• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் 🌈-12

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில் -12

இரவு முழுவதும் தூங்காமல் இருந்த சுபத்ரா காலையிலே குளித்து வெளியே செல்வதற்கு ஏதுவாக கிளம்பியிருந்தாள்.

மானசா எழுந்து வரவும்," மானு! நான் கோவிலுக்கு போறேன். பாட்டி கேட்டா சொல்லிடு." என்றவர் டிரைவருடன் கிளம்பி சென்றார்.

சுபத்ரா கருவறையில் வீற்றிருக்கும் இறைவனை காணச் செல்லவில்லை‌. அவள் கருவறையில் சுமந்த மகனை தான் காணச் சென்றாள். ஆம் அவருக்கு அபிமன்யுவிடம் சில விஷயங்கள் பேச வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் மட்டும் தான் அவனை பிடிக்க முடியும் என்று எண்ணியே கோவிலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு அவனது ரிசார்டிற்கு சென்றார்.

உத்ராவை சந்திப்பதற்காக கிளம்பிய அபிமன்யு, கண்ணாடி முன்பு நின்று ஒருமுறை தலையை கையால் கலைத்து விட்டுக் கொண்டவன், கார்சாவியை எடுத்துக் கொண்டு ஒரு பாடலை ஹம்மிங் செய்துக் கொண்டே வெளியே வந்தான்.

அங்கு ஹாலில் அமர்ந்திருந்த சுப்த்ராவை பார்த்ததும் சற்று அதிர்ந்தான். இங்கே அவரை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அவர்களது ரிசார்ட் தான். அதில் ஒன்றில் தான் அபிமன்யு தங்கியிருக்கிறான்.

" என்னாச்சு? இந்த நேரத்துல?"என்று சற்று பதட்டத்துடனே வினவினான்.

" உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அபி. இந்த நேரம் வந்தால் தானே உன்னைப் பார்க்க முடியும். ஏன் முக்கியமானவங்களை பார்க்க போறியா? எங்க போற?" என்று இயல்புக்கு மாறாக வினவினார் சுபத்ரா.

அவரை அழுத்தமாக பார்த்தவன்,"உங்களுக்கு என்ன தெரியணும். அதை மட்டும் கேளுங்க. முதல்ல உள்ள வாங்க." என்று அறைக்குள் அழைத்துச் சென்றவன், உட்கார சொல்லி விட்டு, ஃபோனை எடுத்து முகிலனுக்கு அழைத்துக் கொண்டே இன்னொரு அறைக்குள் நுழைந்தான்.

" ஹலோ முகிலன்! நான் அபி பேசுறேன். இன்னைக்கு என்னால வர முடியலை."

"இட்ஸ் ஓகே அபி." என்ற முகிலனின் குரலில் ஏமாற்றம் வழிந்தது.

"சாரி முகிலன்! திடீர்னு ஒரு மீட்டிங். தவிர்க்க முடியலை. நீங்க எதுவும் நினைக்கலைன்னா லஞ்ச்சுக்கு என்னோட ரிசார்ட்டுக்கு வாங்க. கவுன்சிலிங் முடிச்சிட்டு, அப்படியே அதை சுத்திப் பார்க்கலாம். உத்ராவுக்கு பிடிச்சதுன்னா நாளைக்கே கூட ஜாயின் பண்ணிக்கலாம். தென் இங்கேயே கவுன்சிலிங்கும் பண்ணலாம்." என்று சொல்ல.

முகிலனோ, " ரொம்ப தேங்க்ஸ் அபி. நன்றியைத் தவிர வேறு என்ன சொல்ல என்றுத் தெரியல." என்றான்.

"இட்ஸ் ஓகே முகிலன். நேர்ல பார்க்கலாம். பை."என்றவன் ஃபோனை வைத்தான்.

