• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் 🌈-16

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில் -16

நாட்கள் விரைந்தோட, உத்ரா கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய கூட்டிலிருந்து வெளி வந்திருந்தாள்.

சுபத்ராவுடைய ஆறுதலான பேச்சை கேட்டதும் உத்ராவிற்கு நிம்மதியாக இருந்தது. தன்னை யாரும் பாரமாக எண்ணவில்லை என்று நிம்மதியடைந்தவள், முடிந்த வரைக்கும் அண்ணனுக்கும் அண்ணிக்கும் நடுவில் வராமல் இருந்தாள்.


அவர்கள் வெளியே எங்கேயாவது போகலாம் என்று கூப்பிட்டால் கூட இல்லை அத்தையோட சமைக்கப் போறேன், டிவி பார்க்குறேன் என்று ஏதாவது காரணம் சொன்னாள்.

அவளது மாற்றத்தை கண்ட முகிலனும், நிம்மதியானான்.

வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் சுபத்ராவின் பின்னே சுற்றுவாள். சமையல் அறையில் சமையல் கற்றுக் கொண்டும், பூஜை அறையில் பூ போடுவது என்று ஏதாவது செய்துக் கொண்டே இருந்தாள்.முடிந்தவரை பர்வதத்திடமிருந்து ஒதுங்கி செல்லவே முயன்றாள்.


பர்வதமும் ரித்விக்கின் இழப்பிலிருந்து மீண்டு வந்தவர், ஒரு வட்டத்தை போட்டுக்கொண்டு அதற்குள்ளே சுற்றிக் கொண்டிருந்தார். என்றாவது உத்ராவைப் பார்த்தால் மட்டும் ரித்விக்கை பற்றி புலம்புவார்.

உத்ரா வேலைக்கு செல்வதால் பெரும்பாலான நேரம் பர்வதத்தை சந்திக்கும் அவசியமில்லாமலிருந்தது.

வேலையும் அவளுக்கு பிடித்த வேலை என்பதால், மனது இன்னும் இலகுவானது.

அபிமன்யுவும் உத்ராவிடம் பேசி, பேசி அவளது மனதை மாற்றிக் கொண்டிருந்தான். எப்படியாவது அவள் மனதில் இடம் பெற்றிட வேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க, உத்ராவின் மனதிலோ இன்னொரு திருமணம் செய்யும் எண்ணமே இல்லை. அவளுக்கு வேலைக்கு வருவது பிடித்திருந்தது. அதை விட அபிமன்யுடன் பேசுவது பிடித்திருந்தது. காலையில் ஒரு அரை மணி நேரமும், மாலையில் ஒரு அரை மணி நேரமும் அவளுக்காக ஒதுக்குவான். அந்த நேரத்தில் எல்லா விஷயத்தையும் பேசிக் கொள்வார்கள்.

உத்ரா நாளுக்கு நாள் உற்சாகமாக இருக்க, முகிலனோ நாளுக்கு நாள் முகம் வாடி, களையிழந்து காணப்பட்டான்.


தன் தங்கைக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணியவன், தன் ஒரே உறவான மாமனிடம் சென்று நிற்க, அவரோ முதல்ல கல்யாணம் பண்ணும் போது எங்கக் கிட்ட கேட்டியா? பணக்கார சம்மந்தம்னு முடிச்ச. இப்ப மட்டும் நாங்க வேணுமா என்று சொல்லி காண்பித்து விட்டு‍, மாப்பிள்ளை பார்க்க அரை குறையாக சம்மதித்தனர்.

" சரி வரேன் மாமா!" என்ற முகிலன், ' அன்னைக்கு வந்திருந்தாலும், என் தங்கச்சியை உங்க பையனுக்கு கட்டியா வச்சிருப்பீங்க. உறவுக்கா மரியாதை ? காசு பணத்துக்கு தான் உங்க கிட்ட மதிப்பு அதிகம். அது தெரிஞ்சு தான் உங்க கிட்ட வரலை. ஆனால் இப்போ அந்த கடவுள் உங்க கிட்ட வர வைச்சுட்டாரே.' என்று எண்ணிக் கொண்டே வெளியே வந்தவன், ஃபோனை தேட. அதுவோ இல்லை.
மாமாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கீழே வைத்த நினைவு வர, மீண்டும் வீட்டிற்குள் சென்றான்.

