• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழி 18

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 18

"இல்லம்மா! உங்களுக்கு புரியல.. அவ என்னை ஒரு மாதிரி ட்ரீட் பன்றா.. என்னவோ போனா போகுதுன்ற மாதிரி.. சம்திங்.. எனக்கு சரியா சொல்ல தெரியல மா" ப்ரணித் கூற,

"ண்ணா! செம்மயா காமெடி பண்றீங்க.. அண்ணி ஸ்லாங்கே அப்படி தான்னு உங்களுக்கு தெரியலையா?" என்று ஸ்ரேயாஸ் கூற,

"சும்மா இரு டா!" என்ற ராணி,

"ப்ரணி! வந்த முதல் நாளே அவளோட நீ ஈகோவை வளர்த்துக்காத.. அவ்ளோ தான் நான் சொல்லுவேன்.. நீ ஒன்னும் குழந்தை இல்ல.. உனக்கு ஏன் கல்யாணியை மேரேஜ் பண்ணி வச்சேன்னு புரிஞ்சிக்கோ! நீ சொன்ன மாதிரி லவ்னு ஒரு பொண்ணை கட்டிட்டு வந்திருந்தா இந்த மாதிரி சண்டை வந்தா அன்னைக்கே அந்த பொண்ணை நீ மறந்துட வேண்டி வந்திருக்கும்.. புரிஞ்சிக்கோ! மறுபடியும் சொல்றேன்.. அவ சின்ன பொண்ணு! நீ எல்லார்கிட்டயும் சீன் போடுற மாதிரி அவகிட்டயும் ட்ரை பண்ணாத.. ஊர்ல வளர்ந்த பொண்ணு வேற.. அதான் கோபம் வந்து எதாவது பேசி இருப்பா.. அதை எல்லாம் மனசுல வச்சுக்காத டா" என்று மிரட்டலாய் ஆரம்பித்து கெஞ்சலாய் முடித்தார் ராணி.

"அப்போ நான் உங்ககிட்ட எல்லாம் சீன் போடுறேன்னு சொல்ரீங்க?" மற்ற அனைத்தையும் விட்டு ப்ரணித் இதனை பிடித்துக் கொள்ள, விழி பிதுங்கியது ராணிக்கே!.

"மேரேஜ் ஆனதும் அண்ணாகிட்ட செம்ம இம்ப்ரூவ்மென்ட் ம்மா" என்று ஸ்ரேயாஸ் சிரிக்க,

"உத வாங்காத ஸ்ரே!" என்ற ராணி,

"நான் அப்படி சொல்ல வர்ல டா.. நீ ஒரு மாதிரி.. அது ஆஹ்ன் கொஞ்சம் கெத்தா இருப்பல்ல? அதை தான் சொன்னேன்.. அது அவளுக்கு சீன் போடுற மாதிரி திமிர் காட்டுற மாதிரி தானே இருக்கும்? உன்கூட பழகின பின்னாடி தான் நீ எவ்வளவு ஸ்வீட்னு அவளுக்கு தெரியும்?" என்று ராணி கூறி முடிக்கும் முன் மூச்சு வாங்கியது அவருக்கு.

"அண்ணாவை எல்லாம் எப்படி மா ஐடில செலக்ட் பண்ணின்னாங்க.. பச்ச மண்ணா இருக்கு" என்று ஸ்ரேயாஸ் ராணி காதில் கூற,

"கொஞ்ச நேரம் பேசாம இரேன் டா" என்ற ராணி,

"புரியுதா ப்ரணி?" என்றார்.

"ம்ம் ம்ம்! அவளுக்கு சப்போர்ட் பண்றீங்கன்னு நல்லா புரியுது.. இதே மாதிரி அவகிட்டயும் என்னை பத்தி சொல்லி வையுங்க" என்றவன் வெளியில் செல்ல திரும்ப,

"இன்னும் என்ன டா? எங்க போற?" என்றார் மகனிடம்.

"ப்ச்! பிரண்ட்ஸ்ஸைப் பார்த்துட்டு வரேன் மா.. போரிங்கா இருக்கு" என்றான்.

அவன் மனம் தெளிவில்லாமல் இருப்பதை அறிந்தார் ராணி.

