பகுதி – 16.
ஆகாஷ் வெளியே குளத்துக்கு கிளம்புவதாகச் சொல்லவே, அவளது பார்வை அவனையே சுற்றி வர, அவனுக்கு அவள் மனதின் ஏக்கம் புரிந்தது.
“ஹாய் ப்ரண்ட்... நீ குளம் பாத்திருக்க?” அவளிடம் கேட்க, அவளது விழிகள் ஒளிர்ந்தால், தேன்மொழியோ ‘அவனை என்ன செய்வது?’ என்ற பார்வை பார்த்தாள்.
“ஆகாஷ்... மழை வேற வர்ற மாதிரி இருக்கு... நீ எங்கே அவளை அழைச்சுட்டு போகப் போற? எதுவும் வேண்டாம்...” காவேரி அவனைத் தடுக்க முயன்றார்.
“அத்த... பிளீஸ்...” அவர் மறு வார்த்தை பேசும் முன்பு, பூமிகாவின் கெஞ்சல் குரல் அவரை தடுத்து நிறுத்தியது.
“அதுக்கில்லம்மா...” அவர் துவங்க,
“காவேரி... நான்தான் கூடவே போறேன்ல... பிறகு என்ன?”.
“நீ சாச்சுகிட்டு நடந்து போகாமல் இருக்கணும்... அப்படின்னா எனக்கு ஓகே” அவர் சொல்ல,
“எனக்கு மறந்திருந்ததை ஞாபகப்படுத்தற பாத்தியா? இப்போ நான் என்ன செய்ய? சரி... ப்ரண்டு என்னோட வர்றதால நார்மலா நடக்கறேன்...” சொன்னவன் செல்ல, ஆசுவாசமாக மூச்சு விட்டார்.
“நானும் வரவா...?” தேன்மொழி பூமிகாவிடம் கேட்க,
“எது... இந்த சிலிண்டரை தூக்கிட்டு அலையிறதுக்கு தான? அதையும் நாங்களே பார்த்துக்கறோம்...” சொன்னவன், பூமிகா அப்பொழுதுதான் கழட்டி வைத்திருந்த ஆக்ஸிஜன் சிலிண்டரை கையில் எடுத்துக் கொண்டான்.
“ஆகாஷ்... கார்ல தானே போறீங்க?” திடுமென தேன்மொழி கேட்க,
“அதான... வேண்ணா அந்த மீன்பாடி வண்டியில போகவா? பின்னாடி படுத்துகிட்டே வேற போலாம்...” அவன் ஆம்புலன்ஸை சுட்டிக்காட்டி நக்கலாக கேட்க, பூமிகா சிரித்துவிட்டாள்.
“அந்த வண்டியைப் பாத்தாலே பத்திகிட்டு வருது... கண்ணுக்கு மறைவா நிறுத்தி வைக்கணும்...” சொன்னவன்...
“ப்ரண்டு... நீ கார்ல போய் உக்காரு... நான் ட்ரஸ் மாத்திட்டு வர்றேன்” சொன்னவன் வேகமாக வீட்டை விட்டு வெளியேறி, பின்கட்டு படிகளில் ஓடினான்.
அவன் செல்லவே... “பூமி... பார்த்து பத்திரமா இருக்கணும்... நானும் வேண்ணா வரவா? உன்னை நான் இப்படி அனுப்பினதே இல்லையே...” தேன்மொழி கவலையாக கேட்க, பூமிகா மறுப்பாக தலை அசைத்தாள்.
“தனியா போற த்ரில்ல நான் இருக்கேன்... எனக்கு அந்த துப்பட்டாவை மட்டும் எடுத்துக் கொடு...” அவள் கேட்கவே, பூமிகா கேட்டதைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
பூமிகா காருக்கு செல்ல, தேன்மொழி உள் படிக்கட்டு வழியாக மேலே செல்ல, அங்கிருந்த அறைக்குள் இருந்து ஆகாஷின் ஓங்காரிப்பு சத்தம் வீட்டுக்கு வெளியே வரைக்கும் கேட்டது.
‘என்ன...? வாந்தி எடுக்கறாரா?’ எண்ணியவள், உள்ளே செல்வதா? வேண்டாமா? எனத் தடுமாறி நிற்க, அறைக்குள் இருந்து அவனே வெளியே வந்தான்.
அவளைப் பார்த்தவன்... “அட எனிமி... இங்கே என்ன பண்றீங்க?” கேட்டவன் கொடியில் கிடந்த டவ்வலை எடுத்து முகம் துடைத்தான்.
“வாமிட் பண்ணீங்களா? என்ன ஆச்சு?” அவனை ஆராய்ச்சியாக பார்த்தவாறே கேட்டாள்.