" ராசி இல்லாதவளை நம்ம தலையில கட்டப் பார்க்குறான்." என்று மனைவி, மற்றும் மகனிடம் கூறிக் கொண்டிருந்த மாமனை, வெறித்துப் பார்த்த முகிலனுக்கு மனது விட்டுப் போயிட்டது.

அவர்களை ஒரு பார்வை பார்த்தவன், எதுவும் பேசாமல் அவனது செல்ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டான். ' ச்சே! கூடப்பிறந்த தங்கை மகள்னு கூட பார்க்காமல், நா கூசாமல் பேசுறாங்களே.' என்று எண்ணி குமைந்துக் கொண்டே இருந்தான். திருப்பூரில் இருந்து ஊட்டிக்கு போய் சேரும் வரை அவர்களைப் பற்றிய எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.

'இவர்கள் குணம் தெரிந்தும், இவர்களிடம் போய் நிற்க வேண்டிய தங்கையின் நிலையை எண்ணி மிகவும் வருந்தினான். இல்லைன்னா, தங்கச்சியும், மச்சானும் இறந்த போது முன்ன வந்து நின்னாங்களா? படிக்குற புள்ளைங்களை கூட்டிட்டு போனா செலவு வந்துடும்னு நழுவத்தானே பார்த்தாங்க.

ஏதோ சின்ன பிள்ளையா இருந்தாலும் தைரியமா இருந்த உத்ரா தானே அவங்களுக்குன்னு இருந்த எஸ்டேட்டை வித்து பேங்ல பணம் போட்டு, அதுல வர்ற இன்ட்ரஸ்ட்ல படிப்புக்கு ஆகுற செலவை பார்த்துக்கலாம்னு யோசனை சொன்னா. ஆனால் அன்னைக்கு அவ்வளவு தைரியமா இருந்தவ இன்னைக்கு நிலைக்குலைந்து நிற்குறா. சீக்கிரம் அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கணும்.' என்று தனக்குள் உறுதியெடுத்தவன், தரகரிடம்
சென்றான்.

ஆனால் தரகர் கொண்டு வந்த வரன் எல்லாம் வயதானவர்களோ, இல்லை இரண்டு, மூன்று குழந்தைக்கு தந்தையாக இருப்பவர்களாகவோ இருந்தனர். அதையெல்லாம் பார்த்த முகிலன் ஓய்ந்து போனோன். முகத்தில் காட்டாமல் இருக்க முயன்றான். ஆனால் பார்ப்பவர்கள் எல்லோரும் கேட்கும் அளவுக்கு இருந்தான்.



தங்கையை அழைத்துச் செல்வதற்காக ரிசார்ட்டிற்கு செல்ல. நீண்ட நாட்களுக்கு பிறகு அபிமன்யுவை பார்த்தான்.

" ஹாய் முகிலன்! பார்த்து எவ்வளவு நாளாச்சு?" என்று புன்னகையுடன் வினவினான் அபிமன்யு.

" நான் தினமும் வந்துட்டு தான் இருக்கேன். உங்களை தான் பார்க்க முடியலை அபி."

" கொஞ்சம் பிஸி. இன்னைக்கு தான் கொஞ்சம் ஓய்வு கிடைத்தது."

" ஓ! உதி எங்க? இன்னும் வேலை முடியலையா?" என்று தங்கையை கண்களால் தேடிக் கொண்டே வினவினான் முகிலன்.

" இன்னைக்கு தான் நான் ஃப்ரீ என்று சொன்னேனே

இரண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். இப்பதான் வேலை பார்க்க போயிருக்காங்க. மேடம் முடிச்சிட்டு தான் எப்படியும் வருவாங்க."என்ற அபியின் பேச்சைக் கேட்டவனின் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.

