• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

💘காதல்💘9

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
சிரித்த முகமாக வேக எட்டுகள் வைத்து தந்தையின் அருகே சென்று, அவர் தோளில் சாய்ந்து,

"ப்பா..." என்று அழைத்திட, அவரும் கண்ணில் நீர் அரும்பியபடி தன் புத்திரியை பாந்தமாக அணைத்துக் கொண்டார்.

அங்கிருந்த நால்வருக்குமே இது புதுவிதமான உணர்வைக் கொடுத்திருந்தது‌.‍ ஞானபாண்டியை இதுவரை வெள்ளை வேட்டி, சட்டை மற்றும் வானம் பார்த்து நிமிர்ந்திருக்கும் மீசையுடன் கம்பீரமாக மட்டுமே தான் அனைவரும் பார்த்திருக்கிறனர். இப்படி அன்பொழுக பார்க்க கிடைப்பது அத்திப் பூவைப் பார்ப்பது போல் அறிதான ஒன்று தான்.

அதே போல் ஞானபாண்டியன் என்ன தான் குடும்பத்தின் மேல் அதீத அன்பு வைத்தவராக இருந்த போதும், தன் உடன்பிறந்தோர்களின் பிள்ளைகளைக் கூட தன் பிள்ளையாகவே எண்ணி வளர்த்திருந்தபோதும், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தன் மகளுடன் கை கோர்த்து கூட நடந்தது இல்லை.

அவரது அணைப்பும் அருகாமையும் ஆழியின் குழந்தைப் பருவத்துடனேயே முடிந்திருந்தது. ஓலை குடிசையில் அவளை அமர்த்திய நாளிலிருந்தே இருவருக்குள்ளும் சிறிய இடைவெளி ஏற்பட்டிருந்தது. அவள் வளர வளர அந்த இடைவெளியும் வளர்ந்து கொண்டே தான் சென்றது.

ஞானபாண்டியனும் உப்பளம் மற்றும் வியாபாரம் என இரண்டிலும் தன் வருமானத்தை பலமடங்கு உயர்த்தும் துடிப்பில் முழுமூச்சாக இறங்கிடவே, மகள் தன் அருகிலேயே இருந்த அந்த நாட்களில் அவருக்கு அந்த இடைவெளி பெரிதாக தெரியவில்லை. ஆனால் திருமணம் முடிந்த இந்த ஒரு மாதத்தில் தன் இல்லத்து இளவரசியின் நகல்படம் மட்டுமே தன்னுடன் இருக்க, அவரது உயிரும் தன் மகளுடன் இணைந்து நூல் பிடித்துக் கொண்டு வெகு தொலைவு சென்றது போல் உணர்ந்தார்.

இன்று, இந்த இனிய பொழுது அந்த இடைவெளி அனைத்தையும் நொடியில் தகர்த்து அவரது அணைப்பைப் பரிசாகக் கொடுத்திருந்தது. "நல்லா இருக்கிங்களா ப்பா?" என்ற நடுங்கிய அவளது குரலில் 'ஆயிரம் தான் அன்னையிடம் மட்டுமே அலைபேசி விசாரிப்புகள் தொடர்ந்திருந்தபோதும், அன்னை, தந்தை இருவரும் ஒன்றாக நேரில் நிற்கும் போது முதல் அன்பு தந்தையாகிய தன்னிடம் தான் வெளிப்பட்டிருக்கிறது' என்று சற்றே பெருமிதமாக உணர்ந்தவர், மன நிறைவோடு,

"எனக்கென்ன டா!... என் பொண்ணை என் மனசுக்கு பிடிச்ச பையனுக்கே கட்டி கொடுத்த தெம்புல ரொம்ப நல்லா இருக்கேன் டா... நீங்க எப்படி இருக்கிங்க?"

என்ன தான் கேள்வி தன் மகளிடம் கேட்டிருந்தாலும், பதிலை எதிர்பார்த்தது அம்புதியிடம் தான். எனவே அவர் அம்புதி முகத்தைப் பார்த்திட, அவனோ புன்னகைத்தானே தவிர பதில் கூறவில்லை. அவரது பார்வை சென்ற திசை அறியாத ஆழி, "நல்லா இருக்கோம் ப்பா" என்றாள்.

