அத்தியாயம் – 35
ஈஸ்வர் வெளியே வந்து நிற்க அங்கே வந்த கம்பன், "உனக்கு கொடுக்கப்பட்ட ஒரு வேலையை குறை இல்லாமல் முடிச்சிட்ட, அடுத்த வேலையை எப்போ முடிக்க போற ஈஸ்வரா?" கம்பன் கேள்வியில் ஈஸ்வரன் இரத்தம் கொதித்தது.“இன்னொரு வேலையே கிடையாது கம்பா.” என்றான் எதுவும் தெரியாதது போல.
நான் லிங்கத்தை எடுக்க போவது கிடையாது என சூசகமாக கூறினான் ஈஸ்வர்.
கம்பன் சத்தமாக சிரித்தவன், “ஈஸ்வர் ஒவ்வொரு மனிதனின் படைப்புக்கும் ஒரு அர்த்தம் இருக்கு, நீ தான் அந்த லிங்கத்தை வெளிய எடுக்க போற, பாக்கலாம் அந்த சிவனா, நீயான்னு விதியை மாத்த முடியாது.” என்றான் அழுத்தமாக.
“கம்பா நான் விதியை மாத்த நினைக்கல, விதியையையே அழிக்க நினைக்கிறேன் என்னையும், என் கொடியையும் பாதுகாக்க நான் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவேன். அவளை இழக்க மாட்டேன், மூக்குத்தி எடுத்தாச்சு, இனி கடைசி நாள் திருவிழா நல்ல படியா முடிஞ்சதும் ஊர் மக்கள் அவுங்க வாழ்க்கையை பார்க்க துவங்கிடுவாங்க.” என்றவன் மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
சித்தப்பு அதே தண்ணீரில் மடங்கி அமர்ந்தவர் எழவே இல்லை, பல கோடி, பல கோடிக்கு பேசி இருந்த சிலையும், மூக்குத்தியும் தன்னை விட்டு போனதே என்ற ஆதங்கம், அதை எடுத்த ஈஸ்வரன் மீது தீராத கோவம், சிலையை கையில் வாங்கிய கொடி மீது கொலை வெறி தலை விரித்தாடியது. உன்னை பிறந்ததும் பலி கொடுத்து இருக்கணும் எல்லாத்தையும். அந்த கிழவன் கெடுத்துட்டான், நான் இத்தனை வருஷம் பட்ட கஷ்டம் எல்லாமே வீணா போச்சு, இத்தனை வருஷம் காத்திருப்பு, திட்டம் அனைத்தும் பாழானது.
தலையில் அடித்துக் கொண்டார் சித்தப்பு, தந்தை செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த ராஜேந்திரன் அவரை நெருங்கி வந்து,
"அப்பா என் கிட்ட எதை மறைக்கிறீங்க, நீங்க யாருக்குமே உண்மையா இருக்க மாட்டீங்களா? இன்னும் என்ன என்ன இருக்கு, எல்லாமே தெரிஞ்சும் எதுக்கு என் கிட்ட சொல்லாமல் இருக்கீங்க?"
அதே நேரம் கை தட்டும் சத்தம் கேட்டது. ராஜேந்திரன் யார் என திரும்பி பார்க்க நனி நின்று கொண்டு இருந்தார்.
“என்ன கந்தா என் மகன் தாங்க முடியாத ஆப்பா சொருகிட்டான் போல?” நக்கலாக புருவம் உயர்த்தி கேட்டாள்.
“எல்லாருக்கும் ஆட்டம் காட்டி, சுத்த விட்டு அழ விட்டு வேடிக்கை பார்ப்ப, இப்போ உன்னையே ஒருத்தன் சுத்து, சுத்துன்னு சுத்த விடுறான் பார்த்தியா. இதுக்கு பேர் தான் உலகம் உருண்டைனு சொல்லுறதா? உன்னுடைய நிலைமையை பார்க்க எனக்கு எவளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? உன்னை இந்த நிலைமையில் பார்க்க தான் டா இத்தனை வருஷம் காத்திருந்த, இன்னும் மோசமான நிலைமையில் பார்த்தா கூட என் மனசு ஆறாது, சொல்லு உன் பிள்ளை கேக்குறான் பாரு.”
புருவம் உயர்த்தி நக்கலாக கேட்டவளை கொலை வெறியோடு முறைத்தான் சித்தப்பு.