"அந்த பேக்'க குடுத்துட்டு போ" ராணி கூறவும் கழட்டி ஸ்ரேயாஸ் கையில் கொடுத்துவிட்டு சென்றான் ப்ரணித்.

"என்னம்மா அண்ணா இப்படி இருக்காங்க.. நிஜமா அண்ணாவை நானும் கெத்துன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன்.. குழந்தைங்க தோத்து போயிடும் போல" ஸ்ரேயாஸ் கூற,

"என்ன டா பண்றது? நீ என்னை மாதிரி விவரமா இருக்குற.. அவன் உங்க அப்பா மாதிரி இருக்கிறான்" என்று கணவனை கலாய்த்து சென்றார் ராணி.

"ஆமா ஆமா! எனக்குமே நம்ம ஊர் திருவிழான்னா அவ்வளவு பிடிக்கும்.. எங்க! சென்னை வந்த அப்புறம் திருவிழாக்கு வர்றதுக்கு நேரமே கிடைக்கல" என்று மருமகளிடமும் வடிவிடமும் பேசிக் கொண்டிருந்தார் சரவணன்.

"அம்புட்டு ஆசை இருக்கவன் வருசத்துல ஒரு நாளைக்கு வர முடியலையாக்கும்? என்ன ஊரோ! இந்தா பாரு டி.. நீயும் இவியல மாதி இங்கயே கிடந்துராத.. நான் இருக்க வரைக்கும் நீ ஊரு பக்கம் வந்து போயி தான் இருக்கனும்" என வடிவு கல்யாணியிடம் கறாராய் கூற,

"அதுக்கு தானே கல்யாணியை பிரணித்க்கு பார்த்து கட்டி வச்சிருக்கோம்.. மருமகளை சாக்கு வச்சு எல்லாரும் வந்துட மாட்டோம்" என்றார் சரவணன்.

"என்னம்போ சொல்லுதிய.. செஞ்சா சரி" என்று வடிவு கூற, ராணியும் ஸ்ரேயாஸும் வந்தனர்.

"ஏத்தா பரணிய எங்க? நிஜமாலுமே வேலைக்கு போயிட்டானா?" என்று வடிவு கேட்க,

"அதெல்லாம் இல்ல பியூட்டி! தோ பாருங்க அண்ணா பேக்!" என்று காட்டிய ஸ்ரேயாஸ், ப்ரணித் கூறியதை சொல்ல வர,

"முக்கியமான வேலைனு மேனேஜர் கூப்பிட்டாறாம்.. என்னனு கேட்டுட்டு இன்னும் நாலு நாள் வர முடியாதுன்னு சொல்லிட்டு வர போயிருக்கான்" என்றார் ராணி.

"சரிதேம்! வரட்டும்" என்று வடிவு சொல்லிவிட, ராணி கேட்டுக் கொண்டாலும் கண்டு கொள்ளவில்லை.

"என்ன! மருமக கூட கூட்டணி வச்சுட்டீங்க போல?" என கணவன் அருகே ராணி அமர,

"பின்ன வேண்டாமா? ப்ரணி எப்பவும் உன்கூட தானே ஒட்டிக்குறான்.. அதான் மருமகள என் பக்கம் ஆள் சேர்த்துட்டு இருக்கேன்" என்றார் சரவணன்.

"உன் அண்ணங்காரனே போயிட்டான்.. நீ என்னத்துக்கு காலேஜூ போவாம நிக்குத?" என ஸ்ரேயாஸை வடிவு கேட்க,

"என் பியூட்டியை நான் தானே கவனிக்கணும்? அதுக்கு தான் லீவ் விட்டுட்டேன்" என்றான் ஸ்ரேயாஸும்.

"ஆமா நீ இல்லன்னா இங்க எனக்கு ஒன்னும் ஓடாது பாரு.. போயி படிக்க வேலைய பாரு.." என்று வடிவு கூற,

"அவன் சும்மா சொல்றான் ம்மா.. ஸ்ரே படிக்கறது ஈவினிங் காலேஜ்.. ரெண்டு மணிக்கு தான் கிளம்புவான்" என்றார் ராணி.

