• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழி 11

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 11

வடிவு கூறியதை கூறுவதை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தாள் கல்யாணி.

"ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஆச்சி.. கல்யாணி லக்கி கேர்ள்.. அதுவும் இதே ஊர்ல எங்களோடவே இருக்க போறா.. எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?" ரெஜினா சந்தோஷத்தில் பேசிக் கொண்டே இருக்க,

"வாழ்த்துக்கள் அண்ணி! கல்யாணத்துல ஜமாய்ச்சுடலாம்" என்றான் தினேஷ்.

"குடும்பமே நல்ல மாதிரியா தெரியுது மதனி.. நம்ம கல்யாணி குடுத்து வச்சவ தான்.. சீக்கிரமே நாளக் குறிச்சிருங்க" என கண்ணகி சொல்ல,

"கல்யாணத்த எப்ப வைக்கலாம்னு இருக்கீங்க மச்சான்?" என்றார் வீரன் அரசனிடம்.

"அத தான் ரோசிக்க வேண்டி கிடக்கு வீரா.. அறுப்பு முடிய மூணு மாசம் ஆவும்.. முன்னாலயே வப்போமா இல்ல பொறவு வப்போமானு தான் நினச்சுகுட்டு இருக்கேன்" என்றார் அரசன்.

சரவணன் குடும்பத்திடம் தங்கள் சம்மதத்தை கூறியதோடு இல்லாமல் வடிவு ப்ரணித்தின் சம்மதத்தையும் சேர்த்து வாங்கி வந்திருந்தார்.

"இவே கூறு இப்டி தான் இருக்கும்.. நல்ல நாள பாத்து பேசி முடிச்சி பிள்ளய கற ஏத்த நினைக்குறவ இப்படி தான் ரோசிக்க நேரம் கேப்பானாக்கும்?" என்று வடிவு கூற,

"கையோட கல்யாண வேலையை ஆரம்பிக்குறது தான் நல்லதுன்னு எனக்கும் படுது மச்சான்.. உங்களுக்கு எப்படி வசதின்னு பார்த்து பண்ணுங்க" என்றார் வீரனும்.

"முடிவான பின்னால என்ன மூணு மாசோ ஆறு மாசோ.. சூட்டோட சூடா முடிச்சி புடுவோம்" என்றார் அன்னம் தாழ்ந்த குரலில்.

அன்னத்தை ஒரு முறை திரும்பிப் பார்த்த அரசனும் "எல்லாரும் சொல்லுதது புரியுது தான்.. அவுக என்ன நினைக்காகன்னு ஊருல ராசு அண்ணாச்சி முன்னால பேசி முடிவ அன்னைக்கே சொல்லிருவோம்" என்றார்.

அரசன் பேசி முடித்து அந்த இடத்தில் இருந்து கிளம்பிய பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாய் செல்ல, அங்கே கல்யாணி, வடிவு, தினேஷ், ரெஜினா.

"இப்ப எதுக்கு ஆச்சியை இப்படி முறைச்சு பார்த்துட்டு இருக்க?" ரெஜினா கேட்க,

"கேட்டில்ல... இது தான் அந்த முகரைட்ட சம்மதத்த வாங்கியாந்துதாம்.. இத நான் என்னயெல்லாம் சொல்லி கூட்டியாந்தேன் தெரியுமா உனக்கு? எனக்கு அப்பமே தெரியும்.. அவே போட்டோவா பாத்தே இது ஜொள்ளு ஊத்திணுது" கல்யாணி வடிவினை கழுவி ஊற்ற, வடிவு அவள் பக்கம் திரும்பாமல் யாரோ யாரையோ என்பதைப் போல அமர்ந்திருந்தார்.

