• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மென்பனி இரவுகள் - 05

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
அத்தியாயம் – 5

மௌனங்கள் என் வாழ்வாகிப்போன
ஓர் நாளில், நீ என்னில் நீங்கிப்போனாய்....
அன்றுதான் மழை எனக்காக அழுதது,
காலம் பொய்த்த ஒரு வெளியில்,
நான் குடியிருக்கலானேன்.... நீ அறிவாயா..?
இன்னும் நான் உன் ஞாபகங்களில்
சீவிக்கின்றேன் என்று......!
உன்னோடான நிமிடங்களின் பெறுமதி
என்னைத் தவிர யார் அறிவார் கண்ணா.....!
நிமிடங்கள் கழியும் நீயின்றி........ ஆனாலும்,
நினைவுகள் அகலாது கனப்பொழுதேனும்.....!


----------------------

அதோ இதோ என்று தோழிகள் இருவரும் தாயகம் திரும்பும் நாளும் வந்தது. அன்றிவு 11.00மணிக்கு ப்ளைட், அவர்களை அழைத்துச் செல்ல தீபக்கின் அப்பாவும், வித்தியின் அம்மாவும் வந்திருந்தனர். ஷானவி யாரையும் வரவேண்டாம் என்று கூறிவிட்டாள்.


ஒரு வழியாக அனைத்துப் பொருட்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு இரவு உணவிற்கு அமர்ந்தனர் நால்வரும். தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அன்று அந்த விவாதம் நடந்ததில் இருந்து வித்யா ஷானவியிடம் பேசுவதை நிறுத்திவிட்டாள்.


கிட்டத்தட்ட பனிரெண்டு நாட்கள் ஆகிவிட்டது, முதலில் ஷானவி வித்யா சண்டையிட்டதும், எப்போதும் போல் தான் திட்டுகிறாள், சண்டையிடுகிறாள், இரண்டு நாளில் சரியாகி விடுவாள் என்று நினைக்க, அவளின் நினைப்பை தண்ணீரை ஊற்றி அணைத்தாள் அவளின் அருமை தோழி..


ஷானவி எவ்வளவோ கெஞ்சியும், கொஞ்சியும், மிஞ்சியும் மிரட்டியும் கூட பேசவில்லை வித்யா. அவளுக்கு ஷானவி அன்று பேசியது, அவள் எடுத்த முடிவு எதையும் ஏற்று கொள்ள முடியவில்லை. அதனால் அவள் அவளையே உணர வேண்டும், ஒருவரின் உதாசீனம் மற்றவரை எப்படி காயபடுத்தும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தாள்.


அதனால் ஷானவியின் முகத்தை பார்த்து இளக்கம் வந்தாலும், சிபியின் வாழ்க்கையை நினைத்து அதை கடுமையாக்கி கொண்டாள். வித்யாவின் வெளிப்படையான ஒதுக்கம் ஷானவிக்கு மிகுந்த வலியைக் கொடுத்தது. அவளை பொருத்தவரை அவள் செய்தது சரி என்றே நினைத்தாள்.


அவள் செய்த தவறுக்கு, சிபியின் வாழ்க்கை பாழாகிப் போய்விட்டது. அவன் காதலித்த பெண்ணை விட்டுவிட்டு, தன் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட்டு, பரிதாபப்பட்டு அவள் கழுத்தில் தாலிகாட்டியதாக நினைத்தாள்.


அவனிடம் இருந்து பிரிந்து, அவன் இழந்த அந்த வாழ்க்கையை திரும்ப கொடுக்க வேண்டும் என்று தான், தனக்கு வெளிநாட்டு வாசம் பிடிக்காது என்ற போதும், அப்படி செய்தாள். ஆனால் அவளுக்கு தெரியாதது சிபி இவளைத்தான் காதலித்தான் என்பது..!


மேலும் அவளாக உணரும் வரை யாரும் அவளிடம் இந்த உண்மையைக் கூறக் கூடாது என்று எல்லோரிடமும் சொல்லியிருந்தான். அதனால் இந்த மூன்றாண்டுகளில் வித்யாவும் கூட அவளிடம் இதைச் சொன்னதில்லை.


வித்யா இவளிடம் பேசியது வருத்தமாக இருந்தாலும், அவள் கோபத்தைக் குறைக்க வேறுஎந்த முயற்சியும் எடுக்கவில்லை ஷானவி. தோழிகள் இருவரின் எண்ணவோட்டங்கள் இப்படியிருக்க “ஏன் வித்திம்மா.... தீபக் ஏர்போர்ட்டுக்கு வரேனு சொன்னானா..? நான் கேட்டதுக்கு பெங்களூர்னா வரமுடியாது.... டெல்லினா ட்ரை பன்றேனு சொன்னான்..” என்றார் தீபக்கின் அப்பா.


