• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் 🌈-18

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில்-18

"ஹேய் என்னாச்சு உதி?" என்று உத்ராவின் பதட்டத்தைப் பார்த்து அபிமன்யுவும் பதறினான்.

" ஹான்! ஒன்னுமில்லை." என்றாள் உத்ரா‌.

" ஓகே! டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா. கொஞ்சம் நேரம் வெளியே வாக் போகலாம். இங்கே தோட்டத்துல கேரட், பொட்டேட்டோ எல்லாம் போட்டுருக்கோம். அப்புறம் ரோஸ், ஆர்க்கிட்னு பூக்கள் எல்லாம் இருக்கு. பார்க்க ப்ளசண்டா இருக்கும்." ஆல்ரெடி நீ பார்த்திருப்ப, இருந்தாலும் பார்க்க, பார்க்க தெவிட்டாதது. அப்படியே ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்டு வந்திடுலாம்." என்றான்.

அவளுக்கும் அறைக்குள்ளே இருப்பது மூச்சு முட்டுவது போலிருக்க, "சரி." என்றவள், உள்ளே சென்று உடையை மாற்றிக் கொண்டு வந்தாள்.

இருவரும் சற்று நேரம் அந்த ஃபார்மை சுற்றியவர்கள், பிறகு ரெஸ்டாரண்ட்டுக்கு சென்றனர்.

அங்கிருந்த ஊழியரெல்லாம் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களது முதலாளிக்கு இன்று திருமணம் என்று தெரியும். ஆனால் திருமணத்திற்கு பிறகும் இங்கே வந்த முதலாளியையும், அவரது மனைவியையும் ஆச்சரியமாக பார்த்தனர்.

உத்ராவிற்கு அவர்களது பார்வை சங்கடத்தை தந்தது. ஆனால் அபிமன்யுவிற்கு அப்படியெல்லாம் இல்லை. அங்கிருந்த சூப்பர்வைசரை அழைத்தவன், " இன்னைக்கு நம்ம ரிசார்ட்ல உள்ளவங்க எல்லோருக்கும் டின்னர் காம்ப்ளீமெண்ட்டா குடுத்துடுங்க
இது என்னோட கல்யாணத்துக்கான ட்ரீட்." என்றான்.

"ஓகே சார்." என்றவன், அவர்களுக்கு என்ன வேண்டும் என்று விசாரித்தான்.

அபிமன்யுவோ அவளது விருப்பம் கேட்டு, ஆர்டர் செய்து வர வைத்தான்.

உணவு வேளை மௌனமாக முடிந்தது. சாப்பிட்டு முடித்ததும், அவர்களது ஷுட்டை நோக்கி சென்றனர்.

வெளியே இருந்த ஃபயர் கேம்பை பார்த்ததும், " இங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருக்கலாமா?" என்று அபிமன்யு வினவ.

" ம்…" என்றவளது நிம்மதியடைந்த முகத்தை பார்த்த அபிமன்யு தனக்குள் சிரித்துக் கொண்டான்.

நெருப்பை மூட்டியவன், உத்ராவிற்கு அருகே அமர்ந்தான். அவனது நெருக்கத்தில் விதிர்விதித்தவள் சற்று தள்ளி அமர்ந்தாள்.

" உதி! நீ தள்ளி போக, போகத்தான் எனக்கு நெருங்கி வரணும்னு தோணும். நீ இயல்பா இருந்தா, நான் சமர்த்தா இருப்பேன்." என்று கண் சிமிட்டியபடியே அவளது கைககளைப் பற்றினான்.

" இல்லை! இல்லை! நான் தள்ளிப் போகலை." என்றவள் கையை அவனிடமிருந்து விலக்க முயன்றாள்.

" உன் கைப் பிடிக்கணும்னு எவ்வளவு நாள் ஆசை தெரியுமா? அவ்வளவு ஈஸியா விட்டுட மாட்டேன்."
என்ற அபிமன்யுவை புரியாமல் பார்த்தாள்.

" குழப்பமா இருக்கா உதி? சரி அதெல்லாம் விடு. உன்னை நான் என் கிட்ட கவுன்சிலிங்குக்கு வர்றதுக்கு முன்பே பார்த்திருக்கிறேன்."

விழி விரித்து ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.

" என்ன நம்ப முடியலையா?"

