• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் 🌈-21

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில் -21

"இல்லை! என்னால ரித்வியை தப்பா நினைக்க முடியாது. எனக்கு அவர் நல்லது தான் செய்து இருக்கிறார்." என்று கூறிய உத்ராவை அதிர்ச்சியாக பார்த்தான் அபிமன்யு.

" உத்ரா! அப்போ நான் சொல்றதை நம்ப மாட்டியா?" என்று அவளைப் பார்த்துக் கொண்டே அழுத்தமாக வினவ.

" அது வந்து…"

" சரி விடு உத்ரா. ரித்விக் கொடுத்து வைத்தவன், என் அம்மாவுக்கு என்னை விட அவன் தான் முக்கியம். என் தங்கைக்கு அவன் தான் ஃபர்ஸ்ட். அதுக்கு பிறகு தான் நான். அதே போல, என் மனைவிக்கும் அவன் தான் முக்கியம்." என்று விட.

அடிப்பட்ட பார்வை பார்த்த உத்ராவோ, " இதுக்குத்தான் நான் கல்யாணம் வேணாம்னு சொன்னேன். சாதாரணமா சொல்ற வார்த்தையை கூட, தப்பான அர்த்தத்துல எடுத்துக்கிறீங்க. ரித்விக்கிற்கு என் மனதில் எப்போதும் இடம் உண்டு. அதை மாற்ற முடியாது. என்னால என்னைக்கும் ரித்விக்கை விட்டுக் கொடுக்க முடியாது." என்று கூறி விட்டு அழுதாள்.

"ப்ளீஸ் அழாதே உதி! நானும் தப்பா நினைக்கலை. " என்று கெஞ்சினான் அபிமன்யு.

உத்ராவின் கண்களிலிருந்து நீர் வடிந்துக் கொண்டே இருந்தது.

அவளை அணைத்து சமாதானம் செய்ய முயல, எதற்கும் அடங்காமல் உத்ராவின் விழியிலிருந்து அருவியென நீர் வழிந்துக் கொண்டே இருந்தது.

சற்று நேரம் பொறுத்துப் பார்த்த அபிமன்யுவோ, பிறகு அவளது விழிநீரை தனது இதழ்கள் கொண்டு துடைத்தான்.

அதிர்ச்சியில் அவளது விழிகள் விரிந்து, வேலை நிறுத்தம் செய்ய, அவனது இதழ்களோ தொடர்ந்து யுத்தம் புரிய ஆரம்பித்தது. தயக்கங்கள் மெல்ல, மெல்ல மறைய, ஆசை தீரா காதலுடன் அவளை ஆட்கொண்டான். மாலை நேரம் மயங்கி, இரவு பொழுது புலர, இவர்களது வாழ்க்கையிலோ வானவில் வந்து ஒளி வீசிக் கொண்டிருந்தது.
******************

காலையில் ஃபேக்டரி செல்வதற்கு முன்பு தங்கையை பார்ப்பதற்காக வந்தான் முகிலன்.

அழுதுக் கொண்டே சென்ற தங்கையின் ஞாபகம் தான் முகிலனிற்கு. இரவே வந்து பார்க்க அவனது மனம் துடித்தது. ஆனால் அபிமன்யுவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருந்தவன், காலையிலே வந்து விட்டான்.

ரிசப்ஷனில், " அபிமன்யுவை பார்க்க வேண்டும்." என்றான் முகிலன்.

" உட்காருங்க சார்." என்ற ரிசப்ஷனிஸ்ட் இன்டர்காமில் அபியை தொடர்புக் கொண்டாள்.

அயர்ந்து அவனது தோளில் உறங்கிக் கொண்டிருந்தாள் உத்ரா. இன்டர்காம் சத்தத்தில் கண் விழித்த அபிமன்யுவின் முகத்தில் நிறைவான புன்னகை மலர்ந்தது. கலைந்திருந்த முடியை ஒதுக்கி, அவளது நெற்றியில் முத்தம் வைத்தவன் மெதுவாக அவளை தலையணையில் நகர்த்தினான்.

அவளோ அந்த அசைவில் விழித்து, அவனைப் பார்த்தவள், நேற்றைய இரவின் நினைவில் சங்கடப்பட்டவள், பார்வையை திருப்பிக் கொண்டாள்.

லேசாக சிரித்தவன், அவளது கன்னத்தை வருட, மீண்டும் இன்டர்காம் ஒலித்து அவனை தடை செய்தது.