“ஆமாம் மாமா என்கிட்டயும் அப்படித்தான் சொன்னாங்க, அதுதான் ஒன் வீக்ல அவங்களும் வந்துடுவாங்களே, அப்புறம் எதுக்கு வீணான அலைச்சல், நாம பெங்களூரே போயிடுவோம்...” அவருக்கு வித்யா பதிலளிக்க..


“இல்லடா மாப்பிள்ளை அப்படி சொன்னதுமே, டிக்கட் அவைலபிளா இருக்கானு பார்த்துட்டு உடனே மாத்திட்டோம்... டெல்லிக்கே போறமாதிரி தான் ப்ளான்... அங்க இருந்து நாம ஹைதராபாத்திற்கும், ஷானு சரண் கூட திருச்சிக்கும் போற மாதிரி செஞ்சுருக்கோம்.... லாஸ்ட் மினிட் என்பதால் தான் கொஞ்சம் ரிஸ்க்கா இருந்தது. மத்தபடி எல்லாம் ஓகே....” என்றார் வித்யாவின் அம்மா.


“என்ன மம்மி, என் ஹஸ்பண்டால முடியாதுன்னு சொல்லிக் காட்டுறீங்களா..? என்று பட்டென்று தன் தாயைப் பார்த்துக் கேட்டாள் வித்யா..



மகளின் பேச்சில் சட்டென முகம் வாடி விட “நான் அந்த அர்த்ததுல சொல்லலடா.... நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று தான்..... இது மாப்பிளைக்கும் கூட தெரியும்....” என உள்ளே போய்விட்ட குரலில் பேச,


“என்ன வித்யா இது.... என் மருமக இப்படியெல்லாம் பேசுறவ கிடையாதே... தப்பு செய்தவங்க மன்னிப்பு கேட்ட பிறகும் அவங்க மேல கோபத்தை கட்ட கூடாது. அதுவும் பெத்தவங்க என்றால் நாம் உடனே அந்த தப்பை மறந்து, ஏன் செய்தாங்க, எதற்கு செய்தாங்க என்று யோசிக்கணும்... உங்க நல்லதுக்குதானே பண்றாங்க.... எதையும் யோசிக்காம நாம பேசிடக்கூடாது... பாரு எப்படி பீல் பண்றாங்க...” என்று கூற


“சாரி மாமா...” என தன் மாமனாரிடம் கூறியவள், திரும்பி தன் தாயை பார்க்க, அவரோ குற்ற உணர்வில் தலை குனிந்து அமைதியாக இருந்தார். ஷானவி அவரது தோளை ஆதரவாக பிடித்து இருந்தாள்.


எழுந்து அவரின் பின்னால் நின்று “சாரி மம்மி ஏதோ கோவத்துல..... ஐ ஆம் ரியலி சாரி மம்மி...” என ஒரு வித தயக்கத்துடன் கூறினாள்.


“இல்ல வித்திம்மா...... நாங்க செய்தது எல்லாம் அவ்வளவு சீக்கிரமா உன்னால மறக்க முடியாதுன்னு தெரியும். ஆனா அப்போ தெரியல, நீங்க இந்தளவுக்கு அன்பாவும் உண்மையாவும் இருப்பீங்க என்று. நாங்க செய்தது தப்புதான். அதை மறந்து மன்னிச்சிடுடா...” என அவளின் கைகளைப் பிடித்துக் கேட்க...


“ஐயோ மம்மி ப்ளீஸ், நான்தான் யோசிக்காம பேசிட்டேன். நீங்கதான் மன்னிக்கணும், ட்ரஸ்ட் மீ.... இனி இப்படி பேசமாட்டேன்.. ப்ளீஸ்...” என மகளும் கெஞ்சவும், அதை விட்டுட்டு வேறு பேச்சுக்கு தாவினார்.


“ஏன் ஷானு.... உன்னோட வீட்டுக்காரரும் வரார்தானே.... நான் என்ன கேள்வி கேட்குறேன் பாரு, நீ வரும்போது அவர் எப்படி வராம இருப்பார். அதுவும் கூட தீபக் மாப்பிள்ளையும் வரும்போது..” என்று ஷானவியின் மனம் புரியாமல் கேள்வியும் கேட்டு, பதிலையும் சொல்லிக் கேட்க,


அவளோ என்னப் பதில் சொல்வது என்றுத் தெரியாமல் முழிக்க, தன் அம்மா அவள் பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்த வித்யா, தோழியை கடினமாக ஒருமுறை முறைத்துவிட்டு “மம்மி அவக்கிட்ட ஏன் கேட்குறீங்க, அவளே கோபமா இருக்கா... சிபி அண்ணாவுக்கு இந்த வீக் பீல்ட் வொர்க், அதனால அவர் வரமுடியாது என்று சொல்லிட்டார்.”


