• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் 🌈-8

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில் -8

" தமிழகத்தின் உதகைமண்டலத்தை சேர்ந்த புதுமண ஜோடி கேரளாவில் போஸ்ட் வெட்டிங் ஃபோட்டோ ஷீட் எடுத்த போது விபரீதம். குளத்தில் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை மரணம். மணப்பெண் உயிருக்கு போராட்டம்." என்ற செய்தி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

மற்றவர்களுக்கு அது செய்தி ஆனால் அவர்களது குடும்பத்திற்கோ தாங்க முடியாத இழப்பு. அதை அறியாமலோ, இல்லை எல்லாம் தெரிந்தோ வியாபர நோக்கில் அந்த செய்தியை அக்குவேறாக, ஆணிவேராக அலசிக் கொண்டிருந்தனர்‌.

அவர்கள் வீட்டிலோ, ஒப்பாரி வைத்த பாட்டி, கதறி அழுத தங்கை, அழத் தெம்பில்லாமல் அந்த கண்ணாடி பேழை மீது சாய்ந்திருந்த அம்மா.

கட்டிய மனைவியோ ஹாஸ்பிடலில் உணர்வு இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க. துக்கத்திற்கு வந்திருந்த சொந்த பந்தமோ ஆறுதல் அளிக்கிறேன் என்று காயத்தை தான் கிளறி விட்டுக் கொண்டிருந்தனர்.

" யாரு கண்ணு பட்டதோ தெரியலை. கல்யாண வீடு, கருமாதி வீடா மாறிடுச்சு. இன்னும் கல்யாணத்துக்கு போட்ட பந்தல் கூட பிரிக்கலை‌." என்று வயதான பாட்டி புலம்ப.

அதைக் கேட்டதும் மானசா குலுங்கி, குலுங்கி அழுதாள். அவளை ஆதரவாக அணைத்து இருந்த அவளது பெரியம்மா மகள், தோளில் சாய்த்து சமாதானம் செய்தாலும், அவளது கண்களில் இருந்தும் கண்ணீர் ஊற்றியது.
'பின்னே இரண்டு நாட்களுக்கு முன்பு இதே வீட்டில் இரண்டு பெண்களையும் கேலி செய்து கலாட்டா பண்ணியது என்ன? இப்பொழுது இருக்கும் நிலை என்ன?.'என்று அவர்களால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

தங்களுக்குள் கிசுகிசுப்பதாக எண்ணி," மானசாவோட புருஷனை கண்ணுலேயே காணுமே." என்று சுபத்ராவின் அண்ணி வினவ.

" உனக்குத் தெரியாதா அண்ணி? நம்ம ரித்விக்கோட பொண்டாட்டி இன்னும் கண்ணு முழிக்கலையாம். பொழைக்குறது கஷ்டம் கூட்டிட்டு போங்கன்னு சொல்லிட்டாங்க. ஆனால் அவ அண்ணன் தான் எப்படியாவது காப்பாத்துங்கன்னு கெஞ்சி அங்கேயே வச்சுட்டுருக்காரு. தங்கச்சியை பார்த்துக்கிட்டு பொண்டாட்டியை விட்டுட்டாரு. பாவம் நம்ம மானசா துணையில்லாமல் தவிக்கிறா?" என்று நீட்டி முழக்கினாள் மற்றொருத்தி.

" ஓஹோ! அப்போ இங்கே யாரு எல்லாத்தையும் எடுத்து செய்வா? போஸ்ட்மார்ட்டம் செய்த பாடியாச்சே! ரொம்ப நேரம் வச்சுக்க முடியாது. மாப்பிள்ளையும் இங்கே இல்லை. மூத்தவனும் தான் கல்யாணத்துல கலந்துக்கிட்டேன்னு பேர் பண்ணிட்டு வெளிநாட்டுக்கு கிளம்பி போயிட்டானாம். அவனுக்கு தகவல் சொல்லியாச்சா?" என்று வினவ.

