• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

07. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
பானுரதி துரைசிங்கம். 07


வீட்டினுள் அடியெடுத்து வைத்தவளை "வாங்க மகாராணி! எங்க போயிட்டு வரீங்க" என்று நக்கல் தொனியுடன் வரவேற்றாள் ஷோபனா.

"வேற எங்கமா போவா? மகாராணி மகாராஜா கூட தங்கத் தேர்ல பவனி சென்று இருக்கா" கால் மேல் கால் போட்டு ஸ்னாக்ஸை கொறித்துக் கொண்டு கூறியது ஆராதனாவே தான்.

"உன்கிட்ட தான் கேட்கிறேன். யார் கூட ஊர் சுற்றிட்டு வந்திருக்க?" அனல் தெறிக்க பார்த்தார் ஷோபனா.

"அது வந்து... வந்து சித்தி" வயிறு கலங்கியது பெண்ணவளுக்கு.

"முன்னாடி எல்லாம் அந்த பிச்சைக்கார அகரன் கூட சுற்றின. இப்போ வாட்ட சாட்டமா பணக்காரன் ஒருத்தன் கிடைச்சதும், அவனை விட்டுட்டு இவன் பின்னால திரியுறியா?

அது எப்படிடி எல்லா பசங்களையும் உடனே மயக்குற?" என்று கேவலமாகக் கேட்டார் அந்த அரக்கி!

அவரது சொற்களில் கூனிக் குறுகிப் போய் நின்றவள் மனதினில், மின்னலென வந்து போனான் மது வர்ஷன்!

இதுவரை இருந்த பயம் மெல்லமாய் விலக தலை தூக்கி சித்தியை நேர்ப் பார்வை பார்த்தாள் அமுத யாழினி...!!





தென்மேற்குப் பக்கத்து வானம் சாம்பல் பூசிக் கிடக்க, நடு நடுவே தூறல்களால் மண்ணை ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது மழை மேகம்.


கீழ்த் திசை வானத்துக் கதிரவனின் ஒளிகள் சாம்பல் நிறத்தை ஊடுருவித் தோற்றுப் போய்த் தன் கதிர்கள் மொத்தத்தையும் அந்தச் சின்னக் கட்டிடத்தின் ஜன்னல் வழியே பரப்பிக் கொண்டிருந்தது.

அந்த ஜன்னலோரம் நின்றபடி இளங் காலையிலேயே தூறல் போட்ட மேகத்தையும், சூரிய ஒளி பட்டு ஜொலித்த மரத்து இலைகளையும், பூக்களையும் இரசனையோடு பார்த்தபடி, தேநீரை ருசித்துப் பருகிக் கொண்டிருந்தான் மதுவர்ஷன்.

அவனது கண்களில் பட்ட காட்சிகள் கருத்தில் பட்டுச் சிந்தையைத் தொட்டாலும், அவனது எண்ணத்தை அப்போது ஆக்கிரமித்து இருந்தாள் அமுத யாழினி.

மதுவர்ஷன் வெறும் வாய் வார்த்தைக்காக, அவளை நடன வகுப்பைத் தொடங்கும் படி சொல்லி விடவில்லை.

அவனுக்கு அவளை எப்பாடு பட்டேனும் அந்த நரகத்தில் இருந்து மீட்டே ஆக வேண்டும் என்ற எண்ணம் விதையாய் விழுந்து, விருட்சமாக வளர்ந்து நின்றிருந்தது.

அந்த எண்ணத்தின் தொடக்கமாகத் தனது வீட்டில் இருந்து, இரண்டு தெருக்கள் தள்ளி, அவளுக்காக அவள் நடன வகுப்பு நடாத்துவதற்காகக் கட்டிடம் போன்ற ஒரு இடத்தை ஒதுக்கி, அதற்கு நாளை அவளது கையாலேயே திறப்பு விழா என்கிற அளவிற்கு வந்து நின்றான்.

நேற்றுவரை யாரென்றே தெரியாத ஒருத்திக்காகத் தான் ஏன் இத்தனை தூரம் மெனக்கெடுகிறோம் என்பதற்கான பதில் பாவம் அவனுக்கே தெரியவில்லை.

