• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
இரண்டு நாட்கள்.... முழுதாக இரண்டு நாட்கள் கடந்துவிட்டது.... ஆழி அம்புதியைவிட்டு பிரிந்து வந்து.

அவளுக்கு என்னவோ இந்த இரண்டு நாட்களின் பெரும்பான்மை நேரங்கள் ரயில் பயணத்திலேயே கடந்துவிட்டது தான் என்றபோதும், காது கேள் கருவியின் துணையோடு தனக்கு தானே மேலும் கொஞ்சம் தனிமையை உருவாக்கிக் கொண்டாள்‌ மடந்தையவள்.

அவளே ஏற்றுக்கொண்ட பிரிவு தான். ஆனாலும் பிரிவு, பிரிவு தானே! வலி, வலி தானே!!

ஞானம் மற்றும் வெங்கடாவை அழைத்துச் செல்ல வந்த மகிழுந்து ஓட்டுனர், அங்கே ஆழியைக் கண்டவுடன், "நல்லா இருங்கிங்களா? எங்க நீங்க மட்டும் தான் வந்திருக்கிங்க? தம்பி வர்லிங்களா?" என்றார்.

திருமணம் முடிந்து முதல்முறை பிறந்தகம் வரும் பெண், தன் கணவனுடன் இணைந்து வருவது தானே அவளுக்கும் அவளை பெற்றவர்களுக்கும் மரியாதை... அது அவரது பேச்சிலும், முகத்திலும் நன்றாகவே தெரிந்தது.

இருந்தும் ஆழி அதனையெல்லாம் பொருட்படுத்தாமல், "நல்லா இருக்கேன் ண்ணா... அவருக்கு கொஞ்சம் வேலை இருக்கு ண்ணா... நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா வர்றதா சொன்னாங்க" என்று சிரித்த முகமாய் அவளும் அடுக்கடுக்காய் பொய்களை உரைத்தாள்.

ஞானம் தன் மகள் பொய்யுரைக்கிறாள் என்பதனையே நம்ப முடியாமல் பார்த்தவர், இப்படி பொய்யுரைக்கும் நிலைக்கு தன் மகளை தள்ளிவிட்ட அம்புதியின் மேலும் கோபம் கொண்டார்.

முதல்முறையாக ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் இருப்பது போல் மனமுடைந்து நின்றார் அந்த முறுக்கு மீசை அய்யனார். அவரை வெங்கடேஸ்வரி தான் தன் கை மறைவில் அழுத்தம் கொடுத்து நிகழ்விற்கு கொண்டு வந்தார்.

இல்லம் வந்து சேர, அபூர்வமாக மகிழுந்து நுழையும் வீதி என்பதோடு, ஞானம் மட்டுமே உபயோகிக்கும் தானுந்து என்பதால் அண்டை, அயலாரின் கண்கள் தானாகவே அவ்வில்லத்தின் வாயிலில் பதிந்தது.

உள்ளிருந்து இறங்கிய ஆழியைக் கண்டவுடன், மீண்டும் அதே கேள்விகள்... "என்னை இங்கே அனுப்பி வெச்சிட்டு அங்கே அவக மட்டும் தனியா இருந்திடுவாகளா என்ன! பின்னாடியே அடுத்த ரயில் பிடிச்சு வர்றாகளா இல்லேயா பாருங்க" என்று அவளும் நையாண்டியாக பதிலளிக்க,

அடுத்த கேள்விக்கு இடமளிக்காமல் வெங்கடேஸ்வரி அவளை வீட்டிற்குள் இழுத்து வந்துவிட்டார்.

ஆழி வந்திருக்கும் சேதி நிமிட நேரங்களில் அவ்வூர் முழுமைக்கு பரவிவிட, சொந்த பந்தங்கள் உண்மையான அக்கறையுடன் அவளை நலம் விசாரிக்கவும், சில வன்ம மனங்கள் அவளை நலம் விசாரிக்கும் சாக்கில், அம்புதி வராமல் போனதன் காரணத்தையும் அறிந்து கொள்ள சிட்டாய் பறந்து வந்துவிட்டனர். அதில் அம்புதியின் அண்ணன் மனைவி பவித்ராவும் அடக்கம்.

வெங்கடாவும், தன் மகளை சிறை பிடிக்காத குறையாய் அறைக்குள் அடைத்து வைத்துவிட்டு, 'இப்போ தான் குளிக்க போனாள், இப்போ தான் தூங்குகிறாள், இப்போ தான் மாப்பிள்ளை போனில் அழைத்தார், பேசிக் கொண்டிருக்கிறாள்' என்று கலர் கலராக கதை கட்டி சமாளித்து அனுப்பினார்.