வந்தவர்களது உடைமைகளை அம்புதி, அவர்களுக்கென்று ஒதுக்கிய அறையில் எடுத்து வைத்தவன், "நீங்க ஒரு ஒருமணி நேரம் தூங்கி ரெஸ்ட் எடுங்க மாமா, விடியவும் பேசலாம்" என்றுரைத்து, அனைவரும் பார்க்கும்படியாகவே ஆழியை கண்களால் அழைத்தான்.

ஆழிக்கு அவனது சமிக்ஞை புரிந்தபோதும், அதனை கண்டு கொள்ளாதது போல் தன் அன்னையிடம் சென்று "வாங்க ம்மா..." என்று தனது அன்னையை அழைத்துச் சென்றபடி, ஊரில் உள்ள குளம், குட்டை, ஏரி எனத் தொடங்கி பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் நாய், குட்டிபோட்டது வரை நலம் விசாரித்தாள்.

"போன வாரம் மழை விழுந்ததா சொன்னிங்களே ம்மா! நம்ம உப்பளத்துல ஒன்னும் பிரச்சனை இல்லையே!"

‌ "அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லே டா. பெரியப்பா உப்பளம் தான் சேதாரம் கொஞ்சம் அதிகமா இருந்தது. வழக்கம் போல உன் அப்பா நஷ்டத்தை பங்கு போட்டுகிட்டதுனால மராமத்து வேலையும் ஈஸியா முடிஞ்சிடுச்சு..."

"ம்ம்ம்... என் கல்யாணம் முடிஞ்ச பின்னாடி தான் விகாஸ் அண்ணே கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்த கால்ல நின்னாங்க!!! இப்போவாச்சும் பொண்ணு பார்க்க சம்மதிச்சாங்களா இல்லேயா?"

"அவங்க அப்பா வரன் பாத்துக்கிட்டே இருக்காரு. அப்பாவும், அம்மாவும் பார்த்து முடிவு பண்ணினா போதும்னு சொல்லிட்டான். ரொம்ப தங்கமான பையன்.!"

"தங்கமும் இல்லே தகரமும் இல்லே! ஒரு பொண்ணு விடாம ஊருக்குள்ள எல்லா பொண்ணுக்கும் லவ் லெட்டர் கொடுத்து பாத்திடுச்சு அண்ணே... என் ஃப்ரெண்ட்ஸ் கிட்டேயே பேப்பர் நீட்டியிருக்கு உங்க தங்கம்... யாரும் லவ்வே அக்சப்ட் பண்ணிக்கலே... எங்கே கல்யாணமே நடக்காம போயிடுமோனு பயம் அதுக்கு. அதான் இத்தனை ட்ராமாவும்... ஆனா பாருங்க இன்னமும் இந்த ஊரு அவங்களைத் தான் நல்லவே...ன்னு நம்புது" என்று ஏற்ற இறக்கத்தோடு நக்கல் தொனியில் உரைத்தாள்.

அத்தனையும் அவள் அன்னையின் காதில் கூறிய ரகசிய பேச்சுகள் தான். சத்தமாக மட்டும் உரைத்திருந்தால், இந்நேரம் ஞானபாண்டியன் பார்வையாலேயே பஸ்பம் ஆக்கியிருப்பார். ஊரிலிருக்கும் தன் அண்ணன் மகனுக்கு இங்கேயே அர்ச்சதையை வேறு ஆரம்பித்திருப்பார்.

"ஏய்... நீ இப்படி பேசுறது உன் அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சது அவ்ளோ தான்... எனக்கும் சேர்த்து வசவு வாங்கித் தருவே போல... கல்யாணம் ஆகவும் உனக்கு வாய் கூடிப் போச்சு... எல்லாம் அம்... மாப்பிள்ளை கொடுக்கிற செல்லம் போல" என்று தன் மகளின் மனதைப் படித்திட வேண்டியே கடைசி வாக்கியத்தை சேர்த்துக் கூறினார்.