"அப்படி எல்லாம் இல்லை. நீங்களும் இந்த ஊட்டி தானே. எங்கேயாவது வெளியே பார்த்திருக்கலாம்." என்று மறுமொழி அளித்த உத்ராவிற்கு ரித்விக்கின் ஞாபகம் வந்தது. அவளையுமறியாமல், மனதில் ஒரு வலித் தோன்றியது.

" ம் நீ சொல்றதும் கரெக்ட் தான். முதல் முறை ஊட்டியில் தான் பார்த்தேன். பட் செகண்ட் டைம் சென்னையில் வி. ஆர் மால்ல பார்த்தேன். அதுமட்டுமில்லை. நீயும், உன் ப்ரெண்ட்ஸும் பேசிட்டிருந்ததையும் கேட்டேன்‌." என்றவன், அதை நினைத்துப் பார்த்தான்.

' பள்ளிப்படிப்பு முடிந்ததும் உத்ரா ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர ஆர்வம் கொண்டிருந்தாள். அவளது தோழிகளோ இன்ஜினியரிங்கில் ஆர்வம் கொண்டு, ஜே.இ.இ எக்ஸாம் எழுதுவதற்காக சென்னைக்கு வந்திருந்தனர். இவளும் அவர்கள் கூட வந்திருந்தாள். எக்ஸாம் முடிந்ததும், மாலை சுற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது தான் அபிமன்யு அவர்களைப் பார்த்தான். இல்லை, இல்லை அவளை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தான்.

புட் கோர்டில் சிரிப்பு சத்தம் ஒலித்து, எல்லோரது கவனத்தையும் அவர்கள் பக்கம் ஈர்த்தனர்.

' அங்கிருந்த பெண்களில் ஒருத்தியை மட்டும் எங்கோ பார்த்ததாக தோன்ற, எங்கே பார்த்தோம்.' என்று யோசித்துக் கொண்டிருந்த அபிமன்யு, பார்வையையும், செவியையும் அவர்களிடத்தில் வைத்திருந்தான.

" ஏன் டி உதி? நீயும் இன்ஜினியரிங் சேர்ந்திருக்கலாம். ஜாலியா இன்னைக்கு சுத்துன மாதிரி அடிக்கடி வெளியே வந்து என்ஜாய் பண்ணியிருக்கலாம்." என்று ஒருத்தி கூற.

" நீ வேற, அவ சரியான அண்ணன் கோண்டு. அவங்க அண்ணனை விட்டு எங்கேயும் வர மாட்டா? " என்றாள் இன்னொருத்தி.

" ப்ச்! அதெல்லாம் இல்லை டி. எனக்கு ஐடில வொர்க் பண்றதெல்லாம் செட்டாகாது. பசி, தூக்கம் இதெல்லாம் தியாகம் பண்ணிட்டு, வேலை, வேலைன்னு ஓடணும். இதுவே ஒரு ஹோட்டல்ல வேலைக்கு போனால் நேர, நேரத்துக்கு விதவிதமா சாப்பிடலாம்." என்று உத்ரா சொல்லி முடிக்க.

" அடியே! நான் கூட என்னமோ நினைச்சேன். ஆனால் இப்படி ஒரு சாப்பாட்டுக்காக, எங்களை விட்டு பிரிஞ்சு இருக்க முடிவு பண்ணிட்டீயே." என்று அவளது தலையிலே குட்ட.

" வேண்டாம் டி உமா! சாப்பாட்டை இவ்வளவு ஈஸியா சொல்லிட்ட. ஒரு நாள் நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாரு. அப்போ தெரியும் எங்க கஷ்டம்." என்ற உத்ரா கலகலவென நகைக்க.

அவளை கண்கலங்க பார்த்தாள் அவளது உயிர் தோழி உமா.

" ஹேய்! எதுக்கு இப்ப சீரியஸாகுற. ஜஸ்ட் பன்னுக்காக சொன்னேன். நான் நல்லா தான் டி சமைப்பேன். வேணும்னா என்னோட பரிசோதனை எலி கிட்ட கேளு." என்றாள் உத்ரா.

" அடேய் எங்க முகிலண்ணனை பரிசோதனை எலிங்கிறீயா? இரு அண்ணன் கிட்ட சொல்றேன்" என்ற உமாவின் முகம் இன்னும் மலரவில்லை‌.

பெற்றோர் இல்லாத தன்னை நினைத்து தோழி வருந்துவது பிடிக்காத உத்ராவோ, பேச்சை மாற்றி அவளை சிரிக்க வைக்க முயன்றாள்.