அந்தப் பதிலை அவன் ஆராயவும் முற்படவில்லை. அவனுக்கு ஏனோ அமுதாவிற்கு எது செய்தாலும் பிடித்திருந்தது.

அகரனை நான் குட்டித் தம்பி போல நேசிக்கிறேன்... அவன் தன் அம்முவை நேசிக்கிறான்... அதனால் நானும் அம்முவை நேசிக்கிறேன்... எனத் தன்னுள் அமுதாவுக்காகத் துளிர்த்த நேசத்துக்காக ஒரு சப்பைக்கட்டுக் கட்டிக் கொண்டான் அந்த அழுத்தக்காரன்.

குடித்து முடித்த தேநீர்க் கோப்பையை வைத்து விட்டு, அந்தப் பெரிய இடத்தைத் திரும்பிப் பார்த்தான் மதுவர்ஷன்...

அங்கிருந்த அனைத்துமே அவனுக்குத் திருப்தி தருவதாகவே இருந்தது.

மீண்டும் ஒரு முறை தான் மெனக்கெட்டுச் செய்த விடயங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தவன், திருப்தியோடு தன் வீட்டுக்குப் புறப்பட்டான்.

இது நிச்சயமாய் என் குட்டித் தும்பிக்கும் அவனது மட்டி அம்முவுக்கும் பிடிக்கும் என நினைத்தவன் நேராகப் போய்த் தனது தாயருகே நின்றான்...

காலையிலேயே சமையற்கட்டில் வந்து நின்ற மகனைப் பார்த்த பார்வதி, கண்களை விரித்தபடி வெளியே எட்டிப் பார்த்தார்.

அவரது செய்கையில் சிரித்தவன்,


"அதெல்லாம்... வெளியில வெயில் தான்மா அடிக்குது... மழையொண்டும் இல்லை..."
என்று சொல்லி விட்டுச் சமையலறை மேடையில் தாவி ஏறி அமர்ந்தபடி, தாய் ஊறுகாய் செய்வதற்கு வைத்திருந்த மாங்காயொன்றை எடுத்துக் கடித்தான்.

"டேய் டேய்... அது புளி மாங்காய்டா... பாரு பல்லுக் கூசப் போது..."
என அவன் கையில் இருந்து மாங்காயைப் பறித்து வைத்தவர்,


"சரி சொல்லு... என்ன விசியம்...?"
என்று புருவம் உயர்த்திக் கேட்டார்.

அவரது புருவத்தை நீவி விட்டவன்
"நீங்க புருவம் உசத்திப் பார்க்கும் போது, ரொம்ப அம்சமா அழகா இருக்கீங்கம்மா..."
என்றவனது கைகளைத் தட்டிய பார்வதி,


"அடங்குடா நான் பெத்தவனே... வந்த விசியத்தைச் சொல்லுடா முதல்ல..."
என்று அவன் வந்த விசியத்திலேயே நின்றார்.

கீழே குதித்திறங்கிய மதுவர்ஷன், தாயின் தோள்களில் கரங்களைப் போட்டு,


"அம்மா... நாளைக்கு என்கூட ஒரு திறப்பு விழாவுக்கு வர முடியுமா...? தயவு செஞ்சு மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்கம்மா... உங்க புள்ளையோட இத்தனூண்டு குட்டி இதயம் சல்லி சல்லியா நொறுங்கிடும்..."
என்று பாவமாகச் சொல்ல, அதைப் பார்த்த பார்வது வந்த சிரிப்பை அடக்கியபடி,


"சரி சரி வர்ரேண்டா மகனே... ஆனா எங்க யாரோட விழான்னு நீ ஒண்ணுமே சொல்லலியே...!"
என்று கேட்டார்.

"அதுவாம்மா... அது வந்து..."

"ஓஓ... நீ இன்னும் வந்தே சேரலியா...? சரி வந்திட்டுச் சொல்லு..."

