• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் 🌈-19

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில் -19

முகம் வெளுக்க நின்ற உத்ராவைப் பார்த்த முகிலனும், அபிமன்யுவும் சில நொடிகள் திகைத்து நின்றனர்.

அதற்குள் முகிலனின் அருகே வந்த உத்ராவோ, " என்ன அண்ணா சொல்றீங்க, இவர் ரித்வியோட அண்ணனா?" என்று அதிர்ந்து வினவினாள்.

ஆமாம் என்று தலையாட்டினான் முகிலன்.

" ரித்விக்கும், இவருக்கும் என்ன பிரச்சினை இருக்க போகுது? ஏன் அப்படி கேட்குறீங்க? ரித்விக் ரொம்ப அமைதி. யார் கிட்டேயும் சண்டைக்கு போக மாட்டார்." என்றவளது கண்கள் கலங்கியது.

அதைக் கேட்டதும் அபிமன்யுவின் முகத்தில் வலி வந்து போனது.

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, முகிலனிடம், " நான் தான் உங்க தங்கையை முதல்ல கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்னு அவ கிட்ட சொல்லுங்க. என்னைப் பற்றி தெரிந்ததற்கு பிறகு தானே ரித்விக் கல்யாணம் பண்ண கேட்டுருப்பான். அவனுக்குத் தெரியும்… என்னை காயப்படுத்தணும்னா எந்த அளவுக்கு வேணும்னாலும் போவான். என்ன நடந்ததுன்னு சொல்லுங்க முகில்." தன்னிலை இழந்து கத்தினான் அபிமன்யு.

" அபி அமைதியா இருங்க!" என்று அவனது கைகளை பற்றி அங்கிருந்த சோஃபாவில் அமர வைத்தவன், தங்கையும் அமர சொன்னான்.

" உதி! அபி சொல்றதெல்லாம் உண்மை." என்றவன், பழைய நினைவுகளை அவர்களிடம் பகிர்ந்தான்.

' அபிமன்யு உத்ராவை பற்றி விசாரித்து தெரிந்து கொள்ளும்போது தான் அவர்களுக்கு பக்கத்து எஸ்டேட்டில் தான் அவர்கள் இருக்கிறார் என்ற விவரமே அவனுக்குத் தெரிய வந்தது. உத்ராவின் படிப்பு முடியும் வரை காத்திருக்க எண்ணினான்.

சுபத்ராவோ, கல்யாணத்துக்கு பெண் பார்க்கவா என்று அபிமன்யுவிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தார்.

ஃபோனில் அபிமன்யு பிடிக்கொடுத்து பேசாமல் இருக்கவே‍, அவரது ரிசார்ட்டுக்கு சென்று, கல்யாணப் பேச்சை ஆரம்பிக்க, "இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லை. எப்போ எனக்கு பண்ணிக்கத் தோணுதோ, அப்ப கல்யாணம் பண்ணிப்பேன். அப்புறம் பொண்ணு என் விருப்பப்படி நானே பார்த்துக்கிறேன்." என்று முகத்தில் அடித்தார் போல் கூறி அனுப்பி விட்டான்.

முகம் வாடி வீட்டிற்கு வந்த சுபத்ராவோ, ரித்விக்கிடம் சென்று, " ரித்தி! உனக்கு பொண்ணு பார்க்கட்டுமா?" என்று வினவினார்.

" ஏன்? என்னாச்சு? அண்ணனுக்கு முதல்ல பாருங்க?" என்ற ரித்விக், அவரை கூர்ந்து பார்த்தான்.

" ம்கூம்! உங்க அண்ணன் என்னைக்கு என் பேச்சை கேட்டு இருக்கான். அவனை விட்டு தள்ளு. அம்மாவுக்கு ஆசையா இருக்கு. நீயாவது கல்யாணத்துக்கு ஒத்துக்கப்பா."என்றார் சுபத்ரா.