"அண்ணி! ஆச்சிக்கு உங்களை நல்ல பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு ஆசை.. அவங்களை போய் திட்டுறிங்களே!" என தினேஷ் கூற,

"உனக்கு இத பத்தி தெரியாது.. நேரத்துக்கு இல்ல நிமிசத்துக்கு நிமிசம் மாறும்.. இது கூட கூட்டத்த வச்சேன் பாத்தியா என்ன சொல்லணும்.. இப்போ சந்தோசம் தான உனக்கு? நான் வேணுமுன்னா இங்கயே இருந்துக்குடுதேன்.. கல்யாணத்த முடிச்ச வோட்டு அந்த வீட்டுல போயி உக்காந்துகிடுதேன்.. நீ ஊருக்கு போ.. அதான் தள்ளிட்டிய இல்ல?" என பேசிய கல்யாணி ரெஜினாவின் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்ள,

"ஆச்சி!" என்று ரெஜினா அழைக்கவும் தான் திரும்பினார் அவர்.

"அவ புரியாம பேசுறா ஆச்சி.. நீங்க எதுவும் நினைச்சுக்காதீங்க" ரெஜினா வடிவினை ஆறுதல் படுத்த நினைக்க,

"அட அவ கிடக்கா! அவளுக்கு விவரம் பத்தலனு எனக்கு தெரியாதாங்கும்? நான் பேசினேம்னா இன்னும் பேசுவா அதாம் பேசாம இருந்துட்டேன்.." என்று சிரிக்கவும் ரெஜினாவும் தினேஷும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க,

"எனக்கும் ஆச தான்.. என் பேத்திய கண்ணு முன்ன வச்சி பாத்து அழகு பாக்கணும்ன்னு.. இருக்காதா என்ன? அந்த போட்டாவ பாக்காம இருந்தேம்னா இதுவர கொண்டாந்துருக்க மாட்டே.. அதும் இப்போ அந்த புள்ள பேசுன பேச்சு இருக்கே.. நாளு வார்த்தனாலும் மனசுக்கு சரினு படுது த்தா.. இங்குன என் பேத்தி நல்லா வாழுவானு சொல்லுது.. பையேன் மட்டும் நல்லா இருந்தா போதுமாக்கும்? அவே அம்ம அப்பனா எல்லாம் நீ பாத்தது இல்லல்ல.. இவளுக்கும் அவிய அம்ம அப்பனா தான் இருப்பாவ.. அந்த இளய பய கூட நல்லா பாத்துக்குவான்.. இப்டி ஒவ்வொன்னும் ரோசிக்கையில இவ பேச்ச கேட்டு எதையும் எடக்கு மடக்கா செஞ்சிற கூடாதுன்னு தான் கையோட அவேனுக்கும் சம்மதம் தானன்னு கேட்டியாந்தேன்"

கல்யாணியிடம் கூற வேண்டிய கூறினாலும் அவளுக்கு புரியாத புரிந்து கொள்ள பிடிக்காததை ரெஜினாவிடம் கூறி தன் மனதை திறந்திருந்தார் வடிவு.

உள்ளே இருந்தவளுக்கு இவை எல்லாம் தெரியவில்லை. ஆனால் புரிந்து கொள்ள முடிந்தது அனைவரையும். வடிவு உட்பட அனைவரின் எண்ணங்களும் புரிந்தாலும் அந்த ஊரை விட்டு தன் பிறந்த இடத்தை விட்டு இவ்வளவு தூரமா? என்ற எண்ணம் மட்டும் அவளிடம் இருந்து அகலவே இல்லை.

கண்களில் இருந்து கண்ணீர் இரண்டு சொட்டு இறங்குவதைப் போலிருக்க அதையும் உள்ளிழுத்துக் கொண்டாள்.

யார் என்ன எப்படி என்ற கேள்விகள் எல்லாம் அவளிடம் இல்லை.. அரசன் யாரைக் கை காட்டினாலும் ஏன் அவர் தலை சம்மதமாய் அசைத்தால் கூட கல்யாணிக்கு போதும் தான்.

திருமண விஷயத்தில் இவள் இவ்வளவு அடம் பிடிக்க காரணம் தன் குடும்பத்தை பிரிந்து வர வேண்டுமே என்ற எண்ணம் மட்டும் தான்.

