• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
வார இறுதி விடுமுறை இரண்டு நாட்களும் ஆழியின் திட்டப்படி புனே-ஐ சுற்றிப் பார்ப்பதிலேயே கழித்தனர். அதிலும் சனிவர்வாடா அரண்மனை மற்றும் லால் மஹால் இரண்டும் இரண்டு விதமாக மனதைக் கவர்ந்திழுத்த கலையுணர்வு நிறைந்த கட்டிடங்கள்...

லோணோவாலா நீரருவி மற்றும் அணை, கர்லா குடைவரை குகை என மகாராட்டிர மாநிலத்தின் அழகை ரசிக்க அவர்களுக்கு இரண்டு நாட்கள் போதவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சுற்றித் திரிந்த இரண்டு நாட்களும் ஆழியும், அம்புதியும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவே இல்லை. மற்றவர்கள் கவனியாத வகையில் தங்களை ஒதுக்கிக் கொண்டனர். அது எவர் கண்ணுக்கு பட்டதோ இல்லேயோ ஈஸ்வரியின் கண்களிலிருந்து தப்பவில்லை. இருவரையும் மட்டுமே கவனிப்பதையே தன் பணியாக கொண்டிருந்தவளுக்கு இது கண்ணில் படாமல் போகுமா என்ன!

அலைந்து திரிந்து இல்லம் திரும்ப இரவு பதினோரு மணி ஆகியிருந்தது. அதன் பிறகு தான் விடுதி செல்வதாகக் கூறி ஈஸ்வரி கிளம்பி நிற்க, ஞானத்திற்கும் வெங்கடாவிற்கும் அந்த நேரத்தில் அவளை தனியே அனுப்ப மனமே இல்லை.

வாடகை தானுந்து பதிவு செய்வதாகவும், அது தனக்கு பாதுகாப்பு தான் என்று அவள் எடுத்துக் கூறியும் இரவு நேரத்தில் அனுப்ப மறுத்தனர் அவளுக்கும் அன்னை தந்தையாக விளங்கியவர்கள்.

"நைட்டே போகனுமா என்ன!" என்று ஈஸ்வரியைப் பார்ப்பதைத் தவிர்த்து அவளிடம் வினவினான் அம்புதி.

"கொஞ்சம் வேலை இருக்கு" என்றாள் அவளும் எவருக்கோ பதில் கூறுவது போல்.

"காலம்பர சீக்கிரம் கிளம்பி போய் பார்த்துகலாமே டா!" என்றார் ஞானம்.

அவ்வில்லத்தில் ஞானத்தை எதிர்த்துப் பேசக் கூடியவள் ஈஸ்வரி ஒருத்தியே... "சீக்கிரமாலாம் போக முடியாது பெரியப்பா... காலைல இங்கிருந்து போனா நேரே காலேஜ் தான் போகனும்" என்றாள் முகத்தை சுழித்துக் கொண்டு...

"அப்படி என்ன முக்கியமான வேலை? மொதோவே சொல்லிருக்கலாம்லே டி!" என்று வெங்கடா ஒருபுறம் அன்னையாய் கண்டித்தார்.

"நான் இவ்வளோ லேட் ஆகும்னு நெனைக்கலே பெரியம்மா..." என்று சிணுங்கியவள், "நான் இந்த நோட்ஸ் எடுக்குற வேலையை முடிச்சிட்டே வந்திருக்கலாம் போல" என்று தன்னைத் தானே திட்டுக் கொள்ளவும் தவறவில்லை...

"அதை தான் உன் அக்கா கூட சேர்ந்து செய்யலாமே! இல்லேனா மாமாகிட்ட கேட்டா அவங்களும் உனக்கு உதவிக்கு வர போறாங்க" என்று ஞானம் தன் இளைய மகளுக்கு யோசனை கூறினார்.

ஈஸ்வரியும் ஆழியும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ள, அம்புதிக்குமே சற்று அதிர்ச்சி தான். ஆழி மெதுவாக, "ஆனா அவ சப்ஜெக்ட் எனக்கு எப்படி தெரியும்?" என்றாள் தயக்கமாக...

தான் மட்டும் இந்த பணியிலிருந்து கழன்று கொள்ள நினைத்தாளோ என்னவோ! கூறிவிட்டு அம்புதியின் நுழைக்கும் பார்வையையும் பரிசாகப் பெற்றுக் கொண்டாள்.

