• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் 🌈-11

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில் -11

" டாக்டர்! போஸ்ட் ட்ராமெடிக் ஸ்ட்ரெஸ் டிஸார்டர்ன்னா என்னது! என்னென்னோமோ சொல்றீங்க. எனக்கு பயமா இருக்கு. என் தங்கச்சியை குணப்படுத்த முடியாதா?" என்று சற்று கலக்கத்துடனே வினவினான் முகிலன்.

"போஸ்ட் ட்ராமடிக் ஸ்ட்ரெஸ் டிஸ்ஆர்டரை சுருக்கமா சொல்லணும்னா பி.டி.எஸ்.டின்னு சொல்லுவாங்க. ஏதாவது அதிர்ச்சியான விஷயங்களை வாழ்க்கையில் சந்தித்து, அதிலிருந்து வெளிவராமல் அவங்க இயல்பை தொலைச்சிட்டு இருப்பாங்க. உங்க தங்கச்சியும் அந்த விபத்துல இருந்து இன்னும் வெளிவரலை."

" கிட்டத்தட்ட மூன்று மாசத்துக்கு மேல ஆகிடுச்சு டாக்டர். நார்மலா இருக்கிற மாதிரி தான் தெரியுது."

" அவங்க முன்ன போல நல்லா பேசுறாங்களா?"

" இல்லை டாக்டர்! அவளோட இழப்பு பெரியது. கொஞ்சம் நாள் ஆகும்னு தான் பொறுமையா இருந்தேன்." என்றவனது குரல் குற்ற உணர்ச்சியில் தத்தளித்தது.

" ஒரு ஃபோர் வீக் அப்படி இருந்தால் ஒன்னும் பிரச்சினை இல்லை. அதுக்கு மேல அவங்க அப்படியே இருந்திருக்காங்க. நீங்க கவனிக்காமல் விட்டுட்டீங்க."

" இப்போ என்ன டாக்டர் பண்றது."

" அவங்க இயல்புக்கு மாறா அடிக்கடி கோபப்படுறது, எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதுன்னு இருப்பாங்க. அதுவுமில்லாமல் அந்த விபத்தை அடிக்கடி நினைச்சு பார்த்து, மீண்டும், மீண்டும் அந்த நிகழ்வு நடப்பது போல் உணர்வாங்க. அதிலிருந்து அவங்களை வெளிக் கொண்டு வரணும். சிக்ஸ் டூ டென் செஷன்ஸ் கவுன்சிலிங் கொடுக்குற போல இருக்கும். எங்க ஹாஸ்பிடல்ல இருக்குற சீனியர் சைக்காட்ரிஸ்டையும் கன்சல்ட் பண்ணேன். டேப்ளட் கொடுத்துருக்காங்க. அதை கண்ட்னியூ பண்ண சொல்லுங்க. நல்ல தூக்கம் வரும். தூக்கமே பாதி பிரச்சனையை சரியாக்கிடும். அடுத்த செஷன் டே ஆஃப்டர் டூமாரா." என்றான் அபிமன்யு.

" ஓகே டாக்டர்." என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.

வரும்போது இருந்த படபடப்பு இப்போது இல்லை என்றாலும் சீக்கிரமே தங்கைக்கு குணமாக வேண்டும் என்ற கவலை அவன் முகம் முழுவதும் இருந்தது.

அன்று நேரத்திற்கு வந்திருந்த மானசா முகிலனைத் தேடினாள். அறையில் இல்லாததை கவனித்தவள், உத்ராவிடம் சென்று விசாரிக்க.

அவளோ எந்த பதிலும் கூறாமல் பேந்த, பேந்த விழித்தாள்.

' ஓ காட்! அண்ணி ரொம்ப அப்நார்மலா இருக்காங்க. நேத்து கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம். முகில் கேட்டப்போதே அண்ணனைப் பத்தி சொல்லியிருக்கலாம். இவங்களுக்கு சீக்கிரம் கவுன்சிலிங் கொடுக்கணும். தாமதமாக, தாமதமாக இவங்களுக்கு தான் கஷ்டம்.' என்று எண்ணியவள், தாயிடம் சென்றாள்.

"அம்மா! முகில் எங்கம்மா போயிருக்காங்க?" என்று வினவினாள்.