" சொல்லியாச்சுன்னு தான் நினைக்கிறேன் அண்ணி? அவனுக்கு ஃப்ளைட் டிக்கெட் கிடைக்கலையாம். அவன் வர வரைக்கும் வெயிட் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டான். உதவிக்கு ஆளுங்களை அனுப்பிருக்கான். அந்த பொண்ணையும் கேரளால இருந்து அழைச்சிட்டு வந்து கோயம்புத்தூர்ல தெரிஞ்ச ஹாஸ்பிடல்ல சேர்க்க ஏற்பாடு பண்ணியிருக்கான். பாசக்காரன்!

அவனைப் போய் விட்டுக்கொடுத்துட்டா என் அக்கா. ஏதாவது சொன்னா அவ்வளவு தான்.நமக்கு ஏன் வம்பு. நீங்களும், நானும் ஏதாவது சொல்லப் போனால் சுபத்ரா அக்காவுக்கு கோபம் வந்துடும். எல்லாம் கலிகாலம் அண்ணி! அந்த பொண்ணை சொல்லணும். கல்யாணத்தன்னைக்கு அப்படி ஒரு ஆட்டம். எல்லார் கண்ணும் அவங்க மேல தான். கொஞ்சம் உன் மருமகளை கண்டிச்சுவைக்கான்னு சொன்னதுக்கு, கூடப் பிறந்த தங்கச்சின்னு பார்க்காமல் அவ்வளவு திட்டு. அதான் நமக்கெதுக்கு அவங்க வீட்டு விஷயம்னு கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பிட்டேன்."

" நீ சொல்றதும் சரி தான் விமலா. அவ கிட்ட உன் பிள்ளையையும் கொஞ்சம் கவனின்னு அக்கறையா பேசுனாலும், உங்க வேலையை பாருங்க அண்ணின்னு சிலுப்பிக் கிட்டு போவா‌.
பணக்கார வீட்டுப் பெருமையை நம்ப கிட்ட காண்பிப்பா. இப்போ பாரு ஆண்டவன் ஆட்டுக்கு வாலை அளந்து தான் வச்சிருக்கார். இனி அந்த கிளவிக்கிட்ட என்ன பாடுபடப் போறாளோ தெரியலை." என்று சாவு வீட்டில் உட்கார்ந்து வம்பு வளர்த்துக் கொண்டிருந்தனர், சுபத்ராவின் பிறந்த வீட்டு உறவுகள்.

இன்னும் சிலரோ, "நம்ம ரித்விக்கும், அந்த பொண்ணும் அவ்வளவு பொருத்தமா இருந்தாங்க. காதல் கல்யாணம் பண்ண மானசா கூட மாப்பிள்ளையோட பேசாம வெக்கப்பட்டு இருந்தா, ஆனா இவங்க ரெண்டு பேரும் அப்படி சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க. கடவுளுக்கு கண்ணே இல்லை."என்று பேசிக் கொண்டிருந்தனர்.

இதெல்லாம் அவரது காதில் விழுந்தாலும், எதற்கும் பதில் சொல்ல தெம்பில்லாமல் ஓய்ந்து போயிருந்தார் சுபத்ரா.

வீட்டிற்குள் தான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் வெளியே டிரைவரும், தோட்டக்காரரும் ரித்விக், உத்ராவை பத்தி தான் பேசிக் கொண்டிருந்தனர்.

" எப்பவும் என்னை தான் கார் எடுக்க சொல்வாரு. அன்னைக்கு என்னை வேண்டாம்னுட்டு அவரே போயிட்டார். நான் மட்டும் போயிருந்தா அவர் கூடவே தான் நிழலாய் சுத்திட்டு இருப்பேன். எப்படியும் அவரை காப்பாத்திருப்பேன்‌." என்று டிரைவர் புலம்ப.

