• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

07. பூமாலையே எந்தன் தோள் சேர வா..!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
சென்னை.
காலை நேரம்...
பணிக்கு செல்ல ஆயத்தமான சத்யா, காலை உணவாய் சூடான இட்லியுடன் கொத்தமல்லி சட்டினியும் பசியை தூண்ட வழக்கத்திற்கு மாறாக அதிகமாய் ஒரு இட்லியை உண்டுவிட்டு,

"ரூபா இப்படி தினமும் செய்து போட்டால் அப்புறமாய் என்னை யாருக்குமே அடையாளம் தெரியாமல் போய்விடும்" என்று சொல்ல,

"போ சத்யா, கிண்டல் பண்ணாதே, சுமார் சமையலைப் போய் புகழ்ந்துகிட்டு, என்று ரூபா கூச்சத்துடன் சொல்லிக் கொண்டிருக்கையில்...

அழைப்பு மணி ஒலித்தது. ரூபா கதவை திறக்க செல்ல.. யாராக இருக்கும் என்று யோசித்தவாறே கை அலம்ப எழுந்த சத்யபாரதி நிதானித்தாள்.

"சத்யா" என்றழைத்தவாறு சித்தார்த் உள்ளே வர மகிழ்ச்சியும் ஆச்சரியமுமாக "அட, அண்ணா வாங்க, வாங்க" என்று வரவேற்றவள், அவசரமாய் சென்று கையை கழுவிவிட்டு அண்ணனை சோபா ஒன்றில் அமரச் சொல்லி தானும் ஒன்றில் அமர்ந்தாள்.

"அடடா, என்னம்மா நீ பாதி சாப்பாட்டுல எழுந்திட்டியா என்ன? போய் சாப்பிட்டு வா நான் வெய்ட் பண்றேன்" என்றவனிடம்

"நான் சாப்பிட்டாச்சு அண்ணா, நீங்க டிபன் சாப்டிங்களா? இல்லைன்னா முதலில் சாப்பிடுங்க, உங்களுக்கு பிடிச்ச இட்லியும் கொத்தமல்லி சட்டினியும் சூப்பரா இருக்கு"

"நான் சாப்பிட்டுதான் கிளம்பி வந்தேன்" என்ற அண்ணனின் முகத்தில் வழக்கமான மகிழ்ச்சியைக் காணமல் குழம்பியவள்,

"என்னாச்சு அண்ணா திடீர்னு வந்திருக்கீங்க? போன் கூட பண்ணலை." மெதுவாய் வினவினாள்.

சித்தார்த் விபரம் சொன்னான். சத்யாவிற்கு அதை கேட்டு வருத்தமாகத்தான் இருந்தது. தர்மலிங்கத்தின் மகளின் நினைவும் வந்தது. கூடவே அன்று கனகவல்லி பேசியதும். ஆனாலும் அதிகமாய் சந்தித்து இராத தர்மலிங்கம் அவரது பெண்ணுக்காகவேணும் பிழைத்து வர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டாள். தன்னைப் போன்று அந்த பெண்ணும் பெற்றவரை இழந்து வாடக் கூடாது என்று எண்ணினாள்.

"எப்போது அண்ணா ஆபரேஷன்?" அவள் கேட்டுக் கொண்டிருக்கையில் ரூபா இருவருக்கும் காபி கொணர்ந்து வைத்துவிட்டுப் போனாள். ஆளுக்கு ஒன்றாய் எடுத்துக் கொள்ள பேச்சு தொடர்ந்தது.

"இன்றைக்கு இன்னும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் டாக்டர். அநேகமா நாளைக்குத்தான் ஆபரேஷன் இருக்கும்னு நினைக்கிறேன் மா."

"ஓ! சரி அண்ணா, ஆனால் நான் அங்கே இப்போது வரமுடியாது. சொல்லப்போனால் நான் இன்றைக்கு தான் வேலையில் பொறுப்பேற்கப் போகிறேன். முடிந்தால் மாலையில் வருகிறேன்"

"இல்லை, சத்யா நீ அங்கெல்லாம் வரத் தேவையில்லை. அங்கே வசுவோட அத்தை இருக்கிறார்கள். அவர்களுக்கு நீ தனியாக தங்கி வேலை பார்ப்பது பிடிக்கலை. அதனாலதான் நான் சினேகிதனைப் பார்த்து வருவதாக சொல்லிவிட்டு உன்னை பார்க்க வந்தேன். நீ கிளம்புமா ஆல் த பெஸ்ட். வா நானும் கிளம்பறேன்”, என்று எழுந்து கொள்ள தன் கைப்பையை எடுத்துக் கொண்டு அண்ணனுடன் கிளம்பினாள் சத்யா.

