ஆனந்தன், அன்று வேலை முடிந்து, களைத்துப் போய் இரவு வீட்டுக்கு வந்தான்!
உள்ளே பேச்சு சத்தம் கேட்டது! அவன் வீட்டிற்கு யார் வந்திருக்கக்கூடும்? யோசனையாய் நுழைந்தான்! கூடத்தில் அவனது அன்னை வழியில் தூரத்து சொந்தமான மாமன் தனுஷ்கோடியும், அவர் மனைவி வத்சலாவும் வந்திருந்தனர்! தூத்துக்குடிக்கு அருகில் உள்ள சின்ன ஊரில் மாமா அந்தஸ்தானவர்! சொத்துபத்து, மீன் ஏற்றுமதி என்று நிறைய தொழில்கள் அவருக்கு!
ஆனந்தன் தலையெடுத்த பிறகு அன்னை அங்கே செல்வதும், அவர்கள் இங்கே வருவதுமாக போக்குவரத்து தொடங்கியிருந்தது! அதில் அவனுக்கு அவ்வளவாக விருப்பமில்லை தான்! ஆனால் உறவுகள் என்று சொல்லிக்கொள்ள யாருமின்றி வாழ்வதும் முறையில்லை என்று கண்டு கொள்ளவில்லை!
ஆனந்தனுக்கு மாமனின் அடிக்கடி விஜயம் சும்மா இல்லை என்று புரிந்துதான் இருந்தது! அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள்! இப்போது கல்லூரியில் படிப்பதாக கேள்வி! அம்மாவுக்கும் உள்ளூர ஆசை இருப்பது தெரியும்! ஆனால் அவனுக்கு சாருபாலாவை தவிர வேறு யாரையும் மணக்கும் எண்ணம் இல்லை!
இப்போது மாமாவும் அத்தையும் மட்டுமல்ல, அவரது மகளும் வந்திருக்கிறாள்! அதுவும் திடுமென ஏன் வந்திருக்கிறார்கள்? என்று குழப்பம் உண்டாயிற்று! அதை எதையும் முகத்தில் காட்டாமல், இயல்பாக வரவேற்றான்!
"வாங்க மாமா, வாங்க அத்தை! அனிதா, சௌக்கியமா?" என்றவாறு ஒரு இருக்கையில் அமர்ந்தான் ஆனந்தன்!
"நாங்க, எல்லாரும் சௌக்கியம் தான் மருமகனே! உங்க தொழில் எப்படி போகுது? புதுசா வீடு கட்ட மனை வாங்கிப் போட்டிருக்கீங்களாமே? அக்கா சொல்லுச்சு! ரொம்ப சந்தோஷம் மருமகனே!"
"ஆமா மாமா, ஒரு பங்களா கட்டுறதா பிளான்! இடம் எல்லாம் ரெடி தான்! நான் செய்துட்டு இருக்கிற இரண்டு ப்ராஜெக்ட் முடிஞ்சதும் ஆரம்பிக்கலாம்னு இருக்கிறேன்!"ஆமா என்ன திடீர்னு இந்த பக்கம் வந்திருக்கீங்க? அனிதா காலேஜில் படிக்கிறானு சொன்னீங்க! அவளையும் கூட்டிட்டு வந்திருக்கிறதைப் பார்த்தால், லீவுக்கு ஊர் சுற்றி காட்ட வந்தீங்களா?" என்றான் ஆனந்தன்!
"அட என்ன தம்பி இப்படி விவரமில்லாமல் கேட்கிறே? நம்ம ஊருப் பக்கம் வயசுப் பொண்ணுகளை அப்படி எல்லாம் ஊர் சுத்திப் பார்க்க கூட்டிட்டு அலைய மாட்டாக! அப்படி ஆசைப்பட்டா, கல்யாணத்துக்கு பிறகு புருசனோட போய் தான் சுத்திப் பார்க்கணும்! நான் ஒருத்தி, ஊர் நியாயம் பேசிட்டு இருக்கிறேன் பாரு, என்றவர் தொடர்ந்து,"உன் மாமன் மகள் படிப்பை முடிச்சு ஆறு மாசமாச்சுதாம்! அவளை காலாகாலத்துல கட்டிக் கொடுத்துடணும்னு தம்பி நினைக்குது! அனிதா, ஒத்தைப் புள்ளை, வேற ஆண் வாரிசும் இல்லை! நான் நீனு யார் யாரோ பொண்ணு கேட்டு வருதாகளாம்!அது சம்பந்தமா பேசத்தான் வந்திருக்காக! " என்றவாறு விசாலாட்சி மகனுக்கு மேசை மீது சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்! அவருக்கு உதவிக்கொண்டு அனிதா உடன் நின்றாள்!
