• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 36

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
83
18
8
Chennai
அத்தியாயம் 36

தோட்டத்தைச் சுற்றி காட்ட மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கிளம்புவதற்குத் தயாரானான் சித்து. அப்போது தான் வசந்த் எழுந்து வந்தான்.

"டேய் என்னடா குடும்பத்தோட மொத்தமா எங்கயோ கிளம்பியாச்சு?", வசந்த்.

"தோட்டத்துக்கு போறோம்டா. நீயும் வாடா. அப்படியே சுத்தி பார்த்துட்டு வரலாம்"

"வரலாம் தான். ஆனா.. என் வயித்துக்கு ஏதாவது போட்டா தான் நான் சொன்னதைக் கேட்கும்"

"ம்ம்.." என்று முறைத்தவன், "சரி நீ சாப்டு கிளம்பிட்டு இரு. நான் இவங்களை விட்டுட்டு வந்துடுறேன்"

"ம் ஓகே ஓகே டன்" என்று அவன் காலைக்கடன்களை முடிக்கச் சென்று விட்டான்.

அதன் பிறகு அமுதியையும் குழந்தைகளையும் இருசக்கர வண்டியில் அமர்த்திக் கொண்டு தோட்டத்தை நோக்கிச் சென்றது வண்டி. சரணும் ஹாசினியும் முன்னால் அமர்ந்திருக்க அமுதி பின்னால் அமர்ந்திருந்தாள். வீட்டில் இருந்து கிளம்பியதிலிருந்து விழி மொழிகளும் பார்வை பரிமாற்றங்களும் நடந்தேறிக் கொண்டிருந்தது. என்ன பேசின என்பது அவ்விழிகளே அறியும். இவன் பார்ப்பதும் அவள் திரும்புவதும், அவள் பார்ப்பதும் இவன் திரும்பவதுமென கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தனர். சரண் ஏதேதோ தந்தையானவனிடம் பேசிக் கொண்டு வந்தது கூட காதில் ஏறவில்லை. இருவரும் வேறொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். அவள் கைகள் பிடித்திருக்கும் புஜங்களும், அது தரும் புதுப்புது உணர்வுகளும் சொல்லமுடியா வேதியியல் மாற்றங்களை மனதில் உண்டு பண்ணியது. விவரிக்க முடியாத தீண்டலுக்கும் தூண்டலுக்குமான இடைப்பட்ட உணர்வில் சிக்கித் தவித்தது மனது. 'இப்பயணம் இப்படியே நீளாதா?' என்று மனதில் ஏங்கிக் கொண்டிருக்கையிலே தோட்டம் வந்து விட்டது.

"அமுதி நிலத்தை உழுது போட்டுருக்கிறதால இங்கயிருந்து நடந்து தான் போகனும். ஸ்லீப்பர் இங்கயே ரிமூவ் பண்ணிட்டு போங்க. அங்க தான் அம்மா இருக்காங்க. நான் வசந்த்தை கூப்டு வந்துடுறேன்" என்று தன் அன்னை இருக்குமிடத்தைக் கை காண்பித்து விட்டுச் சென்றான்.

இந்த உழவு, தோட்டம்.. இதெல்லாம் அமுதிக்கு ஏற்கனவே பழக்கமென்பதால் ஹாசினியை கையில் தூக்கிக் கொண்டு நடந்தாள் சரணோடு. பாதிதூரம் சென்றதும், "ஹலோ அமுதி.." என்ற குரலில் திரும்பியவள், அங்கே அனுஷா நிற்பதைக் கண்டு, 'இவளா! இவ ஏன் நம்மளைக் கூப்பிடுறா?' என்ற யோசனையில் மூழ்கினாள்.

அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அனுஷா அவர்களை நெருங்கி விட்டாள். திருதிருவென அமுதி முழிப்பதைப் பார்த்து, "என்னங்க அப்படி பார்க்குறேங்க?. என்னை ஞாபகம் இல்லயா? பங்கஷன்க்கு கூட வந்துருந்தேனே?"

"ம் ஞாபகம் இருக்கு"

"பின்ன ஏன் இப்டி முழிக்குறேங்க?. தெரியாம முழிக்குறேங்களா இல்லை என்னை கண்டா பேச வேண்டாம்னு சொல்லி அனுப்புச்சாரா உங்க வீட்டுக்காரர்ர்.." என்று அந்த வீட்டுக்காரரில் அழுத்தம் கொடுத்து சொன்னாள்.