பதிலுக்கு ஞானத்தின் குரல் கடுமையாக ஒலித்திட பார்வை அவர் மீது பதிந்தது... "இப்போ உன்னால உதவ முடியாதுனு சொல்றே! அதானே!" என்றார்.

அடுத்த நிமிடம் வெள்ளை காகிதம், குறிப்பு எடுக்க எழுதுகோல் சகிதம் வந்து அமர்ந்திருந்தாள் ஆழி. அம்புதியும் அவளது பயத்தை அறிந்திடாமல் இல்லை. அன்று அந்த நொடி ஆழியைப் பற்றி ஒரு விடயம் நன்றாக புரிந்து கொண்டான்.

இவ்வுலகில் அவள் அதிக பயம் கொண்டதும் அவளது தந்தையிடம் தான்... அதிக பாசம் கொண்டதும் அவளது தந்தையிடம் தான்... பாசம் என்று கூறிய பிறகு அங்கே பயம் என்ற சொல்லுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுகிறது... அப்படி என்றால் அவள் அவளது தந்தையின் மீது கொண்டிருப்பது மரியாதை...

அதேபோல் தந்தைக்குப் பின் அவள் பேசா மடந்தையாய் மாறி நிற்பது தன் முன்னால் மட்டும் தான். எனில் அது உண்மையில் பயமா இல்லை மரியாதையா? என்ற கேள்வி எழுந்தது அவனுள்.

இந்த கேள்வி அவனுள் எழாமல் இருந்தால் தான் ஆச்சரியமே!!! திருமணத்திற்கு முன்புவரை அம்புதியைக் கண்டு ஆழி ஓடி ஒழியாத நாட்களே இல்லை எனலாம். அது தான் அவன் அவள் மீது கொண்ட கோபத்திற்கும் காரணம்...

'இப்போது அதாவது தன் மனைவி ஆன பின்பும் அந்த பயம் இருக்கிறதா?' என்ற கேள்வி எழும்போதே 'இப்போது பார்த்தால் பயப்படுவது போலவா இருக்கிறாள்!' என்று அதற்கான பதிலும் சேர்ந்தே தான் அவனுள் எழுந்தது...

எந்த கேள்விக்கும் பதில் தெரியவில்லை என்றபோதும், மெல்லிய சிரிப்பு தோன்றியது அவன் இதழ்களில். அதே நேரம் 'இதுவரை பயம் போகவில்லை என்றாலும் இனிமேல் விரட்டிவிட வேண்டும்' என்ற முடிவையும் எடுத்துக் கொண்டான்.

இங்கே ஈஸ்வரியோ ஞானத்தின் மேல் துளியும் பயமற்றவளாய், "ஆனா மார்னிங் எப்படி காலேஜ் போவேணாம்!!! சொன்னா புரிஞ்சுக்கோங்க பெரியப்பா" என்றாள் அதிகாரமாய், செல்லப்பிள்ளை என்ற உரிமையில்.

"மாமா கூட போ... உன்னை ட்ராப் பண்ணிட்டு அவங்க போகட்டும்" என்று ஆழி உரைக்கவே, ஈஸ்வரிக்கே அதிர்ச்சி தான்... 'ஆழியா இவ்வாறு உரைத்தது என்று'... ஆனால் இரு பெண்களுக்கும் அம்புதியை திரும்பிப் பார்க்கும் தைரியம் தான் இல்லை..‌

என்னதான் கண்டிப்பு மிகுந்த தந்தையாக இருந்த போதும் மகளின் மேலும் அதீத பாசம் கொண்ட தந்தை மனம் தன் மகளைப் பார்த்து, 'பின்னே நீ எப்படி போவே!' என்றது கண்களால்.

அதனை புரிந்து கொண்ட ஆழியும், "நான் எப்பவும் போல மெட்ரோலேயே போயிடுவேன் ப்பா... எனக்கு இங்கே இருந்து காலேஜ் பக்கம் தான். ஒரே ட்ரெய்ன் தான்... அவளுக்கு தான் தூரம்... மாமா அவளை விட்டுட்டு வரட்டும்" என்று தந்தையை மட்டும் பார்த்து பேசிக் கொண்டிருந்தாள், அவள் அபு அவளை முறைத்துக் கொண்டு தான் இருப்பான் என்று அறிந்திருந்த போதும்...

"மாமா- வுக்கு ஓகே-னா எனக்கும் ஓகே" என்று ஈஸ்வரியும் சம்மதம் கூறிடவே, மற்றவர் மனதில் நிம்மதி அம்புதியைத் தவிர...

