• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

16. பூமாலையே எந்தன் தோள் சேர வா..!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
குளிர் ஜுரம் காரணமாக மருத்துவமனைக்கு வந்திருந்த சத்யபாரதிக்கு அருகில் இருந்த பெண்ணை எங்கோ பார்த்த நினைவு. அந்த சாயல் பரிச்சயமானதாக தோன்றியது. ஆனால் ஜுரத்தின் தாக்கத்தாலோ என்னவோ அவளது உடம்பும் மனதும் சோர்ந்திருந்தது.

அந்த பெண்ணின் விசும்பல் மனதுக்கு சங்கடமாக இருந்தது. இவ்வளவு சின்னப் பெண்ணிற்கு என்ன கஷ்டம் என்று எண்ணுகையில் அங்கே ஒரு அழகிய இளைஞன் வந்தான்.

அந்தப் பெண்ணின் அருகில் அமர்ந்து அவளது கையைப் பற்றி அழுத்தியபடி, "ஷ்...ஷ்.. என்ன டியர், இது, பப்ளிக் ப்ளேஸ். எதுக்கு இப்படி சீன் கிரியேட் பண்ணறே? இப்ப என்ன ஆச்சுன்னு நீ அழற?" தணிந்த குரல் என்றாலும் அவளுக்கு கேட்க வேண்டும் என்று சற்று அழுத்தமாக சொன்னதால் சத்யபாரதிக்கு தெளிவாக கேட்டது.

அவனது பேச்சில் மேலும் அவள் அழுகையில் குலுங்க, அவன் தொடர்ந்து "ஷ் ஷ் அனு, என்ன இது? நீ ஒரு மார்டன் பெண். எதற்காக இப்படி அழுகிறாய் டார்லிங். இந்தக் காலத்தில் இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. உன் படிப்பு முடியணும், எனக்கும் நல்ல ஜாப் கிடைக்கணும். அதனால் தானே நாம் இந்த முடிவுக்கு வந்தோம். டாக்டர் நல்லவங்களா இருக்கப் போய்தான் நமக்கு ஹெல்ப் பண்ண ஒத்துக்கிட்டாங்க". நீயானால் புரிந்து கொள்ளாமல் பாதியில் எழுந்து வந்து விட்டாய்" என்றான் கெஞ்சலுடன்.

"இ...இல்லை, என் எனக்கு பயமாக இருக்கிறதே தேவ்" மெதுவாக அவள் சொல்ல...
விஷயம் புரியவும் சத்யபாரதிக்கு அதிர்ச்சியில் தூக்கி வாரிப்போட்டது. இதயம் படபடக்க சிலகணங்கள் அவளால் எதையும் யோசிக்க கூட இயலாது போயிற்று. பொது இடத்தில் அழுவதாகச் சொன்னானே? இப்படி ஒரு நிலையில் அவளால் எப்படி அழாமல் இருக்க முடியும்?? மார்டன் பெண் என்றால் மட்டும் என்ன உணர்வுகள் மாறிப்போய்விடுமா? அவளும் எல்லா பெண்களை போலத்தானே?
இன்று இவ்வளவு யோசிக்கிறவன் அன்று அவசரப்பட்டிருக்கக் கூடாது. இவளும் தான் இடம் கொடுத்துவிட்டு இப்போது அவஸ்தை படுகிறாள். பெற்றோர் படிக்க அனுப்பினால் பிள்ளைகள் இதுபோல தவறுகளை செய்து தனக்கும் கஷ்டத்தை ஏற்படுத்தி பெற்றவர்களையும் கஷ்டப்படுத்துகிறார்களே" என்று கோபமும் வருத்தமுமாக எண்ணிக் கொண்டிருக்கையில்..

அந்த தேவ் அந்தப் பெண்ணை எழுப்பி கூட்டிப்போனான்.
அங்கே மருந்தகத்தில் நின்றிருந்த ரூபாவின் கைப்பேசி ஒலிக்க அவசரமாக எடுத்து பார்த்தாள். சித்தார்த்தின் அழைப்பு.

"ஹலோ அண்ணா சொல்லுங்க”என்றதும்

"என்னம்மா ரூபா எப்படி இருக்கிறே?.”

