• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

12. பூமாலையே எந்தன் தோள் சேர வா..!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
சித்தார்த் சொல்லிக் கொண்டிருந்தபோது பிரகாரம் சுற்றி முடித்து வந்த வசந்தி,” நல்லா சொல்லுங்க அத்தான். நான் சொல்றதைத் தான் கேட்கக்கூடாதுன்னு முடிவுல இருக்கிறான், பெத்தவங்க கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த சொத்துக்களை வாரிசாக இருந்து இனியேனும் கவனிக்க சொல்லுங்க அத்தான்" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.

கண்ணனுக்கு சற்று தர்மசங்கடமாகத்தான் இருந்தது. அக்கா அத்தான் இருவரின் கூற்று சரிதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவன் சுயமாக ஆரம்பித்ததை அடியோடு விட்டுவிட முடியாதே? மாமாவின் உடல் நிலை பற்றி அறிந்தது முதல் அவனும் இது குறித்து யோசிக்காமல் இல்லை. ஆனால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை.

பெற்றவர் சேர்த்து வைத்த சொத்துக்களை அதன் பிறகு பொறுப்பேற்ற மாமா தர்மலிங்கம் வேறு பெருக்கியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் வாரிசுகள் அக்காவும் தம்பியும் தான். உடையவன் பார்க்காவிட்டால் எத்தனை கோடி என்றாலும் என்னாகும்?

மூவரும் சற்று நேரம் அவரவர் யோசனையில் மௌனமாக கழிய,

"நீ பெங்களூர் வருவதும் வராததும் அப்புறம் முடிவு பண்ணு கண்ணா, இன்றைக்கு உடனே ஊருக்கு போவதை தள்ளிப் போடு. இரண்டு நாட்கள் எங்களோடு இருந்துவிட்டு கிளம்புடா. நாம் சேர்ந்து இருந்து எவ்வளவு காலம் ஆயிற்று? அத்தான் நீங்களாவது சொல்லுங்களேன்" என்று வசந்தி கெஞ்சாத குறையாக கூற,

"அட, ஒத்துக்கொள்ளப்பா, இல்லைன்னா உன் அக்காவோட அழுகையில் பெங்களூர் மூழ்கிடப்போகுது. சும்மாவே திடீர் திடீர்னு மழை பெய்யும், அதுல இதுவேற வேண்டாம் மாப்பிள்ளை " என்று கேலி செய்தான் சித்தார்த் .

"ஓகே ஓகே அத்தான். ஆனால் நாளைக்கு நைட் கண்டிப்பா நான் கிளம்பிடுவேன், அதுக்கு மேலே இங்கே இருக்க முடியாது. நிறுவனத்தில் ஒருநாளில் வந்துவிடுவதாக சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். அதுக்கு நீங்க ஒத்துக்கொள்வதானால் நான் ஸ்டே பண்றேன்" கண்ணன் அக்காவின் திட்டம் தெரியாமல் ஒப்புதல் அளித்தான்.

"இதுபோதும்டா, நாளைக்கு நாம எல்லோரும் பிக்னிக் போகலாம், ரொம்ப நாளாகிடுச்சு, என்று வசந்தி சொல்லிக் கொண்டிருக்கையில் ...

அருணவ் குறுக்கிட்டான் "அப்பா ஹோட்டலுக்கு போகலாம் சொன்னீங்க. இப்ப இங்கேயே உட்கார்ந்துட்டு பேசிட்டே இருக்கீங்க" என்றான் சிணுங்கலாக..

"அதானே மருமகனே, விட்டா பேசிட்டே இருப்பாங்க.. என்றவாறு அவனை தோளில் தூக்கியவன் தொடர்ந்து "வாங்க போகலாம். இல்லையென்றால் ட்ராபிக்கில் மாட்டிக் கொள்ளுவோம்" என்று காரை நோக்கி நடந்தான் கண்ணன்.

☆☆☆

சென்னை

மறுநாள்..

