• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் 🌈-5

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில் - 5

குளித்து முடித்து புத்துணர்ச்சியுடன் இருந்த உத்ரா, ரித்விக் விழிப்பதற்காக, குட்டிப் போட்ட பூனைப் போல் அந்த அறையில் சுற்றிக் கொண்டிருந்தாள். அவன் விழிப்பதாக தெரியவில்லை. அவளது வயிறு வேறு கூப்பாடு போட, அறையை விட்டு வெளியே வந்தாள்.

கீழே ஒருவரையும் காணோம்.' யாரும் இன்னும் எழுந்திருக்கவில்லை போல…' என்று எண்ணியவள், கிச்சனுக்குள் சென்றாள்.

அங்கு சுபத்ரா பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்.

" குட் மார்னிங் அத்தை… இங்க தான் இருக்கீங்களா? யாரையும் காணேமேன்னு பார்த்தேன்." என்ற உத்ராவின் குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தார் சுபத்ரா.

" என்னாச்சு அத்தை? பயந்துட்டீங்களா அத்தை!"

" அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. இவ்வளவு சீக்கிரம் உன்னை எதிர்ப்பார்கலை."

" எனக்கு எழுந்ததும் சூடா ஏதாவது குடிக்கணும். அதான் நேரா கிச்சனுக்கு வந்தேன்."

" ஓ…" என்றவர் மருமகளின் காயத்தை ஆராய.

"என்னத்தை பார்க்கிறீங்க? நான் நல்லா தானே இருக்கேன்." என்று தான் அணிந்து இருந்த புடவை முந்தானையை ஒரு பக்கமாக பிடித்துக் கொண்டு அரை வட்டமாக சுற்றினாள் உத்ரா.

மருமகள் பேச்சை மாற்றுவதை புரிந்துக் கொண்டவர், "உனக்கு என்னமா, ராஜாத்தி மாதிரி அழகா தான் இருக்க." என்றவர், தனக்காக கலந்த டீயை நீட்டியபடி, " டீ பிடிக்கும் தானே. இதை முதல்ல குடி." என்று வினவ.

" இதெல்லாம் என்ன கேள்வி அத்தை. ஊட்டியிலிருந்துக் கிட்டு டீ பிடிக்காமலிருக்குமா?" என்ற உத்ரா. சுபத்ராவிடமிருந்து டீ கஃப்பை வாங்கினாள்.

ஆவி பறக்கும் தேநீர் கோப்பையை வாசம் பிடித்துக் கொண்டே, "ஆஹா! இந்த டீயின் மணம் வீசுவது போல, என் வாழ்க்கையில் மணம் வீசினால் நன்றாக இருக்குமே! " என்றவள், சுபத்ராவைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே,"அப்போ என். எஸ் டீத்தூளை பயன்படுத்துங்க. ட்டொட்டன்ன்…." என்று சொல்லி கலகலவென நகைத்தாள்.

" அடேய்… நம்ம விளம்பரத்தை நீயே கலாய்க்கலாமா?" என்ற சுபத்ராவோ மருமகளின் காதைத் திருக.

" ஐயோ ! ஆளை விடுங்கத்தை. சும்மா விளையாட்டுக்கு தான் கிண்டல் பண்ணேன்." என்று சிணுங்கினாள் உத்ரா.

மாமியாரும், மருமகளும் பேசிக் கொண்டிருக்க, மானசா கிச்சனுக்குள் வந்தாள்.

" அம்மா! சுகர் கொஞ்சமா போட்டு ஒரு டீ." என்றவளோ, அருகே இருந்த உத்ராவை கண்டுக் கொள்ளவில்லை.

" அண்ணி! அண்ணனுக்கு சுகர் அதிகமா போடணும்." என்று இடையிட்டாள் உத்ரா.

" இது எனக்கு." என்ற மானசா, சுபத்ரா நீட்டிய டீயை வாங்கிக் குடித்தப்படியே, உத்ராவின் கையிலிருந்த காலி கஃபை பார்த்தாள்.

" ஹி… ஹி… சாரி அண்ணி."

"காயம் ஆறிடுச்சு போல. நேத்து எங்களை ஒரு வழி பண்ணிட்டீங்க." என்றாள் மானசா.

"அது வந்து…" என்ற உத்ராவோ எதையோ சொல்ல வந்து, தடுமாறிக் கொண்டிருந்தாள்.