தாயின் பேச்சு அவனுக்கு சற்று அதிருப்தியை உண்டாக்கியது. அதை தாயிடம் காட்டாமல் தனக்குள் அடக்கிக் கொண்டு வெளியே வந்தான்.
ஆனால் சுபத்ரா அவனை அமைதியாக இருக்க விடவில்லை.

" எங்க கிளம்பிட்டிருந்த அபி? உத்தராவை பார்க்க தானே ?" என்று வினவினார்.

" இல்லை! என் பேஷண்டை தான் பார்க்கப் போறேன்."

" அது உத்ரா தானே. எனக்குத் தெரியும். பேஷண்ட்னா ஹாஸ்பிடல்ல பார்க்கணும்." என்றார் சுபத்ரா.

" ப்ச்! அவங்களுக்கு ஹாஸ்பிடல் வர இஷ்டமில்லை."

" அப்போ நம்ம வீட்டுல வந்துப் பார்க்கலாம் தானே. எதுக்கு பப்ளிக் ப்ளேஸ்ல பார்க்குற அபி?"

"ப்ச்! நான் எங்க பார்க்கணும்? எப்படி நடந்துக்கணும்னு எல்லாம் எனக்குத் தெரியும். என்னோட ப்ரொபஷன்ல மட்டுமில்ல, என்னுடைய எந்த விஷயத்திலும் உங்க யாருடைய குறுக்கிடும் இருக்கக் கூடாதுன்னு தான் தனியா வந்திருக்கேன். அப்புறமும் ஏன் வந்து இப்படி டென்ஷன் படுத்திறீங்க."

"அது வந்து அபி, பார்க்ல உத்ரா கிட்ட நீ தனியா பேசுறதைப் பார்த்து எல்லோரும் தப்புத் தப்பா பேசுறாங்க பா." என்று மகனுக்கு புரிய வைத்திடும் நோக்கில் பேசினார் சுபத்ரா.

" அது என்னோட பிரச்சனையில்லை. உத்ராவை பத்தி யாரும் எதுவும் சொல்லக் கூடாதுன்னா, நீங்க அவங்க கிட்ட தான் சொல்லணும். இல்லைன்னா அவங்க அண்ணன் கிட்ட சொல்லுங்க. என் கிட்ட பேச வேண்டாம்." என்று ஏளனமாக கூறினான்.

" மாப்பிள்ளை கிட்ட எப்படி பேசுறது அபி? அவரு மனசு சங்கடப்படும்."

" ஓஹோ! அவர் மனசு சங்கடப்படக் கூடாது. ஆனால் என்னைப் பத்தி மட்டும் நினைக்க மாட்டீங்க. அப்புறம் பேசுறவங்க, என்ன செய்தாலும் பேசிட்டு தான் இருப்பாங்க. அடுத்தவங்களைப் பத்தி யோசிட்டு இருந்தா, நாம் வாழவே முடியாது. உங்களுக்கு எப்படியோ, நான் யாரை பத்தியும் நினைக்க மாட்டேன். அப்புறம் மறுபடியும் சொல்றேன், என்னோட வேலை விஷயத்தில் தலையிட்டால் எனக்கு பிடிக்காது. இனி இந்த மாதிரி சில்லி விஷயத்துக்காகவெல்லாம் என்னைப் பார்க்க வராதீங்க." என்றவனது குரலில் அவனையும் மீறி ஏமாற்றம் வழிந்தது. '.அன்னையை பார்த்ததும், முதலில் பயந்தாலும் பிறகு தன்னை அந்த வீட்டிற்கு அழைக்கத் தான் வந்திருக்காரோ.' என்று எண்ணியிருந்தான்.

