• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
ஆழி அறைக்குள் அனுமதிக்கப்பட்ட ஐந்தாவது நிமிடம் அம்புதியும் அனுமதிக்கப்பட்டிருந்தான். இருவரும் தங்கள் அறை இருந்த கோலத்தையும் அங்கே செய்யப்பட்டிருந்த பஞ்சணை அலங்காரத்தையும் கண்டு பேச்சு மூச்சற்று நின்றிருந்தனர்.

அம்புதி அறைக்குள் நுழைந்த அடுத்த நிமிடமே ஈஸ்வரியைத் தான் நினைத்திருந்தான். 'ஓஓஓ... இந்த ஏற்பாடு நடக்குதுனு தெரிஞ்சு தான் மேடம் அவ்ளோ பேசினாங்களா!!!' என்று தோன்றிய நொடி அவளது வாடிய முகம் நினைவில் வர அம்புதியின் இதழ்கள் அவனையும் அறியாமல் சற்றே ஏளனச் சிரிப்பில் வளைந்தது.

ஆழியின் மனதோ 'இந்த பெருசுங்களுக்கு என்ன தான் அவசரமோ தெரியலே! கல்யாணம் ஆனதுமே பிள்ளை பெத்துக்கனும்... நாங்க இன்னும் சகஜமா பேசிக்க கூட ஆரம்பிக்கலே... அதுக்குள்ள இந்த வேலை பார்த்து வெச்சிருக்காங்கலே...' என்று எண்ணியபடி தன் அன்னை, தந்தையை கரித்துக் கொட்டியது.

இன்றைய இளைய தலைமுறைகளின் அதிவேகம் (அனைத்தும் அறிந்து கொள்வதில் காட்டும் ஆர்வம்) மற்றும் அதி நிதானம் (குழந்தை பிறப்பை தள்ளி வைப்பது) இரண்டிற்கும் இடையே இருக்கும் மிகப் பெரும் இடைவெளியின் பொருள் விலங்கிடாத பெற்றோர்களோ நல்லநேரம், பஞ்சாங்கம் என பார்த்து பழக்கப்பட்டதன் காரணமாக, அதனை கைவிட முடியாமல் திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன பிறகும் கூட தங்கள் மனநிம்மதிக்காக இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தனர்.

தன் மாமனின் பஞ்சாங்கம் பார்க்கும் குணம் அறிந்திருந்த போதும், சூழ்நிலை கைதியாய் திருமணம் செய்து கொண்ட அம்புதியால் அவரை இப்போது இந்த சூழ்நிலையில் திட்டாமலும் இருக்க முடியவில்லை. 'என் மாமனுக்கு அதுக்குள்ள பேரபுள்ளைய பார்க்குற ஆசை வந்திடுச்சு போல! இருக்கட்டும் இருக்கட்டும்... அவரு ஆசைப்படி பேரனை பெத்து கொடுத்து சும்மா சும்மா முறுக்கிட்டு திரியிற அந்த முறுக்கு மீசையை என் பையனை வெச்சே மலிக்க வைக்கிறேனா இல்லேயா பாரு!' என்று வீரதீர சவால் விடுத்து, இதழ் மட்டும் அசைத்து திட்டித் தீர்த்தபடி நின்றிருந்தான்.

அப்போது தான் தனக்கு இரண்டடி முன்னால் நிற்கும் தன் மனையாளைக் கண்டவன், 'இவ என்ன சேரிலாம் கட்டி, பால் செம்போட ரெடியா நிக்கிறா! அப்போ இவளுக்கு இந்த ஏற்பாடு எல்லாம் தெரியுமா? தெரிஞ்சுமா காளி அவதாரம் எடுக்காமா இன்னும் பவ்வியமா நின்னிட்டு இருக்கா! அதான் மேடம் அல்ரெடி சொல்லிட்டாங்களே! என் அம்மா அப்பா முன்னாடி சந்தோஷமா இருக்குற மாதிரி நடிக்கத்தான் செய்வேன்னு...

அதான் அங்கே ஒன்னும் எதிர்ப்பு சொல்லாம ரெடியாகி வந்திருப்பா... இப்போ சிக்கியது நான் தானே என்கிட்ட தான் எகுறுவா! இன்னைக்கு எனக்கு ஃபஸ்ட் நைட் நடக்குதோ இல்லேயோ... லாஸ்ட் நைட்டா இல்லாம இருந்தா சரி தான்' என்று தன் இற்கிழத்திக்கும் சில நல்மொழிகளை மொழிந்து விட்டு மீண்டும் ஒருமுறை அறையை நோட்டமிட்டான்.