“ஓ... அதுவா... நான் கர்ப்பமா இருக்கேனா அதான்...” சொன்னவன் படிகளில் இறங்கத் துவங்க, அவன் பின்னால் ஓடினாள்.
“ஒரு இடத்துல இருக்க மாட்டீங்களா?” பேசிக் கொண்டிருக்கையிலேயே நடக்கிறானே எனக் கேட்டாள்.
“அப்படி இருந்தா தூக்கிட்டு போய் எரிச்சிட மாட்டீங்க? அதான்... இப்போ என்ன... உங்க ப்ரண்ட்டை நான் நல்லா பார்த்துக்கணும், எதுன்னாலும் உடனே தகவல் கொடுக்கணும் அதான?” படிகளில் நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“எதையுமே சீரியஸா எடுத்துக்க மாட்டீங்களா? ஒரு சின்ன தப்பு நடந்தா கூட...” சொல்லத் துவங்கியவளுக்கு, மேலே என்ன சொல்வது எனத் தெரியவில்லை.
“அவங்க கிட்டே ஏற்படற மாற்றம் உங்களுக்குத் தெரியுதா இல்லையா? இங்கே வந்ததில் இருந்து இன்னுமே உடம்பு மெலிஞ்சு போயிட்டே இருக்காங்க... அவங்களோட மொத்த எனர்ஜியும் ஒரு நாள் வத்திட்டா, படுக்கைதான் அவங்க கடைசி வாய்ப்பு.
“அப்படி ஆக முன்னாடி... அட்லீஸ்ட்... அவங்க சந்தோஷமா இருக்கற மாதிரி, நினைச்சு சந்தோஷப்படற மாதிரி சில நினைவுகளையாவது கொடுக்கலாமே” அவன் சொல்ல, தேன்மொழி அழுதுவிட்டாள்.
“இப்போ எதுக்கு அழறீங்க? இது உண்மை... அதுக்கு முன்னாடி நாம ஓட முடியாது. நீங்க இவ்வளவு அவங்க மேல அட்டாச் ஆகறது நல்லதில்லை. உங்க மனசை ப்ரதிக் பக்கம் திருப்புங்க... உங்க நல்லதுக்குதான் சொல்றேன்” சொன்னவன் சென்றுவிட்டான்.
அவன் காருக்கு அருகில் வருகையில், காவேரி வெளியே நிற்க, பூமிகா பின்னிருக்கையில் அமர்ந்திருந்தாள்.
அதைப் பார்த்தவன், “ப்ரண்ட்... என்ன பின்னாடி உக்காந்துட்ட? முன்னாடி வா...” அவன் அழைக்க, சற்று தயங்கி வந்து அமர்ந்தாள்.
“ஆகாஷ்... பார்த்து... நிதானமா போ...” காவேரி பத்திரம் சொல்ல, தேன்மொழி அமைதியாக வந்து நின்று கை காட்டினாள்.
காரை மெதுவாக கிளப்பி... வீட்டுக்கு வெளியே வந்தவன், “என்ன இது...? குர்தாவுக்கு துப்பட்டா எல்லாம் போட்டுக்கிட்டு... அதை போடலன்னாலும் பெருசா எந்த வித்தியாசமும் தெரியாது” அவளைப் பார்த்து கண்ணைச் சிமிட்டி அவன் சொல்ல, அவன் சொன்னது புரிந்ததை விட, அவன் கண்ணை சிமிட்டியது அவளுக்கு விஷயத்தை புரிய வைத்தது.
“ஏய்... ச்சீ... இதென்ன பேச்சு...?” முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“ஒரு ஆணும் பொண்ணும் ப்ரண்ட்ஸ்ஸா இருக்கறதில் ஒரு வசதி, ஒரு சங்கடம் இதுதான்... ஒரு ஆணைப்பத்தி, அவன் மனநிலை பத்தி எல்லாம் ஈஸியா ஒரு பொண்ணு புரிஞ்சுக்கலாம்... ஒரு ஆணுக்கும் அப்படித்தான்.
“கூடவே... அந்த ஆண் யோசிக்காமல் பேசிடற விஷயத்தால், பொண்ணுக்கு ஒரு சங்கடம் வந்துடும். ஆணுக்கும் அப்படியே... அதுவே பழகிட்டா... ‘கருமம் புடிச்சவனே... உன் புத்தி இருக்கே... கிரகம் புடிச்சவனே’ இப்படி செல்லமா திட்டிடலாம்.
