• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

💘காதல்💘 22

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
"இங்கே என்ன டி பண்றே?" என்ற ஆழியின் குரலில் திடுக்கிட்ட ஸ்வாதி, தான் மாட்டிக் கொண்டோம் என்பது புரிய, 'சீனியருக்கும் ஆழிக்கும் நடுல சிக்கி.... செத்தேன் நான்...' என்ற மன பொறுமலோடு மெதுவாக தலையை திருப்பிப் பார்த்தாள்.

ஆழிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தவளிடம், "இங்கே தனியா உக்கார்ந்து என்ன பண்றேனு கேட்டேன்?" என்றாள் ஆழி.

ஸ்வாதியிடம் தன் கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கும்போதே ஆழியின் கண்கள் தோழியையும், அவள் கையிலிருக்கும் பனிக்கூழையும் தான் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தது.

ஸ்வாதிக்கோ ஆழியின் கேள்வியில் அதிர்ச்சி... 'ஏதே!!! தனியாவா!" என்று நினைத்தபடி, சீனியர் அமர்ந்திருந்த இருக்கையைத் திரும்பிப் பார்க்க அவன் அங்கே இல்லை‌.

அவன் தான் ஆழியைக் கண்டதுமே வாயிலும், கையிலும் வைத்திருந்த கவளத்துடன் மின்னல் வேகத்தில் பறந்திருந்தானே!

ஆனால் அவன் விட்டுச் சென்ற உணவு தட்டு எதிரிருக்கையில் ஸ்வாதியைப் பார்த்து இளித்துக் கொண்டிருந்தது. 'அவன் ஓடிட்டான்... அழகா என்னை இவகிட்ட மாட்டிவிட்டுட்டு அவன் ஓடிட்டான்' என்று ஸ்வாதியின் மனம் கேட்பாரற்று புலம்பியது..‌‌.

‌ ‌ ஸ்வாதியின் பார்வை சென்ற திக்கைத் தொடர்ந்து தனது பார்வையையும் செலுத்திய ஆழி, இப்போது தட்டையும், நட்பையும் மாற்றி மாற்றி பார்த்தாள்...

ஆழியின் சந்தேகப் பார்வையை தாங்கியபடி, 'என்னப்பன் புதருக்குள் இல்லேன்னு நீயே காட்டி கொடுத்திடுவே டி சுவி!' என்று மனதிற்குள் தன்னைத் தானே காரி உமிழ்ந்து கொண்டு,

ஆழியிடம், "ந்ந்..நா...நான் சாப்பிட்டது தான். ரொம்ப பசிச்சது அதான் திரும்பவும் இங்கே வந்து ஆர்டர் பண்ணி சாப்டேன்" என்று பொய்யுரைத்தாள்.

"இது நீ சாப்பிட்டதானு நான் கேட்கவே இல்லேயே!" என்று நிதானமாக உரைத்தாள் ஆழி.

'சரி தான்... என் வாய் தான் என் எமன் போல...' என்று மீண்டும் மனதிற்குள் நினைத்துக் கொண்டு, "கேட்கலே!??" என்று மீண்டும் அவளிடமே சந்தேகமாக வினவினாள் ஸ்வாதி.

ஆழியும் இல்லை என்பது போல் இடவலமாக தலையசைத்திட, "அப்போ யார் கேட்டாங்க!" என்று யோசிப்பது போல் தலையை சொறிந்தாள்.

ஆழியும் எதற்கும் அசையாமல் அவளை வேடிக்கை பார்த்திட, "யார் கேட்டா என்ன! சரி வா... நமக்கு க்ளாஸ்-க்கு டைம் ஆச்சு... போகலாம்" என்று ஆழியை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள் ஸ்வாதி.

கொஞ்சம் அழுத்தமாகவே அவளுடன் நடந்து சென்றபோதும் எதுவும் பேசவில்லை ஆழி. ஸ்வாதியும் எதுவும் கேள்வி கேட்கும் நிலையிலும் இல்லை. ஏற்கனவே அவளது மனதின் மொழி ஒருபுறம் சோறு வேண்டி புலம்பியது.

