• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
தவணை செலுத்த வந்த அம்புதிக்கோ பல குளறுபடிகள். நேரில் வரத் தேவையில்லை என்றபோதும் கூட ஈஸ்வரியை தவிர்க்க ஒரு பொய்யைக் கூறிக் கொண்டு, மணிக்கணக்காய் காத்திருந்து பணம் செலுத்தச் செல்ல அவனது தவணைகள் முன்னமே இணையவழி கட்டணம் செலுத்துதல் முறையில் செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறினர்...

அம்புதிக்கு எந்த வித விளக்கமும் தேவைப்படவில்லை இது ஈஸ்வரியின் செயல் என்று எடுத்துரைக்க... கண் மண் தெரியாத அளவு கோபம் ஏறியது அவன் மூளைக்குள்...

'இவளிடம் எத்தனை முறை சொல்லுவது! என்னை பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும்... என் மேற்படிப்பிற்கு பணம் செலுத்த இவள் யார்! ஏன் இப்படிச் செய்கிறாள்! எனக்கு இதில் விருப்பமில்லை என்று கூறியும் ஏன் கேட்கமாட்டேன் என்கிறாள்!' என்று ஈஸ்வரியை மனதிற்குள் திட்டித் தீர்த்தபடி பல சிந்தனைகளுடனும், கோபத்துடனும் தான் இல்லம் திரும்பினான்.

அம்புதி தன் இல்லம் நுழைய அங்கே யுவதிகள் இருவரும் கல்லூரி சென்றிருந்தனர். முக்கியமாக ஈஸ்வரி அங்கே இல்லாதது அவளது நல்ல நேரமோ! கெட்ட நேரமோ! இருந்திருந்தாள் என்றால் இன்றே அவளது பித்து வேலைக்கும், பிதற்றல்களுக்கும் முடிவு கட்டியிருப்பான் அம்புதி...

அந்த நேரத்தில் அவனை அங்கே எதிர்பார்த்திராத வெங்கடாவிற்கு சற்றே பதற்றம். 'பணம் செலுத்திவிட்டு நேரே தன் பணிக்குச் சென்றிடுவேன்' என்று உரைத்து விட்டுச் சென்றவன், கடும் கோபத்துடன் வாயிலில் வந்து நிற்க, என்னவோ! ஏதோ! என்று பயம் கொண்டார்.

விடுப்பு எடுத்துக் கொண்டதாக கூறிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தவன், அறை மணி நேரம் கழித்து அறையைவிட்டு இயல்பாக வெளியே வந்தான். அவனது சந்தேகம் அவனை அமைதியாக அறையில் அடங்கிக் கிடக்க விடவில்லை. உண்மையை அறிந்துகொள்ள வேண்டி வெளியே செல்ல நினைத்தான்.

ஞானம் கோபத்தின் காரணம் என்னவென்று விசாரிக்க, வாகன நெரிசல் காரணமாக அருகிலிருந்த ஓட்டுனருடன் வாய்ச்சண்டை என்று பொய் உரைத்தான். மேலும் சிறு வேலை இருப்பதாகக் கூறி அப்போதே புறப்பட்டு சென்றுவிட்டான்.

கல்லூரி வந்து சேர்ந்த ஆழிக்கோ ஈஸ்வரியைப் பற்றிய சிந்தனைகள் தான் மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. இதுவரை தங்கையிடம் சத்தமிட்டு கூட பேசியிராதவள், கடந்த இரண்டு நாட்களில் ஈஸ்வரியை அதிகமாகவே தான் மிரட்டிவிட்டாள்.

ஈஸ்வரியைப் பற்றிய சிந்தனைகள் காலை நடந்த சம்பவத்தை ஆழிக்கு நினைவூட்டிட, நினைவளை சுழற்சிக்குள் மூழ்கிப் போனாள்.

அம்புதி ஈஸ்வரியை அழைக்காமல் சென்றதில் ஈஸ்வரிக்கு வருத்தமோ இல்லேயோ, ஆழிக்கு நிறைந்த வருத்தமே! அதுவும் அவள் முகத்தில் தெரியவே ஈஸ்வரி அவளை விசித்திரமாய் பார்த்தாள்.