சத்யபாரதி அலுவலகம் வந்தடைந்த போது அவளது கைபேசி ஒலிக்க, எடுத்தாள். அழைத்தது கிருஷ்ணா என்று அறிந்ததும் பரபரப்பு தொற்றிக் கொள்ள "ஹலோ, சார் குட் மார்னிங் " என்று உற்சாகமாக பேசினாள்.

"குட் மார்னிங் பாரதி, இன்றைக்கு அலுவலகம் வர இயலாது. அதனால் செய்யவேண்டிய வேலைகளை மெயிலில் அனுப்பியிருக்கிறேன். எதுவும் சந்தேகம் என்றால் கால் பண்ணு, மதியம் மறக்காமல் சாப்பிடு, ஹேவ் எ குட் டே பாரதி"என்று முடிக்கப் போகையில் குறுக்கிட்டு..

"சார் ஒரு நிமிஷம் " என்றாள்.

"எஸ், பாரதி. என்ன விஷயம்? "

"அது வந்து சார்.... ஏதோ ஒரு வேகத்தில் ஆரம்பித்து விட்டவளுக்கு மேலே பேசமுடியாமல் தடுமாறினாள். உன் அக்காவிற்கு புடவை பிடித்ததா என்று எப்படி கேட்பது என்ற யோசனை காலம் கடந்த ஞானோதயமாக வந்தது.

"அவள் அதிகம் தடுமாறும் முன்பாக "ஓ! நான் சொல்ல மறந்துவிட்டேன் பாரதி. அக்காவுக்கு உன் தேர்வு ரொம்ப பிடித்துவிட்டது. இதைக் கேட்க இவ்வளவு தயங்க வேண்டுமா பாரதி? நான் உன் நண்பன் என்று சொல்லியிருக்கிறேனே! ஒருவேளை நீ மனதில் அப்படி எண்ணவில்லையோ"

"அது..... அச்சோ இல்லை சார், நண்பராகத்தான் நினைக்கிறேன். ஆனாலும் எனக்கு ஆண்களிடம் சட்டென்று பேச வரமாட்டேங்கிறது. அதுதான் தடுமாற்றம் உண்டாகிவிட்டது, பதற்றத்துடன் அவள் விளக்க..

"இட்ஸ் ஓகே .கூல் கூல்.. சரி பாரதி. நான் முடிந்தால் மாலையில் கால் பண்றேன். நீ என்ன அவசரம் என்றாலும் என்னை அழைக்க தயங்க வேண்டாம், பை"

"பை ,சார்.டேக் கேர்" என்று பேச்சை முடித்துக்கொண்டு நிறுவனத்திற்குள் சென்றாள்.

கிருஷ்ணாவுடன் பேசியது முதல் அவன் குரலே காதோரம் இனிய நாதம் போல ரீங்காரமிட்டது. இன்னதென்று புரியாதபோதும், முன்தினம் இருந்த தவிப்பு மாறி ஒருவித அமைதியில் மனம் லேசாகிவிட்ட உணர்வுடன் தன் இடத்தில் போய் அமர்ந்து வேலையை தொடங்கினாள் சத்யபாரதி.

☆☆☆

பெங்களூர்...

வசந்தி தம்பியை கூடுதலாக ஒரு நாள் தங்கிப்போகும்படி வற்புறுத்தியதால் கண்ணன் அரை மனதோடு சம்மதித்தான். காலையில் எல்லோரும் பிக்னிக் கிளம்பிக் கொண்டிருந்த வேளையில் கார் ஒன்று போர்டிகோவில் வந்து நின்றது.

பணியாள் வந்து விவரம் சொல்ல வசந்தி வாசலுக்கு விரைந்தாள். அவள் பின்னோடு சித்தார்த் சென்றான். அப்போதுதான் அருணவ்வுடன் உணவருந்தி முடித்துவிட்டு கூடத்திற்கு வந்த கண்ணன் யோசனையுடன் வாசலை நோக்கினான்.

அங்கே சித்தார்த்தின் தொழில்துறை நண்பர் சூர்யகுமார் அவர் மனைவி மற்றும் தன் இளம் மைத்துனிகள் இருவருடன் வந்திருந்தார்.

