• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேல்விழியாள் - 23

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
அத்தியாயம் - 23

தனது வீட்டிற்கு வந்த மூவரின் முகத்தையும் பார்த்த நாதன் அதிர்ந்தார்.

அனிச்சை செயலாக தனது, சரிபாதியைப் பார்க்க… சகுந்தலாவோ, தான் பார்த்துக் கொள்வதாகவும், அமைதியாக இருக்குமாறு, கண்களை மூடித் திறந்து அமைதிப்படுத்தினாள்.

" அப்பா சந்தீப்பு… எல்லோரையும் உள்ளார அழைச்சிட்டு வா… " என நாதன் கூற…

" இதோப்பா… நீங்க உள்ளப் போங்க… நான் அழைச்சிட்டு வரேன்." என்றவன், எல்லோரையும் அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்குள் சென்றான்.

மதியமுதனை தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்ய… மதியமுதன் பெரியவர்கள் இருவரின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்.

" நல்லா இருப்பா. ரொம்ப சந்தோஷம் பா… விக்கி நல்ல பொண்ணு. உங்க இரண்டு பேருடைய வாழ்க்கையும் அமோகமாக இருக்கும்." என நாதனும், சகுந்தலாவும் வாழ்த்தினர்

விகாஷினியோ இதை எல்லாம் கவனித்ததாக தெரியவில்லை. அவள் இன்னும் தெளியவில்லை. அவளை சகஜமாக்க, அந்த சூழ்நிலையை சகுந்தலா தன் கையில் எடுத்துக் கொண்டார்.

" மகனே… அம்மா‍, அப்பா மேல எம்பூட்டு பாசம்… இப்படி ஓடோடி வந்துருக்க…" என சந்தீப்பை பார்த்து கிண்டலடிக்க…

"மா… " என சந்தீப் முறைக்க…

" அப்புறம் என்னடா பைய்யா… உன் முகமே சொல்லுதே… வீட்டுக்கு வரதுக்கு உனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்குனு. ஊரிலிருந்து நேத்து வந்தவன், இன்னைக்கு சாவகாசமாக வீட்டுக்கு வந்தா, நான் என்ன சொல்றது. நீ சொல்லுடா விக்கி. சகு மா சொல்றது கரெக்ட் தானே " என்று விகாஷினியையும் தன் பேச்சிற்குள் இழுத்தாள்.


" மா… அவளோட கூட்டு சேராதீங்க… அவளால் தான் தாமதமே…" என்றான் சந்தீப்.

சந்தீப் தன்னை குறை சொல்லவும், அவ்வளவு நேரம் இருந்த அமைதி பறந்திருக்க, கோபத்தோடு அவனைப் பார்த்தவள், " சகு மா… நான் சீக்கிரம் கிளம்பிட்டேன். இவங்க இரண்டு பேர், கிளம்ப தான் லேட்டாயிடுச்சு. அப்புறமும் காரை ஓட்ட சொன்னா, கட்டை வண்டியை ஓட்டுற மாதிரி, மெதுவா ஓட்டிட்டு வந்தான்." என புகார் வாசித்தாள்.

" ஹலோ… எனக்கு கார் ஓட்டுறதுல எத்தனை வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு தெரியுமா? உன்னை மாதிரி கத்துக்குட்டி கையில கொடுத்து இருந்தா நாளைக்கு தான் வந்து இருப்போம்." என விக்கியின் காலை வார…

" எத்தனை வருஷம் கார் ஓட்டுறோம் என்பது ஒன்னும் பெரிதில்லை. எவ்வளவு நல்லா ஓட்டுறோம் என்பது தான் முக்கியம். உன்னை விட நான் நல்லாவே ஓட்டுவேன். " என்றுக் கூற…

வழக்கம் போல இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க…

"ஐயோ! இதுங்களை திருத்தவே முடியாது. நீங்க வாங்க தம்பி சாப்பிடலாம்." என்று மதியமுதனை டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றார்.