"ரெண்டு மணிக்கு மேல படிச்சு இவே என்னத்த பண்ண போறான்?" என்று வடிவு கிண்டல் பேச, கல்யாணியும் சிரித்தாள் அதில்.

அத்தனை எளிதாய் அந்த வீட்டில் ஒருத்தியாய் மாறி இருந்தாள் கல்யாணி. அதற்கு ராணி, சரவணன், ஸ்ரேயாஸ் ஒத்துழைப்பும் மிகப்பெரிது.

வடிவிற்கும் நிம்மதியாய் இருந்தது அந்த வீட்டின் ஒவ்வொருவரின் பேச்சும் புரிந்து தெரிந்து.

பேத்தியை நினைத்து இனி கவலை இல்லை அவருக்கு.. ஆனாலும் பிரிவதில் வருத்தம் இல்லாமல் இல்லை. அதை இப்பொழுது காட்டிக் கொள்ளவும் இல்லை.

அனைவருமாய் பேசி சிரித்தபடி இருக்க, ராணி மதிய உணவு செய்ய நகரவும் கல்யாணியை மறுத்தும் அவள் அவருடன் இணைந்து கொண்டாள்.

"வெல்லம் திங்குறவன் ஒருத்தன்.. விரல் சூப்புரவன் இன்னொருத்தன்" அருண் கூற,

"நீ என்னடா எங்க வீட்டுல இருக்குற ஆச்சி மாதிரி பேசுற?" என்றான் ப்ரணித்.

"இதை என்னோட அப்பத்தாவும் சொல்லும் டா.. உனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தான் ஆகி இருக்கு லீவ்ல இருக்குற சரி.. இப்ப எங்களை எதுக்கு டா லீவ் போட வச்ச?" என்று அருண் கேட்க,

"நல்லா கேளு டா.. ஆபீஸ் கிளம்பின என்னை போன் பண்ணி இங்கே வர சொன்னதும் என்னவோன்னு வந்தா சும்மா தான் கூப்பிட்டேன்னுறான்" என்றான் விவேக்கும்.

"ப்ச்! நேரம் போகல.. கூப்பிட்டேன்.. தப்பா? போகணும்னா போங்க டா" என்று ப்ரணித் சத்தமாய் கூற,

"எவ்வளவு கொழுப்பு பார்த்தியா இவனுக்கு? லீவ் போட வச்சுட்டு.. போங்க டாவாம்.."என்றான் விவேக்.

"போக மாட்டோம்னு தெரிஞ்சி தான் சொல்றான் டா" என்றான் அருணும்.

"சரி சரி வந்தது வந்தாச்சு.. எனக்கு ஒரு சிக்கன் பிரியாணி" விவேக் கூற,

"எனக்கு தந்தூரி!" என்றான் அருண்.

இருவரையும் முறைத்த ப்ரணித் பின் இலகுவாய் சிரித்தான்.

நண்பர்கள் இருவருமே ப்ரணித் மனநிலை சரியில்லை என்பதை அறிந்தாலும் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

திருமணம் ஆன இரண்டு நாட்களில் என்னவாம் உனக்கு என கேட்டிருந்தால் அவன் கூறி இருப்பானோ என்னவோ ஆனால் எந்த பிரச்சனையாய் இருந்தாலும் குடும்ப விஷயத்தில் உடனே தலையிட விரும்பவில்லை.

அதை பூதாகரமாக்கவும் விரும்பவில்லை. அவன் மனநிலையை மாற்ற தயாராய் இருந்தனர். அதை செய்யவும் முனைந்தனர்.

குழப்பத்தில் இருக்கும் மனம் நூறு சாத்தான்களுக்கு சமம். அதை சரி செய்தாலே வாழ்வில் பல முடிச்சுக்களை எளிதில் அவிழ்க்கலாம்.

சரியாய் மதிய உணவிற்கு அனைவரும் அமர்ந்திருக்கும் நேரம் வந்து சேர்ந்தான் ப்ரணித்.

"வா டா சாப்பிடலாம்.. இன்னைக்கு ஸ்பெஷல் கல்யாணி சாதம்.. கல்யாணி சாம்பார்னு வரைட்டியா இருக்கு" என்று சரவணன் அழைக்க,

"நான் சாப்பிட்டு வந்துட்டேன் ப்பா!" என்றான் ப்ரணித்.

"அப்டியா? சரி அப்புறமா டேஸ்ட் பண்ணி பாரு!" என்று கூறவும் அவன் அறைக்கு சென்று விட, அதை கல்யாணியுமே பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

"தப்பா நினைச்சுக்காத கல்யாணி! ஆபீஸ்ல எல்லாரும் சேர்ந்து இருக்கும் போது இவன் மட்டும் சாப்பிடாம இருக்க முடியாதே! அதான் சாப்பிட்டு வந்திருப்பான்" என்றார் ராணி.

"என்ன ராணி ம்மா இதுக்கு போய் பெருசா பேசிகிட்டு.. வெளிய போறவங்களுக்கு ஆயிரம் வேல இருக்கும்.. வயித்த பட்டினி போட்டு பாக்க முடியுமா? எங்க சாப்பிட்டா என்ன? சாப்பிட்ருக்கணும் அவ்வளவு தான்.." என்றாள் கல்யாணி.

ப்ரணித்துமே இதை கேட்ட பின் தான் அறைக்குள் சென்றான்.

"அத சொல்லுத்தா.. வேலய பாக்குததே இந்த வயித்த காயப் போடக் கூடாதுன்னு தான.." என்றார் வடிவுமே!

"ரொம்ப எதார்த்தமா இருக்கீங்க ம்மா.. ரொம்ப சந்தோசமாவும் இருக்கு" என்றார் ராணி.

"அந்த சந்தோசத்தோட கூட நாலு வாயி அள்ளிப் போடு.. அங்கன பாரு உன் சின்ன மவன் என்ன மாதி சாப்புடுதான்னு.. இன்னும் நாலு நாள் கல்யாணி சாப்பாட்ட சாப்புட்டா அவே உருண்டு தான் போவணும் படிக்க" என்று கிண்டல் செய்ய,

"நீங்க என்ன நினச்சு சொன்னாலும் சரி பியூட்டி.. நிஜமா அண்ணி சமையல் ஃபர்ஸ்ட் கிளாஸ்.. சான்ஸ்லெஸ்" என்று பாராட்டி சாப்பிட்டு முடித்தான் ஸ்ரேயாஸ்.

அதன்பின் மாலை நேரம் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலர் வந்து அமர்ந்து கல்யாணியை பார்த்து செல்ல, நேரம் வேகமாய் சென்றது.

"இன்னைக்கு என்னைய நீ ஏமாத்த முடியாது" என்று ஸ்ரேயாஸிடம் கூறிய வடிவு,

"ஏத்தா! நிசமா நேத்து கல்யாணி உன்கூட தான இருந்தா?" என்று ராணியிடம் கிசுகிசுப்பாய் கேட்க,

மகனுக்காக ஆம் என்று சொல்லி வைத்தார் ராணியும்.

"ரெண்டு நாளையில நான் ஊரப் பாத்து போயிருவேன்.. பொறவு நீங்க தான் பாத்துக்கிடனும்" என்ற வடிவு ராணி அறையில் கல்யாணியுடன் இருக்க, சரவணன் ஸ்ரேயாஸ் அறைக்கு வந்துவிட்டார்.

"இன்னைக்கு மட்டும் நான் பியூட்டிகிட்ட போனேன்.. அது கன்னதுலேயே நாலு போடு போடும்.. என்னா அடி தெரியுமா காலையில.. இன்னைக்கு நீ தனியாவே தூங்கு" என்று ப்ரணித்திடம் ஸ்ரேயாஸ் சொல்லிச் செல்ல,

"நேத்து மட்டும் குடும்பம் நடத்தின மாதிரி தான்.. போ டா" என்று முணுமுணுத்தான் ப்ரணித்தும்.

நண்பர்களுடன் நேரம் செலவழித்து வந்த பின் மனம் அமைதியாகி இருக்க, மதியம் கல்யாணியின் பக்குவமான பேச்சும் ப்ரணித்தின் மனதை கொஞ்சமே கொஞ்சமாய் சாந்தப்படுத்தி இருந்தது.

தொடரும்..