ஆஸ்பத்திரிக்கு வரவேண்டாம் என்று அண்ணன் சொன்னது சத்யாவிற்கு மனம் சற்று லேசாகிற்று. அவளுக்கு அங்கே கண்ணனை சந்திக்க நேர்ந்து விடுமோ என்று உள்ளூர கலக்கமாக இருந்தது. அது தவிர்க்கப் பட்டதில் கொஞ்சம் நிம்மதி தான்.
☆☆☆

சத்யபாரதி அன்றைக்கு தன் இருசக்கர வாகனத்தில் செல்லாது அண்ணனுடன் ஆட்டோவில் செல்ல நேர்ந்தது. ஆலுவலகத்தில் தங்கையை விட்டுவிட்டு சித்தார்த் ஆஸ்பத்திரிக்கு சென்றான்.

அலுவலகத்தில் அவளுக்காக முன்னாள் காரியதரிசி ரவி காத்திருந்தான். அன்று நிறுவனத்தின் பாஸ் ஒரு முக்கிய வேலையாக சென்றிருப்பதாகவும், மதியத்திற்குள் வந்துவிடுவார் என்றும் தெரிவித்தவன், அன்றைக்கு செய்ய வேண்டிய அலுவல் பற்றி விளக்கிவிட்டு, எப்படி செய்ய வேண்டும் என்றும் சொல்லி கொடுத்தான்.

கவனமாக கேட்டுக் கொண்ட சத்யா, அதன்படி வேலைகளை செய்யத் தொடங்கினாள். சற்று நேரம் அதை மேற்பார்வையிட்டு திருப்தியுற்றவன், அவளை வாழ்த்தி ரவி விடைபெற்றுக் கொண்டான்.

மதிய உணவு நினைவே இல்லாமல் வேலையில் கவனமாக இருந்தபோது...

கதவை தட்டிவிட்டு கையில் பிரபல உணவகத்தின் சாப்பாடு அடங்கிய பையுடன் உள்ளே நுழைந்தான் கிருஷ்ணசந்திரன்.

அப்போது தான் சுற்றுப்புறம் நினைவு வர பதற்றத்துடன் எழுந்து நின்றவளை கையமர்த்திவிட்டு, "இது போன்ற மரியாதை எல்லாம் அனாவசியம் இல்லை பாரதி," என்றவாறு இருக்கையில் சென்று அமர்ந்தான்.

அப்போதுதான் இன்னும் அவள் சாப்பிடாதது நினைவிற்கு வந்தது. அவனிடம் அனுமதி கேட்டு போய் சாப்பிட்டு வரலாம் என்று எண்ணுகையில்,

" நீ இன்னும் சாப்பிடவில்லையா பாரதி?" என்று அவன் கேட்கவும் உள்ளூர திகைத்தவளாய், " இ.. இனிமேல் தான் சார்" என்றாள் தடுமாற்றமாய்..

சத்யா முதல் நாள் என்பதால் எந்த தவறும் நேர்ந்துவிடக் கூடாது என்று, முழு கவனத்துடன் வேலையில் மூழ்கியிருந்ததால், மதிய உணவு பற்றிய நினைவே இல்லை..

சத்யபாரதியின் பதிலில் கிருஷ்ணசந்திரனின் முகம் மாறிவிட்டது, "மணி என்ன ஆச்சு? சாப்பாடு கொண்டு வரலைன்னா கேன்டீனில் போய் சாப்பிட்டிருக்கலாம். இல்லை என்றால் வரவழைத்தேனும் சாப்பிட்டிருக்கலாம், ஏன் சாப்பிடலை? என்றபோது அவன் குரலில் கடுமை இருந்ததை சத்யா உணர்ந்தாள்.

அவள் என்ன சொல்வது என்று திணறிக்கொண்டு இருக்க, "சரி, சரி இன்று ஒருநாள் போகட்டும். இனிமேல் சாப்பாட்டு வேளை தவறாமல் பார்த்துக் கொள். இப்போது கேன்டீனில் எல்லாம் தீர்ந்து போயிருக்கும். நேரம் கடந்து விட்டதால் என்னாலும் முழு சாப்பாட்டையும் சாப்பிட முடியாது, அதனால் பகிர்ந்து சாப்பிடலாம் வா" என்றழைத்தான்.

மறுப்பது சரியில்லை என்று தோன்றியது, கூடவே மறுத்தாலும் அவன் கோபம் கூடும். வந்த அன்றே ஒரு விவாதம் எதற்கு? என்ற எண்ணத்துடன் அவனது மேஜையை ஒதுக்கி சாப்பிட வசதி செய்கையில், அவனும்தானே இன்னும் சாப்பிடவில்லை, அப்புறம் தன்னை மட்டும் கோபித்துக் கொளகிறானே ? என்ன நியாயம்? சத்யாவிற்கு நினைவு வந்தது.

"ம்... என்ன பாரதி? இவன் இவ்வளவு நேரமாகியும் சாப்பிடாமல் இருந்துவிட்டு நம்மளைச் சொல்ல வந்துட்டானே என்று நினைக்கிறியா?" என்றவாறு உணவை பகிர்ந்து அவள் புறமாக வைத்தான் கிருஷ்ணா.

அவன் குரலில் சற்று முன் காணப்பட்ட கடுமை இல்லை என்றாலும் அவள் எண்ணவோட்டத்தை கணித்து கேட்டதும், சத்யா துள்ளி் விழாத குறைதான்.

ஆனாலும் சட்டென்று சமாளித்து, "அ..அ வந்து தப்பில்லையே சார்"என்று துணிவை வரவழைத்து கேட்டாள்.

"ஆமோதிப்பாக தலையசைத்து, "ம்ம் என் விஷயம் வேறு பாரதி. நான் என் உறவினரை பார்க்க போயிருந்தேன். அங்கே தலைமை மருத்துவர் வர தாமதமாகிவிட்டது. அதன் பின் பேசிமுடித்து வர தாமதமாகிப் போயிற்று. தவிர காத்திருந்த சமயத்தில் நான் மற்றவர்களோடு பழச்சாறு குடித்தேன். ஆனாலும் உணவை மறக்காமல் கொண்டு வந்துவிட்டேனே? என்றபோது
சத்யா அவனை கேள்வியாக நோக்க...

தலயசைத்து... "ம்ம்..உன் கேள்வி புரிகிறது.. அங்கேயே சாப்பிட அமர்ந்தால் இன்னும் தாமதமாகிவிடும். உனக்கு இன்று முதல் நாள் வேறு. ரவி எல்லாம் சொல்லி தந்திருப்பான். ஆனாலும் உனக்கு இங்கே யாரும் அறிமுகம் இல்லை. எதை யாரிடம் கேட்பது என்று நீ சங்கடப்பட்டு கொண்டிருப்பாய் என்று தான் கையோடு வாங்கி வந்தேன். அதுவும் நல்லதாகிப் போயிற்று பார்" என்று அவன் முறுவலித்தபோது சத்யா ஒருகணம் திகைத்து சட்டென்று தன் பார்வையை விலக்கிக் கொண்டாள்.

இதயம் தடதடப்பது அவனுக்கு கேட்டு விடுமோ என்று தோன்ற.. அவசரமாக " சார் நான் கை அலம்பிட்டு வருகிறேன்" என்று எழுந்து ஓய்வு அறைக்குள் நுழைந்தாள் சத்யா.

கிருஷ்ணசந்திரனின் முறுவல் விரிந்தது.

உணவை முடித்த பின் சத்யபாரதிக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களை அறிமுகம் செய்து வைத்தான் கிருஷ்ணா. அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் அவளை அழைத்து சென்று அங்கே தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களை அறிமுகம் செய்து அவர்களைப் பற்றிய விவரங்களையும் தெரிவித்தான்.
ஆடை
வடிவமைக்கும் பகுதிகளில் ஆண்களின் உடைகளுக்கும் பெண்களின் உடைகளுக்கும் தனித்தனியாக பிரிவுகள் இருந்தது. ஆனால் அங்கே பணிபுரிந்தவர்கள் அனைவரும் ஆண்கள்.

அறைக்கு திரும்பி வந்தபின் சத்யாவின் மனதில் ஒரு விஷயம் ரொம்பவும் உறுத்தியது. எந்தப் பிரிவிலும் பெயருக்கு கூட ஒரு பெண் காணப்படவில்லை. சொல்லப் போனால் அவள் மட்டுமே பெண் அங்கே ஏன் ??

திரு. ராஜேந்திரன் கேட்டுக் கொண்டார் என்று முன்தினம் அவன் கூறியது நினைவு வந்தது, அது மட்டும் தான் காரணமா ? அல்லது வேறு ஏதேனும் உள் நோக்கம் இருக்குமா என்று எண்ணும்போதே அவளுக்கு மூச்சடைத்தது...
 

Attachments

  • PSX_20240724_125220.jpg
    PSX_20240724_125220.jpg
    54 KB · Views: 12