• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்( ன் ) 11

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
திருமண ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடந்து கொண்டே இருக்க எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான், சமர்.


இதோ நாட்களும் இறக்கை கட்டி பறந்து திருமணத்திற்கு முந்தைய நாள் வந்துவிட்டது. செல்வராஜ் காலையிலேயே அருளை பார்த்து


"டேய் நலங்கு வைக்கிறது உனக்கும் உன்னோட அண்ணனுக்கும் சேர்த்துதான் வைக்கணும் கண்டிப்பா அவனோட வீட்டுல தனியா அவனுக்கு வைக்கக்கூடாது. இங்க நம்ம வீட்ல உன் கூட சேர்த்துதான் வைக்கணும் ஆனா ஒன்னு நான் அவனோட வீட்டுக்கு கூட்டிட்டு போற மாதிரி கூப்பிடுவேன், நீயும் அமைதியா என்கூட கிளம்பி வர தயாரா இருக்கணும் அப்படி செஞ்சா மட்டும் தான் நம்ம வீட்ல உள்ள அர லூசு எல்லாம் அவன இங்க வர வைக்க ஒத்துக் கொள்ளும் இல்லனா ஓவரா சீன் போடுவாங்க புரியுதா" என்று கேட்டார்.


"நீங்க சொல்றது நல்லாவே புரியுது சித்தப்பா ஆனா அண்ணன் இங்க வர மாட்டான். ஏன்னா நீங்க ஒன்னு அவன் வீட்டுல வச்சு ரெண்டு பேருக்கும் சேர்ந்து நலங்கு வைக்கலாம் இல்ல அப்படின்னு சொன்னா இங்க வச்சி வைக்கணும் அப்படித்தானே சொல்லி இருக்கீங்க? அதனால அண்ணன் அவனோட வீட்டுல காத்திருக்கலாம் தானே? இங்க வருவான் அப்படின்னு எனக்கு நம்பிக்கை இல்லை அவன இங்க வர வைக்கிறதுக்கு வேற ஏதாவது வழி செய்யலாம் தானே?" என்று தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டான்.



செல்வராஜ் சிரித்துக்கொண்டே "இல்லடா அவன் இங்க வரல அப்படின்னு சொன்னா அங்க ஆதர்ஷினி வீட்ல எல்லாரும் போயிடுவாங்க. அவனுக்கும் அவளுக்கும் சேர்த்து அங்க நலங்கு வச்சிடுவாங்க. இதை எப்படியும் ஆதவன் அவன் கிட்ட சொல்லி இருப்பான். அதனால அவன் கண்டிப்பா இங்க கிளம்பி வந்து விடுவான். இல்லனா நம்ம வீட்ல எல்லாரும் ஒத்துகிட்ட அப்புறமா நானே போய் கூட்டிட்டு வரேன்" என்று கூறி முடித்தார்.


எப்படியும் தன்னுடைய அண்ணன் இங்கு வந்து விடுவான் என்று தெரிந்த பிறகுதான் அருள் மனது நிம்மதி கொண்டது.


வீட்டின் தலைப்பிள்ளை அவன் இருக்கும்போது இரண்டாவதாக தனக்கு அனைத்தும் செய்வது அருளுக்கு நிச்சயமாக பிடிக்கவில்லை. ஆனால் வீட்டில் உள்ளவர்களிடம் எப்படி பேசினால் அவர்கள் சம்மதிப்பார்கள் என்ற விஷயமும் அவனுக்கு தெரிந்து இருந்த காரணத்தினால், எதைப்பற்றியும் யோசிக்காமல் மாலை அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து மீதியிருந்த வேலைகளை பார்க்க சென்று விட்டான்.


செல்வராஜ் அருள் சென்றதை பார்த்துவிட்டு தனக்கு இருந்த வேலைகளைக் கவனிக்க சென்றுவிட்டார். ஆனால் அவருடைய கணிப்பு சரியாகத்தான் இருந்தது.


