• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேனிற் பூக்கள் _3

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
25
29
13
Chinna Rettaiyurani Ramanathapuram
வேனிற் பூக்கள் _3
*****


பெரியவீட்டு அம்மாவின் உடல் எரிந்து முடிய மணி
மூன்றாக..
பசி வயிற்றைக் கிள்ளியது.
அனைத்தையும் முடித்துவிட்டுக் கிளம்ப.. அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

என்ன செய்வது பெற்றவர் செய்தபிழை கல்லூரிக்கு போக வேண்டியவன்
பிணம் எரிக்கிறான்.

மனதில் தாளாத சுமையோடு அருகில் இருந்த குளத்தில் முங்கி எழும்பி வீட்டுக்கு வந்தான் கரியன்...

வீட்டுக்குள் நுழையவும் தனது கூரை வீட்டிலிருந்த பல்லி அவனது தலையில் விழுந்து ஓட ஏதோ சகுனம் சரியில்லையென்றே தோன்றியது.

அரைப்போதையில் இருந்த சின்னன் "என்னப்பா அதுக்குள்ள காலேஜ் போயிட்டு வந்துட்டியா" என்றான்.

என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாமல் பெத்த பிள்ளை நிலை தெரியாமல் இப்படி ஒரு மனுசனா என்று சட்டையைப்பிடித்து கேட்க வேண்டும் என்றே தோன்றியது.

என்ன செய்வது தந்தை அல்லவா? ஏதாவது கேட்டால் மூன்று நாளைக்கு அம்மா புலம்புவதைக் கேட்கவேண்டுமே.

ஏற்கனவே ஒருமுறை அப்படி கேட்டு அம்மா சாப்பிடாமல் கிடந்து ஹாஸ்பிடல் வரை போனது ஞாபகம் வரவே கோபத்தை அடக்கிக் கொண்டான்.

எப்படி இப்படி கணவன் என்ன செய்தாலும் பொறுத்துப்போகப் பெண்களால் முடிகிறது என்று மட்டும் விளங்காத புதிராகவே பட்டது கரியனுக்கு.

அமைதியாய் உள்ளே சென்று அமர "அண்ணா சாப்பாடு போடவா "என்று சின்னவள் கேட்க..

எங்கே அவள் கேட்காவிட்டால் தானே போட்டு சாப்பிட்டுவிடுவான் அந்தளவுக்கு கொலை பசி என்னவோ சாத்தானே தனக்குள் புகுந்தைப்போல உணர்ந்தான்.

வழக்கத்திற்கு மாறாக இன்று இரண்டு தட்டு சாப்பிட்டும் பசியடங்கியதாக தெரியவில்லை.
இருந்தாலும் மற்றவர்களை எண்ணி எழுந்து போனான் கரியன்.

உண்ட மயக்கம் தன்னை ஏதோ செய்ய சாய்ந்து படுத்து உறங்கிப்போனான்.

சரியாக ஆறு மணி இருக்கும் நண்பன் கோபி போன்செய்ய
பதறிவிழித்தவன் தன் நண்பன் கோபியின் நம்பரைப் பார்த்து சற்று ஆசுவாசம் அடைந்தான்.

" ஏன்டா காலேஜ் வரல
உடம்பு சரி இல்லையா?"
"ஒரு போன் போட்டு சொல்ல மாட்டியா?" என்று உரிமையோடு கேட்டான்.

நடந்ததைத் சொல்ல அவனும் மிகவும் வேதனையடைந்தான்.

"சரி விடுடா நாளை வந்துடுவியா?"

"வந்துடுவேன் டா "என்றான் கரியன்

"அப்போ பேசிக்கலாம் "என்று போனைக் கட் செய்தான் கோபி.

கோபி. தேவர் வீட்டுப் பையன் காலேஜ் சேர்ந்த நாள்முதல் சாதி வேறுபாடு இல்லாமல் நட்போடு பழகும் நல்லவன்.

எந்த வம்புதும்புக்கும் போகாதவன்
எல்லோரும் சமமென நினைப்பவன் காரல் மார்க்ஸ் லெனினை விரும்புவன்.

அவன் நண்பனாக கிடைத்தது தனக்கு பாக்கியம் என்று நினைத்தான் கரியன்.