கொஞ்ச நேரம் வரை சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள், யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும், அவர்களே சமாதானமாகி உணவருந்த வந்தனர்.

சகுந்தலா, மதிக்கும், நாதனுக்கும் பரிமாறிக் கொண்டிருந்தார். கலகலவென பேச்சு சத்தம் கேட்க… அங்கே அமர்ந்த சந்தீப், " வொய் மம்மி? என்னைக் கூப்பிட வேண்டியது தானே? நானும் ஹெல்ப் பண்ணுவேனே? " என்றவாறு சகுந்தலாவுக்கு உதவ…

" நீ எனக்கு செய்யுற உதவினா… சீக்கிரம் கல்யாணத்துக்கு ஒத்துக்கோ… அது போதும்.எங்களுக்கும் ஆசை இருக்காதா? " என்று வினவியவாறே அவனுக்கும், விக்கிக்கும் தட்டு எடுத்து வைக்க…

அவனோ திகைத்து போய் நின்றான். பிறகு விக்கியின் உலுக்கலில் நினைவுக்கு வந்து அமைதியாக அமர்ந்துக் கொணாடான்.

அவனை ஒரு பார்வை பார்த்த மதி, 'இந்த சான்ஸ் கடவுளாக அமைத்துக் கொடுத்திருக்கிறார்.'என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, " ஆன்ட்டி… நீங்களும் உட்காருங்க… நமக்கு வேண்டியதை நாமளே பரிமாறிக் கொள்ளலாம்." என்றவன், அவருக்கு எல்லாவற்றையும் நகர்த்தி வைத்தான்.

" ஏன் ஆன்ட்டி… சந்தீப்புக்கு பொண்ணு பார்க்க வேண்டியது தானே…" என…

வாயருகே உணவை எடுத்துச் சென்ற சந்தீப், ஒரு நிமிடம் தயங்கி மதியைப் பார்த்தவன், பிறகு தோளைக் குலுக்கிக் கொண்டு உணவருந்த ஆரம்பித்தான்.

இத்தனை நாளாக மிஸ் செய்து இருந்த வீட்டு சாப்பாட்டில் இப்போது கவனம் செலுத்தினான். காது மட்டும், அவர்கள் இருவரின் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்க, கை அதன் போக்கில், வேலைப் பார்த்துக் கொண்டிருந்தது.

" என்னப்பா செய்றது கல்யாண பேச்சு எடுத்தவுடனே, பொண்ணு எல்லாம் பார்க்காதீங்க. நான் ஏற்கனவே பார்த்து விட்டேன், அப்படின்னு சொன்னான். பொண்ணு யாருன்னு சொல்லுடா? நாங்க போய் பேசுறோம் என்று சொன்னோம். நேரம் வரும் போது சொல்கிறேன் என்று எங்க வாயை அடைச்சுட்டான்." என்றவர் பெருமூச்சு விட…

" ஓ… சந்தீப் பொண்ணை பத்தி சொல்லவில்லை என்றால் என்ன நீங்களா கண்டுபிடிக்க மாட்டிங்களா?" என மதி வினவ…

" எனக்கு தெரிஞ்சு பொண்ணுங்க யார் கிட்டயும், அவன் அதிகமா பேசினது இல்லப்பா…"

" நீங்க சரியா கவனிக்கவில்லை என்று சொல்லுங்க… எல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணு தான்…" என மதி கூற…

" அப்படின்னா உனக்கு தெரியுமாப்பா?"

" மதி…" என்ற சந்தீப்பின் குரலை அலட்சியம் செய்து விட்டு‍, " எல்லாம் நம்ம பாவனா தான்." என சொல்லி முடித்தான் மதியமுதன்.

