• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

💘காதல்💘11

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
வேந்தனைப் பற்றி ஸ்வாதி கூறியதைக் கேட்ட ஆழி, அவளை திட்டிவிட தோழியவளோ விருட்டென நகர்ந்து சென்றுவிட்டாள். ஸ்வாதிக்கு தன்னை மூன்றாவது மனிதரைப் போல் தள்ளி வைத்துவிட்டாளே என்ற கோபம் தான்.

உயிருக்கு உயிரான நட்பு அமைய பல வருட பழக்கம் வேண்டுமா என்ன! அன்போடும் அக்கறையோடும் பகிரப்படும் ஒற்றை குறுந்தகவல்(தூது) கூட போதுமே! கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் போல!

சற்று பொறுத்து வகுப்பறை நுழைந்த ஆழி தன்னைக் கண்டதும் முகம் திருப்பிக் கொண்டு அமர்ந்திருக்கும் தோழியின் அருகே சென்று இடித்துக் கொண்டு அமர்ந்தாள். ஸ்வாதி நகர்ந்து அமர்ந்திட ஆழி மீண்டும் இடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

'நீ இப்போ தள்ளி உக்காருரேயா! இல்லே நான் எழுந்து போயிடவா!' என்ற ஸ்வாதியின் அம்பக மிரட்டலுக்கு, இணங்கி நகர்ந்து அமர்ந்தாள் ஆழி. ஆனாலும் 'நீ எங்கே போனாலும் நானும் உன்னோடு வருவேன்' என்ற செய்தியை நயனச் சிரிப்போடும், இதழ் விரிப்போடும் அவளைப் போல் கண்களாலேயே உரைத்துவிட்டு தான் அவளைவிட்டு நகர்ந்தாள்.

அந்த வாரம் முழுவதுமே மொத்த கல்லூரியும் கொண்டாட்டத்தில் மகிழ்ந்திருந்த நேரம், வேந்தன் இன்று ஒரு நாள் மட்டும் ப்ராக்டிக்கல்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தான். எனவே தான் முதலாமாண்டு முதுகலை உயிரி தொழில்நுட்பவியல் வகுப்பு மாணவர்கள் மட்டும் வகுப்பறையில் வேந்தனுக்காக காத்திருந்தனர்.

என்ன தான் பிற மாணவமணிகளைப் போல் வளாகத்தில் சுற்றித் திரிய முடியவில்லை என்ற வருத்தம் இருந்த போதும், வேந்தனுடன் செலவிடப்படும் இந்த ஒரு நாள் கூட ஒரு மணி நேரத்தைப் போல் தான் தெரியும் என்பதனால் இன்முகமாகவே சம்மதித்து அவனுக்காக காத்திருந்தனர்.

அந்த அளவிற்கு இனிக்க இனிக்க கலகலப்பாக பாடம் நடத்தக் கூடியவன் வேந்தன். மாணவர்களுக்கே சலைக்காது என்றால் மாணவிகளை சொல்லவா வேண்டும். பாதி கவனம் பாடத்தில் என்றால் மீதி கவனம் வேந்தன் மீது தான் இருக்கும். அதில் ஸ்வாதியைப் போன்று சகோதர பாசம் கொண்ட மாணவிகளும் அடக்கம்.

சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு மாணவன் சிரித்தபடியே உள்ளே நுழைந்து "ஹே கைஸ்... இன்னைக்கு நோ ப்ராக்டிகல் க்லாஸ். வேந்தன் சாருக்கு கொஞ்சம் வொர்க் இருக்காம்... சோ நாம இன்னைக்கு ப்ரீ தான்." என்று மராத்தியில் உரைத்தான்.

