• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - 26.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
பகுதி – 26.

விஷ்வா வீட்டுக்கு வந்த நாள் முதல், அவனது உடல்நிலையை, முடிவைத் தெரிந்துகொண்ட அவனது தாய் வடிவு அழுதே கரைய, அவரை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை.

“அம்மா, இப்படி அழுதுட்டே இருந்தா உங்க உடம்பு என்னத்துக்கு ஆகும்?” விஷ்வா கவலையாக கேட்க, அவன் கன்னம் வருடியவரின் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது.

“என் குல சாமிக்கு இப்படி வந்திருக்க வேண்டாம். உனக்காய்யா இப்படி? என் புள்ளை சாகறதை பார்க்கவா நான் உசுரோட இருக்கேன்?” அவர் சொல்லி அழ அவனால் தாங்க முடியவில்லை.

அந்த வீட்டில் இருந்த ஒட்டுமொத்த சந்தோஷமும் தன்னால் ஆவியாகிப் போனது புரிய, அவனால் முடியவில்லை.

அவன் வீட்டில் இருந்த ஒரு வாரத்தில், மூன்று முறை மயக்கம் போட்டு விழ, அவனை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடுவதே அவர்களது வேலையாக இருந்தது.

அறிவும் தன் வேலைக்கு விடுப்பு எடுக்க, ‘தன்னால் அனைவருக்கும் துன்பம்தான்’ என எண்ணியவன் மாய்ந்து போனான்.

மூன்றாவது முறை அவன் மயக்கம் போட்டு விழ, அவனைத் தேடி வந்த மருத்துவர், “மிஸ்டர் விஷ்வா, நீங்க ஏன் உங்களையே போட்டு அழுத்தறீங்க? மனசை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க...” அவர் சொல்ல, அவனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

‘எல்லாத்தையும் இவ்வளவு சீக்கரமா அனுபவிச்சது, ஆடினது எல்லாம் இதுக்கா?’ அந்த நினைப்பு அவனை உள்ளுக்குள் செல்லரித்துக் கொண்டிருந்தது.

“எதையாவது பேசுங்க விஷ்வா?” அவர் அவனை பேச வைக்க முயன்றார்.

“பேசறதுக்கு என்ன இருக்கு டாக்டர்? நான் சாகப்போறேன், அவ்வளவுதான்” அவன் முடிக்க,

“என்னோட கொஞ்சம் வெளியே வரீங்களா?” அவர் கேட்க, மறுப்பாக தலை அசைத்தான்.

“கொஞ்சம் வாங்க...” அவர் கட்டாயப்படுத்தவே, அரை மனதாக எழுந்தவனை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.

‘கேன்சர் பிரிவு’ என எழுதி இருந்த கட்டிடத்துக்குள் அவனை அழைத்துச் செல்ல, நகர மறுத்து நின்றுவிட்டான்.

“எனக்கு அவங்களை எல்லாம் பார்க்கற மூட் இல்லை டாக்டர்...” அவன் மறுக்க,

“முதல்ல உள்ளே வாங்க... இது நீங்க நினைக்கற மாதிரி இடம் இல்லை...” சொன்னவர், அவனை அண்டர்கிரவுண்டில் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்ல, அங்கே இருந்தவர்கள் அனைவருமே பத்து வயதுக்கும் குறைவான குழந்தைகள்.

அவர்களது தோற்றம், சில சோர்வான குழந்தைகள் தவிர, மற்றவர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

சட்டென பார்த்தால், அங்கிருக்கும் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருப்பதாகத் தோன்றும்.

அவன் அங்கேயே அப்படியே நின்றுவிட, “இந்த குழந்தைகளைப் பாருங்க, அவங்களுக்குள்ளே உயிரைக் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கற ஒரு வியாதி இருக்கு. ஆனாலும், அவங்க முகங்களில் ஒரு அமைதி இருக்கறது உங்களுக்குத் தெரியுதா?” கேட்டவர், அவனை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.