இன்டர்காமில் அபி பேசிக் கொண்டிருக்க, உத்ராவோ அங்கிருந்து நழுவி குளியலறைக்குள் நுழைந்தாள்.

"சார்! முகிலன் சார் வந்திருக்கிறார்."

" ஓ! காட்டேஜ்ஜுக்கு வர சொல்லுங்க. அப்படியே மூனு பேருக்கும் டீ சொல்லிடுங்க." என்றவன், ஹாலில் இருந்த பாத்ரூமில் ஃப்ரெஷ்ஷப்பாகி விட்டு வந்தான்.

முகிலனும் உள்ளே வர, " வாங்க மச்சான்." என்று புன்னகையுடன் அழைத்தான் அபிமன்யு.

முகிலனோ உத்ராவை தேடினான்.

"உதி குளிச்சிட்டு இருக்கா. நீங்க உட்காருங்க." என்றவன், டீயை எடுத்து அவனுக்கு ஊற்றிக் கொடுத்தான்.

உத்ராவும் சீக்கிரமாகவே குளித்து வந்தாள். தங்கை வந்ததும் அவளை ஆராய்ச்சியாக பார்க்க, அவள் முகமோ சிவந்து விகசித்தது.

" என்ன விஷயம் மச்சான்? காலையிலே வந்திருக்கீங்க."

"அது வந்து…"என்று தயங்கினான் முகிலன்.

" என்ன விஷயம் முகில்? எதுவா இருந்தாலும் சொல்லுங்க. ஏன் இவ்வளவு தயக்கம்?"

" நேற்று வீடு வாங்கணும்னு சொன்னீங்கள்ல வாங்கியாச்சா?'

" கல்யாணம் முடிவு பண்ணதுல இருந்து, வாங்கிறதுக்காக புரோக்கர் கிட்ட சொல்லி வச்சிருக்கேன். இன்னும் ஒன்னு அமையலை."

"நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே அபி?"

" எதுக்கு தயக்கம் முகில்? சொல்லுங்க." என்று இலகுவான குரலில் கூறினான் அபிமன்யு.

" அது வந்து எங்க வீடு சும்மா தான் இருக்கு. நீங்க தப்பா நினைக்கலைன்னா அங்கே இருக்கலாம்." என்று கூற.

அபிமன்யுவோ பதில் கூறாமல் மனைவியை பார்த்தான்.

அவளது கண்களிலோ ஆர்வம் இருந்தது. சற்று விளையாடிப் பார்க்க எண்ணியவன், " நீங்க எங்க வீட்ல, வீட்டோட மாப்பிள்ளையா இருக்க மாதிரி, நான் உங்க வீட்டுல வீட்டோட மாப்பிள்ளையா இருக்கணும்னு சொல்றீங்க அதானே."

" ஐயோ! நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. உத்ராவுக்கு அந்த வீடுன்னா பிரியம். அதான் சொன்னேன். வேணும்னா வீட்டை உத்ரா பேர்ல மாத்திடுறேன்."

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்." என்ற அபிமன்யுவைப் பார்த்த முகிலன், அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்க.

அண்ணனுக்கு ஆதரவாக வந்தாள் உத்ரா.

"அபி ப்ளீஸ்! நம்ம அங்கே போய் இருக்கலாம்." என்றாள் உத்ரா. முன்பெல்லாம் இந்த வார்த்தையை கேட்டா ரித்விக்கின் ஞாபகம் வரும். ஆனால் நேற்று இரவெல்லாம் அபியின் வாயிலிருந்து ப்ளீஸ் என்ற வார்த்தை ஒலித்துக் கொண்டே இருந்ததிலிருந்து, அவனைத் தவிர வேறு நினைவு எதுவும் அவளுக்கு வரவில்லை.

" அங்கே இருந்து நம்ம ரிசார்ட்டுக்கு வர்ற தொலைவு அதிகமாக இருக்கும். அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது." என்று வம்பு வளர்த்தான் அபி.

" கார்ல தானே வருவோம். அது ஒன்னும் சிரமமா இருக்காது. அதுவுமில்லாம பக்கத்துல தானே நம்ம வீடு. அத்தையை, அண்ணனை, அண்ணியை எல்லாம் அடிக்கடி போய் பார்க்கலாம்."