'பொய் சொன்ன வாய்க்கு போஜனம் இல்லேன்னு சொல்லுவாங்க... இன்னைக்கு ஒருநாள் மட்டுமே நான் சொன்ன பொய்க்கு ஒரு மாசத்துக்கு சோறு கிடைக்காம போனாலும் ஆச்சரியப்படுறதுக்கு ஒன்னு இல்லே! அல்ரெடி புரட்டாசி மாசம் நோ பிரியாணி, போ கறி குழம்பு... இனி சோறும் இல்லேனா மை லிட்டில் டம்மி, ஒல்லி பெல்லி சோ பாவம்... எதுக்கும் வாய்க்கு ஜிப் போட்டுக்கிறது தான் நமக்கு நல்லது...' என்று எண்ணிக் கொண்டு அன்றைய நாளை அப்படியே கடத்தியிருந்தாள்.

மாலை இல்லம் திரும்பிய ஆழி, நேரே தனது அறைக்குச் சென்று உடைமாற்றி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு தன் எழுதும் பணியைத் தொடர, அவள் அன்னை குழம்பியுடன் உள்ளே நுழைந்தார்.

"ஆழி... மாப்ளே காலைலயே சின்ன வேலை இருக்கிறதா சொல்லி கிளம்பினார். இன்னும் வரலே... மதியம் சாப்பிட்டாரானு தெரியலே... அப்பா ஃபோன்ல வேற அவுட் கோயிங் போக மாட்டேங்குது... கொஞ்சம் என்னனு மாப்ளேக்கு ஃபோன் பண்ணி கேளேன்மா" என்று அரைநாள் முழுதும் மனம் துடித்த துடிப்பை அரை நிமிடத்தில் உரைத்திருந்தார்.

"ம்மா... உங்க மாப்ளே என்ன தங்ககட்டியா!!!.... எவனாச்சும் தூக்கிட்டு போறதுக்கு... வருவார் ம்மா" என்றாள் அன்னையை கடுப்பேற்றி வம்பு வளர்க்கும் விதமாக...

"வாய் பேசாம முதல்ல ஃபோன் பண்ணு டி" என்று கட்டளை பிறப்பித்தவர், அவள் தனது திறன்பேசியில் எண்ணை அழுத்தவும், அடுத்த வாதத்தை ஆரம்பித்தார்.

"மாப்ளே-க்கு என்ன டி குறை‌? என் மருமகன் குணத்துக்கு நவரத்தினத்தை எடைக்கு எடை குவிச்சு வச்சாலும் ஈடாகாது... தெரிஞ்சுக்கோ" என்று மருமகனை விட்டுக் கொடுக்காமல் பேசினார் வெங்கடா.

அம்புதி தன் மகளை மணந்திருக்காவிட்டாலும் நிச்சயம் இதைத் தான் உரைத்திருப்பார் வெங்கடா... அவனது குணம் அப்படி. அதனால் தான் ஞானமும் தன் பெண்ணை கட்டிக் கொடுக்க ஆசை கொண்டிருந்தார். விதியின் வசத்தால் அவரது ஆசையும் நிறைவேறியிருந்தது.

திறன்பேசியில் கணினியின் குரல் 'switched off' என்று உரைக்க, அதனை தன் அன்னையிடம் கூற மறந்தாள் தன்னவன் மேல் கொண்ட பெருமிதத்தில்...

அன்னையின் கூற்றில் 'என்னவன்' என்று செருக்கு எழுந்தபோதும், வெளியே அதனைக் காட்டிக் கொள்ளாமல்,

"ஆமா... ஆமா... உன் மாப்ளே இப்போ தான் பிறந்த குழந்தை பாரு... எடைக்கு எடை ஜூவல்ஸ் போட்டு சாமிக்கு காணிக்கை கொடுக்குறதுக்கு!! வேணுனா காயிலாங்கடையில எடை போட்டு வித்திடுங்க... பேரிச்சம்பழம் ஆவது கிடைக்கும்" என்று கூறிக் கொண்டிருக்கும்போதே உள்ளே நுழைந்திருந்தான் அம்புதி.

வெங்கடாவின் அதிர்ச்சி, அவர் முகத்திலேயே தெரிந்தது. நிச்சயம் தன் மகள் பேசிய அனைத்தும் அம்புதியின் காதில் விழுந்திருக்கும் என்பதில் அவருக்கு சந்தேகம் ஏதும் இல்லை.

