• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழ்வும் ஆளவும் அவள்(ன்) 9

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
சமர் மனதில் கோபம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. அனைவருடன் ஒன்றாக ஆதர்ஷினி வீட்டிலிருந்து கிளம்பியவன், எந்த இடத்திலிருந்து அவர்களுடன் இணைந்து கொண்டானோ! அந்த இடம் வரை அமைதியாகவே வந்தான்.


எப்பொழுதும் ஏதாவது பேசாவிட்டாலும் தம்பி தங்கைகள் பேசிக்கொண்டிருப்பதை ரசித்துக்கொண்டு அல்லது சிரித்துக் கொண்டு வருபவன், இன்று அமைதியாக வந்தது, ஏன் என்று அங்கிருந்து சிலருக்கு காரணம் தெரிந்தாலும் கண்டும் காணாதது போல் அமர்ந்து இருந்தனர்.


சரியாக இவர்களுடன் இணைந்த இடத்திற்கு வந்தவன்* யாரிடமும் எதுவும் கூறாமல் தன்னுடைய வண்டியை எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்கு சென்று விட்டான். எப்பொழுது அவன் இறங்குவான் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு கூட, அவன் இவ்வாறு சென்றது என்னவாக இருக்கும் என்ற யோசனையை தந்தது. இருந்தாலும் அவர்கள் மனதில் இருந்த கோபம் அதை கேட்க விடாமல் செய்தது.
யாரையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய இல்லம் வந்து சேர்ந்தவன், தன்னுடைய குடும்பத்தில் தனக்கு நெருக்கமானவர்கள் உட்பட பலர் ஆதர்சினிக்கு உதவி செய்து இந்த விஷயத்தை திட்டமிட்டு நடத்தி இருக்கிறார்கள் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.



"நான் யாரை எல்லாம் ரொம்ப நம்ப நேசித்தேனோ! அவங்க எல்லாருமே இந்த கல்யாண விஷயத்துல எனக்கு எதிராய் இருக்காங்க, இது எல்லாத்துக்கும் காரணம் தர்ஷி! அவ மட்டும் நான் சொல்லும் போதே ஒழுங்கா கேட்டு அமைதியாக போய் இருந்தா அப்படின்னு சொன்னா, இவ்வளவு தூரத்துக்கு வந்து இருக்குமா? என்னால எல்லாருக்கும் கஷ்டம் அப்படின்னு நான் எவ்வளவோ முறை சொன்ன பிறகும், அதை காது கொடுத்து கேட்க அவளுக்கு விருப்பமில்லை. அவ்வளவு பிடிவாதமாய் இருக்கா.
அதுமட்டுமில்லாமல் என்ன கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கா, என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ வாழ்க்கையில ரொம்ப கஷ்டப் பட போகிறா. இதையெல்லாம் சொன்னாலும் யாரும் காது கொடுத்து கேட்க மாட்டாங்க. எல்லாரும் அவங்கவங்க இஷ்டத்துக்கு தான் எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நம்மள ஒரு மனுஷனா மதிச்சா தானே நம்மளோட கருத்துக்கும் கொஞ்சமாச்சும் காது கொடுப்பாங்க" என்று கோபமாக கத்திக்கொண்டே இருந்தான்.



சமர் கிளம்பியவுடன் அவன் முகத்தில் இருந்த உணர்ச்சிகளை கண்டு கொண்ட அவனுடைய உயிர் நண்பன் ஆதவன், அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் அனைவரையும் பொதுவாக பார்த்து "சமர் மனநிலை இப்போ எப்படி இருக்கு அப்படின்னு உங்க எல்லாருக்கும் தெரியும். நானும் அங்க போகல அப்படின்னு சொன்னா, அவன் ரொம்பவே தன்னை குழப்பி கொள்வான். அதனால நான் அவனை போய் பாக்குறேன். உங்களால முடிஞ்ச அளவுக்கு வேலைய முடிங்க மீதிய நான் வந்து பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.