எப்படி என்னால் முடியும்? ஒரு நாள்.. ஒரு பொழுது இவர்கள் இல்லாமல் தனக்கு விடிந்திருக்குமா? அது ஏன் இவர்களுக்கு புரியவில்லை என நினைத்த கல்யாணிக்கு புரியவில்லை பெண்களின் வாழ்க்கை என்ற ஒன்றை கடவுள் பிறக்கும் பொழுதே அப்படி எழுதி விட்டான் என்று.

"இவன் என்ன டா முழிச்சிட்டே தூங்குறான்?" என்ற விவேக்,

"டேய் ப்ரணி!" என அழைக்க,

"ஹ்ம்!" என்றவன் இன்னும் சுழல் நாற்காலியில் அமர்ந்து மேல்நோக்கி இருந்த பார்வையை அகற்றவில்லை.

"என்ன டா ஆச்சு? ஏதோ சரி இல்லையே! இப்பலாம் ரொம்ப அப்செட் ஆகுறான்?" அருண் முணுமுணுத்தது தெளிவாய் ப்ரணித் காதுகளிலும் விழ,

"நான் அப்செட்னு சொன்னேனா?" என்றான் திரும்பி.

"இல்லையா? அப்ப வா!" என்றவன் குரலுக்கு உயர்த்தி வைத்திருந்த தலையை கணினி முன் திருப்பி கழுத்தினை தேய்த்து விட்டான்.

"சொல்லவும் மாட்டான்.. கேட்கவும் கூடாது.. என்ன மேட் டா இவன்?" அருண் கேட்க,

"இரு! வரும்.. எங்க போய்ட போறான்?" என்ற விவேக்,

"வர்றியா இல்லையா டா?" என்று கேட்க, முகத்தையும் துடைத்துக் கொண்டு எழுந்து கொண்டான்.

"இப்ப என்ன? மறுபடி அம்மா ஊருக்கு போய்ட்டாங்களா?" என்று விவேக் கேட்ட பொழுது டீயுடன் அருண் வட்ட மேஜைக்கு வர,

"அவங்க போனா கூட பரவாயில்லைனு சொல்ல வச்சுட்டாங்க" என்றான் ப்ரணித் தலையை சுற்றி.

"அப்டினா?" அருண் குழம்பவும் பெண்கள் சிரிக்கும் சத்தத்தில் மூவருமே திரும்பினர்.

ஹரிணி எதுவோ சொல்லவும் அங்கிருந்த மற்ற நான்கு பெண்களும் சிரிக்க, அவர்கள் பார்வை முழுதும் ப்ரணித் பக்கம்.

பார்த்ததும் சட்டென உடல் விரைக்க எழுந்து கொண்டான் ப்ரணித்.

"என்ன? என்ன சிரிப்பு? இளிச்சவாயன்னு மூஞ்சில எதுவும் எழுதி ஒட்டி இருக்கா? என்ன டி?"

நண்பர்கள் இருவரும் சுதாரிப்பதற்குள் எழுந்த வேகத்தில் ப்ரணித் சட்டை கையை மடித்துக் கொண்டு பேசியபடியே அவர்கள் பக்கம் சென்றிருந்தான்.

"டேய்!" என்று விவேக் வர,

"ஹெலோ! திஸ் இஸ் ஆஃபிஸ்.. மைண்ட் யுவர் வர்ட்ஸ்!" ஹரிணி திமிராய் கூற,

"என்ன வர்ட்ஸ்ஸு? ஏன் நீ பேசும் போது தெரிலையா அந்த கேவலமான வர்ட்ஸு? வீட்டுல தான வளக்குறாங்க உன்ன? உன் அம்மா அப்பாகிட்ட போய் சொன்னியா நான் ஒருத்தன்கிட்ட போய் இப்படி சொன்னேன்.. அவன் என் மூஞ்சிலயே கழுவி ஊத்தினான்னு சொன்னியா?" என்று கேட்க மீண்டும் ஒருமுறை என அதுவும் பலர் முன் நண்பர்கள் முன் என அலுவலகத்தின் உள்ளேயே அவமானப்பட்டிருந்தாள் ஹரிணி.