அங்கே ஆதவன் சமரை பார்த்து "மச்சான் நீ எங்க நலங்கு வச்சிக்கிறதா இருக்க" என்று கேட்டான்.
"ஏண்டா மாப்ள நான் தான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி விட்டேன் அல்லவா சித்தப்பா இங்க வருவாங்களா இருக்கும் கண்டிப்பா யாரையாவது கூட்டிட்டு வருவாங்க. அவங்க எல்லாரும் இருக்கும்போது வச்சிக்கலாம் வேற எங்கேயும் போக வேண்டிய அவசியமில்லை ஒரு இடத்தில இருந்து ஒதுங்கி வந்த பிறகு மறுபடியும் அந்த இடத்துக்கு போவது சரியா வரும்னு எனக்கு தோணல"
"இல்ல டா மச்சான் ஏற்கனவே அங்க அருளுக்கு நலங்கு வைக்காமல் வீட்ல விட மாட்டாங்க நீயும் அங்க போக மாட்டேன் அப்படின்னு சொல்ற அருளும் சித்தப்பாவும் மட்டும் கிளம்பி வந்தால்தான் உண்டு, மற்றபடி யாரையும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் விடமாட்டார்கள். ஒருவேளை சித்தப்பாவும் அருளும் சேர்ந்து உனக்கும் அங்கே நலங்கு வைப்பதற்கு சம்மதம் வாங்கிட்டாங்கனா நீ அங்க போய் தான் ஆகணும். அதை மீறி போகல அப்படின்னு சொன்னா இங்க ஆதர்ஷினி கார்த்திகா ரெண்டு பேரையும் கூட்டிட்டு வருவாங்க உங்க மூணு பேருக்கும் இங்க வச்சு நலங்கு வைப்பாங்க நீ என்ன சொல்ற உன்னோட முடிவுல தான் இருக்கு" என்று கேட்டான், ஆதவன்.


"அந்த ராட்சசி கூட எல்லாம் என்னால நலங்கு வச்சுக்க முடியாது. அவ முகத்தைப் பார்த்தாலே எனக்கு கோபம் தான் வரும் சித்தப்பா என்ன முடிவு பண்றாங்க அப்படின்னு பார்க்கலாம் அதுக்கு முன்னாடி எந்த ஒரு விஷயத்தையும் நீ முடிவு எடுக்க வேண்டாம். இந்த ராட்சசி கூட நலங்கு வைப்பதற்கு பதிலாக அந்த வீட்டுக்கே போய் நான் நலங்கு வச்சிட்டு போயிடுவேன்" என்று முற்பாதி சத்தமாக கூறியவன் பிற்பாதி வாய்க்குள் முனங்கி கொண்டு சென்றான்,சமர்.


ஆனால் அது சரியாக ஆதவன் காதில் விழுந்து விட அவன் மனதில் 'இன்னைக்கு நீ அவகிட்ட இருந்து தப்பிச்சு போனாலும் நாளையிலிருந்து அவ கூட தான் உன்னோட வாழ்க்கை எத்தனை நாள் இப்படி உன்னால ஓட முடியும் கல்யாணம் ஆன பிறகு கண்டிப்பா நீ அவகிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது' என்று எண்ணி சிரித்துக் கொண்டே மீதி இருந்த வேலைகளைக் கவனிக்க சென்றான்.


அதேநேரம் ஆதர்ஷினி வீட்டில் கல்யாண கலை அப்பட்டமாக தெரிந்தது. அங்கிருந்த அனைவருக்குமே தெரியும் அன்று மாலை சமர் மற்றும் அருள் இருவருக்கும் ஒன்றாக நலங்கு வைப்பார்கள், அதுவும் பெரிய வீட்டில் வைத்து தான் நடக்கும் என்பது ஏற்கனவே முடிவு செய்திருந்த விஷயம் என்பதால் சும்மா பேருக்கு தான் சமர் வீட்டிற்கு செல்வதாக சொல்லி இருந்தார்கள். மற்றபடி யாரும் அங்கு செல்ல நினைக்கவில்லை.