தன் மகன் புறம் திரும்பிய நனி, “நீ உன் அப்பன் கிட்ட எவ்வளவு கேட்டாலும் உண்மையை சொல்ல மாட்டான். அவன் இதுவரைக்கும் அவனுக்கே உண்மையா இருந்தது கிடையாது, இனி எப்படி உனக்கு உண்மையா இருக்க போறான். அடுத்தவங்க பொருளை தட்டி பறிக்கிற பேராசைக்காரன் தான் உன் அப்பன். உனக்கு நல்ல புத்தி இருந்தா திருந்திடு, ஈஸ்வரன் கையாஷ சாகாம நல்ல வாழ்க்கை வாழு உனக்குன்னு இருக்க சொத்து பத்தை வச்சி. அதை விட்டுட்டு நான் என் அப்பனுக்கு துணை நிப்பேன், தப்பு மட்டுமே செஞ்சி ஈஸ்வரன் கையால சாவேன்னு சொன்னா பெத்த கடமைக்கு உனக்காக ரெண்டு சொட்டு கண்ணீர் மட்டும் தான் என்னால விட முடியும்.” என்றவர் பல வருடங்களுக்கு பிறகு விரிந்த சிரிப்புடன் நடக்க துவங்கினார்.
“ஏய் கூறு கெட்டவளே.” என அடி தொண்டையில் கத்திய கணவனை நனி திரும்பி கூட பார்க்க வில்லை அவ்வளவு ஆனந்தம், ஆர்ப்பரிப்பு அவள் முகத்தில்.
நாளை தான் கடைசி நாள் திருவிழா ஊரே கோவிலில் தான் இருந்தது, அனைவரும் கடை தெருவில் சுற்றிக் கொண்டு அன்னதானத்தை சாப்பிட்டு விட்டு நாளை இறுதி நாள் திருவிழா அலங்காரத்தை செய்தனர்.
ஈஸ்வரன் பணத்தை சில்லரை போல் வாரி இறைத்து இருந்தான். அனைவரும் வாயை பிளந்து கொண்டு பார்த்தனர். ஆச்சர்யம் ஒரு பக்கம், அதிர்ச்சி ஒரு பக்கம், மரியாதை ஒரு பக்கம் என ஈஸ்வரன் அந்த ஊருக்கு மட்டும் இல்லாமல் சுற்றி உள்ள ஊர் மக்கள் அனைவர் மனதிலும் உயர்ந்து நின்று விட்டான். இனி அவனே நினைத்தாலும் அனைவர் மனதில் இருந்தும் அவன் இறங்க போவது கிடையாது.
அதிலும் விலைமதிபற்ற மூக்குத்தி தன் கைக்கு கிடைத்தும் அதை தானே அபகரித்து விற்க ஆசை படாமல் கோவிலில் ஒப்படைத்து அம்மன் மூக்கில் போட்டு பார்த்து அழகு பார்த்தவனின் உயர்ந்த குணத்துக்கு பலர் அடிமை ஆகி விட்டனர். பலரின் முன்னுதாரணமாக மாறி இருந்தான் ஈஸ்வர்.
வீட்டிற்குள் நுழைந்த ஈஸ்வர் தட்டு தடுமாறி நின்றான். அவன் உடல் நெருப்பாக கொதித்தது. அதற்குள் கொடி அவசரமாக பாய் விரித்து அதில் ஒரு மெல்லிய துணியை விரித்து போட்டாள்.
ஈஸ்வரன் அருகில் நெருங்கியவள் அவன் கை பிடித்து, “மாமா வாங்க வந்து படுங்க.” என கை தாங்களாக அழைத்து செல்ல ஈஸ்வரனுக்கு தன் உடல் நிலையை தாண்டி கொடி தன் மீது கொண்ட அக்கறை பிடித்து இருந்தது. இவள் இது போல் என் அருகிலேயே இருப்பான்னா நமக்கு தினமும் காய்ச்சல் வந்தாலும் சந்தோஷம் என நினைத்துக் கொண்டான்.
பாயில் குனிந்து படுக்க கூட நிதானம் இல்லை ஈஸ்வரன் உடலில், படுத்ததும் கண்கள் மூடிக் கொண்டன, தன் மாமனின் கால், கைகளை அரக்க, பறக்க தேய்த்து விட்டவள் தைலம் கொண்டு வந்து அவன் நெஞ்சு பகுதியில் தயக்கமாக தேய்த்தாள். ஈஸ்வரனின் உடல் குளிரில் தூக்கி தூக்கி போட்டது, போர்வை போற்ற கூடாது என்பதால் தன் புடவை முந்தானையை விரித்து கணவன் மீது போட்டாள். இந்த புடவை அழுத்தமாக இருந்ததால் அவள் விரித்த முந்தானை விரிப்புக்குள் உடலை குறுக்கிக் கொண்டு சுகமாக தூங்கிக் கொண்டு இருந்தான் ஈஸ்வரன்.
