• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

15. பூமாலையே எந்தன் தோள சேர வா..!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
கிருஷ்ணா சொன்னதுபோல் பெண்கள் ஆடைகள் பிரிவிற்கு சென்று திரும்பிய சத்யபாரதி, வரவேற்பறையை கடந்து அவளது இருப்பிடத்திற்கு செல்லும்போது நுழைவு வாயிலில், வழியனுப்பும் விதமாக, கிருஷ்ணா யாருடனோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள். அது யார் என்று ஆவலாக கவனித்தவளுக்கு திகைப்பு உண்டாயிற்று. உடனேயே அங்கிருந்து நகர்ந்து சட்டென்று லிஃப்டிற்குள் நுழைந்து கொண்டாள்.

அறைக்குள் வந்த பிறகும் எதற்காக அவர் இங்கே வந்திருக்கிறார்? கிருஷ்ணாவிற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என்று அவள் எண்ணும்போதே கதவை தட்டி விட்டு கிருஷ்ணா உள்ளே வர, நிகழ்வுக்கு வந்தவளாய், "காபி வரவழைக்கவா சார்"என்று வினவினாள்.

அவளருகே இருந்த இருக்கையில் பழையபடி அமர்ந்த கிருஷ்ணா கடிகாரத்தை நோக்கிவிட்டு, "இப்போது தாமதமாகிவிட்டது பாரதி, அதனால் வேண்டாம். என்றவன் தொடர்ந்து, "கொஞ்சம் முன்னாடி நான் கேட்டதற்கு நீ இன்னும் பதில் சொல்லவில்லை?"

சத்யபாரதி ஏற்கனவே முன்னிரவில் கண்ட கனவினால் உள்ளூர சற்று கலங்கியிருந்தாள். அவளைப் பொருத்தவரை காதல் கல்யாணம் என்பதெல்லாம் அவள் நினைத்தே பார்க்காத விஷயம். அன்றைக்கு 4வருடங்களுக்கு முன்பாக இருந்த நிலையில் தான் அவள் இன்னமும் இருக்கிறாள். அதை எல்லாம் விளக்கி சொல்ல அவளுக்கு விருப்பமிவில்லை.

ஆனால்... பதில் சொல்லாமல் கிருஷ்ணா விடமாட்டான் என்று புரிந்ததால் எதிரில் இருந்த கணினியில் பார்வையை பதித்தபடி,," நான் கல்யாணமே பண்ணிக் கொள்வதாக இல்லை” சார். அதனால் காதல் கத்திரிக்காய் எல்லாம் ஏதும் கிடையாது" என்றாள் மரத்த குரலில்.

அந்த பதிலை சற்றும் எதிர்பாராத கிருஷ்ணா ஒருகணம் திடுக்கிட்ட போதும் உடனேயே, "நீ விருப்புகிறவரைப் பற்றி சொல்லப் பிடிக்கவில்லை என்றால் அதை நேராக சொல்லலாம் பாரதி. அதற்காக இப்படி எல்லாம் அபத்தமாக உளறாதே" என்றான் சற்றே கடிந்த குரலில்.

சத்யபாரதிக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது," ஏன் சார்? இதில் என்ன உளறல் இருக்கிறது? என் மனதில் உள்ளதைத்தான் சொன்னேன். சொல்லப்போனால் ஆண்கள் மீதே எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை."என்றாள் முகம் இறுக.

உண்மையில் கிருஷ்ணாவிற்கு அவளது இந்த பதில் மிகவும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவன் மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்ற மனம் கலங்கிற்று. ஆண்களை வெறுக்கும் அளவிற்கு அவள் வாழ்வில் என்ன நேர்ந்தது? தவித்த மனதை சிரமத்துடன் அடக்கியவன், "அப்படி பார்த்தல் நானும் ஆண்தானே பாரதி? என்னையும் நீ நம்பவில்லை என்றுதானே அர்த்தம்??"

சத்யபாரதி அவனது கேள்வியில் சற்று தடுமாறிக் போனாள். இதற்கு என்ன சொல்வது? என்று அவசரமாக யோசித்து,"சார், எதிலும் விதிவிலக்கு உண்டு தானே? என் அண்ணனுக்கு பிறகு நான் நம்பற ஒரே ஆண் நீங்க தான்". என்றாள் அவசரமாக.

கிருஷ்ணாவின் மனம் லேசாகிவிட,"ம்ம்.. பாஸ் என்பதால் அப்படி சொல்கிறாயோ என்னவோ?" என்ற இழுக்க...