அவன் அமைதியாக வர, அங்கே கிடந்த ஒரு இருக்கையில் அவனை அமர வைத்து, தானும் அமர்ந்தார்.

“அவங்களும் சாகத்தான் போறாங்க விஷ்வா” அவர் சொல்ல, அவரை ஏறிட்டு பார்த்தான்.

“அவங்களால் நல்லா விளையாட முடியற நேரம், எதைப்பத்தியும் கவலையே படாமல் விளையாடுவாங்க. முடியாதப்போ சோர்ந்து படுத்துப்பாங்க, ‘எனக்கு இப்படி’ன்னு நினைச்சு வருத்தப்பட்டுட்டே இருக்க மாட்டாங்க.

“நீங்க இப்போ இந்த குழந்தைங்க மாதிரி இருக்க வேண்டிய நேரம். நேற்றைக்கு வரைக்கும் உங்களுக்குன்னு முடிக்க நிறைய கடமை, வேலை, டென்ஷன், பொறுப்புன்னு ஏகப்பட்டது இருந்தது.

“ஆனா இனிமேல் அப்படி எதுவும் உங்களுக்கு இல்லை. நீங்க எப்படியும் சாகப் போறீங்க... அதை எப்படி எதிர்கொள்ளப் போறீங்க என்பதுதான் சவால். அழுதுட்டேவும் சாகலாம்... சிரிச்சுட்டேவும் சாகலாம்... சந்தோஷமாவும் சாகலாம்...

“சாவுதான் இங்கே இருக்கும் எல்லாருக்கும் முடிவு... அது உங்களுக்கு தெரிஞ்சு, உங்க கூடவே ஓடிகிட்டு இருக்கறதுதான் ஒரு டென்ஷனை, பயத்தை கொடுக்குது. அதை விட்டு ஒழிங்களேன்...

“சொல்றது ரொம்ப ஈசி, செய்யறது கஷ்டம்னு நீங்க சொல்லலாம்... உங்க சாவு பயத்தை விட்டு வெளியே வாங்க. கொஞ்ச நாள், ஒரு புது மனுஷனா, ஸ்கூல், காலேஜ் எல்லாம் படிச்சப்போ இருந்த ஒரு விஷ்வாவா வாழ்ந்து பாருங்களேன்” அவர் சொல்ல, அவன் இதழ்களில் ஒரு புன்னகை.

“என்னை சுத்தி இருக்கறவங்க அதுக்கு விட மாட்டாங்க டாக்டர்...” அவன் சொல்ல, அவன் தோளைத் தட்டினார்.

“முதல்ல இந்த சூழலை விட்டு வெளியே போங்க... ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்து பாருங்க, புது மனிதர்கள், புது இடம், புது வாழ்க்கை... ஜஸ்ட் ட்ரை...

“இருக்கறவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கு இந்த உலகமே வீடு... நீங்களே புதுசா ஃபீல் பண்ணுவீங்க. ஏதாவது கஷ்டமா இருந்தா, எந்த நிமிஷமும் என்னை நீங்க காண்டேக்ட் பண்ணலாம்...” அவர் சொல்ல, அமைதியாக கேட்டுக் கொண்டான்.

வீட்டுக்கு வந்தவன், அவர் சொன்னதைக் குறித்து அதிகம் சிந்தித்தான். அதே நேரம், அன்று மாலையில் வேலையில் இருந்து வந்த அறிவு, விஷ்வாவைத் தேடி ஓடியவன், அவன் அறையில் இருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.

“அண்ணா, இங்கே பார்...” அவன் அத்தனை பரபரப்பாக, படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான்.

‘நடிகை நிக்கி வேதாந்த், துபாயில் மாரடைப்பில் மரணம்...’ செய்தி வாசிப்பாளினி தந்தி குரலில் செய்தியை சொல்ல, அதைக் கேட்டவனுக்கு அதற்குப் பிறகு அவள் சொன்ன எதுவும் காதில் விழவில்லை.