“ஒரு ஆம்பளைக்கு அது ரொம்ப புடிச்ச விஷயமும் கூட... இப்போ கூட நீ சொன்னியே ‘ச்சீ...’ன்னு ஐ லைக் இட்...” அவன் சொல்லச் சொல்ல, அதென்னவோ அவனை இன்னும் பிடித்தது.
அவளுக்கு நட்பே புதிது என்கையில்... ஒரு ஆண் நட்பு கிடைக்காதது கிடைக்கப்பெற்ற பிரமிப்புதான். அவளைப் பார்த்தாலே, பேயைப் பார்த்த தினுசில் விலகிச் சென்றவர்கள்தான் அதிகம்.
‘இவகிட்டே பேசி, இவ பாடி ஆயிட்டா, அந்தப்பழி நம்ம மேல விழுந்துடும்ப்பா... வேண்டாம்...’ உடன் பயின்ற பெண்களே இப்படிப் பேசி கேட்டிருக்கிறாள்.
அப்படி இருக்கையில்... ஆண் நட்பு எல்லாம் கனவில் கூட வாய்க்கப்பெறாத ஒன்று.
அவள் திடுமென அமைதியாகிவிட, “ஹல்லோ ப்ரண்ட், என்ன திடீர்ன்னு அமைதி ஆகிட்ட?” அவள் ஏதோ யோசனையில் இருக்கவே, அவளைக் கலைத்தான்.
“நீங்க லவ் பண்றீங்களா?” அவள் திடுமென கேட்க, சாலையில் கவனமாக இருந்தவன், அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“பாஸ்ட்டென்ஸ்ல சொல்லணும்... பண்ணேன்...”.
“அவங்களை ரொம்ப புடிக்குமா?”.
“ரொம்ப புடிக்குமான்னா... ஆமா... லவ் பண்றப்போ அந்த கிறுக்குத்தனம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்... ஏன்...?” அவள் முகத்தை ஆராய்ந்தவாறே கேட்டான்.
அவள் முகத்தில் பொறாமையோ, வருத்தமோ வேறு எதுவுமோ தெரியவில்லை. மாறாக... ஒரு ஆர்வம்... அவனது காதலைப் பற்றி தெரிந்துகொள்ள, அறிந்துகொள்ள அவள் விரும்புவது அவனுக்குத் தெரிந்தது.
அது அவனுக்கு பெருத்த நிம்மதியைக் கொடுக்க, அவளை விடுத்து சாலையில் பார்வையைப் பதித்தான்.
“நீங்க அவங்களை இப்போ மிஸ் பண்றீங்களா?”.
அதற்கு பதிலைச் சொல்ல சில நொடிகள் அவன் எடுத்துக் கொள்ளவே, “பதில் சொல்லணும்னு கட்டாயம் எல்லாம் இல்லை” அவள் சொல்ல, மறுப்பாக தலை அசைத்தான்.
“இல்ல... நான் அவளை மிஸ் பண்றனான்னு யோசிச்சுப் பாத்தேன். அவளுக்கு நான் ஒரு சாய்ஸா இருந்தேன்... அதாவது, அவ வச்சிருந்த லிஸ்ட்ல நானும் ஒரு ஆள் அவ்வளவுதான்.
“அது எப்போ தெரிய வந்ததோ... அப்போவே அவகிட்டே இருந்து நான் விலகிட்டேன். சோ... நான் பெருசா மிஸ் பண்ணலை... அவளும் அப்படித்தான்னு எனக்குத் தெரியும்” சாதாரணமாகவே அவன் சொல்ல, அவளிடம் ஒரு கதை கேட்கும் பாவனைதான்.
“யார் முதல்ல காதலைச் சொன்னது?” அவள் கேட்க,
“உண்மையைச் சொன்னா... நாங்க ரெண்டுபேரும், காதலை சொல்லிகிட்டதா எனக்கு ஞாபகமே இல்லை... அது அப்படியே... எனக்கும் ஒரு ஆள் இருக்காடா... அப்படின்னு போச்சு...” அதே பழைய கெத்து குரலில் அவன் சொல்ல, அவனையே பார்த்திருந்தாள்.
“ஒரு நிமிஷம் இரு... இங்கே ஒரு கருப்பட்டி தேன்குழல் கிடைக்கும், ரொம்ப டேஸ்ட்டா இருக்கும், கொஞ்சம் வாங்கிட்டு வர்றேன்... நீயும் வர்றியா?” அவளிடம் கேட்க, அவளும் காரில் இருந்து இறங்கினாள்.