அவனது முகம் மாற்றத்தை எல்லாம் கண்டுக் கொள்ளாத சுபத்ராவோ, "அது வேலை விஷயம்னா, நீ ஹாஸ்பிடல்லோடவே முடிச்சிருப்ப. பார்க் வரைக்கும் வந்திருக்க மாட்ட. இல்லை பார்க்ல உன்னோட வேலை முடிஞ்சதும் கிளம்பியிருப்ப. உத்ராவை நம்ம ஃபேக்டரி வரைக்கும் அழைச்சிட்டு வந்து, சிரிச்சு பேசிட்டு இருக்க மாட்ட. நீ என் கூட இல்லைன்னாலும் எனக்கு உன்னை பத்தி தெரியும்."

" ஓஹோ! என்னைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு? ஒன்னும் தெரியாது. கண்டவன் சொல்றதை வச்சு பெத்த பையனை சந்தேகப்பட்டவங்க தானே நீங்க? இப்போ மட்டும் என்ன மாறிடப் போகுது. உங்க கிட்ட வேலைப் பார்க்குறவங்க சொல்றதைக் கேட்டுட்டு வந்து என்னை விசாரிச்சுட்டு இருக்கீங்க."

"ரித்விக் கண்டவன் கிடையாது டா. உன் தம்பி. அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது. அவன் இப்போ உயிரோடவே இல்லை. இன்னும் ஏன் அவன் மேல இவ்வளவு கோபம்?" என்றவர் கண் கலங்க.

" ப்ச்! அவனைப் பத்தி எதுவும் பேசக்கூடாதுன்னு தான் நினைக்கிறேன். விட மாட்டேங்குறீங்களே."

" சரிப்பா! அதை விடு. இப்போ உன் மாமி தான் சொன்னா. அவ தம்பி பார்த்துட்டு சொன்னாராம். அது விஷயமில்லை. நீ உத்ரா கிட்ட இருந்து விலகி இருக்கிறது தான் நல்லது."

" யாருக்கு நல்லது?" என்று அழுத்தமாகப் பார்த்துக் கொண்டே வினவினான் அபிமன்யு.

" அது வந்து எல்லாருக்கும் தான். உத்ரா உன் தம்பி மனைவி. "

"அவன் தான் இப்போ உயிரோட இல்லையே!"

" இருந்தாலும் உத்ரா, ரித்விக்கோட மனைவி தான்."

" ஓஹோ! அதுக்காக காலம் முழுவதும் அவளை இப்படியே விட்டு வைப்பீங்களாமா? இன்னொரு கல்யாணம் எல்லாம் பண்ண மாட்டீங்களா? அவளோட வாழ்க்கை ரித்விக்கோட வாழ்ந்த அந்த இரண்டு, மூணு நாளையோட முடிஞ்சிருச்சா?"

"அது… கொஞ்ச நாளாகவும் நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணனும்."

" யாருக்கு வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கொடுப்பீங்க. ஆனால் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க கூடாது. அது தானே அம்மா."

" தம்பி மனைவியை பண்ணிக்கிட்டா நல்லா இருக்காது பா."

"தம்பி மனைவியை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படலை. அதுக்கு முன்னாலே நான் உத்தரவை கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்னு உன் மாப்பிள்ளை கிட்ட போய் நின்னேன். அந்த ரித்விக் இடையில் வந்து எப்பவும் போல தட்டி பறிச்சுட்டான்."

" அப்படி எல்லாம் அவன் கிடையாது. உத்ராவைப் பார்த்ததும் அவனுக்கு பிடிச்சிடுச்சு. அதுவுமில்லாமல் நம்ம மானுவுக்காகவும் யோசிச்சான். அவனைப் போய் தப்பா பேசுறீயே"

" நான் சொல்றதை என்னைக்கு நம்பியிருக்கீங்க .உண்மையிலே நான் உங்க வயித்துல தான் பிறந்தேனா? நான் உங்க புள்ளையான்னு சந்தேகமாவே இருக்கு. உங்களுக்கு புள்ளையா பொறந்ததுக்கு வெட்கப்படுகிறேன். முதல்ல இங்கிருந்து கிளம்புங்க." என்று வார்த்தைகளை விஷமாக கொட்டினான் அபிமன்யு.