“என்னடா இது? இது எப்போ?” தன் தம்பியிடம் அவன் கேட்க,

“ரெண்டு நாளைக்கு முன்னாடியே நடந்து இருக்கும்னு சொல்றாங்க. அவங்களோட யாரோ இருந்திருக்காங்க... அது யார்ன்னு விசாரணை நடக்குது போல...” அவன் சொல்ல, விஷ்வா எப்படி உணர்ந்தான் என்றே சொல்வதற்கு இல்லை.

“அந்த டிவியை நிறுத்து...” அவன் சொல்ல, அவன் சொன்னதைச் செய்தான்.

“என்னண்ணா இது? அவங்களும் ட்ரக்ஸ் எடுத்துப்பாங்களா?” அவன் கேட்க, அவளது ஹார்மோன் இன்ஜெக்ஷன் விஷயங்கள் எல்லாம் அவனுக்குத் தெரிந்தாலும் அமைதியாக இருந்தான்.

“அது இனிமேல் நமக்குத் தேவை இல்லாதது விடு...” சொன்னவனுக்கு தான் எப்படி உணர எனத் தெரியாத நிலையே.

“அவங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டாங்கன்னு நான் நினைச்சிருக்கேன்... அது நடந்துடுச்சு...” அறிவு சொல்லச் சொல்ல, அமைதியாக படுத்துக் கொண்டான்.

‘இப்படி பொசுக்குன்னு போகத்தானா எல்லாம்?’ எண்ணியவன், அதற்கு மேலே அவளைப்பற்றி சிந்திக்கவில்லை. மனதின் ஓரம் தான் ஏமாற்றப்பட்டதின் வலியும், இப்போதைய நிலையும் அவனை அழுத்த, தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

விஷ்வா கிளம்பிச் சென்று, இரவான பிறகும் அவன் வீட்டுக்கு வரவில்லையே எனத் தேட, அவனது கார் வீட்டுக்கு வெளியிலேயே நிற்க, அவனைக் காணவில்லை.

காருக்குள் இருந்த கடிதத்தில், ‘என்னைத் தேட வேண்டாம்... நிம்மதியான சாவைத் தேடித் போகிறேன். நான் இறந்தால், அந்த சேதி உங்களைத் தேடி வரும்’ என்ற சேதியும், அவனது அலைபேசியும் உடன் இருக்க, அவர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தார்கள்.

அவனது தாய் தன் மகனைத் தேடியே ஆக வேணும், போலீசுப்புப் போகலாம் எனச் சொன்னதை எல்லாம் அறிவு கண்டுகொள்ளவே இல்லை. தன் அண்ணன் தன்னிடம் பேசியதே அவன் நினைவில் ஆடியது.

‘நிம்மதியான சாவைத் தேடித் போகிறேன்’ என அவன் சொல்லி இருக்க, அறிவு எப்படி அதைக் கலைக்க? இப்போதைக்கு அவர்களால் கொடுக்க முடிந்தது அது மட்டும்தான் என்கையில் வேறு என்னதான் செய்ய?

***தன் படுக்கையில் சோர்ந்துபோய் படுத்திருந்த பூமி, தன் கையில் இருந்த அலைபேசியை பார்த்துக் கொண்டே இருக்க, அதைப் பார்த்த தேன்மொழிக்கு அத்தனை வருத்தமாக இருந்தது.

“பூமி, போதும்... இன்னும் எவ்வளவு நேரம் அதையே பார்த்துட்டு இருப்ப? அதைக் கீழே வை...” தேன்மொழி சொல்ல, மறுப்பாக தலை அசைத்தாள்.

“என்ன பூமி இது? சொல்றதை கேட்கவே மாட்டியா?” சற்று கண்டிப்புடனே கேட்டாள்.

அதற்கும் மறுப்பான தலை அசைப்பையே கொடுத்தவள், ‘நான் அவருக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்துட்டேனோ?’ தன் கையில் இருந்த அலைபேசியில் டைப் செய்தவள், தேன்மொழிக்கு, ப்ரதிக் வாங்கிக் கொடுத்திருந்த புது அலைபேசிக்கு செய்தியை அனுப்பினாள்.