"தெரியலை டா. காலையில உத்ராவையும் கூட்டிட்டு போனார். அப்புறம் அவளை விட்டுவிட்டு மறுபடியும் வெளியே போனார். இன்னும் வரலைடா. ஆமாம் மாப்பிள்ளை உன் கிட்ட சொல்லிட்டு போகலையா? உங்களுக்குள்ள ஒன்னும் பிரச்சினை இல்லையே." என்று சந்தேகத்துடன் வினவினார் சுபத்ரா.

" அம்மா! முகில் கால் பண்ணும் போது ஃபேக்டரில நான் பிஸியா இருந்தேன். இப்போ கால் அவருக்கு போகல. சரி நான் ப்ரெஷ்ஷாகிட்டு வரேன்." என்ற மானசா, அறையிலே அவனுக்காக காத்திருந்தாள்.

ரொம்ப நேரம் காத்திருக்க வைக்காமல் சற்று நேரத்திலே வந்து விட்டான்.
ஆனால் முகம் முழுவதும் கவலையை சுமந்துக் கொண்டு வந்தான்.

அவனைப் பார்த்ததும் இரக்கம் சுரந்தது அவளுக்கு. எதுவும் பேசாமல் கீழே சென்றவள் இருவருக்கும் சூடாக டீ எடுத்துக் கொண்டு வந்தாள்.

" முகில்!" என்று அழைக்க.

நிமிர்ந்து பார்த்தவன், அவள் நீட்டிய டீயை வாங்கி அருந்தினான்.

" நாளைக்கு அண்ணன்ட்ட அப்பாயின்மென்ட் வாங்கிருக்கேன்." என்று மெதுவான குரலில் கூறினாள்.

"இல்லை. வேண்டாம்." என்றான் முகிலன்.

" சாரி வொர்க் டென்ஷன்ல கோவமா போயிட்டேன். அண்ணி இப்படியே இருந்தா அவங்க ஹெல்த் க்ரிட்டிகல் ஆகிடும்." என்று இறங்கி வந்தாள் மானசா.

' ம்கூம்! ரொம்ப தான் அக்கறை.' என்று மனசுக்குள் நொடித்துக் கொண்டே, " நான் எனக்கு தெரிஞ்ச சைக்காலஜிஸ்ட்ட காண்பிச்சிட்டேன்." என்றான்.

" ஓ!" என்றவளுக்கு இப்பொழுது ஏமாற்றமாக இருந்தது.

" நான் அண்ணா கிட்ட அஃப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டேன். அவர் கிட்ட அஃப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கிறது அவ்வளவு ஈஸி கிடையாது. அவர் ரொம்ப நல்லா பார்ப்பாரு."

" ஓஹோ ! என் தங்கச்சிக்காக ரொம்ப கஷ்டப்பட வேண்டாம்." என்று பட்டென்று கூறினான் முகிலன்.

"அப்படி சொல்ல வரலை முகில். ஹீ ஈஸ் டேலண்டட் பர்ஸன்."

" மானசா! நான் தான் ஆல்ரெடி கவுன்சிலிங் போயாச்சுன்னு சொல்றேன். அப்புறம் வேற எந்த பேச்சும் தேவையில்லை. வீக்லி த்ரீ செஷன்ஸ் போகணும். ஆனால் யெர்லி மார்னிங் போயிட்டு, கரெக்ட் டைம்முக்கு வேலைக்கு வந்திடுவேன். கவலைப்பட வேண்டாம்." என்றவன் அறையிலிருந்து வெளியேற.

' நான் சொல்ல வர்றதை புரிச்சுக்க மாட்டேங்குறீங்களே முகில்!' என்று எண்ணியவளோ பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
***************************
வாரத்திற்கு மூன்று நாட்கள் அண்ணனும், தங்கையும் வெளியே சென்றனர்.

மானுவும் அவர்களை கண்டுகொள்ளவில்லை‌. எங்கே போகிறார்கள் என்று கேட்ட அன்னையிடம் மட்டும் அவளுக்கு உள்ள பாதிப்பை பற்றி கூறினாள்.