" உத்ரா! இந்தா டீ. இதை ரித்விக்கு குடுத்துடு. குலத்தெய்வக் கோவிலுக்கு போகணும். சீக்கிரம் ரெடியாகச் சொல்லு. டையமாகிடுச்சு." என்று மருமகளை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

அருகில் டிஃபனுக்கு ஏற்பாடு செய்துக் கொண்டிருந்த வேலையாட்களை அங்கிருந்து செல்லுமாறு சைகை செய்தவர், நிதானமாக மகளிடம் திரும்பினார்.

" மானு! உன் கிட்ட இதை எதிர்ப்பார்க்லை." என்றவரின் பார்வை வீச்சில் தலைக் குனிந்தாள் மானசா.

" சாரி மா."

" என் கிட்ட சொல்ல வேண்டாம்."

" சரி மா. அண்ணிக் கிட்ட சொல்லிடுறேன்." என்று மெதுவான குரலில் கூறினாள் மானசா.

"அண்ணி கிட்டையும் சொல்ல வேண்டாம். அவ மறக்கணும்னு நினைக்கிற விஷயம் அது. சொல்லனும்னா நம்ம கிட்ட ஏற்கனவே சொல்லி இருப்பா. அவங்க அம்மாவையும், அப்பாவையும் ஒரே நேரத்துல பறிக்குடுத்துட்டு நின்னா. அன்னைக்கு அந்த ஆக்ஸிடென்ட் ஆன போது அவங்களை ரத்த வெள்ளத்துல பார்த்தது அவ மனசை பாதிச்சிருக்கும். அதான் ரத்தத்தை பார்த்த உடனே பயந்துட்டா. அவளுக்கு இருக்கிற ஒரே உறவு உன் வீட்டுக்காரரு. அதான் உங்களை தொந்தரவு பண்ணிட்டா. அதை நீ மனசுல வச்சுகிட்டு இருந்தா எதிர்காலத்தில் உங்களுக்கான உறவு தான் பாதிக்கும்.நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன்."

" சாரி மா. இதெல்லாம் எனக்குத் தெரியாது."

" ஆறு வருஷமா லவ் பண்ற இதெல்லாம் தெரியாதா?"

" அம்மா! நான் தான் ஆறு வருஷமா லவ் பண்ணேன். உன் மாப்பிள்ளையை ஒத்துக்க வைக்க போராடவே என் நேரமெல்லாம் போயிடுச்சு. இப்ப ஒரு வருஷமா தான் உன் மாப்பிள்ளை என் லவ்வுக்கு ஓகே சொன்னார். இதுல எங்களைப் பத்தி பேசவே டைம் கிடைக்கலை." என்று மானசா பெருமூச்சு விட.

"அதைத்தான் சொல்றேன். உங்களைப் பத்தி மட்டும் தான் நீங்க பேசணும். உங்களுக்குள்ள வேற யாரையும் வரவிடக் கூடாது. உங்க ரெண்டு பேருக்குள்ள வர சண்டையோ, சமாதானமோ! அது உங்களால் மட்டுமே நடந்திருக்கணும். அப்புறம் நம்ம குடும்ப விஷயம் நமக்குள்ள மட்டும் தான். வெளியாளுக்கு முன்னாடி எதுவும் பேசக்கூடாது. புரியுதா?"

" புரியுதுமா." என்றவளின் முகம் யோசனையில் ஆழ்ந்தது. 'நேத்து நான் ஏன் இவ்வளவு சைல்டிஷ்ஷா நடந்துக்கிட்டேன். இனி நான் எப்படி முகிலனிடம் பேசுறது? என்னை தப்பா நினைச்சிருப்பாரோ? சேச்சே இருக்காது. என்னோட உணர்வுகள் அவருக்கு புரிஞ்சிருக்கும்.' என்று எண்ணியவள் தனிமையை நாடிச் சென்றாள்.

மகளது முக மாற்றத்தை அவதானித்துக் கொண்டிருந்த சுபத்ராவின் முகத்திலோ கர்வம் மின்னியது. தன் மருமகள் அவளது கடந்த காலத்தை சொல்ல தயங்கியதை புரிந்துக் கொண்டு, மகளிடமிருந்து காப்பாற்றியதாக எண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

ஆனால் அவரது மருமகள், அவளது கவலைகளை மனதிற்குள்ளே வைத்து அடைத்துக் கொள்ளாமல் வாய் விட்டு கூறியிருந்தால், வருங்காலத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தவிர்த்திருக்கலாம்.
*******************
டீயுடன் ரூமுக்குள் நுழைந்த உத்ரா, குளித்து தயாராக இருந்த ரித்விக்கை பார்த்து புன்னகைத்தாள்.

"டீ!" என்று கையில் கொடுக்கப் போனவள், " இல்லை…இல்லை… இங்கே வைக்கிறேன். எடுத்துக்கோங்க." என்றவள் ரித்விக்கிற்கு அருகிலிருந்த மேஜையில் வைத்தாள்.

"விவரம் தான்!" என்றவன் டீயை எடுத்து பருகிக் கொண்டே, அவளையும் பார்வையால் பருகினான்.

புத்தம்புது மலராக இருந்தவள், அவனையும் சற்று அசைக்கத்தான் செய்தாள்.

" ஆமாம் உஷாரா இருக்கத்தான் வேணும். கொஞ்சம் பிசகி, மறுபடியும் கீழே விழுந்து, க்ளாஸ் உடைஞ்சு ரத்தத்தை பார்த்தால் அப்புறம் நான் நானாக இருக்க மாட்டேன். நான் என் அண்ணனை கூப்பிடுவேன். அண்ணியோட கோபத்துக்கு ஆளாகணும். எதுக்கு வம்பு?" என்று கண்களை உருட்டிக் கொண்டே உத்ரா வாயாட.

டீ கஃப்பை மேசையில் வைத்தவன் அவளருகே வந்து, " இந்த வாய்க்கு கொஞ்சமாவது ஓய்வு கொடேன்." என்றவன் கிண்டலாக அவளைப் பார்த்தான்.

" நாட் பாஸிஃபில். என்னால பேசாமல் இருக்கவே முடியாது." என்றவளை, பார்த்துக் கொண்டே, அவளருகே வந்து அவர்களுக்கிடையில் இருந்த இடைவெளியை குறைத்தான் ரித்விக்.

அவனது நெருக்கத்தில் நெஞ்சு படபடக்க, "என்ன வேணும்?" என்றாள் உத்ரா. அவளது குரலோ லேசாக நடுங்கியது.

" இப்போ என்ன டார்லிங், உன் குரல் நடுங்குது." என்றவனது விரல்களோ, அவளது உதட்டை வருடத் தொடங்கியது.

உத்ரா பேந்த, பேந்த விழித்தாள்.

"இந்த உத்ராவின் பேச்சை நிறுத்த இந்த ரித்விக்கால் முடியும். ஒத்துக்கிறீயா மிஸஸ் ரித்விக்." என்றவன், அவளது மறுமொழியை எதிர்ப்பார்க்காமல்
அவளது இதழ்களை முத்தமிட போக.

சுதாரித்துக் கொண்ட உத்ரா இருவரது உதடுகளுக்கு இடையில் விரல்களை வைத்தவள், "கோவிலுக்கு டைமாயிடுச்சு. அத்தை சீக்கிரமா வர சொன்னாங்க." என்றாள்.

"ப்ச்!"என்ற ரித்விக், தலைக்கோதி தன்னுடைய ஏமாற்றத்தை மறைத்தவன்,"நீ போ உதி! நான் வர்றேன்."என்றான்.

விட்டால் போதும் என்று ஓடி விட்டாள் உத்ரா. அதற்குப் பிறகு நேரம் நிற்காமல் ஓடியது.

குலத்தெய்வக் கோவிலுக்கும் சென்று விட்டு வந்தனர். திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர் எல்லோரும் கிளம்பியிருந்தனர். இந்த இயந்திர உலகத்தில் எல்லோரும் அவரவர் பாட்டைப் பார்ப்பதற்காக ஓடிக்கொண்டிருக்க, கல்யாணம் நல்லபடியாக முடிந்த நிம்மதியில், ரிலாக்ஸாக இருந்த பர்வதமோ, பேரன், பேத்தி திருமணத்தைப் பற்றியே பெருமை பேசிக் கொண்டிருந்தார்.

" சுபத்ரா! நல்லபடியா கல்யாணம் முடிஞ்சு, குலத்தெய்வக் கோவிலுக்கும் போயிட்டு வந்தாச்சு. என் பசங்க இல்லைன்னாலும், இந்த பேரப்புள்ளைங்களுக்காகத் தான் என் உசுரை கையில் பிடிச்சு வச்சுருந்தேன். இப்போ தான் நான் நிம்மதியா இருக்கேன். இனி என் உசுரு போனாலும் கவலைப்பட மாட்டேன்." என்ற பர்வதம், தன் கண்களை துடைத்துக் கொண்டார்.

" அத்தை! எதுக்கு இப்படி எல்லாம் பேசுறீங்க? நீங்க இன்னும் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு." என்று ஆறுதலாக சொன்னாலும், அவரது தாயுள்ளமோ,' இவங்க ரெண்டு பேர் வாழ்க்கையை மட்டும் பார்த்தால் போதுமா?' என்று ஊமையாக கேள்வி எழுப்பியது.

மருமகள் கூறியதை மட்டும் கருத்தில் ஏற்றிக் கொண்டவர், அவரது வலியை உணரவில்லை.

" ஆமாம்! ஆமாம்! என் கொள்ளுபேரன், பேத்தியை பார்க்காமல் இந்த கட்டை வேகாது. எப்படி இந்த ஊரே வாயில விரலை வைக்கிற மாதிரி கல்யாணம் பண்ணேனோ, அதைப் போல எல்லா விஷேஷத்தையும் செய்வேன்." என்றவர் கனவுக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு தெரியவில்லை. கல்யாணத்தை பற்றி ஊரே பேசியதை விட, அடுத்து நிகழ போற அனார்த்தத்தைப் பற்றி ஊர் முழுவதும் பேச்சாக இருக்கப் போகிறது என்று…

தனது மாமியாரின் பேச்சில் எரிச்சலடைந்த சுபத்ரா பேச்சை மாற்றினார்.

" எங்க ஹனிமூன் போகப் போறீங்க? எதுவும் ப்ளான் போட்டாச்சா?" என்று தனது மகன், மகள் இருவரையும் பார்த்து வினவினார்.

ரித்விக் பதில் சொல்வதற்குள், மானசா முந்திக் கொண்டாள்.

" அம்மா! நெக்ஸ்ட் வீக் காஷ்மீர் போறதுக்கு அபிஅண்ணன் ஏற்பாடு பண்ணியிருக்காங்க." என்றாள்.

"இல்லை! நாங்க நாளைக்கு காலையில கேரளாக்கு கிளம்புறோம்." என்றான் ரித்விக்.

" ஏன் ரித்விக் உன் அண்ணன்காரன் உனக்கு டிக்கெட் போடலையா? நான் வேணும்னா வெளிநாட்டுக்கு அனுப்பவா?"என்று பர்வதம் வினவ.

"பாட்டி! அதுக்கெல்லாம் நிறைய பிராஸஸ் இருக்கு. உதிக்கு பாஸ்போர்ட், விசாவுக்கு அப்ளை பண்ணனும்." என்று பர்வதம் கேட்ட கேள்வியில் ஒன்றை தவிர்த்து மற்றொன்றிற்கு மட்டும் பதிலளித்தான்.

பர்வதம் வழமை போல் கண்டுக்கொள்ளாமலிருக்க, சுபத்ராவோ வழமைக்கு மாறாக , அந்த கேள்வியை மீண்டும் வினவினார்.

" ஏன் ரித்தி அண்ணன் உனக்கு ஹனிமூனுக்கு டிக்கெட் அரேஞ்ச் பண்ணலையான்னு பாட்டி கேட்டாங்க." என்றவர் அவனை அழுத்தமாகப் பார்க்க.

" அது வந்து… எனக்கும் தான் ஏற்பாடு பண்ணியிருக்காங்கம்மா‌." என்று தயக்கத்துடன் கூறினான் ரித்விக்.

" ஓ! அண்ணன் மேல உள்ள கோபத்துல அங்க போகாமல் கேரளா போறீயா?"

" அம்மா! அண்ணன் மேல எனக்கென்ன கோபம்? அதெல்லாம் ஒன்னும் இல்லைமா. நெக்ஸ்ட் வீக் தான் காஷ்மீர் ட்ரீப். நாங்க நாளைக்கு போயிட்டு, மூணு நாளையில் வந்துடுவோம்." என்று சமாதானம் செய்தவன், ' முதல்ல இங்கே இருந்து கிளம்புறேன். நீங்க எதிர்ப்பார்த்துட்டே இருங்க. ஆனால் திரும்பி வர மாட்டேன். அப்படியே
என் ஹனிமூனை எக்ஸ்டென் பண்ணிப்பேன்.' என்று மனதிற்குள் நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தவனைப், பார்த்து விதியும் சிரித்தது.