அதை வாசித்த தேன்மொழி, “பூமி... அதான் அவசர வேலையா போறேன், சீக்கிரமே வர்றேன்னு மெஸ்சேஜ் அனுப்பி இருக்காரே. அப்படியும் நீ இப்படி கேட்டா என்னதான் செய்யட்டும் பூமி?” கடந்த இரண்டு நாட்களாக, இதையே கேட்பவளிடம் பதில் சொல்லி முடியவில்லை.

‘இல்ல, நீ பொய் சொல்ற... அவசர வேலைன்னாலும், சொல்லிட்டு போக கூட முடியலையாமா? நான் சாகறதை பார்க்க முடியாதுன்னு விட்டுட்டு போயிட்டாரா? ஒரு வேளை அவருக்கு என்னைப் பிடிக்கலையோ, விட்டுட்டு போய்ட்டாரோ?’ அவள் ஒவ்வொன்றாக செய்தி அனுப்ப, வேகமாக அவள் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கி கீழே வைத்தாள்.

“அவருக்கு உன்னைப் பிடிக்காதா? யார் சொன்னா? இதைப்பார்... பார்த்துட்டு சொல்லு. ஆனா உணர்ச்சிவசப்படக் கூடாது பூமி...” ஆயிரம் விதத்தில் எச்சரிக்கை செய்தவள், அன்று மருத்துவமனையில் தான் எடுத்த வீடியோவை அவளுக்கு ஓடவிட்டு காட்டினாள்.

கடைவிழியோரம் கண்ணீர் வழிய அதைப் பார்த்தவளுக்கு... ஒரு பெரும் திகைப்பும், ஆசையும், தேகத்தில் ஒரு சிலிர்ப்பும் ஓட அந்த அலைபேசியை இமைக்க கூட மறந்து வெறித்தாள்.

அவள் படுக்கையில் இருந்து எழுந்து அமர முயல, வேகமாக அவளைத் தாங்கி எழுப்பி அமர வைக்க உதவியவள், ஆக்ஸிஜன் மாஸ்கை சரியாக மாட்டி விட்டாள்.

பூமிகா மீண்டும் மீண்டுமாக அதையே பார்த்திருக்க, “போதும் பூமி, போனை வை...” தேன்மொழி அவள் கையில் இருந்து அலைபேசியை வாங்கி கீழே வைக்க, தன் தோழியின் முகம் பார்த்தாள்.

“என்ன பூமி?” அவள் கரத்தை பற்றிக் கொள்ள,

“நான் முழிச்சு இருந்தப்போ ஏன் அவர் ‘இதை’த் தரலை?” சின்னக் குரலில் வினவிய தோழியின் கண்களில் வழிந்த ஏக்கமும், காதலும் பெண்ணவளை புரட்டிப் போட்டது.

“அவர் நேர்ல வர்றப்போ கேளு... இனிமேல் இப்படி லூசு மாதிரி உன்னைப்போட்டு நீயே குழப்பிக்கறத்தை நிப்பாட்டு சரியா” அவள் சொல்ல, பூமிகாவின் முகத்தில் அத்தனை பரிதவிப்பு.

“மனசை அலட்டிக்காத பூமி...” தோழியை தேற்ற முயன்றாள்.

“நான் போக முன்னாடி...” அவள் மேலே எதையும் சொல்லும் முன்பு, அவளது வாயை மூடிய தேன்மொழி மறுப்பாக தலை அசைத்தாள்.

“இப்படியெல்லாம் பேசாதே பூமி... உன்னை பேசவே விடக்கூடாதுன்னு அவர் சொல்லிட்டு போயிருக்கார்” அவள் கடிந்துகொள்ள, அமைதியாகிவிட்டாள்.