"ப்ரணித்! வாட் ஹப்பென்ட் ஹியர்?" என தனக்கு மேல் வேலை பார்க்கும் ஒருவர் அங்கிருந்து கவனித்து வந்துவிட,

"டேய்! அவ எதாவது சொல்லிட போறா டா.. வேலைக்கு ஆப்பாயிடும்" என அருண் விவேக் காதினை கடிக்க,

"அதுக்கு வாய்ப்பில்ல டா" என்றிருந்தான் விவேக்.

"ஹரிணி! வாட் தி ப்ரோப்லம்? நீங்க ஜூனியர் தானே? எனிதிங் ராங்?" ப்ரணித் இன்னும் முறைத்தபடி நிற்பதைப் பார்த்து அவளிடம் கேட்க,

"ந்.. நத்திங்... சார்.. நா.. நாங்.. நாங்க பிரண்ட்ஸ் தான்" என்று ஹரிணி சமாளிக்க,

"நோ சார்! அந்த வர்ட்க்கு சில தகுதி வேணும்" என மீண்டும் ஒரு முறை அவளை தலைகுனிய வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று மீண்டும் தன் இடத்தில் அமர்ந்து கொண்டான் ப்ரணித்.

"வேண்டாம்னு சொன்னா திரும்பி கூட பார்க்க மாட்டான்.. அவனைப் போயி சீண்டி விடுறா.. இவளுக்கு என்ன டா அவ்வளவு சீனு.. தேவையா இது? வந்து ஒரு மாசம் ஆகல.. என்ன பொண்ணோ" விவேக் கேட்டபடி அமர்ந்தான்.

ஹரிணி அங்கிருந்து வேகமாய் சென்றுவிட, மீண்டும் இயல்பாகியது அந்த இடம்.

"ஒரு காபியை நிம்மதியா குடிக்க விடுறாங்களா?" என்று அருணும் பேசியபடி ப்ரணித்திற்கு ஜூஸ் வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்தான்.

கொஞ்சம் கொஞ்சமாய் மூச்சுக் காற்றின் வெப்பம் கொதி நிலையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தது ப்ரணித்திற்கு.

"அன்னைக்கே சும்மா விட்டது தப்பா போச்சு.. இதே கேள்வியை அன்னைக்கே கேட்ருக்கணும் டா.. பொண்ணாச்சேனு விட்டேன்.. என்னைப் பார்த்தே நக்கல் சிரிப்பு.. அதுவும் என் இடத்துல.." என்றவனுக்கு மீண்டும் ஏறும் போல இருந்தது கோபம்.

"சரி சரி விடு டா.. ரிலாக்ஸ்.. இனி ஆபீஸ் பக்கம் வர்றதே டவுட்டு தான் அவ.." என்று விவேக் சமாதானம் கூற,

"ஏற்கனவே புகைஞ்சுட்டு இருந்தான்.. வந்து பத்த வச்சுட்டு போய்ட்டா.." என்றான் அருண்.

"எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சு டா!" அருணின் வார்த்தை கேட்ட அடுத்த நொடி ப்ரணித் இவ்வாறு கூற, வாயில் வைத்த டீ சூட்டோடு உள்ளே ஏறியது விவேக்கிற்கு.

குழப்பமான மனநிலையில் அலுவலகம் வந்திருந்த ப்ரணித்திற்கு ஹரிணியின் இந்த ஒரு செயல் போதுமானதாய் இருந்தது தன் அன்னை கூறிய வழியை தேர்வு செய்து அதில் முழுதாய் மனம் செலுத்தி சம்மதம் தெரிவிக்க.

தொடரும்..