• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழி 6

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 6

"எவ்வளவு தான் டா உனக்கு சொல்றது? உன் ஆசை தப்பில்ல.. அதுக்காக யார்கிட்ட வேணா போய் இப்படி கேட்டு வைப்பியா?" என ராணி கேட்க,

"ம்மா! நான் என்ன பாக்குற பொண்ணுங்ககிட்ட எல்லாமா கேட்டுட்டு இருக்கேன்.. என்னை புடிச்சி என்கிட்ட வர்ற நினைக்குற பொண்ணுங்ககிட்ட அதுவும் எனக்கு புடிச்சிருந்தா தானே கேட்குறேன்" என்று நியாயம் பேசிய மகனை பாவமாய் பார்த்தார் ராணி.

"உனக்கு இன்னும் உலகம் புரியலையோனு கவலையா இருக்கு ப்ரணி!" நிஜமான வருத்தத்தோடு அன்னை கூற,

"நான் என்ன குழந்தையா மா?" என சிரித்தவன் அன்னை தோள்களில் சாய்ந்து கொண்டான்.

அன்னையை அவ்வளவு தேடி இருந்தவன் இந்த நான்கைந்து நாட்களில் நடந்த அனைத்தையும் அன்னையிடம் ஒப்பித்துவிட்டு அவரின் கோபத்தையும் பாசத்தையும் வாங்கிக் கொண்டு அவர் நிழலில் அமர்ந்திருந்தான்.

நிஜமான மன நிம்மதி அவனிடம். அழுத்தம் எல்லாம் எங்கோ சென்று மறைந்திருக்க, கடந்த எதுவும் மனதில் இப்போது இல்லை. அனைத்தையும் தான் கொட்டி விட்டானே!.

"சரி அம்மா ஒன்னு சொன்னா கேட்பியா?" அன்னை கேட்க,

"கேட்கலாமே!" என்றான் இன்னும் தோள்களில் சாய்ந்தே.

"உனக்கு எதாவது போன் கால் வந்துச்சா?" என்று கேட்க,

"என்ன போன் கால் மா?" என்றான்.

"அப்ப வர்ல.. இவ்வளவு சொன்னவன் வந்திருந்தா அதையும் தான் சொல்லி இருப்பியே!" என்று அன்னை கூறவும் புரியாமல் பார்த்தான் ப்ரணித்.

"உனக்கு ஒரு பொண்ணு போன் பண்ணுவா.. அவ பேரு கல்யாணி" என்று கூற, குறும்பாய் புன்னகைத்தான் ப்ரணித்.

"ம்மா! வாட் இஸ் திஸ்? நான் தான் சொன்னேன்ல லவ் மேரேஜ் தான் பண்ணுவேன்னு.. அப்புறம் என்ன?" என்றவன் அன்னையை முழுதாய் பேச விடவில்லை.

அப்படி அவர் பேசி இருந்தால் தலை தெறிக்க ஓடி இருப்பானோ என்னவோ.

"இவ்வளவு நேரமும் நீ சொன்னதை நான் கேட்டேன் இல்ல? நான் சொல்றதை கேளு ப்ரணி.." என்று கூற,

"சரி ஓகே! உங்களுக்காக மட்டும் ஓகே" என்றவன் கல்யாணியை பற்றிய எந்த தகவலையும் அவரிடம் இருந்து கேட்கவில்லை.

எங்கோ சறுக்கி இருக்கிறோம் என சிந்தித்துக் கொண்டிருந்த ப்ரணித்திற்கு ஹரிணி என்ற ஒரு பெண் பயத்தை காட்டி இருக்க,

அன்னை பார்த்து வைத்திருக்கும் பெண் தனக்கு பிடித்த மாதிரியாய் கூட இருக்கலாம் அல்லவா என்ற எண்ணத்தை வர வைத்திருந்தது.

அதனாலேயே வேறு எதுவும் அவர் சொல்ல வந்ததை கேட்காமல் கிளம்பி செல்லவும் வைத்திருந்தது.

