• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழி 8

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 8

சென்னை வந்து இறங்கி இருந்தனர் கல்யாணி குடும்பத்தினர்.

"இதான் சென்னையா? என்னமோனுல்ல நினச்சேன்" என்று பேருந்தில் இருந்து இறங்கி நின்று பேருந்து நிலையத்தைப் பார்த்து வடிவு கூற,

"ஆத்தா! வந்து இறங்குன உடனேயா? பேசாம வா த்தா.." என்ற அரசன் முன்னே செல்ல,

"இவே ஒருத்தே! புது ஊருக்கு வந்துருக்கோம் பேசி தெரிஞ்சுக்குவோம்னா வுடுதானா! ஆமா! நாம வாறோம்னு உன் தம்பிட்ட சொன்னியா டி? இன்னும் யாரையும் காணல" என்றார் வடிவு அன்னத்திடம்.

"மாமா கலங்காத்தால வேலைக்கு போயிருமாம் அப்பத்தா.. தினேசு தான் வாரானாம்" என்றாள் கல்யாணி.

"காலங்காத்தால வேலைக்கு போயிருவானா? அஞ்சு மணி இருக்குமா? இம்புட்டு நேரமே போயி என்னத்த செய்யுவான்?" வடிவு கேட்கவும்,

"பல்க்குல தான் ராப்பகலா வேல கிடக்கும்ல" என்றாள் அன்னம் முகத்தை தூக்கி வைத்து.

"அது தாம் டி.. அப்டி என்னத்த வந்தவகள கவனியாம வேலங்கேன்" என்றார் மீண்டும் வடிவு.

"அதான் சொல்லுதாவ இல்ல.. தெரிஞ்சி என்னத்த செய்ய போற? நீயும் கூட போவ போறியா.. விடிஞ்சும் விடியாமலு எத்தன கேட்டுகிட்டு இருக்க.. எல்லாம் அங்கன போயி பேசிக்கிடலாம் த்தா" என்றார் அரசன்.

"பொண்டாட்டி குடும்பத்த ஒரு வார்த்த பேசிரக் கூடாது.. வரிஞ்சி கட்டி வந்துருவான்" வடிவு முணுமுணுக்க,

"உன் புள்ள மட்டும் என் அம்மா வீட்டு ஆளுங்க வந்தா பகுமானமா ஊர சுத்திட்டு நேரம் கடந்து வரும்.. அப்போம்லாம் வாய எங்க வாடகைக்கு குடுத்துருந்தியா?" என்றாள் கல்யாணி.

"வா டி! உன் அப்பன் பேசுனது பத்தாதுன்னு நீயும் வாரியாக்கும்?"

"இந்த வாய் இல்லன்னா உன்னலாம் என்னைக்கோ நாய் தூக்கிட்டு போயிருக்கும்.. பேசாம வா.. தங்க இடம் குடுத்தா நீ தங்கத்துலயே கேப்பியே" என்று பேசியபடி அன்னத்தின் சித்தப்பா மகன் வீரன் கூறிய இடத்தில் வந்து நிற்க, அங்கே தினேஷும் சரியாய் அழைத்து செல்ல வந்துவிட்டான்.

அண்ணத்தின் சித்தப்பா மகன் தான் வீரன். பெட்ரோல் பல்க்கில் பனப்பரிமாற்றம் நடைபெறும் இடத்தில் இருக்கிறார்.

அன்னம் குடும்பத்திலேயே கல்லூரி முடித்த ஒரே மனிதர் வீரன் மட்டுமே! அவரின் மேல் தனி மரியாதை கூட உண்டு அரசனிற்கு.

வீரன் மனைவி கண்ணகி. வீரனிற்கு ஒரு மகள் ஒரு மகன். மகன் தினேஷ்.. கல்லூரி முடித்து தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிகிறான். மகள் ரெஜினா.. ரெஜினாவிற்கும் கல்யாணிக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது.. தோழிகளும் கூட.