சகுந்தலா, நாதன் இருவருடைய முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி… " டேய் பைய்யா… இதை சொல்ல தான் உனக்கு இவ்வளவு தயக்கமா? நீ எங்க கிட்ட முதலிலே சொல்லியிருந்தா, இந்நேரம் உனக்கு கல்யாணம் முடிஞ்சு பேரப்பிள்ளைகளையே நாங்க பார்த்து இருப்போம். ஏன்னா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, நாங்க கல்யாணப் பேச்செடுத்ததே, பாவனாவை இந்த வீட்டு மருமகளாக்க எண்ணி தான்… " என சகுந்தலா கூறினார்.

" ஐயோ ! " என்று ஆனது சந்தீப்பிற்கு, "தான் மட்டும் அப்போதே சம்மதம் சொல்லிருந்தால், இந்நேரம் பாவனா எனது மனைவியாக இருந்திருப்பாள். விதுனை விரும்பியிருக்க மாட்டாள்.' என நினைத்தான்‌.

ஏனென்றால் விதுன், பாவனா காதல் பறவைகளாக சிறகடித்து வானில் பறந்து ஒரு வருடம் தான் ஆகிறது‌. எல்லாம் கடவுளுடைய விளையாட்டு… இன்னாருக்கு இன்னார் என்று அவர் எழுதி வைத்திருக்கிறார். இதில் இடையில் பாவனாவுடைய வாழ்க்கையில் ஒரு வடு… அது அவளது விதி போல…

அதற்குப் பிறகு சகுந்தலாவின் உற்சாகத்தை யாராலும் தடை செய்ய முடியவில்லை‌. "உடனே ஊருக்கு வந்து பெண் கேட்க வேண்டும் ." என கூறிக் கொண்டிருக்க…

"விதுன் கேஸ் முடியட்டும். அப்புறம் அங்கிள் இங்கேயே வந்துருவாங்க. அப்புறமா கேளுங்க." என்று சந்தீப் தடை செய்ய…

" அவ்வளவு நாளெல்லாம் காத்திருக்க முடியாது. நான் பரிமளாக் கிட்ட ஃபோன்ல பேசிக்கிறேன். எதுவா இருந்தாலும் சுபஸ்ய சீக்கிரம்னு சொல்லுவாங்க. இன்னைக்கே போன் செய்கிறேன்." என்று சகுந்தலா திட்டமிட…

" மா நாளைக்கு பண்ணுங்க. இன்னைக்கு வேண்டாம். அப்புறம் எதுவா இருந்தாலும் பவிக்கு சம்மதமானு கேட்டுக்கோங்க…" என்றவன் மீண்டும் தன் கவனத்தை உணவில் செலுத்தினான்.

"கல்யாணம் வேணாம் வேணாம் என்று சொல்லிட்டு, நல்ல நாள் எல்லாம் பார்க்கிறான். பாருங்களேன்." என்று தன் கணவரிடம் கூறிய சகுந்தலா, அதற்குள் திருமணத்தை எங்கு நடத்தலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார். "ஏங்க திருமணத்தை சேலத்தில் நடத்தலாமா?. அங்கு தான் பெரிய மண்டபம் கிடைக்கும். " என்றுக் கூற…

நாதனோ சரியென தலையசைக்க, சேலத்தில் எந்த மண்டபத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது வரைக்கும் திட்டமிட ஆரம்பித்து விட்டார்.

சந்தீப் மதியை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க…

மதியோ, சந்தீப்பை பார்த்து கண்ணடித்தவன், அவன் காதருகில் சென்று, "சீக்கிரம் உன் ரூட் கிளியர் ஆனா தான் என்னோட ரூட் கிளியர் ஆகும் பைய்யா." என சகுந்தலா மாதிரி பேசி காட்ட…

அவனை முறைத்துக் கொண்டே கை கழுவச் சென்றான் சந்தீப்.

மூவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, பாவனா விக்கிக்கு விடாமல் ஃபோன் அடித்துக் கொண்டே இருந்தாள். ஆனால் விக்கி எடுக்காமல் தவிர்த்து வந்தாள்.

அவள் எடுக்காமல் இருப்பதை கவனித்து, " யார்? " என்பது போல மதிப் பார்க்க‌…

ஃபோனை எடுத்து காண்பித்தாள்.