" என்ன மானு சொல்ற? ஏன் என் கிட்ட சொல்லலை. நம்ம அபி கிட்ட காண்பிக்கறாங்களா?" என்று வினவ

"இல்லை மா, முகில் அவருக்கு தெரிஞ்சவங்க யார் கிட்டயோ காண்ப்பிக்கிறார்." என்ற மானசாவின் பதிலில் அவரது முகம் கூம்பியது.

"இதுக்கு ஏன் மா இவ்வளவு கவலைப்படுங்கிறீங்க. விட்டுத் தள்ளுங்க." என்று அன்னையை சமாதானம் படுத்தினாள் மானசா.

" அவ எப்படி விடுவா? அவளோட சீமந்தபுத்ரன் இந்த உலகத்துலேயே பெரிய அறிவாளியாச்சே. அவனை விட்டுக்கொடுத்துடுவாளா? அவன் கிட்ட போய் நிக்க ஏதாவது ஒரு காரணம் வேணும் உன் அம்மாவுக்கு." என்றபடியே அங்கு வந்தார் பர்வதம்‌.

இவ்வளவு நேரம் சுபத்ராவின் முகத்தில் இருந்த கவலை மறைந்து, இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது.

" ம் அதானே! நான் வந்துட்டேன்ல இனி வாயே திறக்காதே. நீ தான் மகன்னு உயிரை விடுற. அவனுக்கு அம்மான்னு பாசம் இருக்கா? இல்லை இங்கே வயசானவ ஒருத்தி தனியா கிடந்து அல்லாடுறாளேன்னு தோணுதா?" என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

" எப்படி வருவான்? அவன் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமா?" என்று சுபத்ரா வழக்கத்திற்கு மாறாக முணுமுணுத்தவாறே அவருக்கு தட்டு வைத்து பரிமாறினார்.

" அப்படி என்ன அவனை பண்ணேன்? தம்பின்னு கொஞ்சம் பொறுத்து போடான்னு சொன்னது தப்பாமாம்?" என்றவர் உணவில் கவனத்தை செலுத்த.

அங்கு வந்து அமர்ந்தாள் உத்ரா.

" வாடா உதி! சாப்பிடுமா." என்ற சுபத்ரா, பர்வதத்தின் பேச்சுக்கு பதிலளிக்காமல் மருமகளை கவனித்தார்.

" ம்! கொடுத்து வச்ச மகராசி புருஷன் போனாலும், தாங்கற மாமியார். இல்லேன்னா இப்படி பைத்தியத்தை தாங்குவாங்களா?" என்றார் பர்வதம்.

" அத்தை!"

" பாட்டி!" என்று ஓரே நேரத்தில் சுபத்ராவும், மானசாவும் கத்த.

" எதுக்கு இப்போ இரண்டு பேரும் கத்துறீங்க? நீங்க ரெண்டு பேரும் பேசுனது எல்லாம் என் காதுல விழுந்துச்சு. இந்த வீட்டுக்கு நான் தான் பெரியமனுஷி. என் கிட்ட எதாவது சொல்றீங்க. என் பேரன் இருந்திருந்தா என் கிட்ட எதையும் மறைக்க மாட்டான். இவ ராசி தான் அவன் போய் சேர்ந்துட்டான். நம்ம தொழிலும் போயிடும் போல இருக்கு. மானு தான் சின்ன புள்ளை. அவளுக்கு என்ன தெரியும்? ரித்விக் இருந்தா அவனே எல்லாத்தையும் பார்த்திருப்பான். அவன் இல்லாத இடத்தில் நீ போய் பிஸ்னஸை கவனிக்க வேண்டாமா? வெளிநாட்டுக்கு டீத்தூள் அனுப்புறதெல்லாம் நேரத்துக்கு அனுப்பவில்லை என்றால் நமக்கு தானே பிரச்சனை வரும். நஷ்டஈடு எல்லாம் கேட்பாங்க. எனக்கென வந்தது? நான் உயிரோடு இருக்க போறதே கொஞ்ச நாள் தான், எனக்கு வயசாயிடுச்சு. போகும்போது நான் எல்லாத்தையும் எடுத்துட்டு போகப்போறேனா. எல்லாம் உங்க நல்லதுக்காக தானே சொல்றேன்." என்று புலம்பிக் கொண்டிருந்தார் ‌.