அம்புதியின் கோபம் அனைத்தும் ஆழியின் மேல் தான். எனவே ஈஸ்வரியிடம், "எதாவது டவுட் இருந்தா கேளு... ரூம்ல முழிச்சு தான் இருப்பேன்" என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான்.

அதன் பிறகு அக்காள் தங்கை இருவருமாக இணைந்து படிப்பை மட்டும் கவனிக்கத் தொடங்கினர். தங்கள் சந்தேகங்களை இணையத்திலும், இலவச pdf புத்தக தரவிரக்கங்கள் மூலமும் தீர்த்துக் கொண்டனர்.

இடையே ஒருமுறை அம்புதி இருவருக்கும் உடனடி குழம்பி தயாரித்து, பெண்கள் அருகே வைத்துவிட்டு சென்றான். ஆழி அவனை நிமிர்ந்து பார்த்திட, அவனோ எவர் மீதும் பார்வை பதித்திடவில்லை. அவனுக்கும் கூட சேர்த்து தயாரித்திருப்பான் போல... அவன் கையிலும் ஒரு கோப்பை இருக்க, மெல்லிய சிரிப்பொன்று வந்து சென்றது கொண்டவள் முகத்தில்.

அனைத்தும் முடிந்து நேரங்காட்டியைக் காண அதன் சிறிய அம்பு இரவு இரண்டைத் தொட்டிருந்தது.

ஈஸ்வரியை படுக்கைக்கு அனுப்பி வைத்துவிட்டு ஆழி தன் அறை நுழைய, அங்கே அம்புதியும் அவனது தேர்விற்கு படித்துக் கொண்டிருந்தான். அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தவன், உள்ளே நுழைந்தவள் உட்கார கூட நேரம் கொடுக்காமல் "மனுஷங்க மனசே புருஞ்சிக்கவே முடியாதா உன்னாலே! என்ன எதிர்பார்க்கிறே எங்க ரெண்டு பேர் கிட்டேயும்" என்று தொடங்கினான் அம்புதி.

'சண்டை போடுறதுக்காகவே காஃபி-லாம் குடிச்சி தெம்பேத்தி, கண் விழிச்சி கிடக்கிறார் போலயே!' என்று மனதிற்குள் நொந்து கொண்டு, வெகு இயல்பாக,

"தூக்கம் வருது... ப்ளீஸ்... தூங்கட்டா?" என்றுவிட்டு, அவனது அனுமதிக்கு கூட காத்திராமல் ஒருகலித்து படுத்துக் கொண்டாள்.

"ஏய்... எந்திரி டி... இன்னொரு வாட்டி தூக்கம் வருதுன்னு சொன்னே, ஐஸ் தண்ணிய மூஞ்சில ஊத்திடுவேன்... எழுந்து உட்கார்" என்றான் அதிகாரமாக...

அங்கிருக்கும் குளிருக்கு குழாய் தண்ணியை ஊற்றினாலே பனிகட்டியைப் போல் தான் இருக்கும்... இதில் பனியூட்டப்பட்ட நீர் என்றால் சொல்லவா வேண்டும்!

விழுந்தடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவள் முகத்தில் அத்தனை அசதி... அதனையும் மீறிய பயம் கண்களில்... அவன் மீதான பயம்... அனைத்தையும் கவனித்த போதிலும் கூட சண்டையைத் தொடர்ந்தான் அம்புதி.

"ரெண்டு நாள் முன்னாடி தானே சொன்னேன்! அவ என்னை நெருங்க நீ அலோவ் பண்ண கூடாதுனு... சும்மா ஒரண்டை இழுக்க பேசினதே எல்லாம் மனசுலே வெச்சுகிட்டு லூசு மாதிரி ஏதாவது பண்ணினே கொன்னுடுவேன்! எப்பவும் ஒரே மாதிரி வாயால பதில் பேசிட்டு இருக்கமாட்டேன்... புரியுதா?" என்றவனின் வார்த்தைகள் இரட்டை அர்த்தமெல்லாம் எதுவும் இல்லை...

ஒற்றை அர்த்தம் தான். அத்தனை கோபம் அவன் முகத்தில்... விட்டால் அப்போதே அடித்து விடும் அளவிற்கு கடும் சினத்தில் இருந்தான் அவன். ஆழி எந்த பக்கமும் தலையசைத்தாள் இல்லை. அதில் வேறு தனிப்பட்ட கோபம் வெளிப்பட மிரட்டல் குரலில், "என்ன? புரியுதா இல்லேயா!" என்றான் அவன்.