அதனை மெய்ப்பிக்கும் விதமாக, உள்ளே நுழைந்தவுடனேயே, "ஏய் கருவாடு... என்னை என்ன துருபிடிச்ச தகர பெட்டினு நெனச்சியா! சாமியறையில இருக்கிற காசு, பணம் பாதுகாத்து வைக்கிற இரும்பு பெட்டகம் டி நான்! அவ்வளவு சாமானியமா யாராலேயும் என்னை அசைக்க முடியாது... அது மட்டும் இல்லாம என்னை நம்பி தங்கத்தை கொடுத்து பாதுகாக்க சொல்லிருக்காரு என் மாமன்... சீக்கிரமே தெரியும்! என்கிட்ட இருக்கிறது தான் அந்த தங்கத்துக்கு பாதுகாப்புனு!" என்றான் அவளது எகத்தாள பேச்சிற்கு பதில் மொழியாக.....

ஆழியோ இடவலமாய் இதழ் சுழித்து பலிப்பு காட்டினாள். அதனைக் கண்டு புன்னகைத்தபோதும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான் அவளின் அபு.

வெங்கடாவிற்கும் மெல்லிய புன்னகை பூத்தபோதும், "என்ன தான்‌ நீங்க அவளை தங்கம்-னு சொன்னாலும் முன் அடைமொழியா இன்னமும் அவளை கருவாடுனு சொல்றதை நான் ஏத்துக்கமாட்டேன்" என்று ஆழியை கன்னம் வழித்துக் கொஞ்சினார்.

அம்புதியும் ஆழியைப் பார்த்து ரசனையாக, ரகசியமாக புன்னகைத்து வைத்தான்.

மேலும் வெங்கடாவே ஆரம்பித்தார், "சின்ன வேலைன்னு சொல்லிட்டு போயிட்டு இவ்வளோ நேரம் கழிச்சு வர்றிங்க? மதியம் சாப்பிட்டிங்களா? இல்லேயா? மாப்ளே" என்றார் மதியத்திலிருந்து மனதை அறி(டி)த்துக் கொண்டிருந்த கேள்வியை...

"ம்ம்ம்... சாப்டேன் அத்தே... போன வேலை முடிய லேட் ஆகுனு நெனச்சேன்... ஆனால் பார்க்க வேண்டிய ஆளை பார்க்க முடியலே.. அதான் லீவ் வேஸ்ட் பண்ண வேண்டாமேனு வேலைக்கு போயிட்டேன்" என்றான் வெங்கடா மற்றும் ஆழியின் பார்வையை தவிர்த்து.

"ஓஓஓ... சரிங்க மாப்ளே..." என்று அம்புதிக்கு பதிலளித்துவிட்டு, ஆழியிடம் "அதை சொல்றதுக்கு என்ன டி... இதுல ஃபோன் பண்ணி கேட்டும் இன்னமும் பதில் வரலே" என்றிட,

"அம்மா அவர் ஃபோன் ஸ்விட்சுடு ஆஃப் ம்மா" என்று இப்போது பதில் கூறினாள் ஆழி. அதற்கும் சேர்த்து வாங்கி கட்டிக் கொண்டாள் 'ஒரு உதவிக்கும் ஆகாதவள்' என்ற கூற்றை மறைமுக வார்த்தைகளால்.

ஆழி இருவரையும் பார்த்து முறைத்துவிட்டு தன் பணியைத் தொடங்கினாள். அம்புதியும் அவளது முறைப்பில் இன்னும் சற்று புன்னகையை விரிக்க, வெங்கடாவும் "உங்களுக்கு காப்பியா? டீயா?" என்று அம்புதியிடம் அவனது விருப்பம் கேட்டறிந்துகொண்டு அறையிலிருந்து வெளியேறினார்.

"என்ன? உன் டெஸ்ட்-ல நான் பாஸ் ஆகிட்டேனா?" என்றான் உடைமாற்றிக் கொண்டே இவ்வளவு நேரம் இருந்த மலர்ந்த முகம் மறைந்து சற்றே முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு...

ஒரு நிமிடம் எதைப் பற்றி கேட்கிறான் என்று உண்மையாகவே விளங்கவில்லை ஆழிக்கு. அவளது மனதிலும் அன்றைய நாளின் பல பல தாக்கங்கள்.

புவன் மற்றும் ஸ்வாதியின் நடவடிக்கைகளில் ஏதோ ஒரு மாற்றம்... அது என்ன என்று கூட யோசிக்க முடியாமல் செய்திருந்தது, வேந்தனால் வகுப்பறைவிட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம்...

அனைத்தையும் விட அம்புதிக்கு தான் தன் கடந்த கால காதலைக் கடப்பது என்பது சவாலாக இருந்தது. ஆழிக்கு அது அன்றாட நிகழ்வுகளில் ஒன்று அவ்வளவே! எனவே எவ்வித யோசனையுமற்று கொண்டவனை விழித்திட,

அவனே அவளுக்கு நினைவூட்டும் விதமாக, "மார்னிங் நான் ஈஷ்-ஐ அழைச்சிட்டு போறேனா இல்லேயானு பார்க்க தானே நேத்து அப்படி பேசினே?" என்றான் முகத்தில் துளியும் சிரிப்பு இல்லாமல். ஆனால் ஜெயித்துவிட்ட மிதப்பு சற்று அதிகமாகவே இருந்தது.

தன்னவனைக் கண்டு உதடு பிதுக்கி தொய்ந்த முகமாக "நீங்க ஃபெய்ல்..." என்று உரைத்தவளை, தோல்வியை ஒப்புக் கொள்ளாத குழந்தைத்தனமானவள் என்ற ரீதியில் பார்த்தான் அம்புதி.

"சேம் டைம் நானும் தோத்துட்டேன்... சோ ரெண்டு பேரும் லூசர் தான்..‌. அண்ட் மோர் ஓவர் இட்ஸ் நாட் ஜஸ்ட் அ கேம்... யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வினு பார்க்கிறதுக்கு" என்றவளது பேச்சில் அவன் நினைத்ததைவிட அதிகமாகவே முதிர்ச்சி தெரிந்தது‌.

அதில் அதிர்ச்சியுற்றவன் குழப்பமும், சலிப்பும் கூடவே சேர்த்து இலவசமாக பெற்றுக் கொண்டான்.‌..

அவள் தன்னை சோதித்துப் பார்க்கிறாள் என்று நினைத்ததற்கு, 'அப்படி எதுவும் இல்லை... நீ என் தங்கையை அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என்று தான் நான் எதிர்பார்த்தேன்' என்றல்லவா உரைக்கிறாள்....

அவளது கூற்று பற்றிய விளக்கம் அந்நேரமே கேட்டிருந்தாள் அவனது குழப்பமும் தீர்ந்திருக்கும்... அவர்கள் வாழ்வும் இனிமையடைந்திருக்கும்... ஆனால் விதி அங்கே தான் தனது அடுத்த விளையாட்டை நிகழ்த்தியிருந்தது.

அந்த பேச்சை அங்கேயே முடித்துக் கொண்டு, ஈஸ்வரியை தான் காணச் சென்றதை கூறலாமா வேண்டாமா என்ற யோசனையுடனேயே நேரத்தைக் கடத்தினான் சற்று நேரம்‌.

பிறகு ஒருவழியாக சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்து அவள் அருகே சென்று ஒற்றைக் கால் மடக்கி அம்ர்ந்தவன், அவள் மும்பரமாக தன் பணியே தலையாய சித்தம் என தலை கவிழ்ந்து எழுத்திக் கொண்டிருந்தாள்.

அப்படி என்ன எழுதுகிறாள்? இன்னும் எத்தனை பக்கங்கள் இருக்கிறது? என்று திருப்பிப் பார்த்தவன், படிப்பவளை தொல்லை செய்ய விரும்பாமல், ஒன்றும் பேசாமல் அறையைவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டான்.

அம்புதி தன் அருகே வருவதையும், அமர்வதையும், தன்னைக் காண்பதையும், கவனித்துக் கொண்டிருந்த ஆழி, அதுவரை தலை உயர்த்தாமல், அவன் வெளியேறிச் செல்லவும் தலை உயர்த்திப் பார்த்தாள்.

அவன் வாய் திறந்து கேளாமல் எதுவும் உரைக்கக் கூடாது என்று நினைத்தாளோ என்னவோ! விறக்திப் புன்னகை கூட முழுமையாக முடிவடைந்துவிடாமல் வாட்டியது அவளது உள்ளத்தை. மீண்டும் எழுதவும் தொடங்கிவிட்டாள்.

மனம்விட்டு பேசினால் பாதி இன்னல்கள் இருந்த இடம் தெரியாமல், பிறந்த தடம் அறியாமல் மறைந்துபோகும். ஆனால் யார் முதலில் வெளிப்படுத்துவது என்பதில் தான் ஆணவம் ஆரம்பமாகிறது.

காதல் கரை எட்டுமா!!!

சிறிய பதிவிற்கு மன்னிக்கவும். அடுத்த பதிவு நிச்சயம் 10 நிமிட பதிவாக இருக்கும். நன்றி ❤️❤️❤️