" அப்போ கண்டிப்பா நம்ம அங்கே போக வேண்டாம். அந்த கிழவி ஏதாவது சொல்லும். நீ அழுவ. எதுக்கு வம்பு." என்று சொல்ல.

உத்ராவிற்கு அவர்கள் பெற்றோர் வாழ்ந்த வீட்டிலிருக்க விருப்பம். அதை சொல்லாமல் வேறு காரணங்கள் சொல்லி, அங்கே போகலாம்னு அவள் சொல்ல, அபிமன்யுவோ வேறு, வேறு காரணங்கள் சொல்லி மறுக்கவும், அவனை முறைத்த உத்ரா, " நான் அழுதா என்ன, அதான் நீங்க சமாதானப் படுத்திடுவீங்களே. " என்று தன்னை மீறி வார்த்தைகளை விட்டிருந்தாள்.

அவள் கூறியதை கேட்டதும், " உனக்கு ஓகேன்னா, எனக்கு டபுள் ஓகே." என்று உத்ராவை குறுகுறுவென பார்த்தான்.

தலையில் கை வைத்து குனிந்தவளது முகமோ சிவந்திருந்தது.

இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த முகிலனுக்கோ மனம் நிறைந்திருந்தது. இவர்களுக்கு இடையே எல்லாம் சரியாகிவிட்டது என்பது புரிந்தது‌.

அபிமன்யுவோ, " அப்புறமென்ன மச்சான், சீக்கிரமா ஒரு நல்ல நாளைப் பாருங்க. " என்றான்.

" பார்த்துடலாம் மச்சான்." என்ற முகிலன், புன்னகையுடனே அங்கிருந்து கிளம்பினான்.

உத்ராவின் அருகே வந்த அபிமன்யுவோ, " உதி! பேசாமல் பாட்டியை நம்ம கூடவே வச்சுக்கிட்டா என்ன? இன்னும் நமக்கு வசதி தானே." என்று குறும்புடன் வினவ.

" ஐயோ அபி! தெரியாமல் சொல்லிட்டேன். ஆளை விடுங்க. " என்றவள் அங்கிருந்து எழுந்து செல்ல முயல.

"அப்படியெல்லாம் விட முடியாது." என்றவன் அவளை இறுக அணைத்திருந்தான்.
**********************

சொன்னது போலவே ஒரு நல்ல நாளில் அங்கு அபிமன்யுவும், உத்ராவும் குடி புகுந்தனர்.

சுபத்ராவோ, சமையல் வேலைக்கும், வீட்டு வேலைக்கும் ஆளை வர சொல்றேன் என்று கூற.

மேல் வேலைக்கு மட்டும் ஆள் பாருங்க. சமையலை நாங்களே பார்த்துக்கிறோம் என்றவன், வாய் வார்த்தையாக மட்டும் சொல்லாமல் உத்ராவுடன் சேர்ந்து சமையல் செய்கிறேன் என்று அமர்க்களம் பண்ணிக் கொண்டிருந்தான். அந்த நேரம் அவர்களுக்கான நேரம். இன்னும் ஒருவரை, ஒருவர் புரிந்துக் கொள்ள உதவியாக இருந்தது.

அவர்களது வாழ்க்கை கடல் அலையைப் போலிருந்தது. சில நேரம் பேரலையாய் பொங்கி எழுவதுமாகவும், சில நேரம் அமைதியாக அடங்கிப் போவதுமாக இருந்தது.

அதுவும் ரித்திக் பற்றிய பேச்சு வந்தாலே இருவருக்கும் வாக்குவாதம் நடைபெறும்.

அன்றும் அப்படித்தான் ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்த அபிமன்யு, சற்று நேரத்திலே திரும்பி வந்திருந்தான்.

உத்ரா ரிசார்ட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

" உதி!" என்றவனின் குரலில், புடவையை சரி செய்துக் கொண்டிருந்தவள் வெளியே வந்தாள்.

" என்ன அபி? இப்போ தானே ஹாஸ்பிடலுக்கு போனீங்க, அதுக்குள்ள திரும்பி வந்துட்டீங்க. ஏன் உடம்பு சரியில்லையா" என்று பதறியவள், அவனது நெற்றி, கழுத்தைத் தொட்டுப் பார்க்க.

அவளை லேசாக அணைத்தவன் நெற்றியில் முட்டி, " நான் நல்லா தான் இருக்கேன். இது வேற ஒரு விஷயம். உன் கிட்ட நேரிலே சொல்லலாம்னு வந்தேன்."