" ஜோக்ஸ் அபார்ட். எனக்கும், எங்க அண்ணனுக்கும் ஊட்டியை விட்டுப் போறதில் இஷ்டமில்லை. அதான் இந்த முடிவு உமா. அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட ஊட்டியில் உள்ளவனை தான் கட்டிக்கப் போறேன்." என்று கண்ணடித்து சிரித்தாள் உத்ரா.

" ம்… அடியே படிக்கவே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள கல்யாணத்தைப் பத்தி கனவு காண்றீயா?" என்று ஒருத்தி மிரட்ட.

இன்னொருத்தியோ, "நீ நடத்து உதி… ஹனிமூனுக்காவது வேற ஊருக்கு போவியா? இல்லை, அதுவும் ஊட்டியிலே தானா?" என்று கிசுகிசுக்க.

" அடியே சும்மா இருங்க டி. அவளை ஏன் இப்படி உசுப்பேத்துறீங்க?" என்று உமா அவர்களின் பேச்சை கட்டுப்படுத்த முயன்றாள்.

மற்றவர்கள் அடங்கினாலும், உத்ரா அடங்க மறுத்தாள்." ஓ! நோ ஊட்டி. ஹனிமூன்லாம் தனி ஸ்பெஷல். அப்ப மட்டும் ஒரு வாரம் எங்காவது போயிட்டு வருவேன். எனக்கு காஷ்மீரை சுற்றிப் பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை." என்று கண்ணில் கனவுகளுடன் கூறினாள் உத்ரா.

" ம்கூம்! ஹனிமூனுக்கு போய் சுத்திப் பார்க்க போறாளாம். உன்னையெல்லாம் வச்சுக்கிட்டு…" என்று ஒருத்தி புலம்ப.

" அப்புறம் ஏன் டி ஹனிமூனுக்கு போறோம்." என்று ஒன்றும் அறியாதவள் போல உத்ரா வினவினாள்.

அவ்வளவு நேரம் அவர்களுக்கருகே இருந்த சேரில் அமர்ந்திருந்தவனுக்கு நெஞ்சுவலி வராத குறை தான்.'அடக்கடவுளே! சின்ன பொண்ணுங்கன்னு பார்த்தா, வாயைப் பாரு. 'என்று எண்ணியவனை நிகழ்வுக்கு அழைத்தது அவனது செல்ஃபோன்.

அதை எடுக்கும் போது பேண்ட் பாக்கெட்டில் இருந்து பர்ஸ் கீழே விழுந்தது. அதை எடுத்தவனின் கவனத்தில் ஒரு போட்டோ விழ, சற்று முன் பார்த்த பெண்ணை எங்கே பார்த்தோம் என்கின்ற நினைவும் வந்தது.

அவனால் நம்பவே முடியலை. இவ்வளவு நேரம் ஜாலிக்காக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவன், இப்போது அந்த உதியை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமானான்.

ஒரு நண்பனை சந்திப்பதற்காக மாலுக்கு வந்தவன், அந்த நண்பனை மறந்து, அவர்களது பேச்சில் கவனத்தை செலுத்தினான். அவனுக்கு உதியை பற்றிய தகவல் தேவைப்பட்டது. அவன் எதிர்ப்பார்த்தது போலவே உதி படிக்கும் காலேஜ் விவரம் கிடைக்க புன்னகையுடனே அங்கிருந்து கிளம்பினான்.'

மறுநாளே காலேஜில் தெரிந்தவர்கள் மூலம், அவளது முழு பயோடேட்டாவை விசாரித்து அறிந்துக் கொண்டான்.

அவள் படித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தான். பிறகு அவளது அண்ணனிடம், அவனது விருப்பத்தை தெரிவித்து, திருமணத்திற்காக கேட்டவன், அவனது விசிட்டிங் கார்டை கொடுத்து விசாரிக்க சொன்னான்.'

அதையெல்லாம் நினைத்துப் பார்த்த அபிமன்யு உத்ராவிடம் பகிர்ந்துக் கொண்டான்.