சித்தார்த்திற்கு அவர் தொழில் முறை பழக்கம் என்றாலும் அவரது மனைவி பத்மினி வசந்தியின் தந்தை வழி தூரத்து சொந்தம். அதுவும்கூட சமீபத்தில் ஒருவிழாவில் சந்திக்க நேர்ந்த போதுதான் தெரியவந்தது. கூடவே பத்மினிக்கு இரண்டு தங்கைகள் இருந்ததும்...

"வாங்க, வாங்க என்று வசந்தி வரவேற்று உள்ளே அழைத்து வர,

"அடடே ஆச்சரியமா இருக்கே சூர்யகுமார்?" என்னப்பா ஒரு போன்கூட பண்ணாம திடீரென்று இந்தப் பக்கம் ?? என்ன விஷயம்? குரலில் வியப்பு தொனிக்க சித்தார்த் வினவினான். வசந்தி, கணவன் காதோரமாக,"ஷ், அத்தான் நான் அழைத்துதான் வந்திருக்கிறார்கள்" என்று முணுமுணுக்க,

சித்தார்த்திற்கு விஷயம் விளங்கியது. தன்னை அறியாமல் மைத்துனனைப் பார்க்க, அவனும் அப்போது பார்வையால் என்ன விஷயம் என்று வினவ, சொல்வதறியாது ஒருகணம் தடுமாறியவன், உடனேயே சுதாரித்து ஒன்றுமில்லை என்றபதாக தலையசைத்து சமாளித்தான், அதன்பின் வந்தவர்களை அமர வைத்து, அவர்களிடம் கண்ணனை அறிமுகம் செய்துவிட்டு, பணியாளிடம் குடிப்பதற்கு எடுத்துவரச் சொன்னாள் வசந்தி.

வந்தவர்களுடன் பேசிக் கொண்டிருக்குமாறு மைத்துனனிடம் சொன்னவன், அனுமதி கேட்டுக்கொண்டு மனைவியை கையோடு உள்ளே அழைத்துச் சென்றான் சித்தார்த்.

தனியறைக்குள் வந்ததும்,"வசு, இதெல்லாம் என்ன? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா? அவர்களும் நம்முடன் பிக்னிக் வருவதாக ஏன் சொல்லவில்லை? தம்பி மேல் பாசம் வைத்து அவனைப் பிரிய மனமில்லாமல் தான் அதிகப்படியாக ஒருநாள் தங்கச் சொல்கிறாய் என்று நினைத்தேன். நீயானால் ..." படபடத்த கணவனை கையமர்த்திவிட்டு வசந்தி ,

"இதுல என்ன அத்தான் தப்பு? அவனுக்கும் வயசாகுது. பெத்தவங்க இருந்திருந்தால் இந்நேரம் திருமணம் முடிஞ்சிருக்கும். அவன்கிட்ட இனிமேல் பேசி பிரயோஜனம் இல்லை என்றுதான் இந்த ஏற்பாடு செய்திருக்கிறேன். ரெண்டு பொண்ணுங்களும் அழகு, படிப்பு அந்தஸ்து எல்லாத்திலயும் உயர்ந்தவர்கள். கண்ணனுக்கு பொருத்தமானவர்கள். முறைப்பெண்களும் கூட, அவனுக்கு யாரை பிடிக்குதோ கட்டி வைச்சிடலாம். பெண் பார்க்க அழைத்தால் வருவானா அவன்? எனக்கு வேற வழிதெரியவில்லை அத்தான். ப்ளீஸ் அத்தான் ஒத்துழைப்பு கொடுங்க’’ என்று அவள் பேசப் பேச,

சித்தார்த் மனைவியை ஆழமாக பார்த்து "ஏன் வசு ?என்றான் என்று வினவ....

வசந்தி ஒருகணம் யோசனையாய் அவனை ஏறிட்டவள், "என்...என்ன... ஏன் அத்தான்?" என்றபோதே கணவனின் கேள்வி ஒருவாறு புரிந்துவிட அவளது முகம் லேசாக கன்றியது.“அத்தான் ப்ளீஸ் வந்தவர்களை வெளியே உட்கார வச்சிட்டு நாம இப்படி பேசிட்டு இருக்கிறது சரியில்லை. எதுவானாலும் அப்புறமாக பேசிக் கொள்ளலாம்" கெஞ்சலாக கூறிவிட்டு கூடத்திற்கு செல்ல,

சித்தார்த் மேற்கொண்டு பேசாமல் அந்த அறையில் கிடந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான். வசந்தியின் இந்த செயல் அவனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. தங்கைக்கு கண்ணன்தான் பொருத்தமானவன் என்று அவள் சொல்லி,சொல்லி அதுவே மனதில் பதிந்து போயிருந்தது. இடையில் தம்பி பற்றி அவள் தவறாக பேசியபோது கூட ஏதோ கோபத்தில் பேசுவதாக எணணியிருந்தான். அதைவிட அவள் சத்யாவின் மீது கொண்டிருந்த பாசம் அவன் அறிந்ததே. அப்படி இருக்க திடுமென இந்த ஏற்பாடு ஏன் என்று அவனுக்கு விளங்கவில்லை.

☆☆☆

மைசூர்

அவர்களுக்கு சொந்தமான பழப்பண்ணைக்கு எல்லாருமாக சென்றனர். சென்றதும் எல்லாருமாக உணவருந்தினர். அந்த நேரத்தில் உடன் வந்திருந்த இரண்டு இளம் பெண்களும் கண்ணனிடம் பேச்சுக் கொடுத்தனர். தங்களைப் பற்றி கூறிவிட்டு அவனைப் பற்றி விசாரிக்க பொதுவான கேள்விகளுக்கு பதில் அளித்தவன், அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் பண்ணையை சுற்றிப் பார்க்க கிளம்பவும் மற்றவர்களும் கிளம்பினர்.

சிறு வயதில் கண்ணன் அங்கே ஒரு சில தடவைகள் வந்திருந்த போதும், வளர்ந்துவிட்ட இப்போது அவன் ஒவ்வொரு இடமாக ஆர்வத்துடன் பார்வையிட்டான்.

வரிசையாக சீரான இடைவெளியில் வகை வகையான பழமரங்கள் பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருந்தது. அந்தந்தப் பழ வகைகளை ஆங்காங்கே பறித்து குளிர்பதன கிடங்கில் கொட்டாரமிட்டு வைத்திருந்தனர்.

அதை தரம் வாரியாக பிரித்து எண்ணி ஏற்றுமதி செய்வதற்காக வெளியே அமர்ந்து பெண்கள் அட்டைப்பெட்டிகளில் பழங்களை பேக்கிங் செய்து கொண்டிருந்தனர். கண்ணனும் சித்தார்த் மட்டுமே எல்லா பகுதிகளையும் ஜீப்பில் சென்று பார்வையிட்டனர். உடன் வந்த மற்றவர்கள் பாதியில் களைப்பாக இருப்பதாக அங்கே தங்குவதற்காக இருந்த பண்ணை வீட்டிற்கு சென்று விட்டனர்.

அப்போது கிடைத்த தனிமையில் அக்கா கணவனிடம்,"விவரம் கேட்டான் சின்னவன். ஒருகணம் தயங்கியவன்,"எப்படியும் உனக்கு தெரியாமல் போகாது மாப்பிள்ளை. நான் சொன்னதாக நீ காட்டிக்கொள்ளாதே." என்று விபரம் சொன்னான்.

"நினைச்சேன். அது சரியாகிவிட்டது. உள்ளடக்கிய ஆத்திரத்துடன் சொன்னவன், சிலகணங்கள் மௌனமாக இருந்துவிட்டு, தொடந்து,"நான் ஒன்று கேட்டால் மறுக்காமல் செய்வீங்களா அத்தான் " தயக்கமாய் வினவினான் கண்ணன்.

 

Attachments

  • PSX_20240724_125220.jpg
    PSX_20240724_125220.jpg
    54 KB · Views: 11