அவளின் உள்குத்துப் பேச்சை புரிந்து கொண்ட அமுதி, "உங்க கூட பேச வேண்டாம்னு சொல்ற அளவுக்கு உங்களுக்குள்ள பகை ஏதாவது இருக்கா?. இல்லை நீங்க அவருக்கு பெரிய துரோகம் ஏதாவது பண்ணிட்டேங்களா?. அப்படி ஏதாவது இருக்கா?" என்று தெரிந்தும் தெரியாதவள் போல் கேட்டாள்.

'இவளுக்கு விஷயம் தெரிஞ்சு பேசுறாளா இல்லை தெரியாம பேசுறாளா?. சரி சமாளிப்போம்' என்று நினைத்த அனுஷா, "அப்படி பெரிசா எந்த துரோகமும் பண்ணல உங்க புருஷனுக்கு.. எங்கபக்க நியாயம் மத்தவங்களுக்கு அநியாயமா தெரியுது. நாங்க என்ன பண்ண முடியும் அதுக்கு?" என்றவளின் பேச்சில் டன் கணக்கில் அதிகாரமும் திமிரும் தூள் பறந்தது.

"ஆமா.. ஆமா.. நீங்க எந்த அநியாயமும் பண்ணிருக்க மாட்டேங்க. பார்த்தாலே தெரியுது" என்று தன் கணவனுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்ற பெயரில் பதிலுக்கு இவளும் அவள் மூக்கை உடைக்க, கடைசி ஆயுதமாக அனுஷா அவளின் வீக்பாய்ண்டில் கை வைத்தாள்.

"ஆமா அப்படி உங்க கிட்ட என்ன இருக்குனு ரெண்டு புள்ளைக்கு தாயானப்புறமும் உங்களைப் போய் கல்யாணம் பண்ணிருக்கிறாரு. லூசா அவரு?. யாரோ பெத்த புள்ளைக்கு இவரு ஏன் இனிஷியல் குடுத்துட்டு இருக்காரு?. இதுல சந்திரா அத்தை வேற சப்போர்ட். ஊருக்குள்ள தெரிஞ்சா பெரிய வீட்டுக்கே அசிங்கம். ஏங்க அவரு தான் புத்தி கெட்டுப்போய் ஏதோ ஆசையில கல்யாணம் பண்ண கேட்டா உடனே நீங்களும் இதான் சமயம்னு சரினு சொல்லிட்டேங்களா?. உங்களுக்கு கூசல.. இதுல சொந்தப் புள்ளைக்கு பண்றது மாதிரி ஊரேக் கூட்டி வச்சு திருவிழா மாதிரி பங்ஷன் வேற.. சே" என்று வாய் கூசாமல் எதைச் சொன்னால் அவள் துன்புறுவாளோ அதைச் சொல்லி அவளைக் காயப்படுத்தியவளின் அடுத்த வார்த்தை, "அனுஷாஆஆஆ.." என்ற சித்தின் கத்தலில் அப்படியே நின்றது.

அவர்களை நெருங்கியவன், "இன்னொரு வார்த்தை பேசுன பேசுறதுக்கு பல்லு இருக்காது. உன்னை மாதிரினு பார்த்தியா அவங்களை?. அவங்க காட்டுற அக்கறையும் எதிர்பார்பில்லா பாசமும் உனக்கெல்லாம் சுட்டு போட்டாலும் வராது. பணம் சொத்துனு கட்டிக்கிட்டு அழுறியே அதை அனுபவிக்க வாரிசு இருக்கானு கொஞ்சமாவது நெஞ்சுல பட்டுச்சுனா இந்த மாதிரி இன்னொரு பொண்ணை பார்த்து பேசிருப்பியா?. அமுதி நல்ல மகள், நல்ல அம்மா, நல்ல மனைவி நல்ல மருமகள்னு எல்லாத்துலயும் உசந்தவ தான். இதுல ஒன்னாவது உன்னால பேரெடுக்க முடிஞ்சதா?. என் பொண்டாட்டி புள்ளைங்களை பத்தி இனி ஒரு வார்த்தை பேசுன.." என்று விரல் நீட்டி எச்சரித்தவனின் கோவத்தில் அனுஷா மட்டுமல்ல அமுதியும் பயந்தே விட்டாள்.

அனுஷாவின் வார்த்தையில் துக்கம் தொண்டையை அடைக்க கண்கள் கண்ணீர் உதிர்க்க காத்திருந்த நேரம், சித்தார்த்தின் வார்த்தையில் ஆனந்தக் கண்ணீராக மாறியது.