'ஆனாலும் இந்த ஆன்ட்டீஸே எல்லாம் சும்மா சொல்லக் கூடாது.... என்னமா பீல் பண்ணி ரூம் டெக்கரேட் பண்ணிருக்காங்க... அனுபவிக்கத் தான் நமக்கு கொடுத்து வைக்கலே!' என்று நினைத்தபடி புயல் வேகத்தில் பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

அவனுக்கும் குழந்தை பெற்றுக் கொள்வதில் உடன்பாடு உண்டு தான். ஆனால் அவனது வாழ்க்கை திட்டமே வேறாக இருந்தது. முதலில் தன் வாழ்க்கை ஆழியுடன் தான் என்ற நிதர்சனத்தை தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே போல் ஆழிக்கும் அதனை உணர்த்திட வேண்டும். அதன் பிறகு தங்களுக்குள்ளான புரிதல்கள், வெறும் உடன்பாடுகளைப் போல் அல்லாமல் நம்பிக்கையின் அஸ்திவாரங்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

எந்த அக்னியை சாட்சியாகக் கொண்டு ஆழியை தன் பதியாக ஏற்றானோ அதே அக்னியின் முன்னிலையில் தன் முன்னால் காதலை துறந்தபின் தான் இல்லற வாழ்வை துவங்க நினைத்திருந்தான்.‌ அது கூட தன்னவளுக்கு தன் மேல் நூறு சதம் நம்பிக்கை வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாகத் தான்...

அனைத்திற்கும் மேலாக ஆழியின் படிப்பு... படிப்பை பாதிக்காத வகையில் தங்கள் வாழ்வை வழிநடத்திச் செல்லும் தெளிவு அம்புதிக்கு உண்டு என்ற போதும், இந்த மூன்று ஆண்டு கால இடைவேளை தனது எண்ணங்களை ஒன்றன் பின் ஒன்றாக திட்டமிட்டபடி நிறைவேற்றிக் கொள்ள கிடைத்த கால அவகாசமாகத் தான் அவன் கருதியிருந்தான்.

இருவரும் ஒரே நேரம் ஆழ்ந்த சுவாசம் எடுத்துக் கொள்ள அம்புதியின் மூச்சுக் காற்று தன் முதுகைத் தீண்டிய நொடி சிலிர்த்து போனாள் ஆழி. முகம் காட்டாமல் நின்றது எவ்வளவு நல்லதாகிப் போனது என்று நினைத்து தன் முகச் சிவப்பை மறைத்து, பால் செம்பை பக்கத்தில் மேசையில் வைத்தாள்.

மெத்தை முழுதும் பரவியிருந்த வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்களை மெத்தை விரிப்போடு சேர்த்து மடித்து அப்படியே அறையின் ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, வேறு ஒரு விரிப்பு எடுத்து விரித்து விட்டாள்.

கொசுவலை கட்டும் கம்பிகளில் பூக்கள் தோரணம் கட்டப்பட்டிருக்க, அதன் மேலேயே கொசு வலையை கட்ட சற்றே போராடிக் கொண்டிருந்தவளை, அவள் அன்பன் அம்புதியோ பால் செம்பை எடுத்து தன் பங்கு பாலை குடித்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கைகளை உயர்த்தி நின்றவள் தன் கோலம் உணராது, வலையைக் கட்டுவதில் மட்டும் கவனம் செலுத்திட, அந்த ஐந்தடி இரண்டு அங்குல மெய்யெழுத்தின், மூன்று அங்குல இடையினம் மொத்தமாகத் தெரிந்தது. மெல்லினம் கூட இலைமறைகாயாய் அவ்வப்போது தெரிந்திட, அம்புதிக்கோ குடித்துக் கொண்டிருந்த பால் நாசியில் ஏறி, புரையேறிக் கொள்ள இருமத் தொடங்கினான்.

திடீரென இருமுபவனை நின்ற நிலையிலேயே திரும்பிப் பார்த்தவள், அவன் கண்கள் மேய்ந்த இடம் கண்டு சடாரென கைகளை இறக்கி சேலையை இழுத்து மறைக்க முயற்சிக்க, அதற்குள் கால் இடறி பஞ்சு மெத்தையில் சரிந்தாள். எசகு பிசகாக விழுந்தவளின் தேகம் மறைக்கத் தவறியது அவளது துகில்.

