• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் 🌈-9

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில் -9

பேயை கண்டது போல் ஐ.சி.யூவிலிருந்து வேகமாக வெளியேறிய அபிமன்யு, வெளியே வந்ததும் சற்று நிதானித்தான்.

பெரிய மூச்சு எடுத்து தன்னை சமாளித்ததவன், அங்கு கணவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்த தங்கையைப் பார்த்ததும் மனம் சற்று மட்டுப்பட்டது.'இனி எல்லாவற்றையும் அவள் பார்த்துக் கொள்வாள். இனி இங்கே இருக்க வேண்டிய அவசியமில்லை.'என்று பெருமூச்சு விட்டவன், தாயை தேடினான்.

அவர் சற்று தள்ளி ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார். அவர் அருகே சென்றவன், மற்ற இருவரின் கவனத்தை கவராமல் மெதுவான குரலில், "அந்த பொண்ணு கண் விழிச்சிட்டா." என்றான்.

"என்னப்பா சொல்றே? உதி கண்ணு முழிச்சிட்டாளா?" என்றவர், வேகமாக அங்கு செல்ல முயல.

"கொஞ்சம் பொறுங்க. டாக்டர் செக் பண்ணிட்டு இருக்காங்க. எல்லாம் நார்மலாக இருந்தால் ரெண்டு நாள்ல ரூமுக்கு மாத்திடுவாங்க. மானுவும், முகிலனும் ஹாஸ்பிடல்ல இருக்கட்டும். நீங்க வாங்க. உங்களை வீட்ல விட்டுட்டு போறேன்."

" சரி." என்று அரைகுறையாக தலையாட்டியவர் மகளிடம் திரும்ப.

அப்பொழுது தான் உத்ரா கண் விழித்ததைப் பற்றி நர்ஸ் தகவல் சொல்லிக் கொண்டிருந்தார்.

மானசாவும், முகிலனும் பரபரப்பாக ஐ.சி.யு விற்குள் நுழைந்தனர்.

"நானும் பார்த்துட்டு வரட்டுமா அபி?" என்று தயக்கத்துடன் கேட்க.

அவரது தயக்கம் அவன் முகத்தில் கோபத்தை வரவழைத்தது. ஆனால் அவன் கோபம் தான் அவருக்கு தயக்கத்தை தருகிறது என்பதை அவன் அறியவில்லை.

" வெயிட் பண்ணுங்க. அவங்க வெளியே வந்ததும் தான் உங்களை உள்ளே விடுவாங்க. அப்புறம் இதே ப்ளோர்ல ரூம் இருக்கு. அங்கே ஸ்டே பண்ணிக்க சொல்லுங்க. நான் கார்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன்." என்றவன் விறுவிறுவென வெளியே சென்றான்.

அபிமன்யுவின் முதுகைப் பார்த்துக் கொண்டிருந்தவரது கண்கள் கலங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு, இல்லை, இல்லை நீண்ட வருடங்களுக்கு பிறகு மகன் தன்னிடம் பேசிய நீண்ட பேச்சு வார்த்தை. அதையே நினைத்துக் கொண்டிருக்க, மானசா வந்து," அம்மா!" என்றவள் கதறி அழுதாள்.

திடீரென்று மகள் கதறி அழவும், ' உத்ராவுக்கு ஏதோ ஆகிவிட்டதோ!' என்று எண்ணிய சுபத்ராவின் முகம் வெளிறியது.

" என்னாச்சு மானு?" என்ற சிறு வாக்கியம் அவரது வாயிலிருந்து வருவதற்குள் பெரும்பாடாகியிருந்தது.

" அம்மா! அண்ணியை பார்க்கவே முடியலைமா. இன்னும் முழுசா நினைவு வரலை. ஆனால் அண்ணன் பேரை சொல்லி புலம்பிட்டே இருக்காங்க. கண்ணு முழிச்சி அண்ணனை கேட்டா என்னமா பண்றது? ஐயோ! அண்ணன் இல்லைன்னு அவங்களுக்கு தெரிஞ்சா தாங்க மாட்டாங்களே." என்றவள் அழ.