“மேடம் அந்தக் கோபத்துல இருக்காங்க, நீங்க வேற தூபம் போடாதீங்க, இவளைக் கல்யாணம் பண்ணிட்டு எங்கண்ணா படுற பாடு இருக்கே... பாவம் அவர்.....” என்றுத் தோழியைக் காப்பாற்றினாலும், தன் வார்த்தைகளால் அவளைக் குத்தினாள்.


“என்ன வேலையா....? இத்தனை வருஷம் கழிச்சி பொண்டாட்டி ஊருக்கு வந்தா, வந்து பார்க்க முடியாதமா அவரால....? என் மருமகளைப் பார்த்தா எப்படி தெரியுதாம் உங்க அண்ணனுக்கு...., ஒழுங்க போனை போட்டு வரச்சொல்லு அவனை....? என் மருமக மனசு என்ன பாடு படும்... புரிஞ்சுக்கவே மாட்டேனாடி உங்க நொண்ணன்....”


“மம்மி... போதும் எனக்கு அண்ணனா... உங்களுக்கு மகன்.... நீங்களே உங்க பையனை விட்டுக் கொடுக்கலாமா..? அதுவும் மருமகளுக்காக....!


“மகன் தாண்டி.... அதுக்காக தப்பு செஞ்சா சும்மா விடலாமா..? நீ வருத்தப்படாதே ஷானும்மா... நான் இருக்கும்போது நீ ஏன் கவலைப்படுற, அவனை நான் ஒருவழி பண்றேன்.... சரியா...? என வாடியிருந்த அவள் முகத்தை தடவி சமாதானப்படுத்திவிட்டு வேறு பேச ஆரம்பித்தார்.


வித்தியின் பேச்சில் தான் தெரியும் சிபி அவளை அழைக்க வரவில்லை என்று ... அதுவரைக்கும் அவன் வந்தால், அவனிடம் எப்படித் தன் மனதை தெரிவிப்பது, அவனை எப்படி ஒதுக்குவது, என்ன பேசுவது என்றெல்லாம் ஒத்திகை பார்த்தவர்களுக்கு அவன் வரமாட்டான் என்றதும் சட்டென அகமும் புறமும் சுருங்கியது.


ஏனோ ஒருவித பயமும் வலியும் வந்து அவளை ஆக்ரமித்தது. கைகள் தானாக கழுத்திற்கு சென்று அந்த செயினை வருட, அவனுக்கு ஏதோ ஒன்று தவறுதலாக நடக்க போவது போல் உள்மனம் எச்சரித்தது.


அவனுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று அந்த நொடி கடவுளை பிரார்த்தித்தாள் ஷானவி... மூன்றண்டுகள் கடவுளை பற்றி சிறிதும் யோசிக்காதவள்..... இன்று அந்த கடவுளையே சரணடைந்தாள் மனதுற்குள்ளே தன் நந்தனுக்காக....


அவனை உடனே பார்க்க வேண்டும், அவனுக்கு எதுவும் ஆகவில்லை என்று உடனே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேகம் என தனக்குள் எழுந்த உணர்வுகளை கண்டு அவளே பயந்துபோனாள்.


சென்ற நிமிடம் வரை அவனை வேண்டாம் என்று நினைத்தவள்தான். ஆனால் இந்த நொடி அவளது கோவம் எல்லாம் பின்னே சென்று, அவன் மீது கொண்ட அன்பு முன்னுக்கு வந்து, அவளை அழைக்கழித்தது.


யோசனைகள் எல்லாம் அவளை குழப்ப, தலை வலித்தது. மனம் குழம்பினால் தான் ஒரு தெளிவும் பிறக்கும் என்பதை யார் அவளிடம் சொல்வது..


மற்ற மூவரும் அடுத்து அவர்கள் திறக்கவிருக்கும் மருத்துவமனை பற்றிய செய்தியில் முழ்கிவிட, ஷானவி தன் எண்ணங்களிலேயே சுழன்று கொண்டிருக்க அவளது போன் விடாமல் அடித்து கொண்டிருந்தது. அவள் ஏதோ யோசனையில் இருப்பதை கண்ட வித்தியின் அம்மா ஷானவியை உலுக்கி “ஷானு.... ஷானும்மா உன் போன் அடிச்சிட்டே இருக்கு பாரு ...” எனவும்


“ ஹான் .... என்ன ஆண்டி ....”


“ போன் அடிக்குது பாரு “


“ம்ம்.... இதோ பாக்குறேன்.....” என்று போனை எடுத்து பார்த்தவளுக்கு வீட்டில் இருந்து அத்தனை போன் கால்ஸ்.... சரண், அஸ்வத், ரவி மற்றும் ஷானவியின் பெற்றோர் என்று எல்லாருடைய நம்பரிலும் இருந்து வந்திருந்தது.