“இந்த ரூமுக்குள்ளேயே இருக்க கொடுமையா இருக்கு தேனு, கொஞ்சம் வெளியே போகலாமா?” அவள் கேட்க, சற்று நேரத்துக்கு முன்னர் வரைக்கும் எழக் கூட தெம்பின்றி இருந்த அவளை எண்ணி சிரித்துக் கொண்டாள்.

அந்த வீடியோவைப் பார்த்த பிறகு, சட்டென அவளுக்குள் வந்துவிட்ட அந்த எனர்ஜியைப் பார்த்தவளுக்கு ஆச்சரியமாக கூட இருந்தது.

அவர்கள் இருவரும் வெளியே வர, காவேரி அங்கே வரவே, “அத்த, சிவா எங்கே? ஆளையே காணோம்?” கண்களால் வீட்டை துழாவியவாறே கேட்டாள்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
“அது... ஏதோ வேலையா வெளியூர் போயிருக்காம்மா... நீ வா... வந்து உக்கார்” அவர் அழைக்க, அவர் தன்னிடம் எதையோ மறைப்பதுபோல் தோன்றியது.

“தேனு, அண்ணா எங்கே?” அவள் கேட்க, தேன்மொழியிடம் திடுமென ஒரு தடுமாற்றம் எழுந்தது.

“அவர் வைசாக்ல ஏதோ வேலை இருக்குன்னு போயிருக்கார் பூமி. ரெண்டு நாள்ல வந்துடுவார்”.

“எது... வைசாக்’க்கா? நீயும் அவனோட போகாம இங்கே என்ன பண்ற?” அவள் குரல் உயர்த்த, அவளை அங்கே இருக்கும் சோபாவில் அமர வைத்தாள்.

“உன்னை பேசவே கூடாதுன்னு சொன்னா, நீ கத்தி வேற பேசுவியா? அவர் தனியா ஹனிமூன் போகலை, வேலை விஷயமா வெளியூர் போயிருக்கார்... ஹனிமூன் போறப்போ, சேர்ந்து போய்க்கறேன்” அவள் சொல்ல, சற்று அமைதியானாள்.

அந்த நேரம், அவளது அலைபேசியில் குறுந்தகவல் வந்த ஓசை கேட்கவே, அதை எடுத்த தேன்மொழி, “உன் ஆளுதான்...” சொன்னவள், அலைபேசியை அவளிடம் கொடுத்தாள்.

‘நான் வந்த வேலை முடிஞ்சதும், சீக்கிரமே வர்றேன்...’ அவனிடமிருந்து செய்தி வந்திருக்க, அதைப் பார்த்தவள், பதில் எதுவும் அனுப்பாமல் அமைதியானாள்.

“ஏதாவது குடிக்கறியா பூமி?” அவளது தாய் அங்கே வர, மறுப்பாக தலை அசைத்தவள் இமைகளை மூடிக் கொண்டாள்.

“அம்மா மடியில் படுத்துக்கறியா?” அவர் கேட்க, அதே தலையசைப்பே பதிலாக கிடைத்தது.

சில நிமிடங்களில், அமர்ந்த நிலையிலேயே அவள் உறங்கிப் போயிருக்க, கனவிலும் அவள் ஆகாஷின் தோளில் சாய்ந்து உறங்குவதுபோலவே அவளுக்குத் தோன்றியது.

மருத்துவமனையில் இருந்த அத்தனை நாளும், படுக்கையில் உறங்கியதை விட, அவன் தோளிலும், மடியிலும், நெஞ்சிலும் தூங்கியதுதான் அதிகம். மருந்தின் வீரியம் அதிகம் இருக்க, உறக்கமா? மயக்கமா? எனத் தெரியாத நிலையிலேயே அவள் இருந்தாள்.

ஆனால், அவள் கண் விழிக்கும் நேரமெல்லாம், தன்னவனின் அருகாமையில் இருப்பது மட்டும் அவளுக்குத் தெரிய அத்தனை நிம்மதியாக இருந்தது.