"அப்படி எல்லாம் இல்லை சார். நான் சொன்னது நிஜம்தான், இந்த ஊர் எனக்கு புதுசு. இங்கே ரூபாவுக்குப் பிறகு நான் ரொம்ப நம்புறது உங்களைத்தான்" அவனை நம்பச் செய்வதாக எண்ணி அவள் மனதை கிருஷ்ணாவிற்கு தெளிவாக புரியவைத்ததை சத்யபாரதி உணரவில்லை.

அவளையே பார்த்திருந்த கிருஷ்ணாவின் முகம் கனிந்தது. இதழில் விரியத் துடித்த புன்னகையை அடக்கிக் கொண்டு, "முழு மனதோடு நம்புகிறேன் பாரதி" என்றான்.

அதுவரை அவள் சொன்னதை கிருஷ்ணா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒருவித தவிப்புடன் காத்திருந்தவளுக்கு அவனது பதிலைக் கேட்டதும் மனம் அமைதியுற்றது.

"அதைவிடு, சரி ஆண்கள் மீது நம்பிக்கை ஏன் இல்லாமல் போயிற்று?? என்னிடம் சொல்லலாம் அல்லவா பாரதி? என்றதும் சத்யபாரதி திகைத்தாள். அத்தோடு விட்டுவிடுவான் என்று எண்ணியிருந்தவளுக்கு அவன் கேட்ட விதத்தில் தொண்டை அடைத்தது. பொதுவாக கிருஷ்ணாவின் குரலில் ஒர் கம்பீரம் இருக்கும். அன்பாக பேசினாலும் கூட ஓர் அழுத்தம் இருக்கும். இப்போதோ அவனது கனிவான குரலில் அவள் மனம் உருகியது. அவனிடம் சொல்லக்கூடாதது ஏதுமில்லை என்று எண்ணம் உண்டாயிற்று. ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால், கண்ணன் அவளை விட்டு விலகிச் சென்று விட்டதில் அவள் மனம் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்ததால் அவளுக்கு வேறு ஆண்களிடம் பற்று வைப்பதில் நம்பிக்கையற்று விட்டது என்று தோன்றியது. அப்படி என்றால் கிருஷ்ணாவிடம் மட்டும் அந்த நம்பிக்கை எப்படி வந்தது என்று மனம் கேட்க, பதில் சொல்லும் வகை அறியாது திகைத்தாள். அவனிடம் என்னவென்று விளக்குவது என்று குழம்பிப் போனாள் சத்யபாரதி.

கிருஷ்ணா அவளது முகத்தைப் பார்த்துவிட்டு, "வேண்டாம் பாரதி. விட்டுவிடு. உனக்கு என்றைக்கு என்னிடம் சொல்லவேண்டும் என்று தோன்றுகிறதோ அன்றைக்கு சொல், என்றவன், தொடர்ந்து அவளை வேறு யோசிக்க விடாமல், "சரி இப்போது வா வேலையைப் பார்க்கலாம். நான் கேட்ட விவரம் குறித்து வைத்திருக்கிறாயா? திவாகரன் என்ன சொன்னார்? அந்த டிசைன் எப்படி இருக்கிறது, " என்று விவரம் கேட்க,

சத்யபாரதி அவன் கேட்டதை சொன்னாள்.

"குட் பாரதி. நான் லஞ்ச்க்கு கிளம்பறேன். நான் வருவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகும். இன்றைக்கு அனுப்ப வேண்டிய ஆர்டர் எல்லாம் தயாராகிவிட்டதா என்று செக்கிங் செக்ஷனில் கேட்டு வைத்துவிட்டு நீயும் போய் சாப்பிட்டு வா" என்றுவிட்டு கிருஷ்ணா வெளியேறினான்.

சத்யபாரதிக்கு ஏனோ சாப்பிட பிடிக்கவில்லை. ஆனால் அவன் வந்து கோபித்துக் கொள்வானே என்று கேன்டீனிற்கு சென்றாள்.

