டு வாயை பிளந்தவர் ஈஸ்வரன் பார்வையில் நடுங்கி போனார்.


அப்போது தான் பூஜை முடித்து இருந்ததால், மூக்குத்தியை மஞ்சள், குங்குமம் கலந்த நீரில் போட்டு எடுத்து அம்மன் மூக்கில் போட்டு விட கிராமத்துக்கே வெளிச்சம் கிடைத்த உணர்வு.


மூக்குத்தி போட்ட பிறகு, அதன் பல பலப்பிலும், ஜொலிப்பிலும் அம்மனின் அழகை கண்டு அனைவருக்கும் மூச்சடைத்து போனது, உடல் முழுவதும் நகை, பட்டு துணி அனைத்தையும் தாண்டி அவளின் அடையாளமான மூக்குத்தி அவள் மூக்கில் ஏறிய பிறகு தான் அம்மனுக்கு சக்தி வந்தது போல் ஒரு உணர்வு அனைவருக்கும். அனைவரும் மெய் மறந்து கண் மூடி அம்மனை வேண்டிக் கொண்டனர்.



தொடரும்...