• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

02. பூமாலையே எந்தன் தோள் சேர வா..!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
சென்னை…

சத்யபாரதிக்கு அன்று முதல் நாள்.. ஆகவே சற்று முன்னதாக கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள், அப்போது பணிப்பெண் ரூபா, சாப்பிட அழைத்தாள். இதுவும் வசந்தியின் ஏற்பாடுதான். வேலைக்கு ஆள் வேண்டாம் என்று அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் கேட்கவில்லை.ல்லை.

"வேலை பார்க்க ஆசைப்பட்டாய், அதை மட்டும் பார்த்தால் போதும். களைத்து வீடு வந்தால் தனியாக இருப்பது கஷ்டம். உனக்காக சமைக்க தோனாது. ஹோட்டல் சாப்பாடு எத்தனை நாள் சாப்பிட முடியும்? அவள் உனக்கு வேலைக்காரி இல்லை. ஆசிரமத்தில் வளர்ந்த ஒரு ஆதரவற்ற பெண்ணுக்கு வேலை கொடுத்தது போலவும் ஆயிற்று. உனக்கு ஆக்கும்போது அவளும் பசியாறிக் கொள்வாள், உனக்கு ஒரு துணை இருந்தால் எனக்கு கொஞ்சம் நிம்மதி. மற்றபடி நீ சம்பாதிச்சுதான் அங்கே உலை கொதிக்கணும்னு நிலைமை நமக்கு கிடையாது," என்று சொல்லவும் வாயை மூடிக்கொண்டாள் சத்யா.

முதல் நாள், முதல் முறையாக பணிக்கு செல்வதால் அவளுக்கு மிகுந்த பதற்றமாக இருந்தது. சொல்லப்போனால் அவள் அன்றுதான் அந்த நிறுவனத்தின் முதலாளியை சந்திக்கப் போகிறாள். அவர் எப்படி என்று அவளுக்கு தெரியாது. அதனால் அவள் டூவீலரை விடுத்து வாட்ச்மேன் மூலமாக நம்பகமான ஆட்டோவை வரவழைத்து பயணமானாள்.

சத்யாவிற்கு ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்திருந்தது. அவளுக்கு தையற்கலை மிகவும் பிடித்தம், அதனால் தான் அது சம்பந்தமான பாடம் எடுத்து படித்தாள். மூன்று வருடப் படிப்பும் ஒருவருட பயிற்சியும் பெற்றிருந்தாலும் வேலை பார்த்த முன் அனுபவம் இல்லாமல் வேலை கிடைக்காது என்பது தெரியும். ஆயினும் உடன் பயின்ற தோழி ராதாவின் தந்தையிடம் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டிருந்தாள். அவர் மூலமாக சென்னையில் இந்த நிறுவனத்தில் காரியதரிசி வேலை இருப்பதாக தெரிவித்தார். அது அவளுக்கு சற்று ஏமாற்றம் தான். இருப்பினும் அவளுக்கு உடனடியாக ஒரு வேலை அவசியம் என்பதால் அந்த வேலைக்கு செல்ல சத்யா ஒத்துக் கொண்டாள்.

அது ஒரு பழைய நிறுவனம் தான். இரண்டு வருடங்களுக்கு முன் கைமாறியிருந்தது. புதிதாக வாங்கியவர் பழைய ஊழியர்களை எல்லாம் வடிகட்டிவிட்டு புது முகங்களை அதிகம் சேர்த்திருப்பதாக, ராதாவின் தந்தை தெரிவித்து இருந்தார். அவரது நண்பரின் நிறுவனம் அது என்பதால் அவருக்கு எல்லா தகவல்களும் தெரிந்திருந்தது.