உடனடியாக 'ஆம்' என்பது போல் தலையை அசைத்தவள், "இப்போ தூங்கலாமா?" என்றாள் பௌவியமாக.

'எவ்ளோ பயம் இருந்தாலும் கூட சேட்டை மட்டும் குறையுதா பாரு!' என்று மனதிற்குள் மட்டும் கடிந்து கொண்டவன், "இப்போ செய்து வெச்ச காரியத்துக்கு பதில் சொல்லிட்டு அப்பறம் தூங்கு" என்றான் மூக்கு விடைக்க...

என்ன யோசித்தபோதும், அவன் பேசியதில் பாதிக்கு மேல் கவனமே இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு எந்த யோசனையும் வரவில்லை. மாறாக தூக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டிருந்தது.

அம்புதியை பாவம் போல் பார்த்தாள் அவன் அன்பி. அதில் ஓரளவு மனம் இளகிய போதும், விடிந்ததும் நடக்கவிருக்கும் ஈஸ்வரியுடனான பயணத்தை நினைத்து மீண்டும் விறைப்பு கொண்டான்... அவள் கேட்காத கேள்விக்கு தானாவே பதிலும் கூறினான்...

ஒற்றை புருவம் உயர்த்தி, "காலைலே அவ என் கூட வர கூடாது... அதுக்கு ஏதாவது வழி சொல்லிட்டு தூங்கு" என்று உறுதியாக கூறிவிட்டான்.

கன்னங்களை கைகளால் தாங்கி, ஒரு கண் மாற்றி ஒரு கண் மூடித் திறந்து அதற்கு ஏற்றார்போல் கருவிழிகளையும் நகர்த்தி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவள், சற்று நேரத்தில் இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு முன்னைவிட அதி தீவிரமாக யோசிக்கத் தொடங்கினாள்.

அவளை கவனியாதது போல் கவனித்துக் கொண்டிருந்த அம்புதிக்கு சிரிப்பு தாளவில்லை அத்தனை கோபத்திலும்... "ப்ராடு... ஐடியா கேட்டா யோசிக்கிற லட்சனத்தை பாரு! தூங்கு மூஞ்சி!" என்று ரசனையாக முனுமுனுத்தவன், 'இவளே! என்ன செய்தால் தகும்!' என மனதிற்குள் திட்டம் தீட்டத் தொடங்கினான்.

யோசனையில் மூழ்கி இருப்பது போல் காண்பித்துக் கொண்டு உறங்குபவளை, அதிரடி இதழணைப்புக் கொடுத்து விழிக்கிறாளா! இல்லையா! என்று சோதித்துப் பார்க்க தூண்டியது அவன் வயது. ஆனால் மனமோ 'அவளுக்கு சோதனை வைப்பதாக நினைத்து உன்னை நீயே சோதித்துக் கொள்ளாதே!' என்று உண்மையை உரைக்க அந்த யோசனையை கைவிட்டான்.

மீண்டும் யோசிக்கத் தொடங்கினான் தன் மனையாளை எழுப்புவது எப்படி என்று... எதற்காகவோ ஆரம்பித்து எங்கேயோ பாதை மாறி சென்று கொண்டிருக்கும் தன் சிந்தனைகளை நினைத்து தன்னைத் தானே அதிசயித்தும் கொண்டான். 'என்ன பெண் இவள்!!! அவளுக்கு ஏற்றார் போல் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி கொண்டிருக்கிறாள்!' என்று...

பெண்ணவளின் கார்குழல் கண்ணில் பட, மொத்தமாக அள்ளி குதிரைவால் செய்திருந்த அவளது கூந்தல் நுனியை கொஞ்சமாக எடுத்து, அவளது மூக்கில் திணிக்க முற்படுகையில் காரிகையவளின் குரல் மெல்லமாய் ஒலித்தது.

தன் கண்ணாட்டியின் ஒவ்வொரு வார்த்தையும் அம்புதி அதிர்ச்சியடையச் செய்திருந்தது. அவளது கூற்றுகள் உளறலாகத் தோன்றிய போதும், அவளது மனதிற்குள் இத்தனை சுமைகள் இருக்கின்றதா என்று அம்புதியை வருந்தவும் வைத்திருந்தது...

அப்படி என்ன தான் இருக்கிறது ஆழியின் மனதில்???

காதல் கரை எட்டுமா!!!
 
Top