"நான் நல்லா இருக்கிறேன் அண்ணா. நீங்க,அண்ணி அருணவ் குட்டி எல்லாரும் சௌக்கியமா அண்ணா?”

"நாங்கள் எல்லாரும் நல்ல சௌக்கியம் ரூபா. நான் இப்ப பேச வந்தது சத்யாவைப் பற்றித்தான். அவள் எப்படி இருக்கிறாள்?? வேலைக்கு போயிருப்பாள்னு தான் நான் இப்ப கால் பண்ணினேன்மா”

"இல்லை அண்ணா, சத்யாம்மாக்கு திடீர்னு குளிர் ஜுரம். அதுக்காக ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறோம். அவளை ரிசப்ஷனில் உட்கார வச்சுட்டு நான் மருந்து வாங்க வந்தேன்."

"ஜுரமா? டாக்டர் என்ன சொன்னாங்க?

"சாதாரண ஜுரம்தான் பயப்படும்படியாக ஒன்றும் இல்லைனு சொன்னாங்க"

"ஹும்...இரண்டு நாள் முன்னாடி பேசினப்போவே அவள் குரல் சரியில்லைம்மா. அன்னிக்கு ரொம்ப சோர்வா பேசுறாப்ல இருந்துச்சு. அதுக்காகத்தான் உன்கிட்ட கேட்கலாம்னு போன் பண்ணினேன். நான் விசாரிச்சது பத்தி அவகிட்டே சொல்ல வேண்டாம்மா. பிறகு அதுக்கு வேற கவலைப் படுவாள். சரிம்மா நீங்க பத்திரமா வீட்டுக்கு போய் சேருங்கள்" என்று பேச்சை முடித்துக் கொண்டான்.

மருத்துவமனையிலிருந்து திரும்புகையில் வழி நெடுகிலும் அந்தப் பெண் அனுவைப் பற்றிய நினைவில் சத்யபாரதி எதுவும் பேசவில்லை. வீடு வந்த பிறகும் இயந்திரமாய் ரூபா கொடுத்த உணவை உட்கொண்டு மாத்திரைகளை விழுங்கியவளுக்கு வேறு நினைவு இல்லை.

இரவெல்லாம் தூங்காததால் தூக்கம் கண்களை ஆட்கொள்ள அப்படியே தூங்கிப் போனாள்.

☆☆☆

கிருஷ்ணா என்ற கண்ணன், சத்யபாரதியின் அண்ணனுக்கு போன் செய்து வெகு நேரமாக சத்யபாரதி தன் அழைப்பை எடுக்கவில்லை என்று தெரிவித்து, அவளது விலாசத்தை கேட்டான். அவன் கேட்டபடி விலாசத்தை கொடுத்த சித்தார்த், தானே என்ன விஷயம் என்று கேட்டு அவனுக்கு தெரியப்படுத்துவதாக சொன்னான். அதன்படி ரூபாவிடம் விவரம் அறிந்து கிருஷ்ணாவிடம் தெரிவித்தான்.

கிருஷ்ணாவிற்கு அன்று வேலையே ஓடவில்லை. சத்யபாரதி வேறு இல்லை. ஆனாலும் அன்றாட அலுவலை பார்த்ததாக வேண்டியிருந்தது. அவளுக்கு வெறும் ஜுரம் என்று அத்தான் சொன்னது சற்று ஆறுதலாக இருந்தது. அதன்பிறகே அவனால் வேலையில் முனைந்து ஈடுபட முடிந்தது. ஒருவாறு மாலையில் பணிகள் முடித்து கிளம்பத் தயாரான கிருஷ்ணவிற்கு அவளை பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அவள் மனம் தெரியாத வரை அங்கே செல்வது சரியாகப்படாததால் குறைந்த பட்சமாக அவளது குரலை கேட்டுவிட்டால் சற்று நிம்மதியாகும் என்று தோன்றியது. ஆனால் என்ன காரணம் சொல்வது என்று ஒரு கணம் திணறினாலும் பேசாமல் முடியாது என்று சத்யபாரதியின் எண்களை அழுத்த தொடங்கிய வேளையில் சத்யாபாரதியின் அழைப்பு வர அவசரமாக எடுத்தான்.