"பவியிடம் பேச வேண்டியது தானே…" என மதி வினவ…

" எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அவளிடம் எப்படி சொல்வது? " என்று கண்கள் கலங்க அவனைப் பார்த்துக் கூற…

" சரி விடு… நான் பேசிக் கொள்கிறேன்." என்ற மதி, விக்கியின் ஃபோனை வாங்கி ஆன் செய்தான்.

" ஹலோ பாவ்பாஜி… நாங்க சந்தீப் வீட்டில் இருக்கிறோம். நேரில் மீதி விஷயங்களை பேசிக் கொள்ளலாம்." என்றவன் ஃபோனை வைத்து விட…

பாவனா கவலையில் ஆழ்ந்தாள். தான் ஊருக்கு வராததால் விக்கி கோபமாக இருப்பதாக எண்ணிக் கொண்டாள். அதை மறப்பதற்காக தன்னுடைய வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்துக் கொண்டிருந்தாள்.

***************************
அதற்குப் பிறகு இவர்கள் திட்டமிட்டபடியே சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு, இரவு விக்கி வீட்டிற்கு சென்றவர்கள், மீண்டும் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் இவர்கள் எதிர்பார்த்த தகவல்கள் தான் கிடைக்கவில்லை .

மறுநாள் காலையில் சீக்கிரமாக எழுந்த விக்கி கீழே சென்று எல்லோரிடமும் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

"ஏதாவது அவர்களுக்கு தேவை இருக்கிறதா? அப்பாவிடம் எதுவும் சொல்ல வேண்டுமா? " என்று விசாரிக்க…

" எல்லாமே ஐயா சொல்லிட்டு தான் போயிருக்கிறார். எது வேண்டும் என்றாலும் கேசவ் சார் கிட்ட கேட்க சொன்னாரு. அவரும் வீட்டுக்கு தேவையான எல்லாம் செஞ்சு தந்துருவாருமா…"என்று சொல்ல…

" ஓகே ." என்றவள் அன்றைக்கான மெனுவை கூறி விட்டு கேசவ்விற்காக காத்திருந்தாள்.

அவர் வரவும் எஸ்டேட் மற்றும் வீட்டு கணக்கு வழக்குகளை எடுத்து வர சொன்னவள், எல்லாவற்றையும் நன்கு ஆராய்ந்தாள்.

கேசவனோ சிறு தவறு கூட செய்யாமல் கவனமாக இருந்தான். அவனுக்குத் தான் வேறு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு சம்பளம் வருகிறதே. அதனால் அவன் இங்கு கை எதுவும் வைத்ததில்லை.

இங்கே வேலைக்கு சேர்க்கும் போதே நம்பிக்கையோடு அவர்களுக்கு இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்து தான் அனுப்பினார். அதனால் கவனமாக எல்லாவற்றையும் கணக்கில் எழுதி பக்காவாக வைத்திருந்தான். காலையிலிருந்து அதிலேயே அவள் கவனத்தை செலுத்தினாள்.

சந்தீப்பும், மதியும் டயர்டா இருக்கு… ஈவினிங் சுத்தி பார்ப்போம். நைட்டு ஊருக்கு கிளம்பலாம் என்று கூறிக் கொண்டு, ரூமை மீண்டும் மீண்டும் தேடினார்கள். எங்கும் அவர்கள் தேடி வந்த பொருள் கிடைக்கவில்லை. இந்த பயணம் இவர்களுக்கு சற்று ஏமாற்றம் தான்… இதில் நடந்த ஒரே ஒரு நன்மை. பாவனா, சந்தீப் திருமண பேச்சை எடுத்தது தான்.

சகுந்தலா ஒரே பிடியாக நின்று பரிமளாவிற்கு ஃபோன் செய்து விட்டார்.