திருமணத்திற்கு ஆட்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க அந்த வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருந்தது ஆதர்ஷினி, கார்த்திகா இருவரும் தங்களுடைய பொருள்களை அடுக்கி வைத்துக் கொண்டு இருக்க அவர்களுக்கு பவானி உதவிக் கொண்டு இருந்தாள்.


அங்கு வேறு சில உறவு பெண்கள் இருந்த காரணத்தினால் எந்தவித பேச்சுவார்த்தையில் இல்லாமல் அமைதியாக வேலை நடந்துகொண்டு இருந்தது. ஏனென்றால் ஏதாவது ஒரு வார்த்தை இவர்கள் விளையாட்டாக கூறினால் அதை எப்படி பெரிதுப்படுத்தலாம் என்று தான் பல உறவினர்கள் காத்துக்கொண்டு இருப்பார்கள் என்ற விஷயம் அவர்களுக்கு தெரிந்து இருந்த காரணத்தினால் அமைதியாக தங்களுடைய வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.


இப்படி நேரம் கடந்து செல்ல சரியாக மாலை ஆறு மணி அளவில் நல்ல நேரம் இருந்த காரணத்தினால் ஆதர்ஷினி கார்த்திகா இருவருக்கும் நல்ல முறையில் நலங்கு வைத்து முடித்தனர். திருமணக் கோலத்தில் இருந்த தன்னுடைய இரண்டு பெண்களையும் பார்த்த பாண்டியனுக்கு சிறிதாக கண்கலங்க செய்தது.


'நாளையில இருந்து இவங்க ரெண்டு பேரும் என்னோட பொண்ணு அப்படிங்கிற இடத்திலிருந்து இன்னொருத்தர் மனைவி அப்படிங்கற இடத்துக்கு போயிடுவாங்க. அதை நினைக்கும் போது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு இருந்தாலும் பொண்ணுங்கள பெத்த அப்பா எல்லாருமே இந்த விஷயத்தை கடந்து தான் வரணும் என்னோட பொண்ணுங்க அவங்க வாழ்க்கையில சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு நிம்மதி தான்' என்று எண்ணிக் கொண்டு தன் பிள்ளைகளை நிறைவாக பார்த்துக்கொண்டிருந்தார்.


பெரியவர்கள் அனைவருக்குமே அவர்கள் இருவரது முகத்தில் இருந்த மகிழ்ச்சி மிகவும் நிறைவாக இருந்தது அதனால் அவர்களும் மகிழ்ச்சியாக மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.
இங்கே சிறப்பாக அனைத்து வேலைகளும் நடந்து முடிய அங்கே சமர் இல்லத்தில் அவனை அழைத்துச் செல்வதற்காக வந்த இருந்தனர் செல்வராஜ் மற்றும் புனிதா.


இருவரையும் பார்த்த சமர் அதிர்ந்துதான் போனான் 'சித்தப்பா சித்தி ரெண்டு பேரும் தான் இங்க வருவாங்க அப்படின்னு யோசிச்சு இருந்தேன். இப்போ என்னடா அப்படின்னு சொன்னா சித்தப்பாவும் அம்மாவும் வந்து இருக்காங்க. இதுக்கு அப்பா தாத்தா எல்லாம் எப்படி சம்மதிச்சாங்க' என்று யோசித்தபடி நின்று கொண்டு இருந்தான்.


அவனுடைய தோற்றத்தை வைத்தே அவன் என்ன யோசித்து இருப்பான் என்பதை கணித்த இருவரும் ஒரு மெல்லிய புன்னகை சிந்தி அவன் அருகில் சென்றனர்.