☆☆☆

அன்று இரவின் தனிமையில் காலையில் கிருஷ்ணா சொன்னது நினைவுக்கு வந்தது. காலையிலிருந்து நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக மனதில் அலைமோதியது. அன்றுவரையிலும் அவள் திருமணத்தை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை தான். ஆனால் இப்போது எண்ணிப் பார்க்கையில் அவனுக்கு சொன்ன பதில் சரிதான் என்றும் தோன்றியது. கூடவே அவன் மனதில் ஒரு பெண் இருக்கிறாள் என்பதும் நினைவுக்கு வர, மனதில் ஏனோ ஒருவித அமைதியின்மை, தவிப்புடன் அந்த பெண் யாராக இருக்கும் என்று யோசனை ஓடும்போதே காலையில் வந்திருந்த மனிதர் ஞாபகத்திற்கு வர விலுக்கென்று எழுந்து அமர்ந்தாள். குப்பென்று வியர்த்தது. அந்த மனிதர் தர்மலிங்கம்தான். ஒருவேளை கிருஷ்ணாவை காண வந்தது அதற்காகத்தானோ? வழக்கமாக யார் வந்தாலும் அவனது அறைக்கு அழைத்து பேசுபவன் இன்றைக்கு மீட்டிங் ஹாலில் போய் சந்தித்ததற்கு காரணம் அதுதானா? ஏதோ ஒன்று முரண்பாடாக தோன்றியது. அது என்ன என்று படபடத்த மனதை அடக்கி தீவிரமாக யோசித்தாள் சத்யபாரதி.

தர்மலிங்கம் தம்பதியர் தங்கள் மகளுக்கு கண்ணனைத்தானே மாப்பிள்ளை ஆக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அப்படி இருக்க கிருஷ்ணாவை எப்படி மருமகனாக ஏற்பார்கள்? ஒருவேளை கிருஷ்ணா சொன்ன பெண் அவரது மகள்தானோ? அவளைத்தான் வருங்கால மனைவியாக எண்ணியிருக்கிறானோ? இந்த எண்ணம் தோன்றவும் சிலகணங்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனாள்.

அவளை அறியாமல் கண்ணில் நீர் வழிந்து கையில் படவும் திடுக்கிட்டு நிகழ்வுக்கு திரும்பி, அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டாள். இதென்ன பைத்தியக்காரத்தனம்? கிருஷ்ணா யாரை விரும்பினால் அவளுக்கு என்ன வந்தது என்று அலட்சியமாக எண்ண முயன்றவளுக்கு உண்மை புரிய திகைத்து போனாள். அதை அவளால் நம்பக்கூட முடியவில்லை. கிருஷ்ணாவின் அழகும் கம்பீரமுமான தோற்றம் பழகும் தன்மை அவளிடம் காட்டிய அக்கறை எல்லாமும் கண்முன்னே வந்து போக... எதிலோ தோற்றுவிட்ட உணர்வு உண்டாயிற்று. நண்பனாக ஏற்கச் சொன்ன முன்னவனை விட்டு விலகிவிட்டாள். இதோ அப்படி ஏற்கச் சொன்ன இவனும் இதோ விலகிப் போய்விடுவான். பெண்களுக்கு நிரந்தரமாக நண்பர்கள் வாய்க்க வழியில்லை என்பதை அறிந்திருந்தும் அதை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான். ஆனால் வெறும் நண்பனாக எண்ணாமல் அன்பனாக அல்லவா அவள் மனது எண்ணிவிட்டிருக்கிறது.

கண்களில் நீரோட்டம் அடக்க முடியாமல் வழிந்தது. பெற்றோர் மறைவிற்கு பிறகு அவள் மனம் விட்டு பேச சிரிக்க என்று இல்லாமல் படிப்பு அடுத்து வேலை என்ற சிந்தனையில் கழித்து வந்திருந்தாள். இப்போது கிருஷ்ணாவை பார்த்த பிறகு தான் அவள் ஓரளவுக்கு இயல்பாக இருப்பதே. இனிமேல் அப்படியிருக்க முடியாது. அவனைப் பார்த்துக்கொண்டு தன் வலியை மறைத்து சிரித்து வளைய வரமுடியுமா? அவனோ பொல்லாதவன் எல்லாவற்றையும் கண்டுபிடித்து விடுகிறவன். வேலையை விட்டுவிடலாம் என்றால் மறுபடியும் அண்ணியிடம் தான் போயாக வேண்டும். அது ஒருகாலும் முடியாது. அடுத்த வழி வேறு வேலைதான் தேடவேண்டும். ஒருவேளை கிடைக்கலாம். ஆனால் அங்கே இத்தனை பாதுகாப்பு இருக்குமா?? ராதாவின் தந்தை இந்த வேலையை அவளுக்கு குறிப்பாக பாதுகாப்பு இருக்கும் என்றுதான் சிபாரிசு செய்தார்.