"அதெல்லாம் நான் போகலைன்னாலும் ஃபோன்ல மேனேஜர் கிட்ட விசாரிச்சுட்டு தான் இருக்கேன். அதுவுமில்லாம மாப்பிள்ளையும் பார்த்துக்கிறார்." என்று சுபத்ரா இயந்திரத்தனமான குரலில் கூறினார்.

அந்த நேரத்தில் வந்த முகிலனின் முகம் எல்லாவற்றையும் கேட்டு விட்டேன் என்பது போல் இறுக்கமாக இருந்தது.

" உதி! சாப்டுட்டா எழுந்து கை கழுவு." என்று அதட்டினான் முகிலன்.

அண்ணன் அதட்டவும் பாதியிலே எழுந்து கை கழுவினாள் உத்ரா.

" ஐயோ! மாப்பிள்ளை! இன்னும் உத்ரா சாப்பிட்டு முடிக்கலை." என்று பதறினார் சுபத்ரா.

" இல்லை இருக்கட்டும்." என்றவன் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

முகிலனை சாப்பிட சொல்ல மானசாவிற்கு தைரியமில்லை. கணவன் சாப்பிடாமல் இருக்க, அவளாலும் சாப்பிட இயலவில்லை. சுபத்ராவும் அங்கிருந்து சென்று விட்டார். பர்வதம் மட்டும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்டு விட்டு சென்றார்.
**************************

ரோஸ் கார்டனுக்கு சென்று அபிமன்யுவை பார்த்ததும், " சார்! உத்ராவை விட்டுட்டு போறேன். உங்க செஷன் முடிய ஒன் ஹவர் ஆகும் தானே. அதுக்குள்ள ஃபேக்டரிக்கு போயிட்டு வந்திடுறேன்." என்று தயங்கித் தயங்கிக் கூறினான் முகிலன்.

" உங்களுக்கு வேலை இருந்தா கிளம்புங்க முகிலன். நான் பார்த்துக்கிறேன்." என்றான் அபிமன்யு.

" தேங்க்ஸ் ஸார். சீக்கிரம் வந்துடுவேன். சப்ஃபோஸ், உங்க வேலை முடிஞ்சிருச்சுன்னா எனக்கு கால் பண்றீங்களா? நான் உடனே வந்துடுறேன். பட் உத்ராவை தனியா விட்டுட்டு போகாதீங்க."

"முகிலன்! அப்படியெல்லாம் உங்க தங்கையை நான் தனியாக விடுவதாக இல்லை. நான் பத்திரமாக பார்த்துக்கிறேன். நீங்க போயிட்டு வாங்க." என்று அழுத்தமாக அவனைப் பார்த்துக் கொண்டே பேசினான் அபிமன்யு.

அபிமன்யுவின் பார்வைக்கான அர்த்தத்தை முகிலன் உணரவேயில்லை
அவனுக்கிருந்த அவசரத்தில் அதை கவனிக்கவில்லை. ஆம் இன்று வெளிநாட்டிற்கு ஒரு ஏற்றுமதி ஆர்டர் அனுப்ப வேண்டும் . அதற்கு அவன் அங்கிருந்தால் தான் சரியாக வரும். காலையில் மானசாவிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று இருக்கும் போது தான் பர்வதம் பேசிய அனைத்தையும் ஆதி முதல் அந்தம் வரை கேட்டிருந்தான். தங்கையைப் பற்றி பேசியதும், அத்தையும், மனைவியும் எதிர்ப்பு தெரிவித்தது சற்று ஆறுதலாக இருந்தது.

முதலில் தொழிலைப் பார்ப்போம். பிறகு உத்ராவை பற்றி யோசிக்க வேண்டும் என்று எண்ணியபடியே வேலையை கவனிக்க சென்றான்.
*******************
"ஹாய்! உத்ரா. எப்படி இருக்கீங்க?" என்று மென்மையாக வினவினான் அபிமன்யு.

" நல்லா இருக்கேன்." என்றாள்.

