• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில்-3 🌈

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில் - 3

உத்ராவின் கலகலப்பான பேச்சால், முகம் மாறிய இரு ஜீவன்களை யாரும் கவனிக்கவில்லை.

ஒரு ஜீவன் ரித்விக். அவனுக்கு அபிமன்யுவின் பதிலடியால் முகமாறியது. இன்னொரு ஜீவனோ முகிலன். அபிமன்யுவின் வரவால் முகமாறியது.

அதுவும் அவனது காதலி மானசா, "அண்ணன்." என்று அறிமுகப்படுத்திருக்க, ' யார் இந்த அண்ணன்? ஒரு வேளை அவளது கசினா? தெரியவில்லையே! மானசாவோட ரிலேட்டிவ்ன்னு தெரிஞ்சிருந்தா, ஒழுங்கா கல்யாண பத்திரிக்கையை வச்சிருக்கலாம். முன்னாடியே எல்லா விஷயங்களையும் பேசியிருந்தால் தேவையில்லாமல் குற்றவுணர்ச்சி தோன்றியிருக்காது. முதல்ல அவர் யார்னு மானசா கிட்ட விசாரிக்கணும்.' என்று எண்ணினான்.

உடனே விசாரிப்பதற்கு அந்த மேடையும் இடமளிக்கவில்லை, பர்வதமும் விடவில்லை.

மேல வந்த பர்வதம், உத்ராவிடம் கடிந்துக் கொண்டது மட்டுமல்லாமல், ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்று நின்றுக் கொண்டிருந்த ஃபோட்டோகிராஃபரிடமும் காய்ந்தார். " ஃபோட்டோ எடுத்த வரைக்கும் போதும். நாளைக்கு அதிகாலை முகூர்த்தம். நேரத்தோடு பொண்ணு, மாப்பிள்ளை எழுந்திருக்க வேண்டாமா?" என்றார்.

அவர்களும் பர்வதத்தின் கோபத்தை பார்த்ததும், எல்லாவற்றையும் எடுத்து வைக்க ஆரம்பித்தனர்.


அங்கு நின்று கொண்டிருந்த சுபத்ராவிடம், " சுபத்ரா! இவங்க நாலு பேரையும் சாப்பிடக் கூட்டிட்டு போ.சாப்பிட்டுட்டு நேரத்தோடு படுக்க சொல்லு." என்று அவருக்கும் ஒரு வேலை சொல்லி அனுப்பினார்.

அதற்கு பிறகு முகிலனுக்கு மானசாவோடு தனியாக பேசுவதற்கு சந்தர்ப்பமே அமையவில்லை. 'சரி, நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம்.' என்று முகிலன் நினைக்க, மறுநாளும் அவன் நினைத்தது நடக்கவே இல்லை.

********************

திருமண ஜோடிகளுக்கு காலைப் பொழுது அழகாக விடிந்தது.

புன்னகையும், வெட்கமும் போட்டி போட ஜொலிப்புடன் இரு பெண்களும் உறவினர் சூழ மேடை வந்தனர். குறித்த முகூர்த்தத்தில் உறவினர் மற்றும் கடவுள் ஆசியுடன் திருமணம் நல்லபடியாக முடிந்தது.

அபிமன்யு காலையில் திருமணத்தில் கலந்துக் கொண்டதாக பேர் பண்ணியவன் தாலி கட்டினார்களோ, இல்லையோ அங்கிருந்து கிளம்பிவிட்டான். அதற்காகத்தான் இங்கு தங்கவில்லை . இல்லை என்றால் கிளம்பும் போது யார் கண்ணிலாவது பட்டுவிடும். இப்போதென்றால் வந்த சுவடு தெரியாமல் கிளம்பி விடலாம்.

அவன் நியூயார்க்கு செல்ல வேண்டியது அவ்வளவு அவசியம் இல்லை. ஒரு கிளைண்ட்டோட மீட்டிங். அதை அவன் ஆன்லைன்லயே கவுன்சிலிங் கொடுத்திருக்கலாம்.

ஆனால் இங்கு இருந்தால் தன் தாய் எதற்காவது அவர்கள் வீட்டிற்கு வரவழைத்துக் கொண்டே இருப்பார் என்று எண்ணியே சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு அவன் அமெரிக்காவிற்கு பறக்க நினைத்தான்.

கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு ஃப்ளைட் பத்துமணிக்கு தான். அங்கிருந்து தான் நியூயார்க் பயணம். அதுவும் நாளை காலை தான். அவசரமாக கிளம்ப வேண்டிய அவசியமும் இல்லை. இங்கு இருப்பதற்கு அவனால் முடியவில்லை. அதனால் அவன் தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்றவன், கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு கிளம்பினான்.

இதெல்லாம் தன் அம்மாவிற்கு தெரியாது என்று எண்ணிக் கொண்டிருந்தான் அபிமன்யு.


ஆனால் சுபத்ராவிற்கு எல்லாமே தெரிந்து தான் இருந்தது. அபிமன்யுவிற்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை. அதாவது தம்பியின் திருமணத்தில் கலந்துகொள்ள விருப்பம் இல்லை. அதான் நியூயார்க் செல்வதை காரணமாக சொல்லிவிட்டு புறப்படுகிறான் என்று எண்ணியிருந்தார். ஏதோ கல்யாணத்தில் கலந்துக் கொண்டானே அந்த வரைக்கும் போதும். என்று சுபத்ரா சந்தோஷமாகவே இருந்தார். அதற்கு மேல் வேறு யோசிப்பதற்கும் அவருக்கு நேரமும் இல்லை. மண்டபத்தில் மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார்

திருமணத்திற்கு வந்த விருந்தினர்களை கவனித்து அனுப்பியவர், பொண்ணு மாப்பிள்ளையை நல்ல நேரத்தில் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.


வீட்டிற்கு சென்றும் அவருக்கு ஓய்வு கிடைக்கவில்லை. நெருங்கிய சொந்தங்கள் எல்லோரும் வீட்டிற்கு வந்திருக்க. வேலையாட்களை வைத்து எல்லோரையும் கவனித்துக் கொண்டிருந்தார். பர்வதமும், வீட்டிற்கு வாழ வந்த பேரன் மனைவியையும், வீட்டு பொண்ணான பேத்தியையும் பூஜையறையில் விளக்கேற்ற சொன்னார். பிறகு இரு ஜோடிக்கும் பால், பழம் கொடுப்பது என அவரும் பம்பரமாக சுழன்றார்.

பொண்ணு,மாப்பிள்ளைக்கு அவர்கள் எதிர்பார்த்த தனிமை கிடைக்கவே இல்லை.


மானசாவையும், உத்ராவையும் உறவுப்பெண்கள் கேலி செய்துக் கொண்டிருந்தனர். ஆண்களோ மண்டபத்தை காலி செய்வது, இரவு உணவுக்கு ஏற்பாடு பண்ணுவது என்று வெளிவேலைக்கு சென்றிருக்க. முகிலனும், ரித்விக்கும் மட்டும் அமர்ந்திருந்தனர். இடையில் ரித்விக்கும் ஃபோன் பேசுவதற்காக எழுந்து சென்று விட்டான்.

முகிலனோ காதல் மனைவியின் பக்கம் காதை வைத்துக் கொண்டு கவனத்தை செல்போனில் பதித்து இருந்தான்.

" மானு! நீ ரொம்ப அமைதின்னு நினைச்சோம். ஆனால் பெரிய ஆளு நீ."என்று ஒருத்தி கூற.

"அண்ணி!" என்று சினுங்கினாள் மானசா.

" மானு எதுக்கு இப்ப சிணுங்குற?" அண்ணி சொல்றது உண்மை தானே! சரி சொல்லு, யார் லவ்வை ஃபர்ஸ்ட் சொன்னது. நீயா? இல்லை மாமாவா?" என்று அக்கா முறையுள்ள ஒருத்தி கேலி செய்ய.

" அக்கா நீயுமா? என்னை ஆள விடுங்க?"

"அதெல்லாம் எப்படி விட முடியும்? உன்னோட காதல் கதை எல்லாம் சொல்லு மானு?" என்று எல்லோரும் சேர்ந்து அவளைப் படுத்த.

"ஐயோ! அதை கேட்குறதுக்கு இப்ப தான் நல்ல நேரம் பார்த்தீங்களா?" என்றாள் மானஸா.


"அடியே மானு! ஃபர்ஸ்ட் நைட்டுக்குத் தானே நல்ல நேரம் பார்ப்பாங்க. ஃப்ளாஷ்பேக் சொல்றதுக்குமா நல்ல நேரம் பார்ப்பாங்க?" என்று ஒருத்தி கண்ணடித்து வினவ?

அங்கே சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த முகிலனை பார்த்தாள் மானசா.