"ஐயோ... இருங்கம்மா சொல்றேன்... அது நம்ம அகரன் இருக்கான்ல..."

"ஆமா... நம்ம அகிப்பாப்பா... அவனுக்கு ஏதும் சொந்தமாக் கடை வைச்சுக் குடுத்து இருக்கியோ..."

"அடடா... இந்த எண்ணம் எனக்கு வராமப் போச்சே... அடுத்ததா அவனுக்கு ஒரு கடை வைச்சுக் குடுத்திடுவோம்மா..."

"அவனைப் பாக்கும் போது, உனக்குச் சின்னத் தம்பி போலயே இருக்கான்டா... பேசாமல் அவனை நாம தத்தெடுத்துக்கலாமாடா வர்ஷா..."

"ஓ... அதுக்கென்னம்மா... இண்டைக்கே வேணும்னாலும் எடுத்துக்கலாம்... எனக்கும் அவனை ரொம்பப் புடிக்கும்மா..."

"உங்கப்பாகிட்டே சொல்லி, அவனைச் சீக்கிரமா நம்ம வீட்டுப் பிள்ளையா ஆக்கிடலாம்... பாவம் எம் புள்ளை... அதுக்கு யாருமே இல்லைன்னு ஒரு நாள் சொல்லி அழுதிச்சுடா... அப்புடியே கட்டிக்கிட்டு அம்மா நான் இருக்கேன்டா தங்கம் உனக்குன்னு சொல்லணும் போல இருந்திச்சுடா வர்ஷா..."

"உண்மையாத் தானம்மா... சரிம்மா அவனைப் பத்திப் பேசத் தொடங்கினாலே, எனக்கு எல்லாமே மறந்திடுது..."

"அட அதே தான்டா எனக்கும்... சரி நீ சொல்லு யாரோட திறப்பு விழா... நான் என்ன நேரம் வரோணும்..."

"அதும்மா... நம்ம அகரனுக்கு வேண்டப்பட்ட ஒரு பொண்ணும்மா... அதுக்கு இந்த ஆடுறது எல்லாம் நல்லா வரும், அதுவும் நம்ம அகியைப் போலத் தானமா அவளுக்கும் யாருமேயில்லை... அதுதான் அவளுக்கு ஒரு இடம் ஒதுக்கிக் குடுத்து இருக்கிறன்... அங்க அவள் பிள்ளையளுக்கு வகுப்பு எடுக்க வசதியா இருக்கும்..."

"அட அப்புடியோடா... நம்ம அகிக்கு வேண்டப்பட்ட பிள்ளையா...? அப்போ இன்னொண்ணு செய்வமா...?"

"என்னம்மா..."

"அந்தப் பிள்ளைக்கு என்ன பேருடா..."

"அவளுக்காம்மா... அவளுக்கு அம்முக்கு யா..." எப்போதும் மனதுக்குள் புலம்பி பழகியவனுக்கு இன்று வாய் தவறி வார்த்தையாய் விழுந்தது.

"என்னடா... என்ன பேரு இது...?"

"அச்சோ... அமுதயாழினிம்மா..."

"ஏதோ அம்முக்கு கும்முக்குன்னு சொன்னியே..."

"அப்புடியா சொன்னேன்... அந்த அம்மைக்கு அமுதயாழினுனு சொல்ல வந்தேன்மா... உங்களுக்கு வேறை மாதிரி விழுந்திருக்கும்..."

"ம்ம்... ஏதோ சமாளிச்சு மெழுகிப் பேசு... நீ சொன்னா வாயை மூடிக் கேட்டுக்கணும்..."

"சரி சரி விடுங்கம்மா... ஏதோ வாய் தவறி வந்திட்டு... அது சரி இன்னொண்ணு செய்வமோனு கேட்க வந்தியளே அது என்னம்மா...?"

"அதில்லைடா வர்ஷா... நம்ம அகி மாதிரி, அந்தப் பிள்ளைக்கும் யாருமே இல்லைனு சொன்னியா... அது அம்மாவுக்கு ரொம்பக் கஷ்டமாப் போச்சுடா..."