" என்ன விஷயம் அபி?"

" நாளைக்கு ஒரு பேஷண்டுக்கு கவுன்சிலிங் கொடுக்கணும். கேரளா வரைக்கும் போறேன். நீயும் என் கூட வர்றியா?" என்று அவளை பார்த்துக் கொண்டே வினவினான்.

"அது வந்து.. ஆன்லைன்ல வேணும்னா கவுன்சிலிங் கொடுங்க அபி."

"உன்கிட்ட நான் ஐடியா கேட்கலை. நான் போறேன்னு முடிவு பண்ணிட்டேன். நீ வர்றியானு தான் கேட்டேன்.

"நானும் வரலை. நீங்களும் போகாதீங்க‌" என்றவளது முகம் வெளுத்து இருந்தது.

" எதுக்கு அங்க வரமாட்டேங்குற? எதை பார்த்து பயப்படுற? இல்லை யாரை காப்பாத்துணும்னு நினைக்கிற?"

" நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியலை அபி."

" உனக்கு புரியுற மாதிரி சொல்றேன். நீ எதையோ என் கிட்ட மறைக்கப் பார்க்குற? நானும் நம்ம கல்யாணம் முடிஞ்சதுல இருந்து, நீ சொல்லுவேன்னு பார்த்தேன், நீ சொல்லலை. அதான் எந்த இடத்தில் பிரச்சினை இருக்கும்னு தோணுதோ, அங்க போனால் எனக்கான தீர்வு கிடைக்கும். அதான் கேரளா போகப் போறேன். ரித்விக்கோட முகத்திரையை கிழிக்கிறேன்."

" நான் எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன். இன்னும் எதுக்கு ரித்வியை நமக்கு நடுவுல இழுக்குறீங்க." என்று பயத்தை மறைத்து வினவினாள் உத்ரா.

" அந்த ரித்விக் வேணும்னே தானே உன்னை தள்ளிவிட்டு, அவனும் கீழே விழுந்தான்."

" வாட்? எப்படி உங்களுக்கு இப்படி எல்லாம் தோணுது? ஒருத்தரை பிடிக்கலைன்னா இப்படியா பேசுவீங்க." என்று வருத்தமாக வினவினாள் உத்ரா.

" நான் ஒன்னும் சும்மா சொல்லல. ரித்விக்கோட ஃப்ரெண்ட் நிதின் கிட்ட இந்த ஆக்ஸிடென்ட் எப்படி நடந்ததுன்னு விசாரிச்சேன். அப்போ தான் அவன் சொன்னான். நீ வேண்டாம்னு சொல்ல, சொல்ல வலுக்கட்டாயமா உன்னை கிஸ் பண்ண முயற்சி செய்தான். அதுல படகு ஆடி கீழே விழுந்தீங்கன்னு சொன்னான். ஆனால் அவனுக்கு போட்ல நின்னு ஆடுனா, கீழே விழுவோம்னு தெரியாதா? அவன் வேணும்னே தான் பண்ணான். என்னை கஷ்டப்படுத்தணும்னா எந்த எல்லைக்கும் போவான். அவன் உயிர் கூட இரண்டாம் பட்சம் தான்." என்று அலட்சியமாக கூறினான் அபிமன்யு.

" ரித்வி உங்களை கஷ்டப்படுத்த எந்த எல்லைக்கும் போவார்னு எனக்கும் தெரியும். ஆனால் இந்த ஆக்ஸிடென்ட் எதிர்ப்பாராமல் நடந்தது."

" ரித்விக் பத்தி நான் என்ன சொன்னாலும் நம்ப மாட்டியே. இப்போ மட்டும் எப்படி ஒத்துக்கற?"

"ரித்வி உங்களுக்கு பண்ண டார்ச்சர் எல்லாத்தையும் மாமா அவரோட டைரில எழுதி வச்சிருந்திருக்கார். அதை அத்தை காலம் கடந்து தான் பார்த்திருங்காங்க. என் கிட்ட சொன்னாங்க. ரித்விக்கே உயிரோட இல்லாத போது, நான் என்ன பண்ண முடியும்னு சொல்லி வருத்தப்பட்டாங்க. அதனால ரித்விக் பற்றி எல்லாம் தெரியும். அதுக்காக அவர் ஒன்னும் என்னை தள்ளிவிடலை."