பரிமளாவிற்க்கும் ராஜனுக்கும் அவ்வளவு சந்தோசம்‌. சகுந்தலாவிடம் இருந்து ஃபோன் வந்ததிலிருந்து தலைக்கால் புரியவில்லை‌‌.

கொஞ்ச நாளாகவே தனது மகள் உள்ளுக்குள் எதையோ நினைத்து மறுகிக் கொண்டிருக்கிறாள். அது என்ன என்று தங்களிடம் கூற மறுக்கிறாளே என இருவரும் கவலைக் கொண்டிருக்க…

சகுந்தலா கூறிய விஷயம், இவர்களுக்கு பெருத்த நிம்மதியை தந்திருந்தது.

சகுந்தலா கூறியது இது தான், " பரிமளா… என் மகன், நம்ப பவியை விரும்புறான்.உனக்கு சம்மதம் தானே... நம்ம பவிக்கிட்டேயும், அவளோட விருப்பத்தைக் கேட்டுட்டு ஃபோன் பண்ணு… அடுத்த முகூர்த்தத்துல ஏற்பாடு பண்ணுவோம்." என்றார்.

அதைக் கேட்டதிலிருந்தே, ' ஒரு வேளை நம்ம பாவனாவும் சந்தீப்பை விரும்பியிருப்பாளோ… நம்மிடம் சொல்வதற்குத் தான் தயங்கி கொண்டிருக்கிறாளோ…' என்று எண்ணியவர்கள், பவி ஆஃபிஸிலிருந்து வரவும் கேட்க வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டனர்.

ஆனால் பாவனா ஆஃபீஸிலிருந்து திரும்பி வரும் போது எப்படி வரப் போகிறாள் என்பதை அப்போது அவர்கள் அறியவில்லை.

****************************

பாவனாவை எடிட்டர் கூப்பிடுவதாக ப்யூன் வந்து கூறவும் ,யோசனையோடு அவருடைய அறைக்குச் சென்றவள், " மே ஐ கம் இன் சார்." என

" யா… கம் இன்." என்றவர், உள்ளே நுழைந்த பாவனாவிடம், " டேக் யூவர் சீட் பாவனா…" என…

அவரைப் பார்த்துக் கொண்டே பாவனா அமர… " கங்கிராட்ஸ் பாவனா… நாங்க உனக்கு கொடுத்த வேலையை சூப்பரா செஞ்சிருக்க… இந்த ஆர்ட்டிக்கள் உண்மையிலேயே சூப்பர். நல்லா ரீச்சாயிருக்கு. நம்ம இமெயிலிலுக்கு பாராட்டி நிறைய கமெண்ட்ஸ் வந்திட்டுருக்கு."

" தேங்க் யூ சோ மச் சார்."

"ஐ ரியல்லி அப்ரிஷேட் யூ. இப்படி ஒரு வ்யூ ஆஃப் பாயின்ட்ட எதிர்ப்பார்க்கவில்லை‌. நைஸ்‌..‌. ஆஸ் யூஸுவலா பெண்ணியம், பெண்ணுரிமை, என்று அதை மட்டும் பேசிட்டு இல்லாமல், அவர்கள் செய்யும் தவறை சுட்டிக் காட்டியிருக்க. உன்னை அதுக்கே பாராட்டணும்." என்றார்.

அவள் ரெடி செய்த ஆர்ட்டிகள் டப்மாஷ் பற்றியது… " டப்மாஷ் செய்வது ஒன்னும் தவறில்லை என்ற மனப்பக்குவம் இப்பொழுது பரவலாக பரவிக் கொண்டிருக்கிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை, ஏன் வயதானவர்கள் கூட டப்மாஷ் செய்துக் கொண்டியிருக்கிறார்கள்.

அதை பார்ப்பதற்கும் ரசிக்கும் படியாக தான் இருக்கிறது. ஆனால் குழந்தைகளையும், செய்ய வைப்பது தான் வருத்தத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. அந்த குழந்தைகளுக்கு அவர்கள் பேசும் வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாமல் அவர்கள் செய்யும் போது வேதனையாக இருக்கிறது‌.