கவனம் எடுத்து தன் உணர்வுகளை வெளிக் காட்டாது தடுத்திருந்த போதும், அன்னையுள்ளம் இன்னும் எதுவும் இருவருக்கும் சரியாகவில்லை என்று நன்கு அறிந்து கொண்டது.

ஆழி மட்டும் அல்ல அனைவருக்குமே வெளிப்படையாக தெரிந்த உண்மை அம்புதி ஞானபாண்டியனுக்காகத் தான் சிறு சுணக்கமும் இன்றி ஆழியை மணந்தான் என்பது.

வழக்கம் போல் அனைத்து பெற்றோர்களையும் போல் தான் அவளது பெற்றோரும் நினைத்திருந்தனர், 'திருமணம் முடிந்தால் அனைத்தும் சரியாகிவிடும்' என்று. ஆழி தன் அன்னைக்கு பதில் கூறாத போதும், அவளது முகத்தில் நாணத்தின் சாயலோ, சிணுங்களோ இல்லாமல் போகவே தன் மகளின் உள்ளத்தைத் தெள்ளத்தெளிவாக படித்துக் கொண்டார்.

அதில் அவரது முகம் வாடிட, அதனை அறியாத ஆழி பேச்சை மாற்ற வேண்டி, "ஊர் திருவிழா அடுத்த மாசம் வருதே! அந்த திருவிழாக்கு வர்ற அத்தை மகள் யாரையாச்சும் பிடிச்சு அண்ணனுக்கு நானே கட்டி வெச்சிடுறேன்... என் அண்ணனுக்கு நான் பொண்ணு பார்க்காம வேற யார் பார்க்கப்போறா!" என்று சந்தோஷமாக மொழிந்திட, சற்று நேரத்தில் அன்னை மனமும் அதில் லயித்தது.

ரயில் பயணத்தில் அழுப்பு கொண்டிருந்த ஞானபாண்டி, குளித்து முடித்து அறைக்குள் நுழைய, ஆழி தன் அன்னையின் தோளைக் கட்டிக் கொண்டு வாயடித்துக் கொண்டிருந்தாள். அம்புதியோ அறை வாயிலில் சாய்ந்து, கைகளை கட்டிக் கொண்டு அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.

அதனைக் கண்ட ஞானம் மகளிடம், "பாப்பா... மாப்பிள்ளை உனக்காக காத்திருக்காரு பாரு... அப்பவே உன்னை அழைச்சாரு... நீ என்னடான்னா அதைக் கூட கவனிக்காம இங்கே வந்து உன் அம்மா கூட வாயாடிட்டு இருக்கே! போமா... போய் மாப்பிள்ளைய கவனி..." என்று பக்குவமாக எடுத்துக் கூறினார்.

தன் அன்னை தந்தையின் 'அம்புதி' என்ற அழைப்பு 'மாப்பிள்ளை' என்று மாறியிருப்பது பெண்ணவளுக்குப் புரிந்திட, 'அவர்களால் எப்படி அவ்வளவு எளிதில் மாற்றக் கொள்ள முடிகிறது! விருப்பமின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் மனதை ஏன் யாரும் யோசிக்கவில்லை!' என்று புதைந்திருந்த தன் காயங்களை மீண்டும் கீறிக் கொண்டு அதற்கும் சேர்த்து வேதனையுற்றாள்.

இவை அனைத்திற்கும் சேர்த்து வைத்து அம்புதியை முறைத்தபடி, மனமே இல்லாமல் அன்னையைப் பிரிந்து எழுந்து சென்றாள் ஆழி. தங்கள் அறைக்குள் நுழைந்ததும், கதவைத் தாழிட்டுவிட்டு "இப்போ எதுக்கு ஓவரா சீன் போட்டுட்டு இருக்கிங்க! நீங்க கூப்பிட்டும் நான் தான் வரலேனு தெரியுதுல... அப்பறமும் ஏன் அங்கேயே நின்னுட்டு இருந்திங்க? ஏன் நான் இல்லாம நீங்க இருந்ததே இல்லேயா! எனக்காக வெய்ட் பண்ண சொல்லி யார் சொன்ன உங்களை!" என்று மெல்லிய குரலில் சிடுசிடுத்தாள்.