தையலவள் உடலில் சுடு குருதி பாய, பீச் வண்ண சேலைக்கும் அவளது தங்க நிற மேனிக்கும் வித்தியாசம் தெரியாமல் போக, தன்னையும் மறந்து தம்மேயின் அழகை ரசித்தவன், 'இந்த கருவாடு எப்போ இவ்வளோ கலர் ஆனா!' என்று அதிசயித்தபடி கண்ணெடுக்காமல் நின்றிருந்தான்.

நுண்ணிடையாள் காந்தனவனின் பார்வையில், நாணம் கொண்டு மேலும் கொஞ்சம் சிவந்த படி, அவசர அவசரமாக உடையை சரி செய்த கொண்டு எழுந்து அமர்ந்தாள். பெண்ணவளின் அவசர வேலையில் நிகழ்விற்கு வந்தவன், அவளது இடையிலிருந்த விழிகளை நகர்த்தி வதனத்திற்கு கொண்டு வர, இப்போது அங்கிருந்து விலக மறுத்து சண்டித்தனம் செய்தது அவனது விழிகள்.

'அழகி டி நீ... என்ன கண்ணு டி இது... யப்ப்பா..‌. என்னோட த்ரீ இயர்ஸ் ப்ளானிங் எல்லாம் இந்த கண்ணை பார்த்தா த்ரீ செகென்ட்ஸ்ல காணாம போயிடும் போலயே!' என்று எண்ணியவன் தன்னையும் மறந்து அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான்.

வஞ்சியவளுக்கோ இதயம் தடதடக்க, அமர்ந்திருக்கும் நிலையிலும் கூட கால்கள் வழுவிழந்தது போல் அசைவற்றுப் போக, கொஞ்சம் கொஞ்சமாக பயம் கூடிக் கொண்டே போனது. அது அவள் முகத்திலும் கூட கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கியது.

வில்லென வளைந்த புருவங்களையும், அதில் அம்பென காதல் மொழி பேசும் இரு நயனங்களையும் மட்டும் கண்டு மதி மயக்கம் கொண்டிருந்த அம்புதியோ, முழங்கால்களை மடக்கி குழந்தை போல் மெத்தையில் தவழ்ந்து அவளை நொடிக் நொடி நெருங்கி அவனவளுள் கிலி பரப்பிக் கொண்டிருந்தான்.

தன் நெருக்கத்தால் பயத்தில் முத்துமுத்தாய் வியர்த்து நின்ற பெண்ணவளைக் கண்டு மயக்கம் தெளிந்தவன், இதழ் மறைவில் பற்களைக் கடித்து அடுத்த நொடியே அவள் கையிலிருந்த கொசுவலையை பிடிங்கிக் கொண்டு எழுந்தான்.

கொசு வலையை அதன் கம்பிகளில் கட்டியபடி, 'இவ இப்படி பயந்துட்டு இருந்தா மூனு வர்ஷம் என்ன! முப்பது வர்ஷம் ஆனாலும் ஒன்னும் நடக்காது... இதுல பூத்தோரணம் வேற' என்று பல்லைக் கடித்தபடி மெல்லிய குரலில் முனுமுனுத்து, அதனை அறுத்து எறிய வந்தவன், பின் அதற்கும் மனம் இல்லாமல் விட்டுவிட்டான். கொசுவலையை கட்டி முடித்து அதனை சரி செய்துவிட்டு தனது இடத்தில் சென்று படுத்துக் கொண்டான் அவன்.

ஆழிக்கோ அப்பாடா என்று ஒரு புறம் இருந்தாலும், அவனது கோபம் அவளை வருத்தமடையச் செய்திருந்தது. மனதிலோ பல யோசனைகள்... 'கொசுவலைய வாங்க தான் அப்படி வந்தாரா? ஒருவேளை அந்ந்ந்த ஐடியால பக்கத்துல வந்திருந்தா! ச்சே ச்சே இருக்காது... அவ்வளவு சீக்கிரம் ஈஷ்'ஸே மறந்திருக்கமாட்டாரு... அப்படினா அன்னைக்கு மாதிரி ஈஷ் நியாபகத்துல என்னை நெருங்கியிருப்பாரா!' என்று பலவற்றை சிந்தித்துக் கொண்டே வாடிய முகத்துடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அம்புதியோ முழங்கையை மடக்கி நெற்றியில் வைத்து பாதி முகத்தை மறைத்தாற்போல் படுத்திருந்தான். மூச்சுக் காற்று சீராக வந்த போதும், அவனும் தூங்காமல் ஏதோ ஒன்றை யோசித்துக் கொண்டிருக்கிறான் என்பது தெளிவாகவே புரிந்தது.