மெதுவாக எழுந்து வெளியில் கிடந்த கயிற்றுக்கட்டிலில் வந்து அமர்ந்தான்.
சின்னவள் கொண்டு வந்து கொடுத்த
தேயிலை டீயைக் குடித்து விட்டு அமர்ந்திருக்க‌....

மரிக்கொழுந்து பின்னால் வந்து கண்களை மூடினாள்.

********
"வாங்க மேடம் என்ன நேர்ல வரமாட்டிங்களோ ?"

"ஒளிஞ்சு விளையாடுறீங்களோ?
வா வா "என்றான்

"போ மாமா எப்படி நீ மட்டும்
என்னை பார்க்காம கண்டுபிடிக்கிற?"

"சொன்னா கோவிச்சிப்பியே !"

"சும்மா சொல்லு கோவப்படமாட்டேன் "

"வேணாம்டி அப்புறம் வருத்தப்படுவ"

"அதெல்லாம் மாட்டேன் சொல்லு"

"அப்போ நீ அடங்கமாட்ட "
சொல்றேன் என்றபடி நிறுத்த

"இப்போ சொல்லப்போறியா இல்லையா ? போகவா?"

"சரி சரி இரு .நீ தான் குளிக்கவே மாட்ட அதுல கெட்ட ஸ்மெல் அடிக்குதுல அதான்"என்றான்

"என்னது நான் குளிக்கமாட்டனா ?
" உன்னை என்ன பண்றேன் பாரு "
"நீதான் அழுக்கு மூட்ட " என்று துரத்த கரியன் ஓடிப்போய் அவனது அம்மா பின்னால் நின்று கொண்டான்.

"பாருங்க அத்தை மாமா சொல்லுறத!"

"இப்ப என்ன சொல்லிட்டானு நீ சிணுங்குற
சரியாத்தானே சொன்னான்" என்று சேர்ந்துகொள்ள...

"போங்க அத்தை நீங்க உன் பையனுக்குத்தான் சப்போர்ட்."

"இருங்க இருங்க கல்யாணத்துக்கு அப்புறம் பட்டினிபோடுறேன்."

"செஞ்சாலும் செய்வடி இப்போவே இந்த ஆட்டம் போடுற."

"டேய் கரியா இவளைக்கொஞ்சம் தட்டி வையி" என்றாள்

அவள் உட்கார்ந்து அழ ஆரம்பிக்க
கரியன் பக்கத்தில் வந்து "சரி சரி அழாத அம்மா சும்மா சொல்றாங்க" என்றான்

இதான் சாக்குனு கரியனைப்பிடித்துக்கொண்டவள்
மாட்டுனியா? என அவனைக்கிள்ளினாள்.

"விடுடி வலிக்குது" என்றான் செல்லமாக.

"என்னையா அழுக்குமூட்ட சொல்ற
நீதாண்டா அழுக்குமூட்ட " என்று சொல்லியபடி
அவனைக் கட்டிப்பிடித்தாள்.

"ச்சீ போடி" தள்ளிவிட்டான்

"நீ போடா" என்ற சிணுங்கிக்கொண்டு வீட்டுக்கு கிளம்ப சின்னவள் வந்து
"அண்ணி எங்க போறீங்க?"

"இங்க வாங்க."

"அண்ணா விளையாட்டுக்குத்தானே சொல்லுச்சு"

"இதெல்லாமா மனசுக்குள்ள வச்சிப்பீங்க" என்று இழுத்தாள்

"விடுமா அவள் போகட்டும்" என்று கொட்டினான் கரியன்.

"க்கூம் என்று கொட்டிவிட்டு இவளுக்காக நான் போகலை" என்று திரும்பி வந்தாள்.
இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த கரியன் அம்மா .

"போங்க லூசுங்களா ? இதே வேலையா போச்சு உங்களுக்கு "
என்று கிண்டலடித்தாள்.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்க பெரிய வீட்டிலிருந்து ஆள் வந்தது

"எழுந்து வாங்க ஐயா என்ன ஆச்சு ஏன் இத்தனை பதட்டமான வர்றீங்க ?" என்றாள் கரியன் அம்மா .

"நம்ம தலைவர் இறந்துட்டாரு என்ன சொல்றீங்க ?"