" காஃபி ஆர் டீ ? எது குடிக்குறீங்க முகிலன். ரொம்ப டல்லா தெரியுறீங்க! எஸ்டேட்ல எதுவும் ப்ராப்ளமா?"'


" அதெல்லாம் இல்ல அபி. உத்ராவை நினைத்து தான்…" என்று முடிக்காமல் நிறுத்தினான் முகிலன்.

" உத்ராவுக்கு என்ன? நல்லா தானே இருக்காங்க. நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது. பிடிச்ச வேலை. ஹேப்பியா இருக்காங்க. அப்புறம் என்ன?"

" உதிக்கு கல்யாணம் பண்ணலாம்னு நினைத்தேன் அபி."என்று தயக்கமாக கூற.

"நல்ல விஷயம் தானே." என்றவனது மனது படபடவெனத் துடித்தது.

எப்படி முகிலனிடம் உத்ராவை கல்யாணம் பண்ணிக்க கேட்பது என்று குழம்பிக் கொண்டிருந்தவனுக்கு முகிலனே பேச்சை ஆரம்பிக்கவும், பழம் நழுவி பாலில் விழுந்தது போலானது. இருந்தாலும் படபடப்புடன் அவனது மறுமொழிக்காக காத்திருந்தான்.

" அது வந்து…" என்று இழுத்த முகிலன், தாய்மாமனிடன் மாப்பிள்ளை பார்க்க சொன்னதிலிருந்து, தரகரிடம் பார்த்தது வரைக் கூறியவனின் கண்கள் கலங்கியது.

" முகிலன்! உங்களுக்கு இன்னும் என் மேல நம்பிக்கை வரலையா?" என்று உணர்ச்சிகளற்ற குரலில் வினவினான்.

" அபி! என்ன சொன்னீங்க?" என்று அதிர்ச்சி மாறாமல் கேட்ட முகிலன், அபிமன்யுவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

" முதல்ல உங்க தங்கையை திருமணம் செஞ்சுக்க ஆசைப்படுகிறேன்னு உங்ககிட்ட நான் தான் வந்து கேட்டேன். அப்ப சரின்னு சொல்லிட்டு நீங்க வேற மாப்பிள்ளை பார்த்துட்டீங்க. சரி என்னைப் பத்தி விசாரித்து, உங்களுக்கு திருப்தியா இல்லைன்னு நினைச்சுக்கிட்டேன். பட் நீங்க விசாரிக்கவே இல்லைன்னு புரியுது. ஆனால் இப்போ கூட யார், யார் கிட்டயோ போய் கேட்குறீங்க. ஆனால் நான் உங்க நியாபகத்துக்கு வரவே இல்லையா? இல்லை என்னோட படிப்பு, நான் பார்க்குற வேலை உங்களுக்கு கவுர குறைச்சலா தெரியுதா?" எங்கே இந்த முறையும் உத்ரா கை விட்டுப் போய்விடுவாளோ என்ற படபடப்பில் ஆதங்கமாக வினவினான் அபிமன்யு.

" அபி! அப்படியெல்லாம் சொல்லாதீங்க. எந்த படிப்பும், வேலையும் குறைவு கிடையாது. எவ்வளவு பேர் உங்களால தான் நல்லா இருக்காங்க. இப்போ இருக்குற ஸ்ட்ரெஸ்ஸான லைஃப்புக்கு கவுன்சிலிங் எவ்வளவு முக்கியம்னு எனக்குத் தெரியும். உங்கக் கிட்ட கேட்குறதுக்கு எனக்குத் தகுதி இருக்கான்னு தெரியல. என் தங்கை என் கூடவே இருப்பாங்குற சுயநலத்துக்காக ரித்விக்கை கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். உங்களை நம்ப வச்சு ஏமாத்துனத்துக்கான தண்டையை அனுபவிச்சிட்டு இருக்கேன். தங்கச்சிக்கு வேற வரன் பார்த்ததை நான் உங்க கிட்ட வந்து நேர்மையா சொல்லியிருக்கணும். ஐயம் சாரி." என்றவன் அபிமன்யுவின் கைகளைப் பிடித்தான்.