"இட்ஸ் ஓகே மா! நீங்க சொல்ற பொண்ணு போன் பண்ணட்டும் நான் பேசிக்குறேன்" என்ற ப்ரணி தன் அன்னை நிச்சயம் தன் விருப்பம் புரிந்து அதற்கு ஏற்றார் போல தானே பார்த்து வைத்திருப்பார் என்று நம்பி இருந்தான்.

"ம்மா! கம்மிங் வெட்னெஸ்டே மது மேரேஜ்.. இன்விடேஷன் வரும்.. போகணும் ரெடியா இருங்க" என்று கூறிவிட்டு எழுந்து சென்றான்.

ராணியுமே வருவது வரட்டும் என்று அதற்கு மேல் கல்யாணியைப் பற்றி அவனிடம் கூற முற்படாமல் பேசி தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டார்.

"என்னத்த டி பண்ணிக்கிட்டு கிடக்க.. நகத்த கடிச்சா வீட்டுக்கு ஆவாதுன்னு தெரியாது?" என்று அன்னம் மகளை அதட்ட,

"உனக்கு அவளை பேசலன்னா பொழுது சாயாத!" என்ற வடிவின் குரலில்,

"அவா பேசலையின்னாலும் உங்கள திருத்த முடியுமாக்கும்" என முணுமுணுத்தே உள்ளே சென்றார்.

"ஏத்தா! எதுக்கான்டி இப்புடி நகத்த உரிச்சிகிட்டு கிடக்க.. அப்பத்தாகிட்ட தான் என்னனு சொல்லே" என்று பேத்தியிடம் பேசி பார்த்தார் வடிவு.

நகம் கடிப்பதை நிறுத்தி வடிவைப் பார்த்து முறைத்தவள், "ஒரு வேல உருப்படுதா உன்னோட" என்றவள் புலம்ப அந்த வீட்டில் வடிவை தவிர யாரும் இல்லையே.

"சரித்தா அதான் உனக்கு என்ன செய்யணுமோ சொல்லு செய்யுதேன்ங்கேம்ல" என்று கூறவும் அமைதியானாள் கல்யாணி.

"எனக்கும் உன்னய வுட்டா யாரு இருக்கா புலம்ப?" என வடிவின் அருகே வந்து கல்யாணி அமர,

"ரெண்டு நாள் வீடு வீடா இருந்துது.. சேர்ந்துட்டுங்க.. இனி விளங்கிரும்" என எப்போதும் போல தனியே பேசிக் கொண்டார் அன்னம்.

"சொல்லுத்தா! என்னத்த போட்டு மனசுக்குள்ள அனைத்திக்கிட்டு கிடக்க?" என்று வடிவு கல்யாணி தலையை கோத,

"அன்னைக்கு வந்துட்டு போனாவளே ராணி அம்மா அவகள பத்தி தான் உள்ள ஓடுது.." என்று கூறவும்,

"ஏன்த்தா? அவ என்ன பண்ணுனா? நீ எதுக்கு அம்புட்டு யோசிக்கவே.. அந்த சென்னைல போயி இறங்குன உடனேயே அந்த பய நம்பர புடுங்கி குடுக்கேன்.." என்றார் வடிவு.

"உன் வீராப்பு தான் எனக்கு தெரியும.. உன்னைய இனி நம்பிருவேனாக்கும்.. இங்கன பாத்தியா" என்று ஒரு பேப்பரை காண்பித்தாள் வடிவிடம் கல்யாணி.

"என்னத்தா இது? போனு நம்பரு மாட்டுக்குல்ல இருக்கு!" என்று வடிவு அதை திருப்பி திருப்பி பார்க்க,

"ஆமா ஆமா! போனு நம்பரு தான்.. நீ வாங்கியாந்து தருவன்னு நான் உக்காந்தா முக்கு சந்துல போயி இருக்க வேண்டியது தான்.. அதான் நானே வாங்கியாந்துட்டேன்" என்று கல்யாணி கூற,

"யா ஆத்தே! என்னத்த டி சொல்லுத? யாருட்ட டி இத வாங்குன?" என வடிவு பத்ற,

"ஷ்ஷூ! கத்தாத கிழவி.." என்ற கல்யாணி அன்னம் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.

