நீதி தேவன்
இன்று தீர்ப்பு நாள். நீதிமன்றம் அழைத்துச் செல்லப்படுகிறாள் தாரிகா.
தனக்கென வாதாட யாரையும் அவள் தேடியிருக்கவில்லை. அவள் வீட்டினருக்கும் அந்தளவுக்கு யாரையும் தெரிந்திருக்கவில்லை.
ஆனாலும் அவளுக்கு தெரியும் அவன் வருவான் என்று. என்ன வாதிட்டாலும் கொலை செய்தவளுக்கு தண்டனை கிடைக்காமல் போய் விடுமா என்ன?
இதோ குற்றவாளிக் கூண்டில் தாரிகா. அவளின் அருகில் கருப்பு நிற அங்கியில் அவன்... தீரன்.
தனக்கென போராட கற்று கொடுத்த கடவுள் துணையோடு வருவதை ஏற்க துணிந்திருந்தாள்.
என்றும்போல தானே அன்றும் தனது அன்றாட வேலைகளை செய்தாள்! ஏன் அவ்வாறு நடக்க வேண்டும்?
யார்மேல் தவறு? யார்மேல் தவறு என்பதை எல்லாம் யார் கேட்க தயாராய் இருக்கிறார்கள்? தனக்கு தண்டனை உறுதி என நம்பி தான் இருக்கிறாள்.
தீரன் தன் வாதத்தை தொடங்க எழவும் அவனுக்குமுன் எழுந்து கொண்டார் எதிர்த்தரப்பு வக்கீல்.
ஒரு பெருமூச்சுடன் அமர்ந்து கொண்டான் அவன்.
"சொல்லுங்க தாரிகா! அன்னைக்கு என்ன நடந்துச்சு?" அவர் கேட்கவும் தன்னால் அவள் நினைவு மூன்று நாட்களுக்கு முன் பயணித்தது.
"ம்மா! நான் ஆபீஸ் போய்ட்டு வர்றேன்" சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அன்னையிடம் கூறிய தாரிகா தன் தங்கை பள்ளி செல்வதற்கு அனைத்தையும் தயார் செய்து கொடுத்துவிட்டு வாசலுக்கு வந்தாள்.
மது போதையில் குடித்துவிட்டு வாசல் திண்டில் படுத்திருந்த தந்தையை ஒரு அற்ப பார்வை பார்த்தவள் பேருந்து நிலையம் நோக்கி நடந்தாள்.
இன்றும் தீரன் வந்திருந்தான் எப்போதும் போல. அதே மடிப்பு கலையாத வெள்ளை நிற முழுக்கை சட்டை. அதை அழகாய் பேண்ட்டின் உள்ளே மடித்துவிட்டு மார்பின் குறுக்காய் ஒரு பையையும் தொங்கவிட்டு அவன் நின்ற தோரணையில் அவன் பேருந்திற்கு நிற்பதை கண் சுருக்கி உன்னிப்பாய் தான் கவனித்துக் கொண்டிருந்தனர் அங்கு நின்ற அனைவரும்.
பேருந்தில் இவன் பயணிக்க ஒரே காரணம் தாரிகா தான். தொடர்ந்து அதே பேருந்தில் வரும் சிலர் இருவரையும் கேலியாய் பார்ப்பது தெரிந்தும் அவன் அதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டான். அவனை தாரிகா முறைத்தாலும் பயன் இருக்காது.
இன்றும் அப்படியே அவன் வந்து நிற்க, எப்பொழுதும் போல அவனை கவனிக்காதவள் போன்று அவனுக்கு தூரமாய் சென்று நின்று கொள்வாள்.
அவனை கவனிக்காமலேயே அவனைவிட்டு தூரமாய் அவள் தள்ளி போவது எப்படியாம்? நினைத்ததும் சிரிப்பு தான் வரும் தீரனுக்கு.
எப்பொழுது அவன் கவனத்தில் அவள் விழுந்தாள் என்பதே இருவருக்கும் தெரியாது. காதல் என்று ஒருநாள் அவளிடம் தனியாய் சந்தித்து உளற, எச்சரித்து அனுப்பிவிட்டாள்.
அதன்பின் அவள் பக்கத்தில் அவனும் செல்லவில்லை. அந்த பேருந்து பயணத்தையும் அவன் நிறுத்தவில்லை.
பேருந்தில் அவள் முன்னே நின்றிருக்க இவன் பின்னே படிக்கட்டு அருகே நின்றான்.
யாரோ தன்னை பின் தொடர்வதாய் கடந்த சில நாட்களாக அவளுக்குள் இருக்கும் பெண்மை அறிவுறுத்த அவளும் பேருந்தில் ஏறியது முதல் அவ்வபோது சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டாள். தீரனும் அதை கவனித்து தான் இருந்தான்.
தீரன் தொடர்வது தெரிந்தாலும் அவனை விலகி நடந்தாலும் இந்த பய உணர்வு அவனிடம் என்றுமே தோன்றியதில்லை.
அவள் வேலை செய்யும் மருத்துவமனை முன் அவள் இறங்க, இன்று தீரனும் அதே நிறுத்தத்தில் இறங்கினான்.
'என்றும் இங்கே இறங்கமாட்டானே இன்று மட்டும் என்ன?' நினைத்தவாறே அவள் முன்னே நடக்க,
"ஏன் எல்லாரையும் சந்தேகத்தோடயே பார்க்குற? என்னை தவிர உன்னை யாரும் ஃபால்லொவ் பண்ணல. நீ திரும்பி திரும்பி பார்க்குறதுல தான் எல்லாரும் உன்னையே பார்க்குறாங்க" அவன் அவளுக்கு சில அடி தொலைவில் இருந்தே தகவல் கூறினான்.
ஆனால் அவனுக்கு புரியவில்லை. பெண்களின் உள்ளுணர்வு தவறாய் இருக்காது என அவனுக்கு தெரியவில்லை.
தாரிகாவின் குணம் அது. யாரையும் எளிதில் நம்பிவிட மாட்டாள். அதனால் தான் அவளுக்கு தைரியம் தரும் விதமாய் அவனும் இறங்கி இருந்தான்.
தீரனை திரும்பிக் கூட அவள் பார்க்கவில்லை. ஆனால் இதழ்களுக்கு நடுவே ஒரு இதழ்பிரியா புன்னகை உருவாக அப்படியே சாலையை கடக்கும் தருணம் திடீரென தீரனின் கண்களில் இருந்து மறைந்திருந்தாள் தாரிகா.
நொடியில் நடந்த நிகழ்வு புரியவே சில நொடிகள் தேவைப்பட்டது அவனுக்கு. அதன்பின் ஒரு நொடி கூட தாமதிக்காது அவள் சாலையை கடந்த போது அவளை கடந்த ஆட்டோவினை தொடர்ந்து ஓடினான்.
அவனுக்கு சர்வ நிச்சயம் தாரிகா அதில் தான் ஏற்றப்பட்டாள் என்று. ஒரு வழக்கறிஞனாய் அவனால் அந்த சூழலை புரிந்து பின்தொடர எளிதாய் இருந்தாலும், அந்த வாகனத்திற்கு ஈடுகொடுத்து ஓடுவதும் சவாலாய் தான் இருந்தது.
ஆனாலும் அவனின் உடற்பயிற்சி தேகம் அதற்கு உதவியது.
அதோ ஆட்களே அல்லாத மரங்கள் இருக்கும் இடம்.. அதே ஆட்டோ.. யாருமே இல்லாத அந்த இடத்தில் நின்று அந்த இடத்தை சுற்றிக் கொண்டே இருந்தான் தீரன்.
சுற்றிலும் ஒரு சிலர் மட்டுமே இருக்க யாரிடம் கேட்பது என்று கூட அவனுக்கு தெரியவில்லை.
"ஒன்னும் இல்லை டா.. நான் வந்துட்டேன்.. நான் வந்துட்டேன்..." அவளுக்கு சொல்ல வேண்டிய தைரியத்தை தனக்கு தானே அவன் சொல்லிக் கொண்டிருந்த நேரம் அவன் பார்வைக்குள் விழுந்தாள் அவள்.. அவளாகவே!
"தாரி... தாரிகா! மூச்சு வாங்க அவளை நோக்கி ஓடியவன் ஓட்டம் பாதியில் நின்றது அவள் கைகளில் இருந்த கத்தியை பார்த்து.
அவள் கண்களில் கண்ணீர் காய்ந்து போயிருக்க, அவள் நின்ற கோலத்தில் கொஞ்சம் ஆடித்தான் போனான் தீரன்.
எங்கிருந்ததாம் அவ்வளவு கூட்டம்? பிரச்சனை என்றாபோது வராத கூட்டம்! அவளை கத்த முடியாமல் வாயை பொத்தி இழுத்து சென்றால் போது வராத கூட்டம்! தீரன் அவளை தேடும் போது அருகில் இல்லாத கூட்டம்!
இதோ! ஒரு பெண் கத்தியுடன் நிற்கவும் அவள்முன் அவ்வளவு கூட்டம். அசையவில்லை அவள்.
"தாரு!" அவளருகே சென்று அவன் அழைக்க பார்வையை திருப்பினாள் இல்லை. என்ன நடந்தது என அவனும் அவளிடம் கேட்கவில்லை.
கால் மணி நேரம் ஓடிய அவனும், அரை மணி நேரம் போராடிய அவளும் என அப்போது வராத காக்கி சட்டைகள் கூட்டத்தில் இருந்த ஒருவனின் உதவியால் ஐந்தே நிமிடத்தில் வந்திருந்தனர்.
அவள் கைகாட்டிய திசையில் தேடிய அந்த காவலர்களுக்கு தேவையான அந்த ஒருவன் கழுத்தில் வெட்டப்பட்டு இறந்து கிடைத்திருந்தான்.
இறந்து போவான் என்று அவளும் எதிர்பார்க்கவில்லையோ! அள்ளிக் கொண்டு வந்தவனை பார்த்து அவளே கதறி அழ, யாருக்கு என்ன புரிந்ததோ தீரனுக்கு மொத்தமும் புரிந்தது. அவள் தெரியாமல் செய்ததன் விளைவும் புரிந்தது.
ஜீப்பில் அவளிருக்க தோய்ந்து கசங்கிய சட்டையும் கலங்கிய முகமுமாய் அருகில் இருந்தும் எதுவுமே அவளுக்கு செய்ய முடியாத நிலையை வெறுத்து அவளையே பார்த்தவாறு நின்றான் தீரன்.
கண்மூடி அவள் நின்றிருக்க "சொல்லுங்க மிஸ் தாரிகா! அங்கே என்ன நடந்துச்சு? எதுக்காக பிரதாப்பை கொலை பண்ணுணிங்க?" என்ற கேள்வியில் கண்களை திறந்தாள்.
பேச வார்த்தைகள் வருகிறதா என்று கூட யோசிக்க முடியாமல் அப்படியே நின்றாள் தாரிகா. என்ன சொல்ல? கொலை செய்தது பாவம் தானே? என்ன சொல்லி என்னை விடுவித்து கொள்ள செய்வேன்? முதலில் எப்படி சொல்லிட முடியும்? அமைதியாய் நின்று கொண்டாள்.
"இவ பின்னாடி தான் சார் என் தம்பி மூணு மாசமா சுத்தினான். இவ வேணும்னு தான் செஞ்சிருக்கா. அநியாயமா என் தம்பியை கொன்னுட்டா. இவளை சும்மா விடாதீங்க. நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட டி" இறந்தவனின் அக்கா போலும் என நினைத்துக் கொண்டாள்.
அவன் நல்லவனா என்று கேட்க துடித்த உதடுகளை இறுக மூடிக் கொண்டாள். அவனுக்காக எனக்கு சாபம் விடும் அளவுக்கு நான் கெட்டவளா கடவுளே! என ஊமையாய் அழுதது மனம்.
"நீங்க இப்படி அமைதியா இருந்தால் உங்கள் மேலே இருக்குற சந்தேகம் ஊர்ஜிதம் ஆனதாக நீதிமன்றம் எடுத்து கொள்ளும். வாயை திறந்து ஏதாவது சொல்லுங்க" நீதிபதியே கேட்க, அவருக்கும் பதில் சொல்லவில்லை அவள்.
என் மானத்தை பறிக்கப் பார்த்தான் என்று சொல்ல அவளுக்கு அருவருப்பாய் இருந்தது. உயிர் தானே போகும்? போனால் போகட்டும்.. தூக்கு தண்டனையாய் இருக்க வேண்டும் கடவுளே! மனமே பேசிக் கொண்டது.
"மௌனம் அவர் சம்மதத்தை தெரிவிப்பதாக எடுத்து அதற்கு தகுந்த தண்டனை...." என்று எதிர்தரப்பு வழக்கறிஞர் பேசிக்கொண்டிருக்க,
"அப்ஜெக்ஷன் யுவர் ஹானர்!" என எழுந்து கொண்டான் தீரன்.
"இந்திய தண்டனை சட்டத்தில் தற்காப்புரிமை சட்டம்னு ஒன்னு இருக்குறது இங்கு இருக்குற எல்லாருக்கும் தெரியும்னு நினைக்குறேன்" அவன் சொல்லிக்கொண்டு இருக்க,
"ஆனால் இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை.. இதில் தற்காப்பு எங்கே இருக்கிறது?" கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் எதிர்த்தாரப்பு வக்கீல் அவரின் குரலை உயர்த்த,
"எது திட்டமிட்ட கொலை? அந்த கொலை செய்ய தூண்டப்பட்டதுனு உங்களுக்கு தெரியுமா? தாரிகா என்ற இந்த பெண் தன்னை மானப்பங்கபடுத்த வந்தவனை தன் மானத்தை காப்பாற்றிக் கொள்ள, அந்த நேரத்தில் தன்னை காத்துக் கொள்ளவே அந்த கொலையை செய்தாள் என என்னால் அடித்து சொல்ல முடியும்"
இவ்வளவு நேரமும் இருந்த பொறுமை பறந்தோட தீரனின் அதிர வைக்கும் அந்த குரலில் நீதிமன்றமே முழு அமைதி.
அந்த அமைதியை கிழிக்கும் விதமாய் கத்தி அழுதாள் தாரிகா.
"அதற்கு ஆதாரம்?" கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் எதிரில் நின்றவர் கேட்க,
"முழு ஆதரமாய் அதற்கு ஒரு மணி நேரம் முன்பிருந்தே அந்த இடத்தில் நானும் இருந்தேன். ஆனாலும் என்னை இந்த கோர்ட் சாட்சியா எடுத்துக்காதே!"
"தெரிஞ்சே அதை சாட்சியா சொன்னா கோர்ட் ஏத்துக்குமா என்ன?" கிண்டலாய் கேட்க,
"நீங்க வேறேதும் சாட்சி இருந்தால் தொடரலாம்" என்று முடித்தார் நீதிபதி.
"இருக்கு யுவர் ஹானர்! இதுல சஹாரா மருத்துவமனை வாசலில் என்னோட கட்சிக்காரர் தாரிகா அவர் விருப்பம் இல்லாமல் ஆட்டோவில் கடத்தப்பட்ட வீடியோ இருக்கு" என்று பென்டிரைவை காட்ட, ஒவ்வொருவர் முகமும் ஒவ்வொரு பாவனை காட்டியது.
அதில் தாரிகாவுடையது இதனால் என்ன பயன் என்பது தான்.
அந்த வளாகத்தின் உள்ளேயே அந்த வீடியோ அனைவருக்கும் காட்டப்பட தீரனும் அதில் பதிவாகி இருந்தான்.
ஆட்டோ உள்ளே தாரிகா இழுக்கப்பட, தீரனை கடந்து ஒரு வாகனம் இதை மறைக்கும் விதமாய்.
அடுத்து அந்த ஆட்டோவின் பின்னே இவன் ஓட அதோடு அவர்கள் இல்லை அந்த வீடியோவில்.
"வெரி குட்! நல்லாவே கேசை திசை திருப்புறீங்க மிஸ்டர் தீரன்.. இதுல பிரதாப் எங்கிருந்து வந்தாரு? இது கொலை நடந்த அன்று எடுக்கப்பட்ட வீடியோன்னு என்ன ஆதாரம்?" என்று ஆதாரத்திற்கும் ஆதாரம் கேட்கப்பட,
கடந்த மூன்று நாட்களுக்குள் சேகரிக்கப்பட்ட அனைத்தையும் அங்கே சமர்ப்பித்தான் தீரன்.
ஒரு மாதமாய் தாரிகா வேலைக்கு செல்லும் மருத்துவமனை முன் பிரதாப் நிற்கும் வீடியோ, ஆட்டோவின் கண்ணாடியில் அவன் பிரதாப் முகம், மருத்துவமனை முகப்பில் இருக்கும் டிஜிட்டல் கடிகாரத்தில் நேரமும் காலமும் என அனைத்தும் அனைத்தும் தீரனின் கைவசம்.
தாரிகாவிற்காக.. அவளை அன்று கத்தியுடன் பார்த்தபின் அவனால் நிம்மதியாய் இருக்க முடியுமா என்ன? அடுத்த மூன்று நாட்களும் அவனுக்கு இது மட்டும் தான் வேலை ஊண் இன்றி உறக்கம் இன்றி.
"எந்த காலத்திலும் எந்த பெண்ணும் தனக்கு நேர்ந்த அல்லது நேர இருந்த அவமானத்தை பொதுவில் அதுவும் இத்தனை பேர் கூடி இருக்கும் இடத்தில் அவ்வளவு எளிதில் கூறிவிட முடியாது. அதுவே என் சாட்சிக்காரர் அமைதியாய் நிற்க காரணமும் கூட" என்ற தீரன் அழுது கொண்டிருந்த தாரிகாவை அழுத்தமாய் பார்த்து நின்றான்.
அதற்கு நீ பேசு என்பது தான் பொருள் என்பதும் அவளுக்கு புரிந்தது.
"நான் வேணும்னு... பண்ணல.. என்னை காப்பாத்திக்க தான்... அவன் செத்து போவான்னு நான் நினைக்கல" திக்கி பேசியவள் வாய் மூடி அழ,
பிரதாப் சகோதரி இன்னும் கோபப்பார்வையை வீசிக் கொண்டிருக்க, எதிர்தரப்பு வழக்கறிஞரும் தீரனின் ஆதாரத்தில் பேச முடியாமல் நிற்க, இப்போது நீதிபதியே வாய் திறந்தார்.
"சாட்சி அனைத்தும் சரியாய் இருக்கிறது. இறந்த பிரதாப் பல நாட்களாக திட்டமிட்டு தான் தாரிகாவை கடத்திச் சென்றிருக்கிறார். அங்கே தனது உயிரையும் மானத்தையும் காப்பாற்றி கொள்ளவே தாரிகா அவரை தாக்கியிருக்கிறார். தண்டனை சட்டத்தின் தற்காப்புரிமை சட்டத்தில் ஐபிசி பிரிவு நூறின் படி தற்காப்புக்காக தாக்கி அது கொலையாக மாறிவிட்டால் கூட அவர் மன்னிக்கப்பட தகுதி உள்ளவர் என சட்டம் சொல்கிறது. எனவே தாரிகா செய்தது கொலையாகவே இருந்தாலும் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு அவரை விடுதலை செய்ய காவல்துறைக்கு இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது" என்று கூறி தீர்ப்பு எழுதிய பேனாவின் முனையை அங்கேயே உடைத்தார்.