தன் அக்கா மற்றும் மாமனை வரவேற்கவென்று வந்திருந்த, ஈஸ்வரியின் அன்னை சங்கரி, ஆழியின் திடீர் வரவு மற்றும் தன் மாமன் முக மாறுதல் மூலம் ஏதோ சரியில்லை என்று உணர்ந்து, தமக்கையை நச்சரித்து சேதியை அறிந்து கொண்டார்.

மற்றவர்கள் மூலம் விசயம் தன் உடன்பிறப்புகளுக்கு தெரிவதை விட, ஞானமே தன் அண்ணனை அழைத்து விவரம் உரைத்தார். அடுத்த நொடி இல்ல வாயிலில் வந்து நின்றான் ஞானத்தின் அண்ணன் மகன் விகாஷ். மிச்சம், மீதி என்று விசாரிக்க வந்த கும்பலை விரட்டியடித்தான்.

"என்ன சித்தி இது! ஒவ்வொருத்தருக்கா இப்படி விளக்கம் சொல்லிட்டு இருக்கிறதைவிட்டுட்டு அடுத்து என்ன செய்யலாம்னு பாருங்க!!" என்றிட வெங்கடா சேலைத் தலைப்பில் கண் துடைத்துக் கொண்டாரே ஒழிய வாய் திறக்கவில்லை.

மீண்டும் அவனே வாய் திறந்தான். "அவனும் குட்டி பாப்பாவும் எப்போ வர்றாங்க?" என்று அம்புதியையும், ஈஸ்வரியையும் விசாரித்தான். இந்த பேச்சினூடே ஈஸ்வரியின் அன்னை சங்கரியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தான் வினவினான் விகாஷ்.

"அவ ஏன் வர போறா! வர்றதா இருந்தா இவரு அழைச்ச நேரமே வந்திருக்கனுமே! ஒருத்தி வாழ்க்கையை அளிச்சி தான் இன்னொருத்தி வாழ்க்கையை அழகு வடிக்கனும்னு இருந்தா யாராள அதை மாத்த முடியும்!" என்று மனம் தாளா துயரில் உரைத்தார் வெங்கடா.

"இப்படி அவ அக்காவுக்கு சக்களத்தியா வருவான்னு தெரிஞ்சிருந்தா பிறந்தப்பவே என் வயித்துல பிறந்தவளை என் கையாலேயே கொன்னிடுப்பேன்" என்று ஈஸ்வரியின் அன்னை கோபத்தில் உரைத்திட,

"அறிவு கெட்ட தனமா பேசாதிங்க சித்தி! என்ன நடந்ததுனு தெரியாம எதுவும் விசாரிக்கவும் செய்யாம ஏன் இப்படி தப்பு தப்பா பேசுறிங்க! ஒரே ஒரு போட்டோவை மட்டும் பார்த்துட்டு நம்ம வீட்டு பிள்ளையை நாமளே தப்பா சித்தரிச்சிக்கிடுறது சரிதானானு யோசிங்க!" என்று ஒரு அதட்டல் போட்டான்.

ஈஸ்வரியை எப்போதும் ஞானத்தின் உறவுகள் தனித்து பார்த்ததில்லை. அவர்களை பொறுத்தவரை ஆழி எப்படியோ அப்படியே தான் ஈஸ்வரியும்.

"இனிமே தப்பா நெனைக்க என்ன இருக்கு!! தப்பு தப்பாவே நடந்து தப்பு தப்பாவே முடிஞ்சும் போச்சு..." என்று வெங்கடா வெளிப்படையாக உரைத்தவை கொஞ்சம் தான்.

மனதிற்குள்ளோ 'அம்புதியும் ஈஸ்வரியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்றால் எங்கேனும் கண்காணா இடத்தில் இருவரும் சேர்ந்து வாழட்டும்' என்று வளர்த்த மகளை வாழ்த்திவிட்டு, தன் மகளின் நிலை நினைத்து கலங்கி நின்றார்.

வெங்கடாவிற்கு ஆறுதல் கூற முடியாமல் துவண்டு போனான் விகாஷ். "அவ மேல தான் இருக்கா... உன்கிட்டேயாச்சும் ஏதாவது சொல்றாளா பாரு" என்று குரல் கொடுத்தபடி உள்ளே நுழைந்தார் ஞானம்.