"வாங்க மாமா.. அத்தை எப்படி இருக்கீங்க? ஆச்சி நல்லாருக்கீங்களா? அண்ணி! கல்யாணமாமே! வாழ்த்துக்கள்" என அன்பாய் அனைவரையும் விசாரிக்க,

"நல்லாருக்கோம் டே! நீங்க எல்லாரும் எப்படி இருக்கிய?" என்று பேசியபடி வந்தார் அரசன்.

"இவன் உனக்கு மூத்தவனா இருந்தா இவனுக்கே கட்டி வச்சிருந்துருக்கலாம்.. பெரிய இடத்துல தான் வேல பாக்கானாம்.. ஆளும் நல்லா தான் இருக்கான்.. உன் ஆத்தா பக்கத்து வீட்டு பரிமளத்துகிட்ட அப்பப்போ இவனப் பத்தி சொல்லும் போது கேட்டுருக்கேன்.." பேத்தி காதில் வடிவு கூற,

"உன் அப்பத்தாவ பேசாம வர சொல்லு டி.. அவிய ரகசியம் பேசுதது எனக்கு கேக்குது" என்ற அன்னம் வேகமாய் முன்னே செல்ல,

"வாய வச்சுட்டு சும்மா இரு கிழவி.. என்னைய விட ரெண்டு வயசு சின்ன பையன பத்தி என்னத்த பேசுத.." என கல்யாணியுமே பல்லைக் கடிக்க,

"உண்மய சொன்னா பொல்லாப்புத்தேன்" என்றார் வடிவு.

"வாங்க மதனி!" என்று வீரனின் மனைவி கண்ணகி வரவேற்க,

"கல்யாணி!" என ஓடி வந்தாள் ரெஜினா.

"நல்ல விஷயமா தான் வந்திருக்கிங்கன்னு உங்க தம்பி சொன்னாங்க.. ரொம்ப சந்தோசம்.." என்று கண்ணகி கூற,

"பாதி முடிவான மாதி தான் கண்ணகி.. மாப்பிள்ள தம்பியையும் அவக வீட்டையும் ஒருக்க பாத்துட்டா உங்க அண்ணே மனசு திருப்திபட்டுக்கும்.. அதுக்கு தான் கிளம்பி வந்ததே" என்றார் அன்னமும்.

"அதெல்லாம் உங்க குணத்துக்கு எல்லாம் நல்லதா தான் நடக்கும் மதனி.. இருங்க காபி கொண்டு வந்துடுறேன்" என கண்ணகி உள்ளே செல்ல,

"கல்யாணக் களை முகத்துல தாண்டவம் ஆடுது.. இவ்வளவு அழகா டி நீ?" என்று கல்யாணியை வாரிக் கொண்டிருந்தாள் ரெஜினா.

"அப்டியாத்தா?" என வடிவு பேத்தியை உற்றுப் பார்க்க,

"மூஞ்சி! நல்லா ஆடும் தாண்டவம்.. இருக்குற நிலைம புரியாம அனத்தாத!" என்று கடுப்படித்தாள் கல்யாணி.

"ஏன் அண்ணி! கல்யாணம் புடிக்கலையா இல்ல மாப்பிளைய புடிக்கலையா?" என தினேஷும் வந்தான்.

"உன் அண்ணிக்கு சொந்த ஊரவுட்டு போக மனமில்லையாம்.. ஊருக்குள்ள உலாத்துன மாதி வராதாம்.." என்று வடிவு கூற,

"உன்ன பாக்காம எப்டிடி இருப்பேன்னு ஊர்ல மூக்கால அழுதுட்டு.. இங்க வந்து நாயம் பேசுதியா?" என கல்யாணி வடிவை முறைக்க,

"ப்ச்! ஆச்சியை ஏன் திட்ற கல்யாணி? உன் ஊரை தான் இத்தனை வருஷம் கூட இருந்து பார்த்துக்கிட்ட இல்ல? இனி எங்க சென்னை எப்படி இருக்குன்னு பாரு" என்றாள் ரெஜினா.

