• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் -🌈

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில்- 4

"எனக்கு ஏதாவது சொல்யூஷன் சொல்லுங்க டாட்‌." என்று புலம்பிக் கொண்டிருந்த அபிமன்யு, தந்தையை நினைத்ததும் சற்று நிதானத்திற்கு வந்தான்.

அவரது குரல் மனதிற்குள் ஒலித்தது. 'மை டியர் சன். உன்னால இதை கடந்து வர முடியும். அதுக்கு நீ, நீயாக இருக்கணும். உன்னை மறக்குற இந்த குடி என்னைக்கும் வேண்டாம்.'

" ஓகே டாடி. நான் பிரச்சனையிலிருந்து வெளியில வந்துடுவேன். ஐ வில் மேனேஜ்." என்றவனது குரலில் இப்பொழுது தெளிவு வந்திருந்தது.

சுற்றும் முற்றும் பார்க்க தந்தையே காணவில்லை. எப்பொழுதும் போல் மனதிற்குள் அவரது குரல் ஒலித்திருக்கிறது. சுற்றிலும் உள்ளவர்களின் பார்வையில் லேசாக தலையில் கை வைத்துக் கொண்டான்.

" ஐயோ! சார்… கையில ரத்தம்." என்று வெயிட்டர் அவன் அருகே வந்தான்.

" இட்ஸ் ஓகே. ஐ வில் மேனேஜ். ப்ளீஸ் க்ளீன் திஸ் ப்ளேஸ்" என்றவன், பணத்தை எடுத்து வைத்து விட்டு ரூமிற்கு சென்றான்.

காலையில் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு வந்தவன், ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்தான். எதை நினைக்க கூடாது என்று எண்ணி, அங்கிருந்து பயந்து ஓடி வந்தானோ, அது இங்கே வந்தும் அவனைத் துரத்துக்கிறது.

நேரத்தையும், அவனது சிந்தையில் தோன்றும் எண்ணத்தையும் நெட்டித் தள்ள முடியாமல் ஹோட்டலில் இருந்த பாருக்கு வந்திருந்தான்.

தனக்கு முன்பு இருந்த மதுக்கோப்பையை எடுத்து அருந்தும் முன் தந்தையின் நினைவு வந்திட, அதைத் தட்டி விட்டிருந்தான். கீழே விழுந்து சில்லு சில்லான கண்ணாடித் துண்டு ஒன்று தான் அவனது கையை பதம் பார்த்திருந்தது.

கையில் வழிந்த இரத்தத்துடன் அறைக்குச் சென்றவன், கையை சுத்தப்படுத்தினான். சிறிய காயம் தான்… இது சீக்கிரம் ஆறிவிடும். ஆனால் மனதில் ஏற்பட்ட காயம் எளிதில் ஆறுமோ? இல்லை காலம் தான் ஆற்றுமோ?

*************************

கீழே கிளாஸ் விழுந்த அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தாள் உத்ரா.

அவளது முகத்தை பார்த்ததும், " ஷிட்!" என்றான். ' தேவையில்லாததை எண்ணிய மடத்தனத்தை நொந்துக் கொண்டிருந்தான் ரித்விக்.

உத்ரா அவனது கோபத்தை பார்த்ததும்,
வேகமாக கீழே இருந்த கிளாஸை எடுக்கத் தொடங்கினாள்.

" ஹேய் உத்ரா! என்ற பண்ற?" என்றவன் அவளை தடுப்பதற்குள், கண்ணாடித்துண்டுகள் கைகளைப் பதம் பார்த்தது.

" ஓ காட்! உன்னை யார் இதை எடுக்க சொன்னா?" என்று எரிச்சல் அடைந்தவன், அவளது கையைப் பிடித்தான்.

அதற்குள் கையில் இருந்து ரத்தம் சொட்ட ஆரம்பித்தது.

" இல்லை! உங்க கால்ல குத்திடும்." என்றாள்.

" ப்ச்! மெயிடை வரச் சொல்லி க்ளீன் பண்ணியிருக்கலாம். இப்போ பாரு உன் கையில் எவ்வளவு ரத்தம்! கையை இப்படி தூக்கிப் பிடி." என்றவன், அவளை மெத்தையில் அமர வைத்தான்.

இரத்தத்தை பார்த்ததும் அவளது முகம் வெளுக்கத் தொடங்கியது. எண்ணங்கள் எங்கேங்கோ சென்றது.

ரித்விக் உடனடியாக அவனது அன்னையை அழைத்தான்.

என்னமோ, ஏதோ என்று பதறி வந்தார். அவர் கூடவே பர்வதமும் வந்தார்.