"நான் ஒன்னும் விருப்பப்பட்டு உனக்காக வெய்ட் பண்ணலே... அதே மொதோ புரிஞ்சுக்கோ.... இனி நீயே வந்து கெஞ்சினாலும் உனக்காக எந்த இடத்திலேயும் வெய்ட் பண்ணமாட்டேன்... போதுமா!" என்று பதிலுக்கு சிடுசிடுத்தவன், மெத்தையில் குப்புறப் படுத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான்.

அதற்கும் அவளிடம் பெரிதாக எந்த எதிர்வினையும் இல்லை. பின்விளைவு பற்றி அறியாமல், பேச்சு முடிந்தது என்று நினைத்து அவளும் சென்று படுத்துக் கொண்டாள். ராத்தூக்கம் இன்றி அசதியுற்றிருந்தவள், படுத்த நொடியில் உறங்கியும் போனாள். ஆனால் அம்புதி தான் அப்போதும் உறக்கம் இன்றி பலவற்றை சிந்தித்து குழப்பமுற்றிருந்தான்.

காலை சூரியன் சன்னல் வழியே தன் பொன் கரங்களால் பெண் மேனி தழுவிட, அரக்கப்பரக்க எழுந்தவள், அருகில் அம்புதி இல்லாமல் இருப்பதைக் கண்டு, 'அச்சச்சோ பழி வாங்கிட்டாரே! என்னை எழுப்பாம எழுந்து போயிட்டாரே! இன்னைக்கு அப்பாக்கிட்ட இதுக்கே செம டோஸ் வாங்கப் போறேன் போ. காலைல தான் பாசமா கட்டிபிடிச்சாரேனு சந்தோஷப்பட்டா... இப்போ இந்த அபு பண்ற வேலைக்கு என்னை பிடி பிடினு பிடிக்க போறாரு' என்று புலம்பிய படி குளியலறைக்குள் புகுந்து தன் அவசர குளியலை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்.

தன்னவன் பணிக்குச் சென்றிருப்பான் என்று அறிந்திருந்தும் கண்களால் அவனைத் துளாவிட, நினைத்தது போல் அவன் அங்கு இல்லை.

மாறாக அறை வாயிலில் நின்றிருந்தவளை பாரபட்சமின்றி முறைத்தனர், ஞானபாண்டியும், வெங்கடேஸ்வரியும்... 'ஏன் வெய்ட் பண்ணுனிங்கனு சண்டை போட்டதுக்கு சிறப்பா செஞ்சிட்டாரு...' என்று மீண்டும் மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.

"ஏன் டி...வேலைக்கு போற மனுஷனுக்கு என்ன வேணும்னு பார்த்து சமைச்சுக் கொடுத்து வழியனுப்பமாட்டேயா! கும்பகர்ணியாட்டம் தூங்கிட்டு இருக்கே! பாவம் மாப்பிள்ளே தினமும் வெளி சாப்பாடு தான் சாப்பிடுவேன்னு சொல்லிட்டுப் போறாரு! இதுல அவரு பொண்டாட்டிய எழுப்ப வேண்டாமாம், அவளாவே எப்போ எழுந்து வர்றாளோ அப்ப எழுந்து வரட்டும்னு ரெக்வெஸ்ட் வேற..."

'உன் மாப்ளே தானே! ரொம்ப நல்லவரு... இத்தனை நாள் அவர் செய்ததை அவர் மேல தப்பே இல்லாத மாதிரி சொல்லிட்டு... நான் சமைச்சு வெச்சதை சொல்லாம, போட்டு கொடுத்துட்டு போயிருக்காரு! சரியான கோக்கு மாக்கு பிடிச்சவன்' என்று மீண்டும் மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.

"ஒரு நாள் கொஞ்சம் அசதில தூங்கிட்டேன் ம்மா... எப்பவுமே நான் தான் சீக்கிரம் எழுந்துப்பேன்"

"கிழிச்சே... ஒரு மனுஷன் எழுந்து போறது கூடத் தெரியாம தூங்கிட்டு இருந்திருக்கே! உன்னையெல்லாம் கட்டிக்கிட்டு மாப்ளே தான் கஷ்டபடுறார்"

'படட்டும் படட்டும்... என்னை கட்டிகிட்டா கஷ்டம் தான் படனும்னா... அவர் ஒருத்தரே நல்லா கஷ்டபடட்டும்...' என்று அன்னையின் மேல் எழுந்த கோபத்திற்கு மனம் குளிரக்குளிர அம்புதியை சபித்தாள்.

"வெங்கடா.... சாப்பிட எடுத்துவை, மூனுபேருமா சேர்ந்து சாப்பிடலாம்" என்று தன் தாரம் தன் இளவரசியை திட்டுவது பொறுக்காமல், மறைமுகமாக சப்போர்ட் செய்து மனைவியை அங்கிருந்து நகர்த்தினார் ஞானம்.

"நீ இன்னைக்கு காலேஜ் போகலேயா பாப்பா?"

"இல்லே ப்பா... ஏற்கனவே உங்களை பார்த்ததும் லீவ் போடுற ப்ளான்ல தான் இருந்தேன். இப்போ லேட்டா வேற ஆகிடுச்சு" என்று தந்தையின் அருகே சென்று அமர்ந்தாள்.

அந்த நாள் பல அறிவுரைகளுடனும், சில சுவாரசிய அரட்டைகளுடனும் மூவருக்கும் இனிதே கடந்து சென்றது.

அங்கே கல்லூரியில் மித்ராவைக் காணாமல் வேந்தன் தான் ஒருவித தவிப்பாய் உணர்ந்தான்.

'அவள் இல்லாத வெறுமை தன்னை ஏன் வதைக்கிறது! அவளை மேல் தனக்கு அப்படி ஒன்றும் ஈடுபாடு இல்லையே! சொல்லப் போனால் அவளது ஷேஸ்டைகள் தனக்கு பிடிக்காத ஒன்று தானே! அவள் இன்று இங்கே இருந்திருந்தால் இன்னேரம் சந்தேகத்திற்கு சிறிதும் இடமின்றி முட்டிக் கொண்டும், முறைத்துக் கொண்டும் தானே இருந்திருப்போம்!

அது தானே பார்க்கும் போதெல்லாம் நடந்திருக்கிறது... இன்று மட்டும் ஏன் மனம் அவளை அளவிற்கு அதிகமாக தேடுகிறது!' என்று தன்னையும் மறந்து தன் இயல்பிலிருந்து திரிந்து, தனக்குத் தானே சித்தரவதைபட்டுக் கொண்டிருந்தான்.

மேலும் ஸ்வாதியை அழைத்து 'அவள் இன்று வருவாளா? மாட்டாளா?' என்று வினவ, ஸ்வாதியோ தெரியாது என்று தான் ஒன்றும் அறியாத நிலையில் உண்மையை உரைத்துவிட்டாள். ஆனால் அடுத்த கணமே ஆழிக்கு வேந்தனின் விசாரிப்பை தட்டச்சு செய்யவும் மறக்கவில்லை.

தனது அலைபேசிக்கு வந்த குறுந்தகவலைப் படித்த ஆழி, அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மனதிலோ, வேந்தனிடம் இயல்பாகப் பேசும் வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் இது பற்றி பேசியே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

மாலை வழக்கத்தைவிட அதி விரைவாகவே இல்லம் வந்திருந்தான் அம்புதி. அவன் உள்ளே நுழையும் போதே தேநீர் மணமணக்க, சற்று நேரத்தில் ஆழி தேநீரோடு அவர்கள் அறையில் வந்து நின்றாள்.

குரல் எழுப்பாமல் தலை குனிந்தபடி, தேநீர் கோப்பையோடு நிற்பவளை ஏற இறங்க பார்த்தான் அம்புதி. மெல்ல வெளியே எட்டிப் பார்த்தவன் கண்களில் அடுப்பறையிலிருந்து ஆழியின் அன்னை தங்களை நோட்டமிடுவது தெரிந்திட, அவரை கவனியாதது போல் பாவனை செய்து, இதழ்கடை நகை வரவழைத்துக் கொண்டு, ஆழியைப் பார்த்தபடியே கதவை அடைத்தான்.

அடுத்த நொடியே அவனது புன்னகை மறைந்திருந்தது. மாறாக எகத்தாள புன்னகை வந்து ஒட்டிக் கொள்ள "என்ன! இவ்வளவு பவ்வியமா வந்து நிக்கிறே! ஓவர் டோஸ்ஸா?" என்று நக்கலாக வினவினான்.

"ம்ம்ம்" என்று மட்டும் கூறினாள்.

இன்னமும் முகம் தொங்கி நிற்பவளைக் காண அம்புதிக்கு குதூகலமாய் இருந்தது போல், "ஹஹஹா... ஹிஹிஹீ... ஹுஹுஹூ........." என்று அகர வரிசையில் சிரித்து கடுப்பேற்றினான்.

ஆழியோ கையிலிருக்கும் தேநீரையும், அவனையும் மாற்றி மாற்றிப் பார்த்து வைத்திட அவளது எண்ணம் புரிந்தவன், சுடு தேநீரை தன் மேல் வாரியிறைப்பதற்கு முன் அவள் கையிலிருந்த தேநீரைப் பரித்து, சிப்புசிப்பாய் அருந்தத் தொடங்கினான்.

"நேத்து என்ன சொன்ன!" என்றான் இன்னும் என் ஆட்டம் முடியவில்லை என்ற த்வனியில்.

"நானா! நான் எதுவும் சொல்லலேயே!" என்று அவளும் இளித்து சமாளித்துப் பார்த்தாள்.

"இல்லேயே!... ஒரே ஒரு நாள் மட்டும் தான் இந்த ரூம்ல தங்குவேனு ஏதோ சொன்னா மாதிரி இருந்ததே?" என்றான் தனக்குத் தானே நியாபகப் படுத்திக் கொள்வது போல்...

"ஹீஹீஹீ.... அறியாபிள்ளை தெரியாம சொல்லிட்டதா நெனச்சு மன்னிச்சு விடுங்களேன்!!!" என்று மீண்டும் சமாளித்தாள்.

இன்னும் கொஞ்சம் அவளை கெஞ்ச வைக்கும் நோக்கில், "அப்பறம் இன்னைக்கு காலைல கூட ஏதோ....." என்று யோசிப்பது போல் பாவனை செய்தவன் கைகளை தாவிச் சென்று பிடித்துக்கொண்டு கெஞ்சத் தொடங்கினாள் ஆழி.

"ப்ளீஸ்..... ப்ளீஸ்..... அதெல்லாம் மறந்திடுங்களேன்.... ப்ளீஸ்.... நேத்து தான் நீங்க கெஞ்சவும் கொஞ்சம் டூ மச்சா பிகேவ் பண்ணினேன். இன்னைக்கு சத்தியாம அப்படி நெனச்சு பேசல..... நான் இல்லாம நீங்க நிம்மதியா தூங்குவிங்கனு நெனச்சு தான் அம்மா கூட போனேன்." என்று தான் செய்த காரியத்திற்கு உண்மையான விளக்கம் கொடுத்தாள்.

ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கியபோதும் கண்டு கொள்ளாத அம்புதியோ, "அப்போ நேத்து என்னை கெஞ்சவிடும் ஆசைல தான் அப்படி பண்ணிருக்கே!" என்று ஒற்றை புருவம் உயர்த்தி அவன் கேட்ட தோரணையில் மீண்டும் அமைதியானாள் அவள்.

ஒரு வழியாக அவன் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே அவளை தன்னிடம் கெஞ்சவிட்டு, காலில் விழுகாத குறையாக கதறவிட்டு அதன் பிறகே மன்னித்துவிட்டான் அவளின் அபு.



காதல் கரை எட்டுமா!!!