' காலேஜ் படிக்கும் போது செய்த சேட்டைகள் எல்லாம் நினைவுக்கு வர, அதெல்லாம் ஒரு கனாக்காலம். உமாவின் நினைவு வந்தது. அவள் அமெரிக்காவில் பணி புரிந்துக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை.' என்று எண்ணி பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

அவளது உணர்வுகளை உள்வாங்கிய அபிமன்யுவோ கனிவாகப் பார்த்து, "சரி நீ போய் தூங்கு உதி. எனக்கு வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு வரேன்." என்றான்.

' இந்த நேரத்தில என்ன வேலை?' என்பது போல் உத்ரா பார்க்க‌.

" ஆன்லைன்ல கவுன்சிலிங் இருக்கு. நான் ஹால்ல உட்கார்ந்து, பேசிட்டு வர்றேன்." என்று அவளை அனுப்பினான்.

அறைக்கு சென்ற உத்ராவோ, பழைய நினைவுகளின் தாக்கமோ, என்னவோ நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினாள்.

*****************************
முகிலனோ உறங்காமல் இருந்தான்.
ஏதோ ஒன்று அவனது மனதிற்கு தவறாகப்பட்டது.

கல்யாண பேச்சு ஆரம்பித்த நாளில் அபிமன்யு கூறிய அவனது விருப்பத்தை நினைத்துப் பார்த்தான்.

" உங்க வீட்ல வேற யார், யார் இருக்கிறாங்க? அவங்களுக்கு கல்யாணத்தில் முழு சம்மதா?" என்று தயக்கத்துடன் முகிலன் கேட்க.

" இன்னும் என்னைப் பற்றி விசாரிக்கலையா?" என்று உணர்வுகளற்ற குரலில் வினவ.

" உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்களே சொல்லுங்க." என்றான் முகிலன்.

" எங்க வீட்ல உள்ளவங்களுக்கு முழு சம்மதம். கல்யாணத்துக்கு வந்திடுவாங்க. மீதியெல்லாம் உங்க வைஃப் கிட்டேயும், மாமியார் கிட்டேயும் கேட்டுக்கோங்க. அப்புறம் எங்க குலத்தெய்வக் கோயிலிலே கல்யாணம் சிம்பிளா பண்ணிக்கலாம். எல்லா ஏற்பாடுகளையும் மானு கிட்டேயும், உங்க மாமியார் கிட்டேயும் விட்டுடுங்க." என்றான்.

" ஆமாம் அவங்க உங்க ரிலேஷன் தானே. மறந்துட்டேன்." என்றவன், மானசாவிடம் விசாரிக்க எண்ணியிருந்தான்.

ஆனால் அவனுக்கு இருந்த டென்ஷனில் ஒன்றுமே கேட்கவில்லை. ஏன் அதற்கான வாய்ப்பை கூட அவர்களும் தரவில்லை. நாள் பார்க்க வந்தவர்கள், அடுத்தடுத்து கல்யாணத்துக்கான ஏற்பாடுகளைப் பார்க்க, அவனும் அதில் ஆழ்ந்து விட்டான்.

இன்று கல்யாணம் முடிந்த பிறகு அபிமன்யு வீட்டிற்கு வராமல் போனது மனதுக்கு சங்கடமாக இருந்தது.
ஆனால் அவர்கள் பெற்றோர் வரவில்லை என்பது அவனது புத்தியில் உரைக்கவில்லை. இதோ நட்ட நடுராத்திரியில் தான் அவர்கள் வராததது உறுத்தியது. அபிமன்யுவைப் பற்றி சரியாக விசாரிக்கவே இல்லை என்ற உண்மை உரைத்தது. என்ன தான் மனுவுக்கு உறவென்றாலும், இப்படி அலட்சியமாக இருந்திருக்கக் கூடாது என்று தனக்குள் உழன்றுக் கொண்டிருந்தவன், அருகில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த மனையாளை எழுப்பினான்.

" மானு‌!" என்று அவளை எழுப்ப.

" என்னாச்சு முகில்!" என்று பதறி எழுந்தாள்.

" அபிமன்யு யாரு?" என்றவனை, கொலை வெறியோடு பார்த்தவள், " உங்க தங்கச்சி வீட்டுக்காரர்." என்றாள்.

" ப்ச். இதுக்கு முன்னாடி யார் அவரு?"

" ம்… என் அண்ணன்."

" ப்ச்… இந்த ஊட்டியிலே பாதி பேரு உன் அண்ணன் தான்.அதை கேட்கலை தாயே. அவங்க அம்மா யார்?"