உள்ளே வந்தவர் கிளாஸ் உடைந்து கிடைப்பதையும், உத்ராவின் கையில் இருந்து ரத்தம் வடிவதையும் பார்த்தவர், "நல்ல நேரத்துல இதென்ன அபசகுணம்." என்று புலம்ப.

உத்ராவின் முகமோ இன்னும் கலங்கித் தவித்தது.

எப்பொழுதும் பாட்டியிடம் கோபத்தை காட்டாத ரித்விக், " பாட்டி! கொஞ்சம் வாயை மூடுங்க… புலம்பாம சும்மா இருக்கிறதுன்னா, இருங்க. இல்லைன்னா கீழ போங்க." என்றவன்,

" அம்மா! ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸை எடுத்துட்டு வாங்க. அப்படியே இதை க்ளீன் பண்ண சொல்லுங்க." என்றான்.

தன் பேரனுக்கு ஏதோ என்று பயந்து வந்த பர்வதம், அவன் கோபமாக பேசவும், அதிர்ச்சியாக அவரது அறைக்குச் சென்று விட்டார். ' கல்யாணம் ஆனவுடனே இந்த பாட்டி ஆகாதவளா போயிட்டேனோ!' என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தார்.

சுபத்ரா, வேகமாக ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸை நீட்ட. உத்ராவின் கையை சுத்தம் செய்து, பேண்டேஜ் ரோலால் கட்டு போட்டான்.

அயர்ந்து இருந்த மருமகளிடம், " என்ன வேண்டும் டா?" என்று பரிவாக வினவினார் சுபத்ரா.

" அண்ணா." என்றாள்.

" என்னம்மா சொல்ற?" என்று தன் காதில் தான் சரியாக விழவில்லையோ என்று எண்ணிய சுபத்ரா மீண்டும் மருமகளிடம் வினவினார்.

" அண்ணனை பார்க்கணும்." என்று சொல்ல.

சுபத்ரா அதிர்ந்தார். அவர் மட்டுமல்ல அறையை கிளீன் பண்ணிக் கொண்டிருந்த வேலை செய்யும் பெண்ணும் அதிர்ந்து பார்த்தாள்.

தன்னை சமாளித்துக் கொண்ட சுபத்ரா, " க்ளீன் பண்ணியாச்சுன்னா கிளம்பு சுமதி." என்று விரட்டியவர், மருமகளின் அருகே அமர்ந்தார். " உதி! அத்தை இருக்கேன் டா. உனக்கு என்ன பயம்? எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லுமா." என்று தலையை வருடிக் கொண்டே கூறினார்.

" அண்ணனை பார்க்கணும்." என்று பார்வையை அலைய விட்டுக்கொண்டே கூறினாள் உத்ரா.

" இந்த நேரத்துல அவங்களை தொந்தரவு பண்றது, நல்லா இருக்காதுமா."

" ப்ளீஸ் அத்தை! அண்ணனை ஒரு முறை பார்த்துட்டு அனுப்பிடுறேன். வேற எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன்." என்ற மருமகளைப் பார்த்தவர், " அது வந்து…" என்று தயங்கினார் சுபத்ரா.

" அம்மா! உதி ரொம்ப ரெஸ்ட்லஸா இருக்கா. அவ அண்ணன் கூட இருந்தா கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவா. வர சொல்லுங்க."என்று ரித்விக் அழுத்தமாக கூற.

தயங்கத்துடனே தன் மகளுக்கு அழைத்தார். 'நல்ல வேளை அத்தையும் இங்கே இல்லை. கோச்சுக்கிட்டு ரூமுக்கு போயிட்டாங்க. சொந்தக்காரங்களையும் இப்போ தான் ரூமுக்கு அனுப்பிட்டு வந்தேன். இல்லன்னா இதை வைத்து எத்தனை நாளைக்கு பேசிட்டு இருப்பாங்களோ தெரியாது.' என்று மனதிற்குள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டார்

***************************

முகுந்தனும், மானசாவும் அவர்களுக்கான தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். அதில் அபஸ்வரம் போல் மானசாவின் ஃபோன் அடித்தது.

பதறி விலக முயன்றாள். " ப்ச்… எதுக்கு இப்போ விலகுற. ஃபோன் அடிச்சா அடிக்கட்டும்." என்ற முகுந்தன் இன்னும் மயக்கத்திலே இருந்தான்‌.

" முகுந்! அம்மா தான் கால் பண்றாங்க. ஏதோ எமர்ஜென்சின்னு நினைக்கிறேன்." என்று சங்கடமாக கூறியவள், வேகமாக எழுந்து அமர்ந்து தனது ஆடையை சரி செய்து கொண்டே ஃபோனை அட்டென்ட் செய்தாள்.

" மானசா! மாப்பிள்ளையை அண்ணன் ரூமுக்கு வர சொல்லுமா." என்று தயக்கத்துடன் கூறினார்.

" ஏன் மா? என்னாச்சு?" என்று படபடத்தாள்.

" இங்கே அண்ணன் ரூமுக்கு வா." என்றவர் வேறு ஏதும் சொல்லாமல் வைத்துவிட.

அதற்குள் சுதாரித்துக் கொண்ட முகுந்தன், சட்டையை எடுத்து அணிந்துக் கொண்டான்.

" முகுந்! அம்மா உங்களை அண்ணன் ரூமுக்கு வர சொன்னாங்க." என்று முடிப்பதற்குள், வேகமாக வெளியே சென்றான். தன் தங்கைக்கு தான் ஏதோ ஆகிவிட்டது என்று தோன்ற, நெஞ்சு படபடக்க அங்கு சென்றான்.

முகுந்தன் உள்ளே நுழையவும், "அண்ணா!" என்றவளது குரலில் அவளருகே செல்லவும், சுபத்ரா எழுந்துக் கொண்டார்.

ரித்விக்கின் மேல் சாய்ந்தவாறு இருந்தவளின் கட்டுப்போட்டிருந்த கையைப் பார்த்து பதறினான்.

" என்னாச்சு பாப்பா?"

" ஒன்னுமில்லை க்ளாஸ் குத்திடுச்சு. சின்ன காயம் தான். ஆனால் உதி பயந்துட்டா. உங்களைப் பார்க்கணும்னு ஒரே அடம்." என்றான்.

" ஒன்னுமில்லை டா. அண்ணன் இருக்கேன். பயப்படாதே!" என்றவன் அவளது தலையை வருடினான்.

அவள் கூட வந்த மானசாவிற்கோ, சுனாமியாக கோபம் பெருகியது.

" என்ன உத்ரா! இந்த சின்ன காயத்துக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம். இதுக்கா முகுந்தை வர சொன்ன? நான் கூட என்னமோ ஏதோ என்று பயந்து வந்தேன்." என்று அலட்சியமாக கூறினாள்.

தங்கையை சமாதானம் செய்து கொண்டிருந்த முகுந்தன் மனைவியை பார்த்து முறைத்தபடியே, "உன்னை ஒன்னும் கூப்பிடலை. என்னை தானே கூப்பிட்டா. நான் பார்த்துக்கிறேன். நீ கிளம்பு."

இருவரையும் முறைத்துப் பார்த்த மானசா, அவளது அறைக்குச் சென்றாள்.

"நீங்க போங்க முகுந்தன். உங்களைப் பார்க்கணும்னு சொன்னா. அதான் உங்களை டிஸ்டர்ப் பண்ற மாதிரி ஆகிடுச்சு. ட்ரஸ்ட் மீ. உதியை நான் பத்திரமா பார்த்துக்கிறேன். "

" ஐயோ! உங்க மேல நம்பிக்கை இல்லாமல் இல்லை ரித்விக். உதிக்கு இரத்தத்தை பார்த்தால் கொஞ்சம் பயம் வந்துடும். அம்மா, அப்பா இறந்தப்போ அவ தான் பக்கத்துல இருந்தா. அதை அவளால மறக்க முடியலை. சின்னதா இரத்தத்தை பார்த்தாலும், எனக்கும் எதாவது ஆகிடுமோன்னு பயப்படுவா. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க." என்று தயங்கியபடியே கூற.

" ஓ… அதான் உங்களை பார்க்கணும்னு சொன்னாளா?" என்ற ரித்விக் மனைவியைப் பார்க்க, அவளோ அண்ணனின் வருடலில் உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.

"இட்ஸ் ஓகே முகுந்தன் நீங்க போய் மானசாவைப் பாருங்க. அதான் உதி தூங்கிட்டாள்ல, நான் பார்த்துக்குறேன்." என்றான்.

" சரி…"என்று தலையாட்டியவன், அவர்களது அறைக்குச் சென்றான்.
*********************

"நீயும் தூங்கு ரித்வி." என்ற சுபத்ரா, அங்கிருந்து சென்றார்.

திருமணமத்திற்காக இரண்டு நாட்கள் ஓய்வெடுக்காமல் வேலைப் பார்த்த போது கூட அலுப்புத் தெரியவில்லை. இப்போ நடந்த கலவரத்தில் உடலும், உள்ளமும் ஓய்வுக்கு ஏங்க, தூக்கத்திற்கான மாத்திரையை விழுங்கி விட்டு உறங்கினார்.
**************************
மானசாவின் அறையிலோ அவள் உறங்காமல் முகுந்தனுக்காக காத்திருந்தாள்.

" மானு!" என்ற முகுந்தன் அவள் கைகளைப் பற்ற.

"ப்ச்… மானு, தேனுன்னு சொன்னீங்கன்னா எனக்கு கெட்ட கோபம் வரும். கொஞ்ச நேரத்துக்கு முன்ன, எல்லாருக்கும் முன்னாடியும் என்னை திட்டி அனுப்பிவிட்டு, இப்போ எதுக்கு வந்தீங்க."

" மானு! அந்த இடத்துல நீ பேசினது தப்பு டா. உங்க அம்மா ஃபோன் பண்ணும் போது எப்படி பயந்த! ஆனால் என் தங்கச்சிக்கு முடியலைன்னதும் இப்படி அலட்சியமாக நினைக்கலாமா? நீ எனக்கு எவ்வளவு முக்கியமோ, உத்ராவும் அதே மாதிரி தான். புரிஞ்சுக்கோ. "

" நீங்க முதல்ல புரிஞ்சுக்கோங்க. நான் ஒன்னும் தப்பா சொல்லலை. அந்த இடத்தில எங்க அம்மாவோ, அண்ணனோ இருந்தாலும் இதே தான் சொல்லியிருப்பேன். இது ஒரு சின்ன விஷயம். இதுக்காகவா நம்மளை கூப்பிடுவாங்கா? இது நமக்கான நேரமில்லையா? பேசிக் மேனர்ஸ் தெரிய வேண்டாம்." என்று படபடவென பொரிய.

"இப்ப நீ டென்ஷனா இருக்க. எதுவும் பேச வேண்டாம். நாளைக்கு பேசலாம்."

"எப்ப பேசினாலும் இது தப்புதான் முகுந்த்."

" மானு! நீ அவ இடத்திலருந்து புரிஞ்சுக்கணும்."

" அதே தான் நானும் சொல்றேன். என் இடத்துல இருந்து யோசிங்க. நான் உங்க கிட்ட என் காதலை சொல்லி ஒரு வருஷமிருக்கலாம். ஆனால் நான் உங்களை முதன், முதலாக பார்த்ததிலிருந்தே விரும்ப ஆரம்பிச்சுட்டேன். ஆறு வருட காதல். இந்த நாளை எதிர்ப்பார்த்து,எவ்வளவு ஆசையோட காத்திருந்தேன் தெரியுமா?" என்றவளது கண்களிலிருந்து கண்ணீர் வர.

" மானு! அதான்டா சொல்றேன், இந்த நாள் நமக்கான நாள். உன் கண்ணுல இருந்து கண்ணீர் வரக் கூடாது. நான் வேணும்னா, உத்ராவுக்காக மன்னிப்பு கேட்கவா?" என்று இறங்கி வந்தான் முகுந்தன்.

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். எனக்கு தூக்கம் வருது. நான் தூங்குறேன்." என்றாள் மானஸா.

" ஹேய்! அப்போ நம்ம ஃபர்ஸ்ட் நைட்." என்று திகைத்து வினவினான் முகுந்தன்.

" இப்போதைக்கு இல்லை."

" மானு! திஸ் இஸ் டூ மச்." என்று அழாதக் குறையாக கூறினான்.

" நான் தூங்கிட்டேன்." என்றவள் போர்வையை எடுத்து முழுதாக போர்த்திக் கொள்ள.

" எங்க போகப் போற? என்னைக்கா இருந்தாலும் என் கிட்ட வசமா மாட்டத் தானே போற." என்றவனும் புன்னகையுடன் உறங்க முயன்றான்.

***********************
காலையில் கண்விழித்த உத்ரா, இரவு நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.ஒரு நிமிடம் முகம் கலக்கமுற்றது. பிறகு தலையை குலுக்கிக் கொண்டு அருகில் இருந்த கணவனை பார்த்தாள். ரித்விக் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். இரவு அவனுடைய அக்கறையான கவனிப்பு, அவளது வதனத்தில் புன்னகையை மலர செய்தது. கூடவே அவளது அண்ணன் நினைவும் வந்தது‌.' ப்ச்… அண்ணனை தொந்தரவு செய்திருக்கக் கூடாது. அப்போ நான், நானாகவே இல்லை. முதலில் அண்ணியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.' என்று எண்ணினாள்.

ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவே இல்லை. திருமணத்திற்கு அடுத்த நாள் அல்லவா, அவளது பொழுது அவள் வசமே இல்லை. அவளுக்கு மட்டும் இல்லை. இரு ஜோடிக்களுக்குமே அப்படித் தான். கிடைத்த சொற்ப நேரத்திலும் ரித்விக்கை பற்றிய எண்ணம் மட்டுமே அவளது சிந்தனையிலிருந்தது. அதைப் பற்றி இனிமையாக எண்ணிக் கொண்டிருந்தவளுக்குத் தெரியவில்லை, இனி வரும் காலங்களில் அவனது நினைவு அவளைத் துன்பத்திற்கு ஆளாக்க போகிறது என்று…