ஆனால், அவனைப் பார்க்கையில் மற்றவர்களுக்கு சிறு குற்றஉணர்வாக இருந்தது. நித்யானந்தம் அதை அவனிடம் சொல்லியே விட, “நான் இதை அவளுக்காக செய்யறேன்னு நீங்க நினைச்சா அது தப்பு... நான் எனக்காகத்தான் பண்றேன்... சோ பிளீஸ் இப்படிப் பேசாதீங்க” அவன் சொல்லிவிட, அதற்கு மேலே யாரும் எதுவும் சொல்லவில்லை.

பூமிகா அவனுடனே இருக்க வேண்டும் என விரும்ப, அனைவரும் விலகி நின்று அதைச் செய்வதைத்தவிர அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.

அவள் அப்படி உறக்கத்தில் இருக்கையிலேயே, யாரோ தன்னை தூக்குவதுபோல் இருக்க, கண்விழித்து பார்த்தவள், ஆகாஷின் கரங்களில் தான் இருப்பதைப் பார்த்தவள், ஆச்சரியத்தில் விழி விரித்தாள்.

“ஆகாஷ்...?” நம்ப முடியாமல் அவள் அழைக்க,

“ஆமா... உன் ஆகாஷ் தான்...” அவன் சொன்னாலும், போட்டிருந்த மாத்திரையின் வீரியம் அவளைத் தாக்க, அவன் கழுத்தை இறுக வளைத்தவள், அவனை விட மாட்டேன் என்பதுபோல் இறுக்கினாள்.

“தூங்கு பூமி... நான் உன்னை விட்டு இனிமேல் எங்கேயும் போக மாட்டேன்... நாம நம்ம ரூமுக்கு போகலாம்” சொன்னவன், அங்கிருந்த யாரையும் கண்டுகொள்ளாமல் அவளோடு மாடி ஏறினான்.

அவர்கள் செல்லவே, அனைவரும் சிவாவை சுற்றிக் கொள்ள, அவன் சொன்ன சேதியைக் கேட்டு, அனைவரின் முகங்களும் மொத்தமாக இருண்டு போனது.

இங்கே யாரைப்பற்றியும் கவலை கொள்ளாமல், தன்னவளோடு மாடி ஏறியவன், அவளைப் படுக்கையில் விட்டு, தானும் அவளோடு ஒட்டிக்கொண்டு படுத்தான்.

வெளியூரில் இருந்து வந்தவன், தன்னால் அவளுக்கு எந்த ‘தொற்றும்’ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, குளித்துவிட்டே அவளைக் காண சென்றிருக்க, அவளை தன் நெஞ்சில் போட்டுக்கொண்டு கண் மூடினான்.

அவள் இன்னும் இளைத்திருப்பது அவனுக்குத் தெரிந்தது. அவளது பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு வாரமிருக்க, அந்த ஒரு வாரத்தை அவள் கடக்கவேண்டும் என்பதே அவனது இப்போதைய வேண்டுதலாக இருந்தது.

எவ்வளவு நேரமோ தெரியாது... அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, திடுமென விழிப்பு வருகையில், தன் முகம் முழுவதும் அவளது பூவிதழின் ஊர்வலம் போக, தன் இமைகளைப் பிரித்தவன், அவளையே பார்த்திருந்தான்.

தன் செய்கையிலே கவனமாக இருந்தவள், அவன் கண்விழித்தது கண்டு, “நீங்க மட்டும் எப்படி முழிச்சீங்க?” அவனிடம் கேட்க, தான் அவளை முத்தமிட்டபொழுது அவள் கண் விழிக்காமல் போனதைக் குறித்த யோசனையில் கேட்பது அவனுக்குப் புரிந்தது.

“யாரு... எனிமி சொன்னாங்களா?” அவன் கேட்க,

“இல்ல... வீடியோ காட்டினா” அவள் சொல்ல, விழி விரித்து ஆச்சரியமானான்.