மாணவர்கள் இரண்டும் கெட்டான் மனதாய் சிறு வருத்தத்தினூடேயும் குதூகலிக்க, மாணவிகள் "ஓஓ... நோ" என்று முழு மனதாக சலித்துக் கொண்டனர். மாணவர்கள் மறைத்து வைத்திருந்த வேந்தனை பார்க்க முடியாத கவலை மாணவிகள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

செய்தி கூறிய மாணவனோ கூடுதல் தகவலாக, "சார் இன்னைக்கு புல்லா ஆடிடோரியம்'ல தான் இருப்பார். அங்கே போனா அவரை பார்க்கலாம்" என்று இனிய செய்தி கூறிச் சென்றான்.

மாணவிகள் படை ஒன்று குழுமி நிகழ்ச்சியரங்கம் செல்வதாக திட்டமிட்டனர். பிற மாணவிகள் இணைந்து ஸ்வாதியையும், ஆழியையும் அழைத்திட, ஸ்வாதி விருப்பமில்லை என்று கூறி இருப்பிடம் விட்டு நகரவில்லை.

தோழிகளிடம் ஸ்வாதியை தான் அழைத்து வருவதாகக் கூறி மற்றவர்களை முன்னால் அனுப்பி வைத்தாள் ஆழி.

"சுவி.... வா சுவி... நாமலும் போலாம்"

"நீ போ.... எனக்கு வர பிடிக்கலே"

"அப்போ வா கேன்டின் போகலாம்"

"எனக்கு பிடிக்கலே சொன்னது உன் கூட வர பிடிக்கலே... போதுமா!" என்றால் ஆழியைப் போலவே சிரித்துக் கொண்டே...

சிரித்த முகத்துடன் உரைக்கப்படும் கடிந்த வார்த்தைகள் எவ்வளவு வலி கொடுக்கும் என்பதனை சற்று முன் தன் தோழிக்குக் கொடுத்தவள் இப்போது இரண்டு மடங்காக பெற்றுக் கொண்டதில் அறிந்து கொண்டாள்...

சும்மா சொல்லிச் சென்றான் நம் மூத்தகுடி தாத்தன், 'கனி இருப்ப காய் கவர்ந்தற்று' என்று நினைத்துக் கொண்டு,

"நீ இல்லாம நான் மட்டும் போனா அந்த CM என்னை கடிச்சு குதறிடுவார்..." என்று வீம்புக்கென்றே வேந்தனை தங்கள் பேச்சில் இழுத்தாள். ஆனால் அது உண்மையும் கூடத் தான்.

"கடுப்பேத்தாதே மித்து..." என்று இப்போது ஸ்வாதி முழு கோபத்துடன் குரலை உயர்த்தினாள்.

தோழியை சமாதானம் செய்ய வேறு வலியில்லை என்று புரிந்து கொண்ட ஆழி, "இப்போ என்ன! எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு வேந்தன் சார்கிட்ட சொல்லனும் அவ்ளோ தானே! வா இப்போவே உன் முன்னாலேயே சொல்றேன்..." என்றாள்.

ஆழியை நம்பாத பார்வை பார்த்தால் ஸ்வாதி. எங்கே தன்னை கண்டு கொண்டுவிடுவாளோ என்று கொஞ்சமே கொஞ்சம் அஞ்சி, ‌கையில் கிடைத்த புத்தகங்களை மேசை இழுப்பறையில் போட்டுக் கொண்டே மீண்டும் தோழியை துரிதப்படுத்தினாள் ஆழி.

"வா... போலாம்... நான் ரெடி"

இருவரும் இணைந்து ஆடிடோரியம் சென்றனர். அங்கே வாசலில் அமர்ந்திருந்த ஆசிரியர்களிடம் வாலண்ட்ரி என்று பெயர் கொடுத்து உள்ளே செல்ல, இவர்களது பிரிவில் சீனியர், சூப்பர் சீனியர், ஜூனியர், சப் ஜூனியர் என அனைத்து மாணவ, மாணவிகளும் அங்கே தான் இருந்தனர். வேந்தனின் கட்டளைக்கும் கண்ணசைவிற்கும் நீ நான் என்று போட்டி போட்டுக் கொண்டு அலங்கார வேலைகளையும், இருக்கை அமைப்புகளையும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

"இத்தனபேர் இருக்க கூட்டத்துல எப்படி சொல்றது!" என்று யோசிப்பது போல் பாவனை செய்தாள் ஆழி.

ஸ்வாதி அவளை முறைத்துவிட்டு திரும்பிச் செல்ல முனைய, ஆழி அவள் கையைப் பிடித்து, "சரி... எப்படியாச்சும் சொல்லிடுறேன்... இங்கேயே என் கூடவே இரு" என்று அதட்டினாள்.

ஒவ்வொரு முறையும் ஆழி ஏதாவது வேலை செய்வது போல் வேந்தன் முன்னால் போய் நிற்க, அவனோ இருந்த பரபரப்பில் அவளை ஏறெடுத்தும் காணவில்லை. அவன் மேல் ஒருதலைக் காதல் கொண்டு அவனைச் சுற்றும் மாணவ பச்சைக்கிளிகளில் ஒன்றென நினைத்து விட்டான் போல... அதனால் தான் கவனமெடுத்து வேலையில் மட்டும் கவனம் செலுத்தினான்.

இரண்டு மூன்று முறை முயற்சி செய்தவள், மீண்டும் நட்பிடம் வந்து, "அவர் என்னை பார்க்கவே மாட்டேங்குறார் டீ... நான் என்ன பண்ணட்டும்!"

ஸ்வாதி விடுவதாக இல்லை. "கூப்பிடேன்... வார்த்தைக்கு வார்த்தை CM'னு அழைக்கிறேல... இப்பவும் ஒரு முறை அப்படி அழையேன்" என்று முகத்தை உம்மென வைத்துக் கொண்டு இன்றே சொல்லியே ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றாள் ஸ்வாதி.

"ஏய்... சுவி.... கொஞ்சம் ப்ராக்ட்டிகலா யோசி டீ... சும்மா இருக்க மனுஷன் கிட்ட நானா போயி வாய் கொடுத்த மாதிரி, எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு சொன்னா என்னை லூசு மாதிரி பார்க்கமாட்டாரா! நீ சொல்ற மாதிரி அவர் என்னை விரும்பியிருந்தா பரவாயில்லே... ஆனா சாதாரணமா 'நான் வருவேனா இல்லேயா'னு தெரிஞ்சுக்கிறதுக்காக கேட்டிருந்தா!!!" என்று இறைஞ்சாத குறையாக வினவினாள்.

ஒரு நொடி யோசித்த ஸ்வாதி தன் நெற்றியை நீவிவிட்டுக் கொண்டு, "நீ சொல்றதும் கரெக்ட் தான்... அவரும் நேத்து அதுக்கு மேல எதுவும் கேட்கவும் இல்லே. உன்னை தேடவும் இல்லே." என்று குழப்பம் படிந்த நெற்றியுடனேயே மொழிந்தாள்.

வேந்தனுக்கே அவனது தவிப்பு புரிந்திடாத போது அவனைச் சுற்றியிருப்போர்களுக்கு எப்படி புரியப் போகிறது!!!

ஆழிக்கோ ஸ்வாதியின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக இலகுவதைக் கண்டு அப்பாடா என்றிருந்தது. ஆனால் ஸ்வாதியும் முழு மனதாக இதனை விட்டுவிடுவதாக இல்லை.

"இன்னைக்கு அவருக்குமே வேலை அதிகம் தான் போல... பம்பரமாக இங்கேயும், அங்கேயும் சுத்திக்கிட்டே தான் இருக்கார். இதுல பேய் அடிச்சா மாதிரி இருக்குற உன் மூஞ்சிய பார்த்தா பாவம் பயந்திடுவார்... நாளைக்கு சொல்லிக்கலாம்" என்று வேந்தனுக்காக வருந்தியபடி கூறினாள்.

'நான் பேய் அறஞ்ச மாதிரி இருக்கேனா! ஏன்டி சொல்லமாட்ட! காலைல 'அபு'கிட்ட ஆரம்பிச்சு ஒருத்தர் மாத்தி ஒருத்தர்னு சிக்கி தவிக்கிற எனக்கு தானே தெரியும் என் நிலைமை என்னனு!'. என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டாள்.

மாலை ஆழி தன் அன்னையிடம் கூறியது போல், அம்புதிக்கு முன்னதாகவே இல்லம் வந்ததோடு மட்டும் அல்லாமல் அடர் சிவப்பு நிற சிறிய கரையுடன் கூடிய மெல்லிய பட்டு சேலையும் உடுத்தி தயாராக இருந்தாள்.

இங்கே அம்புதியோ வழக்கத்திற்கும் மாறாக தன் பணி முடித்து, தன் முன்னால் காதலைக் காணச் சென்றான். காலையில் நடந்த நிகழ்விற்கு அவளிடமிருந்து இதமான பதமான மருந்திடும் வார்த்தைகள் கிடைத்தால், இந்த குற்ற உணர்வு குறையும் என்று நினைத்து தான் அவளைத் தேடிச் சென்றான்.

அதன் காணரமாக தாமதமாகவே இல்லம் திரும்பிய அம்புதி தனக்கு இருக்கும் மன சோர்வில் எவரையும் சரியாக கவனியாது, தன் மாமனை மட்டும் பார்த்து, "நாள் எப்படி போச்சு மாமா?" என்றான்.

அவனது அசதி படிந்த முகத்தைக் கண்ட ஞானம், 'ஏனோ தானோ என்று தான் சென்றது' என்று கூற வந்தவர் கூட வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு, "நல்லபடியா இருந்துச்சு மாப்ளே... நானும் உங்க அத்தையும் பக்கத்துல காலார நடந்து போயிட்டு வந்தோம்." என்றார் பார்வையை வேறு புறம் வைத்துக் கொண்டு.

அம்புதியின் இல்லம் இருக்கும் இடம் சற்று ஜனசந்தடியான பகுதி தான். அவர்கள் இருக்கும் தெருவை விட்டு வெளியே வந்தால் சிறு வியாபாரிகளின் கடை வீதியும், கடைவீதியை விட்டு வெளியே வந்தால் பேருந்து சாலையும், அதன் இருமருங்கிலும் பெரிய பெரிய பெயர் பெற்ற கடைகளும் உள்ள பெருநகரம் தான்.

எனவே வீட்டைவிட்டு வெளியேறினால் நேரம் போவது தெரியாமல் சுற்றித் திரியலாம். ஆனால் மொழி தெரியாத ஊரில் எதுவும் வாங்குவது என்பது அதிக கடினமான விடயம் தான்.கொஞ்சம் அசந்தாலும் விலை அதிகமாக கூறி பணம் பரித்துவிடுவார்கள். இப்போது அது எல்லா இடங்களிலும் வாடிக்கையாகிவிட்டது தானே!

"எதுவும் வாங்கனும்னா சொல்லுங்க மாமா... வீக் என்ட்ல போகலாம்" என்று கூறி அறை நோக்கி நடந்தான். ஆனால் அவனுக்குள் ஒரு குறுகுறுப்பு. அனைவரும் தன்னை காண்பது போல். நின்று திரும்பிப் பார்த்திட அதுவே தான் நடந்து கொண்டிருந்தது.

பின்னே! காலை ஆழி சொல்லிச் சென்றதற்கு மாறாக அல்லவா அவன் கூற்று இருந்தது. அத்தை, மாமனை தழுவிய கண்கள் இப்போது கட்டியளை தழுவிட அப்போது தான் அனைவரும் எங்கேயோ செல்ல தயாராக இருக்கிறார்கள் என்பது புரிந்தது.

காலை இதழணைப்பிற்குப் பிறகு இப்போது தான் ஆழியை கண்ணெடுத்துப் பார்க்கிறான். "நான் குளிச்சுட்டு வர்றேன்... போலாம்" என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் எங்கே! என்ன! ஏது! என்று எதுவும் தெரியாமல் பொதுப்படையாக கூறிச் சென்றான்.

ஆழி அவனுக்கான தேநீரோடு உள்ளே நுழைய மீண்டும் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான். தன் உடைமைகளை ஒதுங்க வைப்பது போல், "எங்கே போகனும்?" என்றான்.

ஆழியிடம் எந்த பதிலும் இல்லை. ஆழியின் அமைதி ஏன் என்று புரிந்துவிட, மீண்டும் துவாலைத் துண்டை எடுத்து தோளில் போட்டபடி, வேறு புறம் பார்வையை வைத்துக் கொண்டு, "சாரி... காலைல என்னையும் அறியாம...." என்று திக்கி திணறி நிறுத்தினான்.

அம்புதி முழுதாக கூறி முடிக்க நேரம் கொடுத்து காத்திருந்தாள் ஆழி. ஆனால் அம்புதியால் இம்மி கூட வாய் திறக்க முடியவில்லை. காலை இருந்த மனநிலைக்கு முற்றிலும் எதிராக இருந்தது அவனது உள்ளம். உள்ளே இதயத்திற்கு பதிலாக சதைப் பிண்டம், பிணமாகக் கிடப்பது போல் ஓர் உணர்வு அவனுக்குள்.

உடல் உறுப்பு மட்டும் தனியாக சாகுமா! இதோ அம்புதியின் இதயம் மட்டும் செத்துக் கிடக்கிறதே! ஏதோ கூறிக் கொண்டிருந்தவன், வேறு ஏதோ உளறத் தொடங்கினான்.

"என் காதலுக்கு செஞ்ச துரோகம்..... அவளைச் சுமந்த இந்த இதயம் அவளுக்கு செய்த துரோகத்துனால கத்தி வெச்சு குத்தி கிழிச்ச மாதிரி, ரத்தம் சொட்ட, சொட்ட துடிதுடிச்சு செத்துட்டு இருக்கு டி... என் காதலுக்கும், காதலிக்கும் நான் உண்மையா இல்லே டி... அதான் இப்போ அதுக்கான தண்டனையை அனுபவிச்சுட்டு இருக்கேன்." என்று வலியைக் குறைக்கும் வழி தெரியாது தன் மேலேயே கோபம் கொண்டு, பற்களை நறநறவென கடித்தபடி புலம்பினான்.

அம்புதி படும் வேதனையைக் கண்டு கண்கள் கலங்கியபடி நின்றிருந்தாள் ஆழி. அவனது கலங்கிய விழிகளுக்கு நடுவே பார்க்கும் போது நிச்சயம் ஆழியின் கலங்கிய விழிகள் தெரிய வாய்ப்பில்லை. நொடியில் தன் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள்,

"துரோகமா! நீங்களா! அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா உங்களுக்கு?" என்ற கேள்வியில் பெண்ணவளை, தேங்கியிருக்கும் கண்ணீருக்கும் நடுவே கூர்ந்து கவனித்தான். மானினியின் முகத்தில் ஏளனம் ஏகத்திற்கும் தாண்டவம் ஆடியது.

உதிர்த்த வார்த்தைகளுக்கும், முக பாவனைக்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்க அம்புதி அவளை குழப்பமாகப் பார்த்தான்.

அலை கடல் நாமம் கொண்டவளே அதற்கான விளக்கத்தைக் கொடுத்தாள். "என்னை கிஸ் பண்ணியதுனால உங்க காதலுக்கும் காதலிக்கும் துரோகம் பண்ணிட்டிங்க அப்படி தானே!!! கேட்கவே வேடிக்கையா இல்லே!" என்றிட அம்புதி இப்போது வாய் திறக்கவில்லை. அவனது கண்ணீர் கூட காய்ந்து போனது.

"காதலானவள் மேல் தோன்றிய கற்பனையில் கட்டியளை நெருங்கியது, யார் யாருக்கு செய்த துரோகம்?" என்றவளின் இதழ்கள் மட்டும் அல்லாது வார்த்தைகளிலுமே ஏளனம் சற்றும் குறையவில்லை.



காதல் கரை எட்டுமா!!!