" உங்களை மன்னிக்கணும்னா உத்ராவை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். பயப்படாதீங்க முகில். நான் அவளை நல்லா பார்த்துப்பேன்."

" அபி!" என்றவாறே இறுக அணைத்துக் கொள்ள.

அங்கிருந்த ஊழியர்கள் எல்லோரும் அவர்களைப் பார்த்தனர்.

" முகில்! கண்ட்ரோல் யுவர் செல்ஃப். எல்லோரும் நம்மளையே பார்க்குறாங்க." என்று சிரிக்க.

முகிலனையும் அந்த சிரிப்பு தொற்றிக் கொண்டது.

வேலை முடித்து வந்த உத்ரா, " என்ன விஷயம் அண்ணா. ரொம்ப நாள் கழிச்சு உங்க முகத்துல சிரிப்பை பார்க்குறேன்." என்றாள்.

" அதுவா சஸ்பென்ஸ். வீட்ல போய் பேசிக்கலாம்." என்று தங்கையை அழைத்துக் கொண்டு, கண்களாலே அபிமன்யுவிடம் அப்புறம் பேசுவதாக கூறிவிட்டு சென்றான்.

வீட்டிற்கு வந்த உத்ராவிடம், " நீ போய் ரெஸ்ட் எடு. நாளைக்கு பேசலாம்." என்று சொல்ல.

" சரி அண்ணா." என்று தலையாட்டியவள், சுபத்ராவின் அறைக்குள் சென்று விட்டாள்.

சுபத்ராவின் அறையைத் தான் உத்ரா பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

ரித்விக்கின் அறையில் இரண்டு நாள் மட்டுமே இருந்திருக்கிறாள். ரித்விக்கின் மறைவுக்குப் பிறகு அவள் அந்த அறைக்கு செல்லவே இல்லை. அவளது மனநிலையை கருதி தனியறைக் கொடுக்காமல், தன்னுடனே வைத்துக் கொண்டார் சுபத்ரா.

அவள் உள்ளே சென்று மறையும் வரை காத்திருந்த முகிலன்," மானு! அத்தையை கூட்டிட்டு கார்டனுக்கு வா. கொஞ்சம் பேசணும்." என.

" என்ன விஷயம் முகில்!"

" அத்தையும் வரட்டும்." என்ற முகிலன், கார்டனுக்கு சென்றான்.

தோளைக் குலுக்கிய மானசா, அன்னையை அழைக்கச் சென்றாள்.
*****************

" என்ன மாப்ளை கூப்டீங்களா?" என்றவாறே சுபத்ரா வர, அமைதியாக மானசாவும் இருந்தாள்.

" உட்காருங்க அத்தை." என்று ஒரு நாற்காலியை நகர்த்திப் போட்டான். மானசாவும் முகிலனுக்கு அருகே அமர்ந்துக் கொண்டாள்.

" அத்தை! உதிக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்." என்று கூற.

இவர்கள் மூவரும் இருப்பதைப் கண்டு வாக்கிங் சென்றுக் கொண்டிருந்த பர்வதமும் அங்கே வந்தவர், முகிலன் கூறியதைக் கேட்டதும், "அடக்கடவுளே! என் பேரன் இறந்து ஒரு வருஷம் கூட ஆகலை. அதுக்குள்ள கல்யாணமா?" என்று புலம்ப.

" பாட்டி!" என்று மானசா அடக்க முயன்றாள்.

" நான் ஒன்னும் சொல்லலைடியம்மா. என்னமோ பண்ணுங்க. அவ போனாலாவது உன் வாழ்க்கை நல்லா இருக்கும்." என்றவரும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார்.

கோபத்தை கட்டுப்படுத்திய முகிலன் தனது மாமியாரை பார்த்தான்.' ஐயோ! உத்ராவை கல்யாணம் பண்ணிக்க அபி வேற ஆசைப பட்டானே!' என்று பரித்தவித்தவரோ, "மாப்பிள்ளை பார்த்துட்டீங்களா? இல்லை, இனிமே தான் பார்க்கணுமா?" என்று வினவியவாறே தனது சம்மதத்தை தெரிவித்தார்.