சத்யபாரதி அன்று இரவை தூங்கமுடியாமல் கண்ணீரும் சிந்தனைகளுமாக கழித்தாள். ஆனால்.. அவள் எண்ணியது போலவே அவனை பிரியப் போகிறாள் என்று அப்போது அவள் அறியவில்லை.

அதே நேரம்.....
கிருஷ்ணாவும் அவளைப் பற்றிதான் யோசித்து கொண்டு இருந்தான். அவளிடம் தன் மனதை எப்படி சொல்வது? சொன்னால் ஏற்பாளா ? எல்லாம் இந்த அக்காவினால் வந்தது. அன்றைக்கு அவனை ஏதோ காரணத்தை சொல்லி தடுத்துவிட்டாள். ஆனால் அவனும் தான் அத்தோடு சும்மா இருந்துவிட்டான். ஒரு முயற்சி செய்து பார்ததிருக்க வேண்டும். ஹும்.. காலையில் கேட்டபோது அவள் முகம் மாறியதை வைத்து அவனால் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆகவே மறுநாள் அதைத் தெரிந்து கொள்வது தான் முதல் வேலை என்று எண்ணியவாறு உறங்கிப்போனான்.

மறுநாள் காலையில்….

பத்து மணி தாண்டியும் சத்யபாரதி அலுவலகம் வராததால் அவளை கைப்பேசியில் தொடர்பு கொள்ள முயன்றான் கிருஷ்ணா. கைப்பேசி ரிங் போய்க்கொண்டே இருந்ததே தவிர யாரும் அழைப்பை ஏற்கக்காணோம். வழக்கமாக அவனது அழைப்பை முதல் மணிச்சத்ததில் எடுத்துவிடுவாள் சத்யபாரதி. இன்றைக்கு இத்தனை முறை அழைத்தும் பதில் இல்லை என்றால் அவளுக்கு என்னவாயிற்று? ரூபா எங்கே போய்விட்டாள்? மனது பதறத் தொடங்கியது. அவள் வீடும் தெரியாது. தெரிந்துகொள்ள அவன் முயலவில்லை. தெரிந்துவிட்டால் அங்கே போக தோன்றும். தனியாக வசிப்பவளுக்கு பங்கம் நேர அவன் காரணமாகிவிடக் கூடாது என்று எண்ணினான். இப்போது அவசியமான நேரத்தில் அவஸ்தை படும்படி அதுவே காரணமாகிவிட்டது என்று தன்னையே நொந்து கொண்டவனுக்கு ஒரு யோசனை தோன்ற உடனே செயல்பட்டான்.
💜🧡💜
குளிர் காய்ச்சலில் சுருண்டு கிடந்த சத்யபாரதிக்கு கஷாயம் வைத்து கொடுத்து ஆட்டோவில் அவளை மிகுந்த சிரமத்துடன் ஏற்றி மருத்துவமனைக்கு கூட்டிப்போனாள் ரூபா. அந்த அவசரத்தில் அவளது கைபேசியை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தாள்.

மருத்துவமனையில்.... ஓரளவுக்கு கூட்டமிருந்தபோதும் பல்வேறு சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள் தான் அதிகமாக இருந்தனர். வெறும் ஜுரம் என்பதால் அவளுக்கு சீக்கிரமே அழைப்பு வந்தது. அவளை பரிசோதித்துவிட்டு சாதாரண ஜுரம் என்று மருத்துவர் ஊசியும் மாத்திரைகளும் எழுதிக் கொடுத்தார். ஊசியை போட்டுவிட்டு அவளை ஒரு ஓரமாக இருக்கையில் அமரவைத்துவிட்டு ரூபா மருந்தகத்திற்கு சென்றாள்.

தலையை குளிருக்காக சால்வையால் போர்த்திக் கொண்டு அமர்ந்திருந்த சத்யபாரதியின் அருகில் இளம் பெண் ஒருத்தி வந்து அமர்ந்தாள். அவளிடமிருந்து சன்னமாக விசும்பல் ஒலி கேட்கவும் திடுக்கிட்டு மெல்ல பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள். கல்லூரி மாணவி போலும். பார்லருக்கு வழக்கமாக செல்பவள் என்று அவளது தலையும் முகமும் பறைசாற்றியது. அவளுக்கு என்ன துன்பமாக இருக்கக்கூடும்? சத்யபாரதி யோசிக்கையில் அங்கே. ...?
 

Attachments

  • images (10)-1.jpeg
    images (10)-1.jpeg
    31.5 KB · Views: 12

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️ரெண்டுபேரும் மனம் விட்டு பேசாமல் குழப்பம் வேதனை தான் கூடும்