ஓர் ஆண்டுக்குக்குள் ஆனந்தன் தன் பங்களாவை கட்டி முடித்துவிட்டான்! கட்டும் போதே திட்டமிட்டபடி, செடிகொடிகளை வைத்து பராமரித்திருந்ததால் அவைகள் வளர்ந்து அந்த வீட்டிற்கு மேலும் அழகு சேர்த்தது!
கிரகப்பிரவேசத்தை ஆடம்பரம் இல்லாமல் முக்கியமானவர்களை மட்டும் அழைத்து எளிமையாக நடத்தினான்!
அந்த விசேஷத்தில் கலந்து கொள்ள தனுஷ்கோடி மட்டுமாக வந்திருந்தார்! இன்னமும் அனிதாவிற்கு வருகிற வரன்கள் ஒன்று படிக்காதவர்களாக சொத்துபத்து உள்ளவர்களாக இருக்கிறார்கள்! அல்லது வெளிநாட்டில் வேலை செய்யும் வரன்களாக இருக்கிறார்கள்! அதையே முடிக்கலாம் என்று நினைத்தால் அனிதா வெளிநாட்டிற்கு போக மாட்டேன் என்கிறாள்! என்ன செய்வது என்று தெரியவில்லை மாப்பிள்ளை!" என்று வருந்தினார்!
ஆனந்தனுக்கும் உள்ளூர சற்று வருத்தமாக இருந்தது! அதை காட்டிக்கொள்ளாது, தனக்கு தெரிந்த இடங்களில் அவளுக்கு நல்ல வரன் தேடுவதாக வாக்களித்தான்!
சாருபாலாவை வற்புறுத்தி அழைத்திருந்தான்! அவள் தன் தமையன் சுரேந்திரனுடன் வந்திருந்தாள்!
விசாலாட்சிக்கு, அவர்களை அறிமுகம் செய்து வைத்த ஆனந்தன், "இவள் தான் அம்மா உங்கள் வருங்கால மருமகள்"என்று விஷயத்தை சொல்லிவிட்டான்! சாருபாலா சிறு சங்கடத்துடன் அவர் காலைத் தொட்டு கும்பிட்டாள்!
விசாலாட்சி அப்போதைக்கு, வெறுமையாக புன்னகைத்து, "நல்லா இரும்மா" என்று வாழ்த்திவிட்டு, "இப்படி உட்காருங்க! நான் கொஞ்சம் வந்தவர்களை கவனிக்கப் போகணும், இருந்து விருந்து சாப்பிட்டுவிட்டு போகணும்! " என்று சென்றவர், சும்மாவும் செல்லவில்லை, ஒரு உறவுக்காரப் பெண்ணிடம்,சாரு கூடவே இருந்து கவனித்து சாப்பிட வைத்து அனுப்பும் படி பணித்து விட்டு சென்றார்! அந்த வகையில் அவரை குறை சொல்ல முடியாதுதான்!
ஆனால் ஆனந்தன் வீட்டிற்கு சென்று வந்த பிறகு, சாருபாலா மனதில் லேசாக நெருடல்! விசாலாட்சி, மகன் அறிமுகம் செய்த போது பெரிதாக மகிழ்ந்து விடவில்லை!சொல்லப்போனானல் அவள் முகத்தைக் கூட அந்தம்மாள் சரியாக பார்க்கவில்லை எனலாம்! அத்தோடு மேற்கொண்டு அவளைப் பற்றி அவர் ஏதும் விசாரிக்கவும் இல்லை! அவர் ஏதோ பட்டும்படாமல் நடந்து கொண்டது போலத் தான் தோன்றியது! இந்நிலையில் அவள் அந்த வீட்டிற்கு மருமகளாக போனால் என்ன ஆகும்?
இன்னமும் அவளுக்கு ஆனந்தன் மீது காதல் மாதிரியான ஈர்ப்பு உண்டாகவில்லை! ஆயினும் ஏனோ மனதில் அவனை காக்க வைத்து ஏமாற்றுவது போன்ற குற்ற குறுகுறுப்பு ஏற்பட்டது! ஆனந்தன் மீது பாசம் இருக்கிறது! அக்கறையும் இருக்கிறது! அப்புறமென்ன, அவன் சொன்னது போல ஒரு வேளை மஞ்சள் கயிறு மேஜிக் நடந்தால் நல்லது தானே? இப்படித்தான் சாருபாலாவின் நினைப்பு இருந்தது!
அடுத்தவருக்காக பார்த்தால் தன் வாழ்க்கை என்னவாகும் என்பதை அந்த பேதைப் பெண் உணரவில்லை!
🩷🩷🩷
சாருபாலாவை மருமகளாக ஏற்றுக் கொள்ள விசாலாட்சிக்கு சுத்தமாக விருப்பமே இல்லை! ஆனால் அவளை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று பிடிவாதமாக ஆனந்தன் சொன்ன பிறகு அவருக்கு வேறு மார்க்கமும் இருக்கவில்லை!
சாருபாலா வீட்டிற்கு, தாயும் மகனும், சில உறவினருடன் முறையாக பெண் கேட்டு சென்றனர்! சீர் எதுவும் செய்ய வேண்டாம்! நகை உங்கள் விருப்பம்! "என்று மகன் சொன்னதை ஒப்பித்து விட்டு வந்த விசாலாட்சி மனதுக்குள் ஆற்றாமை!
மாப்பிள்ளை வீட்டில் எதுவும் வேண்டாம் என்பதற்காக, பூபதி ஒன்றும், அப்படியே மகளை அனுப்பிவிடவில்லை! நாற்பது பவுன் நகையும், வீட்டுத் தேவைக்கான பண்ட பாத்திரமும் கொடுத்து, கௌரவமாகவே திருமணத்தை நடத்தி வைத்தார்!
விசாலாட்சி அதில் எல்லாம் குளிர்ந்துவிடவில்லை! மருமகளாக,மனைவியாக தன் கடமையை சரியாகவே செய்தாள் சாரு! ஆறு மாதங்களில் குழந்தைப் பேறு உண்டானது! விசாலாட்சி, மருமகளை நன்றாக பார்த்துக் கொண்டார்! அதற்கான காரணம் அப்போது சாருவிற்கு புரியவில்லை! அவரது வீட்டு வாரிசுக்காகத்தான் அப்படி கவனித்துக் கொண்டார் என்ற கசப்பான உண்மையை அறிந்து கொண்டபோது, பெருமூச்சுதான் விடமுடிந்தது!
சாருபாலா அழகான ஆண் குழந்தைக்கு தாயானாள் ! ரிஷிகேசவன் என்று பெயரிட்டனர்! ஆறு மாத ஓய்வுக்கு பிறகு, சாருபாலா தன் பணிக்கு திரும்பினாள்! அன்றாடம், கணவனுக்கும் மாமியாருக்கும் பணிவிடை செய்துவிட்டு, மருத்துவமனைக்கு கிளம்புவாள்! வீட்டில் சமைக்க, மேல் வேலை செய்ய, தோட்ட வேலைக்கு என்று வேலையாட்கள் இருந்தனர்! விசாலாட்சி திடகாத்திரமாக இருந்தாலும், குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு தாதியை ஏற்பாடு செய்தாள்!
வயசான காலத்துல கைக்குழந்தையை என்னால எப்படி பார்த்துக்க முடியும்? ம்ஹூம், இதுவே என் தம்பி மகளை கட்டியிருந்தால், என் மகனையும், வீட்டையும், என்னையும் எவ்வளவு நல்லா பார்த்துப்பா? என் மகன் ஆசைப்பட்டு உன்னை கட்டிட்டு வந்ததுக்கு, வேளா வேளைக்கு சாப்பாடு, தண்ணி எடுத்து கொடுக்கக்கூட வேலைக்காரனைக் கூப்பிடுற கொடுமையை எங்கே போய் சொல்ல? என்று மகன் இல்லாத நேரத்தில் அங்கலாய்த்துக் கொண்டதால் தான்!
ஆனந்தனிடம் அவள் எதையும் சொல்வதில்லை! அப்படி சொன்னால் வீட்டில் நிம்மதி போய்விடும்! அதுவே விசாலாட்சிக்கு வசதியாகிவிட்டது! மகன் இல்லாத நேரங்களில் மருமகளை ஜாடையாய் குத்தி பேசுவதை வழக்கமாக்கி கொண்டாள்! சாருவுக்கு இயல்பிலேயே மிகுந்த பொறுமை உண்டு! அதனால் மாமியார் ஆதங்கத்தில் பேசுகிறார் என்று ஒதுக்கினாள்!
🩷🩷🩷
பூபதி,மகளுக்கு திருமணம் முடிந்து, பேரனும் பிறந்து அவனுக்கு ஒரு வயது நிறைவு அடைந்ததும், தனது அடுத்த கடமையாக மகனுக்கும், சாந்தி என்ற பெண்ணை திருமணம் முடித்து வைத்தார்!
திருமணமான தம்பதிகளுக்கு இடையே இருக்க வேண்டாம் என்று
நினைத்தவர், கடவுளுக்கு நன்றி செலுத்தப் போகிறேன் என்று தன் வயதை ஒத்தவர்களுடன் சேர்ந்து பக்தி சுற்றுலாவுக்கு கிளம்பிச் சென்றுவிட்டார்!
சாருபாலாவின் தம்பி, சுரேந்திரனுக்கு மதுரையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் வேலை கிடைத்தது, மனைவியை அழைத்துக் கொண்டு அங்கே சென்றுவிட்டான்!
🩵🩷🩵
அடுத்த ஓராண்டு எந்த பிரச்சினையும் இல்லாமல், வாழ்க்கை சுமூகமாக சென்றது!
இந்நிலையில் ஆனந்தனுக்கு கன்னியாகுமரியில் ஒரு பங்களா கட்டும் வேலை வந்தது! அங்கே எப்படியும் ஒரு வாரம் தங்கியிருந்து வேலை பார்க்க வேண்டும் என்று ஆனந்தன், மனைவியிடம், தாயைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான்!
மகன் சென்ற பிறகு, விசாலாட்சி, தன் வழக்கமான குத்தல் பேச்சுக்களால் மருமகளை வருத்திக் கொண்டிருந்தாள்! சாரு இறுக வாயை மூடிக்கொண்டு தன் வேலைகளை பார்த்தாள்!
ஆனந்தன் கிளம்பி சென்று,அன்று மூன்றாம் நாள்! விசாலாட்சிக்கு காலை உணவுக்குப் பிறகு சின்ன தூக்கம் போடும் பழக்கம் உண்டு! அன்றும் அப்படித்தான் படுக்கச் சென்றார்!
சாருபாலா, அன்றைக்கு மதியத்திற்கு மேல், மருத்துவமனைக்கு போனால் போதும் என்பதால் வீட்டில் இருந்தாள்! மகனுக்கு சாப்பிட கொடுத்து, தூங்க வைத்தாள்! அதன் பிறகு ஒரு கதை புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள்! நேரம் போனதே தெரியாத அளவிற்கு சுவாரஸ்யமாக இருந்தது, அந்த கதை!
திடுமென விசாலாட்சியின் அலறல் அந்த பங்களாவையே அதிர வைக்க, தூக்கத்தில் இருந்த குழந்தை விழித்து சிணுங்க ஆரம்பிக்க, மகனை ஒரு கையில் வாரி அணைத்துக் கொண்டு மாமியார் அறைக்கு விரைந்தாள்! அதற்குள்ளாக சத்தம் கேட்டு, ஓடி வந்த வேலையாட்கள் இருவர் அம்மாளை தூக்கி படுக்கையில் கிடத்திக்கொண்டிருந்தனர்!
பிள்ளையை ஒரு பணிப்பெண்ணிடம் கொடுத்துவிட்டு, வலியில் அரற்றிக் கொண்டிருந்த மாமியாரை பரிசோதித்தாள்! காலில் நூலிழையில் விரிசல் விழுந்திருக்கலாம் என்று அனுமானித்தாள்! உடனடியாக முதலுதவியை செய்து விட்டு அவள் வேலை பார்க்கும் மருத்துவமனையை தொடர்பு கொண்டு, ஆம்புலன்ஸ் வரவழைத்து அந்தம்மாளை கொண்டு செல்ல ஏற்பாடு செய்தவள், குழந்தையை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு உடன் கிளம்பினாள்!
மருத்துவமனையில் அவளது அனுமானம் சரி என்பது போல மருத்துவர் காலுக்கு கட்டைப் போட்டு இரண்டு வாரங்கள் அசைக்காமல் பார்த்துக் கொள்ளச் சொன்னார் மருத்துவர்!
அந்த சம்பவத்தால் சாருவின் வாழ்க்கையே திசை மாறிப் போயிற்று