"உண்மை தான் உடனே சிதையைக் கூட்டணும் கட்டை வந்திட்டு இருக்கு அதான் உம்புருஷனுக்கு சொல்லிட்டு வரச்சொன்னாக.."என்றான் வந்தவன்

"ஐயோ மகராசனும் போயிட்டாரா ? இதென்ன கொடுமை ? "என வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள்.

"கரியா அப்பாரை எழுப்பு" என்றாள்.

"வேண்டாம் மா நானே போறேன்" என்றான்

"என்னப்பா சொல்ற இப்பத்தான் வந்த அதுக்குள்ள நீ போறேனு சொல்ற ?"

"ஆமா மாமா நீ இரு , மாமாவைப் போகச்சொல் "என்றாள் மரிக்கொழுந்து

"இல்லை மரிக்கொழுந்து பெரியம்மாவுக்கு நான்தானே நின்னேன் பெரியய்யாவுக்கும் நானே செஞ்சா புண்ணியம் தான்"

"என்னமோப்பா உங்கப்பாரால நம்மகுடி கெடுது உன்னோட நிலையும் இப்படியாச்சு "என்று அழுத்துக்கொண்டாள்

சரிம்மா நான் வர்றேன் என்று கிளம்பினாள் மரிக்கொழுந்து அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

**********
காலை ஆறுமணி

நேற்று நடந்த இரண்டு மரணங்கள் கண்முன்னே வந்து போக அதையே யோசித்துக்கொண்டு இருந்தான் கரியன்.

கரியனது குட்டித்தங்கை மற்றும் மாமன் மகள் மரிக்கொழுந்து இருவரும் கரியனைக்காட்டி ஏதோ பேசிக்கொண்டிருக்கக் கரியனின் தாய் இவர்களைச் செல்லமாகக் கோபித்துக்கொள்ள
அங்கே கலகலப்பு மீண்டும் ஒட்டிக்கொள்ள....திடிரென
அவர்கள் வீட்டருகே செல்லும் கிராமச் சாலையின் மின்கம்பத்தில் வந்து ஒரு கார் மோதிச் சிதற....இவர்களின்
சின்னஞ்சிறு மகிழ்ச்சியும் காணாமல்போனது‌

சற்றுநேரத்தில் அந்த இடமே திருவிழா கூட்டமாய் கூடிப்போக ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை வாகனங்கள் கிராமத்து மக்களென அங்கே அவரவர் வாய்க்கு வந்த கதைகளைப் பேசத்தொடங்க நடந்தது என்னவென்று தெரியாமல் விழிபிதுங்கிப்போய் நின்றான் கொரியன்.

இன்ஸ்பெக்டர் சுந்தரம்
" என்ன நடந்தது இந்த கார் கேரளா மாநிலத்தில் ரிஜிஸ்டர் பண்ணப்பட்டது ஆனால் இங்கு இந்த இடத்தில் மோதியிருக்கிறது "

"காரணமில்லாமல் இங்கு வர எண்ணவாக இருக்கும்?" என்று பலகோணங்களில் விசாரித்துக் கொண்டு இருந்தார்.

காருக்குள் இருந்த அந்த வெள்ளைநிற மனிதனைப் பக்குவமாக வெளியில் எடுத்து அவனை ஆம்புலன்ஸில் ஏற்றும் பணியினைத் துரிதப்படுத்திக்
கொண்டிருந்தனர் கிராமத்து இளைஞர்கள்.

அந்த கேரள வாலிபன் வலியில் துடித்துக்கொண்டிருக்க அவன் ஏதோ ஒரு பெயரை உச்சரித்துக்கொண்டே இருந்தான்.
ஈன சுரத்தோடு "வேதா வேதா "எனச் சொல்லியபடி
அப்படியே மயங்கிச்சரிந்தான்.

கரியன் மற்றும் நான்கு பேர் சேர்ந்து அவனை அலேக்காகத் தூக்கி ஸ்ட்ரெக்சரில் கிடத்த ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது.கரியனின் உடம்பு முழுவதும் இரத்தம் அப்பிக் கொண்டது.

இன்ஸ்பெக்டர் கரியனின் பக்கம் திரும்பினார் .

".டேய் இங்கவா இந்த கார் வரும்போது நீ எங்க இருந்த?"