" இந்த நட்டநடுராத்திரில உங்களுக்கு என்ன ஆச்சு? ஏதேதோ கேட்டுட்டு இருக்கீங்க? எங்க அம்மா தான் அவனுக்கும் அம்மா?"

" ப்ளீஸ் மானு! விளையாடாமல் சொல்லு. அபி உன் கூட பொறந்தவரா?"

" இல்லை! என் கூட பிறக்கலை."என்றவள், அவன் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், " எனக்கு முன்னால பொறந்தான். அதுனால தான் அண்ணன்."

" பீ சீரியஸ் மானு. கிண்டல் பண்ணாதே" என்றவனது கண்கள் கலங்க.

மானுவின் விழிகளில் உறக்கம் முற்றிலும் தூர போயிருக்க," முகில்! யார் விளையாடுறா? தூங்கிட்டிருந்தவளை எழுப்பி, யார் கிண்டல் பண்ணிட்டு இருக்கிறது. உண்மையிலே அபி என் அண்ணன்னு தெரியாதா? நம்ம லவ் பண்ணும் போதே சொல்லியிருக்கேன். இல்லை! இல்லை நான் லவ் பண்ணும் போதே சொல்லியிருக்கேன். அப்புறம் நம்ம கல்யாணத்தப்போ அறிமுகப்படுத்தியிருக்கேன். விளையாடுறீங்களா?" என்று சீற.

" சாரி மானு." என்றவனோ, ' அப்போ அபி இவங்க அண்ணனா? அப்புறம் ஏன் தனியா இருக்கார்? எனக்கும், மானுவுக்கும் கல்யாணம் பேச வந்த ரித்விக் கிட்ட, தங்கச்சிக்கு அலையன்ஸ் பார்த்திட்டு இருக்கேன்னு சொல்லி அபியோட விருப்பத்தை சொன்னேனே. அப்ப கூட ரித்விக் அபி தன்னுடைய அண்ணன்னு சொல்லலையே ஏன்? அவங்க இரண்டு பேருக்கு இடையே எதுவும் பிரச்சினையா? அதுக்காக தான் உதியை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டாரா ரித்விக்? ஓ காட்! தலையெல்லாம் வலிக்குது. ரித்விக்கை புரிஞ்சுக்கவே இல்லை. இப்போ அபி வேற உத்ராவை கல்யாணம் பண்ணிக்கிட்டார். எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டார்னு ஒன்னும் புரியலையே..' என்று எண்ணியவனுக்கு தலை சுற்றியது.

மானசாவிடம் அபியைப் பற்றி கேட்கலாம் என்று பார்த்தால், அவளோ போர்வையை முகம் முழுவதும் போர்த்திக் கொண்டு உறங்க முயன்றாள்.

மீண்டும் அவளை தொந்தரவு பண்ண விரும்பாமல், அபியிடமே தெரிந்துக் கொள்ளலாம் என்று விடிய, விடிய தூங்காமல் விழித்திருந்தவன், பொழுது விடிந்ததோ, இல்லையோ என்று உத்ராவையும், அபிமன்யுவையும் சந்திக்க சென்றான்.

***************
காலையில் நேரத்தோடு எழுந்திருந்த உத்ராவோ, தனக்கருகே இடைவெளி விட்டு படுத்திருந்த அபிமன்யுவை வியப்புடன் பார்த்தவள், குளிக்க சென்றாள்.

இன்னும் அவன் எழுந்திரிக்கவில்லை. சும்மா உட்கார்ந்து இருக்க முடியாமல், அங்கும், இங்கும் சுற்றிக் கொண்டிருந்தாள்.

அவளது அரவத்தில், அபிமன்யுவும் விழித்து விட்டான்.

அவளைப் பார்த்து புன்னகைத்தவன், " என்ன உதி தூக்கம் வரலையா? அதுக்குள்ள எழுந்திரிச்சிட்ட?" என்று வினவ.

" இல்லை எப்பவும் எழுந்திருக்கும் நேரம் தான்."

" ஓ! டீ குடிச்சியா உதி?"

" இங்கே கிச்சன்ல ஒன்னும் இல்லையே."

" புது எலி சிக்கிடுச்சின்னு உன் திறமையை காண்பிக்க பார்க்குறீயா? இன்டர்காம்ல சொன்னா எடுத்திட்டு வருவாங்களேன்னு தான் கேட்டேன்." என்று நமட்டு சிரிப்புடன் கூற.