" ஓகே ! அப்புறம் வீட்டில் எப்படி பொழுது போகுது? டீவி பார்ப்பிங்களா? இல்லை வீட்ல உள்ளவங்களோட பேசிட்டு இருப்பீங்களா?" என்று முதலில் பொதுவாக வினவியவன், அவள் கூட்டை விட்டு வெளியே வந்து பேச ஆரம்பித்ததும், ரித்விக்கைப் பற்றிய கேள்விகளை கேட்டான்.

அவளும் கொஞ்சம், கொஞ்சமாக மனசு விட்டு பேச ஆரம்பித்திருந்தாள்.
அவளிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. ஒரு மணிநேரம் கடந்ததே தெரியவில்லை.

முகிலன் இன்னும் வரவில்லை. அபிமன்யுவிற்கு நேரமாகிவிட்டது. பதினொரு மணியிலிருந்து அவன் வொர்க் பண்ணும் ஹாஸ்பிடலில் அவுட் பேஷண்ட் வர ஆரம்பித்து விடுவார்கள். சற்று பொறுத்தவன், முகிலனிற்கு அழைத்தான்.

இவன் அழைத்ததும் பதறி எடுத்த முகிலனோ, " அபி சார்! ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுறீங்களா? இதோ வந்துடுறேன்." என்று தவிப்புடன் கூற.

" முகிலன்! ஈஃப் யூ டோண்ட் மைண்ட். நான் வேணும்னா உத்ராவை அழைத்து வரவா?"

" ரொம்ப நன்றி ஸார். உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னா அழைச்சிட்டு வாங்க." என்று தயக்கமாக கூறினான் முகிலன்.

" எங்க வரணும் முகிலன்? எஸ்டேட்ல தானே இருப்பீங்க."

" எஸ்டேட்டிற்கு எல்லாம் வேண்டாம் ஸார். டீ ஃபேக்டரிக்கு அழைச்சிட்டு வர முடியுமா? உங்களை ரொம்ப தொந்தரவு பண்றேனா?" என்றான் முகிலன்.

" எனக்கு தொந்தரவா இருந்தா கேட்டுருக்கவே மாட்டேன் முகிலன். எனக்கு தொந்தரவா இருக்கிறதுன்னா என்னை நீங்க ஸார்னு கூப்பிடுறது தான். நாம ரெண்டு பேரும் ஒரே ஏஜ்ஜாக தான் இருப்போம். சும்மா பேர் சொல்லியே கூப்பிடலாம்." என்றுக் கூறி லேசாக நகைத்தான்.

" ட்ரை பண்றேன் சார்."

" என்னது மறுபடியும் சாரா? சரி நேர்ல வந்து பேசிக்கிறேன்." என்ற அபிமன்யு, உத்ராவை அழைத்துக் கொண்டு ஃபேக்டரிக்கு சென்றான்.

முகிலனிடம் கிண்டல், கேலி செய்தாலும் அபிமன்யுவிற்குள், ' ஏன் எஸ்டேட்டிற்கு வரட்டுமா என்று கேட்டவுடனே பதறினான்.' என்ற கேள்வி எழுந்தது. அதைப் பெரிது படுத்தாமல் காரை ஓட்டிச் சென்றான்.

அந்த கேள்விக்கான விடையை அறிந்து இருந்தால் வருங்காலத்தில் உத்ராவிற்கு வரும் துன்பத்திலிருந்து அவளை காப்பாற்றியிருக்கலாம்.

அவனுக்கு ஏற்பட்ட கேள்வியை உதறி தள்ளியவன் உத்ராவிடம் பேசிக்கொண்டே ஃபேக்டரிக்கு அழைத்துச் சென்றான்.

வெளியவே காத்திருந்த முகிலனின் முகம் வாடியே இருந்தது.

" முகிலன் என்னாச்சு? நீங்க ஏன் இவ்ளோ டல்லா இருக்கீங்க?" என்று வினவினான்.

"அது வந்து…" என்றவனது கண்கள் கலங்கியது.

" சியர் அப் முகிலன்! உத்ரா கிட்ட இப்போ எவ்வளவோ முன்னேற்றம் தெரியுது. அப்புறம் என்ன?"

"எங்க வீட்ல உத்ராவை ஹர்ட் பண்றாங்க. அதான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு."

