• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

01. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை


அத்தியாயம் -1

'வசந்தராஜ் பேலஸ்' என பெயர் பொறிக்கப்பட்டிருந்த பலகை, அந்த இரண்டடுக்கு வீட்டின் முன்வாசலில் தொங்கிக் கொண்டிருந்தது.

வீட்டைச் சுற்றியிருந்த பரந்த தோட்டம் பார்ப்பவர்களை நொடிப் பொழுதில் கவர்ந்து, அதிலே லயித்து விட செய்யும்படி அழகாகவும் மிக நேர்த்தியாகவும் பராமரிக்கப்பட்டு இருக்க, இயற்கையை தொட்டு வந்த காற்று அவ்விடத்தையே குளிர்வித்து கொண்டிருந்தது.

முற்றாக விடிந்திராத அதிகாலைப் பொழுதில், வாசலில் குந்தி அமர்ந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் அவள். இடை இடையே நெற்றி உச்சியிலிருந்து வழிந்து முகத்தில் வீழ்ந்த முடிக்கற்றைகளை காதுக்கு பின்னால் சொருகி விட்டவளின் அழகோ பேரழகு.

"உஃப்!" பெருமூச்சுடன் கைகளை தட்டி விட்டபடி நிமிர்ந்தவள் தானிட்ட கோலம் திருப்திபடும் படியாக இருக்கிறதா என இடுப்பில் கையூன்றி நின்று பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்,

"அமுதா.." என்ற மெல்லிய அழைப்பு வந்து அவளது செவிப்பறையில் மோதியது.

மின்னலடித்தது போல் நிமிர்ந்தவள் வீட்டு மதில் மேல் ஏறி நின்று தன்னைப் பார்த்து கையசைத்தவனைக் கண்டு வேகமாக அவனருகில் ஓடினாள்.

அவள் அமுதயாழினி! இருபத்திரண்டு வயது கோதை!

"மெதுவா ஓடி வாடி. கீழ விழுந்து கால் கையை உடைச்சுக்க போறே.." என சிறு குரலில் அவன் அதட்டுவதற்குள் அவனருகில் வந்து நின்று விட்டவள்,

"சொல்லுடா.." என்றாள் பதட்டமாக. வீட்டில் யாராவது கண்டு விட்டால் அவ்வளவு தான் என் கதி என்ற கலக்கம் அவளது கண்களில்.

"மாதுளைப் பழம் வேணும்னு கேட்டியே அமுதா.. நேத்து வேலைக்கு போயிட்டு வரும் போதே வாங்கிட்டு வந்தேன். உன் வீட்டுல இருக்குற காட்டேறி பார்த்தா உன்னை போட்டு கொடுத்துடுவானு நினைச்சு கொடுக்காமலே விட்டுட்டேன். இந்தா நீ கேட்டது.." என இரண்டு மாதுளைப் பழங்களை அவளிடம் நீட்டினான் அகரன்.

அவன் நீட்டியதை வாங்காமல் கண்களை அங்குமிங்கும் சுழற்றியபடி தயங்கி நின்றாள் அமுதயாழினி. வம்பை விலை கொடுத்து வாங்குவானேன் என எண்ணத்தில், பயத்தில் வறண்டு போயிருந்த தொண்டைக் குழியை எச்சில் கூட்டி விழுங்கியபடி அவனை பாவமாக ஏறிட்டாள்.

"எதுக்கு பயப்படற? உன் வீட்டாளுங்களுக்கு இந்நேரம் ஏழாம் சாமம்டி. பயப்படாம தோட்டத்துல இருந்தே சாப்பிட்டுட்டு உன் வேலையை பாரு.." என்று கூறிக் கொண்டு மாதுளையில், கையோடு எடுத்து வந்திருந்த சிறு கைக் கத்தியால் கோடு போட்டான்.