விரைவாக கிளம்பி வந்தவன், கேட்டது என்னவோ சமரின் கோபமான வார்த்தைகள்தான். அந்த வார்த்தையில் கூட அவன் தர்ஷி என்று செல்லப் பெயர் வைத்து இருப்பதை புரிந்து கொண்டவன்
'உன்னோட மனசுல ஆதர்ஷினி இருக்கா! ஆனா அதை நீ வெளியே சொல்ல பயப்படுற, அதே மாதிரி இப்போ நீ பேசறது இல்ல உன்னோட கோபத்தை விட ஆதங்கம், வெறுமை அதிகமா இருக்கு. அதே சமயம் உன்னை அறியாம உனக்குள்ள சின்ன சந்தோஷமா இருக்கு. இது எல்லாத்தையும் உனக்கு எப்படி புரிய வைக்க போறேன் அப்படின்னு தெரியல, ஆனால் கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் புரிய வைத்து விடுவேன்' என்று எண்ணிக் கொண்டே அவன் அருகில் சென்றான்.



தன் நண்பனின் வருகையை உணர்ந்தவன் அவனை திரும்பி பார்த்தான். ஆதவன் முகத்தில் தன் நண்பனை நினைத்து ஒரு கவலையும் இருந்தது, அதை கண்டு கொண்ட சமர் தன்னுடைய முகத்தை சகஜமாக மாற்ற நினைத்தான். ஆனால் அவன் மனதில் இருக்கும் கோபம் அதை மாற்ற விடவில்லை அதனால் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு நின்றுக்கொண்டு இருந்தான்.



"டேய் எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம் கொஞ்சம் பொறுமையா தான் யோசிச்சிப் பாரேன், எல்லாரும் உன்னுடைய நல்லதுக்கு தான் பண்ணி இருக்காங்க. உன்ன பத்தி எல்லாம் தெரிஞ்ச பிறகும் உனக்காக யோசிக்கிற ஒரு பொண்ணு கிடைக்கும்போது, யாருக்கும் அந்த பொண்ண விட மனசு வராது. இது தான் உன்னோட வீட்ல இருக்க எல்லாருக்கும் தோனி இருக்கும். அதனாலதான் அவங்க உன் கிட்ட கூட சொல்லாம இது எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணி இருப்பாங்க. கோபத்துல யோசிக்காம எல்லாத்தையும் பொறுமையா உக்காந்து யோசிச்சு பாரு" என்று தன்னுடைய நண்பனுக்கு தன்னால் ஆன அறிவுரையை கூறினான்.



ஆதவன் கூறுவது சரியாக இருந்தாலும் சமர் இருக்கும் மனநிலையில் அவனால் அதை ஏற்க முடியவில்லை, ஆனால் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தான். அவனுடைய யோசனை முகத்தை பார்த்த ஆதவன் 'இனி அவனை சரி பண்ணி விடலாம்' என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தாள் ஆதர்ஷினி. அவளுடன் கடமையே என வந்து இருந்தாள் பவானி.



ஆதவன் தங்கள் இருவரையும் பார்ப்பதை பார்த்த பவானி வீட்டில் நடந்த விஷயங்களை யோசிக்க ஆரம்பித்தாள். எப்போது அவன் வீட்டிலிருந்து வெளியில் கிளம்பி சென்றானோ! அடுத்த நிமிடம் ஆதர்ஷினி


"அப்பா நான் உடனே போய் சமர பாக்கணும்! ஏன் அப்படின்னு சொன்னா கண்டிப்பா அண்ணன் போய் சமர தெளிவாக முடிவெடுக்க வைக்க நினைப்பாங்க. ஆனா அப்படி சமர் தெளிவாக யோசிக்க ஆரம்பித்தா நாம நினைச்சது எதுவுமே நடக்காது. இந்த கல்யாணத்தை நிறுத்த என்ன பண்ணணுமோ? அதைதான் அவன் யோசிக்க ஆரம்பிப்பான். அவனுடைய கோபத்தை தாங்குவது எனக்கு பெரிய விஷயம் கிடையாது. ஆனா கல்யாணம் முடியுற வரைக்கும் இதே கோபத்தோடு அவன் இருக்கறதுதான் நல்லது. அதனால நான் இப்பவே கிளம்பறேன்" என்று கூறியவள்.


இவ்வளவு நேரம் இவள் பேசியதைக் கேட்டு வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்த பவானியை இழுத்துக் கொண்டு சென்றாள்.


