சத்யாவின் கைப்பேசி ஒலித்தது, விட்டால் பழைய நினைவில் எவ்வளவு நேரம் அழுகையில் கரைந்திருப்பாளோ? மேலே அழமுடியாது தடுத்தது வசந்தியின் அழைப்பு. இதுவே வேறு சமயம் என்றால் தவிர்க்க நினைத்திருப்பாள். இப்போதோ மற்ற நினைவிலிருந்து மனதை திசை திருப்பும் வகை தெரியாது வேதனையில் தவித்தவளுக்கு அண்ணியின் அழைப்பு ஒரு வகையில் ஆறுதல் அளித்தது.
" ஹலோ அண்ணி?" குரலில் உற்சாகத்தை வரவழைக்க முயன்றபடி பேசினாள் சின்னவள்.
"முதல் நாள் எப்படி இருக்கு சத்யா?
ஒன்றும் பயப்படறாப்ல இல்லையே? சாயங்காலம் தான் கூப்பிடனும்னு நினைச்சேன். ஆனால் பொறுமையாக இருக்க முடியலை. தனியா புது இடத்தில் நீ என்ன செய்றியோன்னு எனக்கு கொஞ்சம கவலை"
"ஒன்றும் பிரச்சனை இல்லை அண்ணி, நாளை தான் வேலை. இன்று ஆர்டர் மட்டும் கொடுத்து போக சொல்லிவிட்டார்கள். இப்ப தான் வீட்டுக்கு வந்தேன்."
"சந்தோஷம் சத்யா, ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?"
"தண்ணி மாறினதுல கொஞ்சம் ஜலதோஷம் அண்ணி. வேறு ஒன்னும் இல்லை" என்றவள் பேச்சை மாற்ற, " அண்ணா, அருணவ் எல்லாம் எப்படி இருக்காங்க அண்ணி? குட்டிப் பையன் என்னை தேடினானா? என்று தமையனைப் பற்றியும் மருமகனைப் பற்றியும் விசாரித்தாள்.
"நாங்க நல்லா இருக்கிறோம் சத்யா. குட்டிக்கு நீ ஊருக்கு போனதுல கொஞ்சம் வருத்தம் தான்" என்ற வசந்தியின் மேலும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு
பேச்சை முடித்தாள் சத்யா.
வெகு நாட்களுக்கு பிறகு சத்யா, தன்னிடம் பழையபடி பேசியதில் மகிழ்ந்து போனாள் வசந்தி. ஆனாலும் மனதுக்குள் வருத்தமாக இருந்தது. சத்யாவை தன் தம்பிக்கு மணமுடித்து கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்ள நினைத்தது நடக்க வழியின்றி போனதைத்தான் அவளால் கொஞ்சமும் தாங்க முடியவில்லை. அதனாலயே அவள் தம்பியை பிரிய நேர்ந்துவிட்டது.
அதே நேரத்தில் கண்ணனும் பழைய நினைவில் தான் இருந்தான். வெளிநாட்டில் படித்துக் கொண்டே வேலை செய்து கொண்டிருந்த கண்ணன், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்திருந்தான்.
அன்று...
வசந்தி மகனை டாக்டரிடம் அழைத்துப்போயிருந்தாள். கண்ணனுக்கு பொழுது போகாமல் போர் அடித்தது. டிவி பார்க்க அலுப்பாக இருந்ததால் ஏதேனும் படம் பார்க்கலாம் என்று சிடிக்களை எடுத்து ஆராய்ந்தபோது அதில் மருமகனின் முதலாம் பிறந்தநாள் சிடி இருக்கவே எடுத்து போட்டுவிட்டு அமர்ந்தான். அருணவ் அழகாய் சிரித்தபடி காட்சி தந்தான். தன்னைப் போலவே அவன் இருப்பதாக தோன்றியது. சிடியை பார்த்திருந்தவனின் விழிகள் சட்டென விரிந்தது. திரையில் சத்யாபாரதியை அழைத்து வந்து அருணவ்விற்கு பின்னால் நிறுத்தி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள் அவனது அக்கா வசந்தி.
அப்போது தான் அவன் வளர்ந்துவிட்ட சத்யாவைப் பார்த்தான், அவளது அழகும் சாந்தமான தோற்றமும் அவனை வெகுவாக கவர்ந்தது. கூடவே அவள் கண்களில் இருந்த அந்த சோகம், அவனை மிகவும் பாதித்தது. அந்த பிறந்தநாள் விழாவில் அவள் கலகலப்பாக இல்லை என்பதை சற்று ஊன்றி கவனித்தாலே தெரிந்தது. காரணம் அவளது பெற்றோரின் மறைவு என்று புரியவும் அவனுக்கு ரொம்பவே மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
சத்யாபாரதி வீட்டோடு இல்லாமல் விடுதியில் தங்கி படிப்பது ஏன் என்ற எண்ணம் அப்போது தான் தீவிரமாக எழுந்தது. பெற்றவர்கள் இல்லாத நிலையில் அவள் தனிமையை தேர்ந்தெடுத்தது ஏன்? அக்காவிடம் அத்தனை பாசமாக இருந்ததை கண்டு அவனே வியந்து இருக்கிறான். அப்படிப்பட்டவள் பெற்றவர்களை இழந்த நிலையில் அண்ணியிடம் தானே அடைக்கலமாகியிருக்க வேண்டும்? மனதுக்குள் ஒருபுறம் சிந்தனை ஓட..விழிகள் திரையில் தெரிந்தவள் மீதே நிலைத்திருந்தது.