"நீங்க போய் முதல்ல சாப்பிடுங்க தம்பி, பிறகு எல்லாம் நிதானமா பேசிக்கலாம்" என்றாள் வத்சலா
" ஓ ! சந்தோஷமான விசயம் தான்! என்றுவிட்டு எழுந்து கை கால் கழுவிவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தவன், "எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்னு சொல்லுங்க, நான் பார்க்கிறேன்! என் நண்பர்கள் நிறைய பேர் இருக்காங்க, எல்லாரும் நல்ல வசதியான வீட்டுப் பையன்கள் தான்! நீங்க சரின்னா, எல்லார் போட்டோவும் ஜாதகமும் கொண்டு வந்து கொடுக்கிறேன்!" என்று உற்சாகமாக ஆனந்தன் சொல்ல..
அங்கே சிலகணங்கள் அசாதாரண அமைதி நிலவியது!
சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆனந்தன் நிமிர்ந்து பார்த்தால், பெரியவர்களின் நயனங்கள்(கண்கள்) ஏதோ பார்வையில் பரிமாறிக் கொண்டிருந்தது!
முதலில் சட்டென சுதாரித்தது விசாலம்தான்! "கையில வெண்ணெயை வச்சுட்டு நெய்க்கு அலைவாங்களா தம்பி? என்றார்!
"என்னம்மா சொல்றீங்க?" ஆனந்தன் புரியாதவன் போல கேட்டான்!
"அனிதாவை உனக்கு கட்டித் தரணும்னு தான் தம்பிக்கு ஆசை! சொந்தத்துக்குள்ள பெண்ணை கட்டிக் கொடுத்தா நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கிறான்! அனிதா, வயசுக்கு வந்தப்போ பேசினதுதான்! நான்தான், இன்னும் பிள்ளைகள் வளர்ந்து, படிச்சு ஆளாகிற வரை அந்த பேச்சை எடுக்க வேண்டாம்னு சொல்லியிருந்தேன்! இப்பத்தான் அனிதாவும் படிப்பை முடிச்சுட்டாளே! அதான் தம்பி சம்பந்தம் பேசணும்னு கிளம்பி வந்திருக்கான்! நியாயமா நாமதான் போய் பெண் கேட்டிருக்கணும்! ஆனால் நான் இந்த கோலத்துல போய் ஒரு நல்ல விசயத்தை எடுத்து எப்படி பேசறதுன்னனு தயங்கிட்டு கிடந்தேன்! நேத்து தான் போன்ல பேசிட்டு இருக்கிறப்போ தம்பி விசயத்தை சொன்னான்! நானும் நல்ல விசயத்தை ஏன் தள்ளிப் போடணும்னு உடனே வரச் சொன்னேன்!" மகன் குறுக்கிட முயன்றதை கண்டுகொள்ளாதவராக பேசி முடித்தார் விசாலம்!
"அம்மா நான் சொல்றதை முதலில் கேளுங்க" என்று அழுத்தமாக சொன்னான் ஆனந்தன்!
"நீ எதுவும் சொல்ல வேண்டாம் ஆனந்து, அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்றேன்!" என்றபோது
"அக்கா, தம்பி என்ன சொல்லுதுன்னு முதல்ல கேட்போம்! கல்யாணம் கட்டி வாழப் போறது அவுகதான்!" என்றவர் "நீங்க சொல்லுங்க மருமகனே"!
"எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லை! பங்களா கட்டினப்புறம் தான் எதுவானாலும்! அதுக்கு இன்னும் ஒன்றரை வருசம் ஆகும்! அதுக்கு மேலே கூடக்குறைய ஆகலாம், அதனால அனிதாவுக்கு வேற ஒரு நல்ல மாப்பிள்ளையாய் பார்த்து கட்டி வைங்க" என்ற ஆனந்தனின் குரலில் கடினம் வந்திருந்தது!
"அட, வெளியே எதுக்கு மாப்பிள்ளை தேடணும் கண்ணா! இன்னும் இரண்டு வருசம் தானே? என் மருமகள் காத்திருக்க மாட்டாளா என்ன? கல்யாணத்தை நீ சொல்றாப்ல வச்சுக்கலாம்யா! அதுக்கு முன்னால, ஊர் அறிய பரிசம் போட்டுக்கலாம்ல?" விசாலம் விடுவதாக தெரியவில்லை!
"நான் கொஞ்சம் யோசிக்கணும் அம்மா! அதனால எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்க! "என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு உள்ளே சென்று விட்டான்!
"தம்பி, நீ தைரியமா இரு! அனிதா என் மருமகள் தான்! என்று விசாலம் உறுதியாக சொன்னார்!
ஆனால்..
🩷🩷🩷
காலையில்..
மகனுடைய அறையை தட்டி காபி சாப்பிட வா ராசா" என்ற விசாலத்தின் குரலுக்கு பதில் இல்லை! கதவை தள்ள, அது திறந்து கொண்டது! உள்ளே சென்றவருக்கு ஏதோ சரியில்லை என்று தோன்ற, வயிற்றில் பயப்பந்து உருள, அவனது படிக்கும் மேசை மீது நான்காக மடித்து வைக்கப்பட்டு இருந்த அந்த கடிதம் கண்களில் பட்டது! பதற்றத்தில் அதை அவரால் வாசிக்கக்கூட இயலவில்லை! மகன் தன்னை விட்டுப் போய்விட்டான் என்று மட்டும் புரிந்தது! அதுவே அவருக்கு அதிர்ச்சியாகி..
"ஐயோ! ராசா !"என்று கதறிவிட்டார், வீட்டிலிருந்த மற்ற மூவரும் அங்கே விரைந்து வந்தனர்!
"என்ன ஆச்சு அக்கா??"
என்னாச்சு,அத்தை? அனிதா
என்னாச்சு மதினி?
மூவரும் ஒரே குரலாக பதற்றமாக கேட்க, " என் பிள்ளை என்னை விட்டுட்டு போயிட்டான்"கையில் இருந்த கடிதத்தை அனிதாவிடம் கொடுத்தார்!
"அம்மா, என்னை மன்னிச்சுடுங்க! எனக்கு வேற வழி தெரியலை!
என் மனசுல வேற பெண் இருக்கிறாள்! அவளை தவிர வேற எந்த பெண்ணையும் நான் கட்டிக்க மாட்டேன்! அவளை கட்டிக்க நீங்க சம்மதிக்கலைன்னா, நான் கல்யாணமே பண்ணிக்காம கடைசி வரை உனக்கு பிள்ளையா வாழ்ந்துட்டு போறேன்! இப்ப நான் என்ன வேலை விஷயமா பத்து நாள் வெளியூர் போறேன்! திரும்பி வரும்போது, நீங்க நல்ல பதில் சொல்வீங்கனு எதிர்பார்க்கிறேன்!
அத்தை, மாமா என்னை மன்னிக்கணும்! அனிதாவிற்கு நல்ல பையனாக பார்த்து கல்யாணம் செய்து வைக்க சொல்லுங்க!
அன்பு மகன்
ஆனந்தன்
அனிதா சத்தமாக வாசித்து முடிக்க, அங்கே கனமான அமைதி!
முதலில் சுதாரித்தவர், தனுஷ்கோடி தான் " அக்கா, எனக்கும் வருத்தமாக தான் இருக்கு! நல்ல வேளையாக இப்பவே விசயத்தை தெரியப்படுத்தினார்! அதனால யாருக்கு யார்னு கடவுள் முடிச்சு போட்டிருக்காரோ அப்படியே நடக்கட்டும்!
"என்னை மன்னிச்சிடு தம்பி! இந்த பையன் இப்படி என் தலையில் கல்லைப் போடுவான் என்று நினைக்கவே இல்லை!" விசாலாட்சி அழுகையில் குலுங்கினார்!
"அட, எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் ! விடு அக்கா! இப்பவே மருமகன் விசயத்தை சொன்னது நல்லதாப் போச்சு அக்கா! உங்க வார்த்தைக்கு கட்டுப்பட்டு என் மகளை கட்டியிருந்தால், மூனு பேர் வாழ்க்கை பாழாப்போகும் ! அதனால நீ, மருமகனுக்கு போனைப் போட்டு சம்மதம்னு சொல்லு, என் மகளை ஏற்கனவே
இவளோட அண்ணன், வீட்டுல கேட்டாங்க, நான் தான் நம்ம சொந்தம் விட்டுட கூடாதுன்னு ஒத்துக்கலை! இப்ப போனதும் பேசி முடிக்கப் போறேன்! நீயும் சீக்கிரமாக கல்யாணப் பத்திரிக்கையை அனுப்பி வை அக்கா! நாங்க மதியம் ஊருக்கு கிளம்புறோம்! நான் எதையும் மனசுல வைக்கலை! அதனால நீ மருகாதே அக்கா! என்று தனுஷ்கோடி சொன்ன போதும், விசாலாட்சிக்கு மகன் மீது உள்ளூர மிகுந்த ஆத்திரம் தான்!
கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல, தம்பி அவ்வளவு எடுத்து சொன்ன போதும், அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! எப்படியும் மகன் திரும்பி வந்தபின் பேசி, தன் எண்ணம் போல திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று மனதில் சூளுரைத்துக் கொண்டார்!
நினைப்பதெல்லாம்.. ஆமாங்க அதேதான், நடக்குமா என்ன??