" எல்லாம் விதி தான். புதுசா கல்யாணமான சின்ன சிறுசுங்க. தனியா சிரிச்சு பேசிக்கிட்டு போகலாம்னு நினைச்சு போயிருக்கிறாங்க. கார்ல ஏறும் போதே சின்னம்மா காலை இடிச்சிக்கிட்டாங்க. ஐயா எப்படி தெரியுமா துடிச்சு போனாரு. நான் அங்க தான் இருந்தேன். அதைக் கூட பெரிசு பண்ணாமல், படால்னு காலைப் பிடிச்சுட்டார். அப்பவே உள்ள வாங்க தம்பின்னு கூப்பிட்டேன். கேட்கலை. சின்ன அம்மா கார்ல ஏறி உட்கார்ந்ததும், கதவை சாத்திட்டு காரை எடுத்தாரு. ம்ஹூம் !அப்பவே வீட்டுக்குள்ள வந்துட்டு போயிருந்தால் இப்படியெல்லாம் ஆகிருக்காது." என்றார் தோட்டக்காரர்.

இப்படி அவரவர் மனதில் இப்படி நடக்காமல் இருந்திருக்கலாம், அப்படி நடக்காமல் இருந்திருக்கலாம் என்று ஆயிரம் எண்ணங்கள் தோன்றிக் கொண்டிருந்தது. ஆனால் இங்கு நடப்பவை எல்லாம் ஒருவரின் கர்மவினைப்படி அல்லவா? அதில் மீண்டவர் யாருமில்லையே.

நேரம் ஓடிக் கொண்டிருக்க.
"போஸ்ட்மார்ட்டம் பண்ண பொணத்தை ரொம்ப நேரம் வைத்திருக்கக் கூடாது." என்று ஒரு பெரியவர் குரல் கொடுக்க.

அதைக் கேட்டதும் மீண்டும் தாள முடியாமல் அழுதார் சுபத்ரா. பர்வதமோ நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்.
அவர்களுக்கு இழப்பு புதிதல்ல. ஆனால் மீண்டும், மீண்டும் அடி விழ அவரால் தாங்க முடியவில்லை.

" இங்க பார்த்தியா சுபத்ரா, ஆசை ஆசையா நம்ம ரித்விக்குனு பேர் வச்சோமே. அதுக் கூட உசுரு இருக்கும் வரைக்கும் தான் போல. இறந்து விட்டால் அவ்வளவு தானா? இனி பொணம் தானா" என்று பர்வதம் புலம்ப. அவரை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் சுபத்ரா தவித்தார்.

நேரம் யாருக்கும் காத்திராமல் வேகமாக விரைய, அந்த வீட்டில் ரித்விக்கின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. அந்த வீட்டில் மட்டும் அல்ல உத்ராவின் வாழ்க்கையிலும் தான்.

**************************
ஆற்றவும், தேற்றவும் ஆள் இல்லாமல் இருக்க. மூவரும் சோர்ந்து போய் அழக் கூட தெம்பில்லாமல் அமர்ந்து இருந்தனர்.

" சாப்பிடுங்க அம்மா!" என்று வேலைக்காரியிடம், "வேண்டாம்."என்று தலையசைத்தார் பர்வதம்.

" எனக்கு ஒரு சாவு வரமாட்டேங்குது. இன்னும் என் வயசுக்கு என்னலாம் நான் பார்க்கணும்னு அந்த கடவுள் எழுதி வச்சுருக்காரோ தெரியலையே." பேச தெம்பில்லாமல் பர்வதம் புலம்ப.

" பாட்டி!" என்ற மானசா அவரது மடியில் படுத்து கதறி அழுதாள்.

" நீ எதுக்குடி அழற? எல்லாம் நீ இழுத்துட்டு வந்த வினை தான். காதல், கண்றாவின்னு நீ வந்து நின்னதும் இல்லாமல், என் பேரனுக்கு பொண்டாட்டி என்ற பெயரில் எமனையும் இல்லை கூட்டிட்டு வந்துருக்க." என்று எங்கிருந்து தான் தெம்பு வந்ததோ தெரியலை. ஆங்காரமாக பர்வதம் கத்த.

ஆங்காங்கே இருந்த உறவினர்கள் எல்லோரும் அவர்களையே பார்க்க.

"அத்தை! சும்மா இருங்க." என்று சுற்றி உள்ளவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பர்வதத்தைப் பார்த்தார் சுபத்ரா.

" என் வாயை ஏன் மூடுற? எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே. எல்லாம் அந்த அதிர்ஷடமில்லாதவளால வந்தது. அவளை கல்யாணம் பண்ண ராசி தான் என் பேரன் கொண்டு போயிடுச்சு."
எல்லாம் அவளால தான். என் பேரன் இல்லன்னா என் கூட இருந்திருப்பான்." பர்வதம் புலம்பியபடியே மயங்கி விழுந்தார்.

உடனே அந்த இடமே பரபரப்பானது. டாக்டரை உடனடியாக வரவழைத்து, அவரைப் பார்க்க. "சாப்பிடாததால் வந்த மயக்கம். ட்ரிப்ஸ் போடணும்." என்றவர், நர்ஸை போட சொல்லி விட்டு சென்றார் டாக்டர். ஒரு பக்கம் ட்ரிப்ஸ் ஏற, ஏற, மறுபக்கமும் அவரது வார்த்தையும் எல்லோரிடமும் ஏறிக் கொண்டிருந்தது.

தங்களுக்குள் உத்ராவின் அதிர்ஷ்டத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அதை எல்லாம் கண்டும், காணாமலும் மனதிற்குள்ளே மௌனமாக அழுதுக் கொண்டிருந்தார் சுபத்ரா.

*****************

அபிமன்யுவிற்கு ரித்விக் இறந்த தகவல் தெரிய வந்ததும், டிக்கெட்டிற்காக ஒரு புறம் அலைந்தான். கிடைக்க தாமதமாகவும் இந்தியாவிற்கு அழைத்து, எல்லா ஏற்பாடையும் செய்வதற்கு ஆளை அமர்த்தினான்.

அவன் இந்தியாவிற்கு வருவதற்குள் ரித்விக்கின் காரியம் முடிந்து வந்தவர்கள் எல்லோரும் கிளம்பியிருந்தனர்.

குடும்பத்தினர் இழப்பிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கு விடாமல் செய்தி சேனல் திரும்பத் திரும்ப அந்த செய்தியையே ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

வீடு அமைதியாக இருப்பது மனதை பிசைய, ஏதாவது சாமி பாடலை போடலாம் என்று எண்ணிய சுபத்ரா டிவி ஆன் செய்ய.

டீவியில் செய்தி சேனல் ஓடி கொண்டு இருந்தது.

" இந்த இடம் ஆபத்தான இடம்னு தெரிஞ்சும் இப்படிப்பட்ட இடத்துக்கு ஏன் மக்கள் வராங்கன்னு தெரியலை. திருமணம் நடந்த இரண்டாம் நாளே புதுமண தம்பதிக்கு நடந்த இந்த நிகழ்வால் தமிழகம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்தது. நமது நிருபர் அந்த இடத்திற்கு சென்று நேரடியாக விசாரித்து உள்ளார். அது உங்கள் பார்வைக்காக.

" சொல்லுங்க ஐயா! இந்த இடத்துக்கு டூரிஸ்ட் அதிகம் வருவாங்களா?" நிருபர் வினவ.

இந்த இடத்துல கூட்டம் அதிகம் வராது. இது கொஞ்சம் ஆபத்தான பகுதி. அதுனால யாரும் அதிகம் வரமாட்டாங்க. எப்பவாவது இப்படி புதுமண தம்பதிகள் தனிமையை விரும்பி வருவாங்க‌."

" இந்த மாதிரி ஏதாவது அசம்பாவிதம் இங்கே நடந்திருக்கா பெரியவரே."

" அடிக்கடி நடக்கும். இங்க அடியில கொடி இருக்கும். ஆபத்தான பகுதின்னு போர்டே இருக்கு. ஆனால் அதை யாரும் பெருசா நினைக்க மாட்டேங்குறாங்க."

" ஓ! எவ்வளவு சொன்னாலும் மக்கள் அலட்சியமாக தான் இருக்காங்க. சரி நீங்க இங்க என்ன வேலைப் பார்க்குறீங்க."

" எங்களுக்கு என்ன பெரிய வேலை இருந்துடப் போகுது. இங்க இருக்கிற தாமரை பூவை பறிச்சு விக்குறோம். அதுல வர்ற வருமானத்துல வைத்த கழுவுறோம். எப்பாவது இந்த தண்ணீல விழுந்து காணாமல் போறவங்களை தேடுனா காசு தருவாங்க."

" இவங்க இங்கே வரும் போது இருந்தீங்களா. எப்படி படகு கவிழ்ந்தது?"

" அது தெரியலைங்க ஐயா! நான் இங்க இல்லை. விஷயத்தை கேள்விப்பட்டுத் தான் ஓடி வந்தேன். படகு வந்து கயிறு கட்டி தான் வைத்திருந்ததா சொன்னாங்க. ஆனால் அந்த கயிறு எப்படி அறுந்ததுனு தெரியலை."

" ரொம்ப நன்றிங்க." என்ற நிருபர், பிறகு கேமராவைப் பார்த்து, "என்ன சொல்றதுன்னே தெரியவில்லை. இப்போ உள்ள மக்கள் ஏதாவது வித்தியாசமாக செய்யணும்னு இப்படி எல்லாம் செய்கிறார்கள். செல்ஃபி மோகம், ஃபோட்டோ சூட் இதெல்லாம் ஆபத்தான இடத்துல எடுக்கிறதை தவிர்க்கலாம்." என்று அந்த பேட்டி முடித்திருந்தார்.

" எல்லாம் அவளால தான். என் பேரனுக்கு இந்த கன்றாவியெல்லாம் தெரியாது. குலத்தெய்வக் கோவிலுக்கு கூட போக விடாமல், அவனை இழுத்துட்டு போய் கொன்னுட்டாளே." என்று பர்வதம் பெரியதாக ஒப்பாரி வைக்க.

திடீரென்று பூக்குவளை நொறுங்கும் சத்தம் காதைப் பிளந்தது.

அங்கு அபிமன்யு ருத்ரமூர்த்தியாக நின்றுக் கொண்டிருந்தான்.

அவனது கோபத்தில் பர்வதம் கூட அதிர்ந்து போனார்.

சுபத்ராவும், மானசாவும் ஒருவரைப் பார்த்து ஒருவர் திகைத்து நின்றனர்.

அவர்களை ஒரு பார்வை பார்த்தவன், பாட்டியைப் பார்த்து முறைத்தவன்,
"இந்த வீட்டுக்கு ஒரு அபிமன்யு போதும். அந்த பொண்ணை ஏதாவது சொன்னீங்க. அவ்வளவு தான் தொலைச்சிடுவேன்." என்றான்.

அங்கு கையை பிசைந்து கொண்டிருந்த மானசாவின் அருகே வந்து அவளைப் பார்த்தான்.

" அண்ணா!" என்றவளது குரல் அழுகையில் நடுங்கியது.

"பேசாதே! நீ இப்படி இருப்பேன்னு கனவுல கூட நினைச்சு பார்த்ததில்லை. உன் அண்ணன் எவ்வளவு முக்கியமோ, அதே போல உன் புருஷனும் முக்கியம் தானே."

" அண்ணா!" என்றவள் அழ.

" இப்போ எதுக்கு அழற? நீ இப்போ உன் புருஷன் கூட இருக்க வேண்டாமா? அவரை தனியா விட்டுட்டு, இங்க என்ன பண்ணிட்டு இருக்க."

"அது வந்து…" என்று தயங்கியவள், பாட்டியை பார்க்க.

" உனக்கு எது முக்கியமோ, அதை நீ தான் முடிவு செய்ய வேண்டும்." என்றவன், அம்மாவை பார்த்தான்.

அவரும் தலைகுனிந்து நிற்க.

' உங்க கிட்ட இதை எதிர்பார்க்கலை. நான்தான் உங்களுக்கு வேண்டாதவன். விட்டுட்டீங்க. இப்போ உங்க பொண்ணும் வேண்டாமா? அவ வாழ்க்கையைப் பத்தி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இருக்கீங்க. இப்போ இவ மாப்பிள்ளைக்கு ஆதரவாக இல்லாமலிருந்தால், அப்புறம் அவளோட வாழ்க்கையே கேள்வி குறியாகாதா? இந்த நாலு நாளா அவரு எப்படி இருக்காரு, என்ன ஏதுன்னு தெரியுமா? அனாதையாட்டாம் ஹாஸ்பிடல்ல பினாத்திட்டு இருக்கார். நான் என் ஃப்ரெண்ட்ஸ் மூலமா அவருக்கு உதவுனாலும், சொந்தபந்தம் மாதிரி வருமா?" என்று வார்த்தைகளால் விளாச‌.

அந்த கேள்வி எல்லாம் அவரை சுட்டது.

" இன்னும் ரெண்டு பேரும் ஏன் சிலையாட்டாம் நிக்குறீங்க. கிளம்புங்க." என்று உரும.

இருவரும் அவனுடன் கிளம்பினர்.

கோயம்புத்தூரில் உள்ள அந்த பிரபல மருத்துவமனையை நோக்கி அபிமன்யுவின் கார் சென்றது.

அங்கே முகிலன், ஐ சி யூ முன்பு சாப்பிடாமலும், குளிக்காமலும் பரதேசி போல் அமர்ந்து இருந்தவனது விழிகள், எங்கையோ வெறித்துக் கொண்டிருந்தது.

ஐ சி யூவிலிருந்து யார் வந்தாலும், " என் தங்கச்சி எப்படி இருக்கா? கண்ணு முழிச்சிட்டாளா?" என்று கேட்டுக் கொண்டே இருந்தான். அவர்களும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டே இருந்தனர்.

அங்கு வந்த மானசா கணவனைப் பார்த்ததும் தான் தான் செய்த தவறு புரிந்து அழுதுக் கொண்டே அவன் அருகே விரைந்தாள்.

மனைவியை பார்த்ததும் அவள் மேல் சாய்ந்து கதறி அழுதான்.

சுபத்ராவின் கண்களில் இருந்தும் கண்ணீர் ஊற்றியது.

அபிமன்யு நேராக அங்கிருந்த டாக்டரின் அறைக்குச் சென்றான்.

உத்ராவைப் பற்றி விசாரித்தவன், அவருடன் ஐ. சி.யூவிற்கு சென்றான்.

அங்கே பிடுங்கி போட்ட கொடி போல வாடியிருந்தாள். மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்க் போட்டிருக்க. ஒரு பக்கம் மானிட்டரில் அவளது இதயத்துடிப்பு இயங்கிக் கொண்டிருந்தது.

அன்று துள்ளலாக இருந்தவளது தோற்றம் கண் முன்னே வந்து செல்ல, கண்களில் இருந்து நீர் வடிந்தது. அவனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு இன்று தான் அவனது கண்களில் இருந்து நீர் வடிகிறது.

கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்த துடைத்தவனின் விழிகளில் அவளது அசைவு விழுந்தது.

" ராம்!‌" என்று பரபரப்பான குரலில் அழைக்க.

அவரும் அவளது அசைவை பார்த்து விட்டு, பல்ஸ், பீபி செக் செய்தார்.

" அபி! நவ் ஷீ இஸ் ஓகே." என்க

லேசாக புன்னகைத்தவன், அவளது உதடு அசைவதைப் பார்த்து அருகே சென்றான்.

மெல்ல தலை
யை வருட கையை எடுத்துச் சென்ற அபிமன்யு,"ரித்தி!" என்று ஜீவனில்லாமல் புலம்பும் அவளது குரலில், நிதர்சனம் முகத்திலறைய, பதறி துடித்து விலகி நின்றான்.