அந்த நாலு மாடி கட்டிடத்தின் முன்பாக ஆட்டோ நின்றது. இறங்கி பணத்தை கொடுத்துவிட்டு நுழைவாயில் நோக்கி நடந்தாள் சத்யா. கையில் வெறும் விலாச அட்டை மட்டுமே இருந்தது. கூட அவளது படிப்புத் தகுதிக்கான சான்றிதழ்கள். அந்தப் பெரிய நிறுவனத்தின் நுழைவாயிலில் காலெடுத்து வைக்கையில் மனது மிகவும் படபடத்தது. உள்ளே, வரவேற்பறையில் இருந்த இளைஞனிடம் அட்டையை கொடுத்தாள். வழக்கமாக வரவேற்பில் பெண்கள் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருந்த சத்யாவிற்கு அது சற்று புதிதாகத் தோன்றியது. அவன் உள்ளிடப்பேசியில் கேட்டுவிட்டு அவளை உள்ளே செல்லுமாறு பணித்தான்.

அந்த இளைஞன் காட்டி தந்திருந்தபடி லிப்டில் ஏறி முதல் தளத்தை அடைந்தாள். "கிருஷ்ண சந்திரன்" என்ற பெயர் பொறித்திருந்த அறைக் கதவை தட்டி அனுமதி வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்த சத்யா,ராஜேந்திரனின் நண்பர் என்று சொல்லியிருந்ததால் அனுபவ மிக்க வயதான ஒருவரை எதிர் பார்த்திருக்க,அதற்கு மாறாக பின் இருபதுகளில் ஒரு இளைஞன் கணினியில் எதையோ தீவிரமாய் பார்த்தபடி அமர்ந்திருப்பதை காணவும் ஒரு கணம் திடுக்கிட்டாள்.

அவள் வந்ததை உணர்ந்தாற் போல லேசாய் தலையசைத்து வருமாறு சைகை செய்து, "உட்கார்" என்றான். சத்யா அவன் குரல் ஒலிக்கவும் நிகழ்வுக்கு திரும்பினாள், அவன் சொன்னதை செய்தவளுக்கு, கூடவே அவன் ஒருமையில் விளித்தது கொஞ்சம் உறுத்திற்று!.

இதயம் வேகமாய் துடித்தது. அது ஏன் என்ற காரணம் புரியாமல் சத்யா திகைத்தாள். ஒருவேளை முதல் முறையாய் வேலையில் சேரும்போது அப்படித்தான் இருக்குமோ என்று எண்ணிக் கொண்டவளாய் அந்த அறையை நோட்டம் விட்டு பதற்றத்நை குறைக்க முயன்றாள்.

கோவையில் கூட ஏதோ கண்ணுக்கு தெரியாத பாதுகாப்பு இருப்பதாக உணர்ந்திருந்த சத்யாவிற்கு இங்கே வந்தது முதலாக பாதுகாப்பற்ற உணர்வு தோன்றிக் கொண்டே இருந்தது, அதிலும் நிறுவத்திற்குள் தனியாய் மாட்டிக் கொண்டாற் போன்ற உணர்வே எழுந்தது.

வேலைக்கு முதல் நாள் என்பதால் மட்டுமா? அல்லது அங்கே அவள் எதிர்பார்ப்புக்கு மாறாக அழகிய இளைஞனை தனி அறையில் காண நேர்ந்ததாலா என்று புரியவில்லை,சத்யாவுக்கு உள்ளூர பதற்றம் அதிகரித்தது. அந்த ஏசி அறையிலும் கூட வியர்த்தது. சில கணங்கள் கூட யுகமாய் தோன்றியது.

கணினியில் இருந்து பார்வையை அகற்றி அவளை நேராக நோக்கியவனின் பார்வையில் என்ன இருந்தது என்று சத்யாவால் அறிய முடியவில்லை. அதற்குள்ளாக பார்வையை விலக்கி அவளது சான்றிதழ்களை வாங்கி பார்த்துவிட்டு "குட், சத்யபாரதி, எல்லாம் சரியாக உள்ளது. மிஸ்டர் ராஜேந்திரன் உன்னைப் பற்றி சொன்னார். உன் தகுதிக்கான வேலை தற்சமயம் காலி இல்லை. இப்போதைக்கு என் காரியதரிசி வேலைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தேன். திரு. ராஜேந்திரன் உனக்கு இந்த வேலை அத்தியாவசியம் என்று சொன்னார் என்றவன், அவளை நேராக பார்த்தவாறு,"வீட்டில் ரொம்ப கஷ்டமா?? என்று வினவ,

கைகளில் பார்வையை பதித்திருந்தவள், "வீட்டில் கஷ்டம் எல்லாம் இல்லை சார், அது, எ..எனக்கு பெற்றோர் இல்லை. உறவினர் படிக்க வைத்தனர். மேலும் அவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. அதனால் தான் எந்த வேலை என்றாலும் உழைக்கலாம் என்று எண்ணினேன்" அதை சொல்லி முடிப்பதற்குள் சத்யா மிகவும் தடுமாறிப் போனாள். அன்பான அண்ணன் அண்ணியை உறவினர் என்று யாரோ போல குறிப்பிட்ட குற்றவுணர்வும், பெற்றோரின் நினைவும் சேர்ந்துகொள்ள துக்கம் தொண்டையை அடைத்தது.

"சாரி, பெற்றோரை ஞாபகப்படுத்தி வருந்தச்செய்து விட்டேன் போல. ரிலாக்ஸ். உன் வேலைக்கான உத்தரவை வரவேற்பில் வாங்கிக் கொள். நாளை முதல் பணியில் சேர்ந்து கொள்ளலாம். காலையில் சற்று முன்ப வந்துவிட்டால் என் முன்னாள் காரியதரிசி உனக்கு வேலை பற்றிய விவரம் சொல்ல வசதியாக இருக்கும். உன் படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலை என்பதால் நீ சற்று கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். காலையில் 8:30மணிக்கு வந்துவிடு. நேரம் தவறுவது எனக்குப் பிடிக்காது. இப்போது நீ போகலாம்" என்றவன்,

ஆசுவாசமாகி எழுந்தவளோடு கூடவே எழுந்து, "வெல், பெஸ்ட் ஆப் லக் பாரதி" என்று கூறி கையை நீட்ட, பதிலுக்கு கை கொடுத்தவள், பாரதி என்ற அழைப்பில், ஒருகணம் உள்ளூர திடுக்கிட்டுப் போய் பேச்சின்றி அவனை ஏறிட்டாள். அவன் உதட்டளவில் புன்னகைத்தான். சட்டென பார்வையை விலக்கிக் கொண்டாள்.

பாரதி என்று தந்தை அவளை அழைப்பது. அதன் பிறகு... அப்படி அழைத்தவனின் நினைவில் தொண்டை அடைக்க ஒருவாறு சுதாரித்து "நன்றி சார்" என்றவளின் குரல் எவ்வளவு முயன்றும் தடுமாறிவிட

"பாரதி ஆர் யூ ஆல்ரைட்?" என்றவாறு மேஜையில் இருந்த தண்ணீர் டம்ளரை எடுத்து அவளிடம் நீட்டினான்.

பதிலளிக்க முடியாத நிலையில் சட்டென்று அவன் நீட்டிய டம்ளரை வாங்கி மளமளவென்று தண்ணீரை குடித்து "தாங்க்யூ சார், ஐம் ஆல் ரைட், சீ யூ சார்" என்று மேலே நில்லாமல் விரைந்து வெளியேறியவளை யோசனையுடன் பார்த்திருந்தான் அவன்!

வீடு வந்த சத்யபாரதி, தன் அறைக்குள் புகுந்து கதவை தாளிட்டு கட்டிலில் விழுந்தாள்.

நான்கு வருடமாக பெற்றோர்களின் இழப்பும், அரவணக்க துடித்த அன்பான அண்ணியிடம் ஆறுதல் பெற முடியாத தவிப்புமாக மனதளவில் மிகவும் காயப்பட்டு இருந்தாள். ஆனால் இன்றைக்கு பாரதி என்ற அந்த ஒற்றை அழைப்பில் அவள் உடைந்து போனாள்.


பெற்றோர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவளுக்கு இந்த நிலை உண்டாகியிருக்காதே. கண்ணீர் ஆறாய் பெருகி வழிந்தது. பழைய நினைவுகள் மனதில் வலம் வர, தேற்றுவாரில்லாமல் எதைஎதையோ எண்ணி அழுகையில் கரைந்தாள் சத்யபாரதி.
 

Attachments

  • IMG-20240724-WA0012.jpg
    IMG-20240724-WA0012.jpg
    49 KB · Views: 17