"வீட்டில் தான் ஐயா"

"அப்போ நீ இந்த ஆக்ஸிடென்ட பார்த்தியா ?"

"இல்லைங்க ஐயா"

"டேய் பொய் பேசாத உங்கள் வீட்டுக்கும் ஸ்பாட்டுக்கும் நூறு அடிகூட இல்லை.அதுவும் பட்டப்பகலில் நடந்திருக்கிறது.
ஏதாவது தெரிஞ்சா ஒழுங்கா சொல்லிடு அப்புறம் அடிவாங்காத"

"எப்போ பாருங்க எங்க ஜாதிசனம்னா மட்டும் மனுசனாவே மதிக்க மாட்டீங்களா ஐயா"

"சந்தேகக் கண்ணோடவே பார்க்குறீங்க."

ஆமா துரை ஐஏஎஸ் இவனுகள மரியாதையா கூப்பிடனுமாம்ல

"டேய் பொணம் எரிக்குறவனுக தானே நீங்க?"

"இதுல என்ன குரலை உயர்த்திப் பேசுற?"

"படிக்கிற திமிரா ?"

"ஏதாவது கேஸ்ல உள்ளே தள்ளி நொங்க கழட்டிடுவேன்
ஒழுங்கா கேட்கிறதுக்கு பதில் சொல்லு சரியா" என்று அந்த திமிரோடே இன்ஸ்பெக்டர் சுந்தரம் பேச...

மரிக்கொழுந்து அங்கு வந்தாள்.
"மச்சான் சொல்றதுல என்ன தப்பு இருக்கு."
"எப்போ பாரு சாதி குறைஞ்சவங்கனு ஒதுக்குறதுலேயே குறியா இருக்கீங்களே ஏன் சார்?"

"பிச்சையெடுத்தாலும் நாங்க இங்கதான் இருப்போம்"

"ஆனா நீங்க நெறைய சம்பாதிச்சாலும் கடைசியில் இங்கதான் வந்தாகணும்
புரியுதா?" என்று காட்டமாகப் பதில் சொன்னாள்.

இன்ஸ்பெக்டரின் பார்வை மரிக்கொழுந்துவின் மீது பாய்ந்தது
உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை கண்களாலே அளவெடுத்தார்.அவரின் பார்வையிலிருந்து மரிக்கொழுந்தினைக் காக்க
"நீ போ வீட்டுக்கு " என்று சூசகமாகச் சொல்லி அனுப்பப் போகும்போது திரும்பிப்பார்த்தபடியே நடந்தாள்.

அங்கிருந்த காவலர்கள் கூடியிருந்தவர்களைக் கலைந்து போகுமாறு கட்டளையிட ஒவ்வொருவராக விலகிச் செல்ல கரியனும் கிளம்பத்தயாரானான்.

இன்ஸ்பெக்டர் கரியனைத் தடுத்து நிறுத்தினார்


இன்ஸ்பெக்டர் கரியனைத் தடுத்து நிறுத்த "என்ன சார் என்னை ஏன் நிறுத்துறீங்க?" என்றான் கரியன்.

"தொரை நிக்க மாட்டீங்களோ அவ்வளவு திமிரா?"

"கான்ஸ்டபிள் இவனை ஜீப்பில் ஏற்றுங்கள்" என்றார் .

" காரணம் இல்லாமல் என்னை ஏற்ற முடியாது சார்.என்ன பிரச்சினை உங்களுக்கு ?"
நடந்த ஆக்ஸிடென்ட் யாரும் பாக்கலை . எல்லோரும் கூடிய பின்தான் நானும் வந்தேன்.
சம்பந்தமில்லாம என்கிட்ட வந்து வம்பு பண்ணுறீங்க?"என்றான் கரியன்

" எதிர்த்தா பேசுற இரு உனக்கு இன்னிக்கு கவனிப்பு இருக்கு "னு அதிகார தோரணையில் அவனை ஏற்றுங்க "என்றார்.

கரியனுக்கும் இன்ஸ்பெக்டருக்கும் இடையே வாக்குவாதம் நடக்க அங்கிருந்தவர்கள் மீண்டும் கூடிவிட்டனர்.