'அவர்கள் பேச்சை கேட்டு விட்டேன்.'என்பது போல் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தான்.

" ஐயோ! கொஞ்சம் சும்மா இருங்க. என் மானம் போகுது." என்றவள், இரு கைகளில் முகத்தைப் புதைத்துக் கொள்ள.

அதுவரை அமைதியாக இருந்த உத்ரா, "பாவம் அண்ணியை கிண்டல் பண்ணாதீங்க." என்றாள்.

" அப்போ வா மா ராசாத்தி! உன்னை கிண்டல் பண்ணுறோம். சரி புது பொண்ணாச்சே பயந்துடுவியோன்னு பார்த்து பதமா ராகிங் பண்ணலாம்னு பார்த்தா விட மாட்ட போல இருக்கே." என்றாள் ஒருத்தி.


" பயமா அதெல்லாம் எனக்கு கிடையாதுகா. உங்களுக்கு என்ன கேட்கணும்மோ அதை என்கிட்ட கேளுங்க. நான் சொல்றேன்."

" எங்களுக்கு உங்க அண்ணனோட காதல் கதை தெரிஞ்சுக்கணும் அவ்வளவு தான்."

"அதுவா, அதை நான் சொல்றதை விட எங்க அண்ணன் சொன்னா இன்னும் நல்லா இருக்கும். அண்ணனை கூப்பிடவா?" என்று எல்லோரையும் பார்த்து கூறினாள் உத்ரா.

" ஆத்தாடி ஆளை விடு மா தாயே! வாக்கப்பட்டு வந்த முதல் நாளே எங்களைப் பார்த்து அவர் மிரண்டுடுவார். பாவம் பொழைச்சு போகட்டும். நாங்க மெதுவாவே எங்க மானுவோட காதல் கதையை தெரிஞ்சுக்குறோம்." என்று அந்த கூட்டம் பின் வாங்க.

" ம்… அப்படி வாங்க வழிக்கு… " என்ற உத்ரா கலகலவென நகைத்தாள்.

" அம்மாடி உத்ரா! நல்ல பொண்ணு போ. உனக்கு இன்னைக்கு தான் கல்யாணம். நீ இப்போ இருக்குறது உன் புகுந்த வீடு. புது மனுஷங்க. கொஞ்சமாவது பயம் இருக்கா? நான் எல்லாம் இந்த குடும்பத்துக்கு வாக்கப்பட்டு வந்து நாலு வருஷத்துக்கு பிறகு தான் பேசவே ஆரம்பித்தேன்." என்று ஒருத்தி புலம்ப.

" அக்கா! நான் என்ன தப்பு செஞ்சேன், பயப்படுறதுக்கு? எதுவா இருந்தாலும் நேரடியா பேசிடுவேன். பின்னாடி போய் குறை சொன்னா தான் தப்பு." என்றாள் உத்ரா.

" பாவம் எங்க ரித்விக்! நீ இப்படி பேசிட்டே இருந்தால் விடிஞ்சிடும்." என்று முணுமுணுக்க.

" அது என் பிரச்சனை அக்கா. நான் பார்த்துக்கிறேன்." என்ற உத்ரா கண் சிமிட்ட.

" ஐயோ! ஆளை விடு மா. நீ டேஞ்சரான ஆளு." என்று அவளைப் பார்த்து மிரண்டனர்.

" அது!" என்றவள், எழுந்து ஹாலில் மாட்டியிருந்த ஃபோட்டோக்களை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.


அதில் ஒரு ஃபோட்டோ அவளது கவனத்தைக் கவற, அதை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள் உத்ரா.

ரோஸ் கார்டனில் எடுத்த ஃபோட்டோ தான் அது. ஆனால் அவளது பார்வைக்கு காரணம் அந்த போட்டோவில் இருந்தவனை எங்கோ பார்த்த ஞாபகம். ரோஜாக்களுக்கு நடுவே ஸ்டைலாக தலையை கோதிக் கொண்டு புன்னகையுடன் இருந்தான் பதின்மூன்று வயது சிறுவன்.

' எங்க? எப்போ பார்த்தோம்?'என்றுஉத்ரா யோசித்துக் கொண்டிருக்க.

ஃபோன் பேசிட்டு வந்த ரித்விக் அவளருகே வந்து நின்றான்.
என்ன யோசனை உதி? அந்த கூட்டத்தை எப்படி சமாளிக்கிறதுன்னு யோசிட்டு இருக்கீயா?" என்று தனது கசின்ஸ் இருக்கும் பக்கம் ஒரு பார்வை பார்த்துவிட்டு, நமட்டு புன்னகையுடன் வினவினான்.