ஆம்... அவனும் ஆழ்ந்த சிந்தனையில் தான் இருந்தான். அவன் சிந்தனைகளின் நாயகி அவனையே வெறித்துக் கொண்டிருக்கும் ஆழி தான். 'நல்லா தான் வாயடிக்கிறா! மல்லுக்கு மல்லு, சண்டைக்கு சண்டைனு வரிஞ்சு கட்டிக்கிட்டு தான் எப்பவும் நிக்கிறா! என்னை வார்த்தையால காயப்படுத்த நினைக்கும் போது, துளியும் அவள் முகத்தில் பயம் இருக்காது... ஆனா நானா அவளை நெருங்கக் கூடிய நேரங்கள்ல எங்கிருந்து தான் வருமோ அத்தனை பயமும்... நடிக்கிறாளானு பார்த்தா அப்படியும் தெரியலே... ஆனா ஏன் இந்த பயம்?

இவ இப்படினா, இன்னொருத்தி வேற ஒரு தினுசா திரியிறா? அவளுக்கு அவ செய்யிறது மட்டும் தான் சரி... ஒருவேளை ஆழியோட இந்த பயம் தான் ஈஸ்வரி என்கிட்ட அவ்ளோ கான்ஃபிடென்ட்டா நெருங்க காரணமா இருக்குமோ!' என்று நினைத்து அக்காள், தங்கை இருவர் மீதும் கோபம் கொண்டவன், சற்று நேரத்திற்கு முன் மொட்டை மாடியில் நடந்த உரையாடலை நினைத்துப் பார்க்கத் தொடங்கினான்.

இரவு உணவு முடித்துவிட்டு ஆழியை தயார் செய்ய வெங்கடேஸ்வரி தங்களது அறைக்கு அவளை அழைத்துச் சென்ற அந்த இடைவெளியில் ஞானம், அம்புதி மற்றும் ஈஸ்வரியுடன் வாசலின் முன்னால் தெருவில் இறங்கி சிறிய நடைபயணம் மேற்கொண்டார். இருவரிடமும் வேலை மற்றும் படிப்பு பற்றி பேசியபடி, ஊரைப் பற்றி அவர்களது கருத்தையும், இந்த ஒரு வாரத்தில் தான் பார்த்து அறிந்து கொண்டதையும் பகிர்ந்து கொண்டார்.

குளிரின் காரணமாக அம்புதி ஞானத்தை வீட்டிற்குள் அழைத்தான். உள்ளே என்ன நடந்து கொண்டிருக்கும் என்பதை அறிந்திருந்த ஞானமோ இருவரையும் மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்ல, அங்கேயும் அவர் மட்டும் கேள்வியாளராக இருக்க மற்ற இருவரும் அவர் கேட்பதற்கு மட்டும் பதில் கூறிக் கொண்டிருந்தனர்.

ஈஸ்வரியோ முகத்தில் டன் கணக்கில் சோகத்தை சுமந்து நின்றிருந்தாள். அதனைக் காணக் காண அம்புதிக்கு எரிச்சலும், சலிப்புமாகத் தான் இருந்தது. அவளது சோகங்களைக் கண்டு கடந்த இரண்டு வாரங்களாக, அவளுக்காக அவளைவிட அதிகப்படியாக தான் வருந்தி நின்றதை நினைத்து நினைத்து தன்மேலேயும் கோபம் கொண்டான்.

கோபத்தில் ஈஸ்வரியை துட்சமாகக் கருதி முறைத்துக் கொண்டிருக்க, அதனை ஞானம் கண்டு கொண்டார். அதுவும் ஒரு நொடி தான். அதற்குள் அவரது துணைவி அவரை அழைக்க, அம்புதியும் தன் பார்வையை இயல்பாக்கியிருந்தான். ஞானமும் இருளில் தான் தான் ஏதோ தவறுதலாக எண்ணிவிட்டோம் போல என்று நினைத்து அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.