அவளது பார்வைக்கான பொருள் புரிந்த போதும், அதனை சட்டை செய்யாமல், "சரி உனக்கு டாக்ஸி புக் பண்றேன்... ஸேஃபா போயிடுவே தானே!" என்றாள் தமக்கைக்கான பொறுப்புணர்வுடன்.

"மாமா கிளம்புறதுக்கு முன்னமே நான் டாக்ஸி புக் பண்ணிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன்" என்றாள் உனக்கு நான் சளைத்தவள் இல்லை என்ற பாணியில்.

"சரி ஓகே. பார்த்து போ... போயிட்டு கால் பண்ணு... எனக்கு இல்லாட்டாலும், அப்பாவுக்கு அல்லது அபுவுக்கு கால் பண்ணு" என்று அப்போதும் வெகு இயல்பாகவே கூறிடவே, மீண்டும் அதிசயித்து நின்றது ஈஸ்வரி தான்.

'எந்த பெண்ணும் செய்யத் துணியாத காரியத்தை இவள் எப்படி இவ்வளவு இயல்பாக செய்கிறாள்.' என்ற வியப்பு இருந்தபோதும், சற்றே கடுப்புடன்

"ஆனாலும் உனக்கு தைரியம் அதிகம் தான். என்ன திருடன் கையில் சாவிய கொடுத்து பொக்கிஷத்தை பத்திர படுத்துறதா நெனப்பா!" என்றாள் ஈஸ்வரி.

"உங்க ரெண்டு பேர்ல யாரை திருடன்னு சொல்றே!" என்ற ஆழியின் நிதானக் குரலில் மீண்டும் வாயடைத்து நின்றது ஈஸ்வரி தான்.

அன்று காலை வெங்கடேஸ்வரி அடுக்களை பக்கம் வராமல் இருந்தது அக்காள் தங்கை இருவருக்குமே வசதியாகிவிட, ஈஸ்வரி மனம் திறக்கத் தொடங்கினாள்.

"மாமா மாதிரி பெர்ஸனை கல்யாணம் பண்ணிட்டு, லைஃபே என்ஜாய் பண்றதை விட்டுட்டு சும்மா சும்மா சண்டை போட்டுட்டு இருக்காதே! சந்தோஷமா இரு... உனக்காக இல்லேனாலும் என்னை உண்மையா விரும்பின என் அம்புதி மாமாவுக்காகனாலும் சந்தோஷமா இரு" என்று சாபம் போல் கூறினாள்.

"அவர் உன்னை உண்மையா விரும்பினார்னு இப்போ தான் தெரியுதா? ஒரு பொருள் நம்ம கைக்கு கிடைத்தாத போது தான் அதோட வேல்யூ தெரியுதுல!" என்றிட ஈஸ்வரி ஆழியின் மேல் கள்ளம் நிறைந்த பார்வையைச் செலுத்தினாள்.

அவளது பார்வையில் தமக்கையவளுக்கு எவ்வளவு தூரம் உண்மை தெரியும் என்ற அச்சமும் புலப்படவே, "நீ என்னவெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறேயோ அது எல்லாமே எனக்குத் தெரியும்" என்று தங்கையவளுக்கு வேண்டிய பதிலையும் உரைத்தாள்.

"உன் மனசுலே காதலே இல்லாம அபு கிட்ட ப்ரொப்போஸ் பண்ணினதும் தெரியும்... கிடைச்ச வரத்தை ஆடம்பரத்துக்காக நீ கை நழுவத் தயாரா இருந்ததும் தெரியும்" என்றிட ஈஸ்வரியின் கண்கள் மிரட்சியில் மிளிர்ந்தது.