"உன் அம்மைக்கு மட்டும் தெரிஞ்சுது.. இத யாருகிட்ட என்னன்னு டி வாங்குன நீயி?" என்று வடிவு கேட்டவருக்கு காலெல்லாம் நடுங்கியது.

"வாய் கிழிய பேசுன.. இப்போ என்ன காலு இந்த ஆட்டம் ஆடுது?" என்று கல்யாணி நக்கலாய் கேட்க,

"பல்லக் காட்டாத டி.. முதன்ன இத சொல்லு" என்று வடிவு பதறவும்,

"நீ நினைக்குத மாட்டுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல.. பக்கத்துல வீட்டு பரிமளம் அக்கா மவன்கிட்ட அந்த ராணி அம்மாவ பாத்து நான் சொன்னேன்னு அவிய மவன் நம்பர வாங்கியார சொன்னேன்.." என்று கூற,

"ஏடி கூறு கெட்ட தனமா பண்ணி வச்சுருக்க.. நாளைக்கு என்னமாச்சும் நடந்து அது உனக்கே மாமியாரா வந்த என்னத்த டி பண்ணுவ.. இது தான் சின்ன புள்ளைவ சகவாசம் வேணாம்ங்குறது.. அந்த தாயி உன் அப்பன்கிட்ட சொல்லிருந்தா என்ன டி ஆவும்?"

ஒவ்வொன்றாய் நினைத்து நினைத்து பதறிக் கொண்டிருந்தார் வடிவு.

"ஒன்னும் ஆவாது.. அவியளே ஒன்னும் நினைக்காம தான் அந்த பயகிட்ட நம்பர எழுதி குடுத்து விட்ருக்காக.. எப்போ வேணும்னா பண்ணி பேச சொல்லுன்னு சிரிச்சிகிட்டே சொன்னதா தான் அவன் வந்து சொன்னான்" என்று கல்யாணி கூற, மயக்கம் வருவதை போலிருந்தது வடிவிற்கு.

"எங்க இருந்து டி இம்புட்டு துணிச்சலு உனக்கு?" என்று கேட்க,

"பொறவு உன்னைய மாதி வாயிலயே வட சுடுவேன்னு நினைச்சியாக்கும்.." என்றவள்,

"ஆமா அந்த சோதிகா புருசன்ட்ட என்ன பேசலாம்.. எதாவது யோசன வச்சுருக்க?" என்று அப்பத்தாவிடம் கேட்க, அவருக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது.

"வேண்டாம் வேண்டாம்.. ஒங்கிட்ட கேட்டா உருப்படாது.. நானே பாத்துக்கிடுதேன்" என்றுவிட்டாள்.

"ஆத்தாடி ஆத்தா! எமகாதகியா இருக்காளே! இவ அப்பன தெரிஞ்சும் என்ன வேலய எல்லாம் பாத்து வச்சுருக்கா.. அவனுக்கு மட்டும் தெரிஞ்சுது.. நானும் கூட்டுன்னுல்ல நினைப்பான்" என வடிவிற்கு அதிர்ச்சி கொடுத்தவள், ப்ரணித்திடம் பேசுவது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

"என்ன சொல்லணுமோ அத தெளிவா சொல்லிரு டி.. அவன பேசவே வுடக் கூடாது.." என தனக்கு தானே சொல்லிக் கொண்ட கல்யாணி,

"இங்க பாரு உனக்கும் எனக்கும் ஒத்து வராது.. பெரியவங்க புரியாம முடிவு பண்ணிட்டு இருக்காங்க.. நீ என்ன பண்ணுத! இந்த மாதி பொண்ணு எனக்கு புடிக்கலனு சொல்லுத" என ப்ரணித்திடம் பேசுவது குறித்து தனக்கு தானே ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தவள்,

"இல்ல வேண்டாம் கல்யாணி.. உனக்கு என்ன குற? புடிக்கலனு சொல்ல சொல்லாத.. வேற எதாவது காரணத்த சொல்ல சொல்லு" என்று தனக்கு தானே பேசிக் கொண்டவள்,

"ஆன்! வேற எவளையாச்சும் லவ்வு கிவ்வு பன்னுதேன்னு அவன சொல்ல சொல்லிரு.. அது தான் சரியா இருக்கும்.. நம்ம பேரும் கெடாது.. பெத்தவருகிட்டயும் அப்போ தான் மாட்டிக்க மாட்டோம்" என ஒரு முடிவுக்கு வந்தவள் எச்சரிக்கையாய் வடிவு அசந்த நேரம் வடிவின் அலைபேசியை தூக்கி இருந்தாள்.

ஒவ்வொரு எண்ணாய் பேப்பரில் இருந்ததை அலைபேசியில் அழுத்திவிட்டு பச்சை பட்டனை அழுத்த சென்றவள் தன்னை ஒரு மனநிலைக்கு கொண்டு வந்துவிட்டு அழுத்தினாள்.

அன்னையிடம் பேசிவிட்டு உற்சாகமாய் இருந்த ப்ரணித் அன்றைய நாளை விடுப்பு எடுத்துக் கொண்டதோடு நண்பர்களையும் எடுக்க வைத்திருந்தான்.

மாலை ஐந்து மணி அளவில் நண்பர்களோடு பீச்சில் பேசிக் கொண்டிருந்தான்.

"மது போன் பண்ணினா எடுக்கவே மாட்றா டா.." விவேக் கூற,

"அவ்ளோ சின்சியரா வேலைய பாக்குறாளா? நம்ப முடியலையே?" என்றான் அருண்.

"நீ வேற! கால் வைட்டிங்ல போது.. வுட்பீ கூட கடல போட்டுட்டு கேன்டீன்ல வட சாப்டுட்டு இருப்பா" என்று கூறவும் ப்ரணித்தும் சிரித்தான்.

"என்ன டா அம்மா வந்துட்டாங்க இல்ல?" என்று அருண் கேட்க,

"மார்னிங் வந்தாங்க டா" என்றான் ப்ரணித்.

"ஃபேஸ் பார்த்தாலே தெரியுது டா.. பிரெஷ்ஷா இருக்க" என்றான் விவேக்.

"என்ன ஸ்பெஷல்னு இங்கே கூட்டிட்டு வந்த எங்களை?" விவேக் கேட்க,

"செஞ்சுரிக்கு ட்ரீட்டா இருக்கும்.. இல்ல டா?" என்று சிரித்தான் அருண்.

"அடங்குங்க டா.. ரிலாக்ஸா இருக்கனும் தோணுச்சு அதான்" என்று கூறவும் நண்பர்கள் சிரிக்க,

"இந்த லவ்வுன்ற வார்த்தை இல்லைனாலே நம்மள மாதிரி பசங்களுக்கு எப்பவும் ரிலாக்ஸ் தான் டா" என்றான் விவேக்.

"அதுவும் சரி தான்.. லவ்ல கமிட்மென்ட் வச்சிருக்க எவனும் இவ்வளவு பிரீயா இருக்க மாட்டான்" என்று அருணும் கூற,

"அதெப்படி டா லவ் பண்ணாமலே இப்படி தான்னு முடிவு பண்றீங்க? ஏன் லவ் பண்றவங்க யாரும் சந்தோசமா இல்லையா என்ன?" என்று ப்ரணித் கேட்க,

"அதுக்கெல்லாம் ஒரு லக் வேணும் டா.. எல்லாருக்கும் அமையாது" என்றான் அருண்.

"அது நம்ம கையில தான் டா இருக்கு.. நாம தான் அமைச்சுக்கணும்.. இப்படி கிண்டல் பண்ணிட்டே இருந்தா பின்னாடி வைஃப் வந்த பிறகும் அவங்களுக்கு தெரியாம இப்படி தான் பேசிட்டு இருக்க தோணும் நெகடிவா" என்றவன் பேச்சில் நண்பர்கள் முழிக்க,

"பிளேடு போடுறனா?" என்று சிரித்தான் ப்ரணித்.

"லவ்ன்றது எனக்கு ஒரு ஸ்பெஷல் ஃபீலா இருக்கனும் நினைக்குறேன் டா" என்றவன் வானத்தைப் பார்த்து கைகளை உயர்த்தி நெட்டி முறிக்க அவன் அலைபேசி அழைத்தது.

தொடரும்..