“ஓ... நீ எப்படி இருக்க பூமி? ஓகேயா?” அவள் கூந்தலை முக்கால்வாசிக்குமேலே கத்தரித்து இருக்க, அவளது அந்த குட்டி முடியை ஒதுக்கியவாறே கேட்டான்.

“ம்...” மென்மையாக முனகியவள், அவன் கண்களையே ஊடுருவினாள். அவளது கண்கள் அவனிடம் எதையோ யாசிக்க, அவள் கன்னம் தாங்கி, தன் நெஞ்சில் அவள் முகத்தை அழுத்திக் கொண்டான்.

“வேண்டாம் பூமி... என்னால ப்ளெயின் கிஸ் எல்லாம் கொடுக்க முடியாது. என் முத்தத்தில் ஒரு குட்டி வயாக்ராவாவது கலந்துடும்” அவன் மெதுவாக மறுக்க, தன் ஆசையும், எதிர்பார்ப்பும் அவனுக்குப் புரிந்ததில் அவளுக்கு அத்தனை ஆச்சரியம்.

கூடவே அவனது பேச்சும் சேர, “எனக்குள்ளே வந்துடறீங்களா?” அவள் காற்றாகிப் போன குரலில் வினவ, கண்ணிவெடியில் கால்வைத்த பதட்டம் அவனிடம்.

“பூமி...” அவன் அதிர்வாக அழைக்க,

“ஐ மீன் இட்...” அவளிடம் முதல்முறையாக ஒரு பிடிவாதம் தொனிக்க, அவள் கன்னம் பற்றி நிமிர்த்தி, தன் முகம் காண வைத்தான்.

“என்னம்மா இது? எதுக்கு இப்படி எல்லாம் யோசிக்கற? நீ ‘இப்படி’ கேட்கறதும், உன்னை என் கையாலேயே கொல்ல சொல்றதும் ஒண்ணுதான்னு உனக்குத் தெரியுதா?” அவன் வேதனையாக கேட்க, அவன் வருத்தப்படுவதை அவளால் தாங்க முடியவில்லை.

“உங்ககிட்டே இவ்வளவு உரிமை எடுத்துட்டு, உரிமையா நான் உங்களுக்கு எதையுமே கொடுக்காம போறது... எப்படியும் நான் சாகப்போறேன், சந்தோஷத்தை அனுபவிச்சுட்டு, கொடுத்துட்டு சாகறேனே.

“நான் என்னதான் ட்ரை பண்ணாலும், என்னால முத்தத்தில் கூட ‘அந்த’ ஃபீலை கலக்க முடியலை. எனக்கு ‘அந்த’ ஃபீல் வேணும். இதையும் நான் சுயநலமாத்தான் கேட்கறேன்” அவள் சொல்ல, அவனுக்குள் அத்தனை பதட்டம்.

“பூமி...” அவன் மறுப்பாக குரல் கொடுக்க,

“என் கடைசி ஆசை...” அவள் சொல்ல, அவள் வாயை தன் கரத்தால் மூடினான்.

“காதலிக்கணும், வாழ ஆசைப்படணும்னு எல்லாம் யோசிச்சதே இல்லை. ஆனா இப்போ, உங்களோட வாழ ஆசையா இருக்கு... உங்களோட வாழ்ந்து, அதனால் எனக்குள்ளே ஒரு வாரிசு உருவாகி, அதால் என்னோட சாவு தள்ளிப் போய்டாதான்னு ஏக்கமா இருக்கு.

“எனக்கு உங்களோட வாழணும் ஆகாஷ்... எனக்கு சாக வேண்டாம்... எனக்கு உங்களை விட்டு போக வேண்டாம்...” அவள் கண்ணீர் விட, அவனால் தாங்க முடியவில்லை.

“பூமி... பூமி... இங்கே பார்...” அவள் மூச்சுக்கு திணறி, இதழ் நீலம் பூக்க, கண்கள் மேலே சொருக, அவள் தள்ளாட, அவளைக் கைகளில் அள்ளிக்கொண்டு ஆம்புலன்சுக்கு ஓடினான்.