ஞானம் இருவரையும் தனிமையில் விட்டுச் செல்ல, அவர் தலை மறைந்த அடுத்த நொடியே ஈஸ்வரி அழத் தொடங்கினாள். மங்கையவள் கண்ணீரைக் கண்டவுடன் அம்புதியின் கோபம் மறைந்து கசந்த முறுவல் வந்து ஒட்டிக்கொள்ள, சற்றே ஏளனமாக,

"நீ எதுக்கு டி இப்போ கண்ணை கசக்கிகிட்டு இருக்கே! உன்னை லவ் பண்ணி உன் அக்காவை கட்டிக்கிட்ட நான் தான் அழனும்" என்றான்.

"நீங்க அழ வேண்டாம் மாமா... அந்த நிலைமை உங்களுக்கு வர வேண்டாம். உங்க லைஃப் ஆழி கூட சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும்... ஆனா ஆழி தான் உங்களை புரிஞ்சுக்காம எப்போ பாரு உங்க கூட சண்டை போட்டுகிட்டே இருக்காளே! அதை நெனச்சா தான் மாமா எனக்கு மனசு கஷ்டமா இருக்கு" என்றாள்...

'அவளது சண்டைகள் கூட இப்போலாம் சுகமா தான் டீ இருக்கு' என்று தன்னையும் அறியாமல் தன் மனதோடு அவளிடம் மொழிந்து கொண்டிருந்தவன், தன் சிந்தனை செல்லும் விதம் கண்டு அவனே அதிசயித்து, சற்றே இதழ் விரித்து சிரித்துக் கொண்டான்.

அம்புதியிடம் இந்த சிரிப்பை எதிர்பார்த்திடாத ஈஸ்வரி இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த மனக் குமுறலை கொட்டத் தொடங்கினாள். "நீங்க என்னை அவாய்ட் பண்ணும் போதே இனி நான் உங்களுக்கு தேவையில்லேனு நீங்க முடிவே பண்ணிட்டதா நான் புரிஞ்சு கிட்டேன் மாமா..." என்றிட, அம்புதிக்கு சுல்லென கோபம் எகிறியது.

'நான் ஏதோ இவளை தப்பா யூஸ் பண்ணிட்டு தேவை தீர்ந்த..... இல்லே இல்லே என் தேவைக்கு வேறு ஆள் கிடச்சதால இவளை தூக்கி எறிஞ்சுட்ட மாதிரில பேசுறா இவ' என்று நினைத்தவன் திட்ட வாய்யெடுக்க, ஈஸ்வரி அவனது கோபத்தை சற்றும் புரிந்து கொள்ளாமல் கை உயர்த்தி அவனைத் தடுத்து அவளே பேசத் தொடங்கினாள்.

"உனக்காகத் தான், நீ வாழ வேண்டிய பொண்ணு, நாளைக்கு உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமையும்... அப்போ நம்ம காதல் உன் வாழ்க்கையை அழிச்சிடக் கூடாதுனு நெனச்சு தான் இதெல்லாம் பண்றேன்னு சொல்லாதிங்க மாமா..." என்று அவன் இதைத் தான் கூற விழைகிறான் என்று நினைத்து உரைத்தாள்.

"ஈஷ்... இப்போ ஏன் தேவை இல்லாத பேச்...." என்று சற்றே கடிந்த குரலில் கூறத் தொடங்கியவன் அவளது அதிர்ச்சி கண்டு பாதியில் நிறுத்தினான்...

அம்புதியின் அழைப்பில் கனப்பொழுதில் அதிர்ந்தே போனாள் ஈஸ்வரி... "நீங்க ஆசையா அழைக்கிற தேஜூ எங்கே போனா மாமா? உங்களுக்கு கல்யாணம் ஆன பின்னாடியும் கூட என்னை தேஜூ'னு தான் அழைச்சிங்க மாமா... ஆனா இப்போ!!! ஒரு மாசத்துலேயே எவ்ளோ பெரிய மாற்றம்!!! இனி குழந்தைலாம் பிறந்தா நான் யாருன்னு கேட்பிங்களா மாமா?" என்று கண்ணீர் வடிய வலிகளைச் சுமந்த முகத்தோடு வினவினாள்.

அவள் கூறிய பின் தான் அம்புதிக்கே அந்த அழைப்பு கருத்தில் பதிந்தது. ஆனாலும் அவன் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், "எல்லாமே ஒருநாள் மாறத் தான் வேணும் ஈஷ்... அதை அக்சப்ட் பண்ணி தான் ஆகனும்... உனக்கும் கல்யாணம் ஆகும்... நீயும் மாறுவே" என்றான்.