"ஆமா! சென்னை ஒன்னும் அவ்வளவு மோசம் எல்லாம் இல்ல.." தினேஷ் கூற,

"சென்னை எப்டியும் இருந்துட்டு போவட்டும்.. எனக்கு இப்போ பாத்துருக்க மாப்பிளய புடிக்கல.. அவ்வளவு தான்.." என வெளிப்படையாய் கூறிய கல்யாணி, ப்ரணித் பேசியதை முழுதாய் ரெஜினாவிடம் கூறினாள்

"போன எடுத்ததும் யாரு என்ன ஏதுனு கேக்கணுமா இல்லையா? எந்த புத்தி உள்ளவனாவது இப்டி அரைபைத்தியமா பேசி வைப்பானா?" என அவன் பேசியதிலேயே கல்யாணி நிற்க,

"சரி டி இப்ப என்னதான் பண்ண போற? உன் அப்பாக்கு புடிச்சிருந்தா?" ரெஜினா கேட்க,

"வேற என்ன பண்ண? தலவிதியேனு கெட்டிக்க வேண்டிதான்.. அதுக்காக முயற்சி பண்ணாம இருக்க மாட்டேன்" என்றாள் என்ன செய்வது என சிந்தித்தபடி.

"ஆமா ஆள் பார்க்க எப்படி இருப்பார்?" தினேஷ் கேட்க,

"அது இருப்பான் நல்லா சோதிகா புருஷனாட்டம்" என்றது வடிவு.

"ஆச்சி! உங்களுக்கு மாப்பிள்ளைய புடிச்சிருக்கு போலயே!" ரெஜினா கண்டு கொண்டவளாய் கேட்க,

"இல்லய! எனக்கு என் பேத்தி என்ன சொல்லுதாளோ அதுதேம்" என்றவர் கைகளாலும் கண்களாலும் சைகை செய்ய, வாய் மூடி சிரித்தனர் தினேஷ், ரெஜினா.

"பேசினது போதும்.. வந்தவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்" என்ற கண்ணகி அனைவருக்குமாய் காபியை கொடுத்து செல்ல,

"சரி சரி! கல்யாணி! நீ ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா.. நாங்க கீழே வெயிட் பண்றோம்" என்ற ரெஜினா தம்பியுடன் கிளம்பிவிட, சோர்வாய் படுத்துவிட்டாள் கல்யாணி.

"இன்னைக்கே போணுமா ண்ணே! பையன் வீட்டுல நீங்க வந்த செய்தியை சொல்லிட்டீங்களா?" என கண்ணகி அரசனிடம் கேட்க,

"சொல்லியாச்சு த்தா! சாயந்திரமா வாறோம்னு சொல்லிருக்கேன்.. அப்போ போனா தான் மாப்பிள தம்பியையு பாக்க முடியுமாம்.. வந்தது அதுக்கு தான? அதான் சரினுட்டேன்.. அன்னம் வந்தா அவளையும் கூட்டிட்டு போவணும்" என்ற அரசன் திரும்பி மனைவியைப் பார்க்க,

'இந்தாளு என்ன புதுசா நம்மகிட்ட எல்லாம் கேட்டு செய்தாரு!' என்ற மனதின் கேள்வியோடு கணவனை திரும்பி பார்த்தார் அன்னம்.

"சாயந்திரமா போய் பாத்துட்டு வருவோம்.. நீயும் கிளம்பி இரு" என்றார் அன்னத்தின் பார்வையை வைத்தே அரசன்.

"சரித்தேன்!" என்ற அன்னம் கண்ணகியோடு சமையலறைக்கு சென்றுவிட, கல்யாணி வடிவு இருவரும் கதைபேசி குளித்து உடை மாற்றி என கீழே வந்தனர்.

"ரெஜி! அண்ணி வந்துட்டாங்க" தினேஷ் கூற,

"அதெல்லாம் வேண்டாம் தினேசு!" என்றார் அன்னம்.

"நீயே சொல்லு கல்யாணி" என்று ரெஜினா கேட்க,

"என்ன?" என்றார் வடிவு.