" ஏன் நான் ஜாலியா இருக்கிறது உங்களுக்கு புடிக்கலையா? என்ன ஆளை விடுங்க." என்று அங்கிருந்து நழுவியவனின் மனதிலோ, ' ஏன் அவன் கல்யாணத்துக்கு சம்மதிக்கலை? என்னமோ விஷயம் இருக்கு. பார்த்துக்கலாம்.' என்று எண்ணினான்.

ரித்விக்கும் பிடிக்கொடுக்கவில்லை என்றதும்," என்னமோ போங்க. இனி நீங்களே வந்து கல்யாணம் பண்ணுங்கன்னு வந்து நின்னா தான், நான் கல்யாணப் பேச்சை எடுப்பேன்." என்று ஒருவாறு அமைதியடைய முயன்றார் சுபத்ரா.

ஆனால் அவரை அமைதியாக இருக்க, அவரது உடன்பிறப்புகள் விடவில்லை. எங்காவது பார்க்கும் போது, " என்ன சுபத்ரா உன் பசங்க மூணு பேருக்கும் கல்யாண வயசு வந்துருச்சு. இன்னும் யாருக்கும் கல்யாணம் பண்ணலை. ஏன் கல்யாணம் பண்ணி வைச்சா, பேரன் பேத்தி எடுத்து பாட்டியாகிடுவேன்னு கவலையா?" என்று கேலி செய்தனர்.

அவர்கள் செய்த கேலி மனதை வருத்தினாலும், ' நாம ஏன் மானசாவிற்கு கல்யாணம் பண்ணக் கூடாது.' என்ற எண்ணத்தை தோற்றி வித்திட்டது.

அப்புறமென்ன மகளுக்கு முன் சென்று நின்றார்.

" மானுமா! அம்மா சொன்னா கேட்பியா?"

" சொல்லுமா! நீ சொன்னதை கேட்காம இருப்பேனா?" என்று புன்னகைத்தாள் மானசா.

" அம்மா உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன். அப்போ தரகரை வரச் சொல்லவா?"என்று ஆர்வமாக வினவ.


" அம்மா! அதுக்குள்ள என்ன மா? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்மா? ப்ளீஸ்மா." என்று கெஞ்சினாள் மானசா.

" ஏன் டி நீயும் இப்படி என் உசுர வாங்குறா? உன் அண்ணன்காரனுங்க தான் என் பேச்சைக் கேட்கலை.நீயாவது கேட்க கூடாதா? உன் பெரியம்மா, மாமா எல்லாம் பாட்டியாகுறதுக்கு பயந்துகிட்டு தான் கல்யாணம் பண்ணாம இருக்கேன்னு சொல்றாங்க. நான் உங்களுக்கு நல்லது செஞ்சு பாக்கணும் எவ்வளவு ஆசைப்படுறேன்னு எனக்குத் தான் தெரியும்." என்றவர் கண்கலங்க.

" அம்மா! அழாதீங்க.நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்று மானசா கூறியதும், சுபத்ராவின் முகம் மலர்ந்தது.

"ஆனால் மாப்பிள்ளை…" என்று அவள் இழுக்க.

" என்னடி சொல்ல வர்ற? மாப்பிள்ளையை நீயே பார்த்திட்டியா?" என்று படபடத்தார்.

" அது வந்து… நம்ம எஸ்டேட் மேனேஜரை விரும்புறேன்." என்று மென்று முழுங்கிக் கூறினாள்.

"என்னடி சொல்ற? பிஸினஸ் கத்துக்க வான்னு கூப்பிட்டா, காதலை கத்துக்கிட்டு இருக்கீயா?"

" மா! நான் ஒன்னும் இப்போ லவ் பண்ணலை."

" என்ன சொல்ற?" என்று அதிர்ச்சியாக மகளை பார்த்தார் சுபத்ரா‌.

" அம்மா நான் ஆறு வருஷமா லவ் பண்றேன்."

" அப்போ நீ சின்ன புள்ள டா. அப்பவே உன் மனசை கெடுத்து இருக்கான்னா, அவன் குணம் புரியலையா?"