அவன் ஏங்கிய முந்தானை சுகம் இன்று அது கிடைத்தும் அவனால் உணர முடியாமல் போனது, ஆனால் சுகமாக தூங்கிக் கொண்டு இருந்தான். அவன் உடலில் இருந்த வியாதிகள் எல்லாம் பறந்து போனது போல.
முல்லை தான் விடிய விடிய தூக்கத்தை தொலைத்து இருந்தாள். மாமனுக்கு இப்படி ஆகி விட்டதே என்ற கவலை ஒரு பக்கம், கணவனை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஒரு பக்கம் இருக்க விடியல் முழுவதும் கண்களில் ஒரு பொட்டு தூக்கம் இல்லாமல் முந்தானை ஈஸ்வரன் உடலை விட்டு விலகாமல் கண்ணின் இமை போல் பார்த்துக் கொண்டாள்.
ஈஸ்வரன் மட்டும் முழு சுய நினைவில் இருந்து இருந்தால் கட்டாயம் மெழுகை விட மோசமாக உருகி இருப்பான், அவனின் கெட்ட நேரம் இதை பார்க்க குடுத்து வைக்காமல் அரை குறை மயக்கத்தில் அவள் முந்திக்குள் கட்டுண்டு கிடந்தான்.
ஈஸ்வரன் திரும்பி படுக்க திரும்பும் பொழுது தான் உணர்ந்தான் தன் உடல் மீது போர்வை இருப்பதை. போர்வை நான் எடுக்க வில்லையே என பதறி கண் திறக்கும் போது தான் கண்டான் அவனின் கொடி விழித்துக் கொண்டு இருப்பதையும், தன் உடலை அவளின் முந்தானை அலங்கரித்து கொண்டு இருப்பதையும் தான்.
கண்கள் விரிய எழுந்து அமர்ந்த தன் மாமனை கண்டவள் சட்டென்று அவனை நெருங்கி அவன் கழுத்தில், கன்னத்தில் கை வைத்து பார்த்தவள் முகம் சுருங்கி போனது. அவன் உடலில் காய்ச்சல் குறையாமல் அப்படியே தான் இருந்தது.
இப்படியே சென்று பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும், “மாமா!” என பாவமாக அழைத்தவளை கண்டவன் தன் கழுத்தில் இருந்த அவளின் கையை இறுக்கமாக பிடித்தான்.
சட்டென்று தன் கையை இழுத்துக் கொண்டவள், “மாமா நான் குளிச்சிட்டு வரேன்.” என சிட்டுக் குருவி போல் பறந்து சென்றாள் பெண்ணவள்,
ஆணவன் தான் உறைந்து அமர்ந்து இருந்தான். இரவு முழுவதும் தெரியாமல் இருந்தாலும் அதிகாலையாவது கண்டோமே என நினைத்துக் கொண்டவன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
கொடி குளித்து விட்டு வெளியே வர ஈஸ்வரன் குளிக்க நுழைந்தான். இருக்கும் காய்ச்சலுடன் மீண்டும் பச்சை தண்ணீரில் தன் மாமன் குளிக்க போவதை நினைத்து கவலையாக இருந்தது முல்லைக்கு. ஆனால் ஈஸ்வரனோ உடல் கோளாறுகளை தாண்டி மிக்க மகிழ்ச்சியாக இருந்தான், புத்துணர்ச்சியாக இருந்தான்.
வாய்க்குள் தோன்றிய ஆங்கில பாடலை சத்தம் வராமல் முணு முணுத்த படி ஜாலியாக குளித்து விட்டு கம்பீரமாக அறைக்குள் வந்தவனை வரவேற்றது புது துணி, புது நகைகள். மனைவி வாங்கிய அனைத்தையும் ஆசையாக வருடி பார்த்தவன் பழைய நகைகளை கழட்டி வைத்து விட்டு புது நகைகளை அணிந்து கொண்டு தயாராக இருக்க.
“மாமா!” என்ற குரலுடன் அறைக்குள் நுழைந்தாள் கொடி.