பிரம்மை பிடித்த நிலையில் நின்றிருந்தாள் இப்போது. தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்று நினைத்திருந்த விடயங்கள் அனைத்தையும் ஆழியின் வாய்மொழியாக கேட்க நேர்ந்திட அப்படி ஒரு அதிர்ச்சி. அவளை மீண்டும் நிகழ்விற்கு கொண்டு வந்தது ஆழியின் குரல்,

"எனக்கு தெரிந்த உண்மை இன்னும் மாமாவுக்கு தெரியாது. சொல்ல வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிடாதே! உன்னை அவர் எந்த உயரத்துல வெச்சிருக்காரோ அதே உயரத்துலேயே இருக்க முயற்சி பண்ணு... தேவையில்லாத காரியங்களை செய்து தாழ்ந்து போகாதே...

இதை இப்பவும் என் தங்கச்சியா நெனச்சு சொல்லலே... என் அபுவோட முதல் காதலா நெனச்சு தான் சொல்றேன். முதல் காதலிக்கும் முன்னால் காதலிக்கும் பெரிய வித்தியாசமே உண்டு. முதல் காதலுக்கும், காதலிக்கும் ஆண்கள் மனசுல தனி இடம் எப்பவுமே இருக்கும். அதை உன் அழுக்கு படிந்த எண்ணங்களால முன்னால் காதலியா மாத்திக்காதே!" என்று தான் சொல்ல வந்ததை தெளிவாகவும், அதேநேரம் கடுமை இல்லாமலும் கூறிச் சென்றுவிட்டாள்.


(அபு பாடிய முன்னாள் காதலி வேறு. ஆழி கூறும் முன்னால் காதலி வேறு. ஆழி குறிப்பிடும் (ex girlfriend) முன்னால் காதலியாகப்பட்டவள் வெறுத்து ஒதுக்கப்பட்டவள். அவள் ஒருபோதும் தான் விட்டுச் சென்ற இடத்தை நல்ல விதமாக நிரப்பக் கொள்ள முடியாது).

'ச்சே கொஞ்சம் பொறுமையாவே சொல்லியிருக்கலாம்... தேவையில்லாம பேசி அவளை ஹர்ட் பண்ணிடேன்' என்று தங்கைக்காக தன்னைத் தானே திட்டிக் கொண்டவள், மனம் கேளாது தங்கைக்கு அழைப்பு விடுத்தாள், கல்லூரி வளாகத்தில் இருந்து.

அழைப்பு ஏற்கப்பட்ட போதும் மறுமுனை எந்த பதிலும் இல்லாமல் அமைதியாக இருக்க, ஆழியே ஆரம்பித்தாள் "ஈஷ்... காலேஜ் ரீச் ஆகிட்டேயா?"

"ம்ம்ம்"

"அப்பாகிட்ட ஃபோன் பண்ணி சொல்லிடு!" என்றதற்கு மறுபுறம் பேச்சு சத்தம் ஏதும் இல்லை என்றவுடன், பதில் ஊகித்த ஆழியே, "சொல்லிட்டேயா?" என்றாள்.

அதற்கும் "ம்ம்ம்" என்றே வந்தது.

இளையவளின் ஒற்றை மொழி ஆழியை சற்றே வருத்தம் கொள்ளச் செய்தது. அடுத்து என்ன பேசுவது என்றும் தெரியவில்லை. ஆனால் மனமிரங்கி கூட மன்னிப்பு மட்டும் கேட்டுவிடக் கூடாது அல்லது வழங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் ஆழி.

வைக்கிறேன் என்று கூட உரைக்காமல் அடுத்த நிமிடமே துண்டித்திருந்தாள் ஈஸ்வரி. அவளது இச்செயலே உரைத்தது ஆழியின் மேல் எவ்வளவு கோபத்தில் இருக்கிறாள் என்று... ஆழிக்கு தான் சலிப்பாக இருந்தது.

அதே சிந்தனையோடு வகுப்பறை செல்ல, அது சரியாக வேந்தனின் பாடவேளையில் தன் வேலையைக் காண்பித்திருந்தது. ஆழியின் கவனம் வகுப்பில் இல்லாததை கவனித்தவன், அவளது ஆய்வறிக்கை ஏடை எடுத்துப் பார்க்க, அதில் முதல் நாள் எழுத வேண்டிய வரைய வேண்டிய அறிக்கைகள் எதுவுமே எழுதப்படவே இல்லை.

'இத்தனை நாள் காத்திருப்பிற்கு கிடைத்தது வாய்ப்பு' என்று எண்ணினானோ என்னவோ, கச்சிதமாக அதனை பயன்படுத்திக் கொண்டான். அடுத்த நிமிடமே "அவுட்" என்று கூறி ஆழியின் ஆய்வறிக்கை புத்தகத்தை மேசையின் மேல் தூக்கி எறிந்தான்.

ஆழியும் மன்னிப்பு வேண்டாது, தன்னிலை விளக்கம் எதுவும் கூறாது, மறுமுறை இப்படி நடக்காது என்ற கோரிக்கையும் வைக்காது அமைதியாக வெளியேறியிருந்தாள். தலை கவிழ்ந்த படியே வெளியே செல்லும் தன் தோழியைக் கண்டு ஸ்வாதிக்கும் இரக்கம் ஏற்பட, அவளையே விழி எடுக்காது பார்த்திருந்தாள்.

"என்ன! உனக்கும் அவ கூட வெளியே போகனுமா?" என்ற வேந்தனின் கடுஞ்சொற்களில், அவன் புறம் திரும்பி 'இல்லை' என வேகமாக தலையசைத்திட, "வேலைய பாரு" என்று சிடுசிடுத்தான்.

மேலும் ஆழி வெளியேறிச் செல்வதைப் பார்த்து குரூர புன்னகையுடன் கண்டு மகிழ்ந்தான்.

ஸ்வாதியோ அப்போதைக்கு தலையைக் கவிழ்ந்து கொண்ட போதும் அவ்வபோது வேந்தனின் இந்த வித்தியாசமான நடத்தை ஸ்நேகிதிக்குள் மீண்டும் பல கேள்விகளை எழுப்பியது.

இதுவரை கல்லூரி வளாகத்திற்குள் யாரையும் ஏறெடுத்தும் நோக்கிடாதவன், ஆழியை பார்த்தது 'முதல் அதிசயம்' என்றால், அவள் திருமணம் ஆனவள் என்று தெரிந்த நொடியிலிருந்து அவள் மேல் கோபம் கொண்டதும், இப்போது சிந்திய குரூர புன்னகையும் சேடிஸ்ட் என்ற வார்த்தையின் உச்சமாகத் தான் தெரிந்தது ஸ்வாதிக்கு.

சோர்வுடன் ஆய்வுக்கூடம் விட்டு வெளியே வந்த ஆழி நேரே நூலகம் செல்ல, வழியில் அவளை மறித்தான் புவன்.

"ஓய்... ஏன் டல்லா இருக்கே!" என்றவனது பேச்சில் அக்கறை அதிகமாகவே தான் தெரிந்தது.

நிமிர்ந்து பார்த்து, வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் "ஒன்னு இல்லேயே" என்றாள்.

அவளது மலுப்பலான பதிலிலேயே, அவளது வருத்தத்திற்கான காரணம் தெரிந்து கொள்ளும் உரிமை இல்லை என்பதை அறிந்து கொண்டான் சீனியர்.

ஆனாலும் அப்படியே விட்டுவிட மனமில்லாமல், "எப்போ டியூஷன் எடுக்க வருவே?" என்றான், அவளது அன்னை தந்தை செல்லவிருக்கும் நாள் பற்றி அறிந்து கொள்ள...

‌ "ஏன்? எதுவும் சொன்னாங்களா? வேற ஆள் பார்க்க சொல்லிட்டாங்களா?" என்றாள் படபடப்பாக.

அவன் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து கேட்க, அவள் அதற்கு வேறு ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டாள். "ஹேய்.... ஹேய்... ச்சில்... அப்படி எல்லாம் எதுவும் இல்லே... எனக்கு தான் கொஞ்சம் ரிலாக்ஷேஸன் வேணும்... அதான் கேட்டேன்" என்று சமாளித்தான்.

"வெட்னஸ் டே தான் அம்மா, அப்பா கிளம்புறாங்க... சோ எப்படி பார்த்தாலும் இன்னும் டூ டேஸ் ஆகும்... உங்களை ரொம்ப ஸ்ரமப் படுத்துறேன்ல" என்று சங்கடமாக உரைத்தாள்.

தனக்கு வேண்டிய பதிலும் கிடைக்கவே, அப்போ அவளது தற்போதைய சோகத்திற்கு காரணம் வேறு ஏதோ ஒன்று தான் என்று ஊகித்தபடியே "டூ டேஸ் தானே... நோ ப்ராப்ளம்" என்றான் சோர்வாக...

அவனது சோர்ந்த முகத்திற்கும் மாற்றி அர்த்தம் புரிந்து கொண்ட ஆழி, "புவன்... எனக்காக நீங்க... கஷ்டபட வேண்டாம்... வேற ட்விட்டர் கூட அவங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுங்க... நான் வேற ஜாப் தேடிக்கிறேன்" என்றாள்.

அவளது முகத்திலும் மீண்டும் அரைகுறை பாஷையை வைத்துக் கொண்டு மீண்டும் வேலை தேட வேண்டுமே என்ற அயர்வு.

"உன் ஹஸ்பண்ட் என்ன ஜாப் பண்றாரு?" என்றான் அவளை கூர் பார்வை பார்த்தபடி...

அவனது பார்வையை எதிர்க் கொண்ட ஆழியும் இம்மி நகராது அவனது விழிகளை விழித்தாள்.

"இல்லே... அவசியம் நீ பார்ட் டைம் ஜாப் போக வேண்டிய தேவை என்னனு தான் கேட்டேன்." என்றான் அவசரமாக...

"ஏன்னு ரீஸன் தெரிஞ்சா மட்டும் போதுமா? இல்லே! என் ஹப்பி எங்கே வேலை பார்க்கிறார்? எவ்ளோ சேலரி வாங்குறார்? எல்லாம் தெரியனுமா!" என்று பட்டென்று கேட்டுவிடவே சீனியரின் முகம் அவமானத்தில் சுருங்கியது.

ஒரு பெண், அதுவும் திருமணம் ஆன பெண் தன்னைப் பற்றிய விவரங்களை தானாக பகிர வேண்டும். அதுவே நாகரிகம்... அந்த பெண்ணைப் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால், என்ன விவரம் வேண்டுமோ அதனை நேரடியாக கேட்டுவிடுவது மரியாதை அவர் எதுவும் நினைத்துக் கொள்ளமாட்டார் என்ற பட்சத்தில்.

இங்கே புவன் ஆழியிடம் ஒவ்வொரு விடயமாக அவளுக்குத் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக சுற்றி வளைத்து கேள்விகளை அடுக்கிடவே ஆழியும் அதனைப் புரிந்து கொண்டு பட்டென அவ்வாறு உரைத்துவிட்டாள்.

ஆனாலும் அவனது முகம் கருத்து சுருங்கிவிட, பெண்ணவளும் தன் பேச்சிலும் தவறு உள்ளது என புரிந்து கொண்டாள். புவனிடம் எவ்வாறு மன்னிப்புக் கேட்பது என்று தனக்குள் தயங்கித் கொண்டிருக்கும் போதே, அவனாகவே சிரித்த முகமாக,

"உன் ஹஸ்பண்ட் பயோ-டேட்டா தெரிஞ்சு வெச்சிட்டு நான் என்ன அவருக்கு அலைன்ஸ் பார்க்கவா போறேன்... ஒருவேளை அது தான் உன் ஆசை-னா சொல்லு... நல்லா கலையா, அழகா, லட்சணமா முக்கியமா அறிவான பொண்ணா பார்த்து கட்டி வெச்சிடலாம்" என்று கலாய்க்க,

ஆழி கையிலிருந்த புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு அவனை அடிக்க விரட்டினாள். புவனும் ஆழியின் அடிக்கு பயந்து ஓடத் தொடங்கினான்.

ஓடி களைத்த இருவரும் மரத்தடியில் நின்று மூச்சு வாங்க, ஓடாமலேயே களைத்து இருவரையும் பார்த்து மூச்சு வாங்கிக் கொண்டு நின்றிருந்தாள் இன்னொருத்தி...

காதல் கரை எட்டுமா!
 
Top