அங்கே இருந்த மருத்துவர் அவளுக்கு வேகமாக சில மருந்துகளை செலுத்த, சில பல நிமிடங்களில் அவள் சீராக, மருத்துவரையும் செவிலியையும் செய்கையில் அவள் வெளியே போகச் சொல்ல, இருவரும் வெளியே சென்றார்கள்.

அவளது கரத்தை அழுத்தமாக பற்றிக்கொண்டவன், “ஏன் பூமி இப்படி கஷ்டப்படற? நீ ஆசைப்படறது நடக்கவே செய்யாதுன்னு உனக்குத் தெரியாதா? உனக்கு என்ன பயம்?” அவளிடம் கேட்டான்.

“உங்களுக்கு ஒன்னுமே செய்யாமல், எனக்கு இங்கே இருந்து போக வேண்டாம். உங்களை தனியா விட்டு போக வேண்டாம்” அவள் பிடிவாதமாக பேசப் பேச, அவன் ஆழமாக மூச்செடுத்தான்.

“பூமி... நீ எங்கேயும் தனியா போகப் போறதில்லை. நீ எங்கே போனாலும் நானும் உன்னோட வருவேன்...” அவன் சொல்ல, வேகமாக மறுப்பாக தலை அசைத்தாள்.

“இல்ல...” அவள் எதையோ சொல்ல வர,

“ஷ்... இந்த பூமி இருக்கறவரை, இந்த ஆகாயமும் இருக்கும்... இந்த ஆகாயம் பூமிக்குத்தான். நீ கேட்ட ஃபீலை உனக்கு முழுசா கொடுப்பேன் பூமி... உன் கூடவே இருப்பேன்... வருவேன்... இந்த ஆகாயம், இந்த பூமிக்குத்தான்...” அவன் மீண்டும், மீண்டும் அதையே அழுத்தமாகச் சொல்ல, அவனையே பார்த்திருந்தாள்.

தொடரும்....
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
88
40
18
Deutschland
இவங்களுக்கும் இவனை பற்றி தெரியும் போல...
இவன் இரண்டு நாளா ஹாஸ்பிடலில் தான் இருந்து இருக்கணும் ..
அவன் அவளின் பேசுவதை பாத்தா அவனுக்கும் சீக்கிரமா முடிவு வரப்போகுது போல.?
முடியல ஆத்தரே..😪
 
  • Like
Reactions: Infaa

Kothai Suresh

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
144
33
28
INDRANAGAR ADYAR
ஆகாயம் பூமி இரண்டும் ஒன்றாகத்தான் என்று சொன்னா அப்போ அவன் முடிவும் நெருங்குதா?இரண்டு நாள் ஹாஸ்பிடலில் இருந்தானா?இருவரின் முடிவும் தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை 🥲🥲🥲🥲🥲
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
Pommiku puriyathu
Vishwa
Ana engaluku puriuthu

பூமிக்கு புரிந்தால் பிரச்சனை ரொம்ப பெருசாயிடுமே.

நன்றி!
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
இவங்களுக்கும் இவனை பற்றி தெரியும் போல...
இவன் இரண்டு நாளா ஹாஸ்பிடலில் தான் இருந்து இருக்கணும் ..
அவன் அவளின் பேசுவதை பாத்தா அவனுக்கும் சீக்கிரமா முடிவு வரப்போகுது போல.?
முடியல ஆத்தரே..😪

சில சூழல்கள் ரொம்பவே சங்கடமானவை தான்.

நன்றி!
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
ஆகாயம் பூமி இரண்டும் ஒன்றாகத்தான் என்று சொன்னா அப்போ அவன் முடிவும் நெருங்குதா?இரண்டு நாள் ஹாஸ்பிடலில் இருந்தானா?இருவரின் முடிவும் தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை 🥲🥲🥲🥲🥲

கொஞ்சம் கடினமான சூழல்தான், எதுவும் செய்ய முடியாது.

நன்றி!