" அபி! சின்ன விஷயத்திலையாவது அம்மா பேச்சை கேளுப்பா?" என்றவர் கண் கலங்க.

"எது சின்ன விஷயம் ? என் வாழ்க்கை பிரச்சினை உங்களுக்கு சின்ன விஷயமா? உங்க சின்ன மகன் இல்லைன்னா கூட அவன் விருப்பம் முக்கியம்னு, அந்த பொண்ணை பொத்தி, பொத்தி வச்சுக்கிட்டு இருக்கீங்க. ஆனால் என் விருப்பம் முக்கியம் கிடையாது. என்னைப் பத்தி புரிஞ்சுக்கவே மாட்டீங்க. சின்ன வயசுல இருந்து நான் சொன்ன எதையாவது நம்பியிருக்கீங்களா? தம்பி இதை பண்ண மாட்டான். தம்பி அதை பண்ண மாட்டான். தம்பி பாவம் ! தம்பிக்கு விட்டுக்குடு… தம்பி.. தம்பி.. அந்த வார்த்தையை என்னை வெறுக்க வச்சுட்டீங்க. இன்னும் அதையே பேசி என்னை இரிட்டேட் பண்ணாதீங்க. முதல்ல கிளம்புங்க! அப்புறம் இன்னொரு விஷயம் நான் ஆசைப்பட்டதை இனி யாராலும் தடுக்க முடியாது. இதுவரைக்கும் நான் ஏமாந்தது போதும். இனியும் அப்படி இருக்க மாட்டேன். கூடிய சீக்கிரம் என் கல்யாணத்துக்கு ஆசீர்வாதம் பண்ற மாதிரி இருக்கும். சொல்றேன் வந்து அட்சதையை போட்டுட்டு போங்க. இல்லை அதுக்கும் வரமாட்டீங்களோ என்னவோ, அது உங்க விருப்பம்." என்றவன் பால்கனிக்குள் நுழைந்துக் கொண்டான்.

அடிபட்ட பார்வையுடன் அங்கிருந்து கிளம்பினார் சுபத்ரா. *****************************

முகிலன் கீழே செல்லவும் சாவகாசமாக கிளம்பிச் சென்றாள் மானசா.

ஆனால் மானசா வரும் வரையுமே வெளியே செல்லாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்த முகிலனை யோசனையாக பார்த்துக் கொண்டே அவனருகே வந்து, " சாப்பிடலையா முகில்?" என்று வினவினாள்.

" சாப்டுட்டேன்." என்றதும், " ஓ!" என்றவள் அங்கிருந்து நகர்ந்து டைனிங் ஹாலிற்கு சென்றாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த முகிலனுக்கு அவள் தன்னிடமிருந்து வெகுதூரம் சென்ற உணர்வு ஏற்பட்டது. காதலிக்கும் போது தன்னையே சுற்றி வரும் மானசா அவனது நினைவுக்கு வர, பெருமூச்சு விட்டுக் கொண்டே அவளருகே சென்றான்.

" மானு!" என்றழைத்தான் முகிலன்.

" என்ன வேணும்? காஃபி வேணுமா?" என்றவள் எழுந்திருக்க முயல.

" சாப்பிடு மானு!" என்றான்.

தோளைக் குலுக்கிய மானசாவோ, அவனை கண்டுக்கொள்ளாமல் உணவருந்தினாள்.

"மானு! என் மேல கோபமா?" என்று வினவினான் முகிலன்.