"பழுக்க காய்ச்சின கரண்டியை சித்தி கால்ல வைச்சு இன்னும் ரெண்டு நாள் ஆகல அகரா. காயம் கூட ஆறல. இப்போ உன்கிட்ட பேசிட்டு இருக்கிறதை பார்த்தா கொன்னே போட்டுருவாங்க.." என்றவளின் தலையில் ஓங்கியொரு கொட்டு வைத்த அகரன்,

"சரி பேசிட்டு இருந்தது போதும், இதை சாப்பிடு.." என்று கூறி, மாதுளை முத்துக்களை அவள் கைகளில் கொட்டினான்.

ரோட்டோரமாக விற்க வைத்திருக்கும் மாதுளைப் பழங்களைப் பார்த்து சாப்பிட வேண்டுமென ஆசைப்பட்டவளுக்கு ரோட்டோரத்தில் நின்று பழங்களை வாங்கிக் கொள்ள பயம். 'பிச்சைக் கார நாயே!

குடும்ப மானத்தை குழி தோண்டி புதைக்கிற.. ரோட்டோரமா விக்கிற குப்பையெல்லாம் வாங்கிட்டு வீட்டுக்கு வராதே..' என்ற கத்தலுடன் கன்னம் பழுத்து விடும்.

'நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில வைச்சாலும் வாலைக் குழைச்சிட்டு மலம் தின்னத் தான் போகும். ஹால்ல இடமிருந்தாலும் வாசப் படியில தான் தூங்குமாம்னு சும்மாவா சொன்னாங்க? சருக்குல ஒட்டிட்டு தவழுற நத்தையை குடும்பமானம் அது இதுன்னுட்டு மெத்தைல உக்கார வைச்சுருக்காரு அந்த பொசக் கெட்ட மனுஷன்.. ' இது அவளின் சித்தி சோபனாவின் வாயிலிருந்து அடிக்கடி உதிரும் குத்தல் வார்த்தைகள்.

இதையெல்லாம் கேட்க விரும்பாமல் தான், ஓடி வந்து தன் ஆசையை அகரனிடம் சொல்லி விட்டிருந்தாள் அமுதா. தன்னுடைய சின்னஞ்சிறு ஆசையை கூட பார்த்து பார்த்து செய்து கொடுப்பவன் அவன் மட்டும் தானென அவள் தான் அறிவாளே!

அகரன் அவளது பள்ளிக்கால நண்பன். சிறு வயது தொட்டே கை கோர்த்து, செல்லுமிடமெல்லாம் பள்ளிக் கூடத்தில் ஒன்றாகவே வலம் வந்தவர்கள். அவன் ஒரு அநாதை, ஏழை என்ற காரணத்தினால் அவனுக்கும் நண்பி, உறவென்று கூறிக் கொள்ள அவள் ஒருத்தி மட்டுந்தான் இருந்தாள். இப்போதும் இருக்கிறாள்.

ஏமாற்றுக்காரர்களும், சந்தர்ப்பவாதிகளும் சூழ்ந்த இவ்வுலகில் சுயநலமில்லா அன்பை கொட்டவும், தன் கஷ்டம், கவலைகளை சொல்லி அழ தோள் கொடுக்கவும் தனக்கென இருக்கும் ஒரே நண்பன் அவன் தான் என்பதால் சித்தியின் திட்டல், அதட்டல்களையும் தாண்டி அவனுடனே ஒட்டிக் கொண்டு திரிந்தாள் பாவையும்.

இதையே காரணம் காட்டி, சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற முன்பே அவள் பாடசாலையிலிருந்து நிறுத்தப்பட்டு வீட்டோடு சிறைப் படுத்தப்பட்டாள். காரணம் கேட்டவர்களிடம் 'அவளுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம். படி படினு சொன்னதை கேட்காம சொந்த விருப்பத்தில வீட்டோட நின்னுட்டா..' என்ற பதில் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். அப்படியல்ல, இப்படி என மறுத்து பேசும் அளவுக்கு தைரியமில்லை அவளுக்கு.

அதன் பிறகு இருவரின் நட்பும் அதிகாலையிலோ மாலையிலோ என இந்த மதிலருகில் ஆரம்பித்து, இன்று வரைக்குமே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

'அவன் கிட்ட பேசாதேனு சொன்னா கேட்கவே மாட்டியா? எல்லாம் அந்த மனுஷனை சொல்லணும், வீட்டுல கொடுத்த அன்பும் சுகமும் பத்தலைன்னு ரோட்டுல போறவளை எல்லாம் சின்ன வீடா வெச்சிருந்திருக்காரு. அதான் உன்னை மாதிரி பிச்சைக் கார நாயை எல்லாம் வீட்டுக்குள்ள வைச்சிக்க வேண்டிய நிலைமை..' என அடிக்கடி சித்தியிடம் இரண்டு அறைகளையோ, நான்கு அடிகளையோ வாங்கிக் கொள்வாள்.

திட்டலுக்கும் அடிக்கும் அஞ்சி நட்பை கை விடவில்லை அமுதா. அகரனும், அவன் கொடுத்த அன்பும் வாழ்நாள் பூரா தனக்கு வேண்டும் என நினைத்து அவனுக்காக அடி திட்டல்களை கூட சகித்துக் கொள்பவள், எந்த ஒன்றையும் மறைக்காமல் அவனிடம் கூறி, அவனின் தலை வருடலில் ஆறுதலடைவாள்.

தான் கொடுத்த மாதுளை முத்துகளை மிகுந்த ஆர்வத்துடன் சுவைத்துக் கொண்டிருந்தவளை பரிவுடன் பார்த்தவன், "நைட்டு சாப்பிட்டியா?" என்று கேட்க, இல்லையென்பது போல் தலை அசைத்தவள்

"நைட்டு ஆராதனாவோட ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வந்திருந்தாங்க அகரா. அவங்களுக்கு கொஞ்சம் ஸ்பெஷலா சமைச்சிடுனு சித்தி சொன்னா.. சமைச்சு எல்லாத்தையும் ரெடி பண்ணி வைச்சுட்டு டயர்ட்ல அப்டியே அசந்துட்டேன். எந்திருக்கும் போது வந்திருந்தவங்க எல்லாரும் போய் வீட்டுல எல்லாரும் தூங்கி இருந்தாங்க. மிச்ச சாப்பாட்டையும் காணோம்.. அதான் காலைல சித்தி தூங்கி எந்திரிக்க முன்னாலயே ஒரு கப் டீ போட்டு குடிச்சேன்.." என்று கூறி பற்களை காட்டினாள்.

மனத்தை அழுத்தும் சோகங்கள் ஆயிரம் தான் இருந்தாலும் சிரிப்புடனே அந்த நாளைக் கடத்தும் ரகசியத்தை தோழியிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்து கவலையுடன் பெருமூச்செறிந்தான் அகரன்.

"சரி நீ போ.. ஏழு மணிக்கே நீ ஆபீஸ் போயாகனுமில்ல? மறக்காம சாப்பிட்டுட்டு கிளம்பு." என உரிமையுடன் அதட்டியவள் அவன் நீட்டிய மீதி மாதுளை முத்துகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர,

"வரும் போது ஏதாவது வாங்கிட்டு வரணுமாடி?" என்று கேட்டான்.

அவனும் கூட படிப்பை தொடராமல் சாதாரணதர பரீட்சையோடு படிப்பை நிறுத்திக் கொண்டான். தொடர்ந்து படிக்க வசதியில்லை. உதவிக்காக நீட்டிய கையில் காறி துப்புவோர் மத்தியில் படிப்புக்காக என்று கரமேந்த விரும்பாமல் அதை அத்தோடே மறந்து விட்டவன் கிடைக்கும் சிறு வேலைகளை செய்து காலத்தை தள்ளிக் கொண்டிருந்தான்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, பாதையோரமாய் கிடந்த வாலட்டை எடுத்து காரருகே நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்தவனின் கையில் கொடுத்ததன் புண்ணியத்தில், நேர்மையானவன் என மனம் மகிழ்ந்து வாலட்டின் சொந்தக்காரனான மது வர்ஷன் வாலட்டிலிருந்த பணத்தை அவனுக்கு அள்ளி வீசினான்.

வேண்டாம் என மறுத்து ஏதாவது வேலை வாங்கி கொடுத்தாலே பெரும் உதவியாய் இருக்குமென இவன் கூறி விட, விசிட்டிங் கார்டை கொடுத்து தன் அலுவலகத்திற்கு வரவழைத்து, வானளவு உயர்த்தி கட்டப்பட்டு இருந்த ஆறடுக்கு கட்டடத்தில் வேலை கொடுத்திருந்தான்.
இப்போது அவனது அலுவலகத்தில் தான் பியூன் வேலை பார்க்கிறான் அகரன்.

"வேண்டாம்டா. எனக்கு ஏதாவது வேணும்னா உன்கிட்ட கேட்காம இருப்பேனா?" என்று கேட்டவள் அத்தோடு பேச்சு முடிந்தது என்பது போல் அங்கிருந்து ஓடி விட, கண்களை விட்டு ஓடி மறைந்தவளை மிகுந்த வருத்தத்துடன் வெறித்தன அகரனின் கண்கள்.


வசந்தராஜ் மற்றும் சோபனா தம்பதியினருக்கு ஒரே மகள். பெயர் ஆராதனா!

அவள் பிறந்த நேரத்தில், 'இந்தவொரு புள்ளயே போதும்..' என சோபனா சலிப்புடன் பெருமூச்செறிந்ததாலோ என்னவோ, வருடங்கள் சில கடந்த பிறகு அவர்கள் இன்னொரு குழந்தைக்கு முயற்சித்த நேரத்தில் சோபனாவின் கருப்பையை ஏதோவொரு நோயின் காரணத்தினால் அகற்றி விட வேண்டிய நிலைமை வந்து விட்டது.

சரிதான். கடவுள் கொடுத்தது ஒன்னு. அந்த ஒன்னே போதுமென மனத்தை ஆறுதல்படுத்திக் கொண்டு தன் ஒற்றை செல்வத்தை அதிகளவு செல்லம் கொடுத்து வளர்த்தினாள் சோபனா. அடுத்த வீட்டு பெண்மணி தன் குழந்தைக்கு நூறு ரூபாயில் பொம்மை வாங்கிக் கொடுத்தால், ஆயிரம் ரூபாயை செலவு செய்து ஏட்டிக்கு போட்டியாய் தன் மகளுக்கு பொம்மை வாங்கி கொடுப்பாள் இவள்.

மற்றவர்களின் வயிற்றெரிச்சலை கிளறி விடுவதில் அவளுக்கு என்னவோ அலாதி சந்தோசம்!

அதனால் தான் போலும் அவளின் சந்தோசத்தை பறிப்பாதற்காய், ஆராதனாவுக்கு நான்கு வயதிருக்கும் போது அந்த விடயத்தை அவள் அறிந்து கொள்ளும் படியாக செய்திருந்தான் அந்த கடவுள்!

சோபனா தாய் வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில், வசந்தராஜ் வீட்டு வேலைக்கு வரும் பெண்ணை வற்புறுத்தி அவளிடம் உறவு வைத்துக் கொண்டதில், அந்தப் பெண் இப்போது கர்ப்பமாய் இருக்கிறாளாம்! கேட்டதும் முற்றாக உடைந்து போனாள் சோபனா.

வசந்தராஜும் அவளும் காதலித்து திருமணம் செய்து கொண்டோர். அப்படி இருக்க, எப்படி தன்னை விடுத்து வேறொரு பெண்ணை நாடி இருக்கிறார் என கவலை கொண்டவளுக்கு வசந்தராஜை விவாகரத்து செய்யவும் மனமில்லை. அவரை விவாகரத்து செய்து விட்டால் இந்த மாளிகையின் ராணியாய்,

அவரது சொத்தின் சொந்தக்காரியாய் இருக்கும் இந்த சொகுசு வாழ்க்கை தொலைந்து விடுமே என அஞ்சியவள் வெகு புத்திசாலித் தனமான முறையில் அந்த இக்கட்டு நிலைமையை சமாளிக்க முடிவெடுத்தாள்.

வேலைக் கார பெண்ணின் விடயம் ஊருக்கு தெரிந்து விட்டால் தன் மானம் என்னாவது.. தன் குடும்ப கௌரவம் என்னாவது என்ற சோகத்தில் இருந்தவரின் தலையை வருடி, 'காலம் மாறிடுச்சுங்க.

காலத்தோட சேர்த்து எல்லாம் மாறிடுச்சு. எனக்கு குழந்தை பெத்துக்க முடியாததால வாடகை தாய் மூலமா இன்னொரு குழந்தையை எங்க குடும்பத்துக்கு கூட்டிட்டு வர நினைச்சோம். அந்த வாடகை தாய் தான் நம்ம வீட்டு வேலைக்காரினு , விஷயம் வெளியே லீக் ஆகினா சமாளிக்கலாம். அதுக்கு முத அந்த பொண்ணோட வாயை மூட வைக்கணும். அப்படியில்ல, இப்படினு உண்மையை வெளியே சொல்லாத மாதிரி மிரட்டி வைங்க.. குழந்தை பிறந்ததும் பணத்தை வீசி அவளை துரத்தி விட்டுறலாம்..' என தான் திட்டமிட்டதை கூறிய சோபனா,

'என்மேல கோபமே இல்லையா சோபனா?' என குற்றவுணர்ச்சியுடன் கேட்டவரை அணைத்து,

'உங்க மேல கோபமே இருந்தாலும் உங்களை வேணாம்னு சொல்லிட்டு போக முடியல வசந்த் என்னால. நீங்க இல்லாம எப்படி வாழுவேன் நான்? நீங்க விரும்பி பண்ணி இருக்க மாட்டிங்க. எனக்கு தெரியும், அந்த பொண்ணு தான் உங்களை மயக்கி இருப்பா.. இந்த இக்கட்டான கட்டத்துல நான் உங்க பக்கத்துல இல்லாம போனா எப்படிங்க?' என வழிந்து, அவர் மனத்தை வென்று விட்டாள்.

அதன் பிறகு நடந்ததெல்லாம் சோபனாவின் திட்டப்படி தான் நடந்தது. 'வெளியே உண்மை கசியக் கூடாது. தவறினால் உயிர் மிஞ்சாது' என வேலைக்காரப் பெண்ணை மிரட்டி வைத்தவள், சமூகத்திலுள்ளவர்களிடம் வாடகைத் தாயானவளுக்கு அவளே பணிவிடை செய்கிறாள். பாரேன் என்ற நல்ல பெயரையும் வாங்கிக் கொண்டாள்.

எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு கஷ்டங்களை நான் அனுபவித்தது இந்த மாளிகைக்குள் தான் என்று கற்பூரமடித்து அந்த வேலைக்காரப் பெண் சத்தியம் செய்தாலும் நம்பும் நிலையில் இருக்கவில்லை வெளி சமூகத்தினர். அந்தளவுக்கு ஒரு உணர்வு பூர்வமான நாடகம் சோபனாவால் அரங்கேற்றப்பட்டு இருந்தது.

பத்தாம் மாதத்தில் ஒரு இருண்ட நாளில் குழந்தையை ஈன்றெடுத்தவள் பிரசவ நேரத்திலே உயிர் துறந்து விட, அன்று அவள் ஜனனம் கொடுத்த சிறு ரோஜா மொட்டு இன்று அந்த வீட்டில் வேலைக்காரி, அடிமையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் தான் அமுதயாழினி. வசந்தராஜால் வற்புறுத்தி உறவு வைத்துக் கொள்ளப்பட்ட வேலைக்கார பெண்ணின் மகள்.


இங்கே, கதிரோன் ஒளிபட்டு 'MV Group of Companies' என தங்க நிறத்தில் பெயர் மின்னிக் கொண்டிருந்த அந்த ஆறடுக்கு கட்டடத்தில், தனக்கான கேபின் அறைக்குள் தன் பளபளத்த ஷூக் காலை தூக்கி மேஜை மேல் வைத்து ஃபோன் பார்த்துக் கொண்டிருந்தான் மது வர்ஷன்!

தவறு செய்த மாணவன் போல் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி அவன் முன் நின்றிருந்தான் அகரன்.



தொடரும்.