' நான் மானசாவோட அண்ணன் என்றது இவருக்கு தெரியாதா? இல்லையே ரிசப்ஷன்ல் கூட மானு என்னை அறிமுகப்படுத்துனாளே! ஒரு வேளை முகிலன் கவனிக்கவில்லை போல. மானு அன்னைக்கு அப்பாயின்மென்ட் கேட்டுட்டு, கேன்சல் பண்ணும் போதே நினைத்தேன். அப்போ முகிலன் என்கிட்ட உத்ராவை கூட்டிட்டு வந்ததும் வீட்டுக்கு தெரியாது.' என்று எண்ணி பெருமூச்சு விட்டுக் கொண்டவன், அதை வெளிக்காட்டாமல், "சொல்லுங்க முகிலன்? வீட்ல என்ன பிராப்ளம்?"

" அது வந்து வீட்ல உத்ராவுக்கு யாரும் கோ ஆபரேட் பண்ண மாட்டேங்குறாங்க. ஆனா எந்நேரமும் என்னால வீட்டில் இருக்க முடியலை. வேலைக்கு போயிடுறேன். எங்க அத்தை நல்லா தான் பாத்துக்கிறாங்க. பட் அவங்க மாமியார் வார்த்தைகளால் இவளை ஹர்ட் பண்றாங்க. அது அவளுக்கு புரியக் கூட மாட்டேங்குது. ஃபிராங்க்கா சொல்றதுன்னா பைத்தியம்னு சொல்றாங்க. என்னால அதை தாங்க முடியலை அபி."

" இந்த மாதிரி பேசுனா, நிச்சயம் உத்ராவோட மனசை பாதிக்கும். அதுக்காக நீங்க அவங்களை புரொடக்ட் பண்ணிட்டு இருக்கிறதும் சரி கிடையாது. தினமும் யோகா செய்ய சொல்லுங்க. மைண்ட்டை யோசிக்க விடாமல் ஏதாவது வேலை செய்துட்டே இருக்க சொல்லுங்க. ஏன் உங்க கூட வேலைக்கு அழைச்சிட்டு வரலாம்."

"இந்த ஐடியா நல்லா தான் இருக்கு. ஆனால் இங்கே அழைச்சிட்டு வர்றது சரியா இருக்காதுன்னு தோணுது. பாருங்க இப்பக் கூட நாம வெளியே பேசிக்கிட்டு இருக்கிறதை எப்படி பார்த்துட்டு போறாங்க." என்ற முகிலன் நெற்றியை நீவிக் கொண்டான்.

" முகிலன்! உங்க தங்கச்சி என்ன படிச்சிருக்காங்க?" என்று பதில் தெரிந்துக் கொண்டே வினவினான் அபிமன்யு.

"ஹோட்டல் மேனேஜ்மென்ட்." என்ற பதிலில்,

"ஓ… சூப்பர்! அப்போ என்னோட ரிசார்ட் ஒன்னு இருக்கு. அங்க வேலைக்கு அனுப்புறிங்களா? அங்கே உள்ளவங்க எல்லோரும் நம்பிக்கையானவங்க. என்ன சொல்றீங்க முகிலன்?"

"தேங்க்ஸ் அபி. உங்க எல்லா உதவிக்கும் என்ன கைமாறு செய்ய போறேன்னு தெரியலை." என்று ஆத்மார்த்தமாக கூறினான் முகிலன்.

" உத்ரா மேடம்! இனி நீங்க தான் சொல்லணும். என்னோட தொழிற்சாம்ராஜ்ஜியத்தில் தாங்கள் வந்து கோலோச்சணும்." என்று நாடக பாணியில் அபிமன்யு வினவியவாறே கை நீட்டினான்.

உத்ராவின் முகத்திலோ புன்னகை வந்து குடிக்கொண்டது. அந்த மலர்ச்சியுடனே அவனது கையை பற்ற.

" ஆல் த பெஸ்ட்." என்றான் அபிமன்யு.

இனி நடப்பதெல்லாம்
நல்லதாக நடக்கட்டும் என்று எண்ணி தான் கூறினான். ஆனால் இவர்கள் மூவரும் பேசியதைப் பார்த்தவரோ, அவர்கள் வீட்டில் குழப்பத்தை உண்டு பண்ணினார்.