கண்ணனுக்கு திரையில் அவளைப் பார்க்க பார்க்க உடனேயே சத்யாபாரதியை நேரில் காண வேண்டும் என்ற எண்ணம் பேரலையாய் உண்டாக திணறிப் போனான். அன்றைக்கு, குண்டு கன்னங்களோடு, பூசினாற்போன்ற உடலோடு கொழு கொழு சிறுமியாக இருந்த சத்யாபாரதி கண்ணுக்குள் வந்தாள்.
கண்ணனுக்கு மருமகனின் பிறந்தநாள் சிடியில் சத்யபாரதியை பார்த்ததும்... அவளை சந்தித்தது, பேசியது எல்லாமும் பசுமையாக நினைவில் வந்தது. கூடவே சிறு குற்றவுணர்வும் உண்டாயிற்று. அவள் பெற்றோரை இழந்தபோது அவளுக்கு ஆறுதல் கூட, அவன் சொல்லவில்லை.
அந்த சமயத்தில் அவன் சத்யாவிடம் பேச முயன்றான் தான், ஆனால் அவள் யாருடனும் பேச மறுக்கிறாள் என்று அக்கா சொன்னதைக் கேட்டு, மேலே தொந்தரவு செய்ய மனமற்று விட்டுவிட்டான். அது தவறு என்று இன்று அவள் முகத்தை பார்க்கையில் ரொம்பவே தோன்றிற்று.
சத்யாபாரதியை உடனேயே பார்க்க வேண்டும் என்ற ஆவல் கூடிக்கொண்டே போனது! அதனால் அக்காவிடம் மெல்ல பேச்சு கொடுத்து சத்யாவைப் பற்றி விசாரித்தான். வசந்தி பட்டும் படாமலும் பதில் சொன்னாள். சத்யாவைப் பற்றி அவள் பேசவே தயாராக இல்லை என்று புரிந்து கொண்டான். அதைக் கூட போகட்டும் என்று விட்டுவிட்டான்.
அதிலும், அவனது அக்கா, சத்யாவைப் பற்றி "அவள் பார்க்கத்தான் சாது, ஆனால் ஆள் அப்படியில்லை" என்றும் பொடி வைத்து பேசியதை அவனால் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை. உச்சபட்சமாய் தம்பியை தனியே அழைத்து, "கண்ணா, சத்யாவைப் பற்றி நீ எந்தவித எண்ணத்தையும் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது உனக்கு நல்லது. அப்படி ஏதும் இருந்தால் இப்பவே அழிச்சிடு. அதுதான் சத்யாவுக்கும் நல்லது." என்று எச்சரித்தவள் கூடவே நம் குடும்பத்திற்கு ஏற்றவள் மாமா மகள் அனிஷா தான்," என்று அழுத்தமாக சொன்னாள் வசந்தி.
உண்மையில் அக்காவின் பேச்சு அவனுக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தான் தந்தது. சிறுமியான சத்யா வசந்தியின் முந்தானையை பிடித்துக் கொண்டு அலைந்தது, அவளை மகள் போல் அக்கா பாசமாக பார்த்துக் கொண்டது வெறும் வேஷமா?
ஆனால். ...
அவன் மனதில் சத்யாதான் நிறைந்திருந்தாள். நினைத்துப் பார்க்கையில் அன்றைக்கு அவள் தண்ணீரில் விழுந்தபோது காப்பாற்றியது முதலே அவனுக்கு சத்யாவிடம் ஒரு பரிவு உண்டாகிவிட்டிருந்தது புரிந்தது.
அந்த ஒருவாரம் அவளோடு பழகியபிறகு அவள் நினைவு மனதில் நீங்காமல் இருக்கத்தான் செய்தது. அப்போதே அடுத்து வந்த விடுமுறையில் அவளை காணும் ஆவல் அதிகமாக இருந்தது. ஆனால் அக்கா அப்படி ஒருவர் வீட்டிற்கு அடிக்கடி செல்வது சரியில்லை, என்று ஏதேதோ காரணத்தை சொல்லி மறுத்துவிட்டாள். இல்லை, இல்லை தடுத்திருக்கிறாள் என்று இப்போது ரொம்பவும் தோன்றியது. அதன் காரணம் என்ன யோசித்தும் கண்ணனுக்கு புரியவில்லை.
அதனால் அக்காவின் கணவனை அணுகினான் கண்ணன் ... சத்யா படிக்கும் கல்லூரி விலாசத்தை சித்தார்த்தனிடம் பேச்சு வாக்கில் வாங்கிக் கொண்டான். மைத்துனனிடம் தங்கை பற்றிப் பேச அவன் தயங்கவில்லை. அவள் சற்று ஒதுங்கிப் போகிறாள்,பெற்றோரின் இழப்பிலிருந்து இன்னமும் அவள் மீண்டது போல தோன்றவில்லை”என்று சில விஷயங்களை சொன்னான்.
ஆக,அக்காவிற்கு தான் ஏதோ பிரச்சினை, சத்யா மீது அத்தனை பாசமாக இருந்தவள், இப்படி மாறிப் போனது ஏன்? அதுதான் கண்ணனுக்கு புதிராக இருந்தது. சித்தார்த் மைத்துனனிடம் பேசியதை எதார்த்தமாய் மனைவியிடம் எல்லோரும் சாப்பிடும் போது சொல்ல, வசந்தியின் முகம் கல்லாய் மாறிவிட்டதை கவனித்தான் கண்ணன். உறுதியாக அக்கா மனதில் ஏதோ இருப்பதை உணர்ந்து கொண்டான்.
வேண்டாம், செய்யாதே என்றால் எதிர்மறையாய் செயல் படுவது தானே மனித இயல்பு, கண்ணன் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?