அவள் செல்வதை பார்த்த பாண்டியன் "பாவம் மாப்ள இவ கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபடப் போகிறாரோ" என்று தன் மருமகனை நினைத்து கேலியாக வருத்தப்பட்டவாறு வேலைகளைக் கவனிக்க சென்றனர்.



இங்கே ஆதர்ஷினி வருகையை உணர்ந்து கொண்ட சமர் மிகவும் கோபமாக அவள் நிற்கும் புறம் திரும்பினான். எந்த அலங்காரத்தில் பெண் பார்க்க வரும்போது இருந்தாளோ அதே அலங்காரத்தில் வந்து இருந்தாள். அவன் அறியாமல் ஒரு நிமிடம் அவளை ரசிக்க ஆரம்பித்தான்.



ஏற்கனவே ஆதர்ஷினி கண்கள் சிரித்துக் கொண்டிருக்கும், இப்போது தன் மனதிற்கு பிடித்தவரை திருமணம் செய்ய போகிறோம் என்ற மகிழ்ச்சியில் அவள் முகம் முழுவதுமே மகிழ்ச்சியில் விரிந்து இருந்தது. அதுமட்டுமல்லாமல் நிச்சயமாக எப்பொழுதாவது தன்னை சமர் ரசிப்பான் என்று யோசித்தவள், முதல் முதலாக அவனுக்காக பார்த்து பார்த்து அலங்காரம் செய்து இருந்தாள். தேவலோக பதுமை எவ்வாறு இருப்பாளோ! அதுபோலவே சமர் கண்களுக்கு தெரிந்தாள்.



மனதிற்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களுடைய தோற்றமோ, அழகோ எதுவுமே விருப்பமானவர்கள் கண்களுக்கு சிறியதாக தெரியாது. அது தேவதைகளின் மறு உருவமாகவே தெரியும் என்பதற்கு இணங்க, உண்மையான தேவலோக பெண் இறங்கி வந்து விட்டாளோ என்று எண்ணுமளவிற்கு சமர் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து ரசனையாக மாறியது.


அவனுடைய ரசனையான பார்வையை கண்டுகொண்ட ஆதர்ஷினி மற்றும் ஆதவன் இருவரும் உள்ளுக்குள் சிரித்துக் கொள்ள பவானி ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவளுடைய மனதில் 'அப்ப இந்த அண்ணாக்கு இவள ரொம்ப பிடித்து இருக்கு, இருந்தாலும் எல்லாரும் ஏதாவது பேசுவாங்க அப்படின்னு சொல்லி தான் இவங்க கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்கிறார்கள். இப்ப இந்த அண்ணாவோட முகத்தை பார்க்கும் போது நம்ம பிரெண்ட் பண்ணது எல்லாமே சரிதான் அப்படின்னு தோணுது, அவ நினைச்சது போல நல்லதாகவே நடக்கும்' என்று நினைத்து மகிழ்ந்தாள்.



அவர்கள் இருவருக்கும் தனிமையை கொடுக்க எண்ணிய ஆதவன் பவானியின் முகம் பார்க்க, அப்போதுதான் தன்னுடைய சிந்தனையில் இருந்து வெளியே வந்தவள், அதே சிரித்த முகத்துடன் அனைவரையும் பார்க்கும்போது தன்னைப் பார்த்துக் கொண்டே இருப்பவனையும் கண்டாள். 'எதற்காக இவன் இப்படி பார்க்கிறான்' என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஆதவன், சமர், ஆதர்ஷினி இருவரையும் கண் காட்டிவிட்டு அகன்றான். அதை புரிந்து கொண்ட பவானியும் அவன் பின்னால் சென்றாள்.


சமரின் ரசனை பார்வையில் வெட்கம் வந்தாலும், அதை மீறி அவனிடம் நெருங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் மெதுவாக அவன் அருகில் சென்றாள்.
சமர் மனதில் ஆதர்ஷினி மீதான காதல் எப்பொழுதோ முளைத்து விட்டது. ஆனால் அவன் தான் அதை வளரவும் விட முடியாமல், அழிக்கவும் முடியாமல் தடுமாறிக் கொண்டே இருந்தான். அந்த காதல் இப்போது அவனை மீறி அப்பட்டமாக வெளியே தெரிய ஆரம்பித்தது.


அது இனி அவள் தனக்கானவள் என்ற எண்ணத்தில் வந்ததா? இல்லை என்றுமில்லாமல் இன்று அவன் கண்ணுக்கு அவள் தேவதையாக தெரிந்த காரணத்தினால் வந்ததா? என்பது அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அவன் அறியாமல் அவனுடைய மொத்த காதலையும் கண்களில் காட்டிக்கொண்டு இருந்தான்.
சும்மாவே அவனை விட்டு விலக நினைக்காத ஆதர்ஷினி, அவனுடைய மொத்த காதலையும் பார்த்த பிறகு விலக நினைப்பாளா என்ன ! அதனால் மெதுவாக அவன் அருகில் வந்தவள், சிறிதளவு மட்டுமே இடைவெளிவிட்டு நின்றாள்.


சமருக்கு அவளுடைய இந்த நெருக்கம் மூச்சு முட்ட வைத்தது. அவனால் அங்கிருந்து அகன்று செல்லவும் முடியவில்லை மூளை அவனை நகன்று செல்ல கட்டளை இட்டாலும் மனது அவனை அசைய விடாமல் பிடித்து வைத்து இருந்தது.


அவனுடைய நிலைமையை முழுவதுமாக உள்வாங்கிய ஆதர்ஷினி "நான் என்னைக்குமே உனக்கு மட்டும்தான் சொந்தம்! அதை நீயே நெனச்சாலும் மாத்த முடியாது. நான் என்ன வேணா வேண்டாத வேலை பார்ப்பேன், பார்த்து உன்ன தான் கல்யாணம் பண்ணிப்பேன். ஏற்கனவே என்னுடைய காதல் எப்படி! அப்படின்னு உனக்கு தெரியும், உனக்கு என் மேல காதல் இருக்கு அப்படின்னு இப்ப நீ நிரூபித்து விட்ட! ஆனாலும் நீ உன் வாயால சொல்ல மாட்ட, அது எனக்கு நல்லாவே தெரியும். எப்போ உன்னோட வாயிலிருந்து இந்த வார்த்தையை வாங்கனும் அப்படின்னு எனக்கு தெரியும்.



இவ்வளவு நேரமும் என் மேல கோவத்துல தான் நீ கத்திக்கிட்டு இருந்து இருப்ப, ஆனா இப்போ உன்னோட கண்ணுல ஒரு ரசனை தெரியுது. அதை பார்க்கும்போது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு, ஆனால் உன்னுடைய கெத்த நீ விடமாட்ட !இன்னும் நான் நிறைய பிளான் பண்ணி வச்சிருக்கேன். கண்டிப்பா அதுல எல்லாம் நீ ரொம்ப டென்ஷன் ஆவாய். அதுக்கு என்னால ஒண்ணும் பண்ண முடியாது, எவ்வளவு கோபப்பட முடியுமோ அவ்வளவு கோபப்பட்டு கோ, இல்லனா மொத்தமாக சேர்த்து வச்சி கல்யாணம் முடிஞ்ச பிறகு கோபப்பட்டு என்ன வேணா பண்ணு. கண்டுக்கவே மாட்டேன்! புரியுதா மை டியர் புருஷன்!" என்று கூறிவிட்டு கிளம்பி விட்டாள்.



செல்லும்போது ஆதர்ஷினி வேகமாக மூச்சை இழுத்து விட்டாள். ஏனென்றால் அவளுக்குமே அவனுடைய நெருக்கம் மனதில் பல வகையான உணர்வுகளை ஏற்படுத்த தான் செய்தது. ஆனால் இப்போது அதற்கு சரியான நேரமில்லை என்று நினைத்துக் கொண்டுதான் கிளம்பினாள்.


சமருக்கு கோபம் அளவுக்கு அதிகமாகவே வந்தது. ஒருபுறம் கோபம் என்றால் மறுபுறம் அவள் வந்தவுடன் அவளைப் ரசனையாக பார்த்தது அவள் அருகில் வரும்போது எதுவும் பேசமுடியாத அமைதியான நிலையில் இருந்தது என்று தன்னை எண்ணியே கோபம் கொண்டான்.


'அவ மேல எவ்வளவு கோபமா இருந்தேன். தூரத்தில் இருந்து வரும் போது அவளை பார்த்து எதற்காக நான் இப்படி ரசிக்கனும் சும்மாவே ஆடுவா! இதுல நான் வேற அவளுக்கு எடுத்துக் கொடுத்து இருக்கேன். இத வச்சி இன்னும் என்னென்ன பண்ண போறாளோ! அவளுடைய நெருக்கத்தில் ஏன் என்னால கோபப்படவோ, திட்டவோ முடியல, அதுவே அவளுக்கு கிடைத்த வெற்றி தானே! அவர் பேச பேச தான் எனக்கு எனக்கு சுய உணர்வு வர ஆரம்பிச்சது. இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது. எல்லாரும் அதற்கு உதவி பண்ண போறாங்க, ஆனாலும் அவ இன்னும் என்னென்ன யோசிச்சு வெச்சு இருக்கா அப்படின்னு தெரியலையே' என்று தனக்குள் புலம்பிக் கொண்டு நின்று கொண்டு இருந்தான்.


பவானி தனியாக அழைத்து சென்று ஆதவன் அவள் முகம் பார்த்து "உனக்கு என்னை பிடிச்சிருக்கா! என்ன கல்யாணம் பண்றதுக்கு உனக்கு சம்மதமா! உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே" என்று தன் மனதில் இருந்த கேள்வியைக் கேட்டான்.


"ஆதர்ஷினி சொல்ற வரைக்கும் எனக்கு உங்க மேல அப்படி ஒரு எண்ணம் இருந்தது இல்லை. ஆனால் இப்போ உங்கள பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு கண்டிப்பா இந்த பிடித்தம் காதலாக மாறும் அப்படின்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால அதை பத்தி நீங்க கவலை படாதீங்க, எப்பவுமே சமர் அண்ணாக்கு துணையாய் இருங்க இந்த கல்யாணம் நல்லபடியாக நடந்தால் தான் நிம்மதியாக இருக்கும்" என்று கூறினாள்.



ஆதவன் மனதிற்கு ஏனோ மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதன்பிறகு இருவருக்குள்ளும் எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லை தூரத்திலிருந்து இவர்கள் வருகிறார்களா? என்று பார்க்க ஆரம்பித்தனர்.
சிறிது நேரத்தில் ஆதர்ஷினி வர பவானி "சரி நான் போய் என்னோட பிரெண்ட பார்க்கிறேன். நீங்களும் உங்க பிரண்ட பாருங்க" என்று கூறிவிட்டு தன் தோழி பின்னால் ஓடினாள்.


அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே தன் நண்பன் இருக்குமிடம் வந்தவன், அவன் புலம்பிய புலம்பல் அனைத்தையும் கேட்டு அவனுடைய தோளில் கை வைத்தான்.


தன் நண்பனை பார்த்து ஒரு விரக்தி சிரிப்பு சிரித்தவாறே "என்னோட வாழ்க்கையில எந்த முடிவையும் நான் எடுக்கிறது இல்ல, யார் யாரோ எடுத்துட்டு இருக்காங்க, அதே மாதிரிதான் இந்த கல்யாண முடிவையும் யாரோ எடுக்குறாங்க. ஆனா எனக்கு உரிமையா என்கிட்ட வந்துட்டா என்னுடைய கோபம் எல்லாத்தையுமே சேர்த்துதான் காட்டுவேன். அதை தாங்கிக் கொள்வதற்கு அவ தயாராய் இருக்கணும் அத மட்டும் உன்னோட தங்கச்சி கிட்ட சொல்லிரு" என்று கூறிவிட்டு தன்னுடைய வீட்டிற்குள் சென்று விட்டான்.


"ஆமா போடா, உன்ன பத்தி புதுசா நாங்க என்னத்தை போய் அவ கிட்ட சொல்லுறது அவ தான் எல்லா விஷயத்தையும் கரைச்சு குடிச்சி வச்சிருக்கா. இதுல நாங்க எதுவும் சொல்வதற்கு இல்லை ஆனாலும் அவ தான் உனக்கு சரியா இருப்பா. உன்னோட மனசுல அவ மேல எவ்வளவு காதல் இருக்கு, அப்படி என்கிற விஷயம் எங்க எல்லாருக்குமே புரியுது. கூடிய சீக்கிரம் உன்னோட மனசுல இருக்க தாழ்வுமனப்பான்மை, வெறுமை எல்லாத்தையும் போக்கி உன்னையும் எல்லாரையும் மாதிரி அவ மாத்திடுவா அப்படின்னு சொல்லி எங்களுக்கு நம்பிக்கை இருக்கு" என்று வாய்விட்டே புலம்பியவாறு வீட்டிற்கு கிளம்பி சென்றான்.


அதன்பிறகு வந்த நாட்களில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்றது. சரியாக நான்கு நாட்களில் இரண்டு ஜோடிகளுக்கும் திருமண நாள் குறிப்பது பற்றி கலந்தாலோசித்து முடிவு எடுப்பதற்காக செல்வராஜ் தர்ஷினி வீட்டிற்கு வந்தார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து 15 நாளில் திருமண தேதியை குறித்தனர்.



செல்வராஜ் தயங்கிக்கொண்டே "கல்யாணத்த மூணு மாசம் கழிச்சு கூட வைக்கலாம். ஆனா அதுக்கு எங்களோட மூத்த பையன் ஒத்துக்க மாட்டான். கண்டிப்பா ஏதாவது ஒரு வேண்டாத வேலை பார்ப்பான். அவன பத்தி உங்களுக்கே தெரியும் அதனாலதான் இப்படி அவசரமாக 15 நாள்ல வைக்க வேண்டியதா இருக்கு. அதுவும் உங்க ரெண்டு பொண்ணுங்களுக்கும் பெருசா செய்ய முடியாமல் போய்விடுமோ? அப்படின்னு உங்களுக்கு கவலையா இருக்கும், அதை நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. ஆனா எவ்வளவு நல்ல விதமாக செய்ய முடியுமோ அவ்வளவு பெருசா இந்த 15 நாள்ல செஞ்சுடலாம் நீங்க கவலைப்படாதீங்க" என்று தன் மனதில் இருப்பதை மறைக்காமல் கூறினார்.



"நீங்க எதை நினைத்தும் கஷ்டப்பட வேண்டாம் எங்க வீட்டு பொண்ணு தான் எல்லா விஷயத்தையும் யோசிச்சு செய்கிறாள் இதுக்காக நீங்க கலங்காதீர்கள் சமர் எங்க வீட்டு பையன் மாதிரிதான், அவனும் அவனோட வாழ்க்கைல சந்தோஷமா இருக்கணும் அதுக்காக நாங்க என்ன வேணும்னாலும் பண்ணுவோம். தேவை இல்லாமல் மனசை போட்டு குழப்பிக்காம சந்தோஷமாயிருங்க முதல்ல இந்த விஷயத்தை உங்க வீட்ல போய் சொல்லுங்க, அவங்க எல்லாரும் என்ன சொல்றாங்க அப்படின்னு பாத்துட்டு முடிவெடுக்கலாம்" என்று தங்கவேல் தெளிவாக கூறினார்.


செல்வராஜக்கும் அதுவே சரி என பட அவர்களிடம் "சரி நான் வீட்ல போய் பேசிட்டு உங்களுக்கு போன் பண்ணி சொல்றேன். எனக்கு தெரிஞ்சி கண்டிப்பா இந்த 15 நாள்ல கல்யாணம் வைத்துவிடலாம் நீங்களும் எதைப்பற்றியும் யோசிக்காதீங்க" என்று கூறிவிட்டு கிளம்பினார்.


திருமண தேதி பற்றிய விஷயம் சமர் மற்றும் அவருடைய வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியவந்தது. இனி அவர்கள் என்ன பிரச்சனைகள் போகிறார்கள் என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்து கொள்ளவும்.
 
  • Like
Reactions: Maheswari

Manju

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2021
10
10
3
Kalakad
பிரச்சினை இல்லாமல் எப்படி இந்த கல்யாணம் நடக்கும்.....சமர் நல்லா இருந்த பொறுக்காதே
 
  • Love
Reactions: Aashmi S

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
பிரச்சினை இல்லாமல் எப்படி இந்த கல்யாணம் நடக்கும்.....சமர் நல்லா இருந்த பொறுக்காதே
😂😂😂😂