அந்த குழந்தையோட பெற்றவர்கள், சிறு குழந்தைகளை டப்மாஷ் செய்ய வைப்பதோடு மட்டும் அல்லாமல், பேஸ்புக், ட்விட்டர் எல்லாம் போடுவதைப் பார்த்து வேதனையாக இருக்கிறது என்றவள், அதைப் பற்றி தனது கருத்துக்களையும் வருத்தங்களையும் அழுத்தமாக பதிவு செய்திருந்தாள்‌.

இந்த ஒரு வாரமாக மக்கள் எல்லோரிடமும் கருத்துக்களைக் கேட்டு, அவரது கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறாள். இவள் செய்ததை பார்த்தாவது, இனிவரும் பெற்றோர்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகளை இந்த செயல்களை செய்ய விடாமல் தடுத்தால் இந்த சமுதாயம் முன்னேற்றம் அடையும்… " என எழுதியிருக்க…

அதற்கு நிறைய வரவேற்புகள் அதைப் பார்த்து விட்டுத் தான் எடிட்டர், பாவனாவை அழைத்து பாராட்டினார்.

அடுத்ததாக அவளிடம் ஒரு முக்கிய வேலையையும் கொடுத்தார்.

" பாவனா… நெக்ஸ்ட் உனக்கு தரப்போற வேலை, விதுன்குமாரை பற்றியது
அல்ரெடி உனக்கு விதுன்குமார் இறந்த விஷயம் தெரியும் தானே… அவரது மரணத்தில் மர்மம் இருப்பது தெரியும் தானே. நீ தானே அது சம்பந்தமான பேட்டி எல்லாம் எடுத்துட்டு வந்த… இப்ப நெக்ஸ்ட் வீக் அவருக்கு பிறந்தநாள் வருது தெரியும் அல்லவா" என்றவர்
அவளின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் மீண்டும் பேச ஆரம்பித்தார்.

" அன்னைக்கு அவரைப்பற்றி நம்மளுடைய பத்திரிக்கையில் ஒரு ஆர்ட்டிகள் வரணும். நீ அவருக்கு நெய்பர் என்ற காரணத்தாலும், உனக்கு அவரைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கும் என்பதாலும், உனக்கு இந்த வாய்ப்பு கொடுக்கிறேன். நீ செய்ய வேண்டியது அவருடைய குடும்ப சூழல், சினிமாவுக்கு வந்த காரணம், சினிமாவில் அவர் சாதித்த சாதனைகள், அவருடைய இறப்பில் உள்ள மர்மம் எல்லாவற்றையும் பற்றி ரெடி பண்ணிடு. உனக்கு ஒன் வீக் டைம் போதும் தானே. அவர் பிறந்த நாளன்று, நம்ம இந்த ஆர்ட்டிக்களை பப்ளிஷ் பண்ண வேண்டும். " என்று கூற…

அந்த பிறந்தநாள் என்ற வார்த்தை அவளை என்னமோ செய்தது, அவரிடம் அனிச்சை செயலாக , "ஓகே சார்." என்றவள் தனது இடத்திற்கு வந்து அமர்ந்து கொண்டாள்.

அவளது மனமோ படபடவென அடித்துக் கொண்டது. ஏதோ ஒனறு அவளது மனதிற்கு தவறாகப் பட்டது. என்னவென்று யோசிக்க முயன்றால், பிறந்தநாள் என்ற வார்த்தையே அவளுக்குள் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

முயன்று யோசித்தால்,அவளுக்கு விக்கியின் பிறந்தநாளை ஞாபகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து விதுனுடன் பழகிய ஞாபகம் வந்தது. அடுத்து தனது பிறந்த நாள் ஞாபகம் வர… அதைத் தொடர்ந்து விதுன் பேசியது காதில் ஒலிக்க, நெற்றியில் வியர்வை சுரக்க, இதயம் வேகமாக துடிக்க மயங்கி விழுந்தாள் விகாஷினி.