"உண்மையை சொன்னா உங்களுக்கு ஏன் இவ்வளவு கோவம் வருது?. இந்த விஷயம் ஊருக்குள்ள தெரிஞ்சா பெரிய வீட்டை தான் தப்பா பேசுவாங்க. அன்னைக்கு உங்க அப்பா இப்போ நீங்க.. நல்ல குடும்பம்.."

"நீ சொல்ற பெரிய வீட்ல இருந்து நாங்க வெளில வந்து எவ்வளவோ நாளாச்சு. எங்களால உங்க குடும்பத்து பெருமை ஒன்னும் குறைந்து விடாது. அதுனால எங்களைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. வா அமுதி போலாம்" என்று அவளின் கைபிடித்து அழைத்துச் சென்றான். செல்லும் போது அமுதி கர்வமாக அனுஷாவை ஒரு பார்வை பார்த்தாள். அதுவே அனுஷாவிற்கு முகத்தில் அடித்தது போல் இருக்கவும் முகம் கறுத்து விட்டது.

அவன் கையோடு தன் கையை அழுத்திப் பிடித்தவனையும் அனுஷாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே சென்ற அமுதி, கீழே உழவில் கிடந்த பெரிய களிமண் கட்டியை பார்க்காமல் இடறியவள், "ஸ்ஆஆஆ" என்று கீழே அமர்ந்து விட்டாள்.

"அமுதி என்னாச்சு?"

"களிமண் கட்டில மிதிச்சிட்டேன் கால் பிசங்கிருச்சு. ஸ்ஆஆ வலிக்குதுங்க"

காலைப் பிடித்துக் கொண்டு கலங்கிக் கொண்டு இருந்தவளையும், பிள்ளைகளையும், வசந்தையும், அனுஷாவையும் மாறி மாறிப் பார்த்தான். அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்தவன் போல் சரணையும் ஹாசினியையும் இரு கையில் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டான் வசந்த்.

"அய்யோ மாமா.. என்ன பண்றேங்க. அங்க அம்மாவுக்கு அடி பட்டுருச்சு. நீங்க என்னடானா எங்களை அழைச்சுட்டு வந்துட்டேங்க. வாங்க போய் அம்மாவுக்கு என்னாச்சுனு பார்க்கலாம்"

'அடேய் நீ வேற ஏன்டா.. உங்கப்பன் அங்க ஏதோ ஹெவியா பிளான் போட்டுட்டான். என்ன பண்ண போறானோ.. பொண்டாட்டி கூட ரொமான்ஸா, இல்லை அத்தை மகளுக்கு தரமான பாடம் எடுக்க போறானோ..' என்று நினைத்தவன், "அப்பா பார்த்துப்பாங்க சரண். அம்மா இப்போ வந்துடுவாங்க. வாங்க நாம ஆச்சிக்கிட்டப் போய் வெயிட் பண்ணலாம்" என்றவன் சந்திரமதியிடம் அழைத்துச் சென்றான் இருவரையும்.

சித் குனிந்து கீழே அமுதியின் காலை ஆராய்ந்தான். கால் களிமண் கட்டியில் உரசி சிராய்த்திருந்தது. காலும் பிசகி அவளுக்கு வலி பின்னி எடுத்தது. அவள் காலில் அழுத்தி தேய்க்க இன்னும் வலி கூடியது அவளுக்கு. "இல்லங்க வேண்டாம் வலிக்குது..".

அவள் வலியில் துடிப்பதை கண்டவன் அதற்க்கு மேல் எதையும் யோசிக்காமல் கைகளில் அள்ளிக் கொண்டான். இப்போது அமுதிக்கு வலி மறந்து கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. அதைக்கண்ட அனுஷாவுக்கு வயிற்றில் இருந்து புகை வரவில்லை அவ்வளவு தான். உள்ளுக்குள்ளே புகைந்து கொண்டிருந்தாள்.