" என்னை எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது ரித்தி. நான் தான் போனால் போகட்டும்னு அவங்களை விட்டுட்டு வந்து இருக்கேன்." என்று சொல்லி சிரிக்க.

" ஓஹோ! அப்புறம் ஏன் இங்க தனியா வந்து நிக்குற?"

" ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்க போரடிச்சது. அதான் இந்த ஃபோட்டோஸ்ஸெல்லாம் பார்க்கலாம்னு வந்தேன் ரித்தி‌. ஹான்‍! இந்த போட்டோல இருக்கிறது யாரு?' என்றாள்.

" ஏன் கேட்குற?" என்று வினவியவனின் முகத்தில் எரிச்சல் விரவியிருந்தது.

" இல்லை, எங்கோ பார்த்த மாதிரி இருக்கு." என்று இழுத்தாள் உத்ரா.

"நீ எங்க பார்த்திருக்க போற? சும்மா சொல்லாதே."

" ஹலோ! நாங்களும் இந்த ஊட்டியில் தான் சின்ன வயசுல இருந்தே இருக்கோம். அதான் கேட்டேன்."

" அந்த போட்டோவிலிருக்கிறது நான் தான் போதுமா? சரி வா அங்க போகலாம். " என்று அவளை அங்கிருந்து அழைத்துச் செல்வதிலேயே குறியாக இருந்தான்.

" ஓ! " என்றவள், அதோடு நிற்காமல், ஃபோட்டோவிலிருந்த சிறுவனையும், அருகே இருந்த கணவனையும் ஆராய்ச்சி செய்தாள்.

" ஹேய் உதி! என்ன இப்படி பார்க்குற? எனக்கு வெட்கமா, வெட்கமா வருது. உனக்கு இந்த அச்சம், மடம் நாணம் எதுவும் கிடையாதா? " என்று கிண்டலாக வினவினான்.

" ம்…" என்றவள், அவனை முறைத்துப் பார்த்து விட்டு அருகே இருக்கும் மற்றொரு புகைப்படத்தை பார்த்தாள்.

பர்வதம் அதே சிறுவனின் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டார்.

" என்ன உதி? நான் கேட்டதுக்கு பதிலை காணோம். சரி விடு! நானே கண்டுப்பிடிக்கிறேன்." என்று அவளது காதருகே முணுமுணுத்தான்.


உத்ராவின் முகமோ வெட்கத்தால் சிவந்தது.


மானசாவுடன் இருந்த மற்றவர்கள் அவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

" ஹேய்! ஒரு வழியா எங்க பையன், உன்னை வெட்கப்பட வைச்சுட்டான்" என்று கத்தி கலாட்டா பண்ண.

சுபத்ரா உள்ளிருந்து வந்து எல்லோரையும் அடக்கினார். " என்ன பொண்ணுங்களா சத்தம்? பயந்துட போறா என் மருமக? பேசியது போதும். போய் ஓய்வெடுங்க. மானசா! உதியை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ. ரித்திகண்ணா! மாப்பிள்ளையை நீ அழைச்சிட்டு போ." என்று எல்லோருக்கும் உத்தரவு இட.

சற்று நேரத்திலே அந்த இடம் அமைதியானது.

************
மாலை மயங்கி, மயக்கும் இரவு பொழுது வந்தது. மானசா லெமன் எல்லோ நிற சாஃப்ட் சில்க் சேரியில், மல்லிகை பூச்சூடி ஜொலித்தாள்.
உத்ராவோ, பிங்க் நிற சாஃப்ட் சில்க் சேலையில், தலை நிறைய மல்லிகை பூ வைத்து தேவதைப் போலிருந்தாள்.

" மானு! டைம் ஆகிடுச்சு ரூமுக்கு போ மா." என்று சுபத்ரா கூற.

மாடியிலிருந்த அவளது அறைக்கு தயங்கித் தயங்கி சென்றாள்.

"மானு‌‌! இப்படி நீ நடந்தால் பொழுதே விடிஞ்சிடும்." என்று அவளது அண்ணி கிண்டலடிக்க.

அவளோ முகம் சிவக்க, இவர்களைப் பார்த்து விட்டு சென்றாள்.

" நர்மதா! போதும் டி. காலையிலிருந்து ரெண்டு பொண்ணுங்களையும் கேலி பண்ணிட்டே இருக்க. இரு என் பையன் வரட்டும் சொல்றேன்."

" ம்கூம்! உங்க பையன் அப்படியே சண்டைக்கு வந்துட்டாலும் அவ்வளவு தான்." வாயாடினாள் சுபத்ராவின் அக்கா மருமகள்.

"சரி விடு. உத்ராவை ரித்விக் ரூம்ல விட்டுட்டு வா. அவளுக்கு எது ரித்விக் ரூம்னு தெரியாது." என்று சுபத்ரா கூற.

" நான் தான் கூட்டிட்டு போவேன்." என்று விட்ட கொழுந்தன் மகள், நாத்தனார் மகள், மருமகள் என்று ஆளாளுக்கு போட்டி போட.

" இதுக்கெல்லாமா சண்டை போடுவாங்க. எல்லோரும் போங்க. எந்த வம்பும் பண்ணாமல் விட்டுட்டு வாங்க." என்றவர் தலையிலடித்துக் கொண்டு நகர்ந்தார்.

சிரிப்பை அடக்கிக் கொண்டு அவர்களுடன் சென்றாள் உத்ரா.

" உத்ரா. இது தான் இனி மேல் உன்னோட ரூம். மாப்பிள்ளை சார் ரொம்ப நேரமா வெயிட்டிங். அப்புறம் எங்க பையன் ரொம்ப அமைதி… உன் வேகமெல்லாம் தாங்க மாட்டார். பார்த்து, பத்திரம்… " என்ற உறவுப்பெண்களின் கேலி பேச்சில் முகம் சிவந்தவள் வேகமாக அறைக்குள் நுழைந்து படாரென்று கதவை சாத்தினாள்.

மீண்டும் அறைக்கு வெளியே பெண்களின் சிரிப்பு சத்தம்…

கதவின் மேல் சாய்ந்து தன்னை சமாளித்துக் கொண்டிருந்த உத்ரா, நிமிர்ந்து பார்க்க… குறும்பு புன்னகையுடன் அவளருகே வந்தான் ரித்விக்.

" என்ன?" என்று அவள் வினவ.

" இல்லை, அந்த காலம் மாதிரி துணைக்கு ஆளோட வர்றியே. என் ரூமுக்கு வர்றதுக்கு என்ன பயம்?" என்று கண் சிமிட்டி சிரிக்க.

" பயமா? எனக்கா? அதெல்லாம் இல்லை." என்று அலட்சியமாக கூற.

" ஓஹோ! என்றவன், அவளது இடுப்பில் கை வைத்து இழுக்க.

துள்ளி விலகினாள்.

" ரிலாக்ஸ் பேபி. இங்கே உட்கார்." என்று அவளை மெத்தையில் அமர சொன்னான்.

பதிலெதும் கூறாமல் மௌனமாக அமர்ந்தாள்.

" இந்தா பால் ." என்று டேபிளில் இருந்த க்ளாஸை எடுத்து நீட்டினான்.

அதை வாங்கிக் குடித்தாள் உத்ரா. பாதி குடித்ததும் வெட்கப் புன்னகையுடன் ரித்விக்கிடம் நீட்டினாள்.

அவளைப் பார்வையால் திருடிக் கொண்டே கிளாஸை வாங்கினான். காதுக்குள் அபிமன்யுவின் குரல் ஒலித்தது. ' என் காதலி தான், உன் மனைவி.'
அடுத்த நொடி க்ளிங் என்று க்ளாஸ் உடையும் சத்தம் தான் கேட்டது.
அதிர்ந்து அவனைப் பார்த்தாள் உத்ரா.
**************************

தன் முன்னே உடைந்த க்ளாஸை பார்த்துக் கொண்டே தலையை உலுக்கிக் கொண்டான் அபிமன்யு.

" நோ… உத்ரா! இனி என் வாழ்க்கையில் நீ இல்லை. ப்ளீஸ் என்னை விட்டுடு… என்னோட டாட் சொல்லிக் கொடுத்த நல்ல பழக்கம் எல்லாம் என்னை விட்டு போயிடும் போல இருக்கே. டாட் என்னைய ஏன் விட்டுட்டு போனீங்க. வலிக்குது… எனக்கு ஏதாவது சொல்யூஷன் சொல்லுங்க டாட்‌." என்று நொறுங்கிய மனதுடன் புலம்பிக் கொண்டிருந்தான்.
 
Last edited: