• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் 🌈-2

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில் -2

மனதின் வலியை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தான் அபிமன்யு. ஆட்டம்,பாட்டம் இன்னும் குறையவில்லை. கொஞ்ச நேரம் பொறுத்தவனால் அதற்கு மேல் அந்த சூழ்நிலையில் இருக்க முடியவில்லை. ஒரு கட்டத்திற்கு பிறகு மூச்சு முட்ட ஆரம்பிக்க, சற்று வெளிக்காற்றை சுவாசிக்கலாம் என்று எழுந்தான்.

கையில் பஞ்சுமிட்டாயுடன் ஓடி வந்த ஒரு குழந்தை மோத, " ஹேய் குட்டி! மெதுவா போ." என்றவன், வெளியே சென்றான்.

அங்கே இருந்த கூட்டத்தைப் பார்த்து இன்னும் மலைப்பாக இருந்தது. பஞ்சுமிட்டாய், பாப்கார்னிலிருந்து, சிறுவயதில் சாப்பிட்ட தேன்மிட்டாய், பம்பரமிட்டாய், எள்ளுருண்டை, கடலருண்டை எல்லாம் ஒரு பக்கம் ஸ்டால் போட்டிருக்க, மறுபக்கம் ஐஸ்கிரீம், பழ வகைகள் எல்லாம் இருந்தது. காஃபி, டீ, பாதாம்பால் ஒரு பக்கம் சுடச்சுட கொடுத்துக் கொண்டிருந்தனர். மக்கள் கூட்டம் உள்ளே இருந்ததை விட, வெளியே அதிகமாக இருந்தது. காசு இருந்தால் போதும், புதுமை என்ற பெயரில் தேவைக்கு அதிகமாக உணவுப் பொருட்களை வீணடித்துக் கொண்டிருந்தனர். இந்த ஆடம்பர மோகம் என்று குறையுமோ தெரியவில்லை. பணத்தை தண்ணீராக இறைத்து எங்குத் திரும்பினாலும் எதாவது ஸ்டால் போட்டு இருக்க. மக்கள் கூட்டமும் முண்டியடித்துக் கொண்டிருந்தது. பாதிக்கு மேல் குப்பையில் தான் சென்றது‌.


இதையெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு லேசாக தலைவலித்ததது

' காஃபி குடிச்சா தலைவலிக்கு நல்லா இருக்கும். பட் இந்த கூட்டத்துல எப்படி காஃபி வாங்கிக் குடிப்பது.' என்று தயங்கி நின்றான்.

அவனை காப்பது போல் அவனது டிரைவர் அருகே வந்து," என்ன சார்? ஏன் இங்க இருக்கீங்க? எதுவும் வேணுமா?" என.

" யா… ஒன் கஃப் காஃபி ப்ளீஸ்." என்ற அபிமன்யுவின் மனதில், ' இப்படியே கிளம்பி போய்விடலாமா?' என்று ஒரு யோசனை ஓடிக்கொண்டிருக்க.

அதை தடை செய்வது போல எங்கிருந்தோ வந்தார் சுபத்ரா.
அவரது கண்களோ தவிப்புடன் அவனைப் பார்த்தது.

" அபி! ஏன் வெளியே வந்துருக்க. உள்ள வா பா." என்று படப்படப்பாக கூறினார்.

டிரைவருடன் பேசிக் கொண்டிருப்பதை தூரத்திலிருந்து பார்த்து விட்டு, 'எங்கே தனது மகன் கிளம்பி போயிடுவானோ!' என்று பயத்துடன் வந்தார்.

அவரது பயத்தை கண்டு கொண்டவனது முகம் ஒரு கணம் இளகியது. அதை வெளி கட்டாமல், "தலைவலி. அது தான் கொஞ்ச நேரம் வெளியிலிருக்கலாம்னு வந்தேன்." என்றான்.

" என்னபா பண்ணுது? நான் தைலம் எடுத்துட்டு வரேன். ஃபர்ஸ்ட் ப்ளோர்ல ரூம் இருக்கு. அங்க போய் நீ முதல்ல ரெஸ்ட் எடு." என்று படபடக்க.

இப்பொழுது அபிமன்யுவின் முகம் இறுகியது." அதெல்லாம் வேண்டாம். கொஞ்ச நேரம் வெளியே நிக்குறேன். சரியாகிடும்." என்றான்.

" இந்தா அபி ரூம் கீ. நைட் இங்கேயே ஸ்டே பண்ணு. நீ இங்க இருப்பதானே. கல்யாணம் முடிஞ்சு தானே கிளம்புவ!" என்று கெஞ்சுதலாக கேட்க.

" இல்லை… எர்லி மார்னிங் கல்யாணம் முடிஞ்சதும் சென்னை கிளம்புறேன். அங்க இருந்து நியூயார்க்ல ஒரு கிளைண்ட்ட மீட் பண்ணனும். இங்கே ஸ்டே பண்ணா செட்டாகாது. வெளியே ஹோட்டல்ல ரூம் போட்டுருக்கேன்."

"ஓ…" என்ற சுபத்ரா, தளர்ந்த நடையுடன் அங்கிருந்து கிளம்பினார்.


அவரையே பார்த்துக் கொண்டிருந்தான் அபிமன்யு. பங்ஷன் நடக்கும் ஹால் அங்கிருந்தே நன்றாகத் தெரிந்தது.

உள்ளே நுழைந்த சுபத்ரா தன்னுடைய கவலை, பயம் எல்லாவற்றையும் தனக்குள்ளே புதைத்துக் கொண்டு கம்பீரத்தை மீட்டெடுத்து நிமிர்ந்த நடையுடன் மேடைக்கு சென்றார்.
அதைப் பார்த்த அபிமன்யுவின் முகத்தில் கேலிப் புன்னகை மலர்ந்தது.

'ஹும்! இந்த தைரியமெல்லாம் அவங்க மாமியாருக்கும், ஊருக்கும் முன்னால் தான். என்னிடம் மட்டும் அன்பை எதிர்ப்பார்க்கும் குழந்தை. ஆனால் என்னால் பழசையெல்லாம் மறக்க முடியவில்லையே!' என்று எண்ணியவன், தோளைக் குலுக்கிக் கொண்டு வேடிக்கைப் பார்த்தான்.


சிறு குழந்தைகளோடு குழந்தையாக பெரியவர்களும் மாறியிருந்தனர்.
தங்களுடைய பொசிஷனை கூட மறந்து, கூட்டத்தில் நின்றுக் கொண்டிருந்தனர். அதை எல்லாம் கவனித்துக் கொண்டே இருந்தவனது மனமோ தனது மருத்துவ மூளையை பயன்படுத்தியது. அங்குள்ளவர்களின் மனநிலையை ஆராய்ந்தது. சற்று நேரத்தில் அவன் தலைவலியும் குறைந்தது.

நேரம் போய்க் கொண்டிருக்க, கூட்டமும் களையத் தொடங்கியது. சுபத்ரா அதற்குள் இரண்டு முறை வந்து அபிமன்யுவை சாப்பிட அழைத்தார்.

"எனக்கு பசிக்கவில்லை." என்று மறுத்து விட்டான்.

இந்த முறை வந்த சுபத்ராவோ, " அபி! மானசா உன்னை கேட்டுட்டே இருக்கா… நீயும் நாளைக்கு சீக்கிரம் கிளம்பணும்னு சொன்ன. அதனால ஸ்டேஜுக்கு போய் இப்பவே ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாம் அபி!" என்று யாசிப்பாக அவனைப் பார்த்தார்.

அவரது யாசிப்பில்,மறுக்க முடியாமல் அவர் கூட சென்றான். அவன் முகத்தில் ஒரு நக்கல் புன்னகை ஒட்டிக் கொண்டது. ' மிஸஸ் சுபத்ரா நந்தன்! உங்களுக்கு பொய் கூட சொல்லத் தெரியலையே. ரித்விக் இருக்கும் போது மானசா என்னை தேட மாட்டாள். தெரிஞ்சும் ஏன் வரேன்னா, என்னால என் உரிமையை விட்டுத் தர முடியாது. அவளுக்கு அண்ணனாக நான் அங்கு இருக்க வேண்டும்.' என்று எண்ணிக் கொண்டான்.


இல்லையென்றால் அவன் மனம் படும் பாட்டிற்கு இங்கே இருக்கவே மாட்டான். உள்ளுக்குள்ள நொறுங்கிப் போயிருந்தான். சிறுவயதிலிருந்தே ஏமாற்றத்தையும், துரோகத்தையுமே சந்தித்தவன், மீண்டும் ஒரு முறை ஏமாந்து விட்டான். அது அவனது இதயத்தை பல ஊசி குத்துவது போல் குத்திக் கொண்டிருந்தது. எப்படியும் தங்கைக்கும், தம்பிக்கும் வாங்கிய பரிசை கொடுத்துவிட்டு கிளம்ப வேண்டியது தான்.

' ரித்விக்கை நான் தம்பியாகத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். அவன் தான் என்னை அண்ணனாக நினைக்கவில்லை. அவன் மட்டுமா? மொத்த குடும்பமே தான் அவனை நான் தம்பியாக நினைப்பது இல்லை என்று தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.' என்று எண்ணி பெருமூச்சு விட்டுக் கொண்டே மண்டபத்திற்குள் சென்றான்.

முகத்தில் எதையும் காட்டாமல் புன்னகை உடன் மேடை ஏறினான் அபிமன்யு. "அண்ணா!" என்று மானசா புன்னகையுடன் அழைக்க.

' எத்தனை அண்ணன் தான் இவளுக்கு? இந்த மச்சான்களோட தொல்லை தாங்கலை!' என்று எண்ணிக் கொண்டே திரும்பிப் பார்த்தான் முகிலன். இதுவரை ஏழெட்டு பேரையாவது அறிமுகம் செய்திருந்தாள் மானசா. எல்லோரும் அவளது கசின்ஸ். அபிமன்யு அவளது உடன் பிறந்தவன்.

மானசாவோ‍, " முகில்! இவர் என்னோட அண்ணன் அபிமன்யு…சைக்காலஜிஸ்ட். அண்ணா! இவர் தான்…" என்று முடிப்பதற்குள்,

" உன்னோட அவர் சரி தானே!" என்றவனது பார்வை முகிலனை கூறுப்போட்டது.

முகம் மாறிய முகிலன், மெல்ல சமாளித்துக் கொண்டு," ஹாய்…" என்று கையை நீட்ட.

அபிமன்யுவோ கையை நீட்டாமல், கைகளை கூப்பியவன், இருவருக்கும் வாழ்த்தை தெரிவித்து விட்டு பரிசை தங்கையின் கையில் கொடுத்தான்.
முகத்தில் வெட்கப் புன்னகையுடன் அதை வாங்கியவள், பின்னே நின்றவர்களிடம் கொடுத்தாள். முகிலனின் முகமோ கருத்துப் போனது.

முகிலனின் முக மாற்றத்தை யாரும் கவனிக்கவில்லை. அபிமன்யுவோ
தங்கையின் தோளில் கைப் போட்டப்படி ஃபோட்டாவிற்கு போஸ் கொடுத்தான்.

இருவரையும் ஒன்றாக பார்த்த சுபத்ராவின் உள்ளம் நிறைந்தது‌.


ரித்விக்கிடம் சென்றவன் பரிசை கொடுத்து விட்டு, இருவருக்கும் பொதுவாக வாழ்த்தை கூறியவன் விறுவிறுவென கீழே இறங்க முயன்றான்.

ரித்விக்கின் அருகே நின்று ஃபோட்டோ எடுக்க மனமில்லை, அவனுக்கு அருகே இருந்தவளை நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கு அவனுக்கு தைரியமில்லை. அதனால் தான் கீழே செல்ல முயன்றான்.

அபிமன்யு அமைதியாக சென்றாலும் ரித்விக் விடவில்லை. அபிமன்யு கொடுத்த பரிசை மேலோட்டமாக பார்த்தவன், தனது கோர்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டே , " மை டியர் அண்ணா!" என்று அழைத்து அபிமன்யுவின் கைகளைப் பிடித்துக் கொண்டு, அவனை கீழே செல்ல விடவில்லை.