" உங்க அத்தை எப்போ அவனைப் பற்றி உண்மையை சொன்னாங்க?"

" அது வந்து.. நம்ம கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாள்ல தான் அவங்களே அந்த டைரியை பார்த்தாங்களாம். உடனே என்கிட்டயும் சொன்னாங்க."

" என்னைப் பெத்த அம்மாவும் சரி, கட்டிக்கிட்ட பொண்டாட்டியும் சரி ரித்விக்கை நான் தப்பா நினைச்சுடக் கூடாதுன்றதுல ஓரே மாதிரி தான் இருக்காங்க. இல்லைன்னா உண்மை தெரிஞ்சும் ரெண்டு பேரும் என் கிட்ட சொல்லலை."

" இங்கே பாருங்க அபி. இறந்துப் போனவரைப் பத்தி எதுவும் பேசக்கூடாதுன்னு தான் பேசலை. அதுவுமில்லாமல் எனக்குள்ள ஒரு குற்றவுணர்ச்சி. என்னால தான் ரித்வி இறந்தார்." என்றவளது கண்கள் கலங்கியது.

" என்ன உளர்ற உதி?"

" நான் உளறலை. நாங்க ரெண்டு பேரும் கீழே விழுந்தது எதிர்ப்பாரதது. ரித்விக்கு நீச்சல் தெரியும். எனக்கும் ஒரளவுக்கு தெரியும். ஆனால் நாங்க விழுந்ததும், எங்கிருந்தோ ஒரு ஆள் வந்து எங்க காலை பிடிச்சு இழுத்தாங்க. அந்த ஆள் கிட்ட இருந்து தப்பிக்க முடியலை. அவ்வளவு தான்னு நினைக்கும் போது, ரித்விக் தண்ணீரிலே அந்த ஆளோட சண்டை போட்டு என்னை காப்பாத்தினார். நான் எப்படியோ நீச்சலடித்து மேல வந்துட்டேன். ஆனால் ரித்விக்கால வெளியே வர முடியலை." என்றவளது கண்களிலிருந்து நீர் வழிந்துக் கொண்டிருந்தது.

" ஓ காட்! நீ சொல்றதெல்லாம் உண்மையா உதி?"

" ஆமாம்." என்பது போல் தலையாட்டினாள் உத்ரா.

"ஏன் உதி இவ்வளவு நாளா சொல்லலை? தப்பு செய்தவங்களை அப்படியே விட முடியுமா? யார் செய்தாங்க? எதுக்காக செய்தாங்கன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?"

" நான் கண்ணு விழிக்கவே நாளாச்சு. அப்புறமும் எனக்கு உடனே ஞாபகம் வரலை. என்னாலத் தான் ரித்விக் இறந்ததார் என்ற நினைப்பே மனசுக்கு ரொம்ப பாரமா இருந்தது. அதுக்கப்புறம் நான் கவுன்சிலிங்குக்கு வரும் போது தான் ஞாபகம் வந்தது. சொன்னாலும் இதை யாரும் நம்ப கூட மாட்டாங்க. அதான் நான் சொல்லலை."

" சரி உதி! கேரளால என் ஃப்ரண்ட் ஒருத்தன் அசிஸ்டன்ட் கமிஷ்னரா இருக்கான். அவன் கிட்ட பர்ஸ்னால இதைப் பற்றி விசாரிக்க முடியுமான்னு கேட்குறேன்." என்றவன் உடனே தனது நண்பனுக்கு அழைத்து, அவனுக்கு தெரிந்த அனைத்தையும் கூறினான்.

" டேய் அபி! நீ கொஞ்சம் லேட்." என்றார் அந்த போலீஸ் அதிகாரி.

"என்ன சொல்றடா?"

" நீ சொன்ன அந்த இடத்துல மறுபடியும் ஒரு இன்ஸிடன்ட் நடந்தது. "

" என்னடா சொல்ற?"

"ஆமாம் டா. மூன்று மாசத்துக்கு முன்னால காலேஜ் ஸ்டுடண்ஸ் டூருக்கு வந்துருக்காங்க. வந்த இடத்துலே செல்ஃபி எடுக்கிறேன்னு இரண்டு பசங்க கீழே விழுந்துருக்காங்க. அதுல ஒருத்தவன் இறந்துட்டான். இன்னொருத்தவன் எப்படியோ தப்பிச்சு வந்துட்டான். அவன் தான் யாரோ எங்களை தண்ணிக்குள்ள பிடிச்சு அமுக்குனாங்கன்னு சொன்னான். அந்த கேஸை விசாரிக்கும் போது தான் அங்க பூ பறிக்கிறவன் ரொம்ப நாளா இந்த வேலையை பார்த்துட்டு இருந்திருக்கிறது தெரிய வந்தது."

" எதுக்குடா இப்படி எல்லாம் பண்ணுறான்? அவன் என்ன சைக்கோவா?" என்று நம்ப மாட்டாமல் வினவ.

" அவன் சொன்ன கதையை கேட்டா இன்னும் ஷாக்காவ. இந்த அவசர உலகத்துல எல்லாரும் எவ்வளவு சுயநலமா இருக்காங்க தெரியுமா? பூ பறிக்கிறதுல அவனுக்கு அவ்வளவா வருமானம் இல்லையாம். இந்த மாதிரி தண்ணியில விழுந்து இறக்குறங்களோட பிணத்தை தேடி எடுத்துட்டு வந்தால், பணம் நிறையக் குடுப்பாங்களாம். அவன் வயித்துப்பாட்டுக்காக தண்ணியிலே தவறி விழுறவங்களை, அப்படியே நீச்சலடிக்க விடாமல் காலை பிடிச்சு இழுத்து கொன்னுருக்கான். இப்பத்தான் மாட்டிக்கிட்டான்."

" ஓ காட்! பணத்துக்காக இப்படியெல்லாம் பண்ணுவாங்களா. "

" ம்! இப்படி ஏதாவது ஒரு காரணத்துக்காக தப்பு செய்துட்டு தான் இருக்காங்க. தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்."

" ம்ச்! என் வைஃப் இந்த இன்ஸிடன்டால கொஞ்சம் மெண்டலி அப்ஸெட்டா இருந்தாங்க. அதான் இந்த விஷயத்தை சொல்லாமல் விட்டுட்டாங்க. ரியல்லி சாரி டா. முன்னேயே கம்ப்ளைன்ட் பண்ணி இருந்தால் இந்த உயிர் போகாமல் இருந்திருக்கும்." என்று அபிமன்யு வருத்தமாக கூற.

" விடுடா அபி. என்ன நடக்கணும்னு இருக்கோ அது நடந்து தான் தீரும். கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா அந்த ஆளு இந்த மாதிரி பண்ணிட்டு இருந்திருக்கான். இப்போ உண்மை தெரியணும்னு இருந்திருக்கு. நீ வொரி பண்ணிக்காத. சிஸ்டரை பார்த்துக்கோ அபி." என்றவர் ஃபோனை வைத்து விட.

நண்பன் கூறிய அனைத்தையும் உத்ராவிடம் பகிர்ந்துக் கொண்டான் அபிமன்யு.

" அபி! நான் முன்னாடியே சொல்லியிருக்கணும் தப்பு பண்ணிட்டேன்." என்ற உத்ரா கண்கலங்க.

" உதி! நீ வேணும்னே ஒன்னும் மறக்கலையே. நீயும் மனதளவுல பாதிக்கப்பட்டிருந்த. இனி நடந்து முடிந்ததைப் பற்றி பேச வேண்டாம். தப்பு செய்தவனுக்கு தண்டனை கிடைச்சிடுச்சு. அதை நினைத்து மனசை தேத்திக்கோ" என்ற அபிமன்யு, அவளை தோளில் சாய்த்துக் கொண்டான்.

" ரித்விக்கும் பாவம் தானே. என்னை காப்பாற்ற முயற்சி செய்து உயிரை விட்டுட்டார். அவர் நினைச்சிருந்தா என்னை காப்பாத்தாமல் தப்பிச்சிருக்கலாம்." என்றாள் உத்ரா.

"...." ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தான் அபிமன்யு.

ரித்விக்கை நினைத்து அவனுக்கும் வலித்தது.

"இப்பாவது ரித்விக் மேல உள்ள கோபம் போயி
டுச்சு தானே. இனிமே ரித்விக்கை திட்ட மாட்டீங்களே." என்று அபிமன்யுவிடம் வினவினாள் உத்ரா.

" அது அவ்வளவு சீக்கிரம் மாறாது உதி."

" என்ன?" என்ற உத்ரா, அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.