அன்பின் இலக்கணமாய் ஓர் உயிர்!
வயல் வெளிகள், ஆறுகள், நீர் வீழ்ச்சிகள் என இயற்கையின் எடுத்துக்காட்டாய் இருக்கும் அழகிய கிராமம் அது.
நவீன தொலை தொடர்புகள், இயந்திரங்கள், தொழிநுட்பங்கள் எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்கும் ஊர்...
ஏழை பணக்கார வேறுபாடின்றி மனிதனை மனிதமாய் மதிக்கும் நெஞ்சங்கள் ஏராளமாய்...
தாய் தந்தையரின் கஷ்டமறிந்து படிக்கச் சென்றவர்களுக்கு மத்தியில் தாய் தந்தை... அது அவர்கள் கடமை நான் படிக்கிறேன் இதில் அவர்கள் தியாகம் எங்கிருக்கிறது என நினைக்கும் ஓர் உள்ளம் ராம்!
பெற்ற மகனை பிரிந்து பசியில் வாடினாலும் அவனுக்காய் வியர்வை சிந்தி உழைக்கும் ஓர் உயிர், தந்தை சிவராமன்!
..............................................................................
அந்த ஊரின் எல்லை புறத்தில் ஓர் நடுத்தர வீடு அமைதியாய் வீற்றிருந்ததற்கு மாற்றமாய் மக்களின் கூச்சல் சத்தம் காதை கிழித்துக் கொண்டிருந்தது.
ஊர் எல்லையில் இருக்கும் அந்த வீட்டில் மட்டுமே தொலை தொடர்பு வசதி இருந்தது.
பிள்ளைகளுடன் பேசும் அந்த ஐந்து நிமிடங்களுக்கு தவமிருக்கும் தந்தைகளில் சிவராமனும் ஒருவர்...
வரிசையில் நின்று கத்திக் கொண்டிருந்தவர்களுக்கு மாற்றமாய் ஓரமாய் அமர்ந்து கொண்டிருந்தவருக்கு மகன் ஒருமுறையேனும் தன்னை அழைக்க மாட்டானா என்ற ஏக்கம் அப்பட்டமாய்...
அவன் ஒரு ரானுவ வீரன்!
ஊரை விட்டுச் சென்று வருடங்கள் கடந்திருந்திருக்க ஒவ்வொரு நாளும் அவன் அழைப்புக்காய் ஏங்கும் தந்தையின் நிலை அவனே அறியாத ஒன்று.
அவர் அழைக்காவிட்டால் தான் அழைப்பேன் என்ற மனிதர்களுக்கு அப்பால் அவர் கடமையை செய்து விட்டார் இனி நான் அவரை எதற்கு நாட வேண்டுமென்ற எண்ணமே அவனை வர விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது போலும்!
தந்தை பாசத்தையும் தியாகத்தையும் எள்ளி நகையாடும் உள்ளம் தந்தை இல்லாத போதே அருமையை புரிய வைக்கும்!
"ஏன் பா சிவராமா! அவன் தான் உனக்கு அழைப்பு எடுக்க மாட்டான்னு தெரியும்ல... அப்புறமும் எதுக்காக இப்பிடி தவம் கிடக்குற?" தோளில் கிடந்த துண்டை மீண்டுமொருமுறை சரி செய்தவாறே அருகில் வந்தமர்ந்தார் சிவராமின் நண்பர் ராஜா.
"நான் வராத அந்த ஒரு நாள் எடுத்து நான் பேசலைன்னா புள்ள மனசு கஷ்டப்படும்யா... பாவம் என்ன வேலையோ? "
"அவ்வளவு வேலை இருந்தா கடிதமாவது போட்டு இருக்கலாமில்லை? "
"விடுயா... என் மகன் ஒரு வீரன்னு சொல்றதுலயே என் மனசு நிறைஞ்சு போகுது... அவன் நிச்சயமா எடுப்பான் ஒரு நாள்" வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு பெரு மூச்சுடன் எழுந்தவரை வேதனையுடன் பார்த்திருந்தார் நண்பர் ராஜா.
தாய் இறப்புக்குக் கூட ஊருக்கு வராதவன் அவரை அழைத்து பேசுவானென எந்த நம்பிக்கையில் நண்பன் இருக்கிறான் என புரியவே இல்லை அவருக்கு...
அவருக்கும் பெரு மூச்சு எழுந்தது.
பெற்றோர்கள் தான் பிள்ளைகளை கடைசி வரை நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறார்கள் குழந்தைகளாகவே!
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டுப் பிரிந்து சென்றாலும் கூட அந்த அன்பு அப்படியே இருக்க கையில் தூக்கி வளர்த்த பெற்றோரை மட்டும் எப்படி பிள்ளைகள் மறந்து விடுகிறார்கள்?