"என் பிரண்ட்டோட சிஸ்டர்க்கு இன்னைக்கு கல்யாணம்.. அதான் கல்யாணியை கூட்டிட்டு போறேன்னு சொன்னா அத்தை வேண்டாம்னுறாங்க.. நீ சொல்லு கல்யாணி! வர்றியா?" என்று ரெஜினா கல்யாணியிடம் கேட்க,

"அவ எங்க வர போறா? ஊருல பக்கத்து வீட்டுல கல்யாண சாப்பாடு போட்டாலே அவளுக்கு நான் தனியா ஆக்கி போட்டுகிட்டு கிடக்கணும்" என அன்னம் கூற,

"ஆமா! எல்லாம் உங்க விருப்பம் தானா? நான் போவேன்" என்ற கல்யாணியை வடிவே ஆச்சர்யமாய் பார்க்க,

"என்ன த்தா.. எதுக்கு இந்த கோவம்?" என்றார்.

"பின்ன? வேண்டாம்னு சொல்லியும் எவனையோ பாக்க இவர்களே இவ்ளோ தூரம் கூட்டியாருவாகளாம்.. இப்போவும் எனட்ட கேக்காம அவகளே நான் போவ மாட்டேன்னு சொல்லுவாகளாம்" என்று கல்யாணி கூற,

"அறிவு கெட்டவளே! எது எதுக்கு தான் மூஞ்ச தூக்கணுமுன்னு விவஸ்த இல்லாம போச்சி.. போவணுமுன்னா அவ கூட போயாறது.. யாரு வேண்டாமுன்னா.. நீ போவ மாட்டன்னு தான் நான் சொன்னேன்" என்று அன்னம் கூறவும் தான் எதிலோ காட்ட வேண்டிய கோபத்தை இதில் காட்டி என்ன பயன் என தோன்றியது கல்யாணிக்கு.

"யேத்தா நானும் வாரன்.. எம்புட்டு நேரம் தான் உன் அம்மயையும் இவளையும் மூஞ்ச மூஞ்ச பாத்துட்டு உக்கார" என வடிவு கூற,

"ஆமா! ஊருல தினத்துக்கும் அங்காளி பங்காளினு இருந்த நினப்பு தான்.. அங்கேயும் ஒத்தயா கிடந்தது மறந்தாச்சி போல" அன்னம் பேச,

"உன் வீட்டாளுகன்னு வாயி நீளுதோ உனக்கு?" என்று அன்னம் வர,

"ஐயோ ஆச்சி! வாங்க வாங்க போலாம்.. உங்களுக்கும் அப்படியே சுத்தி பார்த்த மாதிரி இருக்கும்ல.. தினேஷ்! நீ எங்களை மண்டபத்துல மட்டும் ட்ரோப் பண்ணிடு" என்றாள் ரெஜினா.

சிறிது நேரத்திற்கு எல்லாம் வீரனும் விடுப்பு கேட்டு வந்துவிட அவரிடமும் சொல்லிக் கொண்டு கல்யாணியுடன் கிளம்பி இருந்தாள் ரெஜினா.

"பார்த்து சூதனமா போய்ட்டு வரணும் த்தா.. இது நம்ம ஊரு மாதி இல்ல" என அரசன் கூற,

"பிள்ளைங்க ஒண்ணா தானே போகுது.. போய்ட்டு வரட்டும் என்ன இப்ப!" என்றார் வீரன்.

"ஆத்தா கல்யாணி! அப்பத்தாவ கொஞ்சம் பாத்து கூட்டியா.. பராக்கு பாத்துகிட்டு எங்கேயும் நின்னுராம" என்று அனுப்பி வைத்தான் அரசன்.

'மதுமிதா வெட்ஸ் ஸ்ரீதர்' என்ற பெயர் பலகையை தாண்டி ப்ரணித் தன் பைக்கை உள்ளே செலுத்த, அவனுக்கு பின்னே காரில் வந்து இறங்கினர் ராணியும் சரவணனும்.

"ம்மா! நீங்க அங்கே போய் உட்காருங்க.. நான் ஆஃபீஸ் பிரண்ட்ஸ் எல்லாம் எங்க இருக்கானுங்கனு பார்த்துட்டு வந்துடுறேன்" என அன்னை தந்தையை அமர வைத்துவிட்டு நண்பர்களைத் தேடி ப்ரணித் செல்லவும் அங்கே காரில் வந்து இறங்கினர் ரெஜினாவுடன் கல்யாணியும் வடிவும்.

தொடரும்..