அவளது வாழ்நாளிலேயே முதல் முறையாக கடைக்குப் போகிறாள்... தயக்கமாக அந்த பேக்கரிக்குள் அவள் நுழைய, “நீ இந்த சேர்ல உக்காரு... நான் வாங்கிட்டு வர்றேன்” அவன் இருக்கையை கைகாட்ட, அதில் சென்று அமர்ந்து கொண்டாள்.
புதிதாக அவள் வந்திருப்பதால், கடைக்காரர் அவளையும் அவனையும் பார்க்க, “சேட்டா...” விரல் நீட்டி அவன் பத்திரம் காட்டவே, அவனைப் பார்த்து சிரித்தார்.
“எந்து வேணும்...?” மலையாளம் கலந்த தமிழில் அவர் கேட்க, அவள் சற்று சுவாரசியமாகப் பார்த்தாள்.
“அது...” இழுத்தவாறே அவன் தேட, கடைப் பையனோ அவரது முதுகுக்குப் பின்னால், ‘கீழே இருக்கு...’ என கை காட்ட, அவளது சுவாரசியம் அதிகரித்தது.
“சேட்டா... அது... அதோ அங்கே இருக்கு...” எட்டிப் பார்த்தவன், அவரது காலுக்கு அருகே இருந்ததை சுட்டிக் காட்ட,
“அது பழையதா... நினக்கு வேண்டாம்...” அவர் மறுக்க,
“எனக்கு அதுதான் வேணும்...”.
“கால் கிலோ நூற்றம்பது ரூபா...” அவர் சொல்ல,
“பத்து ரூபாவுக்கு என்ன வரும்?” சட்டைப் பையில் இருந்து எடுத்து அவர் முகத்துக்கு முன்னால் நீட்ட,
“ம்... கோபம் வரும்... எனக்கு...” அவர் சொன்ன விதத்தில், பக்கென சிரித்துவிட்டாள்.
அங்கே இருந்த மூவரின் பார்வையும் அங்கே செல்ல, “சேட்டா... பிளீஸ்... பிளீஸ்...” அவர் கன்னம் பற்றி அவன் கெஞ்ச,
“வேண்டா... வேண்டா...” துள்ளி துள்ளி மறுத்தவர், இறுதியில் கடைப் பையனிடம், “எடுத்து கொடுக்கடா...” எனச் சொல்ல, சின்ன பீஸ் ஒடித்து, பேப்பர் பிளேட்டில் வைத்து கொடுக்க,
“தேங்க்ஸ் சேட்டா...” சொன்னவன் கடைப் பையனிடம் கண்ணைச் சிமிட்டிவிட்டு, அவள் எதிரில் சென்று அமர்ந்தான்.
“டேஸ்ட் பண்ணு...” ஒரு சின்ன பீஸ் கொடுக்க, அதை வாங்கி வாயில் போட்டுக் கொண்டாள். அந்த கருப்பட்டியின் சுவையும், அந்த மாவின் சிறு புளிப்பு கலந்த தித்திப்பு அவள் தொண்டைக்குள் இறங்க, அதன் சுவையில் கிறங்கினாள்.
“சூப்பரா இருக்குல்ல... இன்னும் ஒரு பத்து ரூபாய்க்கு வாங்கிட்டு வரவா?” அவன் கேட்க, எங்கே அவன் மீண்டுமாக சென்றுவிடுவானோ? என அஞ்சியவள், வேகமாக அவனது கரத்தைப் பிடித்து தடுத்தாள்.
‘வேண்டாம் சாமி...’ அவளது கண்கள் அவனிடம் கெஞ்ச,
“உனக்கு எக்ஸ்ப்ரசிவ் ஐஸ்... ரொம்ப அழகா இருக்கு” அவன் சொல்ல, அவளது இமைகள் படபடத்தது.
அவளிடம் சாதாரணமாகவே வெளி ஆட்கள் யாரும் பேசியது இல்லை. இவன் என்னவென்றால் இப்படிப் பேசினால்... அவளும் என்னதான் செய்வாள்?
“இதுக்கு முன்னாடி உன்கிட்ட யாராவது சொல்லி இருக்காங்களா?” அவன் கேட்க, அவன் கேட்க வருவது அவளுக்குப் புரியவே இல்லை.
“என்ன?” அவள் தடுமாறி கேட்க,
“உன் கண்களைப் பத்தி கேட்டேன்”.
“யாரும் பேசினதே இல்லை... இதில் கமெண்ட் எல்லாம் சொல்வாங்களா? இல்லை” சொன்னவள் வேடிக்கை பார்க்கும் சாக்கில் திரும்பிக் கொண்டாள்.
“ஓஹ்... அந்த பாக்கியம் எல்லாம் அடியேனுக்குதான் கிடைச்சிருக்கு போல?” அவன் சீண்ட, அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.