மலர் குவியலை இரு கையிலும் அள்ளிக்கொண்டு நடப்பது போல் நடந்து கொண்டிருந்தான். ஆச்சரியத்தில் விரிந்த அமுதியின் கண்களை கண்டவன் அவளை சீண்ட எண்ணி, இடையில் கொடுத்திருந்த கையின் அழுத்தத்தைக் கூட்டி கண் சிமிட்டி சிரிக்க , அவன் கழுத்தில் மாலையாக படர்ந்திரிந்த அவள் கைகள் தானாக அவன் கழுத்தை அழுத்த, கூச்சத்தில் நெளிந்தாள். 'எப்போது கை அவன் கழுத்தில் படர்ந்தது' என்று அவளுக்கே தெரியவில்லை. அவன் சீண்டிய பின்னே, அவள் மூச்சோடு கலப்பது போல் முகத்தில் மோதும் அனல் வீசும் அவன் மூச்சுக்காற்றும், இடையைத் தாங்கியிருக்கும் அவன் கைகளின் வெப்பமும், அவனின் மயக்கும் புன்னகையும் அவள் உடலில் பலஆயிரம் மின்னல்களை பாய்ச்சியது போல் இருக்கவும் தானாக கன்னங்கள் இரண்டும் சிவந்து வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது. அவனைப் பார்க்காமல் நெஞ்சோடு முகத்தை மறைத்துக் கொண்டாள்.

"உங்கப்பனை பாரு இந்த வேகாத வெயிலுல கூட ஏதோ பனிமழை பொழியிற மாதிரி கையில் மிதக்கும் கனவா நீ, கை கால்கள் முளைத்த காற்றா நீனு பேக்கிரௌண்ட் மியூசிக் போட்டு நடந்து வர்றான் பாரு" என்றான் வசந்த்.

"மாமா அம்மாக்கு அடி பட்டுருக்கு. அதான் அப்பா தூக்கிட்டு வர்றாங்க. பாவம் அம்மா"

"அய்யோ அமுதிக்கு என்னாச்சு வசந்த். சித்து தூக்கிட்டு வர்ற அளவுக்கு அடிபட்டுருச்சா?" என்று சந்திரமதி பதறினார்.

சித்து அருகில் நெருங்கவும், "என்னாச்சு சித்து கண்ணா? அமுதிக்கு அடி பலமா?. ஹாஸ்பிடலுக்கு கூப்டு போயிருக்கலாமே?"

"இல்லம்மா லைட்டா சுளுக்கு தான். எண்ணெய் தேச்சு உருவி விட்டா சரியாகிடும். இவங்க தான்.." என்றவளுக்கு அதற்கு மேல் சொல்ல நா எழவில்லை.

"சரி சரி வா அமுதி. இங்க பக்கத்துல யாராவது இருப்பாங்க. கால உருவி விடச் சொல்றேன்" என்று அமுதியை அழைத்துச் சென்று விட்டார் சந்திரமதி.

போறவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த சித்தின் தோளை சுரண்டி, "மச்சான் அவங்க போய் ரொம்ப நேரமாச்சு" என்ற வசந்தின் பேச்சில் நினைவுக்கு வந்தான்.

"ஏய்.. நெஜமாவே அமுதிக்கு ரொம்ப வலிடா. நம்புடா" என்று விளக்கம் கொடுத்தான் தன்னை நம்பாமல் பார்த்தவனை.

"சரி சரி விடு.. நம்பிட்டேன் பதறாத. ஆனாலும் இத்தனை பேரு வேலை செய்யற இடத்துல கூச்சமே இல்லாத தைரியமா தூக்கிட்டு வந்த பாரு. சான்ஸே இல்லடா. ஊருக்கு வந்தவுடனே உள்ளுக்குள்ளே ஒரு காதல் மன்னன் புகுத்துட்டானோ"

அவன் சொன்ன பிறகே சுற்றியிருப்பவர்களைக் கவனித்தவன் நாக்கைக் கடித்து, "அய்யயோ இதை நான் இவ்வளவு நேரம் கவனிக்கவே இல்லையே"

"நீ அதை கவனிக்கிற நிலைமைல இல்லை. ஒருபக்கம் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் இன்னொரு பக்கம் அத்தை மகளை வெறுப்பேத்துறதுனு மூளை பிஸியா வேலை பார்த்துட்டு இருந்துச்சு" என்று கேலி செய்தான்.

"ஏய் போடா.. வேற யாரையாவதா தூக்குனேன். என் வொய்ப் என் உரிமை"

"அடப்பாவி இதை எது எதுக்கெல்லாம் யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேங்கடா. நல்லா டெவலப் ஆயிட்டடா. டெவலப் ஆகலை மொதல்ல இருந்தே இப்படித்தான். இப்போ தான் அடக்கி வச்சதெல்லாம் வெளில வருது. உன்னை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குடா" என்று தன் நண்பனின் மாற்றத்தையும் அவன் வாழ்வும் நன்றாக இருக்கும் என்றெண்ணி அகம் மகிழ்ந்தான்.


தொடரும்..