மதிய உணவிற்கு பிறகு தூங்கிய சத்யபாரதிக்கு ஜுரத்தின் அளவு வெகுவாக குறைந்து இருந்தது. ரூபா அவளுக்கு ரஸ்க்குடன் காபி கொடுத்துவிட்டு, கடைத்தெரு வரை சென்று வருவதாக சொன்னவள், அவளது கைப்பேசியை எடுத்து கொடுத்துவிட்டு எதுவும் அவசரம் என்றால் கூப்பிடும்படி கூறி வெளியேறினாள்.

பால்கனியில் இருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தவளுக்கு அப்போது தான் அவளுக்கு காலையில் கிருஷ்ணாவிடம் லீவு கேட்காதது நினைவுக்கு வர லேசான பதற்றம் தொற்றிக் கொள்ள, போன் எடுத்து பார்த்தாள். அவனது மிஸ்டு கால்களைப் பார்த்தவள், மேலும் பதறியவளாக,
அவனுக்கு போன் செய்தாள்.

ஒரே ரிங்கில் எடுத்து "ஹலோ, குட் ஈவ்னிங் பாரதி" என்று மறுமுனையில் கிருஷ்ணா சொல்ல, ஒருகணம் திகைத்துவிட்டு, அவனுக்கு பதில் வணக்கம் தெரிவித்தவள், தொடர்ந்து, "உங்ககிட்ட, காலையில் லீவுக்கு சொல்ல மறந்துவிட்டேன். ஐம் எக்ஸட்ரீம்லி சாரி சார்" வருத்தமான குரலில் அவள் சொல்ல,

"அடடா, எதுக்கு சாரி பாரதி? நீ என்ன தப்பு செய்தாய்?"

"அது...அது எனக்கு காலையில் குளிர் ஜுரம். எழுந்திருக்க கூட முடியலை. ரூபா தான் ஆஸ்பிடலுக்கு கூட்டிப்போனாள் சார். அப்போ இருந்த நிலையில் உங்ககிட்ட லீவு பற்றி சொல்ல முடியவில்லை. வந்தபிறகும் சுத்தமாக மறந்துவிட்டேன் சார். வெரி சாரி சார்"

விஷயம் தெரிந்திருந்த போதும், அதைக் காட்டிக் கொள்ள முடியாத தன் நிலையை எண்ணி நொந்தவனாக, "அடடா எதுக்கு இத்தனை சாரி? இட்ஸ் ஓகே பாரதி. நோ ப்ராப்ளம். உடம்புக்கு முடியாதப்போ இப்படி நடக்கிறது சகஜம்தானே. நாளைக்கு சன்டே தானே நல்லா ரெஸ்ட் எடு, ஹெல்த் பார்த்துக்கோ. வேண்டுமானால் கூடுதலாக திங்கட்கிழமையும் லீவு எடுத்துக் கொள். இங்கே நான் மானேஜ் பண்ணிக்குவேன்".

"தாங்க்யூ சார், இப்ப ஜுரம் இல்லை. நாளைக்கு ஓய்வு எடுத்துக் கொண்டு திங்கள் அன்று நான் வேலைக்கு வழக்கம்போல வந்துடுவேன்" என்றவளின் குரலில் மகிழ்ச்சி தெரிந்தது.

"ஓ தட்ஸ் ஃபைன் பாரதி. டேக் கேர்." என்று பேச்சை முடித்த கிருஷ்ணாவிற்கு பொய் காரணம் சொல்லி சமாளிக்கும் சங்கடம் நேராமல் போனதை எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்டான். சும்மாவே அவனுக்கு, உள்ளூர, அவளிடம் உண்மை சொல்ல முடியாத உறுத்தல்..

🧡💜🩷

கிருஷ்ணா பணி முடிந்து தன் இருப்பிடம் நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்தான். சத்யபாரதியிடம் பேசியபிறகு மனம் அமைதியாகிவிட்டது. ஆனால் அவளைப் பற்றிய சிந்தனைகள் மனதுக்குள் வலம் வந்தது. ஏற்கனவே அவன் இன்னார் என்று பாரதியிடம் சொல்லாமல் மறைப்பதே பெரும் உறுத்தலாக இருந்தது. இதில் பொய் வேறு சொல்லி ஏமாற்றுவதா என்ற தவிப்பு. அதனாலேயே அவளிடம் பெரும்பாலும் அவன் பொய் சொல்வதை தவிர்த்தான். பெங்களூர் செல்வதைக்கூட அதனால் தான் அவன் மறைக்கவில்லை. ஆனால் மாமா தர்மலிங்கம் வந்தபோது சற்று தடுமாறிவிட்டான். வழக்கமாக தன்னிடத்திற்கு அழைத்து பேசுபவன் அவரை சத்யபாரதி பார்த்து ஏதும் கேட்டு வைத்தால் பொய் சொல்ல நேரும் என்றுணர்ந்து அவரை தானே சென்று தனியாக சந்தித்தான். சத்யபாரதிக்கு சந்தேகம் வரக்கூடாது என்று அவளையும் ஆடை உற்பத்தி பிரிவுக்கு அனுப்பி வைத்தான். அவளது சில நடவடிக்கைகள் அவனை விரும்புவதாக காட்டத்தான் செய்கிறது. ஆனாலும் அதில் அவனுக்கு முழுமையான உறுதி தேவைப்பட்டது. அதை எப்படி அறிந்து கொள்வது என்று தீவிரமாக யோசித்தபடியே வீடு வந்து சேர்ந்தான்.

காரை ஷெட்டில் விடுமாறு பணியாளரிடம் கொடுத்து விட்டு வீட்டு வாசலில் அடி எடுத்து வைத்தபோது கைப்பேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். கனகவல்லி அத்தை. அவனுக்கு ஆயாசமாக வந்தது. எடுக்காவிட்டால் மறுபடி மறுபடி அழைப்பாள். அதனால் எடுத்துப் பேசினான். "சொல்லுங்க அத்தை. என்ன விஷயம்? "

"மருமகனே, ஏன் எங்க வீட்டுப் பக்கம் வர்றதே இல்லை? என் பொண்ணு எப்பவும் அத்தான் ஏன் வரலைன்னு கேட்டு நச்சரிக்கிறாள். எங்க வீட்டோடு இருக்க சொன்னாலும் நிறுவனத்துக்கு போக வர தூரம்னு மறுத்துட்டே. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை லீவுதானே? உன்னை சாப்பிடக் கூப்பிடலாம்னு போன் பண்ணேன். வரலாம்ல மருமகனே?

கனகவல்லி வார்த்தைக்கு வார்த்தை மருமகனே என்று போட்டு பேசவும் கிருஷ்ணாவிற்கு கடுப்பாக இருந்தது. இருந்தாலும் எரிச்சலை அடக்கிக் கொண்டு, " நம்ம வீடு தானே அத்தை எப்போ வேண்டுமானாலும் வருவேன். நாளைக்கு வர வசதிப்படாது அத்தை. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. அடுத்த வாரம் பார்த்துக்கலாம்."

"ஹும், நான் பார்த்து வளர்த்த பிள்ளை நீ. ஒருவேளை சாப்பிட வர்றதுக்குக்கூட இவ்வளவு யோசிக்கிறே. இதுவே அக்கா வீடுன்னா கூப்பிடாம கொள்ளாம போவே மருமகனே. சரி உன் இஷ்டம். ஆனால் அடுத்த வாரமும் சாக்கு சொல்லி தட்டிக் கழிக்காதே மருமகனே. ஆமா சொல்லிவிட்டேன்"

"இல்லை கண்டிப்பா வர்றேன் அத்தை. அனிஷா எப்படி இருக்கிறாள். கல்லூரிக்கு ஒழுங்காக போகிறாளா?"

"அவளுக்கு படிப்பு ஏறுறாப்ல தெரியலை மருமகனே. சீக்கிரம் கல்யாணத்தை பண்ணி வைச்சிடனும்னு நினைக்கிறேன். ஆனால் நீயும், அக்காவும் வாயே திறக்கமாட்டேன்றீங்க. ஆமா ஊருக்கு போய் வந்தியாமே? சொல்லிருந்தா நானும் வந்திருப்பேன்ல மருமகனே? "

ஏன் அனிஷா பற்றி கேட்டோம் என்று தன்னையே நொந்து கொண்ட கிருஷ்ணா, முதல் பாதி காதில் விழாதது போல பாவித்து பின்னதற்கு பதில் சொன்னான்."அது திடீர்னு கிளம்பினேன், அதான். சரி அத்தை மாமாவை கேட்டதாக சொல்லுங்க. நான் இப்பதான் வீட்டுக்கு வந்தேன். உங்க கால் வந்துச்சு. இன்னும் உள்ளே கூட போகலை. ரொம்ப களைப்பாக இருக்கு. நான் அப்புறமா பேசுறேன்" என்றான் பொறுமையை இழுத்துப்பிடித்தவாறு.