" அம்மா நான் தான் அவரை லவ் பண்ணேன். எனக்காக அப்பா வாங்குன எஸ்டேட், அவரோடது தான். அப்போ வரும் போது தான் நான் அவரை முதல்ல பார்த்தேன். அழுகை வெளியே தெரியாமலிருக்க, அவர் பட்ட கஷ்டத்தை பார்த்து ரொம்ப வருத்தமா இருந்தது. அப்பா கிட்ட கூட இந்த இடம் வேணாம்னு சொன்னேன். அப்பா தான் நம்ம வாங்கலைன்னா, வேற யார்கிட்டயாவது போய் குறைந்த விலைக்கு வித்துடு வாங்க. பாவம் சின்ன பசங்க. அவங்க நல்லதுக்காகத் தான் சொல்றேன்னு சொன்னாங்க."

" அதுக்காக லவ் பண்ணுவாங்களா?" தான் குழந்தை என்று நினைத்துக் கொண்டிருந்த மகள், காதல் என்று சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியாத சுபத்ரா மகளிடம் வாதம் புரிந்துக் கொண்டிருந்தார்.

" சின்ன வயசுல முகில் மேல சாஃப்ட் கார்னர் வந்தது. அப்புறம் நம்ம எஸ்டேட்டில் வேலைக்கு வரும்போது பார்த்து புடிச்சிருச்சு. ஆனா அவரு பதிலே சொல்லலை. நான் தான்…" என்றவள் முழுவதாக சொல்லாமல் தாயைப் பார்க்க.

" முகிலனுக்கு அம்மா, அப்பா கிடையாது. தங்கச்சி வேற இருக்கா. கல்யாணம், புள்ளபேறு எல்லாம் பார்க்கணும்.உன்னால அந்த பொறுப்பெல்லாம் சுமக்க முடியுமா? உனக்கு இதெல்லாம் தேவையா" என்று சராசரி அம்மாவாக யோசித்தார்.

" என்னம்மா நீங்க இப்படி சொல்றீங்க? முகிலை தவிர நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்." என்று அழ.

அங்கு வந்த ரித்விக்கோ," ஏன் மா மானு அழறா?" என்று வினவ.

" என்னன்னு உன் தங்கச்சியையே கேளு."

"'அம்மா! அவ குழந்தைமா. இப்போ எதுக்கு இப்படி கோபப்படுறீங்க."

" நீயும், நானும் தான் அவளை குழந்தையா நினைச்சிட்டு இருக்கும். ஆனால் அவ வளர்ந்துட்டா. அவளோட விஷயத்துல, அவளே முடிவெடுக்கிற அளவுக்கு பெரிய மனுஷியா வளர்ந்துட்டா."

" என்ன விஷயம் மானு? ஏன் அம்மா இவ்வளவு கோபப்படுறாங்க?"

"நான் நம்ம எஸ்டேட் மேனஜர் முகிலனை லவ் பண்றேன் அண்ணா. அம்மாவுக்கு பிடிக்கலை."என்று அழுகுரலில் கூற.

" ஏன் மா இந்த காலத்திலும் இப்படி இருக்கீங்க?" என்று தங்கைக்கு சப்போர்ட்டுக்கு வந்தான் ரித்விக்.

" டேய் உன் தங்கச்சியைப் பற்றி உனக்குத் தெரியாதா? விளையாட்டுத்தனமா இருப்பா. மாமியார் இல்லாத வீட்ல போய், இவளால குடும்பம் நடத்த முடியுமா? கல்யாண வயசுல பொண்ணு இருக்கு. அதுக்கு எல்லாம் செய்யணும்." என்று புலம்ப.

" இதுக்கு ஏன் மா டென்ஷனாகுறீங்க? முகிலன் ரொம்ப நல்ல பையன். வீட்டோட மாப்பிள்ளையா வர சொல்லுவோம்." என்ற ரித்விக்கை முறைத்தார் சுபத்ரா.

