பெங்களூர்.
காலை உணவிற்காக வீட்டு அங்கத்தினர் சாப்பாட்டு மேசை முன்பாக குழுமியிருந்தனர். (வாங்க அவங்களை அறிமுகம் பண்ணிக்கலாம்) அண்ணன் சித்தார்த், அவன் மனைவி வசந்தி, அவர்களது மகன் 4வயது அருணவ், அவர்களுடன் சித்தார்த்தின் ஒரே தங்கை சத்யபாரதி, (இவள் தான் நம் கதாநாயகி, இப்போ கதைக்குள் போகலாமா) வழக்கமாய் வளவளக்கும் அருணவ்கூட அன்று மௌனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அன்று இரவு சத்யா சென்னைக்கு கிளம்புகிறாள். அருணவிற்கு அத்தையை பிரிவது கஷ்டமாக இருந்தது. வசந்திக்கும் பிடிக்கவில்லை. அவளை தடுக்க முயன்று தோற்றுப் போயிருந்த அண்ணி, கடைசி முயற்சியாக மெல்ல பேச்சை எடுத்தாள்.
"சத்யா, உன்னை வேலைக்கு போக வேண்டாம்னு நான் சொல்லலை. வெளியூரில் வேண்டாம்னு தான் சொல்றேன்" என்று ஆரம்பிக்க... சத்யபாரதி தட்டில் பார்வையை பதித்து இருந்தாள்.
சத்யாவின் அருகில் அமர்திருந்த சித்தார்த், "என்ன வசு,வேலை எங்கே பார்த்தால் என்ன? அவள் கிளம்பற நேரத்தில எதுக்கு ஆரம்பிக்கிறே?" அங்கே அவள் தங்கறதுக்கு வீடு, போக வர வண்டி எல்லாமும் நீயே ஏற்பாடு பண்ணிவச்சுட்டு இப்படி தட்டி தட்டிப் பேசினால் அவளுக்கு சங்கடமா இருக்காதா? சந்தோஷமா அனுப்பி வைம்மா" என்றான்.
உணர்ச்சியற்ற பாவனையுடன், மேலே பேசாமல், சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் வசந்தி.
அன்று இரவு...
சத்யபாரதி பெட்டியில் தன் துணிமணிகளை அடுக்கி முடித்து சரி பார்த்திருந்துக் கொண்டிருந்தபோது, வசந்தி கையில் இரண்டு விதமான அழகிய கைப்பைகளுடன் அங்கே வந்தாள்.
"ஹை அழகா இருக்கு. யாருக்கு அண்ணி?"
"உனக்காகத்தான் வாங்கினேன் சத்யா, வேலைக்கு போறப்போ தேவைப்படுமே"!
"ஓ! தாங்க்யூ, மை ஸ்வீட் அண்ணி" சத்யா வசந்தியை அணைத்துக் கொண்டாள்.
"ஆதரவாய் தலையை வருடிவிட்டு, அவளை தள்ளி நிறுத்தி, "உன் தாங்க்ஸை நீயே வச்சுக்கோ, என்றவள், தொடர்ந்து," அங்கே போய் வேலை வேலைன்னு இருக்காதே, உன்னையும் பார்த்துக்கொள் சத்யா" அக்கறையுடன் வசந்தி சொல்ல,
"ஓ! ஷ்யூர் அண்ணி, நீங்க கவலையே படாதீங்க " என்றவள் பெட்டியில் அந்தப் பைகளை வைத்து மூடினாள். அவளயே வருத்தமாய் பார்த்திருந்த வசந்தியின் விழிகள் லேசாய் கலங்கிற்று!
"சத்யா ரெடியா? நேரம் ஆச்சு, வா" சித்தார்த் அங்கே வர சட்டென்று துளிர்த்த கண்ணீரை தட்டிவிட்டு நகர்ந்து சென்றாள் வசந்தி.
"நான் ரெடி அண்ணா,"சத்யா கிளம்பினாள். பெட்டியை பணியாள் கொண்டு செல்ல..
"வசு, சீக்கிரம் வா," மனைவிக்கு குரல் கொடுத்தான்,சித்தார்த்!
"இதோ வந்துட்டேன் அத்தான்" அவசரமாய் முகத்தை திருத்திக் கொண்டு வந்து சேர்ந்த வசந்தி ஏறிக் கொள்ள... கார் கிளம்பியது.
சத்யா இயல்பாக நடந்து கொண்டபோதும் வசந்திக்கு மட்டும் அவள் முன்பு போல இல்லை என்பது புரிந்தது, அதன் காரணம் தான் வசந்திக்கு இன்று வரை புரியவில்லை..
☆☆☆
சென்னை...
அந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் மூன்றாம் தளத்தில் இருந்த ஒற்றை படுக்கை அறை கொண்ட வீடு அழகாய் இருந்தது. வீட்டிற்கு ஏற்றவாறு பொருட்களும் பொருத்தமாய் வாங்கிப் போட்டிருந்தாள் வசந்தி. திருமணம் செய்து பெண்ணை தனிக்குடித்தனம் வைப்பது போன்ற தோற்றம் தந்தது வீடு். அவளும் கூட "தனியா"கத் தான் குடியிருக்கப் போகிறாள். அண்ணியின் அன்பில் சத்யாவிற்கு கண்கள் லேசாய் பனித்தது.
சென்னையில் வீடு பார்த்து முடித்த கையோடு வந்து பால் காய்ச்சிவிட்டு இரண்டு நாட்கள் தங்கினார்கள். காரணம் சத்யாவிற்கு அந்த இடம் புதிது என்பதால் அவளுக்கு எது எங்கே என்பதெல்லாம் காட்ட வேண்டும், கூடவே அவளது அலுவலகத்தையும் பார்க்கலாம் என்ற எண்ணம் வசந்திக்கு! வயதுப் பெண் தெரியாத ஊரில் தனியாக இருக்கப் போகிறாள் என்பதால் அவளுக்கு உள்ளூர லேசாக பயம்.
முன்னதாக தங்கை கேட்டுக் கொண்டதற்கு இணங்க சித்தார்த்தன் விசாரித்ததில் திருப்தி தான். அவள் பாதுகாப்பாக இருப்பாள் என்ற நம்பிக்கையும் உண்டாகியிருந்தது. ஆகவே தான் எல்லாமும் விசாரித்து விட்டதாகவும் பயப்பட தேவையில்லை என்றும் முடித்துவிட்டான்.
வசந்திக்கு அதில் கொஞ்சம் வருத்தம் தான். வீட்டுப் பெண்ணை அறியாத இடத்தில் தங்க வைக்கையில் நாலையும் விசாரித்து கொள்வது நல்லது என்பது அவளது கருத்து. கணவன் தன் தங்கை விஷயத்தில் அலட்சியம் காட்ட மாட்டான் தான். ஆனால் ஒரு பெண்ணாக அவளுக்கு உள்ளூர கவலையாக இருந்தது. சத்யாவிடமும் அன்றைக்கு அவள் அது பற்றி பேசினாள். கடைசியில் சத்யா தைரியம் சொன்ன பிறகுதான் அமைதியானாள் வசந்தி. சத்யாவிற்கு அண்ணியைப் பற்றி தெரியும். அவள் அப்படித்தான்.
வசதியான வீட்டில் பிறந்து வளர்ந்த பெண் வசந்தி. ஆனால், அப்படி அவள் காட்டிக் கொண்டதே இல்லை. திருமணம் ஆனது முதல் இன்றுவரை அண்ணி மாறவே இல்லை. அதிலும் பெற்றோரின் மறைவிற்கு பின் அன்னையாகவே மாறிப் போனவள். முன்பும் நல்ல தோழியாய், சகோதரியாய் அவளை வழி நடத்தியிருக்கிறாள். இப்போதும் அதே போலத்தான் அவள் கவலைப்படுகிறாள் என்று புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால்..
சத்யா இனியும் அண்ணியை சார்ந்து இருக்க விரும்பவில்லை. அண்ணிக்கு அவளால் எந்த சங்கடமும் நேராமல் இருக்க வேண்டும் என்றால் அவள் விலகித்தான் ஆக வேண்டும். அதற்கு வலுவான காரணமும் இருந்தது. அவள் மட்டுமே அறிந்த விஷயம் அது