மின்னல் வேகத்தில் ஆழியின் அறை வாயிலில் வந்து நின்றான் அண்ணன்காரன்.

அன்னையின் வார்த்தைக்கு மதிப்பளித்து அறையில் முடங்கிக் கிடந்தாள் ஆழி. முழுநேரமும் திறன்பேசியிடனேயே தான் தன் பொழுதுகளைத் தள்ளினாள்.

கல்லூரி நட்பு வட்டாரங்களின் தகவல் படி அம்புதி வேந்தன் என்பவன் இரண்டு நாட்களாக கல்லூரி வளாகத்தில் கால் எடுத்து வைக்கவில்லை.

ஸ்வாதி மற்றும் புவனைத் தவிர வேறு எவருக்கும் ஆழி, அம்புதியின் திருமண விடயமும் தெரிந்திருக்கவில்லை என்பதையும் அவர்களது புலனக்குறுந்தகவல்கள் மூலமே அறிந்து கொண்டாள் ஆழி.

தன் தோழிக்காக 90% துப்பறிவாளனாகவே மாறிப்போன புவனின் புலனக் குறுந்தகவலைத் தான் தற்போது பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். ஏனோ அவனது குறுந்தகவலைக் கண்டதும் ஆழியின் முகத்தில் கசந்த புன்னகை வந்து சென்றது.

அம்புதி கல்லூரி வரவில்லை என்பது ஆழி ஏற்கனவே அறிந்து வைத்திருந்த தகவல் தான் என்றபோதும், ஈஸ்வரியும் இரண்டு நாட்கள் கல்லூரி செல்லவில்லை என்று குறிப்பிட்டிருந்தான் அவன்.

ஒரு நாள் ஈஸ்வரியை பல்பொருள் அங்காடியிலும் மற்றொரு நாள் மருந்தகத்திலும் பார்த்ததாகவும், மேலும் அவளுடன் பேச முயற்சித்த போது அவள் மறுத்து விட்டதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தான்.

ஆழியின் அனுமதி கேட்டு அறைக்குள் நுழைந்த விகாஷ் தங்கையவளை கண் கொட்டாமல் பார்த்து வைக்க, வாய் திறவா அவனது வார்த்தைகளுக்கு புவனின் குறுந்தகவலைக் காண்பித்து பதிலளித்தாள் அந்த பைத்தியக்காரி.

ஆங்கில குறுந்தகவலில் இடையிடையே மராத்தி கலந்திருக்க, விகாஷ் புரியாத பார்வை பார்த்து வைத்தான். இப்போது வாய் திறக்கும் கட்டாயத்திலிருந்த ஆழி புவனின் புலனாய்வு முடிவுகளை விளக்கிக் கூறினாள்.

ஆழிக்கு எழாத சந்தேகங்கள் கூட அண்ணன்காரனுக்கு எழுந்தது. வெளியே தன் சிற்றன்னைகளிடம் மற்றொரு தங்கைக்காக பரிந்து பேசியவனுக்கு இப்போது அந்த தங்கையின் மீது கோபம் மூண்டது.

இவர்களது இல்லத்தில் ஈஸ்வரிக்கு என்ன வேலை! அவள் ஏன் விடுதி செல்லாமல் அம்புதியோடு தங்க வேண்டும்! என்று நினைத்த நொடி ஒருவேளை அந்த புகைப்படம் கூறும் கதை உண்மை தானோ! என்று சந்தேகம் கொள்ள வைத்தது.

ஆழியின் உலுக்கலில் கோபத்தை மட்டுப்படுத்தியவன், கண்ணெதிரே இருக்கும் தங்கைக்காக வருந்தினான்.

"தப்பு பண்ணிட்டேன். அந்த அமெரிக்க மாப்பிள்ளைய விரட்டியிருக்கக் கூடாது. அம்புதியை பத்தி தெரியாம அவனுக்கு உன்ன கட்டிக் கொடுத்து..... இப்போ உன் வாழ்க்கை, கேள்வி குறியா நிக்கிறதுக்கு நானே காரணமாகிட்டேன்." என்று ஆற்றாமையுடன் புலம்பினான்.

ஆம் ஞானத்தின் செவிகளுக்கு அமெரிக்க மாப்பிள்ளையின் லட்சணத்தை எடுத்துச் சென்றதும் இதே பாசமலர் அண்ணனவன் தான். அந்த மாப்பிள்ளைகாரன் விரட்டியடிக்கப்பட்டவுடன் தன் தங்கைக்காக தன் தங்கையை மணந்து கொள்ளும்படி அம்புதியிடம் மன்றாடியதும் இதே பாசமலர் தான்.

ஆனால் அம்புதியோ ஞானத்தின் 'இப்போது நான் என்ன செய்யட்டும்? மகனோடு இணைந்து உன் காலடியில் இறைஞ்சட்டுமா! அல்லது அவனை தடுத்து நிறுத்தட்டுமா!' என்ற விழிமலர் வினாவிற்காகவே மாப்பிள்ளை கோலம் தரித்து வந்தான் என்பது தான் நாம் அறிந்த கதையாயிற்றே!

"உன் அமெரிக்க மாப்பிள்ளைய கட்டிருந்தா சொந்த பந்தமே இல்லாத தூர தேசத்துல இதே நிலைமையில சிக்கி செத்திருப்பேன்" என்ற ஆழியின் கணீர் குரலில் ஒரு நொடி ஸ்தம்பித்து தான் போனான் விகாஷ்.

அவளது கடைசி வார்த்தையில் அத்தோடு அப்பேச்சையும், தன் புலம்பலையும் நிறுத்திக் கொண்டான் பாசமலர். இதனை எதிர்பார்த்து தான் இளையவளும் கடுஞ்சொற்களை பயன்படுத்தினாள்.

"உனக்கு ஏற்கனவே அம்புதி, ஈஸ்வரி காதல் விவகாரம் தெரியும் தானே!" என்றான் விகாஷ், 'ஆம்' என்ற விடையை எதிர்பார்த்தபடி...

"இதென்ன? என் அப்பா கணிப்பா?"

"யாருடைய கணிப்பா இருந்தா என்ன? கேள்வி சரி தானே!"

"சொந்தமா யோசிக்க ப்ரைன் இல்லாட்டாலும், நல்லாவே சமாளிக்க கத்து வெச்சிருக்கே!"

"உன் அண்ணனாச்சே! உன்கிட்ட இல்லாதது என்கிட்ட மட்டும் இருந்திடுமா என்ன!" என்று இந்த ரணகள சூழலிலும் தங்கையை வா(ட்டு)ரும் பணியை சிறப்பாக செய்தான்.

"ஓய்... யாரை பார்த்து மூளையில்லேனு சொல்றே! காலேஜ் டாப்பராக்கும் நானு... என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டு பாரு என்னை பத்தி..." என்று அணிந்திருந்த சுடிதார் காலரை தூக்கிவிட்டு கூறினாள்.

"யாரு! அந்த குண்டுமணி குள்ளவாத்து ஸ்வாதிகிட்டேயா கேட்க சொல்றே! இருக்கிறதுலேயே மக்கு பீஸ்ஸா பார்த்து ஃப்ரெண்ட் பிடிச்சிக்க வேண்டியது. அப்பறம் எங்க கேங்-ல நான் தான் அறிவாளினு பீத்திக்க வேண்டியது" என்று ஸ்வாதியையும் சேர்த்து பங்கமாக கலாய்த்தான்.

"என்னை பத்தி பேசும்போது என்னை பத்தி மட்டும் பேசு... தேவையில்லாம ன் ஃப்ரெண்டே பங்கம் பண்ணினே அவ்ளோ தான் சொல்லிட்டேன்!" என்று மிரட்டலாகவே உரைத்தாள்.

"அடேங்கப்பா... இவங்க அப்படியே கர்ணன் பரம்பரை, நட்புக்காக உயிரையும் கொடுத்திடுவாங்க... நீ ஒரு டக்கு, அவ நீ போட்ட 'டக்கு முட்ட'... பேரை பாரு சுவி, புவி, உவ்வே..." என்று தங்கையின் கள்ளம் அறியாமல் நீளமாக பேசி தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டான் விகாஷ்.

" ஏய்... யாருடா வாத்து முட்ட? நீ தான் டா கருங்கொரங்கு முட்ட, யானை முட்ட, டைனோசர் முட்ட, தவளை முட்ட, தண்ணி பாம்பு முட்ட, கொசு முட்ட, கோழி முட்ட! கூறுகெட்ட கூமுட்ட..." என்று ஆழியின் அலைபேசிக்குள்ளிருந்து வசனம் வர, ஒருநொடி ஆடித் தான் போய்விட்டான் அவன்...

தன் தங்கையை பார்த்து முறைக்க, அவளோ பழிப்பு காண்பித்து அவனை வெறுப்பேற்றினாள். "சரி தான் போடி... குள்ளவாத்து..." என்று ஸ்வாதிக்கு மெனெக்கெடாமல் பதிலுரைத்திட

"மித்து உன் அண்ணனை பத்திரமா ஊர் பக்கமே இருக்க சொல்லு... புனே பக்கம் பஞ்சாயத்து பண்ண சொம்பு தூக்கிட்டு வந்தாரு!!! மவனே அன்னைக்கே கைமா தான்" என்று கோபமாக உரைத்துட்டு அழைப்பை துண்டித்தாள் ஸ்வாதி.

"போட்டு கொடுக்குறியா நீ? எட்டப்பி" என்று தங்கையின் தலையில் கொட்டு ஒன்று வைத்தான். ஆனாலும் ஸ்வாதியின் வசையிசையிலிருந்து அவ்வளவு எளிதில் வெளிவர முடியவில்லை அவனால்.

மீண்டும் அவனை இயல்புக்குக் கொண்டு வந்தது ஆழியின் முகத்தில் தோன்றிய குறும்பு நகை தான். தங்கையின் சிரிப்பில் தானும் சிரித்தவன்,

"ப்ரசச்னை உனக்கு தான்... ஆனா உன்னை தவிர மத்த எல்லாரும் சங்கடத்துல இருக்காங்க... நீ என்னடான்னா ரொம்ப கேஸூவலா இருக்கே! உனக்கும், அம்புதிக்கும், ஈஸ்வரிக்கும் நடுவுல அப்படி என்ன தான் இருக்கு! என்ன தான் நடந்தது!"

ஆழி சமாளிக்கும் விதமாக 'அப்படி எதுவுமே இல்லை' என்று கூற வாய்திறக்க, அதனை ஊகித்தவனாய்,

"ஆழி எனக்கு தேவை உண்மை மட்டும் தான். ஏன் அமெரிக்க மாப்பிள்ளைய என்னைவிட்டு விரட்ட வெச்சே! என்னை ஏன் அம்புதிகிட்ட பேச சொன்னே! உனக்கு நல்லாவே தெரியும் உன் அப்பா கல்யாண விசயத்துல அம்புதிய கட்டாயப் படுத்தமாட்டார்-னு... அதனால தானே என்னை பகடை காயா பயன்படுத்தி அம்புதிய கல்யாணம் செய்துகிட்டே!" என்று இப்போது தான் தங்கையை சரியாக கணித்தவனாய், கணிவாய் வினா எழுப்பினான்.

இங்கே விகாஷ் ஆழியை கிடுக்கு பிடி பிடித்து நிறுத்தி வைக்க, அங்கே புனேவில் ஈஸ்வரியின் பாதுகாவலனைப் போல் அவள் பின்னாலேயே சுற்றித் திருந்த புவன் அவளை ஒரு கஃபேயில் பிடித்து அமர்த்தி வைத்திருந்தான்.

ஈஸ்வரியை முதல் நாள் பல்பொருள் அங்காடியில் சந்தித்தபோது அம்புதியை விட்டு பிரிந்து செல்லும்படி மிரட்டினான். அவள் அதனை சட்டை செய்யவில்லை.

மறுநாள் மருந்தகத்தில் பார்த்தபோது, 'உனக்கு என்ன வேணும்? ஏன் ரெண்டு பேரையும் சேரவிடாம பிரிச்சு வெச்சு ரசிக்கிறே!' என்று பணிந்து சென்று சமாதானம் பேசிப் பார்த்தான்.

பதிலுக்கு அவளோ ' உன் வேலையை மட்டும் பார்... தேவையில்லாத ஆணிய நாங்க பிடிங்கிக்கிறோம்' என்று தமிழில் திட்டிவிட்டுச் சென்றுவிட்டாள்.

ஈஸ்வரியிடம் எகிரியும் பயனில்லை, பணிந்தும் பயனில்லை என்றவுடன் புது யுத்தியை கையாண்டு இப்போது அவளுடன் இணைந்து தேநீர் பருகிக் கொண்டிருக்கிறான்.

காதல் கரை எட்டுமா???

ஆழியும், ஈஸ்வரியும் தங்களது கடந்த காலத்தை அவரவர் பார்வையில் கூற உள்ளனர். நாமும் என்ன நடந்தது என்று பார்த்துவிட்டு வருவோம்... 🌀🌀🌀🌀🌀
 
Top