அவரது பார்வையை கண்டுக்கொண்டவன்," ஏன் மா? வீட்டோட மாப்பிள்ளையா கூப்பிட்டா என்ன தப்பு?" என்று வினவ.

" அவங்க வீட்ல ஒரு பொண்ணு இருக்கு‌‌. அது ஞாபகம் இருக்கா?"

"மானுவுக்கு என்ன அவசரம்? அவரோட தங்கச்சிக்கு முதல்ல கல்யாணம் பண்ணட்டும். அப்புறம் அவர் கல்யாணம் பண்ணிக்கிட்டு, வீட்டோட மாப்பிள்ளையா வரட்டும். நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க கவலைப் படாதீங்க." என்ற ரித்விக், " உனக்கு ஓகே தானே மானு." என்று தங்கையிடம் வினவ.

" டபுள் ஓகேண்ணா. உங்களை விட்டு போக வேண்டாம். ஜாலி!" என்றவள், குதித்துக் கொண்டு சென்றாள்.

அவளது உற்சாகமெல்லாம் முகிலனை சந்திக்கும் வரை தான்.

எப்பொழுதும் வேலை செய்யும் இடத்தில் பேச மாட்டாள். ஆனால் அன்று அவனைத் தேடிச் சென்றாள்.

" முகில் உங்க கிட்ட பேசணும்." என்று உற்சாகமாக கூற.

அவனோ சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவளை முறைத்தான்.

" ப்ளீஸ்! முகில் முக்கியமான விஷயம்."

" லஞ்ச் டைம்ல பேசுறேன்." என்று முடித்து விட்டான்.


அவனை முறைத்துக் கொண்டே சென்றாள் மானசா.

சொன்னது போலவே மதிய உணவு நேரத்தில் அவளை வெளியே அழைத்துச் சென்றான்.

" இப்போ சொல்லு மனு! அங்கே பேசுனா பிரச்சினை ஆகிடும்னு தெரியாதா?" என்று கடிந்துக் கொண்டான் முகிலன்.

மானசாவோ, " இனிமேல் பிரச்சனையாகும்னு பயப்படத் தேவையில்லை. நம்ம விஷயம் வீட்ல தெரிஞ்சிடுச்சு." என்றவள், முதல் நாள் வீட்டில் நடந்த எல்லாவற்றையும் கூறினாள்.

" இங்கே பாரு மானு! உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்காக என் தங்கச்சியை விட்டுக் கொடுக்க மாட்டேன். உனக்கு எந்த கஷ்டமும் வராமல் நான் பார்த்துக்கிறேன் ஆனா வீட்டோட மாப்பிள்ளையா வர முடியாது."

" அண்ணியை வேண்டாம்னு நான் சொல்லலை. முதல்ல அவங்களுக்கு மாப்பிள்ளை பாருங்க. அவங்க மேரேஜ் முடியவும், நீங்க அங்க தனியா இருக்க வேண்டாம்."

" மானு! நீ இன்னும் சின்ன குழந்தை இல்லை. கல்யாணமானலும், என் தங்கச்சி நம்ம வீட்டுக்கு வந்து போற மாதிரி இருக்கும். அதுக்கு நான் தனி வீட்டுல இருந்தா தான் சரியா வரும்."

" எனக்காக வீட்டோட மாப்பிள்ளையா வாங்க முகில்! " என்று கண்கள் கலங்க கூற.

" உனக்கு எந்த தொந்தரவும் வராமல், சந்தோஷமா நான் வச்சுக்குவேன். நம்பிக்கை இருந்தால் என்ன கல்யாணம் பண்ணிக்கோ. இல்லை, வீட்டோட மாப்பிள்ளை தான் வேணும்னா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ." என்றவனை, அடிபட்ட பார்வை பார்த்தாள் மானசா.
வரும் போது இருந்த உற்சாகம், திரும்பி செல்லும் போது அவளுக்கு இல்லை.