சுபத்ராவின் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. அதைப் பொருட்படுத்தாமல் மகளை சமாதானம் படுத்தினார். " மானு! நீயே இப்படி கலங்கினா, மாப்பிள்ளையை யார் பார்த்துக்கிறது? நீ தைரியமா இருந்தா தான் அவரை சமாளிக்க முடியும். முதல்ல கண்ணைத் துடை. இதே ப்ளோர்ல ரூம் இருக்கு. அங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. இப்போதைக்கு உத்ராவுக்கு டெஸ்ட் நிறைய எடுக்கணுமாம். யாரையும் உள்ள விட மாட்டாங்க. நர்ஸ் தேவைனா கூப்பிடுவாங்க. நான் உத்ராவை பார்த்திட்டு கிளம்புறேன்."

" அம்மா! நீயும் இங்கேயே இருமா. பயமா இருக்கு."

" மானு! உத்ராவை ரெண்டு நாள்ல ரூமுக்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க. அப்புறம் வீட்டுக்கும் அனுப்பிடுவாங்க. பயப்படாதே. பாட்டி வேற தனியா இருக்காங்க. நான் போகணும்டா. நீ தைரியமா இருந்து, மாப்பிள்ளையும், உதியையும் பார்த்துக்கோடா. எல்லாம் சரியாகிவிடும்." என்று சுபத்ரா கூற.

" சரி மா." என்றவளுக்கும், "இனி எல்லாம் சரியாகிவிடும்."என்று நம்பிக்கை வந்தது.

ஆனால் இனிதான் பிரச்சனை ஆரம்பம் ஆகப்போகிறது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

டாக்டர் சொன்னது போல இரண்டு நாட்களில் உத்ராவை அறைக்கு அனுப்பி விட்டார்.

மாத்திரையின் வீரியத்தால் அதிக நேரம் தூங்கியவள் விழித்திருக்கும் போதெல்லாம், "ரித்விக்! ரித்விக் எங்க?" என்று கேட்டுக் கொண்டே இருந்தாள்.

" ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு டா." என்ற முகிலனின் வார்த்தைக்கு மதிப்பு அதிகபட்சம் ஐந்து நிமிடம் தான். பிறகு மீண்டும்," ரித்விக் எங்கே அண்ணா?" பார்க்கணும்."என்று தவிப்புடன் உத்ரா வினவினாள்.

தங்கையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல், அவள் விழித்திருக்கும் நேரம் வெளியே சென்று விடுவான். உறங்கும் போது தங்கைக்கருகே நின்று காவல் காப்பான்.

இப்படியே ஒரு வாரம் சென்றிருக்க. உறங்கிக் கொண்டிருந்த உத்ராவின் தலையை வருடிக் கொண்டிருந்தான் முகிலன்.

" உங்களை டாக்டர் வர சொன்னாங்க." என்று நர்ஸ் அழைக்க. பதற்றத்துடனே அவரை சென்று பார்த்தான் முகிலன்.

" உட்காருங்க மிஸ்டர் முகிலன். நவ் யுவர் சிஸ்டர் பெர்பக்ட்லி ஆல்ரைட். நாளைக்கு டிஸ்ஜார்ஜ் பண்ணிடலாம். கொடுத்திருக்க டேப்ளட்ஸெல்லாம் ரெகுலரா போடச் சொல்லுங்க. ஒன் மந்த் கழிச்சு ஒரு செக்கப் வந்துட்டு போங்க." என்றுக் கூறி விட்டு புன்னகைத்தார்.

அவர்களுக்கு இந்த கேஸ் மிக சவாலானது. இதில் பேஷண்ட் உயிர் பிழைத்து நலமுடன் வீட்டிற்கு செல்ல போகும் மகிழ்ச்சி, அவரது குரலில் நன்கு வெளிப்பட்டது.

"டாக்டர்!"என்று முகிலன் தயங்க.