அந்த பெரிய மேடையில் ஒரு ஓரமாக இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
கூட்டம் அவ்வளவாக இல்லை. அதனால் அவர்களது பேச்சை யாரும் கவனிக்கவில்லை.

" ஃபோட்டோ எடுக்காமல் எங்க ஓடுற? என் கூட நிக்க பிடிக்கலைன்னா, உத்ரா கூட நிக்கலாமே!" என்று கேலியாக அவனைப் பார்த்தான்.

" ஷட் அப்! இப்படியெல்லாம் பேச அசிங்கமா இல்லையா ?" என்று மெல்லிய குரலில் கடிந்துக் கொண்டான் அபிமன்யு.

" ஆஹான்! அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஹனிமூன் டிக்கெட் வாங்கிக் கொடுக்குறீயே, அது தான் அசிங்கம். நாங்க எங்க ஹனிமூன் போகணும்னுங்குறதை நாங்க தான் முடிவு பண்ணுவோம் புரியுதா?" என்று சிரித்துக் கொண்டே கூறினான் ரித்விக்.

அவன் கண்களோ பளபளவென ஜொலித்தது.

" ப்ச்…என் தங்கச்சிக்கு மட்டும் தான் குடுக்கலாம்னு பார்த்தேன். அப்புறம் அம்மா வருத்தப்படுவாங்க. சோ, அதான் மானுக்கு கொடுத்த மாதிரி, உனக்கும் கொடுத்தேன். அதை பயன்படுத்துறதும், பயன்படுத்தாமல் இருப்பதும் உன் விருப்பம்." என்றவன் அங்கிருந்து செல்ல முயன்றான்.

" ஓன் மினிட்… நாளையிலிருந்து உத்ரா, மிஸஸ் ரித்விக். அதை மைண்ட்ல வச்சுக்க. இனி உத்ராவை கனவுல கூட நினைச்சு பார்க்கக் கூடாது. புரியுதா? அப்புறம் உனக்குத் தான் அசிங்கம். நான் எப்படி நடந்துப்பேன்னு தெரியுமே? அதனால எப்பவும் போல ஒதுங்கி போயிடணும், மை டியர் பிரதர்." என்று எப்பவும் போல வார்த்தைகளை விஷமாக கொட்டினான்.

அவனது பேச்சைக் கேட்ட அபிமன்யு முகத்தில் எதையும் காட்டாமல், சுற்றிலும் பார்த்தான். அண்ணனும், தம்பியும் பேசிக் கொள்ளட்டும் என்று எல்லோரும் ஒதுங்கியே இருந்தனர். உத்ராவோ ஃபோட்டோகிராஃபரிடம் முக்கியமாக ஏதோ கூறிக் கொண்டிருந்தாள்.

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு ரித்விக்கிடம் பார்வையை திருப்பினான் அபிமன்யு.

" உனக்கு எல்லாம் தெரியும் ரைட். எப்பவும் போல இதுவும் உன் வேலை தானே! நினைச்சேன்."

"யெஸ் டியர் பிரதர். உனக்கு ஒரு துன்பம் என்றால் அது என்னால மட்டும்தான் வரும்." என்று கண்கள் முழுக்க பழிவெறி மின்ன கூறினான் ரித்விக்.

" இப்போ உனக்கு என்ன வேண்டும்?" என்று அவனை கூர்ந்து பார்த்துக் கொண்டே வினவினான் அபிமன்யு.

" சிம்பிள். உத்ராவை மறந்திடு. தம்பி மனைவியை நினைச்சு பார்க்குறது ரொம்ப தப்பு." என்று கண்ணை சிமிட்டி கூறினான் ரித்விக்.

" லுக் ரித்விக். நான் வந்து தம்பி மனைவியை லவ் பண்ணலை. அடுத்தவனோட பொண்டாட்டியை அப்படி நினைக்கிற ஆளுமில்லை. என்னோட லவ்வரை தான் நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட புரியுதா? எப்பவுமே என்னோடது எல்லாத்தையும் பறிச்சிக்குறது நீ தான். நான் வேணாம்னு விட்டுக் கொடுத்துட்டு போவேன் புரியுதா? என் அம்மா, அப்பா, தங்கைன்னு நிறைய விட்டுக் கொடுத்துட்டேன். அது இப்பவும் தொடருது. போனால் போகட்டும் பொழைச்சு போடா தம்பி." என்று கேலியாக சிரித்தபடியே அங்கிருந்து சென்றான் அபிமன்யு.