வீட்டிற்கு வந்தவளது முகமாற்றத்தைக் கண்டு கொண்ட ரித்விக், " என்ன மானு ஆச்சு? ஏன் இப்படி சோகமாக இருக்க?" என்று வினவினான்.

மானசா அழுதுக் கொண்டே முகிலன் கூறியதை சொன்னாள்.

" மானு அழாதடா. நான் பார்த்துக்கொள்கிறேன். "என்றவன் மறுநாள் முகிலனின் வீட்டிற்கு சென்றான்.
*************************

லஞ்ச் டைமில் மானசாவை வெளியே அழைத்துச் சென்ற முகிலனோ, திரும்பி வரும்போது அவளது முகவாட்டத்தைக் கண்டும் காணாதது போல் இருந்தான். அவனுக்கும் வலி தான். ஆனால் வேறு வழி தெரியவில்லை. மாலை வீட்டிற்கு வந்தவனுக்கு தலை வலித்தது.


தங்கையோ படிப்பு முடிந்தும், வேலைக்குச் செல்லாமல் வேறு ஏதோ கிளாஸ் போய்க்கொண்டு இருந்தாள்.

தனிமை கொடுமையாக இருக்க, அவனை காப்பது போல் ஒருவன் வந்தான். யார் என்று புரியாமல் முகிலன் பார்க்க.

" நான் அபிமன்யு. சைக்காலஜிஸ்ட்." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் அபிமன்யு.

"என்ன விஷயம்? யாரை பார்க்க வந்தீங்க?" என்று வினவ.

" உத்ராவோட அண்ணன் தானே நீங்க. உங்களை தான் பார்க்க வந்தேன்."

" சொல்லுங்க!" என்ற முகிலன், சந்தேகமாக அபிமன்யுவை பார்த்தான்.

" உங்க தங்கையை எனக்கு புடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுகிறேன். நான் அவங்க கிட்ட கூட சொல்லலை. உங்க கிட்ட தான் வரேன். நீங்க என்ன பத்தி விசாரிச்சுட்டு முடிவு எடுங்க." என்றவன், அவனது விசிட்டிங் கார்டை கொடுத்தான்.

" இப்போதைக்கு என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்லை. அதுவுமில்லாமல் நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது."
என்று தயக்கமாக கூறினான் முகிலன்.

" என்னைப் பற்றி விசாரிச்சுட்டு முடிவு எடுங்க முகிலன். பிடிக்கலைன்னா கூட ஒன்னும் பிரச்சினை இல்லை." என்றவனுக்கு, தன்னை கட்டாயம் அவர்களுக்குப் பிடிக்கும் என்று நம்பிக்கையை இருந்தது.

வெளியே செல்லும் அபிமன்யுவின் காரை பார்த்த ரித்விக்கோ,'இவன் ஏன் இங்கே வந்தான். ஒரு வேளை மானசாவிற்காக பேச வந்தானோ, நோ! என் தங்கச்சிக்கு நான் தான் எல்லாமே செய்யணும்.' என்று எண்ணிக் கொண்டே நுழைந்தான்.

ரித்விக்கை பார்த்ததும், முகிலனுக்கு கோபம் பெருகியது. 'ஒரு வேளை சற்று முன்பு உத்ராவை பொண்ணு கேட்டாரே ஒருத்தர், அவர் கூட இவர் அனுப்பிய ஆள் தானோ?' என்று எண்ணினான்.

" என்ன முகிலன்? வீட்டிற்கு வந்தவங்களை வாங்கன்னு சொல்ல மாட்டீங்களா?"என்றான் ரித்விக்.

" வாங்க சார்."

" மச்சான்னு கூப்பிடலாமே!" என்று ரித்விக் புன்னகை புரிய.

" வீட்டோட மாப்பிள்ளையா வர்ற ஐடியாயெல்லாம் சரி வராது." பட்டென்று கூறினான் முகிலன்.