"ம்ம்ம்... எனக்கும் தான்மா..."

"அப்போ அந்தப் பொண்ணையும் இன்னொரு மகளாத் தத்தெடுத்துக்குவமாடா...?"

"எந்தப் பிள்ளைய.?"

"அது தான்டா... அந்த அம்முக்குயாழினிய.."

"ஐயோ ஐயோ... வேண்டாம்மா..."
என்று கிட்டத் தட்டப் பதறிய மகனை விசித்திரமாகப் பார்த்தபடி,


"இருடா இரு... அதுக்கு ஏன் இப்புடிப் பதறுறாய்...? வேண்டாமா ஏன்டா..."
என விளக்கம் போலக் கேட்டார்.

"அதும்மா... அது... அது என்னெண்டால்... ஆ... வந்திட்டு... அம்மா... அவளுக்கு இங்க மகளா வர விருப்பம் இருக்காது..."

"அவளுக்கு இருக்காதோ...? உனக்கு இருக்காதோ...?"

"எனக்கு இல்லைம்மா... அவளுக்கு தான்... அவ இங்க எல்லாம் வர மாட்டா... அவ சித்தி அவளை விட மாட்டா..."

"ஓஓ... அப்புடியோ..."

"அப்புடித் தான்... அப்புடியே தான்..."

"அப்போ சரி..."
எனத் தன் வேலையைப் பாக்கத் திரும்பியவர், மீண்டும் ஏதோ யோசனையாக இவன் பக்கம் திரும்ப, இப்ப என்ன பூதம் கிளப்பப் போகிறார்களோ என்பது போல தலையைப் பிடித்தபடி தாயைப் பார்த்தான், அமுதாவை மெல்ல மெல்லத் தன் இதயத்துள் நுழைய விட்டுக் கொண்டிருந்த மதுவர்ஷன்.

"வர்ஷா..."

"ஓம் அம்மா... நான் தான்..."

"அந்த அம்முக்கு..."

"அம்மாஆஆஆஆ..."

"சரிடா சரி... அந்த அமுதாவை மகளாத் தான் வீட்டுக்குக் கொண்டு வர முடியாது... மருமகளாக் கொண்டு வரலாம் தானே..."

"என்னம்மா... எனக்கு இப்போ கல்யாணம் எல்லாம் வேண்டாம்... அதுக்கு இன்னும்..."

"நான் பெத்தவனே...! உனக்கு கல்யாணம் கட்டி வைக்கப் பேறேன்னு இப்போ யாரு சொன்னா...?"

"அப்போ இப்போ... மருமகள் அது இதுன்னு ஏதோ சொன்னீங்களேம்மா..."

"ஆமாம்டா சொன்னேன்... நீ மட்டுமா எனக்குப் பையன்... என்னோட அகியும் எனக்குப் பையன் தானே..."

"அதுக்கு...?"

"அதுக்கு... அகிக்கு அந்த அமுதாவைக் கட்டி வைக்கலாம்னு பார்க்கிறேன்..."

"என்னம்மா சொல்றீங்க...?"

"ஆமாம்டா... நீ சொல்லுறதை வைச்சுப் பாத்தா, நம்ம அகிக்கு அந்தப் பிள்ளையை ரொம்பப் பிடிக்கும் போல... அப்போ அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது தானே முறை..."

"எனக்குக் கூடத் தான் அவளைப் புடிக்கும்..."

"என்னடா வர்ஷா... ஏதாவது சொல்லுறியோ... அம்மாக்கு ஒண்ணும் கேட்கலை..."

"உங்களுக்கு ஒண்ணும் கேட்க வேண்டாம்... நம்ம அகிக்கு அமுதாவைக் கட்டி வைக்க முடியாதும்மா..."

"ஏன்டா அப்புடிச் சொல்லுறாய்... அவளோட சித்திகிட்டே நான் பேசுறேன்..."

"அந்த பஜாரிகிட்டே மனுஷன் பேசுவானா..."
என முணுமுணுத்த மகனது முக பாவனையில், அந்தத் தாய்க்கு ஏதோ புரிவதாய் இருந்தது.
ஆனாலும் காட்டிக் கொள்ளாமல்,


"சொல்லுடா... ஏன் அகியை அமுதாவுக்குக் கட்டி வைக்க முடியாது..."
எனக் கேட்டார் பார்வதி.

வேகமாகக் காரணம் தேடியவனுக்கு பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது. அதைத் தாமதிக்காமல் வேகமாகச் செயற் படுத்தினான்.

"அதும்மா... நம்ம அகி வேறை ஒரு பொண்ணை விரும்புறான்மா..."

"உண்மையாவாடா... அந்தப் பொண்ணு ரொம்பக் குடுத்து வைச்ச பொண்ணா இருக்கும் எண்டு நினைக்கிறேன்...



சரிடா... இந்த அமுதாப் பொண்ணை என்ன செய்யலாம்...?"

"அவளை ஒண்ணும் செய்யத் தேவையில்லை... அவ சொந்தக் காலுல நிக்கிறதுக்கு உதவி மட்டும் செஞ்சாப் போதும்..."
என்ற மகனையே பார்த்திருந்த பார்வதிக்கு மகனின் மனமா புரியாது?.

அந்த அமுதாவைப் பார்த்து விட வேண்டும் என்று அவருக்கும் அவா தோன்றியது.

"சரக்கு மலிஞ்சா... சந்தைக்கு வந்து தானே சேரணும்... நாளைக்கு அப்பாவையும், கவியையும் கூடக் கூட்டிட்டுப் போவோம்டா வர்ஷா... அந்தப் பிள்ளை சந்தோஷப் படும்..."
என்று அத்துடன் அந்தப் பேச்சை முடித்துக் கொண்டார் பார்வதி.

அந்தப் பிள்ளை சந்தோஷப் படுமோ இல்லையோ! அவர் பிள்ளை கண்டிப்பாகச் சந்தோஷப் படும் என்பது தான் உண்மை.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

காலையிலேயே முகத்துக்கு மஞ்சள் பூசித் தலைக்குக் குளித்து, மங்களகரமாக அகரன் வாங்கிக் கொடுத்த மஞ்சள் புடவையைக் கட்டிக் கொண்டு, கோவிலுக்குப் போய் விட்டு வந்திருந்த அமுதயாழினியை இரு விழிகள் குரோதத்துடன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

ஆனால் அவளோ அதை எல்லாம் சட்டை செய்யாமல், தன்னறையில் இருந்த, தாயின் படத்துக்கு விளக்கேற்றிக் கும்பிட்டு விட்டு, வெளியே செல்லப் புறப்பட்டாள்.

அவளையே பார்த்திருந்த அவள் சித்தி ஷோபனா,


"எங்கடி காலங்காத்தாலேயே மினுக்கிட்டுக் கிளம்பிட்டே...?"
என வேண்டுமென்றே கேட்க,

முன்பு போல அவர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பயந்துபோய் நின்று பதில் சொல்வது போல இல்லாமல், வரவேற்பறையில் குடையைத் தேடியபடி,


"சித்தி... நிஜமாவே மினுங்கிறேனா... அது ஒண்ணுல்லை சித்தி... மஞ்சள் பூசிக் குளிச்சேனா... அது தான் மினுங்கிறன் போல..."
என்று சொல்லி விட்டு,

"அப்புறம் சித்தி... இண்டைக்கு நான் வகுப்பு எடுக்கப் போற இடத்துக்குத் திறப்புவிழானு சொன்னேனே... வர்ரீங்களா...?"
எனத் தொடர்ந்து கேட்க, கடுப்பான ஷோபனா.


"என்னடி கொழுப்பா...?"
முறைத்தார்.

அதற்கும் அலட்டிக் கொள்ளாமல்,
"எங்க சித்தி... என்ரை உடம்புத் தோற்றத்தைப் பார்த்தா, உங்களுக்கு அப்புடியா தெரியுது...? அதோட கொழுப்புச் சத்துள்ள சாப்பாட்டை நீங்க என் கண்ணுல காட்டியே பல வருஷம்... இதுல என்னைப் பார்த்து இப்புடிக் கேக்கிறீங்களே...! உங்களுக்கு ரொம்பத் தான் குசும்பு..."
ஷோபனாவின் கன்னத்தைக் கிள்ளி விட்டுச் சிட்டாக வெளியே அவள் பறக்க, ஷோபனாவோ ஙே என்று முழித்தார்.

அன்று மதுவர்ஷனோடு பேசி விட்டு வந்த அமுதா..., முதல் முதலாக ஷோபனா கக்கும் அழுக்கு வார்த்தைளைக் கண்டு கொள்ளாமல் இருக்கக் கற்றுக் கொண்டாள்.

என்ன சொன்னாலும் ஷோபனா தனக்கு சோறு போட்டவளாயிற்றே... அதனால் அவரைக் காரசாரமாக எதிர்க்கக் கூடாது... அதற்காக அவர் பேசும் வார்த்தைகளுக்குப் பணிந்தும் போகக் கூடாது என்றும் முடிவெடுத்து இருந்தாள்.

மதுவர்ஷனும் அடுத்த நாளில் இருந்தே, அவளுக்கான நடன வகுப்பு நடாத்தும் இடத்தைப் பார்த்து, அதற்கு முன்பணமும் கொடுத்து விட்டான்.

முதலில் அதை மறுத்தவளிடம்,
"இத பாரு.. நானும் ஒன்றும் இதை இனாமாகச் செய்யவில்லை... நீ உழைத்து எனது கடனை அடைத்து விடு... அதோடு என் தங்கை கவிக்கும் இந்த ஆடுறது ஓடுறதுன்னா ரொம்பப் பிடிக்கும்... பாதியும் அவளுக்காகத் தான் இந்த மாதிரி இடம் எல்லாம் பார்த்து இப்புடி எல்லாம் செஞ்சேன்... அதனால நீ சங்கடப் படாம, இங்க வேலைக்கு வரலாம்..."
என்று மதுவர்ஷன் சொல்லி முடித்து விட, அவளுக்கும் அதுக்குப் பிறகு மறுக்கத் தோன்றவில்லை.

அகரன் மூலம் இது பற்றி அறிந்து கொண்ட கவிநிலா,


"ஏண்டா வளர்ந்து கெட்டவனே... நான் எப்போடா உன்னட்டை வந்து ஆட்டம் சொல்லிக் குடு! நாட்டியம் சொல்லிக் குடுனு கேட்டேன்...? எனக்கு ஆடவே வராதேடா...! இதுல என்ர தொங்கச்சிக்கு ஆடுறதுன்னா அப்புடி ஒரு ஆர்வம் எண்டு, வண்டில் வண்டிலா அவுத்து விட்டிட்டு வந்திருக்கியேடா...!

ஐயோ கடவுளே! இந்தக் கொடுமையைக் கேட்க ஆளே இல்லையா...? காலைக் கையைத் தூக்கி, மல்லாக்க விழுந்து தான் கிடக்கப் போறேன்... ஏண்டா அண்ணா... உன்ரை நட்புப் பயிரை வளக்க, நான் தானாடா பலிக்கடா... என்ர மானமே போகப் போகுது..."
என்றபடி மதுவர்ஷனைத் துடைப்பக் கட்டையால் துரத்தித் துரத்தி அடித்ததெல்லாம் தனிக்கதை.

"அவர் தன் தங்கைக்காக இப்படி ஒரு இடத்தை வாங்கி இருக்கிறார்... என்ன ஒரு பாசம்..."
என அதற்கும் அவனைப் பெருமையாக நினைத்துக் கொண்டாள் அமுதா.


அவன் அவளுக்காக மட்டுமே இதையெல்லாம் தானே முன்னின்று பார்த்துப் பார்த்துச் செய்கிறான் என்பது தெரிய வந்தால், அவளது எதிர்வினை எப்படி இருக்குமோ தெரியவில்லை.

மெல்லத் தன் நடன வகுப்புக்காக ஒதுக்கப் பட்டிருந்த இடத்துக்கு வந்த அமுதயாழினி, உண்மையில் பிரமித்துத் தான் போனாள்.

ஒரு மொட்டை மாடியும் இரண்டு பெரிய அறைகளைக் கொண்டதுமாக அந்தக் கட்டிடம் இருந்தது.

ஒரு பெரிய அறையின் சுவர் முழுவதும் நடிகைகளின் நடன அசைவுகள் படமகத் தொங்கிக் கொண்டிருந்தது. அதிலும் அவளுக்கு மிகவும் பிடித்த நாட்டியப்பேரொளி பத்மினியின் படங்களே ஏராளம்...

ஓரளவு பெரிதாக அவரின் படங்கள் தொங்க, அதன் நடுவே அமுதா பன்னிரண்டு வயதில் பள்ளிக் கலைநிகழ்ச்சியில் ஆடிய போது எடுத்த படம் பிரமாண்டமாகப் பெருப்பிக்கப் பட்டு, அவளைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது.

அதெல்லாம் வர்ஷன் தான் செய்திருப்பான் என்பதை உணர்ந்தவளது விழிகள் லேசாகக் கலங்கின. அந்தக் கலக்கத்துடனேயே அவள் விழிகள் வர்ஷனைத் தேடின.

அவனோ தன்னையொருத்தி பெருமிதத்தோடு பார்க்கிறாள் என்பதக் கூட மறந்து, ஓடியாடி வேலைகள் செய்து கொண்டிருந்தான்.

அதே நேரத்தில் தங்களது பெரிய வாகனத்தில் இருந்து இறங்கி வந்தனர் சிவராமனும், பார்வதியும், கவிநிலாவும்.


வாசலில் நுழையும் போதே பார்வதியின் விழிகள் யார் இங்கே அமுதா என்பது போலத் தேட, அவர்களை வரவேற்று உள்ளே அமர வைத்தான் அகரன்.

அதே நேரம் அகரனுக்குக் காதல் வலை வீச என்றே, தன்னிடம் இருந்த மஞ்சள் புடவையைக் கட்டிக் கொண்டு ஆராதனாவும் அங்கே ஆஜராகியிருந்தாள்.

அவளைப் பார்த்ததும் முதலில் முகத்தைத் திருப்பிக் கொண்ட அகரன், பின்னர் தன்னை அறியாமலேயே அவளைப் பார்த்தான்.

அவனொன்றும் அவள் மீது ஈர்ப்பு வந்து அப்படிப் பார்க்கவில்லை. அந்தப் பக்கிப் பன்னாடை, அகரன் அமுதாவுக்காக வாங்கிக் கொடுத்த, மஞ்சள் புடவயைத் தான் சுருட்டிக் கொண்டு, அவளுக்குத் தன்னிடம் இருந்த புடவையை வைத்து விட்டது.

அதை ஒற்றைப் பார்வையிலேயே கண்டு கொண்ட அகரன், பல்லைக் கடித்தான்.

அவனை மேலும் யோசிக்க விடாமல், அவனுக்கு வேலைகளைக் கொடுத்த வர்ஷன், தன் பெற்றோருக்கு அமுதாவை அறிமுகம் செய்து வைத்தான்.


அவளைப் பற்றி அவன் வீட்டில் பேசாத நாளே இல்லை என்பதால், அவளைப் பார்த்தவர்களுக்கு அவள் புதியவள் போலத் தெரியவில்லை.

உடனேயே எல்லோரும் அவளுடன் ஒன்றி விட்டனர்.

அமுதாவும் சிவராமன் பார்வதி தம்பதிகளின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, தாங்கள் கொண்டு வந்த பரிசை அவளிடம் கொடுத்தனர்.

அதன் பிறகு எல்லாமே வேகமாக நடந்தது. வாசலில் கிடந்த நாடாவை வெட்டி அந்த வகுப்பறையைத் திறக்க வேண்டிக், கையில் வைத்திருந்த கத்தரிக்கோலை வர்ஷன் அமுதாவிடம் கொடுக்க, அவளோ சற்றும் யோசிக்காமல் அதைப் பார்வதியிடம் நீட்டி விட்டாள்.

"அம்மா... நீங்களே வெட்டி என்னோட இந்த வகுப்பறையைத் திறந்து வைச்சால், நான் ரொம்ப சந்தோஷப் படுவேன்..."
என அவள் கூற, அந்தத் தாயாலும் அதை மறுக்க முடியவில்லை.

அவளது கையையும் பிடித்து, இருவருமே அந்த நடனவகுப்புக்கான திறப்பு விழா நாடாவை வெட்டி, அந்த வகுப்பைத் திறந்து வைத்தனர்.

அப்படியே அமுதாவுக்கான சுபீட்சம் நிறைந்த எதிர்கால வாழ்க்கைக்கான கதவும் திறந்து கொண்டது.

அவளது விழிகள் அவனையும் அறியாமல் அவன் முகம் பார்க்க, அவளுள் அவனுக்கென ஒரு கவி நொடியில் பரிணமித்தது.

“வன்மங்களும், வஞ்சனைகளும் சூழ்ந்திருந்த காரிருள் காலம் ஒன்றிலே...
வற்றிய நதியென இருந்தவள் இவள்...

வல்லூறுகளும் கழுகுகளும் வட்டமிட்ட தருணங்களில்... வழியறியாமல் மருண்ட மானாய் திகைத்தவள் இவள்...

வலையில் மாட்டிக் கொண்ட மீனாய் உயிர் மூச்சுக்காய்த் தவித்திருந்தவளின் வேதனை அறியாதோர் பலர்...

வறண்டு போன வயல்வெளி பாளம் பாளமாக வெடித்து இருப்பது போல இவள் உள்ளமும் வறண்டு வெடித்ததை யாரும் அறியவில்லை...

வல்லினங்கள் பல சேர்ந்து மெல்லினமென இருந்தவளை வசைபாடியதை ஏற்க முடியாமல் கண்ணீரைத் துணைக்கழைத்தவள் இவள்...

வாய் பேசாத பூச்சி போலவே சுற்றம் இவளைத் தூக்கிப் பந்தாட மௌனத்தை மட்டுமே உடைமையாக்கிக் கொண்டவள் இவள்...

வனிதை இவளின் வருத்தத்தைக் கண்ணுற்ற கடவுளோ தேவதூதன் ஒருவனை இவளுக்காய் அனுப்பி வைத்தான்...

வந்தவனோ வலக்கரம் நீட்டி இவளை தன் வாழ்வோடு பிணைத்துக் கொண்டான்...
இவள் வாழ்வே அழகாய்ப் பரிணமித்தது...

வன்மமும் வஞ்சனையும் கொண்ட காரிருளை வசந்தமும் வனப்பும் கொண்ட விடியலாய்த் தோற்றுவித்தான்...

வற்றிய நதியென இருந்தவள் மனதில் வான்மழையெனப் பொழிந்து குளிர்வித்தான்...

வல்லூறுகளையும் கழுகுகளையும் ஒற்றைப் பார்வையில் செயலிழக்கச் செய்து மான்விழியாளை நிம்மதி கொள்ளச் செய்தான்...

வலையில் மாட்டிய கயல்மீனிவளைத் தன் இதயக் கடலில் நீந்த விட்டுச் சுவீகரித்தான்...

வறட்சியால் வெடித்த உள்ளத்தில் தன் அன்புப் பசையைக் கொட்டி ஒட்ட வைத்தான்...

வல்லினங்கள் வசை பாட முன் வந்த வேளை ஆயுத எழுத்தாகி மெல்லினமிவளைத் தனக்குள் பொத்திக் கொண்டான்...

வாய் பேசாத பூச்சி ஆக இருந்தவள் இன்று வெட்டரிவாளாய் பலரை வாயடைக்கச் செய்யக் காரணமானான்...

தோள் கொடுக்க ஒரு அன்புள்ளம் கிடைத்தால் வானமே இடிந்து விழுந்தாலும் அச்சமில்லை என்பதைப் புரிந்து கொண்டாள் இவள்..”