கொடியை கண்டு அசந்து போனான் ஈஸ்வர். ஈஸ்வரனின் கம்பீரத்தில் தன்னை மறந்து நின்றவள்,
“மாமா பூசாரி வந்து இருக்காங்க வாங்க.”
“கொடி நகை எல்லாம் எடுத்துட்டு வா.” என்ற ஈஸ்வர் வெளியே வந்தான், அவனின் மொத்த குடும்பமும் நின்று இருந்தது.
கொடி நகையை கொண்டு வர அதை வாங்கி பூசாரி கையில் கொடுத்தவன், “மொத்த நகையும் போட்டு அலங்காரம் பண்ணிடுங்க. ஒரு நகையை கூட விட கூடாது.”
“கண்டிப்பா ஐயா அம்மன் ஊர்வலத்துக்கு அம்மனை அம்சமா தயார் பண்ணிடுறேன். காலையில், சாயங்காலம் சிவ பூஜை இருக்கு ஐயா! அதுக்கான மாலை நீங்க உங்க கையாள எடுத்து தரணும்.” பூசாரி பவ்வியமாக கூறினார்.
“எனக்கு தெரியும் பூசாரி நீங்க போங்க மாலை கட்ட சொல்லி இருக்கேன் நான் எடுத்துட்டு வரேன்.” என்றான்.
ஈஸ்வரன் கூறியது போலவே மாலையுடன் கோவிலுக்குள் நுழைய கோவிலே ஜே, ஜே வென இருந்தது, நிற்க இடம் இல்லை திரும்பும் திசை எல்லாம் தலைகள் மட்டும் தான் தெரிந்தது, மக்கள் கூட்டம் அலை மோதியது.
ஊர் பேர் அறியாத மக்கள் கூட இன்றைய கடைசி திருவிழாவில் கலந்து கொண்டனர். காலையே இவ்வளவு கூட்டம் என்றால் மாலை கட்டாயம் கூட்ட நெரிசலாக இருக்கும் என முடிவோடு தன்னை வணங்கி நிற்கும் அனைவரையும் ஒரு நிமிடம் நின்று பார்த்தான் ஈஸ்வரனின் உடல் சிலிர்த்து அடங்கியது. இவ்வளவு மக்களின் மரியாதையை, அன்பை எதிர் பார்க்க வில்லை அவன்.
சிவன் சன்னதி முன்பு நின்றவனை சிரித்த முகமாக வரவேற்றான் கம்பன்.
பூசாரி வேகமாக ஓடி வந்து மாலையை வாங்கியவர், “ஐயா பூஜையை துவங்கிடலாமா?”
“தொடங்குங்க, இவ்வளவு மக்கள் காத்திருக்காங்க, இனி மக்களையும், சாமியையும் எனக்காக காத்திருக்க வைக்க வேண்டாம் பூசாரி.” அக்கறையாக கூறினான்.
"ஐயா உங்களுக்காக காத்திருக்கதுல எந்த தவறும் கிடையாது."
கூட்டத்தில் இருந்து ஒரு குரல் சத்தமாக ஒலித்தது. கூட்டத்தை திரும்பி பார்த்த ஈஸ்வரன் அமைதியாக தலை அசைத்து விட்டு கொடியை இழுத்து தனக்கு ஒட்டியது போல் முதல் ஆளாக நிறுத்திக் கொண்டான்.
பூசாரி பூஜையை துவங்கினார். முதலில் பாலால் அபிஷேகம் செய்தார். ஊர் மக்கள் அனைவரும் இன்று அவர்கள் வீட்டில் கிடைத்த மொத்த பாலையும் கோவில் வாசலில் கொண்டு வந்து வைத்து விட்டனர். சிவன் குளிரும் அளவுக்கு, மக்கள் மனம் நிறையும் அளவுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
உச்சி முதல் பாதம் வரை சிவனை குளிர்ச்சி படுத்தினார். ஈஸ்வரன் கொண்டு வந்த மாலையை எடுத்து போட்டவர் அங்கு சிவனுக்கு முன்பு இருந்த பிரமாண்ட தீபத்தை சிவனை முழு மனதாக பிராத்தித்து ஏற்றி வைத்தார். இரவு அம்மன் ஊர்வலம் முடிந்து வந்து அனைவரும் காப்பை கழட்டும் வரை அந்த தீபம் அணையாமல் ஏறிய வேண்டும். அதன் அருகில் யாரும் செல்ல கூடாது, அது சிவன் பாதத்தின் அருகில் எரிய கூடியது.
தொடரும்...