"என்னால உங்களைத் தவிர வேற யாரையும் உங்க இடத்துலே வெச்சு பார்க்கவும் முடியாது... உங்களை மறக்கவும் முடியாது மாமா...

இனி நீங்க ஆசைப்பட்ட மாதிரி நல்லா படிச்சு, நல்ல வேலைக்கு போயி என் குடும்பத்தை நானே பார்த்துப்பனே ஒழிய, இன்னொருத்தனை கல்யாணம் பண்ணி இந்த வயித்துல அவன் வாரிசை சுமக்க மாட்டேன்." என்றாள் ரோஷமாக...

அவளது வார்த்தைகளில் நொடியில் கலங்கிப் போனது அம்புதியின் கண்கள்... அதனை அவளிடம் இருந்து மறைக்க நினைத்தானோ என்னவோ! சட்டென அவளிடமிருந்து பார்வையை விலக்கி எதிரே தெரிந்த இருளை வெறிக்கத் தொடங்கினான்.

ஈஸ்வரியோ இன்று புதிதாய், சற்று அதிகயமாகவே தைரியம் வாய்க்கப் பெற்றவளாய் அம்புதியை நெருங்கி அவன் கைகளை கோர்த்துக் கொண்டு அவனது பூஜங்களில் தலை சாய்த்து "நீங்களும் என்னை மறந்திடமாட்டிங்கல்ல மாமா? என்னைக்கா இருந்தாலும் உங்களோட முதல் காதலும் முதல் காதலியும் நான் தானே! உங்களாலேயும் என்னை அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது மாமா... எனக்குத் தெரியும்" என்று உறுதியாகக் கூறினாள்.

அதற்குள் ஞானம் படியேறி வரும் சத்தம் கேட்க, அம்புதியிடமிருந்து பிரிந்து தனது கண்களையும் துடைத்துக் கொண்டு இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள் ஈஸ்வரி. அம்புதியும் உணர்வுகள் துடைத்து எடுக்கப்பட்ட ஓவிய முகமாய், அமைதியாய் எதிர் கொண்டான் தன் மாமனை.

கீழே தன் மகளை தன் பதியோடு இணைந்து ஆசிர்வதித்து வந்த ஞானம் தன் இன்னொரு மகளிடம் கண்களாலேயே ஏதோ ரகசியம் கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தார்... மாமனும் மருமகனும் கீழே இறங்கி வரும்போது அங்கே ஈஸ்வரி இல்லை. நடப்பது எதுவும் புரியாத அம்புதியோ குழப்பத்துடன் தான் தங்கள் அறைக்குள் நுழைந்தான். அங்கு நிலவிய சூழ்நிலை அவன் மன சஞ்சலங்களை முற்றிலுமாக மாற்றியிருந்தது.

ஈஸ்வரியின் வார்த்தைகளையும், அவளது நெருக்கத்தையும் நினைத்துக் கொண்டிருந்தவனது கண்கள் மீண்டும் கண்ணீர் சொரிய, இவ்வளவு நேரம் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த ஆழி தன் பெருவிரல் கொண்டு அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டு, "அபு" என்று தன்னையும் அறியாமல் அழைத்திருந்தாள்.

ஆழியின் விரல்பட்ட நொடியே இலகியிருந்த அம்புதி, அவளது அழைப்பில் மொத்தமாக குழந்தையாக மாறி தன்னவளது நெஞ்சத்தில் தஞ்சம் அடைந்திருந்தான். அவனது கைகள் பெண்ணவள் இடையை வளைத்துப் பிடித்து அணைந்திருந்தது.

அம்புதியின் திடீர் அணைப்பில் நெஞ்சம் தடதடக்க, உடல் உதற, பதற்றத்தில் செய்வது அறியாது அசைவற்றுக் கிடந்தாள் ஆழி. அனைத்தும் ஒரு நொடி தான். ஆணவனின் விழிநீரின் வெம்மை, தன் உள்ளமதை உரச, கனப்பொழுதில் விழியடைத்து நின்றது அவளது கண்ணீர். அடுத்த நிமிடமே அவனது சிரம் அணைத்து கேசம் கோதி தன் நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டாள்.

அம்புதி எனும் ஆறடி ஆணழகன், ஆழி எனும் ஐந்தடிப் பதுமைக்கு ஏற்றார் போல் தன் உடலைக் குறுக்கி அவளுள் மொத்தமாய் தொலைந்தும் போனான்.

காதல் கரை எட்டுமா!!!
 
Top