புனிதா அவன் அருகில் சென்று அவனுடைய தலையை பாசமாக வருடிக் கொடுத்தார். அந்த பாசமான வருடலில் ஒரு சில நிமிடங்கள் தன்னிலை மறந்து இருந்தவன். பின்பு அவர்கள் இருவரது முகத்தை பார்த்தான்.


"நம்ம வீட்ல வச்சு தான் உனக்கும் அருளுக்கும் நலங்கு வைக்க போகிறார்கள் அந்த எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு நீ கிளம்பி வா போகலாம் அங்க என்ன நடந்துச்சு எதனால அவங்க சம்மதிச்சாங்க எல்லா விஷயத்தையும் நலங்கு முடிஞ்ச உடனே உனக்கு சொல்றேன். அதுவரைக்கும் எதைப்பற்றியும் யோசிக்காமல் அமைதியா வா. இன்னைக்கு நீ அங்கேயே தங்கி இருக்கிற மாதிரிதான் இருக்கும் நாளைக்கு காலையில கல்யாணத்துக்கு ஒன்னாவே கோயிலுக்கு கிளம்பிப் போய்விடலாம்" என்று கூறினார் செல்வராஜ்.


அவர் கூறிய விதத்திலேயே 'கண்டிப்பா வீட்ல எண்ணமோ ஒரு விஷயம் நடந்து இருக்கு அதனால தான் நமக்கும் அங்க வச்சு நலங்கு வைக்க ஏற்பாடு பண்ணியிருக்காங்க. கண்டிப்பா ஆட்கள் நிறைய பேர் இருப்பாங்க அதனால வீட்டில பிடிக்காதவங்க கூட எதுவுமே சொல்ல முடியாத நிலைமை வரும் எதுக்கு நம்ம ஏதாவது வர மாட்டேன்னு சொல்லி அவங்களுக்கு தலைகுனிவு வர வைக்கணும் அமைதியா போயி இன்னைக்கு ஒரு நாள் தங்கிட்டு வந்துவிடலாம். யார் என்ன பேசினாலும் காதுல வாங்காம இருக்கணும்' என்று நினைத்துக் கொண்டு தன் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த தன் நண்பனை பார்த்தான்.


அவனுடைய எண்ணத்தை சரியாக புரிந்து கொண்ட ஆதவன் "நீ உன்னோட வீட்டுக்கு போ நான் என்னோட வீட்டுக்கு போய் அங்க ஏதாவது வேலை இருந்தா அத கவனிச்சிக்கிறேன். நாளைக்கு காலையில உன்னோட நண்பனா உனக்கு துணையா கண்டிப்பா உன் கூடவே இருப்பேன். கவலைப்படாமல் போயிட்டு வா! என்ன பத்தி யோசிக்காம அங்க போய் நிம்மதியா இரு" என்று கூறினான்.


சமர் மனது ஒரு நிலை இல்லாமல் தவித்தது என்னதான் அவர்களுக்கு பிரச்சனை வரக்கூடாது என்று கிளம்ப நினைத்தாலும் இன்னொருபுறம் அங்கு செல்ல வேண்டுமா என்ற எண்ணமும் இருக்கதான் செய்தது. ஆனால் புனிதா எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டு இருப்பதை வைத்து தன் நண்பனுக்கு ஒரு சிறு தலை அசைவை கொடுத்து விட்டு அவர்களோடு கிளம்பினான்.


அவன் செல்வதை பார்த்த ஆதவன் "இன்னைல இருந்து அந்த வீட்ல தான் உன்னோட வாழ்க ஓடப்போகுது நீயே நினைச்சாலும் இனி அந்த வீட்டுக்குள் இருந்து வெளியே வர முடியாது. இந்த வீட்டுக்கு எப்பவாச்சும் வந்து இருக்கலாம் ஆனா உன்னோட நிரந்தரமான இடம் அதுதான் கண்டிப்பா நீ சந்தோசமா இருப்ப மச்சான்" என்று வாய்விட்டு கூறிவிட்டு தன்னுடைய வீடு நோக்கி சென்றான்.


சமர் வருவதை பார்த்த அவருடைய தம்பி தங்கைகள் அனைவரும் அவனுடன் வந்து நின்று கொண்டனர். அவர்களை பாசமாக அணைத்துக்கொண்டே அந்த வீட்டிற்குள் நுழைந்தான் சாதாரணமாக அங்கே நடந்த பல நிகழ்வுகள் அவன் கண்முன்னே வந்து அவனை வேதனைப்படுத்தியது இருந்தாலும் தம்பி தங்கைகள் அவனை ஒட்டி நின்ற மகிழ்ச்சியில் அதை ஓரம் தள்ளி வைத்து வீட்டிற்குள் நுழைந்தான்.


இவனுடைய வருகையை பிடிக்காமல் நின்று கொண்டிருந்தவர்களும் அதை முகத்தில் கூட காட்ட முடியாமல் அமைதியாக நின்றனர். அப்போதுதான் சரியாக அருள் அவளுடைய அறையில் இருந்து வெளியே வந்தான். சமர் என்ன உடை அணிந்து இருந்தானோ? அதே உடையில், அதே நிறத்தில் அவனும் வர அதை பார்த்த சமர் சிறிது ஆச்சரியம் அடைந்தாலும் இது அனைத்திற்கும் யார் காரணமாக இருப்பார்கள் என்று நினைத்து சிரித்துக் கொண்டான்.


தன் அண்ணனை கண்டவன் ஓடிவந்து அணைத்துக் கொள்ள இவனும் பதிலுக்கு அணைத்துக்கொண்டான். அதன் பிறகு இருவரும் ஒன்றாக அமர வைக்கப்பட்டு நலங்கு ஆரம்பமானது. பெரியவர்கள் என்ற முறையில் பாட்டி இருவருக்கும் நலங்கு செய்ய வேண்டியது இருந்தது அதை செய்வதற்கு அவருக்கு இஷ்டம் இல்லாமல் இருந்தாலும் சுற்றியிருந்த கூட்டத்தின் முன்னிலையில் எதுவும் கூற முடியாமல் அமைதியாக செய்தார்.


எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நலங்கு நல்லமுறையில் முடிந்துவிட ஒரு சில உறவினர்கள் மட்டுமே வீட்டிற்கு கிளம்பி சென்றனர். மறுநாள் காலையிலேயே கோவிலில் வைத்து திருமணம் இருந்த காரணத்தினால் நெருங்கிய உறவினர்கள் அந்த வீட்டிலேயே தங்கி விட்டனர்.


அனைவர் முன்பும் எதுவும் கூற முடியாமல் பெரியவர்கள் அவரவர் அறையில் தஞ்சம் புகுந்து விட்டனர். ஏற்கனவே சமர் அறையில் அனைத்தும் தயாராக வைத்து இருந்த காரணத்தினால் அவனும் எதுவும் கூறாமல் அவனுடைய அறைக்கு சென்றான்.


அவன் அங்கு சென்றதுதான் தாமதம் சிறியவர்கள் அனைவரும் அவன் அறையில் ஒன்று கூடி விட்டனர்.
அவர்களைப் பார்த்து சிரித்தவன் "எப்படிடா இருக்கீங்க? எல்லாரோட படிப்பெல்லாம் எப்படி போகுது? சந்தோஷமா இருக்கீங்களா? யாருக்காச்சும் ஏதாச்சும் பிரச்சனை இருக்கா? எதுவா இருந்தாலும் சொல்லு இந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு தெரியாம நான் தீர்த்து வைக்கிறேன்" என்று பாசமாக கேட்டான்.


அனைவரும் ஒரே குரலில் "நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல அப்படியே ஏதாவது பிரச்சனை வந்தாலும் முதல்ல உன் கிட்ட தான் வந்து நிற்போம் அதனால கவலைப்படாதே! "என்று கூறியவர்கள் தொடர்ந்து "இன்னைக்கு சாயங்காலம் நம்ம வீட்டுல நடந்த ஒரு காமெடி தெரியுமா" கூற ஆரம்பித்தனர்.


அவனுக்கும் மாலை வீட்டில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்த காரணத்தினால் அமைதியாக அவர்கள் சொல்வதை கேட்க ஆரம்பித்தான்.


மாலை நலங்கு வைப்பது பற்றி பெரியவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அருள் "சமர் அண்ணனுக்கும் சேர்த்து தான் கல்யாணம் அதனால ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் நலங்கு வைக்கணும் அது இங்க வச்சு நடந்தாலும் சரி இல்ல அண்ணா வீட்ல வச்சு நடந்தாலும் சரி உங்க எல்லாருக்கும் எது சரியா இருக்கும் அப்படின்னு பாத்துக்கோங்க" என்று கூறினான்.


அதற்கு மறுத்து பேச தாத்தா வாய் திறந்த நேரத்தில் திருமணத்திற்காக வந்திருந்த உறவினர்கள் சிலர் இவர்கள் அங்கே இருப்பது தெரியாமல் பேச ஆரம்பித்தனர்.


"பார்த்தியா இந்த வீட்டு பசங்களுக்கு ஒரே வீட்ல பொண்ணு கிடைச்சிருக்காம் எங்க வீட்ல எல்லாம் வந்து பொண்ணு கேட்டிருந்தார் நிச்சயமாக நான் என்னோட பொண்ணு எல்லாம் கொடுத்து இருக்கவே மாட்டேன். அவங்க வீட்டில எப்படித்தான் நம்பி கொடுக்கிறார்களோ தெரியல" என்று இரு பெண்களின் வாழ்க்கையை என்னவாக போகிறதோ என்ற கவலையில் கூறினார்.


"ஆமாப்பா சொந்த பையனையே அவன் பிறந்த நேரம் சரியில்லை அப்படின்னு இவ்வளவு வருஷம் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்த மாதிரி வச்சிருந்தாங்க. சரி அவங்க தான் அப்படி இருந்தாங்க அப்படி என்று சொன்னாலும் மத்தவங்க எல்லாரையும் ஆவது அவன் மேல பாசம் காட்ட விட்டிருக்கலாம். அதுவும் செய்யாம மொத்தமா அந்த பையன தனிமையில வாட விட்டாங்க.


ஆனா அவன மாதிரி ஒரு நல்ல குணம் கொண்டவனை நம்ம யாருமே பார்க்க முடியாது. இப்போது அவனுக்கு கல்யாணம் பண்ணாம தான் இரண்டாவது உள்ள பையனுக்கு கல்யாணம் பண்ண யோசிச்சு இருப்பாங்க. வீட்ல யாராவது ஒருத்தர் சண்டை போட்டு இருக்கணும் இல்லன்னா ரெண்டாவது பையன் சொல்லியிருக்கணும் இல்லனா இவங்களுக்கு அந்த எண்ணம் எல்லாம் வந்து இருக்காது. பாவம் அந்த பொண்ணுங்க இந்த வீட்ல வந்து என்ன கஷ்டம் எல்லாம் படப் போகுதோ" என்று பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.


"நாமளும் அந்த கடவுள் கிட்ட வேண்டிப்போம் அந்த பொண்ணுங்க வந்த நேரத்துல இந்த வீட்ல எந்தவித பிரச்சினையும் வந்து விடக்கூடாது, அப்படியும் அந்த பொண்ணுங்க வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான் இன்னைக்கு நலங்கு எப்படி வைக்க போறாங்களோ தெரியல ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் வைக்கணும் அதை என்ன முடிவெடுத்து இருக்காங்களோ கண்டிப்பா அந்த பையனை இங்க கூட்டிட்டு வர மாட்டாங்களா தான் இருக்கும். அப்படி கூட்டிட்டு வரலனா நம்ம எல்லாரும் அங்க போய் அந்த பையனுக்கு நலங்கு வச்சுட்டு வந்துவிடுவோம்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டே சென்றனர்.


அனைத்தையும் கேட்ட அருள் இப்போது தன்னுடைய தாத்தா முகத்தை பார்த்து "ஏதோ சொல்ல வந்த மாதிரி இருந்துது தாத்தா என்ன சொல்லணும் சொல்லுங்க" என்று சிறிது நக்கலாக கேட்டான்.
அங்கிருந்த அனைவருக்குமே இப்போது என்ன பேசுவது என்று தெரியவில்லை நிச்சயம் சமர் இங்கு வரவில்லை என்றால் ஏதாவது ஒரு பிரச்சனை வரும் என்பதை உணர்ந்து கொண்டே ஒரு வகை அமைதி காத்தனர். அதே சமயம் தாங்கள் நல்லவர்கள் என்று நிரூபிக்கும் விதமாக ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.


பரிபூரணம் தன் அருகில் நின்று கொண்டு இருந்த புனிதாவை பார்த்து "உன்னோட கொழுந்தனார் கூட போய் உன்னோட பையன கூட்டிட்டு வா. அவன் வராம இருந்தா மொத்த ஊரும் எங்கள கேவலமா பேசும் ஒழுங்கு மரியாதையா போய் கூட்டிட்டு வா" என்று கடுகடுத்த முகத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.


அவர் கூறி சென்றதுக்கு வேறு யாராவது மறுப்பு சொல்வார்களா என்று சுற்றி இருந்த அனைவரையும் பார்த்தாள் புனிதா. ஆனால் அனைவரும் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்கவே அவருடைய முகத்தில் மகிழ்ச்சி வந்தது. அவர் முகத்தில் மட்டுமல்ல அங்கிருந்த மற்றவர்கள் முகத்திலும் மகிழ்ச்சி வந்தது அதன் பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து சமரை அழைக்க வந்தனர்.


"இதுதான் அண்ணா நடந்துச்சு ஆனா பாட்டி இப்படி சொன்னதை கேட்ட ஊரிலுள்ளவங்க கூட பெருசா கண்டுக்கவே இல்ல அவங்க அப்போவும் அவங்களுக்குள்ள எண்ணமும் முணுமுணுத்து தான் இருந்தாங்க. இவ்வளவு நாள் வீட்ல உள்ளவங்க சொல்லும்போது காதுலை கூட ஏறல ஊர்ல உள்ளவங்க ஏதாவது ஒரு விஷயம் சொன்னால் உடனே அதுக்கு இப்படி ரியாக்சன் குடுக்குறாங்க இதை அவங்க அவங்க மனசு சொல்வதை கேட்கலாம் தானே! தேவையில்லாமல் எதையாவது நம்பிக்கிட்டு யோசிச்சுகிட்டு தேவையில்லாத வேலை எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு இருக்காங்க" என்று சிரித்தபடியே கூறி முடித்தனர்.


அதைக் கேட்ட சமர் யோசித்தபடியே அமர்ந்து இருந்தான். அதன்பிறகு அனைவரும் ஒன்றாக தூங்க ஆரம்பித்தனர்.


அதேநேரம் ஆதவன் மற்றும் தனியாக வருவதைப் பார்த்து என்ன நடந்து இருக்கும் என்று யோசித்த ஆதர்ஷினி குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு தங்களுடைய வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சிறிதுகூட மகிழ்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் பல பல கனவுகள் ஆசைகளோடு அனைவரும் அந்தநாள் இரவு உறங்கச் சென்றனர்.


மறுநாள் காலை மிகவும் அழகாகவே விடிந்தது.

அடுத்த அத்தியாயத்தில் கல்யாண கலாட்டா அனைவரும் வந்து அதை மகிழ்ச்சியோடு என்ஜாய் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தங்களுடைய கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
  • Like
Reactions: Maheswari