இங்கிருந்து விடுதலையாகி கிளம்புவோம் என்ற எண்ணம் சுத்தமாய் இல்லாமல் இருந்தவளுக்கு கேவல் அடங்கவே இல்லை.
தீரன் இதை முன்பே அறிந்தவன் தான் என்றாலும் தனக்கானவள் என்ற துடிப்பில் இருந்தவனுக்கு இப்போது தான் நிம்மதியாய் மூச்சே விட முடிந்தது.
தாரிகா அன்னை நடக்க முடியாதவர். அவரை வர வேண்டாம் என தடுத்திருந்தான் தீரன். தந்தையை பற்றி சொல்லவே தேவையில்லை.
அனைவரும் கலைந்து செல்ல, அங்கே தனக்கென நின்றது தீரன் மட்டும் தான் என்பதில் ஏற்கனவே யாருமில்லா தனிமையில் செத்து பிழைத்தவளுக்கு அவனை கண்டு இன்னும் கண்ணீர் வடிய, அவளை புன்னகையோடே வரவேற்றான் தீரன்.
அதையெல்லாம் கவனித்தாள் இல்லை. தூரமாய் பார்த்தபோது ஓடி வந்தவளை அவன் இரு கரம் நீட்டி அழைத்திருக்க ஓடி வந்தவள் அதே வேகத்தில் அவனை கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டாள்.
எதிர்பார்க்கவே இல்லை அவன். வேண்டாம் என்றாலும் அவள் நன்றி கூறுவாள் என எதிர்பார்த்து நின்றிருக்க அவள் வேகமாய் அணைத்ததோடு இறுக்கி கட்டி அழுகையும் தொடர, முதலில் அதிர்ந்தவன் அதன்பின் சிரிப்புடன் அவளை ஆதரவாய் அணைத்து நின்றான்.
"வீட்டுக்கு போலாம் மேடம்!" காதருகே அவன் சொல்ல, பெரிய பாரம் நீங்கிய உணர்வு அவளிடம். அந்த சிவந்த கன்னங்களை பார்க்கையில் கொஞ்சம் வெட்கமும் வந்ததோ!
தன்னை காத்துக் கொண்டவள் பாரதி தான். அவளுக்கு தெரிந்த வழியில் அவளின் மானத்தை காப்பாற்றிக் கொண்டவளுக்கு பயம் இல்லாமல் இல்லை.
அவளின் பயத்தால் உயிரை விடும் கோழை இல்லை. இறுதிவரை போராடி மீண்டு தான் வந்திருக்கிறாள்.
அவளை இனி இன்னும் அதிகமாய் காதலித்து இன்னும் அதிகமாய் பாதுகாத்து அவளுக்கான அனைத்துமாய் மாறிப் போவான் அவளின் தீரன்.
சுபம்
நம்மில் பலருக்கு இந்த சட்டம் தெரியாமல் இருக்கலாம்.. ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது தான் தற்காப்புரிமை சட்டம்.
அனைவருக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். பெண்களுக்கு மட்டும்தான் இந்தச் சட்டம் என்றில்லை. ஆண் ஒருவரை, மற்றொருவர் தாக்க வந்தால்கூட, அவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் திரும்பித் தாக்கலாம். ஆனால், சூழ்நிலைக்கு ஏற்ப வழக்குகள் கையாளப்படும். அதாவது உங்களைக் கட்டைகொண்டு இரண்டு அடி அடிப்பவரை, நீங்கள் கொலை செய்துவிட்டால் இந்தச் சட்டம் உங்களுக்கு உதவாது. விசாரணையின்போது சம்பவம் நடந்த சூழல் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே, கொலை செய்தவர் குற்றவாளியா இல்லை குற்றமற்றவரா என்று தீர்மானிக்கப்படும்.
அனைவரும் தெரிந்து கொள்ளவே இந்த கருவை தேர்ந்தெடுத்தது.. இது உண்மைக் கதையைத் தழுவி எழுதப்பட்ட கதையே!
***
நன்றி.