தாங்களை பெற்றோராய் காலம் சுழற்றும் போது அருமை உணர்ந்து கொண்டு மன்னிப்பு யாசிப்பவர்களுக்கு ஏன் அது முதலிலேயே புரிவதில்லை?
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று இதற்குத் தான் கூறி இருப்பார்களோ?
..............................................................................
வயலில் அருவடை காலம் நெருங்கியிருக்க முகத்தில் புன்னகை உறைந்திருந்தது அனைவரும் முகங்களிலும்...
இயந்திரங்களல்லாத வயல் வெளிகளில் ஆங்காங்கே சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அறுவடை செய்து கொண்டிருக்க இடைநடுவே சிந்திய வியர்வையை தன் தலைப்பாகை துண்டால் துடைத்தவாறே தானும் அறுவடை செய்து கொண்டிருந்தார் சிவராமன்.
சின்ன வயதில் தானும் செய்வேன் என அடம்பிடித்த மகனை தோளில் சுமந்த நாட்கள் இனிமையாய் அவர் நினைவலைகளை தட்டி எழுப்பின.
ஓர் முறை ஓரமாய் அமர வைத்து விட்டு வந்தவர் பின்னாலேயே வந்திருந்த மகனை அவர் நேரம் சென்று தான் கவனித்திருந்தார்.
காலில் சேறு அப்பியிருக்க அவர் பின்னால் நின்றிருந்தவன் முகத்தில் அப்படி ஒரு குதூகலிப்பு!
மகனின் சந்தோஷம் எந்தத் தந்தைக்குத் தான் பிடிக்காது?
இருந்தும் அவன் அப்படி இருப்பதை விரும்பாதவர் போல் அவனை தூக்கிச் சென்று பம்பு செட்டில் கால்களை நன்றாக கழுவி விட்டவர் மீண்டும் மரத்தினடியில் அமர வைக்க இம்முறை சமத்தாக அமர்ந்திருந்தான் மகன்.
"நீ ராஜா மாதிரி இருக்கணும் கண்ணா... அப்பா தான் உனக்காக இருக்கேன்ல?"
'நானும் உங்களுக்காக இருக்கிறேன் அப்பா' என அவன் ஒரு வார்த்தை கூறி இருந்தாலும் இன்றைய அவர் பரிதாப நிலையை தவிர்த்திருக்கலாமோ?
அல்லது அவர் தான் அதனை சொல்லிக் தந்து வளர்க்கவில்லையா?
இல்லை நிச்சயம் அவர் மகன் வருவான்!
நம்பிக்கையுடன் மீண்டும் அரிவாளை கைகளுக்குள் பற்றிப் பிடித்தார் தந்தை.
அறுவடை முடிந்து களைப்பு மிகுதியில் அசதியாய் வந்தமர்ந்தமர்ந்தவருக்கு மனைவியின் நினைவுகள் வாட்டின.
ஆத்மார்த்தமான தம்பதிகள் தான்.
பாசம் காட்டும் தந்தையிடம் ஒட்டிக் கொண்டவன் கண்டிப்பு காட்டும் தாயிடமிருந்து விலக ஆரம்பிக்க பலன் அவர் மேல் ஏனென்றே தெரியாத கோபமும் வெறுப்பும் அவனுக்குள்...
தாய் இறந்த செய்தி கேட்ட கொஞ்ச நேர வேதனையுடன் முடித்துக் கொண்டவன் அதிலிருந்து ஊருக்கு வருவதும் இல்லை...
எல்லாம் கிடைத்து விட்டதென்ற இறுமாப்பு அவனுக்கு...
.......
அந்தி சாயும் வேளை வழமைக்கு மாற்றமாக சற்றே மூச்சு வாங்கியது பெரியவருக்கு...
இருமல் வேறு வந்து கொண்டிருக்க துணைக்கு அழைக்க முடியாமல் அவதிப்பட்டு அப்படியே மடங்கி அமர்ந்து விட ஒரு சிறுவன் அவரருகே ஓடி வந்து தண்ணீரை நீட்ட நண்றியுடன் பெற்றுக் கொண்டார்.
"தாத்தாஆஆஆ" அவன் கத்திய கத்தில் அவன் தாத்தா மற்றும் சிவராமின் நண்பன் ராஜா அவசரமாக வர
"அவங்கள எதுக்கு கஷ்டப்படுத்தற மாறா" என்றார் சிறு கண்டிப்புடன் அந்த பதின் வயது சிறுவனிடம்...
"எங்களுக்கு ஒரு கஷ்டமுமில்லை சிவராமா.. நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத" கோபம் கலந்து சொன்னவர் அவரை எழ வைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
......
ஒரு மாதம் கடந்தது...
தினமும் அந்த எல்லைப்புற வீட்டில் காத்து தவித்துப் போனார் அந்த தந்தை....
அன்று தூங்கி எழ கொஞ்சம் தாமதமாகி இருக்க "தாத்தா உனக்கு உம்மவன் கடிதம் போட்டு விட்ருக்கான" இளமாறன் கத்திக் கொண்டே ஓடிவர சட்டென ஓரு பரபரப்பு உடலெங்கும்....
அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
மாறனே அவருக்கு அதனை வாசித்துக் காட்ட கேட்ட செய்தியில் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்தார் சிவராமன்.
"வணக்கம் அப்பா,
எனக்கு திருமணமாகி விட்டது. வேலைப்பளுவில் நேரம் கிடைக்காததில் அறிவிக்க மறந்து போனேன்.
இப்படிக்கு,
ராம்"
திருமணம் அதிர்ச்சியான விடயமென்றாலும் அதை சொல்ல மறக்கும் அளவு தந்தையை மறந்து விட்டானா மகன்?
கண்கள் கண்ணீர் சிந்த தோளில் கிடந்த துணியால் துடைத்தவருக்கு மகன் மீண்டும் சேர்வானென்ற எண்ணம் விட்டுப் போயிருந்தது.
அன்று இரவு கண் மூடியவர் மீளா துயிலிலேயே ஆழ்ந்து விட்டார்!
.......
ஒரு வருடம் கழித்து கண்களில் சோகம் இழையோட அந்த ஊரின் பஸ் ஸ்டாண்டிலிருந்து சுற்றும் முற்றும் பார்த்தபடியே நடந்து வந்து கொண்டிருந்தான் ஒருவன்.
அவன் முதன் முறை விட்டுச் சென்ற போது இருந்த ஊர் முற்றிலும் மாற்றமாக தெரிந்தது அவன் கண்களுக்கு...
உயர் மாடிக் கட்டிடங்கள், நவீன ரக வாகனங்கள் என ஊரே இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருந்தது.
பாழடைந்த ஓர் வீட்டின் முன் போய் நின்றவனுக்கு மனதில் தாங்கொண்ணா வலி ஏற்பட்டது.
தந்தை இறந்த அன்று வந்தவன் இன்று தான் வருகிறான்... அதுவும் வாழ்க்கையை தொலைத்து விட்டு...
அவன் மனைவி இன்னொருவனுடன் சென்று விட தனிமை தான் கற்றுக் கொடுத்தது நிறைய அனுபவங்களை...
அன்று தந்தையின் நினைவு நாளுக்காய் தான் ஊருக்கு வந்திருந்தான்.
ஊரில் மட்டுமல்ல அவன் மனதிலும் எத்தனை மாற்றங்கள்!
மாற்றங்கள் மாற்றிய மனிதனாய் தந்தையை தேட அவரோ தொலை தூரத்திற்குச் சென்றிருந்தார் அவனை விட்டு தனியாக!
"அப்பா...." வீட்டின் ஒவ்வோர் மூலையிலும் அவன் அழைப்புக்கு செவி சாய்த்து உடனே மண்டியிட்ட தந்தையின் பிம்பமே தெரிய கதறியழுதான் அவன்.
ராம்!
"என்னை மன்னிச்சுடுங்க பா... நான் பாவி பா... உங்கள வந்து பாக்காத பாவி பா நான்... பக்கத்துல இருக்கும் போது தெரியாத உங்க பாசம் நீங்க காற்றாக கலந்திருக்கும் போது தெரியுதுபா... உங்க உழைப்பையும் தியாகத்தையும் நெஞ்ச நிமிர்த்து கிட்டு வீரனா நின்னப்போ கடமைன்னு நெனச்சு ஒதுங்கி போன எனக்கு அவளை என்கிட்ட இருந்து பிரிச்சி நீங்க அனுபவிக்கிற அதே தனிமையை என்னையும் அனுபவி ன்னு சொல்லிட்டார்பா கடவுள்... நாட்டுக்கு வீரனா இருந்தவன் உங்க முன்னாடி கோழையா தோத்து போய் நிக்கிறேன் பா... " தன் தவறுணர்ந்து மன்னிப்பு யாசித்த மகனை புன்னகையுடன் பார்த்திருந்தார் சட்டத்தினுள் இருந்த தந்தை.
நிராகரிப்பின் வலியும் தனிமையும் அவனை மாமனிதனாய் மாற்றியிருந்தாலும் மகனாய் தோற்று மண்டியிட்டான் தந்தையிடம்!!!!
***
நன்றி.