அவள் கிளம்பிவிட்டளா....? என்று தெரிவதற்காக அழைத்திருப்பார்கள் என நினைத்தவள் சரணின் எண்ணுக்கு முயற்சிக்கும் முன்னரே அவனே அழைத்தான் “ஹலோ...”. என்றவள் அடுத்து அவன் கூறிய செய்தியில் “நந்து..” என்ற அலறலுடன் கீழே விழுந்தாள்.


திடிரென ஷானவி மயங்கி விழவும், பெரியவர்கள் இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை, அவசரமாக பக்கத்தில் இருந்த நீரை அவள் முகத்தில் தெளித்து, அவளை முழிக்க செய்ய இருவரும் போராடி கொண்டிருந்தனர்... “வித்தி.... வித்தி... எங்கடா இருக்கே..... இங்கே பாரு, ஷானு மயங்கி விழுந்துட்டா....” என அவளின் அம்மா சத்தம் போட, அந்த சத்தத்தை கேட்டு அறையில் இருந்து ஓடி வந்தவளின் முகமும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.


ஏதோ விபரிதம் நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டவர்கள் என்ன ஏதென்று விசாரிக்க முன் ஷானவியின் மயக்கம் தெளிய வேண்டுமென்று அவள் கன்னத்தை தட்டி எழுப்ப முயசித்தனர்.


“ஷானு... ஷானு.... எழுந்திருடி இங்கே பாரு சிபிண்ணாவுக்கு ஒன்னும் ஆகல, நான் சொல்றது உனக்கு கேட்குதா.... அவங்க சேபா இருக்காங்கன்னு இப்போ தான் தீபக் சொன்னார்.. எழுந்திருடி ஷானு.....” என அவளை உழுக்கி எடுத்தாள் வித்யா ..


சிபிக்கு ஒன்றும் இல்லை என்ற வார்த்தையில் விழிப்பு வர பெற்றவள், தோழியை இறுக கட்டிக்கொண்டு “நந்து.... நந்துவுக்கு ஒன்னும் ஆகலையில்லை வித்தி, எல்லோரும் என்ன என்னனென்னவோ சொல்றாங்களே, எனக்கு பயமாயிருக்கு வித்தி, அவனுக்கு எதுவும் ஆக கூடாது கடவுளே...”


“என் நந்து எனக்கு வேணுமே... எனக்கு அவனை பார்க்கணுமே... நான் அவனை விட்டு வந்ததுக்கு தண்டைனையா... அவன் என்னை விட்டு போயிடுவானோ.... நான் இப்போ என்ன செய்யணும்... ஒண்ணுமே புரியலையே...” என்று கண்ணீரோடு கதறி புலம்ப, மற்ற மூவரின் கண்களிலும் நீர் படலம்.


“இங்கே பாருடி, நான் தான் சொல்றேனே எதுவும் ஆகாது என்று... நீ முதல்ல இப்படி அழுது புலம்பறதை நிறுத்து, அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு என் அண்ணன் போகமாட்டான்.., புரியுதா....? நாம உடனே கிளம்புவோம், இனி எதுவா இருந்தாலும் அங்கே போய் பார்த்துக்கலாம்...”


“நீ தைரியமாயிரு, வீட்டில் இருக்குறவங்களுக்கு தைரியம் சொல்லு, அவங்க எல்லோரும் உன்னை நினைச்சுத்தான் பயந்துட்டு இருப்பாங்க, உன்னோட தெளிவான பேச்சுத்தான் அவங்களுக்கு தைரியம் கொடுக்கும்... மனசை தெளிவாக்கி அண்ணாவுக்கு ஒன்னுமில்லன்னு நினைச்சு தெளிவாய் பேசு... சரியா...” என்று தோழிக்கு தெம்பூட்டியவள், விடாமல் வழிந்த அவள் கண்ணீரை அழுந்த துடைத்து விட்டாள்.


வித்யா கூறியது போல் அவளைவிட, சிபி வீட்டில் உள்ளவர்கள் தான் அதிகம் பயந்து போயிருப்பார்கள், அதிலும் சரண் வெளியில் தன்னை தைரியாமாக அதிகம் காட்டி கொண்டாலும், உள்ளுக்குள் நொறுங்கி போயிருப்பான். ‘என்னால் முடியும், நான் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும், என் நந்துவுக்கு எதுவும் ஆகாது’ என்று தனக்குள்ளே உருப்போட்டு தன் மனதைத் திடப்படுத்தியவள் ஒரு முடிவுடன் நிமிர்ந்தாள்.


ஷானவியின் முகத்தை வைத்தே அவள் கொஞ்சம் தெளிந்து விட்டாள் என்பதை புரிந்து கொண்ட மற்ற மூவரும் சிறிதும் தாமதிக்காமல் தங்கள் பயணத்தைத் துரிதப்படுத்தினர்.