அங்கிருந்த ஒரு பாட்டி " ஐயா ஏனுங்க அந்த சின்னபுள்ளைய மிரட்டுறீங்க "

"படிக்கிற புள்ள எந்த தப்புதண்டா போக மாட்டான்.அவனைப்போய் பிடிச்சுட்டு போறேன்னு சொல்றீங்க அப்படி அந்தபுள்ள என்ன தப்பு பண்ணுச்சு?."

" எவனோ குடிச்சிட்டு வந்து இங்க விழுந்து கிடந்தா இங்கிருக்கிறவங்க என்ன பண்ணுவோம்" என சொல்ல

மற்றவர்களும் அதானே என்றபடி கூட்டமாக..
ஏட்டு வந்து இன்ஸ்பெக்டர் காதில் ஏதோ சொல்ல கரியனை முறைத்துப் பார்த்துவிட்டு வண்டியை எடுங்கனு கிளம்பிப்போனார்.

" ஏம்பா கரியா போலீஸ பகைச்சுக்காத அவனுக நம்ம சாதிசனத்தை மனுசனுகளாவே மதிக்க மாட்டானுக."

"உன்னை மாதிரி தான் என்புருஷனும் விறைப்பா இருந்தாரு
விசாரணைனு கூட்டிப் போனவங்க ஆறு நாள் கழிச்சு நடைபிணமாத்தான் கொண்டு வந்து போட்டு போனாங்க ."

" அப்புறம் ஆறுமாசம் கிடையா கிடந்து போய்ச்சேர்ந்துட்டாரு ஒரு பயலும் ஏன்னு கேட்கல நான் மூளியா ஆனதுதான் மிச்சம்."

"நம்ம சாதிசனத்துல காலேஜ் போற ஒருத்தன் நீதாம்பா புரிஞ்சு நடந்துக்கய்யா" எனத் தன் ஆற்றாமையை சொல்லி அழ

"சரிபாட்டி இனி நான் சரியா நடந்துகறேன்" என்றான் .

மரிக்கொழுந்து வந்து வா மாமா என்று இழுத்துப் போனாள்.கரியனின் அம்மாவுக்கு விசயம் தெரிந்து ஓடிவந்தாள்.

"என்ன ராசா ஆச்சு போலீஸ் புடிச்சுட்டு போகுறாங்கனு நம்ம சின்னன் வந்து சொன்னான்."

"அதெல்லாம் ஒன்னுமில்லைமா சும்மா விசாரிச்சாங்க"

"நமக்கு எதுக்கு ராசா பொல்லாப்பு
பெரிய எசமானுங்ககிட்ட பேசும்போது கோபப்படாதே ."

"நீ படிச்சு பெரிய ஆளாக வரணும் நம்ம சாதிசனம் நல்ல நிலைமைக்கு வாரது உன்கையிலதான் இருக்கு" ராசா என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

"அத்தை... மாமா சரியாகத்தான் பேசுச்சு நீங்க ஏன் மாமாவைத் திட்டுறீங்க" என்றாள் மரிக்கொழுந்து.

"அடியே உன் மாமனுக்கு கொம்பு சீவாதே என் மவன் படிச்சு பெரிய ஆளா வரணும் நீ சும்மா கிட " என்றாள் முறைத்தபடி.

"போங்க அத்தை யார் என்ன சொன்னாலும் கேட்கிட்டு கிடக்க நாம் மனுசங்களா மாடா?" என்றாள்

"சும்மா இருடி"

" நாம மனுசங்க தான்னு காட்டுறது பேச்சுல இல்லை நம்ம நடந்துகறதுல"

"உம்மாமன் படிச்சு கலெக்டரா வந்தால்தான் நம்மசமூகம் முன்னுக்கு வரும் ,அதை கெடுத்துடாத சரியா ?"

வாய்க்குள் ஏதோ முனுமுனுத்தபடி போனாள் மரிக்கொழுந்து.

அம்மாவின் பின்னால் கன்றுக்குட்டியாய் அமைதியாக நடந்தான் கரியன்.

*******

எழுத்தாளர் நாகா
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
நிதர்சனமான உண்மை!

இப்படியே அடுத்தடுத்து நடந்தா கரியன் எப்படி படிக்க முடியும்?

பத்தாததுக்கு இந்த போலீஸ்காரன் வேற...

மரிக்கொழுந்துக்கு ஏதும் பிரச்சினை வருமோ?