சுர்ரென ரித்விக்கிற்கு கோபம் வந்தது. இருந்தாலும் அபி ஏன் வந்தான் என்று தெரிந்துக் கொள்வதற்காக பொறுமையாக இருந்தான்.

" வேற விஷயம் இல்லையே." என்று இங்கிருந்து கிளம்பு என்று சொல்லாமல் சொன்னான் முகிலன்.

" அது வந்து, உங்க தங்கச்சிக்கு மாப்பிள்ளை…" என்று ரித்விக் ஆரம்பிக்க.

" ஓஹோ! இப்போ அபிமன்யுன்னு ஒருத்தர் வந்தாரே. சைக்காலஜிஸ்டா இருக்கேன்னு சொன்னாரே, அவரை நீங்க தான் அனுப்பினீங்களா? உங்க தங்கச்சியை பிடிச்சிருக்கு. விசாரிங்கன்னு கார்டு கொண்டு வந்தப்பவோ எனக்கு சந்தேகம் தான்." என்று படபடவென பொறிந்தான் முகிலன்.

" நீங்க என்ன சொல்றீங்க புரியலை முகிலன். நான் சொல்ல வந்ததே வேறு. உங்க தங்கச்சியை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். வீட்டோட மாப்பிள்ளையா இருக்க பிரியமில்லைன்னா, தங்கச்சி வீட்டில் வந்து இருக்கலாம்ல." என்று கேட்க.

" நீங்க… நீங்க உண்மையா தானே சொல்றீங்க?" என்று சந்தோஷத்துடன் வினவினான் முகிலன்.

"ஆமாம் நாளைக்கு எங்க அம்மாவோட வந்து முறைப்படி பொண் கேட்குறேன்." என்று ரித்விக், படபடவென திட்டங்கள் தீட்டி விட்டான். அவனுக்கு அபிமன்யுவை வருத்தப்பட வைக்க வேண்டும். இங்க வந்து பொண்ணு கேட்கிறான் என்றால் அவனுக்கு முகிலனின் தங்கையை பிடித்திருக்கிறது என்று புரிந்து விட்டது. பிறகென்ன யாரையும் யோசிக்கக் கூட விடாமல் திருமணம் வரைக்கும் கொண்டு வந்தான்.'

அபிமன்யு பொண்ணு கேட்டதிலிருந்து, ரித்விக், உத்ராவின் கல்யாணம் வரை எல்லாவற்றையும் கூறினான் முகிலன்.

எல்லாவற்றையும் கேட்ட உத்ராவோ,"இதுல ரித்வியோட தப்பு என்ன இருக்கு? இவர்தான் என்ன பொண்ணு கேட்டு வந்தார்னு ரித்விக்கு தெரிஞ்சு இருக்காது. "என்றாள்.

" நான் சொன்னேனே உதி. அபிமன்யு சைக்காலஜிஸ்ட்னு உன்னை பொண்ணு கேட்டாங்கன்னு எல்லா விவரமும் சொன்னேன்." என்றான் முகிலன்.

"இந்த ஊர்ல எத்தனை பேர் இருக்காங்களோ? பாவம் இறந்தவர் மேலயே ஏதாவது பழி சொல்லாதீங்க?" என்றவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

கண்ணைத் துடைத்தவள், "அண்ணா! நீங்க இப்படி மாறுவீங்கன்னு நினைக்கலை. உங்க கல்யாணத்துக்காக தான் அவர் அவ்வளவு முயற்சி செய்தார்."என்று அண்ணனிடம் சண்டைக்குச் சென்றாள்.

' ரித்விக் என்னிடமே உன் காதலின்னு தெரி
ஞ்சுதான் கல்யாணம் பண்ணேன்னு சொன்னான். அதை நான் சொன்னாலும் இவ நம்பமாட்டா. இவளுக்கு என் அன்பை எப்படி புரிய வைப்பேன்.' என்று வலியோடு அவளைப் பார்த்தான் அபிமன்யு.
 
Last edited: