• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
அம்புதியின் மனதில் 'தனது காதலுக்கும், காதலிக்கும் தான் உண்மையாக இல்லை' என்ற வலி என்றும் இல்லாமல் இன்று அளவிற்கு அதிகமாக தோன்றிட, ஆழி வழமை போல் அவனது காயங்களை குத்திக் கிளறிவிட்டாள்.


ஆரம்பத்திலிருந்தே ஆழி கூற வருவதை அம்புதி காது கொடுத்துக் கேட்டதில்லை. என்றேனும் ஒருநாள் தான் தரும் காயங்களின் வலி தாளாமல் தன்னை எதிர்த்து கேள்வி கேட்பான் அன்று தனது மனதை எடுத்துரைக்க தனக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அவளுக்கு.


ஆனால் அந்த நாள் அன்றைய நாளாக அமைந்திடவில்லை. அதே சமயம் ஆழி உரைத்தப் பின்னால் தான், தனது உண்மையான தவறு அம்புதிக்கே புரிந்தது. தன்னுடைய மன வேதனையில் மட்டுமே அவ்வளவு நேரம் தவித்திருந்தவன், அப்போது தான் ஆழியின் இடத்திலிருந்து யோசித்து அவளது வலியை உணர்ந்தான்.


காலை அவளது கண்களிலிருந்து வடிந்த கண்ணீருக்கான அர்த்தமும் புரிந்திட, மெல்லிய குரலில் தலை நிமிர்த்தி மன்னிப்பு உரைத்து குளியலறை நோக்கிச் சென்றான்.

'உன் சாரி யாருக்கு வேணும் அபு. விஷப்பாம்பு கடிச்சா காயத்தை கீறிவிட்டு தான் அந்த விஷத்தை எடுக்கனும். அதைத் தான் நான் இப்போ செய்துட்டு இருக்கேன்' என்று தனக்கு முதுகு காட்டி விறைப்பாகச் செல்பவனைக் கண்டு மனதிற்குள் மொழிந்து கொண்டாள்.


சுடு நீரில் ஈஸ்வரி கொடுத்த வலியைக் கரைத்துக் கொண்டிருந்தவனுக்கு அது துளியும் குறைந்தபாடில்லை என்பது தெளிவாகவே புரிந்தது. வழக்கம் போல் தனது சிந்தனைகளை ஈஸ்வரியிடம் ஆரம்பித்து ஆழியிடம் கொண்டு வந்து நிறுத்தியிருந்தான். அதில் தனது வலியும் குறைந்தார் போல் தோன்றிட, இது என்ன வித்தை என்று தனக்குத் தானே அதிசயித்துக் கொண்டான்.


வெகு நேரம் கடந்தும் தண்ணீர் சத்தம் தவிர வேறு எந்த சத்தமும் இல்லாமல் போக ஆழி பதற்றமடைந்தாள். ஏற்கனவே வருத்தத்தில் இருந்தவனை மேலும் கொஞ்சம் வருந்தச் செய்துவிட்டோமோ என்று தாமதமாகத் தான் யோசிக்கத் தொடங்கினாள்.


மன அழுத்தத்திலும், குழப்பத்திலும் ஏதேனும் செய்து கொண்டால் என் செய்வேன்! என்ற எண்ணம் தோன்றிட, குளியலறைக் கதவை படபடப்புடன் தட்டினாள்.


"என்ன?"


ஆழியிடம் எந்த பதிலும் இல்லை. ஆனால் ஒரு பெரும் நிம்மதி. பதில் கூற மறந்து அப்படியே நின்று விட்டாள். தண்ணீர் குழாயை அடைத்துவிட்டு, இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு கதவைத் திறந்தான். ஆழியின் கண்களில் படபடப்பும், நிம்மதியும் ஒரு சேரத் தெரிந்திட, பார்வைகள் மட்டுமே அங்கே ஆட்சி செய்து கொண்டிருந்தது.


ஒரு காதல் ஏமாற்றிய நிலையில் மற்றொரு காதல் அவனுக்காக காத்திருப்பது போல் தோன்ற, ஆழியின் கண்களிலிருந்து தன்னை மீட்டு எடுத்தவன், "சீக்கிரம் ரெடி ஆகிட்டு வரேன்... நீ போ" என்றான் உறுதியான குரலில்.


பின் அம்புதியும் தயாராகி வர அன்றைய நாள் ஆழி திட்டமிட்டது போல் அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று வந்தனர். அம்புதி பெரும்பாலும் ஆழியுடன் தான் சுற்றித் திரிந்தான். ஆனாலும் அனுபவம் பெற்ற மூத்த தம்பதியருக்கு இளையவர்களுக்குள் சுமூக உறவு இல்லை என்று புரிந்து கொண்டனர். அதனை சரி செய்ய வழி தான் தெரியவில்லை அவர்களுக்கு.


கோவிலிலிருந்து திரும்பி வரும் போது அவர்கள் வீட்டு வாசலில் தற்போதைய மாடல் ராயல் என்பில்டு புத்தம் புதிதாக நின்றிருந்தது. ஞானபாண்டியன் கர்வமாக அதனை கைகளில் தடிவிக் கொடுத்தவர், அதன் சாவியை அம்புதியிடம் கொடுத்து,


"உங்களுக்குத் தான் மாப்ளே... காலைல அரக்கப்பரக்க ஓடி ட்ரெயினை பிடிக்கத் தேவையில்லே பாருங்க... நம்ம விகாஸ் கிட்ட தான் கேட்டேன்... இப்போ இந்த வண்டி தான் வயசு பசங்கல்லாம் விரும்புறதா சொன்னான். நல்லா தோரணையா இருக்குல்ல!!!" என்று வாசலில் நின்றிருந்த RE பார்த்து அவரே மெச்சிக் கொண்டார்.


"என்ன மாமா இது? நான் என்ன இன்னும் வயசுப் பையனா இப்படி ஸ்டைலா போய் இறங்குறதுக்கு!" என்று சங்கடமாக உரைத்தான்.


தனது முறுக்கு மீசையை மேலும் கொஞ்சம் முறுக்கிவிட்டுக் கொண்ட, "ஸ்டைலா இருக்கோ இல்லேயோ! கெத்தா இருக்கும் மாப்ளே! தோரணையா இருந்தாத் தானே நம்ம மேல பயம் இருக்கும்!"


தன் மாமனை எதிர்த்துப் பேசி பழக்கம் இல்லாத அம்புதியோ இம்முறையும் வாக்குவாதம் செய்ய விருப்பம் இல்லாமல், அவரது கால்களைப் பணிந்து வணங்கிட, அவரும் அவசரமாக "டேய்... என்னடா மாப்ள... இதுக்கெல்லாம் கால்ல விழுந்துகிட்டு..." என்று பழக்கதோஷத்தில் உரைத்துவிட்டு,


"இனிமே இதெல்லாம் என் கடமை மாப்ளே... உங்க சந்தோஷமும் என் பொண்ணு சந்தோஷமும் தான் எனக்கு முக்கியம்" என்று அவன் தோள் தொட்டு தடுத்து நிறுத்தி கட்டி அணைத்துக் கொண்டார்.


அம்புதியும் அவரை அணைத்தபடியே சிரித்துக் கொண்டே, "வெளியாட்கள் என்னைப் பார்த்து மதிப்பும், மரியாதையும் தந்தா போதும் மாமா... வீட்ல பாசம்" என்று சிரித்துக் கொண்டே உரைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டான். பேசியது தன் மாமனிடம் என்ற போதும் சொல்லிச் சென்ற செய்தி தன் மனையாளுக்கு தான் கூறிச் சென்றிருந்தான். ஆனால் அவள் தான் அதனை முழுமையாக கவனிக்கவும் இல்லை, காதில் வாங்கவும் இல்லை.


அவனது கூற்று தாமதமாகவே தான் ஞானபாண்டிக்கே புரிந்தது. 'தன்னைக் கண்டு தன் குடும்பம் பயப்படுவது போல் அவனைக் கண்டு அவன் குடும்பம் பயப்படத் தேவையில்லை' என்ற அவனது மறைமுகக் கூற்று புரிய 'தன் மகளின் வாழ்வு நிச்சயம் சந்தோஷமாக தான் இருக்கும்' என்ற பூரிப்பில் மீண்டும் ஒருமுறை தன் மீசையை முறுக்கிவிட்டு, சிரித்தபடி தன் மகளை தோளை அணைத்தபடி உள்ளே அழைத்துச் சென்றார்.


அன்றைய இரவும் இருவருக்கும் உறக்கம் இல்லா இரவாகத் தான் இருந்தது. படுக்கையில் சரிந்தபின் ஆழி அம்புதியிடம் மாலை அவனை வார்த்தைகளால் வதைத்ததற்கு மன்னிப்பு கேட்டிட, அதற்கு அவசியமில்லை என்று உரைத்து மறுபக்கம் திரும்பி படுத்துக் கொண்டான்.


ஷோரூமிலிருந்து அப்படியே வரவழைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் என்பதால் அடுத்த நாள் அதனை உபயோகப் படுத்த முடியாமல் போனது. எண் பலகை பொருத்தி விட்டு எடுத்துச் செல்வதாகக் கூறி அன்றும் மின்சார ரயிலில் தான் இருவரும் சென்றனர்.


அம்புதி இன்று ஆழிக்காக காத்திருந்து அழைத்துச் சென்றான். பற்றாகுறைக்கு அவளை முதல்வகுப்பு பெண்கள் பெட்டியில் ஏற்றிவிட்டு, பத்திரம் சொல்லி அனுப்பி வைத்தான். நடப்பது எதையும் ஆழியால் நம்ப முடியவில்லை. 'ஏன் இந்த திடீர் மாற்றம்!' என்ற குழப்பத்திலேயே கல்லூரி வந்து சேர்ந்தாள்.


அங்கே அடுத்த குழப்பம். முந்தைய நாள் தனது வேலை நிமித்தமாக ஆழியின் மேல் படிந்திடாத வேந்தனின் பார்வை அன்று அவள் மேல் நிலைத்து நின்றது. அதனைப் பார்த்த ஆழிக்குமே ஒரு நொடி பயம் தொற்றிக் கொள்ளத் தான் செய்தது. மறுபக்கம் ஸ்வாதியின் முறைப்பு வேறு.


'இவ வேற நானே இந்த ப்ரச்சனைய கண்டும் காணாம அப்படியே கடந்து போயிடனும்னு நெனச்சிட்டு இருக்கேன்... இவ பெரிய ஹீலியம் பலூனா ஊதி அதை என் கையில வேற தரனும்னு துடிக்கிறா... என்னை பார் என் ப்ரச்சனையைப் பார்னு ஊருக்கே ஷோ காட்டுறதுக்கு' என்று மேலும் சில நல்ல வார்த்தைகளை உபயோகித்து மனதிற்குள் திட்டி தீர்த்தாள்.


தோழி தன்னை வெறித்துப் பார்ப்பதை உணர்ந்து, ஆழி சிரித்து சமாளிக்க, "ச்சீ... வாயை மூடு.... வெளியே வரை கேக்குது... மானங்கெட்ட மைண்டு வாய்ஸ்" என்றாள் ஸ்வாதி.


அன்று அந்த கல்லூரியின் பவளவிழா(platinum jubilee) சிறப்பாக நடந்து கொண்டிருக்க, வேந்தன் சக ஆசிரியர்கள் ஓரிருவருடன் கலையரங்கத்தின் கடைசியில் அமர்ந்திருக்க அவனது மாணவர்கள் அவனை படை சூழ்ந்திருந்தனர்.


மாணாக்கர் எழுப்பும் கூச்சலில் அவ்வபோது திரும்பிப் பார்த்த போது தான் ஆழியின் கண்களுக்கு வேந்தன் தன்னைப் பார்ப்பது தெரிந்தது. கூச்சல் எழாத நேரம் சும்மாவேணும் ஒருமுறை ஆழி திரும்பிப் பார்க்க ஸ்வாதியிடம் மாட்டிக் கொண்டாள்.


அதன்பிறகு ஆழி திரும்பிப் பார்க்கவில்லை தான். ஆனால் ஸ்வாதி திரும்பித் திரும்பி பார்த்து 'வேந்தன் என்ன செய்கிறான்? யாரைப் பார்க்கிறான்?' என்று நோட்டமிடத் தொடங்கினாள். வேந்தனும் ஸ்வாதி தன்னை திரும்பிப் பார்க்கும்போது வேறுபுறம் திரும்பிக் கொள்வான்.


அதுவே அடுத்து அவள் எடுத்த விபரீத முடிவுற்கு காரணமாக அமைந்திருந்தது. ஆழியிடம் கூட சொல்லாமல் கொள்ளாமல் எழுந்து வேந்தனிடம் சென்று,


"சார்... உங்களை பத்தி எனக்குத் தெரியும்... எப்பவும் உங்க மேல பெரிய மரியாதை இருக்கு எனக்கு. நீங்க எப்போதும் தப்பு செய்ய மாட்டிங்க... ஸ்டூடண்ட்ஸ் எங்களுக்கு நீங்க எப்பவும் ரோல் மாடல் தான். அப்படி இருக்கனும்னு தான் நீங்களும் விரும்புவிங்கனு தெரியும்...


நீங்க மித்துவே என்ன நெனச்சு பாக்குறிங்கனு தெரியாது... நீங்க அவளை எப்படி நெனச்சிருந்தாலும் ஒரு விஷயம் மட்டும் உங்ககிட்ட சொல்லனும்னு தோனுச்சு... அதை சொல்ல தான் வந்தேன். அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு..." என்று ஒரு நொடி நிறுத்திட வேந்தனின் முகத்தில் அதிர்ச்சி... உடன் இருந்த மற்றொருவனுக்கும் கூட...


"உங்களை தப்பா நெனச்சு இதே சொல்லலே... இந்த பார்வை பரிமாற்றம் மத்தவங்க கண்ணுக்கு தெரிஞ்சு கல்யாணம் ஆன பொண்ணை இன்னொருத்தர் கூட சேர்த்து வெச்சு பேசுறதுக்கு முன்னாடி அதை தடுக்கனும்னு நெனச்சு தான் சொல்றேன்... நான் ஏதாவது தவறா பேசியிருந்தா சாரி சா..." அவள் முடிப்பதற்கு முன்பே வேந்தன் அங்கிருந்து கோபம் கொண்டு சென்றுவிட்டான்.


அவனது கோபம் கொண்ட ஸ்வாதி தான் திண்டாடிப் போனாள். 'சொன்னால் புரிந்து கொள்வார் என்று நினைத்து தானே கூறினேன். இவர் ஏன் கோபம் கொள்கிறார்!' என்ற குழப்பத்திலேயே அவளது இருப்பிடம் வர அங்கே சீனியர் புவன் ஆழியின் அருகில் ஸ்வாதியின் இருக்கையில் அமர்ந்திருந்தான்.


ஸ்வாதி கூறும்போது வேந்தனின் அருகில் தான் நின்றிருந்தான் புவன். ஆழியுடன் வம்புவளர்ப்பதற்காகவே தமிழ் கற்றிருந்தவனுக்கு ஸ்வாதி கூறியது தெள்ளத் தெளிவாகவே புரிந்தது. தான் கேட்ட செய்தி உண்மையா என அறிந்துகொள்ள ஆழியிடம் வந்து அமர்ந்திருந்தான்.


ஸ்வாதி வந்த பின்னும் இருவரும் பேசிக் கொண்டிருக்க அவளுக்கு அது இன்னும் கொஞ்சம் கடுப்பேற்றியது. ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் அவர்களது நட்பைக் கண்டு மெய்சிலிர்த்து நின்றதும் அவள் தான்.


"திருமணம் ஆகிவிட்டதா?" என்று அவன் மராத்தியில் கேட்க, பதிலுக்கு அவள் மேலும் கீழும் தலையசைத்து ஆமோதித்தாள். "ஏன் என்கிட்ட சொல்லாம மறச்சே?'" என உரிமையாக கோபம் கொண்டு வினவினான்.


"சொல்லியுருந்தா என்ன செய்திருப்பே?"


"உன்னை என்னோட ஆளுனு சொல்லி வம்பு பண்ணியிருக்க மாட்டடேன்" என்று தவறிழைத்தவனைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு அவளை நேருக்குநேர் காணாமல் எங்கோ பார்த்து கூறினான்.


அவன் முகம் திருப்பி தன்னைக் காணச் செய்து, "தீ'னு சொன்னவுடனே நாக்கு சுட்டுடாது... இங்கே நம்மல சுத்தி இருக்குறவங்களும் ஆண், பெண் நட்பை புரிஞ்சுக்க முடியாத காட்டுமிராண்டிங்க இல்லே... எல்லாருக்கும் நம்ம நட்பு புரியும்."


"பொதுவா இந்த மாதிரி வதந்தி கிளப்பி விடுறது இந்த காலேஜ்ல இயல்பு தான். ஆனா அடுத்த அந்த பொண்ணை எந்த விதத்திலும் அப்ரோச் பண்ணமாட்டோம். அப்படி அப்ரோச் பண்ற பசங்க கடைசி போய் விழுற புதைக்குழி காதல் தான். அதான் என் பயமே! இனி நான் உன்கிட்ட சாதாரணமா பேசினாக் கூட காதலு கதை கட்டிடுவானுங்க..." என்று வருத்தமாக உரைத்தான்.


"அப்படி கதை கட்டும்போது பார்த்துக்கலாம்... அதுவரை ஒரு பிரச்சனையும் இல்லே..‌." அப்போதும் சீனியரின் முகம் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்ட ஆழி "சொல்லபோன நீ எனக்கு உதவி தான் செய்திருக்கே... நீ அப்படி ஒரு வதந்தி கிளம்பிவிட்டதுனால தான் மத்த சீனியர் பசங்க என்னை வம்பு பண்ணாம இருந்தாங்க... ஃபீல் ஃபிரீ மேன்... யூ ஆர் ஆல்வேஸ் மை பெஸ்ட் ப்ரெண்ட் மேன்.... ஏலே டோன்ட் வொரி பீ ஹாப்பி" என்று சினிமா வசனம் பேசி அவனை இயல்புக்குக் கொண்டு வந்தாள்.


அதனை புரிந்து கொண்டவனும் ஸ்நேகப் புன்னகை சிந்தி கண்களால் நன்றிவுரைத்தான். இருவரும் தத்தம் தாய்மொழியின் தான் பேசிக் கொண்டனர். முழுமையாக பேசத் தெரியாத மொழியிலும் கூட எவ்வளவு அழகான புரிதல்கள்!


நட்பு கொண்டாட மொழி இடையூறு இல்லை என்பதனை இருவரும் நிரூபித்து இருந்தனர். உண்மை அன்பிற்கு இடையே பொதுப்படை மொழி கூட அவசியமற்றது என்று புது இலக்கணம் படைத்திருந்தனர்.


ஆழி புவனுக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்துவிட்டு ஸ்வாதியின் கை பிடித்து இழுத்து அருகில் அமர்த்தி, "இப்போ ஹாப்பியா? உன் வேந்தன் சார் ஏமாறாம காப்பாத்திட்டேயா?" என்றாள் தோழியின் மனம் படிக்க விரும்பி.


ஸ்வாதியோ முகத்தை சலிப்பாக வைத்துக் கொண்டு "ஹாப்பி தான்" என்றாள் ஏனோ தானோ என்று.


"அதுக்கு ஏன் டி சலிச்சுக்கிறே! நீ நெனச்சது தான் நடந்திடுச்சே!"


"ம்ம்ம்... ஆமா ஆமா... ஆனா சார் என் மேல் கோவிச்சுட்டு போயிட்டாரு" என்று வருத்தமாக உரைத்தாள்.


ஆழி அவசரமாக திரும்பிப் பார்க்க அங்கே வேந்தன் இல்லை. கண்களை உருட்டி தலையில் கை வைத்து "ஐயோ... போச்சு... போச்சு... செத்தான் சேகரு" என்று பதற்றம் கொண்டவள், எழுந்து சென்று வேந்தனைத் தேடினாள்.


காதல் கரை எட்டுமா!!!
 
Top