'என் லவ்வர் தான் உன் மனைவி.' என்று அபிமன்யு கூறிய வார்த்தை அவனது காதுக்குள்ளே ஒலிக்க, முகம்மெல்லாம் இறுகிப் போய் நின்றான்.


அதற்குள் அங்கு வந்த போட்டோகிராபர்,"சார்… ஃபோட்டோ எடுக்கணும் வாங்க."என்று கூற.

"இல்லை டயர்டா இருக்கு."என்றான் ரித்விக்.

" ரித்தி! ஃப்ரீ வெட்டிங் ஷூட் எடுக்கலாம்னு ஆசைப்பட்டேன். அதுக்கு தான் டைம் இல்லன்னு சொல்லிட்டீங்க. இப்பவாவது கொஞ்சம் எடுக்கலாம்ல" என்றாள் உத்ரா.

" இல்லை உதி ஐ அம் வெரி டயர்ட். அப்புறம் நாளைக்கு மேடையில தூங்கிக்கிட்டே தாலிக்கட்ட போறேன்."

"ஏதாவது சாக்கு சொல்லாதீங்க ரித்தி." என்று கோபத்தை முகத்தில் காட்டினாள்.

" ஹேய் உதி ! நோ கோபம். இன்னைக்கு வேண்டாம் உதி. நம்ம ஹனிமூனுக்கு போகும் போது போஸ்ட் வெட்டிங் ஷூட் எடுத்துக்கலாம். ஓகே வா." என்று சமாதானம் செய்தவனோ மனதிற்குள் அபிமன்யுவை திட்டிக் கொண்டிருந்தான். ' டேய் அபி! நான் உன்னை கஷ்டப்படுத்தனும்னு நினைத்தால், நீ என்னை கஷ்டப்படுத்திட்ட. இருடா உனக்கு இருக்கு.' என்று திட்டிக் கொண்டிருந்தான்.

அவனது வார்த்தையை கேட்ட உத்ராவோ,"ரியலி!" என்றவள் துள்ளிக் குதித்தாள்.


ரித்விக் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

இதையெல்லாம் வலியுடன் அபிமன்யு பார்த்துக் கொண்டிருந்தான்.

அபிமன்யுவின் பார்வையை பார்த்த பர்வதம், அது சென்ற இடத்தைப் பார்த்து விட்டு அவரது மனது திடுக்கிட்டது. வேகமாக மேடைக்கு சென்றார்.

" ஏன்டியம்மா உத்ரா. கொஞ்சமாவது கல்யாணம் பொண்ணா அடக்க ஒடுக்கமா இரு. நீ இப்படி குதிச்சா உன்னை தான் எல்லோரும் பார்க்குறாங்க. கண்ணு பட்டுடும்." என்று கடிந்துக் கொண்டார்.

அவருக்கு அவரது கவலை. அபிமன்யுவின் பார்வையை பார்த்ததும் உள்ளுக்குள் குளிரடித்தது. இதுவரைக்கும் உத்ராவிடம் நேரடியாக தனது கோபத்தை காட்டாதவர், முதல் முறையாக காட்டினார்.

உத்ராவோ அதற்கெல்லாம் கொஞ்சமும் பயப்படாமல் அவருடன் வாதாடிக் கொண்டிருந்தாள்.

" பாட்டி! அதெல்லாம் யாராலும் என் மேல கண்ணு வைக்க முடியாது. அதுக்காகத் தானே ஐலைனர், மஸ்காரான்னு கண்ணுக்கு பார்டர் கட்டி விட்டுருக்கேன். அதைத் தாண்டி ஒன்னும் செய்ய முடியாது." என்றவள் கலகலவென நகைக்க.

அவளது சிரிப்பைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான் அபிமன்யு. அது தான் அவன் உத்ராவின் முகத்தில் கடைசியாக பார்த்த சிரிப்பு.
 
Last edited: