• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விதி 1

Malar Bala

Staff member
Jul 31, 2021
67
50
18
Thanjavur
அத்தியாயம் 1

அதிகாலை பொழுது. சூரியன் தன் கதிர் கரங்களை மெல்லியதாக விரிக்க தன்னை தயார் செய்து கொண்டிருந்தான்.

பல சொந்தங்கள் கூடியிருக்க, மிகவும் அழகான அலங்காரத்தில் அந்த மண்டபம் ஜொலித்து கொண்டிருந்தது.

ஒருவருக்காகவே ஒருவர் படைக்கப்பட்டதை போல மணமக்கள் அந்த மேடையில் வீற்றிருந்தனர்.

வந்த விருந்தினர்களால் ஜோடி பொருத்தத்தை பற்றி பேசாமல் இருக்கவே முடியவில்லை. இருவீட்டாரின் காதுகள் படவே அனைவரும் பேசியும் புகழ்ந்தும் வாழ்த்தியும் சென்றனர்.
அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியும் மன நிறைவும் காணப்பட்டது.

ஆனால்!.. இன்னும் உண்ணிப்பாக கவனிக்க வேண்டுமென்றால், இருவர் முகத்தில் மட்டும் அங்கு செயற்கை புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. அது வேறு யாரும் இல்லை நம் கதையின் நாயகனும் நாயகியும் ஆகிய மணமக்கள். ஆழியனும் கயல்விழியும் தான்.

ஒருவழியாக திருமணம் முடிந்து அனைவரும் மாப்பிள்ளையின் வீட்டிற்கு வந்து விட்டனர். அன்று முழுதும் சடங்குகள் விருந்தினர்கள் என மணமக்களுக்கு ஓய்வு என்பதே இல்லாமல் இருந்தது.

ஆழியன்கூட ஒரு கட்டத்தில் தன் அறைக்குள் சென்றுவிட்டான் ஆனால் கயலால் தான் எங்கும் செல்ல இயலவில்லை. புது பெண் எப்படி இருக்கிறாள் என்று பார்க்க வந்தோம் என அவளை ஒரு பொம்மை போல அமர வைத்து அனைவரும் வந்து பார்த்து விட்டு போனார்கள்.

கயல் பொதுவாகவே மிகவும் சுட்டி தனமான பெண். ஒரு இடத்தில் என அமர்ந்ததே இல்லை. பள்ளி, கல்லூரிகளிலும் கூட அதிக நேரம் இவளது சேட்டையால் வகுப்பிற்கும் வெளியில் நிற்கும் நிலைதான் ஏற்படும்.

ஆனால் அதே சமயம் படிப்பிலும் அவளே முதலிடமாக வந்து விடுவதால் அவளை பள்ளி கல்லூரிகளில் இருந்து நீக்கியதும் இல்லை. ஆனால் அவளது பெற்றோர்கள் தான் பல தடவை அழைக்கப்பட்டனர்.

"படிப்பில் முதல் இடம் வாங்குவதால் தான் இன்னும் இவளைப் பள்ளியில் வைத்திருக்கிறோம் இல்லையென்றால் என்றோ நீக்கியிருப்போம். இவளை ஒழுங்காக நடந்து கொள்ளச் சொல்லுங்கள்" என்று பல முறை அவர்களிடம் கண்டித்ததும் உண்டு.

என்னதான் கயல் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் அவளை யாரும் வெறுத்தது இல்லை. காரணம் கயல் இருக்கும் இடத்தில், எத்தனை மன கஷ்டம் இருந்தாலும் அதை மறந்து சிரிக்க வைத்துவிடுவாள்.

படிப்பு குணம் என்று இல்லாமல் அழகிலும் அவள் சிறந்தவள். அவளது பெயருக்கு ஏற்ப அவளது கண்களுக்குள் சிக்கியவர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மீண்டு விட முடியாது. அவளது அழகுக்கு அழகு சேர்ப்பதாக அவளது துறுதுறு குணமும் இருக்கும்.

இன்று அவளையே ஒரே இடத்தில் அமர வைத்துவிட்டனர் அவளது கணவன் வீட்டினர்.

ஆனால் ஆழியனோ அப்படியே நேர்எதிர். அவனது கவணம் முழுவதுமே படிப்பில் தான் இருந்தது. மிகவும் அமைதியாக இருக்க கூடியவன். அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருப்பான். எந்த ஒரு வேலையிலும் நேர்த்தியை எதிர் பார்க்க கூடியவன்.

நண்பர்கள் என்று அவனுக்கு இருவர் மட்டுமே இருந்தனர். மூவருமே ஒன்றாக பள்ளி கல்லூரியை முடிந்தார்கள். ஆழியனின் குணம் தெரிந்ததால் அவனை விளையாட்டிற்கோ அல்லது கேளிக்கைக்கோ அழைக்க மாட்டார்கள். அவனது குணம் புரிந்து நடந்து கொள்வார்கள்.

ஆழியன் கயல்விழி இருவருக்குமே பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம் என்பதை விட பெற்றோர்கள் வற்புறுத்தி செய்து வைத்த திருமணம் என்றும் சொல்லலாம். வாழ்க்கையில் யார்யாருக்கு என்ன எழுதி இருக்கின்றது என்பது அதிகமான நேரங்களில் நம் கையில் இருப்பது இல்லையே?

அதே போல்தான் ஆழியன் கயல்விழியின் கதையும். அவர்களுக்கு என வாழ்க்கையில் என்ன காத்திருக்கின்றது எனப் பார்ப்போம்.

ஒருவழியாக இரவும் உணவு முடிந்து நெடுநேரம் கழித்து கயலை உறங்க அனுப்பினார்கள். தப்பித்தால் போதும் என அறையை நோக்கி நடந்தவளுக்கு அடுத்த பயம் அவளது மனதிற்குள் தோன்றியது. அதுவரை 'எப்போதுடா நம்மை விடுவார்கள்' என்று நினைத்தாவள் தற்போது. 'ஏன் நம்மை விட்டார்களோ' என்று எண்ணினாள்.

அந்த அறையின் கதவை நெருங்க நெருங்க அவளுக்குள் பந்தய குதிரையின் ஓட்டம் அதிகரித்து கொண்டிருந்தது. கதவை திறந்தால் உள்ளிருந்து வர போவது பூதமோ மிருகமோ இல்லை என்று அவள் அறிவாள்தான்.. ஆனால் உள்ளிருப்பது அவளுக்கு தாலி கட்டிய கணவன் ஆகிற்றே. இன்றைய அவளது நிலையில் அவன் அவைகளை விடவும் அவளுக்கு கொடியவனாகத் தெரிந்தான்.

'இவ்வளவு தூரம் வந்த பிறகு இதற்குமேல் தயங்குவது சரியல்ல. எதுவாக இருப்பினும் இன்றே பேசிவிட வேண்டும்' என்று முடிவெடுத்தவள் அந்த அறையின் கதவை மெல்ல திறந்து அதனுள் சென்றாள்.

அறையின் உள்ளே நுழைந்தவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. யாரிடம் அவள் பேச வேண்டும் என்று வந்தாளோ அவன் பட்டு வேஷ்டி சட்டையிலிருந்து இரவு உடைக்கு மாறி தனது கட்டிலில் உறங்கி கொண்டிருந்தான். கயலிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தூங்குபவனை எழுப்பி பேசலாமா என்று யோசித்தவள் அவன் அயர்ந்து உறங்குவதை பார்த்ததும் அம்முயற்சியை கைவிட்டாள்.

அந்த அறையை சுற்றி பார்த்தவளுக்கு தன் அறை நினைவுக்கு வந்தது. பெரியதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் இருக்கும் அவளது அறையில் அனைத்து விதமான வசதிகளும் இருக்கும். அதை விடவும் தற்போது அவள் நிற்கும் அறையில் வசதிகள் அதிகமாகவே இருந்தன.

அறையை நான்கு பக்கமும் பார்த்து கொண்டிருந்தவளின் கண்களில் அவளது பெட்டி ஒரு ஓரத்தில் இருந்தது தென்பட்டது.
அதிலிருந்த தனது சுடிதார் ஒன்றை எடுத்து கொண்டு அங்கிருந்த குளியல் அறையில் உடை மாற்றி வந்தவளுக்கு அடுத்த சந்தேகம் வந்தது.

'எங்கு உறங்குவது' என சிந்தித்தவளுக்கு அவளது கணவன் உறங்கி கொண்டிருந்த கட்டில் கண்களில் பட்டாலும் அவளுக்கு தயக்கமாக இருந்தது. என்னதான் தாலி கட்டிய கணவனாக இருந்தாலும் இந்த நொடிவரை ஒரு வார்த்தைகூட பேசிடாத ஒரு ஆண்மகனின் அருகில் உறங்க கயலிற்கு தயக்கமாக இருந்தது. வேறு வழியின்றி கட்டிலில் இருந்த தலையணையை எடுத்து தரையில் போட்டவள் தரையிலேயே உறங்கியும் போனாள்.

அன்று முழுவதும் திருமணம் திருமண சடங்குகள் என செய்தவள் படுத்த உடன் உறங்கியவள் அசதியின் காரணமாக மறுநாள் காலையில் தான் எழுந்தாள். அவள் எழுந்த போதே மணி ஏழை தொட்டுவிட்டதை அங்கிருந்த சுவற்றில் மாட்ட பட்டிருந்த கடிகாரம் கூறவும் வேக வேகமாக எழுந்தாள்.

காலையிலேயே தன் கணவனிடம் பேசிவிட வேண்டும் என்று நினைத்திருந்ததால் அறையினுள் அவனை தேடினாள். ஆனால் அவன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாததால்
'ஒருவன் எழுந்து அறையை விட்டு வெளியே சென்றது கூட தெரியாமல் அப்படி உறங்கி இருக்கின்றோமே' என தன்னையே நொந்து கொண்டவள் அவசர அவசரமாக குளித்துவிட்டு ஒரு பச்சை நிற சேலையை கட்டி கொண்டு அறையைவிட்டு வெளியில் வந்தாள்.

அங்கு வீட்டின் ஹாலில் கயலின் மாமியார் பாக்யமும் கயலின் நாத்தனார் லதாவும் அமர்ந்து திருமணத்திற்காக வந்த பரிசுப் பொருட்களை எல்லாம் ஒரு ஓரமாக அடுக்கி கொண்டிருந்தனர்.

லதா ஆழியனை விடவும் மூன்று வயது பெரியவள். திருமணம் ஆகி ஐந்து வயதில் ஒரு மகன் இருந்தான். கணவன் வேலை சம்மந்தமாக வெளிநாடு சென்றிருந்ததால் அம்மா வீட்டில் பாதி நாளும் மாமியார் வீட்டில் பாதி நாளும் தங்குவதை பழக்கமாக வைத்திருந்தாள். தற்போது தனது ஒரே தம்பியின் திருமணம் என்பதாலும் தனது எல்.கே.ஜி படிக்கும் மகனின் பள்ளி விடுமுறை என்பதாலும் தன் தாய் வீட்டில் தங்கியிருந்தாள்.

கயலை பார்த்ததும் "வா கயல். நன்றாக தூங்கினாயா? நேற்று முழுவதும் வேலை இருந்ததால் ஓய்வு எடுக்கக்கூட நேரம் இல்லை" என்றாள்.

லதா அப்படி கேட்கவும் கயலிற்கு தன்னை நினைத்தே வெட்கமாக இருந்தது. பொதுவாக புது இடங்களில் கயலிற்கு தூக்கம் வராதுதான். ஆனால் நேற்றைய அசதியில் அதுவெல்லாம் அவளது கருத்தில் படவே இல்லையே. அதிலும் சில காலமாக அவளது வாழ்க்கையில் நடந்த மாற்றங்களால் தூக்கத்தையே முற்றிலும் தொலைத்திருந்தாள். சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளை லதாவின் குரல் நிகழ்வுலகிற்கு கொண்டு வந்தது.

"கயல்? அப்படி என்ன சிந்தனையில் இருக்கிறாய்?" என்றாள்.

"ஏ... என்ன? எதுவும் கேட்டீர்களா?" என்றாள்.

"அதுசரி... என்னம்மா? என்ன சிந்தனை?" என்று மிகவும் கவலையுடன் லதா கேட்கவும்,

கயல் "அது.. அது ஒன்றுமில்லை அக்கா... இப்படி உறங்கியது இல்லை. அசதியில் உறங்கி விட்டேன் போல" என்று அவள் தயங்கி தயங்கி கூறவும்.

"இதற்கு ஏன் கயல் இப்படி யோசிக்கிறாய். இது இனி உனது வீடு கயல். உனக்கு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கலாம்"

என்று லதா கூறும் போதே அங்கிருந்த பாக்கியம்
"எனக்கு லதா எப்படியோ அப்படிதான்டா நீயும். திருமணத்திற்கு முன் உன் அம்மா வீட்டில் தூங்குவதற்கெல்லாம் காரணம் சொல்வாயா என்ன? இல்லைதானே பிறகு என்ன? அதோடு அப்படி ஒன்றும் நேரம் ஆகிவிட இல்லையே" என்றார்.

அவர்கள் இருவரும் வெறும் வாய் வார்த்தைக்காக கூறாமல் உள்மனதில் இருந்து கூறுவதாகவே கயலிற்கு தோன்றியது. அவர்களது அன்பு புரியவும் கயல் அவர்கள் கூறியதற்கு ஒரு புன்னகையுடன் சரி என்று கூறிவிட்டு அவர்களுக்கு பரிசு பொருட்களை அடுக்க உதவி செய்யத் தொடங்கினாள்.

சிறிது நேரத்தில் பாக்கியம் "காலை உணவு தயார் செய்கிறேன். நீங்கள் அனைவரையும் வர சொல்லுங்கள்" என்றவர் கயலிடம்
"நீயும் ஆழியனை வர சொல்லுமா" என்றார்.

'எங்கு இருக்கிறான் என்று தெரியாதவனை எங்கு சென்று வர சொல்லுவது' என நினைத்தவள்

"அவர் அறையில் இல்லையே அத்தை" என்றாள்.

"என்ன அறையில் இல்லையா? காலையிலிருந்து நானும் பார்க்கவில்லையே!" என்று பாக்யம் கூறவும்

லதா "இருங்கள் அம்மா நான் அழைத்துப் பார்க்கிறேன்" என்று கூறி தொலைபேசியில் தம்பியை தொடர்பு கொண்டாள்.

தன் அறைக்குள் சென்று தம்பியை தொலைபேசியில் அழைத்தவள் நீண்ட நேரம் அவனுடம் பேசிவிட்டு வெளியில் வந்தாள். வந்தவள் கயலிடம்
"சாரி கயல். அது அலுவலகத்திலிருந்து காலையிலேயே அழைப்பு வந்ததாம். ஏதோ முக்கிய வேலை... இவன் சென்றால்தான் முடிக்க முடியுமாம். உன்னிடம் சொல்லிவிட்டு செல்லத்தான் நினைத்தானாம் ஆனால் நீ நன்றாக உறங்கி கொண்டிருந்ததால் எழுப்ப மனம் வரவில்லை என்று கூறுகிறான். உன்னிடம் மன்னிப்பு கேட்டதாக கூறச் சொல்கிறான். மாலை நேரில் அவனும் மன்னிப்பு கேட்கிறேன் என்கிறான்" என்று கயல் என்ன நினைத்து விடுவாளோ என்கிற பயத்தில் பயந்து பயந்து கூறினாள்.

"இதற்கு ஏன் அக்கா இப்படி தயங்குகிறீர்கள்? முக்கியமான வேலை என்பதால் தானே.. அதோடு நானும் நன்றாக உறங்கி கொண்டிருந்தேன்.. பரவாயில்லை" என்றாள்.

அவள் அதை சாதாரணமாக எடுத்து கொண்ட பிறகுதான் லதாவிற்கு மூச்சே விடமுடிந்தது. சிறிது சகஜமானவள்
"கயல் நான் உனக்கு அண்ணி முறை வருவேன். அண்ணி என்றே கூப்பிடலாம். இல்லை அப்படி கூப்பிட வரவில்லை என்றால் அக்கா என்று கூப்பிடு தவறில்லை ஆனால் என் மாமியார் முன்பு மட்டும் அண்ணி என்று கூப்பிட்டு விடும்மா. அவர்கள் அந்த காலத்து ஆள் அல்லவா இதை எல்லாம் பார்ப்பார்கள் அதனால்தான்" என்றாள்.

"புரிகிறது அக்கா.. இல்லை இல்லை அண்ணி." என்று சிரித்தவள் "எனக்கு உங்களை எப்படி அழைப்பது என்று தெரியாமல் தான் அக்கா என்றேன்" என்றாள்.
இருவரும் இங்கு பேசி கொண்டிருக்க மகனின் செயலை நினைத்து யாருக்கும் தெரியாமல் பாக்கியம் வேதனைப்பட்டு கொண்டிருந்தார்.
விதி தொடரும்..