"சரி,சரி மருமகனே, போய் டிபன் காபி சாப்பிடு. நான் வச்சிடுறேன்" என்று இணைப்பை துண்டித்தாள் கனகவல்லி.

அப்பாடி என்று பெருமூச்சு விட்டு வீட்டிற்குள் நுழைந்தான் கிருஷ்ணா.

☆☆☆

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாமனுக்கு உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் கிருஷ்ணா தன்னை வெளிப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதுபோல அக்காவிடமும் அவனது பாராமுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது கூட சத்யபாரதியை மணக்க அத்தானிடம் சம்மதம் வாங்க வேண்டியிருந்ததால் தான். மாமாவின் அறுவை சிகிச்சையை தொடர்ந்து அவர்களுக்கு வேண்டியது செய்தபிறகு அவன் ஒதுங்கிக் கொள்ளத்தான் எண்ணினான். ஆனால் ஆண் துணை இல்லாத நிலையில் அவனால் முழுதாக அப்படி விட்டுப்போக முடியவில்லை. கூடுமானவரை அங்கே செல்வதை குறைத்துக் கொண்டான். நலம் விசாரிப்பதை மட்டும் கைப்பேசி மூலம் தொடர்ந்தான்.

ஆனால்...

முன் தினம் மாமா நேரில் வந்ததும் சற்று பதறித்தான் போனான். அதிலும் அவர் தன் உடல்நிலை காரணமாக மகளின் திருமணத்தை சீக்கிரம் நடத்திப் பார்க்க வேண்டும் என்றும் கூடவே அவனே மருமகனாக வந்தால் நிம்மதியாக இருக்கும் என்றும் சொன்னார். மாமா இப்படி நேரடியாக கேட்டது சங்கடமாகிவிட்டது. இருப்பினும் தன் மனதில் அனிஷா என்றும் தங்கை தான் என்று கூறி, அவளது திருமண பொறுப்பு தன்னுடையது என்று வாக்களித்து அனுப்பி வைத்தான். இப்போது அத்தையம்மாள் ஆரம்பிக்கிறாள். அடுத்த வாரம் அங்கே சென்றால் என்ன என்ன கூத்தடிப்பாளோ என்று கலங்கினான் கிருஷ்ணா.

அடுத்து வந்த நாட்களில் கிருஷ்ணாவிற்கும் சத்யபாரதிக்கும் புதிய ஆர்டர்கள் வந்திருந்ததால் அது சம்பந்தப்பட்ட வேலைகளிலும், கிருஷ்ணா இடையில் இரண்டு நாள் பயணமாக கோவைக்கு சென்று வர நேர்ந்ததாலும் சொந்த விஷயங்களை பேசும் வாய்ப்பில்லாமல் போனது.

அது ஒரு வகையில் சத்யபாரதிக்கு சற்று நிம்மதியாக இருந்தது. அவனோடு இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் அது நிலையில்லாதது என்பதும் நினைவில் இருந்ததால் அவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. வார இறுதி நாளான சனிக்கிழமை அன்று மாலை வீட்டிற்கு கிளம்பத் தயாரான சத்யபாரதியிடம் "உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் பாரதி " என்றதும் பெரிதாக அவள் எதையும் எதிர்பார்க்கவில்லை.

"சொல்லுங்கள் சார்" என்று தோளில் மாட்டப் போன கைபையை மேசைமீது வைத்துவிட்டு அவனை ஏறிட்டாள்.

"நீ உடனே வேறு வேலை தேடிக்கொள்ள வேண்டும் பாரதி. உனக்கு ஒரு மாதம் அவகாசம் தருகிறேன்" என்றான் கிருஷ்ணா.
ஏதோ புரியாத மொழியை கேட்டது போல மலங்க விழித்தாள் சத்யபாரதி.

 

Attachments

  • images (10)-1.jpeg
    images (10)-1.jpeg
    31.5 KB · Views: 11