" இப்போ நான் நல்லா சமைப்பேன். வேணும்னா என் அண்ணன் கிட்ட கேளுங்க."

" அதை அந்த எலிக்கிட்ட கேட்கக் கூடாது. இந்த எலி கிட்ட தான் கேட்கணும். நான் சாப்பிட்டு பார்த்துட்டு சர்டிபிகேட் கொடுக்கிறேன்" என்றவன் வாய்விட்டு சிரிக்க.

முறைக்க முயன்ற உத்ராவுக்கும் சிரிப்பு வர, அடக்க மாட்டாமல் நகைத்தாள்

இவர்களது சிரிப்பு சத்தத்தை கேட்டுக்கொண்டே அங்கு வந்த முகிலனின் குழப்பம் கொஞ்சம் குறைவது போல் இருந்தது.

முகிலனைப் பார்த்ததும்." வாங்க அண்ணா." என்று உற்சாகமாக அழைத்தாள் உத்ரா.

" வாங்க முகில்!" என்றழைத்த அபி, உத்ராவிடம், " உதி மூணு பேருக்கும் டிஃபன் ஆர்டர் பண்ணிட்டு, பேசிட்டு இருங்க. நான் குளிச்சிட்டு வர்றேன்." என்றவன், அவர்களுக்கு தனிமைக் கொடுத்து விட்டு சென்றான்.

அபி சொன்னது போலவே இன்டர்காமில் ரெஸ்டாரண்டிற்கு அழைத்தவள், ஆர்டர் கொடுத்து விட்டு, முகிலனுக்கு அருகில் வந்தமர்ந்தாள்.

தங்கையின் கைகளைப் பற்றியவன், " நல்லா இருக்கியா டா? அபி நல்லா பார்த்துக்கிறாரா?" என்று கேள்வி கேட்டவன், உத்ரா பதில் சொல்வதற்குள், செத்துப் பிழைத்தான்.

" நான் நல்லா இருக்கேன்." என்றவளது குரலிலே மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

உத்ரா, பழைய உத்ராவாக மாறியிருந்தாள்.

நேற்றிலிருந்து நடந்தவற்றை எல்லாம் படபடவென அண்ணனிடம் ஓப்பித்துக் கொண்டிருந்தாள்.

மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தான் முகிலன்.

அவனுக்கு அபிமன்யுவிடம் தனியாக பேச வேண்டியிருந்தது. சற்று நேரத்தில் வந்த அபிமன்யு உணவருந்த அழைத்தான்.

சாப்பிடும் போதும் அமைதியாகவே இருந்தான் முகிலன்.

சாப்பிட்டு முடித்ததும், " உதி! கோவிலுக்கு போகணும். புடவை கட்டிட்டு வர்றீயா?" என்றான் முகிலன்.

" சரிண்ணா." என்றவள், தான் அணிந்திருந்த சல்வாரை பார்ததாள். ' இது நல்லா தானே இருக்கு.' என்று எண்ணியவள், ஒன்றும் கூறாமல் புடவை மாத்த சென்றாள்.

உத்ரா உள்ளே செல்லும் வரை அமைதியாக இருந்த அபிமன்யு, " சொல்லுங்க முகில்? என் கிட்ட என்ன தனியா பேசணும்?" என்று வினவ.

" அது வந்து, நீங்க தான் மானுவோட பெரிய அண்ணனா?" என்று தயக்கத்துடன் வினவ.

" இன்னும் என்னைப் பத்தி விசாரிக்கலையா?" என்று வினவியவனின் குரலில் வியப்பு தெரிந்தது‌.

" இல்லை." என்று தலையசைத்தான்.

" ஓ!" என்ற அபிமன்யு அமைதியாக அவனைப் பார்த்தான்.

" உங்கக் கிட்டயே கேட்கலாம்னு வந்தேன். "

" ஆமாம்! நான் தான் அவளோட அண்ணன். வேறு எதுவும் தெரியணுமா?"

"ஏன் வீட்டை விட்டு தனியா இருக்கீங்க? உங்களுக்கும்
, அந்த வீட்ல உள்ளவங்களுக்கும் என்ன பிரச்சினை?" இல்லை ரித்விக்கிக்கும், உங்களுக்கும் பிரச்சனையா? " என்ற முகிலனின் அருகே நிழலாட. நிமிர்ந்து பார்க்க, அங்கோ முகம் வெளுக்க நின்றிருந்தாள் உத்ரா.