" வாட் மேன்? இன்னும் என்ன பயம்? உன் தங்கை தான் நல்லபடியா குணமாயிட்டாங்க. இனியாவது சிரி." என்று இத்தனை நாள் பழக்கத்தில் உரிமையாக கூறியவரிடம் ஒன்றும் கூற முடியாமல், " தேங்க்ஸ் டாக்டர்."என்று விட்டு வெளியே வந்தான்.

தளர்ந்து நடந்து வந்தவனை பார்த்த மானசா, "என்ன சொன்னார் டாக்டர்?" என்று வினவ.

"டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிட்டாங்க." என்றவன் கண்களை மூடிக்கொண்டு அங்கிருந்து சேரில் அமர.

" இதுக்கு ஏன் இவ்வளவு வருத்தப்படுறீங்க முகி?" என்று ஆறுதலாக கைகளைப் பிடித்தாள்.

"உதிக்கிட்ட ரித்விக்கை பத்தி இன்னும் சொல்லலையே. வீட்டுக்கு போனா கட்டாயம் கேட்பா.என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியலை."என்று தொண்டை அடைக்க கூறினான்.

ஒரு நிமிடம் முகம் கசங்க நின்ற மானசா எதையோ யோசித்து விட்டு, "முகி! இங்கேயே உண்மையை சொல்லிடலாம். டாக்டர் பக்கத்துல இருக்கும் போதே சொல்றது தான் பெட்டர். உணர்ச்சி வசப்பட்டு அழுதா, நம்மால ஹேண்டில் பண்ண முடியாது." என்றாள்.

" ஆமாம் மானு! நீ சொல்றது தான் சரி." என்றவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு வழியாக உத்ராவிடம் ரித்விக் இந்த உலகில் இல்லை என்ற உண்மையை உரைத்தான்.

ஆனால் இவர்கள் எதிர்பார்த்தது போல எதிர்வினையை அவள் ஆற்றவில்லை.

ஆனால் அன்று நடந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்ததாலோ என்னவோ மயங்கி விழுந்து விட்டாள்.

சற்று நேரத்தில் அந்த இடமே களேபரமானது.

" டாக்டர்! " என்ற முகிலனின் குரல் வேகமாக ஒலித்தது.

மானசா அங்கிருந்த பெல்லை அழுத்த நர்ஸ் ஓடி வந்தார். கூடவே டாக்டரும் வந்து பரபரப்பாக அவளை செக் செய்தவர்,"அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான். கொஞ்சம் நேரத்தில் முழிச்சிடுவாங்க. அப்புறம் நீங்க வீட்டுக்கு போகலாம்." என்றார்.

அவர் சொன்னது போலவே சற்று நேரத்திலே கண் விழித்தாள் உத்ரா. ஆனால் ரித்விக்கை பற்றி ஒரு வார்த்தையும் கேட்கவில்லை. வீட்டுக்கும் அழைத்து வந்தாயிற்று‌. இன்னும் அவள் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீரும் வரவில்லை.

சுபத்ரா தன் மருமகளை விட்டு அந்த பக்கம், இந்த பக்கம் நகரவில்லை. எங்கே தான் சென்று விட்டால் தன்னுடைய மாமியார் மருமகளின் மனதை வருத்த செய்துவிடுவாரோ என்று பயந்து தனது சிறகுகுள் அடை காக்கும் பறவை போல உத்ராவை பார்த்துக் கொண்டார்.

மானசாவிற்கு இதெல்லாம் பார்த்து எரிச்சல் மண்டியது. 'தன்னுடைய அண்ணனின் இறப்பு இவளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லையா? ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லையே. அதுக்கு கூட என் அண்ணன் தகுதியில்லாமல் போய்விட்டாரா?' என்று மனதிற்குள் குமைந்துக் கொண்டிருந்தாள்.

வெளியே அழுது கதறி துடித்தால் மட்டும் தான் அன்பு என்று மானசா நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் உத்ராவோ மனதிற்குள்ளே அழுதுக் கொண்டிருந்தாள். அவளது உணர்வுகளை புரிந்துக்கொள்ள எவரும் முயற்சிக்கவில்லை.

தாயாய் தாங்கிக் கொண்டிருந்த சுபத்ராவும் அறியவில்லை. சேயாய் கவனித்த முகிலனும் அறியவில்லை. இருவரும் ரித்திக்கை பற்றி பேசினால் அவளது மனம் புண்படும் என்று அந்த பேச்சை தவிர்க்க.

உத்ராவோ யாரிடமும் பேசாமல் மனதிற்குள்ளே ரித்விக் பற்றிய உணர்வுகளை புதைத்து மன அழுத்தத்திற்கு உள்ளானாள்.

சுபத்ரா டீ எஸ்டேட்டிற்கும், ஃபேக்டரிக்கும் செல்லாததால் மானசா தான் சென்றுக் கொண்டிருந்தாள்.

இரு இடங்களுக்கும் அவள் ஓடிக் கொண்டிருக்க, அவளுக்குள் வொர்க் ப்ரெஷர் அதிகமானது.

அதை தனது கணவனிடம் காண்பித்தாள். இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது.

வேலை முடிந்து ஓய்ந்து வந்தவளிடம் உத்ராவை பற்றி பேசிக் கொண்டிருந்தான்.

" மானு! இன்னைக்கு டீவி பார்த்துட்டு நல்லா தான் இருந்தா உதி. திடீர்னு டீவி ஆஃப் பண்ணுங்கன்னு கத்துறா. எனக்கு ஒன்னும் புரியலை. அவளுக்கு என்னமோ சரியில்ல. திடீர் திடீர்னு பயப்படுறா."

"அதெல்லாம் அண்ணி நல்லா தான் இருக்காங்க. எப்பப் பாரு அவங்களை பத்தி மட்டும் பேசுங்க. என்னை பத்தி கொஞ்சமாவது நினைச்சிருக்கீங்களா." என்றவள் ஹிஸ்டீரியா பேஷண்ட் போல கத்த.

" மானு! இப்போ ஏன் இவ்வளவு டென்ஷனாகுற? உத்ரா அவ லைஃபையே தொலைச்சிட்டு நிக்குறா. அவ என் தங்கச்சி. அதை நினைக்கலைன்னா கூட பரவாயில்லை. ஒரு பொண்ணா அவ ஃப்ளீங் உனக்கு புரிஞ்சிருக்கணும்." என்று மனைவியிடம் தாளமாட்டாமல் கூறினான் முகிலன்.

" அதையே தான் நானும் சொல்றேன். என்னைப் பத்தி கொஞ்சமாவது நினைச்சிருக்கீங்களா? இறந்து போனது என் அண்ணன். சின்ன வயசுல இருந்து என் கூடவே ஓடி, ஆடி விளையாண்டு, என் நல்லது, கெட்டதுக்கு துணையா இருந்தவன். ஏன் நம்ம கல்யாணம் நடக்குறதுக்கு கூட என் அண்ணன் தான் காரணம். எனக்கு எல்லாமாக இருந்தவன் இன்னைக்கு இல்லை. என் மனசு என்ன பாடுபடும். என் உணர்வுகளை எல்லாம் எனக்குள்ளே புதைச்சுட்டு, தொழிலைப் பார்க்கணும்னு போயிட்டு வர்றேன். அம்மா தான் அண்ணியை பார்த்துக்கணும்னு வரலை. நீங்களாவது எஸ்டேட்டுக்கு வந்தா என்ன? எத்தனை நாள் வீட்லே இருக்கப் போறீங்க?"

" உதி தனியா இருப்பாளே." என்று தயங்கினான் முகிலன்.

" அம்மா தான் அண்ணியை பார்த்துக்கிறாங்களே
அப்புறம் என்ன முகி? அம்மா மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?" என்று மானசா கேட்க.

"அப்படியெல்லாம் இல்லை மானு!" என்ற மறுமொழியை உடனேயே உதிர்த்தான் முகிலன். சுபத்ரா கண்ணும், கருத்துமாக மருமகளை கவனிப்பதை அவனும் தான் பார்த்துக் கொண்டிருக்கானே.

" சரி! எனக்கு தூக்கம் வருது." என்ற மானசா, தலையை அழுத்திக்கொண்டே உறங்க முயன்றாள்.

மெல்ல அவளது தலையை பிடித்து விட்ட முகிலன், " சாரி மனு! உன்னைப் பத்தியும் யோசிச்சிருக்கணும். நாளைல இருந்து நானும் உன் கூட வரேன்." என்றான்.

அவனது நெஞ்சில் சாய்ந்து மௌனமாக கண்ணீர் விட்டாள் மானசா.

" அழாதடா!" என்றவன், அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

********************

முகிலனும், மானசாவுடன் எஸ்டேட்டிற்கு சென்று வர.

மானசாவிற்கு வேலைப்பளு குறைந்தது. மாலை நேரத்தில் பொழுதோடு வீட்டிற்கு வர ஆரம்பித்திருந்தாள்.

அப்போது தான் உத்ராவிடம் தெரிந்த மாற்றத்தை கண்டு கொண்டாள்.

எப்பொழுதும் எங்கேயாவது பார்த்துக் கொண்டே இருப்பதும், திடீரென்று தூக்கிப்போட்டு பயந்து விழிப்பதுமாக இருந்தாள்.

யோசனையோடு தனது தாயிடமும் உத்ராவைப் பற்றி வினவ.

சுபத்ராவும், " ஆமாம் டா! கூப்பிட்டா திரும்ப மாட்டேங்குறா. உங்க பாட்டி ஜாடை, மாடையா திட்டுறதைக் கூட காதில் வாங்க மாட்டேங்குறா. கனவுல இருக்குற மாதிரி தான் இருக்கா. இன்னும் நம்ம ரித்விக் இறந்ததுல இருந்து வெளிவர கொஞ்ச நாளாகும்." என்றார்.

மானசாவிற்கு ஏதோ தவறாகப்பட்டது. முகிலனிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று எண்ணியவள், அவனுக்காக காத்திருந்தாள்.

இரவு வந்தவன் வழக்கம் போல உணவருந்தி விட்டு சுபத்ராவின் அறைக்கதவை தட்டினான்.

அங்கு தான் உத்ரா இருந்தாள். அவளிடம் இரண்டு வார்த்தை பேசி விட்டு அவர்களது அறைக்குச் செல்ல. மானசா அவனுக்காக காத்திருந்தாள்.

" என்ன மனு இன்னும் தூங்கலையா?" என்று வினவ.

" உங்களுக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் முகி." என்றதும் முகிலனின் முகம் மாறியது.

" உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்."என்றவளது குரலில் கடுப்பு ஏகத்துக்கும் ஏறியது. ' பெரிய மன்மதன் இவரு. நான் மயக்கப் பார்க்கிறேன்.' என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே, "உங்க தங்கச்சியைப் பத்தி பேசணும்." என்றாள்.

" ஏன்? என்ன விஷயம்?" என்று பதறினான்.

" அண்ணி வந்து அப்நார்மலா பிகேவ் பண்றாங்க."

" என்ன சொல்ற?"

" அது வந்து அவங்க ஏதோ டிஸ்டர்பா இருக்காங்க. அவங்களுக்கு கவுன்சிலிங் குடுத்தா சரியா இருக்கும். எங்க அண்ணன் கிட்ட அஃப்பாயிண்ட்மெண்ட் வாங்கட்டுமா முகி?"

" ச்சீ! உங்க பாட்டி என் தங்கச்சியை ராசியில்லாதவன்னு சொல்றாங்க. நீ பைத்தியம்னு சொல்றே‌. உன் கிட்ட இதை எதிர்ப்பார்க்லை."என்று வெறுப்புடன் கூற.

கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், " என்னைப் பத்தி நல்ல அபிப்பிராயம் வச்சிருக்கிறதுக்கு ரொம்ப தேங்க்ஸ்‌!. அப்புறம் உங்க கண்ணை நல்லா திறந்து உங்க தங்கச்சியை பாருங்க, எல்லா
ம் புரியும்." என்றவள், அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.

'மானு! சொல்றது உண்மையா? ஐயோ உதி மா!' என்று மனதிற்குள் அழுதான்.