"மாப்பிள்ளை பார்த்துட்டேன்." என்றதும் அவரது மனம் துடித்தது.

" வாவ்! யார் மாப்பிளை? எந்த ஊர்? என் கிட்ட கூட சொல்லலை." என்று மானசா உற்சாகத்துடன் வினவினாள்.

" அபிமன்யு. சைக்காலஜிஸ்ட்…" என்ற முகிலனின் குரலை கேட்டதும், மூவரும் அதிர்ந்து நின்றனர்.

" என்னாச்சு? ஓ… உங்க ரிலேட்டிவ் தானே. அதுக்கா இவ்வளவு ஷாக்." என்றான் முகிலன்.

'இவருக்கு எதுவும் தெரியாதா?' என்று புரியாமல் பார்த்தார் பர்வதம்.

சுபத்ராவுக்கோ ஆனந்த அதிர்ச்சி. மானசாவிற்கு உத்ரா மீண்டும் இந்த வீட்டுக்கே மருமகளாக வருவதால் தனக்கு எதுவும் பாதிப்பு ஏற்படுமா என்று யோசனையில் ஆழ்ந்தாள்.

" என்ன யாரும் எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க?" என்று எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தான்.

" இது சரி வராது.வேற யாரையாவது பாருங்க." என்றார் பர்வதம்.

"அதெல்லாம் நான் வெளியில் முதல்லே பாத்துட்டேன். எங்கேயும் அமையலை. அப்புறம் அபிமன்யு தான் என் தங்கச்சிக்கு வந்த முதல் வரன். நான் தான் என் காதலுக்காக அவரை வேணாம்னு சொல்லிட்டேன். மறுபடியும் கடவுள் ஒரு வாய்ப்புக் கொடுத்துருக்கார். அதை நான் இழக்க விரும்பலை‌. யாராவது, என் தங்கச்சி வாழ்க்கையில ஏதாவது குழப்பத்தை பண்ணினா நான் மனுஷனா இருக்க மாட்டேன்."என்று முதல்முறையாக கோபத்துடன் பேசியவன், தங்கையை தேடி சென்றான்.

உத்ராவோ அப்போது தான் ஃப்ரெஷ்ஷப்பாகி விட்டு வெளியே வந்திருந்தாள்.

" உதி மா! இங்கே வா."என்று அழைத்தவன், நேரடியாக விஷயத்திற்கு வந்திருந்தான்.

" இங்கே பாரு டா. அண்ணா உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்."

" அண்ணா!" என்றவளது கண்கள் கலங்க.

"அழாதடா! உன் நல்லதுக்காக தான் சொல்றேன்."

" இல்லைன்னா, நான் உங்களுக்கு தொந்தரவா இருக்க மாட்டேன். அதான் நான் இப்போலாம் உங்க கூட வரலையே. வேலைக்கு கூட போறேன். வேணும்னா ஹாஸ்டல்ல தங்கிக்கவா." என்று பாவமாக கூற.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த முகிலனுக்கு மட்டுமில்லை, சுபத்ரா, மானசா, பர்வதம் எல்லோருக்குமே கஷ்டமாக இருந்தது.

பர்வதம் எதுவும் பேசாமல் அவரது அறைக்கு சென்று அடைந்துக் கொண்டார்.

சுபத்ராவும், மானசாவும் அழுகையை அடக்கிக் கொண்டிருந்தனர்.

முகிலனோ, " ஐயோ! உதி… நீ எனக்கு தொந்தரவு இல்லை டா. உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்க மாட்டேனா. ப்ளீஸ் டா… ப்ளீஸ்." என்று கெஞ்ச.

" ஐயோ! ப்ளீஸ்னு

சொல்லாதீங்க." என்றவளோ, கண்களை மூடிக்கொண்டாள். அவளது காதில், 'ப்ளீஸ் உதி!' என்று முணுமுணுத்த ரித்விக்கின் குரல் ஒலித்தது.
 
Last edited: