சாருபாலா இரண்டு வாரங்கள் லீவு போட்டு, மாமியாரை பார்த்துக் கொண்டாள்! இடையில் ஊரில் இருந்து திரும்பிய ஆனந்தனுக்கு மனைவியின் பொறுப்புணர்வு கண்டு பெருமிதம் உண்டாயிற்று!
சாருபாலா,மாமியாரை அழைத்துக் கொண்டு அடுத்த முறை பரிசோதனைக்கு சென்ற போது, "இன்னும் இரண்டு வாரங்கள், ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும், பிஸியோதெரபிஸ்ட் செய்து காட்டியபடி, நடைபயிற்சி வீட்டிற்குள்ளாக மெல்ல மெல்ல செய்யலாம்! ஊன்று கோலுடன் தனியாக நடக்க பழக வேண்டும்" என்று ஆலோசனை வழங்கினார் மருத்துவர்!
மேற்கொண்டு சாருவுக்கு விடுமுறை எடுக்க இயலாத நிலை! ஆகவே பயிற்சி பெற்ற நர்ஸை துணைக்கு அமர்த்தினாள்! அவர் நடக்கும்போது துணைக்கு ஒர் ஆள் தேவை! சொல்லப் போனால் அதற்கு வீட்டு வேலையாட்களே போதும் தான்! ஆனால் அதற்கு அந்த அம்மாள் ஒப்புக்கொள்ளவில்லை!
காரணம் விசாலாட்சி மனதில் வேறு ஒரு திட்டம் தோன்றி இருந்தது! ஆகவே, மகனிடம், " இதோ பாருப்பா வீட்டுக்குள்ளே நர்ஸ் கூடவே இருந்தா நான் என்னவோ ஆஸ்பத்திரில இருக்கிற மாதிரி தோனும்டா! அதனால நான் என் தம்பி மகளை உதவிக்கு கூப்பிட்டு கொள்கிறேன்! பாவம், நல்ல இடத்துல கட்டிக் கொடுத்தும், புருசனை வாரிக்கொடுத்துட்டு , வாழ்க்கையே வெறுத்துப் போய், விரக்தியா இருக்காளாம்! அதனால இங்கே வந்தால் அவளுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும்..! உன் பெண்டாட்டிக்கு விருப்பம் இல்லைன்னா, நான் இப்படியே கிடந்துட்டு போறேன்!" என்றார்!
ஆனந்தனுக்கு சற்று சங்கடமாக இருந்தது! ஆனால் தாயாரின் பிடிவாதம் ஒருபுறமும், அனிதாவின் நிலைக்கு அவனும் ஒரு காரணம் என்ற குற்றவுணர்வு ஒருபுறமும் அவனை சம்மதம் சொல்ல வைத்தது!
அவன் நல்லவிதமாக எண்ணித்தான் செய்தான்! ஆனால் அது இப்படி முடியும் என்று யார் நினைத்தார்கள்?
🩷🩷🩷
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு !
ஆனந்தனுக்கு திருமணம் முடிந்து மகனும் பிறந்து விட்டான்! ஆனால் அனிதாவின் கல்யாணம் நடந்தபாடாக இல்லை! தனுஷ்கோடி மகளுக்காக மாப்பிள்ளை பார்த்து ஓய்ந்து போய் இருந்தார்!
ஆனந்தன் தனக்கு தெரிந்த ஒருவர் மூலமாக வரன் ஒன்றை பார்த்தான்! எல்லாம் தீர விசாரித்து, திருப்தியாக இருந்ததால்,மாமனுக்கு தகவல் அனுப்பியதோடு, நேரடியாகவும் சென்று பேசினான்!
அனிதாவிடமும் அவன் எடுத்துச் சொல்லி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தான்! மாப்பிள்ளை வீடு நல்ல வசதியான குடும்பம்தான்! ஒரே பையன், படித்தவன், அத்தனை சொத்துக்கும் அவன்தான் வாரிசு! பெற்றோருக்கு மிகவும் தாமதமாக பிறந்த மகன்! அதனால அவர்கள் வயோதியர்களாக இருந்தனர்! வீட்டில் அனைத்து வேலைகளுக்கும் ஆட்கள் இருந்தனர், ஆகவே எந்த பிரச்சினையும் இல்லை!
வத்சலாவுக்கும், தனுஷ்கோடிக்கும் அந்த இடம் ரொம்பவும் பிடித்துவிட்டது! மாப்பிள்ளை வீட்டில், எல்லாமும் எங்ககிட்டே இருக்கு! நீங்கள் பெண்ணை மட்டும் தாரைவார்த்துக் கொடுத்தால் போதும் என்றிருந்தனர்! ஆனாலும் பெண்ணுக்கு, நகை, செய்முறை எந்த குறையும் வைக்காமல், ஊரே அசரும்படி திருமணத்தை நடத்தி வைத்தனர்!
அனிதாவுக்கு ஆரம்பத்தில் மனம் ஒப்பவில்லை தான்! ஆனால் கணவன் சந்திரன் மிகவும் அன்பாக நடந்து கொண்டான்! சொல்லப்போனால், அவளை ராணியாக உணர வைத்தான்! அவன் வியாபார விஷயமாக எங்கே சென்று வந்தாலும் மனைவிக்கு ஒரு பரிசோடு தான் வருவான்!
அனிதாவின் மாமனார், மாமியார் மருமகளிடம் பிரியமாக நடந்து கொண்டனர்! அவளும் அவர்களை நல்லவிதமாக கவனித்துக் கொண்டாள்!
திருமணமான புதிதல் செல்லாத தேன்நிலவுக்கு என்றுமுதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாட என்று இருவருமாக, ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி என்று சென்று கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு மேலாக சுற்றி பார்த்துவிட்டு, மனநிறைவுடன் திரும்பி வந்தனர்!
அடுத்த சில மாதங்களில் இருவரும் ஒருவருக்கொருவர் என்று மேலும் நெருங்கியிருந்தனர் ! அனிதாவின் வாழ்க்கை பயணம் அப்படியே சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! ஆனால்.. யார் கண் பட்டுதோ?
வேலை விஷயமாக, ஒரு நாலு நாள்,பயணமாக சந்திரன் வட இந்தியா பக்கமாக சென்று திரும்பினான்! மிகுந்த அலைச்சல், அங்கே சரியான சாப்பாடு கிடைக்காதது வேறு, என்று அவன் மிகவும் களைத்து தெரிந்தான்! வெயில் காலம் வேறு! குளித்து முடித்து சாப்பிட அமர்ந்தவன் நெஞ்சு வலிப்பது போல இருப்பதாக கூறினான்! அனிதா பதறிப்ப போனவளாக, டாக்டருக்கு போன் செய்து விட்டு கணவனிடம் வர, அவன் மூச்சு பேச்சின்றி விழுந்து கிடந்தான்!
சற்று நேரத்தில் வந்த மருத்துவர்! அவன் போய் வெகுநேரம் ஆகிவிட்டது என்று கிளம்பிப் போய்விட, பெற்றவர்கள் இருவரும் விசயத்தை கேள்விப்பட்டு அப்படியே சமைந்தவர்கள் தான் அவர்களும் பின்னர் எழவில்லை!
அனிதா அதிர்ந்து போய் அப்படியே மயங்கி சரிந்தாள்!
செய்தி கேட்டதும் விசாலாட்சி மகன்,மருமகளுடன் கிளம்பிச் சென்றார்!
எல்லோருக்குமே அந்த துயரச் சம்பவம் மிகவும் வேதனையை அளித்தது! காரியம் வரை விசாலம் அங்கே தங்கியிருந்து வருவதாக சொல்லிவிட, ஆனந்தன் கனத்தமனதுடன் மனைவியுடன் திரும்பி வந்தான்!
அனிதாவால் கணவனும், அவனைப் பெற்றவர்களும் அடுத்தடுத்து மறைந்ததை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை! அப்படியே சில மாதங்கள் திக்பிரமை பிடித்தவளாக மூலையில் முடங்கிவிட்டாள்!
அனிதாவின் இந்த நிலைக்கு ஆனந்தன் காரணமல்ல! ஆனாலும் அவளது வாழ்வு இப்படி ஆகிப் போனதை அவனால் தாங்க முடியவில்லை! சாருபாலாவுக்கும் மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது! வாழ வேண்டிய வயதில் இப்படி துயரத்துடன் அனிதா இருப்பதைக் காண கஷ்டமாக இருந்தது! யார் என்ன செய்ய இயலும்! காலத்தில் கட்டாயத்தில் நிகழும் நிகழ்வுக்கு யாரை குற்றம் சொல்வது?
ஆனந்தன் அந்த சம்பவத்தில் இருந்து மீளவே சில மாதங்கள் ஆகிவிட்டது! இப்போதுதான் இயல்புக்கு திரும்பியிருக்கிறான் எனலாம்!
அனிதாவும் கூட இப்போதுதான் மனம் தேறி வீட்டினுள் நடமாட ஆரம்பித்திருக்கிறாள் என்று தனுஷ்கோடி தெரிவித்து இருந்தார்!
இந்த நேரத்தில் அம்மா, அவளை இங்கே வரவழைத்தே ஆகவேண்டும் என்றதும் ஆனந்தனால் திடமாக மறுக்க முடியவில்லை! அவனுக்குமே இங்கே வந்தால் அனிதாவுக்கு ஒரு மன மாற்றமாக இருக்கும்! அடுத்து ஒரு திருமணத்தை செய்து வைக்க முயற்சி எடுக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணம்!
அன்றே மாமவை தொடர்பு கொண்டு விசயத்தை சொல்ல, அவர் முதலில் தயங்கினார், பின்னர் மகளின் மறுவாழ்வுக்காக என்றதும் சம்மதித்து, மனைவியுடன் அனுப்பி வைத்தார்!
வத்சலா மகளை கொணர்ந்து விட்டுவிட்டு அன்றே கிளம்பிப் போய்விட்டார்!
அனிதா, விசாலாட்சியின் தேவைகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்! அவள் அதிகம் யாருடனும் பேசவில்லை!
நல்லதாயிற்று என்று விடுதலை உணர்வுடன், சாருபாலாவும், ஒதுங்கிக் கொண்டாள்!
சாரு மருத்துவமனை சென்றதும் ரிஷியை அனிதா கவனிக்க ஆரம்பித்தாள்! விசாலாட்சியை விட்டுவிட்டு, பெரும்பாலும் தன் நேரங்களை குழந்தையுடனே கழித்தாள்! சின்னக் குழந்தைகள் யார் அதிகம் தன்னுடன் இருக்கிறார்களோ அவர்களிடம் ஒட்டிக் கொள்வது இயல்பு ! அப்படித்தான் ரிஷியும் தாயை அதிகம் நாடாமல், சின்னம்மாவிடம் ஒட்டிக் கொண்டான்!
சாருபாலாவும், அனிதாவின் மனதுக்கு குழந்தை மருந்தாக இருக்கிறது என்ற நோக்கில் விட்டு விட்டாள்!
சாருபாலாவுக்கு பகல்,இரவு என்று பணி மாற்றம் இருக்கும்! வாரம் ஒரு நாள் விடுமுறை ! அன்றைக்கு மகனுடன் நேரத்தை கழிக்க முயன்றால் அவன், சிறிது நேரத்திற்கு பின் அனிதாவை தேடத் தொடங்கினான்! அப்போதும், அவள் அதை பெரிதாக நினைத்துக் கொள்ளவில்லை!
அவள் இரவு பணிக்கு செல்லும் தினங்களில் அனிதா,ஆனந்தன் வரும் வரை காத்திருந்து பரிமாறுவது, மாலையில் அவன் வரும்போது அவனது தேவைகளை கவனிப்பது, மற்ற நேரங்களில், அவனுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துச் செய்வது என்று இருவரும் கலகலப்பாக பேசி பழக ஆரம்பித்தனர்!
விசாலம், சாரு இரவு பணிக்கு செல்லும் வேளைகளில், அனிதாவை நாலு இடத்திற்கு அழைத்துப் போய் வருமாறு வலியுறுத்தினார்! முதலில் தயங்கிய ஆனந்தன், மனைவியிடம் விசயத்தை சொல்லிவிட்டு, அனிதாவை அழைத்துக் கொண்டு கோயில், ஷாப்பிங், பூங்கா என்று சென்று வந்தான்! சில நேரங்களில் அவர்களோடு விசாலமும் சென்று வந்தார்! சாருவும் விகல்பமாக நினைக்கவில்லை!
ஆனால் ஒரு நாள் திரை விலகியது.. அப்போது காலம் கடந்து போயிற்று!