" ச்சே! உங்க மேல என்ன கோபம்? என் மேல தான் எனக்கு கோபம். ஏன் உங்களைப் பார்த்ததுல இருந்து காதலிக்க ஆரம்பிச்சேன். ஏன் முதல்ல காதலை சொன்னேனு என்னையே நொந்துட்டுருக்கேன். நானே வந்து சொன்னதுனால தானே இவ்வளவு அலட்சியமா இருக்கீங்க‌." என்றவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

" மானு! ப்ளீஸ் என்னோட சூழ்நிலையை புரிஞ்சுக்கோ. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உன் அளவுக்கு காதலிக்கலைன்னாலும், நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே கிடையாது. எனக்காக கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. உத்ரா வச்சுக்கிட்டு என்னால வேற எதையும் யோசிக்கவே முடியலை. சீக்கிரமா அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சுக் கொடுத்துட்டு, அதுக்கப்புறம் நமக்கான வாழ்க்கையை வாழலாம் டா." என்று அவளை தனது தோளில் சாய்த்து ஆறுதல் படித்தான்.

" முகில்! உங்களுக்காக எவ்வளவு நாள் வேணாலும் நான் காத்திருப்பேன். ஆனால் இதைப் போல ஆறுதலைத் தான் உங்க கிட்ட எதிர்ப்பார்த்தேன்."

" புரியுதுடா." என்றவன், 'சீக்கிரம் தங்கைக்கு இன்னொரு வாழ்க்கை அமைத்துத் தரணும்.' எண்ணிக் கொண்டிருந்தான்.

வெளியே செல்வதற்காக கிளம்பி வந்திருந்த உத்ரா இவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

***********************************
அபிமன்யுவிடம் பேசி விட்டு வீட்டிற்கு வந்த சுபத்ராவிற்கு, தான் எந்த இடத்தில் தவறு செய்தோம் என்று அவருக்கு புரியவே இல்லை.


உள்ளே நுழைந்ததும் தோட்டத்தில் கண்கள் கலங்க எங்கோ வெறித்துக் கொண்டிருந்த உத்ரா அவர் கண்ணில் பட்டாள்.

அவரது கால்கள் மருமகளை நோக்கி சென்றது.

" ஏன் மா இங்கே தனியா உட்கார்ந்து இருக்க? பாட்டி எதுவும் சொன்னாங்களா?"

"இல்லை!" என்பது போல் தலையாட்டினாள்.

" அப்புறம் ஏன் கண்ணெல்லாம் கலங்கியிருக்கு."என்று வினவினார்.

" நான் உங்கள் எல்லாருக்கும் தொந்தரவாக இருக்கேனா அத்தை."

"அதெல்லாம் இல்லை. யார் அப்படி சொன்னா? எதுவா இருந்தாலும் அத்தை கிட்ட சொல்லுடா‌."

" நான் இங்கிருந்து போனா தான் அண்ணனும், அண்ணியும் சந்தோஷமா இருப்பாங்களா? நான் அவங்களை தொந்தரவு பண்ணாமல் இங்கேயே இருக்கிறேன் அத்தை." என்றவளது கண்ணிலிருந்து கண்ணீர் வழிய.

" உன்னை இங்க இருந்து யாரும் போக சொல்லலைடா. உனக்கு நல்லது பண்ணனும் தான் சொல்லியிருப்பாங்க." என்று அவளது தலையை வருடியவரின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது. ' எப்படி துடிப்பாக இருந்த புள்ளை. இன்னைக்கு இப்படி ஒடுங்கிப் போய் இருக்கு.' என்று எண்ணிப் பார்த்தவரின் மனது துடித்தது.

"சரி வா மா! உள்ள போகலாம்." என்று அழைத்துப் போனவரின் மனதிலோ, ' அபியை கல்யாணம் பண்ணி வச்சா, உத்ராவை நல்லா பார்த்துப்
பான். ஆனால்…' என்று எண்ணியவருக்கோ அடுத்து என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட பயமாக இருந்தது.

 

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
அபி இனியாவது தன் விருப்பத்தை நிறைவேத்துவான உத்ராவுடன் சேர்ந்தால் நல்லது 🤔🤔🤔🤔
ஆமாம் சிஸ் ❤️ நன்றி